கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 9,117 
 

அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும், தேவாலயத்தை நோக்கி மேடேறும் தெரு நெடுகிலும், கையால் செய்த சவப்பெட்டிகளின் வரிசை. முழுக்க மூடிய கருப்பு அங்கிகளுடன் விதவைகள், வேதாகமத்தில் வரும் பெண்களைப் போல அழுதபடி பின்னே போனார்கள்.

இப்படித்தான் மாலுமி ஜீன் லினோலும், அவனது மகன் ஆசையும் ஆலய வெளி முற்றத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டார்கள். ஒரு காலத்தில் அதே முற்றத்தில்தான் அவர்கள் கப்பல் புனித அன்னைக்குக் காணிக்கை செய்யப் பட்டது.

அப்பனும் மகனும் ரொம்ப பயபக்தியான மதப்பிடிப்பு உள்ள ஆட்கள். பெருமகனார் குல்லாம் ட்ருபிம் – புனித வாலரியின் சாமியார் அவர் – பொது மன்னிப்பு தினத்தில் துக்கம் தொண்டையைக் கவ்வச் சொன்னார் – ஆண்டவரின் நீதிக்காய் இப்புனித பூமியில் நல்லடக்கம் செய்யப் பட்டவர்களிலே, லினோலும் ஆசையும் போல அருமையானவர்களை, அருமையான கிறித்தவர்களை நான் பார்த்தது இல்லை.

தோணிகளும் அவற்றின் மாலுமிகளும் கரைப் பக்கமாகவே இறந்து மிதக்கையில். நடுக்கடலில் பெரும் பெரும் கப்பல்களே மூழ்கிப் போயின. அந்தப் பக்கம் சிதிலங்கள் கரையொதுங்காத நாளே இல்லை. அன்றொருநாள் காலை வேளையில் சில சின்னப் பிள்ளைகள் துடுப்பு மீட்டிப் போகையில் கடலில் ஓர் உருவம் மிதப்பதைப் பார்த்தார்கள். அது இயேசுபிரானின் உருவம். மரத்தில் செதுக்கி இயற்கை வண்ணம் பூசிய ஆளுயர உருவம். பையன்கள் அந்த உருவைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அந்தச் சிற்பத்தின் சிரம் முள் கிரீடத்தால் சுற்றப் பட்டிருந்தது. கால்களும் கரங்களும் துளையிடப் பட்டிருந்தன, என்றாலும் அங்கே ஆணிகளோ சிலுவையோ இல்லை. தியாக பாவமும் கருணை வெளிப்பாடுமாய் அந்தக் கரங்கள் விரிந்திருந்தன. தேவனை நல்லடக்கம் செய்கையில் அரிமதியானின் ஜோசப்புக்கும், இதரப் புனிதப் பெண்மணிகளுக்கும் எப்படி தேவன் காட்சி யளித்தாரோ அதே போல…

பிள்ளைகள் அதைச் சாமியாரிடம் அளித்தார்கள். அவர் சொன்னார் –

‘ ‘மீட்பரின் இந்தத் திருவுரு நமது முன்னோரின் கலைப் படைப்பு. இதை வடித்தவன் எப்போதோ இறந்திருப்பான். ஆமியனிலும் பாரிசிலும் நுாறு ஃபிராங்குகளுக்கோ அதிலும் கொஞ்சம் அதிகமாகவோ இவை கிடைக்கலாம். ஆனாலும் அந்தக் காலச் சிற்பிகளைக் குறைத்துச் சொல்ல முடியாது… ஆண்டவர் இப்படி விரிந்த கரங்களுடன் நம்ம கிராமத்துக்கு வந்தாரே, நம்மிடையே இருந்து இறந்து போன நல்லாத்மாக்களை ஆசிர்வதிக்கத்தான், என்பதுதான் எனக்கு சந்தோஷம். எத்தகைய கொடூர மரணத்தை இவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஏழ்மைப் பட்டவர்கள் பக்கம், மீனுக்காய் உயிரைப் பணயம் வைப்பவர் பக்கம் தான் பரிவு காட்டுவதைச் சொல்லத்தான் அவர் வந்திருக்கிறார். கடலில் நடந்து, செபாஸ் வலையினை ஆசிர்வதித்தவர் அல்லவா அவர் ? ‘ ‘

சர்ச் பீடத்தின் துகிலில் ஆண்டவரைக் கிடத்தி விட்டு, சாமியார் ஆசாரி லாமரைப் பார்க்கப் போனார். ஓக் மரத்தின் நயமான பகுதியில் அழகான சிலுவை ஒன்றை அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது.

சிலுவை தயாரானதும், மீட்பர் புத்தம் புதிய ஆணிகளால் அதனுடன் பிணைக்கப் பட்டு, வராந்தாவில் சர்ச் வார்டனின் இருக்கைக்கு நேர் மேலே நிறுவப் பட்டார்.

அப்போது ஆண்டவரின் கண்கள் கருணையைப் பொழிவதையும், பேரிரக்கம் நிரம்பி கண்ணீர் அதில் பளபளப்பதையும் எல்லாரும் பார்த்தார்கள்.

சிலுவையை நிறுத்தும் போது அந்தப் புனித முகத்தில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்ததைத் தான் பாார்த்தாகச் சொன்னார் ஒருவர். அடுத்த நாள் காலை சாமியார் தமது வேலையாள் ஒருவனுடன் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்தபோது பிரமித்துப் போனார். சர்ச் வார்டனின் இருக்கைக்கு மேலான சிலுவை வெறுமையாய் இருந்தது. இயேசுபிரான் பீடத்தில் சயனித்திருந்தார்.

திருத் தியாக நியதிகளை முடித்த சூட்டோடு சாமியார் ஆசாரியைக் கூப்பிட்டு அனுப்பினார். சிலுவையில் இருந்து ஆண்டவரை கீழிறக்கக் காரணம் என்ன, என்று அவனிடம் கேட்டார். தான் அதைத் தொடவே இல்லை, என்றான் அவன். பிறகு அழைப்பர்களையும், பிற ஊழியக்காரர்களையும் விசாரித்தார். அந்தத் திருவுருவம் நிறுவப்பட்ட பின் யாருமே அந்த வளாகத்துக்கு வரவே யில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

இப்படியாய், இது அற்புதமே என அவர் உணர்ந்து, ஆழ்ந்த தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அடுத்த ஞாயிறு அன்று அவர் ஜனங்களிடையே தமது பிரசங்கத்தில் நடந்தது எல்லாம் விவரித்தார். ஆண்டவரை முன்னிலும் அழகான சிலுவையில் நிறுவும் படியாய் எல்லாரும் கொடையளிக்கும்படி அவர் வேண்டிக் கொண்டார்.

புனிய வாலரியின் எளிய மீனவர்கள் தங்களால் இயன்ற பண உதவி செய்தார்கள். விதவைகள் தங்கள் கல்யாண மோதிரத்தைக் கொண்டு வந்தார்கள். ஆகவே சாமியார் உடனே ஆபிவிலி வரை சென்று INRI என்ற எழுத்துக்கள் பொன்னிறமாய்ப் பதிந்த மெருகூட்டிய தகடுகள் வேய்ந்த சிலுவைக்குச் சொல்லி விட்டு வந்தார். இரண்டு மாதத்தில் சிலுவை தயார் ஆனது. முதல் சிலுவை அகற்றப் பட்டு, இது, கடற்பஞ்சு ஊடே வைத்து, சுத்தியல் கொண்டு ஆண்டவரை ஏற்றுக் கொண்டது.

ஆனால், முன்போலவே ஆண்டவர் சிலுவையை விட்டு வெளியேறி விட்டார். இரவானதும் அவர் சிலுவையில் இருந்து இறங்கி, பீடத்தில் உடலைக் கிடத்திக் கொண்டார்.

சாமியார் காலையில் வந்து பார்த்து விட்டு முழந்தாளிட்டு நெடுநேரம் பிரார்த்தனை செய்தார். இந்த அற்புதம் சுற்றுப்புறம் எங்கும் பரவி, ஆமியனின் பெண்கள் எல்லாரும், புனித வாலரியின் இயேசுபிரானுக்காய் நிதி திரட்டத் துவங்கினார்கள். பாரிசில் இருந்து பணமும் நகைகளும் வரப் பெற்றார் சாமியார். அமைச்சர் மரீனின் மனைவியிடமிருந்தும், சீமாட்டி ஹைத் டி நுாவிலிடம் இருந்தும் வேலைப்பாடு மிக்க வைரங்களும் வந்தன. இந்த செல்வங்களை யெல்லாம் வைத்துக் கொண்டு, இரண்டு வருடங்களில் லா ரூ புனித சல்பிஸ்சின் பொற்கொல்லன் ஒருவன், பொன்னாலும் விலை உயர்ந்த கற்களாலும் நவீன மோஸ்தரில் சிலுவை ஒன்றைச் செய்தளித்தான். 18…ம் ஆண்டு ஈஸ்டர் கழிந்த இரண்டாம் ஞாயிறு அன்று பெருந் திரளான ஜனங்களின் முன்னிலையில் அது நிறுவப் பட்டது. ஆனால்… துக்கத்தின் பிம்பமான பழைய சிலுவைகளை அதற்காகப் புறக்கணிக்காதவர் அவர். ஆவே அவர் தங்கச் சிலுவையையும் நிராகரித்தவராய் வெண் துகில் மீது படுத்துக் கொண்டார்.

அவரைக் காயப் படுத்தி விடுகிற பயத்தில் ஆகவே பிறகு ஆண்டவரை அப்படியே விட்டு விட்டார்கள் எல்லாரும். சுமார் இரண்டு வருஷம் அவர் அப்படியே இருந்தார். பியரி கைல்லுவின் பிள்ளை பியரி ஒருநாள் சாமியாரிடம் வந்து, ஆண்டவரின் உண்மையான சிலுவையைக் கடல்கரையில் தான் கண்டதாகச் சொன்னான்.

பியரி அப்பிராணி. தன் சாப்பாட்டைப் பார்த்துக் கொள்ளக் கூட வழி வகை தெரியாதவன். யாருக்கும் அவனால் எந்தத் தொந்தரவும் இல்லை. எல்லாரும் அவனை நேசித்தார்கள். அவன்மீது பாவப் பட்டு எதாவது அவனுக்குச் சாப்பிடத் தருவார்கள். ஆனா ஒண்ணு என்னன்னா, இந்தப் பியரி, ஆள் ஒரே வளவளா. அவன் பேச்சை யாரும் சட்டை பண்ணுவதில்லை.

இதுநாள் வரை சாமியார் அந்த சமுத்திர ஆண்டவரிடமான தம் பிரார்த்தனையை நிறுத்தவே இல்லை. இந்தப் பயல் சொன்னது அவரை அசத்தி விட்டது. தமது ஊழியக்காரர்களுடன் அவர் அவன் சொன்ன இடத்துக்கு வந்து பார்த்தார். காலகாலமாய்க் கடலில் மிதந்து நடுவில் ஆணியடிக்கப் பட்ட சிலுவை அமைப்பு கொண்ட இரு சட்டங்களை அவர் பார்த்தார்.

ஏதோ பழைய கப்பலின் சிதர் துண்டுகள் அவை. ஒரு சட்டத்தில் கருப்பாய் J எனவும் L எனவும் எழுத்துக்கள் இருந்தன. ஆக ஐந்து வருடம் முன்னால் கடலில் மூழ்கி இறந்து போன ஜீன் லினோலின் தோணிச் சிதர்களே அவை என்பதில் சந்தேகம் இல்லை.

அதைப் பார்த்து விட்டு ஊழியர்கள் பியரியைக் கிண்டல் செய்தார்கள். ஒடைஞ்ச தோணியின் மரத்தைப் பார்த்து சிலுவை என்கிறான்… ஆனால் சாமியார் உற்று கவனித்தார். கடுமையான ஜெபத்தில் தம்மை அவர் ஆழ்த்திக் கொண்டார்… இறுதியில் இறந்துபட்ட மீனவர்களுடன் ஆண்டவரும் அவர் கண்ணுக்குள் தட்டுப் பட்டார். ஆண்டவரின் பரந்த கருணையும் பேரிரக்கமும் தம்மேல் வெளிச்சமாய்க் கவிகிறாப் போல சாமியார் உணர்ந்தார். அப்படியே மணலில் அவர் மண்டியிட்டு மடிந்துபட்ட விசுவாசிகளுக்காய் அவர் ஜெபம் பண்ணினார். பிறகு தமது ஊழியக்காரர்களிடம் அந்தச் சட்டத்தைத் தோளில் சுமந்து சர்ச்சுக்கு எடுத்து வரும்படி பணித்தார். அது வந்து சேர்ந்ததும், தாமே இயேசுநாதரை அந்த பீடத்தில் இருந்து கையில் எடுத்து தோணிச் சட்டங்களில் வைத்து, சமுத்திரம் அரித்த ஆணிகளால் ஆண்டவரைத் தாமே நிறுத்தினார்.

சாமியாரின் உத்தரவின் பேரில் மறுநாளே பொன்னும் மணியும் இழைத்த சிலுவையின் இடத்தில், வார்டனின் இருக்கைக்கு நேர் மேலே இந்தச் சிலுவை இடப்பட்டது. சமுத்திர இயேசு இந்தச் சிலுவையைப் பிரியவே இல்லை. தம்மையும் தமது புனித அன்னையையும் பிரார்த்தனை செய்தபடி – மடிந்துபோன தமது விசுவாசிகளின் தோணிச் சிதிலத்தில் இருக்க அவர் ஒப்பினார். உறுதியும் துக்கமுமான உருவத்துடன் அங்கே, ஆண்டவர் இப்படிப் பேசுவதுபோல் தோன்றியது –

‘ ‘என்னுடைய சிலுவை எல்லாருடைய துக்கங்களையும் சுமந்தது. ஏனென்றால் நான் பாவப்பட்ட ஜீவன்களின் ஆண்டவன்… ‘ ‘

– பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ்
– தமிழில் – எஸ்.ஷங்கரநாராயணன்(ஆகஸ்ட் 2005)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *