எங்கும் அவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 5,030 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சோளக் கொல்லைதானேடா! முக்கா ஏக்கரு. உங்க அப்பனுக்கு.”

‘ஆமாங்க! மூணு ஏக்கர் இருந்ததுங்க முன்னாடி அம்மாவுக்கு சீக்கு வந்தப்ப போயிடுச்சி…”

“உங்க ஆத்தாளும்தானே போயிட்டா…”

“வருஷம் மூணு ஆகுதுங்க. அம்மா காலமாயி. அப்பாரு அப்ப இருந்து பித்துப் பிடிச்சவர்போலக் கிடக்கறாரு…”

“சரி, சரி! இப்ப முக்கா ஏக்கர் பேர்லே, ‘மூணு நூறு கேக்கறியே கடன் – எப்படிடா கொடுக்கறது.”

“பாடுபட்டு வயத்தைக் கட்டி, வாயைக்கட்டி, பணத்தை மிச்சம் பிடிச்சி கடனைக் கட்டிவிடுவேனுங்க.”

“கடனைக் கட்டற ஆசாமியைப் பாரு, கலியாணமானதும், வசவசன்னு பெத்துத் தள்ளப்போறே. கொழந்தைகளை! குடும்பம் பெருக்குமே தவிர காசு எங்கேடா மிஞ்சப் போவுது?”

“இல்லிங்க! வரப் போறவளோட அதிர்ஷ்டம், எங்க குடும்பத்தை வாழ வைக்கும்னு…”

“ஜோசியம் சொல்லிட்டாங்களா! யாரு? அந்தப் பூஜாரியா? சரி, எக்கேடா கெட்டுப்போ. கலியாணத்துக்குன்னு கேக்கறப்ப, இல்லைன்னு அபசகுணம் மாதிரிச் சொல்லக்கூடாது என்பாங்க. அமாவாசை கழிச்சி வா, தர்ரேன். கூடவே பத்திரம் எழுதித் தரப் பாரு.”

“பண்டரி ஐயாதானுங்களே……! கூட்டிக்கிட்டு வாரேன்”

சொக்கன், சோளக் கொல்லையைக் காட்டிக் கடன் வாங்கியாவது சொர்ணத்தைக் கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்ததற்குக் காரணம், பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் பட்டாளம், சொர்ணத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தான் என்பதுதான்.

“அக்கா சொல்லிச்சி மாமா வர்றாங்களாம் மதராஸ் பட்டணத்திலே இருந்து. ..”

“வரட்டுமே! என்னை என்ன ஊருக்கெல்லாம் மேளம் கொட்டிச் சொல்லச் சொல்தா சொர்ணம், ராஜா வாறாரு ராஜா வாறாருன்னு.”,

சொர்ணத்தின் தம்பியிடம் இப்படிப் பேச்சு அடிக்கடி கோபம்.

கோபத்தைத் தாங்கிக் கொள்ளும் வேலையை, உழவு வேலையோடு சேர்த்து ஏற்றுக் கொண்டது எருது. ‘வரட்டுமே!’ என்று சொக்கன் அலட்சியமாகப் பேசினானே தவிர, உள்ளூரப் பயந்தான். பட்டாளம் ஒவ்வொரு தடவை வருகிறபோதும் ஒவ்வொரு விதமான புது உடையுடன் வருகிறான். போன வருஷம் வந்தபோது தங்க முலாம் போட்ட கடியாரம்! விரலிலே மோதிரம் பளபளத்தது! வாயிலே, வழக்கமான சிகரெட்டு! பேச்சிலே குறும்பு!

“சொக்கோய்! தொலைவிலே இருந்து பாத்தா, நிற்கிறது நீயா, உன் கொல்லையிலே இருக்கிற பொம்மையான்னு சரியாப் புரியலைடோய்!”

‘ஏன் கண்ணிலே அத்தனை மப்பு! பட்டணத்திலே கண்ணாஸ்பத்திரி இல்லே? காட்டிக்கறதுதானே.”

“குறும்பாடா செய்யறே டே! மாடுகூட பழகறவன்தானே! புத்தி வேறே எப்படி இருக்கும்.”

தெரியும், சும்மாகிடடா! தெருப் பொறுக்கி நாய்களோட சுத்தறவனுங்க ரொம்பபேரு, இப்படித்தான் தேசம் ஆள்ற ராஜாப் போலப் பேசறது. போ!போ!” இப்படிச் சில தடவைகளில் சச்சரவுகூட மூண்டுவிடும். பட்டாளம் பேச்சை வளர்த்துவ தில்லை; சொக்கனுடைய தட்டுக்கு எருதே, ‘ததுங்கினதோம்’ போடுகிறபோது, நம்ம முதுகு எம்மாத்திரம் என்ற பயம்.

எப்போதாவது சந்தை கூடும் இடத்துக்கு, சொர்ணத்துடன் சேர்ந்து போகும் வாய்ப்புக் கிடைக்கும் சொக்கனுக்கு. ஒரே மகிழ்ச்சி, பெருமை, பார்ப்பவர்கள் எல்லோருமா நல்ல இயல்பினர், பலவிதமான பேச்சு, காதில் விழும்.

“பய, சொக்குப்பொடி போட்டுட்டாண்டா…”

“கிளிபோல பொண்ணு இருக்குது. இவன் இருக்கறான் தடியனாட்டம்.”

“கட்டிக்கிட்டா மாடிவீடு கட்டித் தரேன்னு சொல்லி இருப்பான்.” “மாடி வீடு கட்டற முகத்தைப் பாரு.”

பொண்ணு பாரேன்! என்னமோ ஒரு பெரிய இளவரசன் கூடப் போறது மாதிரி, நடை நடக்கறதை.”

கோபத்தை அடக்கிக் கொள்வாள் சொர்ணம்.

ஒரு எண்ணம் மட்டும் தோன்றும். சொர்ணம் கண்டு பெருமைப்படக் கூடிய விதமாக, வாழ்ந்து காட்டவேண்டும் ஊரார் புகழ்ந்திடும்படியாக நடந்து, ஊரே தன்னைப் புகழ் வதைக் கேட்டு சொர்ணம், பெருமை கொண்டிட வேண்டும் என்ற எண்ணம்.

கடனைப் பெற்றுக் கொண்டான். ஊர்ப் பெரியவரை அனுப்பி வைத்தான் சொர்ணத்தின் தந்தையிடம். சொர்ணத்தைத் தரச் சொல்லிக் கேட்டிட, சொர்ணத்தின் தகப்பனார் துளியும் பிடி கொடுக்கவில்லை, சோளக் கொல்லை பேர்லேகூடக் கடன்! இவனை நம்பி எவன் ஒரு பெண்ணை ஒப்படைப்பான்? மனசு இடம் கொடுக்கலே. மேலும் பட்டாளம் நம்ம பெண்ணைக் கட்டிக் கொள்ளணும்னு ஒரு எண்ணம் கொண்டிருக்கிறதா தெரியுது” என்றார் அந்த முதியவர். ஊர்ப் பெரியவர், பட்டாளம், பட்டணம் போய் நாலுகாசு சம்பாதித்திருந்தாலும், நடவடிக்கை சரியில்லை என்கிற பேச்சு இருப்பதையும் ‘தொடுசு’ ஒண்ணு இருப்பதாக கேள்வி என்பதையும் சொல்லிப் பார்த்தார். “எவ்வளவோ ஆடிக் கிடந்ததுகளெல்லாம் ஒரு கால்கட்டுப் போட் டதும், தன்னாலே அடங்கிப் போகல்லியா, பட்டாளமும் அப்படித்தான்” என்று தீர்மானமாகக் கூறிவிட்டார் சொர்ணத்தின் தந்தை.

இந்தச் சமயமாகப் பார்த்து, சொக்கனுடைய அப்பா, எங்கோ சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். அவரைத் தேடி அலைவதும், சொர்ணத்தை எண்ணி ஏங்குவதுமே சொக்கனுடைய வேலையாகி விட்டது. கடன் வாங்கி வைத்திருந்த பணத்தைக் கொண்டு, வேறோர் சிறு கொல்லையை வாங்கினான். அதிலே ஒரு வழக்கு முளைத்தது! புதிதாக வந்த கொல்லை, பழைய கொல்லையையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய்விட்டது. சொக்கன், கூலிக்கு உழுபவனானான்.

கடன் கொடுத்து, கொல்லை மேட்டை எழுதி வாங்கிக் கொண்டாரே, ஏலகிரி – அவருடைய வீட்டிலே எடுபிடி அவர் நிலத்தைக் கவனித்துக் கொண்ட நேரம் போக.

ஏலகிரியின் ஒரே மகள் – விதவை – இளவயது. படித்த பெண், பண்புமிக்கவள். பெயர் கனிமொழி. உனக்கு நேரிட்டு விட்ட கதியால் மனம் உடைந்த நிலை என்றாலும், இனி உயிர் வாழ ஏதேனும் தொண்டாற்றி வருவது என்ற உறுதி கொண்டு, ஒரு இலவச மருத்துவமனை அமைத்து, அதிலே வேலைக்கமார்ந்த டாக்டர் கமலாவுடன் பணிபுரிந்து வந்தாள் – முதலுதவி முறை பயின்று .

ஒவ்வோர் சமயம் சொக்கனுக்கு ஒரு எண்ணம் வரும் சொர்ணத்தைப் பற்றி, டாக்டரம்மாவிடமாவது, எஜமானியம்மா விடமாவது சொல்லி உதவி கேட்கலாமா என்று, உடனே ஒரு ‘ரோஷ’ உணர்ச்சி குறுக்கிட்டு அந்த எண்ணத்தை விரட்டிடும்.

மருத்துவமனையில், சொக்கன் பணியாளாக வாய்ப்புக் கிடைத்தது. அதை மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டான். வேலை நேரம் போக, டாக்டரிடம் பேசுவதிலே அவனுக்கு ஆர்வம். உலகின் நிலையைத் தெரிந்து கொள்ளும் பள்ளிக்கூடமாக்கிக் கொண்டான் அந்த மருத்துவமனையை.

டாக்டர் கமலாவின் கணவன், இந்திய விமானப் படையில் வேலை பார்த்து வருபவர். ஆகவே அவரைப் பற்றிய பேச்சு கிளம்பும் போதெல்லாம், போர் – படை – பாதுகாப்பு – நாட்டைக் காத்திடும் கடமை இவை பற்றிய விளக்கம் கிடைக்கும் சொக்கனுக்கு. ஒரு ஆர்வம் அரும்பிற்று அவன் மனதில் – நாட் டைக் காத்திடும் படையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம்.

‘பாய்-பாய்’ என்றும், பஞ்சசீலம் – என்றும், பாசம் காட்டிப் பேசவந்த சீனா, இந்தியாவைத் தாக்கிற்று என்ற செய்தி கிடைத்ததும், சொக்கன் மனதிலே அரும்பிக் கொண்டிருந்த எண்ணம் மலர ஆரம்பித்தது. அவன் படையில் சேர முடிவெடுக்கச் செய்தது, டாக்டர் கமலாவின் கண்ணீரும், கனிமொழியின் புன்னகையுந்தான்.

ஒரு தந்தி, டாக்டர் கமலா அதனைப் படித்ததும் முகத்தில் அறைந்து கொண்டு ‘கோ’வெனக் கதறக்கண்டான். “சொக்கா! என் கணவர்…மரணம்!” என்று விம்மியபடி கூறக் கேட்டுப் பதறினான். டாக்டருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் திகைத்தான்; அவனுடைய கண்களிலும் நீர் துளிர்த்தது.

நாட்டுக்காக உயிரை ஈந்தார்; வீரமரணமடைந்தார். அவர் பெயர் நிலைத்து நிற்கும்! நாடே புகழ்கிறது அந்த வீரனை!

சொக்கன் இதுபோல எண்ணிட எண்ணிட, படையில் சேர்ந்தாக வேண்டும் என்று எண்ணம் உறுதியாகிவிட்டது.

ஏலகிரியிடம் சொல்லிவிட்டு படையில் சேரச் சென்னை செல்வது, டாக்டரிடம் சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு என்று தீர்மானித்து ஏலகிரியில் வீடு சென்றான். அங்கு அவன் கண்டதும் கேட்டதும், அவனுடைய நெஞ்சினை நெகிழ வைத்தது.

ஏலகிரி கண்ணீ ர் சிந்தியபடி…அவர் எதிரில் புன்னகை உதிர்த்தபடி கனிமொழி.

“அப்பா! நாட்டுக்குப் பேராபத்து வருகிறபோது. நம்மைப் போன்ற விவரம் அறிந்தவர்கள் கூட வீறு கொண்டு எழா விட்டால், நாடு என்ன கதியாவது அப்பா! பயனற்ற வாழ்வு என்று எண்ணிக் கிடந்தேன்; இப்போது நாட்டுக்குப் பயன்படும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. கலங்காதீர்கள். களிப்புடன் விடை கொடுத்து அனுப்புங்கள். களத்திலே போராடிக் காயமுற்று உயிருக்கு மன்றாடும் உத்தமர்களுக்குத் தொண்டாற்றுவதைக் காட்டிலும் தூய்மையான தொண்டு இல்லை” என்று கேட்போர் நெஞ்சம் நெகிழும்படிக் கூறிடக் கேட்டான். அதற்குப் பிறகு, அவனுக்குப் படையிலே சேருவதற்குத் துளியேனும் தயக்கம் எழத்தான் முடியுமா? சொக்கன் படை வீரனானான்.

சொக்கன் – டாக்டர் கமலா – கனிமொழி இவர் போன்றார் பல்லோர் நாடு காத்திடக் கிளம்பியதால் ஏற்பட்ட தோர் மகத்தான எழுச்சியின் முன் நிற்கொணாது, பாய்ந்து வந்த சீனப் படை பதுங்கிக் கொண்டது. போர் ஓய்ந்தது. டாக்டர் கமலாவும் கனிமொழியும் வீடு திரும்பினர், சொக்கன் படை யிலேயே தங்கிவிட்டான்.

கடன்பட்ட நெஞ்சம் கரைவது போல, காலம் கடுவேகத்துடன் கரைந்தது. காஷ்மீருக்குள் பாகிஸ்தான் புகுந்தது;

தாக்குதலை முறியடிக்கக் கிளம்பிய ஆற்றல் மறவர் படையில் சொக்கன்!

வெற்றிமேல் வெற்றி பெற்று, பாகிஸ்தானிய தளங்களை அழித்து, இந்தியப் படைகள் முன்னேறி வருவதை இதழ்கள் மூலம் அறிந்து, டாக்டரும் கனிமொழியும், இந்த சொக்கன் இருப்பான் என்றெண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தனர்! சீனப்படை யெடுப்பின்போது சென்று பணியாற்றுவது போன்றே இப்போதும் சென்றிட விரும்பினர், அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, எதிரியின் இலக்குகளைத் தாக்கித் தகர்த்திடும் போரில் வீரம் காட்டி வெற்றி கண்ட சொக்கன், களத்தில் மாண்டான் என்ற செய்தி கிடைத்தது: கண்ணீர் புரண்டது. ஆனால் தலை நிமிர்ந்தது.

நம்ம ஊர் சொக்கன், போரிலே மாண்டு போனானாம்! பெரிய வீரன், தீரன், தியாகி என்று சர்க்கார் பாராட்டியிருக் கிறது என்று கிராமத்தார் பேசிக் கொண்டனர்.

மருத்துவமனை விழாவின்போது பலர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தில், சொக்கன் காணப்பட்டான். சொக்கன் படத்தைப் பெரிய அளவுள்ளதாக்கி ஊர்ப் பொது இடத்தில் வைத்து, மாலையிட்டு வணக்கம் செய்தனர். டாக்டரும் கனிமொழியும் வந்திருந்த பலரும் கசிந்துருகி நின்றனர்.

சொர்ணம் அந்தப் படத்தைக் கண்டு சிலையானாள்! ‘அவரைத்தான் நான் மணம் செய்து கொள்ள இருந்தேன் அவர் மறைந்தார் இனி நான் விதவையே தான்’ என்று எண்ணிக் குமுறி நின்றாள்.

சொர்ணத்தின் தம்பி மறுநாள் இதழ்களில், சொக்கனின் படம் வெளியிடப்பட்டிருந்ததைக் கண்டான். சொர்ணத்துக்குக் காட்டினான். கண்டாள்; கண்ணீர் உகுத்தாள். இவர் எனக்கு ஏற்றவர் அல்ல என்றல்லவா அப்பா சொன்னார்! ‘இவர் வீரர், நாடு காத்திட்ட தீரர், நாட்டுக்காக உயிரையே தந்த தியாகி!’ என்றெல்லாம் எண்ணிக் குமுறினாள். அதே இதழில் மற்றோர் பக்கத்தில், போர்க்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளச் சந்தை நடத்திப் பிடிபட்ட பட்டாளம், ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றதாக ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. சொர்ணம் அதைக் காணவில்லை. அவள் கண்களில் எதுவுமே தெரியவில்லை; எங்கு நோக்கினாலும் சொக்கனுடைய உருவமே தெரிந்தது.

– 3-10-1965

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *