கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 10,675 
 

தாமிர பரணி நதி சுழித்து ஓடும் நெல்லை மாவட்ட சின்னஞ்சிறு கிராமம். எல்லா கிராமங்களைப் போலவே இங்கேயும் அக்கிரகாரம் உண்டு. எல்லா அக்கிரகாரங்களைப் போலவே இங்கும் சுமாரான வசதியுள்ளவர்கள் , ஏழைகள் , படு ஏழைகள் அதற்கும் கீழுள்ளோர் என எல்லோரும் உண்டு. அதில் நாலாவது வகையைச் சேர்ந்தவன் தான் நம் கிச்சா. ஒல்லியான தேகம் , முகத்தில் தாடி மீசை , அழுக்கு வேட்டி , எப்போதும் நிலைத்த பார்வை. இது தான் கிச்சா.

கிச்சாஎங்கள் வீட்டுக்கு எதிர் வீடு அவனுக்கு. வீடு என்ன? பெரிய வீடு? நாலு சுவர்கள் உள்ள ஒரு ரூம். ஒரு காலத்தில் கிச்சாவின் முன்னோர்கள் வசதியாக வாழ்ந்த காலத்தில் கட்டப் பட்ட மற்ற ரூம்கள் , மாட்டுக் கொட்டில் , கிணற்றடி இவை எல்லாம் இடிந்து பாழாகக் கிடக்கிறது. அவற்றை எடுத்துக் கட்ட ஆளும் இல்லை காசும் இல்லை. அங்கு கிச்சாவைத் தவிர யாராலும் தைரியமாகத் தங்க முடியாது. அவனுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள இருந்தது மீனாட்சிப் பாட்டி மட்டும் தான் அவளும் மிகவும் தூரத்துச் சொந்தம். அவனும் மற்றவர்களைப்போல ஸ்கூலுக்குப் போனான் என்பது என் சித்தப்பா மூலம் தான் தெரியும். அவர் கிச்சாவின் கிளாஸ் மேட். அவரே படிப்பில் ரொம்ப சுமார். ஏதோ தடுமாறி பத்து வரை படித்து விட்டார். கிச்சா அதனினும் மோசம் என்பது அவர் சொல்லித்தான் தெரியும்.

அவன் அம்மா , அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள் என்றும் இந்த வீடு ஒன்று தான் அவனுக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றும் சித்தப்பா சொல்லக்கேட்டு தெரிந்து கொண்டேன். யாரோ ஒரு மாமி , தன் மகனோடு அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவள் வாடகை கொடுக்காமல் கிச்சாவின் வீட்டில் தங்கிக் கொண்டு மகனைப் படிக்க வைத்தாள் . அப்போது அந்த வீடு அவ்வளவு மோசமாக இல்லை. அவள் கிச்சாவுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது ஒறு முறையாவது சோறு போட்டு விடுவாள். அதனால் அவன் கவலை இன்றித் திரிந்தான்.

கிச்சா வீட்டு பக்கத்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான். யாரோடும் பேசவே மாட்டான். அதனால் தானோ என்னவோ எங்களுக்கு அவனைப் பார்த்தால் பயமாக இருக்கும். கிச்சாவின் பக்கத்தில் எங்கள் பந்து உருண்டு போனால் அதை எடுக்க இரு முறை யோசிப்போம். இவ்வளவுக்கும் அவன் யாரையும் அடித்து நாங்கள் பார்த்ததில்லை. சும்மா தானே இருக்கிறான் என்று ஏதாவது வேலை சொன்னால் செய்யவே மாட்டான். ” கொஞ்சம் போய் குரு நாதன் கடையில நல்லெண்ணெய் வாங்கிண்டு வாடா! உனக்கும் சேத்துக்காசு தரேன் கிச்சா ! ” என்று மீனாட்சிப் பாட்டி எத்தனையோ நாள் சொல்லியிருக்கிறாள். ம்ஹூம்! இவன் நகர வேண்டுமே.ஊர்ப் பொது விருந்துகளில் கலந்து கொண்டு நன்கு சாப்பிடுவான். ஆனால் கூட மாட ஒத்தாசையாக ஒரு துரும்பைத் தூக்கிப் போட மாட்டான்.

அவனிடம் மற்றொரு பழக்கமும் இருந்தது. ஆவணி அவிட்டத்தின் போது என்ன சொன்னாலும் பூணூலை மாற்ற மாட்டான். ஏனென்றால் அவன் பூணூலே அணியவில்லை. எவ்வளவோ தடவை யார் யாரோ சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கவில்லை. பூணூலும் போட்டுக் கொள்ள மறுத்து விட்டான். தன்னை கவனிக்காத பிராமண சமூகத்தின் மீது வெறுப்பைக் காட்டும் அவனது உத்தி அதுவாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். இத்தகைய அவனது செயல்களால் அவன் மேல் ஒரு வெறுப்பும் , சந்தேகமும் அக்கிரகாரத்தில் இருந்தவர்கள் எல்லாருக்கும் இருந்தது.

இந்த நிலையில் தான் அவன் வீட்டில் தங்கியிருந்த மாமியின் மகனுக்கு படிப்பு முடிந்து உடனே சேரன்மகாதேவி சன் பேப்பர் மில்லில் வேலை கிடைத்து விட்டது. அதனால் அவர்கள் காலி செய்து கொண்டு போய் விட்டார்கள். இப்போது கிச்சாவின் தினசரி சாப்பாடே கேள்விக்குறியானது. நாலு வேளை பட்டினி கிடந்தால் தான் அவனுக்கு புத்தி வரும் என்று ஒரு சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

அவன் எது பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை. அதே திண்ணை அதே பார்வை. பசி அதிகமாகும் போது எங்களை எல்லாம் திட்டுவான். காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி ஏசுவான். அதற்குள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வீட்டிலிருந்து ஒரு உருண்டை பழைய சாதமாவது கிடைத்து விடும் அவனுக்கு. எங்கள் வீட்டிலிருந்து தான் முக்கால் வாசி போகும். ஏனென்றால் அவன் என் சித்தப்பாவின் நண்பன் என்பதுடன் , எனக்கு அவன் மீது ஏனோ ஒரு மரியாதை. அது தெரிந்தோ என்னவோ கிச்சா அத்தி பூத்தாற் போல எப்போதாவது என்னோடு பேசுவான். ஒரு முறை அப்படித்தான் கிச்சா மூன்று நாள் பட்டினிக்குப் பிறகு திட்ட ஆரம்பிக்க நான் சோறு கொண்டு போய்க் கொடுத்தேன். அதை வாங்கி வேகவேகமாக உண்டவன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் ஆச்சரியத்தை ஊட்டின. அதன் பிறகும் அவன் பழையபடியே தான் இருந்தான்.

ஒரு முறை புரோகிதர் ஒருவர் பூணூல் போட்டுக் கொண்டு வருவதானால் , நல்ல வேஷ்டி வாங்கித் தந்து அழைத்துப் போய் திவச வீட்டில் சாப்பாடும் வாங்கித் தருவதாகச் சொன்னார். அன்று கிச்சா நன்றாகச் சாப்பிட்டிருந்தானோ என்னவோ தெரியவில்லை , அவரை அடித்து விட்டானாம். அவர் “இது பிரம்ம ஹத்தின்னா! இதோட தரித்திரம் தீரவே தீராது , இவனுக்கு ஒரு நாளும் விடியாது” என்று சாபம் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

அப்படிப் பட்ட கிச்சா பரிகார பூஜை செய்ய காசிக்கும் கயாவிற்கும் யாரோ அழைத்தார்கள் என்று போக எப்படி ஒப்புக் கொண்டான் என்பதே எங்களுக்கெல்லாம் புரியாத புதிர். அதற்கும் விடை சித்தப்பாவிடம் கிடைத்தது. “அவனுக்கு ரயில்ல ஏறி தூர தேசம் பிரயாணம் பண்றதுன்னா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல சொல்லிண்டேயிருப்பான்” என்றார். ஒரு வேளை அந்த ஆசையினால் தான் அவன் ஒப்புக் கொண்டானோ என்னவோ யார் கண்டார்கள்?

அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரரும் , சென்னையில் ஆடிட்டராக இருந்தும் சொந்த ஊரோடு இன்னமும் தொடர்பில் இருப்பவருமான ஆடிட்டர் நாராயண ஐயருடையய தந்தையார் தவறி விட்டார். மாதா மாதம் , வருடா வருடம் தன் மகன் வைதீகக் காரியங்களைச் சரியாக செய்ய மாட்டான் என்று நினைத்த அந்தத் தந்தை தன்னுடைய அஸ்தியை காசியில் கரைத்து , கயாவில் சிரார்த்தம் போட வேண்டும் என்று சொல்லி விட்டு இறந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன் ஊர்க்காரன் ஒருவனுக்குத்தான் எல்லா தானமும் செய்ய வேண்டும் என்றும் , அவனையும் கூட்டிச் சென்று பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்குத்தான் கிச்சாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

நம்பவே முடியவில்லை. கிச்சா காசிக்குப் போகப் போறான். அவனுக்கும் சேர்த்து ரயில் டிக்கெட் எடுத்தாகி விட்டது. அவன் உடுத்திக் கொள்ளவென ஆடிட்டருடைய பழைய வேட்டிகளும் , அவர் மகனுடைய டி சர்டுகளும் கிச்சாவுக்குக் கிடைத்தன. டி சர்ட்டை மடித்து கீழே போட்டு அதன் மேல் உட்கார்ந்து கொள்வான் கிச்சா . வேட்டியை மட்டும் உடுத்திக் கொண்டான். தெருவிலுள்ளோர் அவன் வெள்ளையுஞ்சொள்ளையுமாக இருப்பதாகக் கேலி பேசினர். ஒரு சிலர் இந்தக் காசிப் பயணம் அவன் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமையும் என்றும் அவன் திரும்பி வந்து சாதாரணமாக ஆகி விடுவான் என்றும் ஜோசியம் கூறினர்.

ஆனால் கிச்சா எதைப் பற்றியுமே அலட்டிக் கொள்ளாமல் அவன் பாட்டில் இருந்தான். இப்போது அவனுக்குச் சாப்பாட்டுக் கவலையில்லை. ஆடிட்டர் வீட்டில் இரண்டு வேளை சாப்பாடு. என்றாலும் அக்கிரகாரத்திலுள்ளோருக்குக் கடைசி வரை சந்தேகம் தான் .திடீரென்று அவன் ஆடிட்டர் வீட்டினரை அடிக்க ஓடலாம் , வர மாட்டேன் என்று மறுக்கலாம் என்று எதிர் பார்த்தனர். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

ஒரு சுபயோக சுப தினத்தில் அவன் சென்னைக்கும் , பின் அங்கிருந்து கயா காசிக்கும் பயணமானான். அவன் போனது நல்ல குளிரெடுக்கும் மார்கழி மாதம்.

அவனில்லாமல் எனக்கு ஏதோ ஒன்று குறைந்தது போல் இருந்தது. நாங்கள் பாடும் பஜனைகளை ரசிக்க ஆளில்லை. பெண்கள் வீட்டு வாசலில் போடும் கோலத்தை மிதிக்காமல் போங்கள் என்று கத்தித் திட்ட யாருமில்லை. கோயில் மண்டபத்தில் கச்சேரிகள் நடக்கும் போது தாளம் போட்டுத் தலையாட்ட ஆளில்லை. அவ்வளவு ஏன்? இரவு நேரங்களில் மக்களின் இரக்கமற்ற தன்மையைப் பற்றிப் பேச ஒருவரும் இல்லை. அனேகமாக எனக்கு மட்டும் தான் இவை தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் அந்தத் தோல்லைகள் எல்லாம் இல்லை ! நிம்மதியாகத் தூங்கலாம் என்றனர்.

மாதங்கள் இரண்டு ஓடி விட்டன. கிச்சா இல்லாத வாழ்க்கை எங்களுக்கு ஓரளவு பழகி விட்டது. ஆடிட்டர் குடும்பத்தினர் கிராமம் திரும்பி , வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு சென்னைக்கும் போய் விட்டார்கள். ஆனால் கிச்சாவைப் பற்றி எந்த சேதியும் காணோம். கிச்சா அவர்களுடன் வரவேயில்லை. என்ன தான் அனாதையானாலும் எங்கள் தெருவில் வளர்ந்தவன் இல்லையா? மீனாட்சிப் பாட்டி தான் கேட்டாள். “கிச்சா எங்கே?” என்று. அந்தக் கேள்வியை ஆடிட்டர் வீட்டினர் எதிர்பார்த்திருந்ததைப் போல பதிலை ஒப்பித்தார்கள்.

“நாங்க பெரியவரோட காரியம் எல்லாம் பண்றவரைக்கும் எங்க கூடவே தான் இருந்தான். தானம் எல்லாம் வாங்கிண்டு , ஒடனே அதை அங்கேயிருந்த மத்த சன்யாசிகளுக்குக் குடுத்துட்டான். அதுக்கும் நாங்க ஒண்ணும் சொல்லல்லை. கயாவுல சிரார்த்தம் பண்ணிட்டு , அஸ்தியைக் கரைக்கறதுக்காக காசி வந்தோம். அங்கேயும் எங்க கூடத்தான் இருந்தான். அந்தக் குளுர்லயும் கங்கையில எறங்கிக் குளிச்சான், அது வரைக்கும் கடனேன்னு பூணல் போட்டுண்டிருந்தவன் , அதை கங்கையில கழட்டி வீசிட்டு எங்கியோ போயிட்டான். அப்புறம் நாங்க அவனைப் பாக்கவேயில்லை. அவனைத் தேடிண்டு எத்தனை நாள் நாங்க அங்க இருக்க முடியும்? அதான் நாங்க கிளம்பி வந்துட்டோம்.” என்றனர்.

கிச்சா காசியோடு போய்விட்ட செய்தி ஜீரணிக்க சற்று கடினமாக இருந்தது.

கிச்சா இல்லை என்பதற்காக கிராமத்து இயக்கங்கள் நின்று விடுமா என்ன? அது பாட்டுக்கு அது தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அனைவருமே கிச்சாவை மறந்து விட்டோம்.

திடீரென ஒரு நாள் , கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு , கிச்சா மீண்டும் வந்தான். முன்னை விட ஒல்லியாக இருந்தான். மூச்சு விடும் போதெல்லாம் இழுத்து வாங்கியது. விசிலடிப்பது போலச் சத்தம் கேட்டது. பேச முடியாமல் பேசினான். எந்நேரமும் சோர்ந்து படுத்துக் கொண்டான். அவன் வந்து சேர்ந்தது குறித்து சந்தோஷப் பட வேண்டுமா இல்லையா? என்பது தெரியாமல் கிராமம் சும்மா இருந்தது.

முன்னெல்லாம் திண்ணையில் உட்கார்ந்திருப்பான். இப்போது படுத்திருக்கிறான். பேசவே கஷ்டப் படுகிறான். போனால் போகிறதென்று மீனாட்சிப் பாட்டி வைத்துக் கொடுக்கும் கஞ்சியை மட்டும் குடித்தான்.

எங்கள் தெருவில் ஒரு பெண்மணி தன் கணவனோடு குடியிருந்தாள். இருவருக்கும் சண்டை வராத நாளே கிடையாது. அப்படி சண்டை போட்ட நாட்களிலெல்லாம் , அந்த மாமி தூக்குப் போட்டுக் கொள்ளவோ , குளத்தில் விழவோ கிளம்பி விடுவாள். அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டி வருவது தெருக்காரர்கள் பொறுப்பு. அன்றும் அப்படி ஏதோ சண்டை நடந்திருக்க வேண்டும். என்னவோ அன்று வித்தியாசமாக அந்த மாமி பூச்சி மருந்தை குடித்து விட்டேன் என்று கதறிக் கோண்டிருந்தாள். தெருக்காரர்கள் அனைவரும் ஓடினர். கிச்சா சாவகாசமாகச் சொன்னான். “அந்தப் பைத்தியம் ஒண்ணும் விஷத்தையும் குடிக்கலை , ஒண்ணுமில்லை! அம்புட்டும் நடிப்பு” என்று இளைப்புகளூடே கூறி விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். அது போலவே டாக்டரிடம் கொண்டு போனதில் அவர் ஸ்டமக் வாஷ் செய்து விட்டு ஒன்றுமில்லை என்று கூறி விட்டார்.

சிறிது நாட்கள் கழித்து , பட்டாபி சார் வீட்டு சிறு பையனைக் காணவில்லை என்று எல்லோரும் ஊரெல்லாம் தேடிய போது , “ஆத்துக்குள்ளே பாருங்கோ! அதை விட்டுட்டு எங்கியோ தேடறா” என்று கூறிவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தான். அதே போல் பையன் , மாடியில் நெல் பத்தாயத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு முறுக்கு தின்று கொண்டிருந்தான்.

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கு கண் காது மூக்கு வைத்துப் பேசப் பட்டது. “வெத்திலையில் மை போட்டு பாத்தானாம் ” என்றனர். “வெத்திலையே வேண்டாமாம் , வெறுமன அப்படியே சொல்றாராம்” என்றனர். கிச்சாவின் மதிப்புக் கூடியது. எதாவது காணோம் என்றால் அவனிடம் கேட்டனர். அவன் சொல்வது சில சமயம் பலிக்கும் , பல சமயம் பலிக்காது. பலிக்கவில்லை என்றால் மக்கள் தன் தலை விதி மீது குறை கூறியும் , பலித்தால் அது கிச்சாவின் தீர்க்கதரிசனம் என்றும் கூறினர். கிச்சா உயரத்துக்குப் போய்விட்டான்.

கிச்சா உயரே போகப்போக அவன் உடல் நிலை மோசமாகியது. கடைசியில் ஒரு சிவ ராத்திரியன்று இறந்தும் போனான்.

அதன் பிறகு தான் அவன் வாழ ஆரம்பித்தான். தெருக்காரர்கள் அவனைப் பற்றியே பேசினர். “அவர் ஒரு அவதார புருஷராத்தான் இருக்கணும். நாம தான் புரிஞ்சிக்காமேப் போயிட்டோம்!” , ” அதான் அவர் பூணலே வேண்டாம்னு இருந்தார்” , ” யாருக்கும் எந்த வேலையும் தான் செஞ்சா அவாளுக்குப் பாவனுட்டு தான் அவர் யாருக்கும் உபகாரமே பண்ணல்லை” , ” கடைசியா காசிக்குப் போனதுல அவரோட ஞானக் கண் திறந்துடுத்து” இதைச் சொன்னது , திவசத்துக்கு சாப்பிடக் கூப்பிட்டு அடி வாங்கிய சாஸ்திரிகள். கிச்சாவுடைய சின்ன சின்ன அசைவுகளைக் கூட காவியமாக்கினர். அவன் சிவ ராத்திரியன்று இறந்தது அவன் மதிப்பை மேலும் கூட்டியது.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் , அவன் வீட்டை வணங்கினால் , நினைத்ததெல்லாம் நடக்கிறது என்று சொல்லலாயினர். எனக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவர்கள் செய்வதையெல்லாம் பார்த்து சிரிக்கவா? இல்லை இவர்களோடு சேர்ந்து கொள்ளவா? என்று. சட்டென்று எனக்கு கிச்சா என்னிடம் முன்பு ஒரு நாள் சொன்னது ஞாபகத்தில் வெட்டியது. “சே ! இந்த முதுகெலும்பு இல்லாத ஜனங்க பசிக்குச் சோறு கேட்டா போட மாட்டாங்க ! அதுவே பூஜை பரிகாரம்னு சொல்லி நம்ப வெச்சு பணம் பிடிங்கினா , போட்டி போட்டுக்கிட்டு குடுப்பாங்க. இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது” . ஆம் ! அவன் சொன்னது தான் கரெக்ட்! இந்த மக்களை சரியாகப் புரிந்து கொண்டவன் அவன் தான். ஓ! கிச்சா யூ ஆர் ரியலி கிரேட்.

– பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *