புரியாத புதிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 5,847 
 

அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட திடுக்கிடும் பயம் உடனே தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு ஊரே பேரமைதியாய் இருந்தது. அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த ஊரைச்சுற்றி முன்னூறுக்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குரிய அன்றாட வியாபார தளமாகவும் அரச அலுவலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் போன்ற பல தேவைகளை பூர்த்திசெய்வதற்குரிய மத்திய மையமாகவும் விளங்கியது இந்த நகரம்தான். வவுனியா மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்று.

1985ஆம் ஆண்டு என்பது சரியாக நினைவிருக்கின்றது. அப்பாவின் கடைக்குட்டி தம்பி திருமணமாகி எங்கள் வீட்டில் புதுமணத்தம்பதிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. எங்கள் வீட்டிற்கும் கடைச்சந்திக்கும் உள்ள தூரம் நடந்து சென்றால் பத்தே நிமிடங்களில் சென்றுவிடலாம். கடைவீதிக்குப் பின்னால்த்தான் அந்த வில்வையடிப்பிள்ளையார் கோவில் இருக்கின்றது. எப்ப என்ன நடக்கும் என்று தெரியாது பயந்து கொண்டிருந்த காலப்பகுதியது. ஒவ்வொரு நாள் காலையும் காலை ஆறு மணிக்கு கோயில் மணி அடிக்கும். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் அந்தப் பிள்ளையார் கோயில் மணியோசையை அப்பா ஆவலுடன் முற்றத்தில் நின்று எதிர்பார்ப்பார். என்றும் வழமைபோல் மணியோசை கேட்டால் புன்னகையுடன் மலரும் அந்த நாள். ஏனெனில் கடை வீதி எந்த சஞ்சலமும் இன்றி கல கலப்பாக இருக்கின்றது என்பது அப்பாவின் ஊகிப்பு. நாங்கள் பள்ளி செல்ல வெளிக்கிடுவதுகூட அந்த மணியோசை கேட்டால்தான்.

அன்று முதல் நாள் இரவு முதளைக்கெலி இரைந்த சத்தம் கேட்டு அயல் வீடுகளில் குடியிருப்பவர்கள் எங்கள் வீட்டில் ஒன்றுகூடி விட்டார்கள். எங்கள் வீடு பலரையும் உள்வாங்கும் அளவிற்கு பெரியதாகவே இருந்தது. இரவு முழுவதும் ஆண்கள் எல்லோரும் விளித்திருந்தார்கள் என்று அம்மா சொல்லித்தான் தெரியும். அப்பா இருக்கிறார் என்ற துணிவு போலும். பிள்ளைகள் நாங்கள் நல்ல நித்திரை செய்து விழித்தெழும்பியிருந்தோம். காலை தேனீர் எல்லோருக்கும் பரிமாறப்பட்டுவிட்டது. கோயில் மணியோசை இன்னும் கேட்கவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறு எல்லோரும் காலை உணவு தயாரிக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று துவக்கு வெடிச்சத்தம் கேட்டது. இரண்டே இரண்டு வெடிச்சத்தம்தான். அதுவும் அவ்வளவு தொலைவில் இல்லை என்று தோன்றியது. வெடிச்சத்தம் கேட்ட திசை நோக்கி தூரத்தை கணக்கிட்டு கொண்டிருந்தார்கள் அங்கிருந்த எல்லோரும். நாங்கள் அம்மாவை இறுகக் கட்டிப் பிடித்தவாறு நின்றிருந்தோம்.

அந்தச் சத்தம் கேட்டு பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது. பூட்ஷ்காலடி ஓசை மிக பலமாக கேட்டதுடன் சிங்களத்தில் கதைத்தும் கேட்டவுடன். ஆமிக்காரன் வாரான் என்று உறிதியாக்கப்பட்டது. எல்லோரும் எழுந்து நின்று ஓரிடத்தில் குழுமினார்கள். அப்பாவிற்கு ஆமிக்காரர் என்றால் எங்களைவிடப் பயம். அப்பாவின் தம்பி நீண்டு வளர்ந்த வாட்ட சாட்டமான ஆறடி மனிதர். சித்தப்பாவிற்கு 25 வயதுதான். அப்பாவிற்கு தம்பி என்றால் அவ்வளவு பிரியம். அப்பப்பா இறந்த பிறகு அப்பாவின் அரவணைப்பில்தான் சித்தப்பா இருந்தார். இளம் ஆண்களைக் கண்டால் உடனே புலி என்று சந்தேகப்பட்டுவிடும் காலம் அது. என் அப்பாவிற்கும் முப்பதே வயதுதான். தனது பத்தொன்பது வயதில் தான் விரும்பியே அம்மாவை கரம்பிடித்திருந்தார். பதினொரு வருடத்துக்குள் நாங்கள் ஆறு குழந்தைகள் பிறந்து விட்டோம். நான்கு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண் பிளைகளும். அப்பொழுது கடைக்குட்டியாய் இருந்த என் தங்கைக்கு ஒரு வயதும் இரண்டு மாதங்களுமே நிறைவாகியிருந்தது.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்பா, சட்டென்று அவளைத்தூக்கி சித்தப்பாவின் கையில் கொடுத்து அப்பா அப்பா என்று அழு என்றார். அவளும் அப்பா சொன்ன மாதிரியே சித்தப்பாவின் கழுத்தைப்பிடித்துக்கொண்டு அப்பா அப்பா என்று அழுதாள். இந்தக் காலத்தில் கேட்டால் ஒரு வயது குழந்தைக்கு என்ன தெரியும் என்பார்கள். எவ்வளவு நாசூக்காக வளர்க்கப்பட்டிருக்கிறோம் நாங்கள் என்பதை நினைத்தால் இன்றும் மனது குதூகலிக்கின்றது. ஆமிக்காரர் வந்து வெளிக்கேற்றை திறக்க நாங்கள் எல்லோரும் வீட்டுக்குள் இருந்து வெளியில் சென்றோம். ஆண்கள் எல்லோரும் கையை உயர்த்திக் கொண்டு நின்றார்கள். ஆமிக்காரரைப்பார்ப்பது அதுதான் முதல் அனுபவம் எனக்கு. அவர்கள் அணிந்திருக்கும் காக்கிச்சட்டை உடையும், காலில் அணிந்திருக்கும் தடித்த லெதரால் ஆன அந்த பூட்சும், இடையில் கட்டியிருக்கும் குண்டுகள் தாங்கிய பட்டியும்,தோழில் சுமந்த படி வைத்திருக்கும் துவக்கும் பளார் என்று கண்ணில் படவே விழி பிதுங்க அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்ற எங்களுக்கு அவர்கள் தங்களுக்குள் பேசும் மொழி புரியவே இல்லை. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டது. அப்பாவின் இடையை இறுகப் பிடித்தவாறு நின்றிருந்தேன். எவ்வளவு பேர் இருப்பார்கள் என்பது சரியாக நினைவில்லை என்றாலும். சிலர் வெளி முற்றத்தில் நிற்க சிலர் எங்கள் எல்லோரையும் வீட்டுக்குள் வரச்சொல்லி அழைத்தார்கள். வந்தவர்களில் ஒருவன் படைத்தலைவன் போல் காட்சியளித்தான். ஏனெனில் அவன் ஒருவன்தான் தமிழில் கதைத்தான். எல்லா ஆண்களும் தங்களோடு வரவேண்டும் என்றும்

தாங்கள் விசாரணை நடத்திய பிறகு அவர்களை விடுவிப்பதாகவும் சொன்னார்கள். நாங்கள் எல்லோரும் அப்பாவைப்பிடித்துக்கொண்டு அப்பாவைக் கூட்டிக் கொண்டு போக வேண்டாம் என்று அழுதோம். எங்கள் ஆறு பேருடைய சத்தமும் அந்த ஊரே கேட்குமளவுக்கு இருந்தது. அதிலும் எனக்கு அப்பா என்றால் உயிர். இரண்டாவது பிள்ளையாக பிறந்த எனக்கு தங்கை பிறக்கும் வரை அண்ணா ஒருவர் தம்பி மூன்று பேர் என்றதனாலோ என்னவோ ஒரே பெண் என்ற செல்லம் அப்பா காட்டியது. நாங்கள் அழுவதைப்பார்த்த அந்த படைத்தலைவன் முழங்காலை மடித்து இருந்து கொண்டு எங்களைப்பார்த்து சொன்னான் “ நாங்க ஒங்கட அப்பாவ ஒண்ணும் செய்ய மாட்டம், நீங்க பயப்பட வேண்டாம்” என்று. இருந்தாலும் நாங்கள் அழுதுகொண்டே இருந்தோம். தங்கையும் சித்தப்பாவின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்டு அப்பா அப்பா என்று அழுதாள்.

ஒரு இருபது நிமிடம் கூட எங்கள் வீட்டில் நின்றிருக்க மாட்டார்கள். உடனே எல்லா ஆண்களையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். அங்கிருந்த பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் டவுனுக்கு வரச்சொல்லிவிட்டு சென்றிருந்தார்கள். அம்மாவுடனும் சித்தியுடனும் இன்னும் அங்கிருத பெண்களுடன் நாங்கள் குறுக்காக இருந்த ஒற்றையடிப்பாதையால் வயல் வெளிகள், புதர்செடிகள் என்பவற்றைக்கடந்து

பழைய தபால்கந்தோர் இருந்த இடத்திற்கு பின்னால் இருந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தோம். அவர்களுடைய வீட்டில் இன்னும் பலர் கூடியிருதார்கள்.

அங்கிருந்த பலரும் கதைத்துக்கொண்டதையடுத்து அன்று இரவு விசேடமாக ராணுவத்தளபதிக்கென்று வடிவமைக்கப்பட்ட முதளைக்கெலிகொப்ரெறில் வந்திறங்கியது கொப்பேக்கடுவ அதாவது மிகவும் பிரபல்யம் வாய்ந்த அன்றைய நாள் ராணுவ தளபதியும் அவரது சகாக்களும் என்பது தெரிய வந்தது. நான் கூட பல தடவை அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன் முதளைக் கெலிகொப்ரெர் இரைந்தால் “கொப்பேகடுவ போகிறார் போல” என்று.

மாலை நேரம் மங்கிக் கொண்டே சென்றது. அப்பாக்கள் இன்னும் வராததால் நாங்கள் அந்த வீட்டிலேயே இருந்தோம். இருளத்தொடங்கிவிட்டிருந்த அந்த நேரம் ஆமிக்காரர் கூட்டிச்சென்ற ஒரு சிலர் நடக்க முடியாதபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் எல்லோரையும் வயது வேறுபாடின்றி வரிசையில் இருக்கச்செய்தார்களாம். பின்பு ஒவ்வொருவராக” புலி வந்ததா? புலிக்கு சப்போட்டா ? என்று கேட்டு கேட்டு அடித்தார்களாம். அநேகமான இளம் ஆண்கள் எல்லோருக்கும் எழுந்து நடக்க முடியாதபடி முதுகிலும் காலிலும் அடித்திருக்கின்றார்கள். உடலெல்லாம் நன்கு வீங்கியிருந்தது. அப்பாவும் சித்தப்பாவும் வரவே இல்லை. நாங்கள் இனியும் இங்கு இருக்க முடியாது என்று நினைத்தவாறு இருக்க, பக்கத்து வீட்டு மாமாவை தாங்கிப்பிடித்தவாறு வந்து கொண்டிருந்தனர். சந்தோசத்தில் கண்கள் அகல விரிந்தாலும் அப்பாவுக்கும் அடித்திருப்பார்களோ என்று எண்ணியவாறு அவரை பின் தொடர்ந்து வீடு நோக்கிச்சென்றோம். அப்பா சொன்னார் “ நீங்கள் எல்லோரும் அழுத அழுகையைப்பார்த்து அவங்களுக்கு இரக்கம் வந்துவிட்டது போலும். அவங்கள் எனக்கும் சித்தப்பாவுக்கும் அடிக்க்கவில்லை என்று.

ஆமிக்காரர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு சற்று முன்னர் இரண்டு துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டதே!

என்ன நடந்தது என்று கதைத்தவாறு வீடு வந்து சேர்ந்தனர் எல்லோரும்.

அடுத்த நாள் காலையில் கொப்பேக்கடுவவும் அவர்குழுவும் கிளம்பிப்போன பிறகுதான் தெரியும்

வயல் காவலுக்கு என்று இரவு கிழம்பிச்சென்ற இரண்டு ஆண் பிள்ளைகளும் திரும்பி வீடு வரவில்லை என்று பெற்றோரும் உற்றாரும் தேடியிருக்கின்றார்கள். எங்கள் வீட்டிலிருந்து ஒரு மயில் தூரத்தில் றோட்டுக்கரையோடிருந்த பற்றைக்குள் இரண்டு சடலங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு சென்று பார்த்திருக்கின்றார்கள். அங்கே அண்ணனும் தம்பியும் அருகருகே இருந்தபடி சுடப்பட்டு இறந்து கிடந்திருக்கிறார்கள். வயலுக்கு காவலுக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்திருக்கின்றார்கள் இருவரும். ஆமிக்காரனை கண்டவுடன் பற்றைக்குள் ஒழிந்திருக்க வேண்டும். புலி என்று நினைத்து துப்பாக்கி சன்னங்களை ஏற்றியிருக்கிறான் ஆமிக்காரன், தன்னைப் பாதுகாப்பதற்காக என்பது அயலவர்களின் ஊகிப்பு.

1985 இல் பிள்ளைகள் நாங்கள் அழுத அழுகையைப்பார்த்து இரங்கிய ஆமிக்காரனின் மனிதாபிமானம்

2009இல் அத்தனை உயிர்களைப் பலியெடுத்தபோது எங்கே போனது என்பதுதான் புரியாத புதிர்!

– 08.ஆடி.2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *