தமிழ்மணியின் கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 14,160 
 

ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இந்த வருஷம்தான் பொங்கலுக்குச் சொந்த ஊருக்குக் கிளம்புகிறான் அவன். யார் அவன்… அவன் ஊர் எது… வருஷா வருஷம் பொங்கலுக்குக்கூடப் போக முடியாத அளவுக்கு அவனுக்கு அப்படி என்ன வேலை அல்லது அப்படி என்ன பிரச்னை என்பதுபோன்ற உங்கள் கேள்விகளில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது…

அவன் பெயர் தமிழ்மணி. பணி, உதவி இயக்குநர். உதவி இயக்குநர் என்றால், ஏதோ ஓர் அரசுத் துறையில் பெரிய பதவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவன் திரைப்படத் துறையில் உதவி இயக்குநர்.

தமிழ்மணியின் கதைபடம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்து, அதில் பெருவெற்றியையும் தொடர் வெற்றிகளையும் பெற்றால், அவர்களின் பெயர் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்றெல் லாம் அறியப்படும். நுழைவாயிலில் முட்டி மோதிக்கொண்டு இருப்பவர்கள், மோதி ஓய்ந்துபோனவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர்தான் – தமிழ்மணி.

இந்தக் கதையின் நாயகனுக்கு அப்பா வைத்த பெயரே தமிழ்மணிதான். இதன் மூலம் அவன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்த அறுபதுகளில் பிறந்தவன் என்பதும், அவனது தந்தையார் நடு வகிடு எடுத்துத் தலை வாரி பென்சில் மீசை வைத்திருப்பார் என்பதும் சொல்லாமலே விளங்கும்.

கோவைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவரான சென்னியப்பன்தான் தமிழ்மணியைப் பெற்றெடுத்த தவத் தகப்பன். அவருக்கு புஞ்சை நிலம் எட்டு ஏக்கரும் ஆணும் பெண்ணுமாக பத்து மாடுகளும் இருந்தன. எல்லா மாடுகளுக்கும் கொம்பில் கறுப்பு, செகப்பு பெயின்ட் அடிக்கப்பட்டு இருக்கும் என்பதுதான் அவரது மாடுகளின் அடையாளம்.

துரதிருஷ்டவசமாக அவருக்குப் பிறந்த பிள்ளைகள் எல்லோரும் கொம்பு இல்லாமல் பிறந்துவிட்டபடியால், பெயின்ட் அடிக்க இயலவில்லை. எனவே, முறையே தமிழ் மணி, திராவிடச் செல்வி, நடராஜன், தாள முத்து, கலையரசி என்று பெயரிட்டு தன் லட்சியப் பற்றை நிரூபித்தார்.

இப்படியாகப்பட்ட தகப்பனுக்கும் தமிழ்மணிக்கும் இடையே மாட்டுக் கொம்புகளின் காரணமாகவே இடைவெளி விழுந்தது. சகவாச தோஷத்தால், தீவிர எம்.ஜி.ஆர். ரசிகனான தமிழ்மணி, தங்கள் மாடுகளின் கொம்புகள் அனைத்துக்கும் கறுப்பு, வெள்ளை, செகப்பு என்று வண்ணத்தை மாற்றிவிட்டான். எம்.ஜி. ஆரைத் தனது பரம எதிரியாகக் கருதிய சென்னியப்பன் அத்துடன் தன் மகனுட னான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டுவிட்டார்.

அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் மாற்றங்கள் தொடங்கிய நேரம் அது. பிராந்திக் கடை ஏலம் எடுத்த குறுமுதலாளிகள் மட்டும்தான் வட்ட, சதுர, செவ்வகச் செயலாளர்கள் ஆக முடியும் என்னும்படியாக அந்தக் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்கியது. அப்படி ஒரு பிராந்திக் கடை அதிபரிடம் தன் ஒன்றியச் செயலாளர் பதவியைப் பறிகொடுத்ததோடு சென்னியப் பன் அரசியலைவிட்டு ஒதுங்கலானார்.

அடுத்த தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார். தமிழ்மணியைப் பார்க்கும்போது எல்லாம் அவனிடம் தோற்றுப்போனதுபோலவே சென்னியப்பன் உக்கிப்போனார். ‘தல நாள்ல பொறந்த பயபுள்ள இப்பிடித் தருசாப் போய்ட்டானே’ என்று தனக்குள்ளே முணு முணுத்துக்கொண்டார். இது போதாது என்று சென்னியப்பனின் உடன்பிறப்புக்களில் பலர் வேட்டியை மாற்றிக்கொண்டு ரத்தத்தின் ரத்தங்களானார்கள். சென்னியப்பனையும் உடன் அழைத்தபோது, ‘அப்படி ஒரு மானங்கெட்ட பொழைப்பு பொழைக்கறதுக்குச் சாவடி வேப்ப மரத்துல நாண்டுக்கிட்டுச் செத்துப்போவேன். எனக்கு சமாதி கட்டறப்ப, அதுல உதயசூரியந்தா இருக்கோணும்’ என்று சொல்லிவிட்டார்.

அதற்குப் பிறகான நாட்களில் லட்சுமி மில்லில் வேலை பார்த்த உறவினர் ஒருவரால் தமிழ்மணி ஒரு கம்யூனிஸ்ட்டாக வென்றெடுக்கப்பட்டான் என்றபோதிலும், சென்னியப்பனுக்குத் தன் மகன் மீது இருந்த கோபம் குறையவில்லை. ‘இவன் காங்கிரஸுல சேந்திருந்தாக்கூட உட்டிருப்பேன். கம்யூனிஸ்ட்ல போய் சேந்துட்டானே… கல்யாணசுந்தரந்தானே எம்.ஜி.ஆரை வளத்துவுட்டாரு!’ என்று மிச்சம் இருந்த தன் சக உடன்பிறப்புக்களிடம் வருத்தப்பட்டார் அவர்.

இளைஞர் மன்றம், கலை இலக்கிய மன்றம் எனக் கட்சியின் வெகுஜன அரங்கு களில் தமிழ்மணி பிரபலமாக ஆரம்பித்தான். ‘நாந்தான் வேக்யானம் இல்லாம கட்சி கட்சினு வீணாப்போனேன். இவனையாவது ரூச்சிதமா பொழைக்கச் சொல்லு மாப்ள. சும்மா சிந்தாபாத் போட்டு உண்டி குலுக் கிட்டு இருக்காம, சேந்து புத்தியா பொழைக்கற வழியப் பாக்கச் சொல்லு’ என்று தமிழ் மணிக்கு தூது அனுப்பும் அளவுக்கு சென்னியப்பன் அரசியல் மாற்றத்தைப் புரிந்துவைத்து இருந்தார்.

ஆனால், தமிழ்மணி தன் நம்பிக்கையில் சற்றும் மனம் தளராமல் பொதுக்கூட்டம், தெரு நாடகம், மறியல், ஆர்ப்பாட்டம் என வீடண்டாமல் முழு நேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தான். இப்படியானதொரு காலகட்டத்தில்தான் சோவியத் வீழ்ச்சி. தா.பா. தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு என உள்ளூரில் தொடங்கி அகிலம் முழுவதும் நிலநடுக்கம் பரவி இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு லெனின் ஃபைனான்ஸ், ஜீவா டிராவல்ஸ், செம்படை டெக்ஸ்டைல்ஸ், வெண்மணி டீ ஸ்டால் போன்ற குட்டி பூர்ஷ்வாக்கள் கட்சிப் பொறுப்புக்களைக் கைப்பற்றினார்கள். அப்போது தான் அடையப்போகும் பொன்னுலகின் மீது அவனுக்குச் சந்தேகம் வந்தது.

தமிழ்மணியின் கதை2இனி, நேரடி அரசியலால் யுகப் புரட்சியை உண்டு பண்ண முடியாது. மக்கள் திரள் ஊடகங்களின் மூலம்தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழையும் முடிவோடு சென்னைக்கு ரயில் ஏறினான். (இதன் தொடர் நிகழ்வாக எம்.ஜி.ஆரின் மரணமும் அதன் பிறகான தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும் நிகழ்ந்தன. அந்த வெற்றிகுறித்து மகிழும் நிலையில் சென்னியப்பன் இருக்கவில்லை என்பது எல்லாம் இந்தக் கதைக்குத் தொடர்பு இல்லாதவை! )

புரட்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திரைத் துறையில் நுழைந்த ஒரே கலைஞன் தமிழ்மணிதான் என்பதை அறியாமல் வழக்கம்போல் தனக்கே உரித்தான ஏளனச் சிரிப்போடு தமிழ்த் திரையுலகம் அவனை உள்வாங்கியது. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாப் புரட்சியாளர்களையும்போலவே தனது புரட்சியை எங்கிருந்து தொடங்குவது என்ற குழப்பம் தமிழ்மணிக்கும் இருந்தது. ஒருவழியாக பிரபல இயக்குநர் ஒருவரின் உதவியாளர் தொடங்கிய படத்தின் உதவி இயக்குநராகத் தமிழ்மணியின் புரட்சிகரப் பயணம் தொடங்கியது.

வேண்டாத இலக்கிய அறிவும் வெளங்காத அனுபவ ஞானமும் தமிழ்மணியை வெற்றிகர மான உதவி இயக்குநராக இருக்கவிடவில்லை. உதவியாளர்களைத் தோழமையோடு நடத்துகிற இயக்குநர்கள் பலர் இருந்தாலும், தமிழ்மணிக்கு வாய்த்தவர்கள், தங்கள் ஏவல்களை நிறைவேற்றும் குட்டிச்சாத்தான்களையே விரும்பினார்கள். எனவே, அவனால் யாரிடமும் முழுப் படத்துக்கும் வேலை செய்ய இயலவில்லை.

எனவே, நேரடியாக இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டான். தனது கதையைத் தோழர்களோடு விவாதித்தபோது பாலு என்னும் தோழன் பின்வருமாறு கூறலானான்.

”டேய்! நீ சொல்ற செங்கதை எல்லாம் இப்ப செந்தட்டிக் கதை. இதை எல்லாம் முப்பது வருஷத்துக்கு முன்னாலயே எடுத் துட்டாங்க. விஜயகாந்த் கண்ணு ரெண்டும் செவக்கச் செவக்க ஆவேசமா புரட்சி பேசுவாரு. அந்தக் காலம் எல்லாம் முடிஞ்சு போச்சுடா.

சிங்கவால் குரங்குகளும் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளும் அருகிவரும் அபூர்வ இனங்கள்னு சமூக ஆர்வலர்கள் சொல்றாங்க. அதனால, நீ சொல்ற மாதிரி படங்களைப் பாக்கறதுக்கு இப்ப புரட்சிகர இளைஞர்கள்னு யாரும் இல்ல. ஒரு ரௌடிப் பய, பணக்கார வீட்டுப் பேரழகியக் காதலிக்கிறான்னு ஒருகதைய ரெடி பண்ணு!’

இதைச் சொல்லியது ‘தோழர்’ பாலு என்பதால், அவன் யோசிக்க ஆரம்பித் தான். ஏனெனில், அவன்தான் நம் தமிழ் மணிக்கு வோட்காவை அறிமுகம் செய்து வைத்தவன்.

வோட்காவின் மிதமான போதையில் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மிதந்தபடி… சோவியத் நாடு இந்த உலகுக்கு அருளிய அருட்கொடைகளில் முக்கியமானது வோட்காதான் என்று அறிவிக்க கிரியா ஊக்கி பாலாதான் என்பதால், அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டான்.

இதற்கு இடைப்பட்ட காலங்களில் அவனுக்கு ஊரோடு உறவில்லாமல்போனதும் தம்பி தங்கைகளுக்குத் திருமணமானதுமான சம்பவங்கள் நடந்தேறின. அதற்கு முன்னரே தி.மு.க-வின் ஆட்சிக் காலம் ஒன்றில் அவனது தந்தை அமரர் ஆனார். தமிழ்மணி கடமை உணர்வோடு மொட்டை அடித்துக்கொண்டு அவருக்குக் கொள்ளிபோட்டான். அவரது ஆசைப்படி சமாதியில் உதயசூரியனைப் பொறிக்கவும் தவறவில்லை. அம்மா இறந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது பதினைந்து நாட்களுக்குப் பிறகு என்பதால், போகவே இல்லை.

அதன் பின் அம்மாவை நினைத்து அவன் சொல்லி அழுத சம்பவங்களை அவனது நண்பன் ஒருவன் இயக்கிய திரைப்படத்தில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

தமிழ்மணியைப் பற்றிச் சொல்லும்போது, அவனது மிக முக்கியமான குணம் ஒன்றைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். அதாகப்பட்டது… ஒரு நபரோ, படைப்போ, படமோ பிடித்திருந்தால் நேரில் போய்ப் பல பேருக்கு மத்தியில் பாராட்டுவான். மாறாக, விமர்சனங்கள் எதுவும் இருந்தால், இரவு பத்து மணிக்கு மேல் ஸ்டெப்பிப் புல் வெளிகளில் குதிரையில் பறந்தபடி போனில் காய்ச்சி எடுத்துவிடுவான். இதற்கு பெரியவர், சிறியவர் என்ற விதிவிலக்குகள் எதுவும் இல்லை.

உதாரணத்துக்கு ஒன்று… திரையுலகினர் திரண்டு காவிரிப் பிரச்னைக்காக நெய்வேலியில் நடத்திய போராட்டத்தையும் ஈழத் தமிழர் களுக்காக ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத் தையும் வரலாறு மறந்திருக்காது. அதில் உணர்வு பூர்வமாக தமிழ்மணி முன் நின்றதைப் பார்த்த பாரதிராஜா, ”யூவார் தி ரியல் தமிழன்டா…” என்று மனம்விட்டுப் பாராட்டினார்.

அப்படிப்பட்ட பாரதிராஜா இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டது நம் தமிழ்மணிக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவு ஒரு பாக்கெட் சிகரெட்டும் தன் கைபேசியின் பண இருப்பும் தீரும் வரை அவரிடம் தனது மன வருத்தங்களைக் குமுறித் தீர்த்துவிட்டான்.

இதன் காரணமாகவே, அவனைப் பற்றித் தெரிந்தவர்கள் இரவு பத்து மணிக்கு மேல் அவனிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மாட்டார்கள்.

அவன் படம் எடுக்கும் கதைக்கு வருவோம். கிராமத்தில் இருந்தபோது தனக்கு வாய்த்த காதல் அனுபவம் ஒன்றைப் படம் எடுக்க முடிவு செய்த தமிழ்மணி, தயாரிப்பாளர்களைத் தேடத் தொடங்கினான். அவன் பார்த்தவர்கள் எல்லோரும் ஏதாவதொரு பெரிய நடிகரை வைத்துப் படம் எடுக்கவே விரும்பினார்கள்.

அவனிடம் இருந்து மாபெரும் சாகசங்களோ, அதன் கதாநாயகன் இந்தப் படத்தின் மூலமாக மக்கள் தலைவனாக உருவாவதற்கான சாத்தியக்கூறுகளோ இல்லாத சாதாரண காதல் கதை. எனவே, மேற்படி பெரிய நடிகர்கள் யாரையும் அவனால் அணுக முடியவில்லை.

இப்படியான சூழலில், படம் எடுக்கும் ஆர்வம் உள்ள திருப்பூர் சிறு முதலாளி ஒருவரை ஒரு தோழர் தமிழ்மணியிடம் அழைத்து வந்தார். விஷயம் என்னவென்றால், அவரிடம் இருப்பது முப்பது லட்சம் ரூபாய். மேற்கொண்டு படத் துக்குத் தேவையான பணத்தையோ, பங்காளி களையோ தமிழ்மணிதான் ஏற்பாடு செய்துதர வேண்டும்.

பேச்சுவாக்கில் அவர் ஓர் ஆரம்பக்கட்ட முற்போக்கு எழுத்தாளர் என்பதை அறிந்துகொண்ட தமிழ்மணி, அவர் மேல் ஆழ்ந்த அனுதாபம் கொண்டான். முப்பது லட்சத்தை வைத்துக்கொண்டு படம் எடுப்பது சாத்தியம் இல்லை என இயக்கவியல் பொருள்முதல் வாதத்தை எடுத்துரைத்தான். பேசாம ஊருக்குப் போய் கையில இருக்கற காசுக்கு பைபாஸ்ல எங்கியாவது எடம் வாங்கிப் போடுங்க தோழர் என்று அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தான்.

திருப்பூர் பல்லடம் நெடுஞ்சாலையில் இடம் வாங்கிப்போட்டு, அதன் மூலமாக தோழர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபராக உயர்ந்தார்.

‘ஆள் கெடச்சா கோவணத்தையே உருவற துறையில நேர்மையோடு இருக்கும் தோழமைக்கு…’ என்ற குறிப்போடு ஒரு டஜன் செகப்பு ஜட்டிகளும் பனியன்களும் அனுப்பிவைத்தார் தோழர்.

ஓர் உதவி இயக்குநர், இயக்குநர் ஆவதற்கு முயற்சிக்கும்போது நிகழும் அத்தனை வேதனைகளும் வேடிக்கைகளும் நம் தமிழ்மணிக்கும் நிகழ்ந்தன.

அவன் படமாக்க வைத்திருந்த காதல் கதையை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் சொல்ல நேர்ந்தது. அது அவரது சொந்தக் கதையோடு பெருமளவு ஒத்துப்போனதால், அவர் உணர்ச்சிவசப்பட்டு அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித் தார். ஒரு வழியாக சமநிலைக்கு வந்து, ‘பிச்சை எடுத்தாவது நான் இதைப் படமா எடுக்கறேன். நீங்க முழுசா எழுத ஆரம்பிச்சுடுங்க. தை மாசம் ஆபீஸ் போட்டு அட்வான்ஸ் தர்றேன்’ என்று உற்சாகமூட்டினார்.

தனது கதை ஒரு மாட்டுப் பொங்கலில் இருந்து தொடங்க வேண்டும் என தமிழ்மணி விரும்பினான். நிஜமான மாட்டுப் பொங்கல் நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, காட்சிகளை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் அவன் ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

அன்று இரவு பத்து மணிக்கு தமிழ் மணியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை வழக்கம்போலவே அவன் நண்பர்கள் யாரும் எடுக்கவில்லை.

கடுமையான நெஞ்சுவலியோடு படி தடுக்கி விழுந்து, உதவிக்கு யாரும் இன்றி அவன் பரிதாபமாக இறந்துபோனது இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியவந்தது.

மசக்காளிபாளையத்தில் பிறந்த தமிழ் மணி, சென்னை மயிலாப்பூர் இடுகாட்டில் புதைக்கப்பட்டான். அப்போது தங்கள் பிரேதத்துக்குப் போடுவதான வேதனையுடன் இருபது தமிழ்மணிகள் அவனுக்கு மண் அள்ளிப் போட்டனர் – இந்தக் கதையை எழுதிய தமிழ்மணி உட்பட!

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *