காசுக்காக அல்ல

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 12,755 
 

எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது.

‘ரிக்ஷா சார்…..ரிக்ஷா… ‘

‘சார் ரிக்ஷா…. ‘

‘ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா… ‘

தளத்தில் வந்து இறங்கும் விமானத்தைச் சுற்றி பெட்ரோல் வண்டிகளும், டிரக்குகளும் சூழ்வதைப் போல சைக்கிள் ரிக்ஷாக்கள் சூழ்ந்தன.

மாணிக்கம் இடது கையால் ஹாண்பாரைப் பிடித்தபடி பஸ்ஸிலிருந்து இறங்கும் முகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.டாக்காகவும்….நாசுக்காகவும்….வெள்ளை சள்ளையுமாகவும்……பேன்ட்டும் சூட்டுமாகவும் அவன் கண்கள் தேடிக்கொண்டிருந்தன.

‘ரிக்ஷா சார்…. ‘

மல்லிகைப் பூ நிறத்தில் சவரன் மார்க் வாயில் வேஷ்டியும், முழுக்கை டெரிகாட்டன் ஷர்ட்டும் கையில் தோல் ‘பேக் ‘ குமாக மொழு மொழுப்பான சிவந்த சரீரமுடைய ஒருவர் அவனை நெருங்கினார்.

‘கீரப்பாளையம் வர்ரீயாப்பா ? ‘

‘எந்த கீரப்பாளையம் சார் ?…காராமணி குப்பத்துக் கீரப்பாளையமா ?….. ‘

‘இல்ல; உழந்த கீரப்பாளையம், மொதலியார் பேட்ட கிட்ட இல்ல…. ‘

‘ஆமா சார்; எங்க….ஆல வாசப்படிய தாண்டியா….அதுக்கு இந்தாண்டியே வா…. ‘ ‘

‘தாண்டி தான். அப்படியே மெயின் ரோடிலேயே நாலஞ்சி ஊடு தள்ளி…. ‘

‘சரிதான் சார், ஏறுங்க…. ‘

அவன் சீட்டைத் தட்டிக் காட்டினான்.

‘ஏர்றது இருக்கட்டும்….எவ்வளவோ கேக்கற ?…. ‘

‘முக்கா ரூவா குடுத்துடுங்க சார்….. ‘

‘என்னாது ? முக்கால் ரூபாயா ‘… ‘ அவர் ஆச்சரியப்பட்டார். ‘எப்பவும் பஸ் ஸ்டாண்டுல இருந்து கீரப்பாளையம் போறதுன்னா எட்டாணா தாம்பா குடுக்கறது…. ‘

‘என்னா சார்யிது ‘ இங்கருந்து ஒப்பித்தாலைக்கி போறதுன்னாலே முக்காரூவா வாங்கறோம் சார், ஒப்பித்தாலையவுட தூரமாச்சேயிது…ரயில்வே கேட்டல்லாம் தாண்டி போவணுமே சார்… ‘

‘அதல்லாம் வேணாம். எட்டணாதான் ‘ எட்டணாதான் வழக்கமா குடுக்கறது.

அவன் அவர் முகத்தைப் பார்த்தான்.

‘என்னாசார்….தெரிஞ்சவங்களே யிப்பிடி பேசுறீங்க ? கஷ்டம் சார்….ஆலவாசப் படிய தாண்டி போவணும் சார்…. மொதலியார் பேட்டைக்கே எட்டணாவுக்கு யாரும் வரமாட்டாங்க சார்…. ‘

பக்கத்திலிருந்த மின்சாமி கேட்டான் ‘என்னாபா அது, எங்க போவணுமாம்… ‘

‘ஒழந்த கீரப்பாளையம். எட்டணா தர்றாராம்…. ‘

‘என்னா சொன்ன…. ? ‘

‘முக்கா ரூவா கேடேங்…. ‘

‘அப்புறம் என்னா…அதுக்கு கொறைஞ்சி யார் சார் வருவாங்க….. ‘

வந்தவர் சுற்று முற்றும் பார்த்தார்.

மின்சாமி அவரைப் பார்த்தான்.

‘பத்தணா குடுத்திட்டு போ சார்….அதுக்கு கொறைஞ்சி இங்க யாரும் வரமாட்டாங்க…இதே நாங்கன்னா வரமாட்டம்…. ஏதோ கேட்டுட்டிங்க…போபா, கெடக்குது…வந்த சவாரிய ஏன் உடற….. ‘

‘என்னடா நீ வேற; பத்தணான்னிப்புட்டு….நீ போவியா பத்தணாவுக்கு ? ‘ அவன் முனங்கிக் கொண்டே வண்டியை எடுத்தான். ‘அவன் சொல்லிட்டானேண்ண வாசி வர்ரேன் சார். இல்லண்ணா எங்கப்பாணா பத்தணாவுக்கு எவனும் வரமாட்டான் சார்… ‘

மங்களாம்பிகை சைக்கிள் ரிக்ஷா ஒர்க்ஸில் வாடகைக்கு எடுத்து வண்டி ஓட்டுபவன் அவன். நாள் ஒன்றுக்கு ரெண்டரை ரூபாய் வாடகை தினம் கட்டி விட வேண்டும். வாடகைக்கு மேலே நாலைந்து ரூபாயாவது ஓட்டாமல் ரா பத்து மணியானாலும் வண்டியை விட மாட்டான் அவன். மேலண்டபுல்வார் வீதி நெடுகிலும், டூப்ளே ஸ்ட்ரீட்டிலும், ரங்கப்பிள்ளை வீதியிலும், அஜந்தா டாக்கீஸ் எதிரிலும் விகாரம் எடுத்த கண்களால் ஜனங்களைப் பார்த்துக்கொண்டு திரிவான். சந்தடி ஓய்ந்த தெருவில், போக்கு வரத்து ஓய்ந்த நிசப்தத்தில் ரெண்டாவது ஆட்டம் விட்டபிறகு சவாரி கிடைக்காதா என்று சினிமாக் கொட்டைகைகளின் எதிரில் அமைதியோடு காத்துக்கொண்டிருப்பான்.

எப்போதாவது சில சமயம் ‘நரி மொகத்தில் முழித்து ‘ அந்தக் காசை பொழுதோடவே சம்பாதித்து விடுகிற நாட்களில் அவன் உற்சாகமாக வீடு திரும்புவான். நியூடோன் எதிர்த்தாற் போலிருக்கும் நடைபாதைக் குடியிருப்பில் வண்டியைவிட்டு விட்டு கள்ளுக் கடைக்கோ சாராயக் கடைக்கோ போவான். ரெண்டு மொந்தையோ, நாலு தெரானோ அடித்து விட்டு கண்கள் வெளிற தள்ளாட்டத்துடனே வண்டியில் வந்துவீழ்வான். சீட்டில் அமர்ந்து கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அசதியால் கண்ணை மூடுவான்.

பொண்ஜாதியிடம் ரெண்டோ மூணோ கொடுத்துவிட்டு குடித்தது போக மீதியில், புள்ளைகளுக்கு தள்ளு வண்டியில் விற்றுப் போகிற இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுப்பான். நாலு புள்ளைகளுக்குத் தகப்பன் அவன். அக்கம் பக்கத்துப் பசங்களை யெல்லாம் கூட்டி வைத்து வாங்கிக் கொடுப்பான். குஷியாயிருக்கிற நாட்களில் அதுகளுக்கு கதைகள் சொல்லுவான். அதுகள் தின்று பூரிக்கிற அழகை மயக்கம் நிறைந்த கண்களால் பெருமிதத்தோடு பார்ப்பான்.

‘எல்லாம் தின்னுங்க; நல்லா தின்னுங்க….நாம்ப பிச்சை எடுத்து தின்னல….நான் சம்பாரிக்கிறகாசி……நான் வாங்கிக் குடுக்கறேன். ஒடம்புல தெம்பு இருக்கற வரிக்கும் சம்பாரிச்சிக்னே இருப்பேன். வாங்கியாந்து குடுப்பேன். ‘

ரிக்ஷா ஜசவானா ‘ஆலை டர்ன் ‘ திரும்பி ஊர்ந்தது. சித்திரை வெய்யில் அனல் பறக்கக் கொளுத்தியது. உருகிய தார்ச்சாலையில் வீல்கள் அழுந்தப் புதைவதைப் போலிருந்தன. அவன் எழுந்து நின்று மெறிக்கத்தொடங்கினான். வெப்பம் நிறைந்த எதிர்காற்று சைக்கிளை அசைய வொட்டாமல் தடுத்தது. யாரோ பின்னாலிருந்து இழுப்பதைப் போலிருந்தது. அவன் சிரமத்துடன் அழுத்தி மெறித்தான். எண்ணெய் காணாத காய்ந்த தலை மயிர்கள் காற்றில் பம்பிப் பறந்தன. நெற்றி ஓரங்களில் வியர்வை வழிந்து புருவ மேட்டின் வழியாக கீழே இறங்கியது. சினிமா ஸ்டார் படம் போட்ட முண்டாபனியனும், முரட்டுத்தனமான அழுக்கு அரைக்கால் டிரவுசரும் வியர்வையால் நனைந்து கசகசத்தன. ஒவ்வொரு முறை பெடல்கள் ஏறி இறங்கும்போதும் நரம்புகள் விம்மி அழுந்தின. கருத்த உடம்பில் குளுப்பாட்டியது போல் வியர்வை வழிந்தது. அவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு பிரயாசையுடன் மெறித்தான்.

வண்டி செம்மண் புழுதி படிந்த ஆலை வாசற்படி சந்து திருப்பி, தாண்டி, பக்கத்து மெயின் ரோட்டை அடைந்தது.

‘எந்த ஊடு சார்… ? ‘

‘அதோ ‘ அந்த மெத்த ஊடுதான்….நீல பெயிண்ட் அடிச்சில்ல… ‘

வண்டி வீட்டெதிரில் நின்றது.

‘அவர் கீழே இறங்கி பாக்கெட்டில் கைவிட்டார். அவன் ரெட்டைக் கரைக் கட்டம் போட்ட சின்னகைத் துண்டால் முகத்தையும், முதுகையும் அழுந்தத் துடைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவரை நோக்கினான்.

‘ரொம்ப கஷ்டம் சார்….கூட எதுனா பாத்து, போட்டுக் குடுங்க சார் ‘..

‘அதல்லாம் ஒண்ணும் பேசாத. சொன்னா சொன்னதுதான். ‘

‘யாரும் வரமாட்டாங்க சார்…இந்த வெய்யில்ல….எவ்வளவோ செலவு பண்ணிட்டுப் போறீங்க….ஒரு டாக்கிதான் சார்…. ‘

அவன் முக வாட்டத்தோடு திரும்பினான். சரியாக ஒரு நேரு நாணயமும், ஒரு பத்து பைசா, ஒரு ரெட்டை பைசா துட்டு மட்டுமே அவன் கைகளில் விழுந்தன. அவர் உள்ளே போய் விட்டார். அவன் வண்டியைத் திருப்பிக் கொண்டு நடந்தான்.

‘இருக்கிறவனுங்களுக்குத்தான் மனம் வரமாட்டேன்னுது. எவ்வளவோ துட்டு எப்பிடி எப்பிடியோ செலவு பண்ணிட்டுப் போறாங்க; கஷ்டாளிக்கு ஒரு ரெண்டு பணம் குடுக்கறதுன்னாதான் எல்லாருக்கும் நொளப்பமாருக்குது… ‘

அவன் வண்டியில் ஏறி மெதுவாய் உருட்டினான். பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் சும்மா போக முடியாது. அதற்காக இங்கேயே போட்டு வைக்கவும் முடியாது. யாராவது பஸ்ஸ்டாண்ட் போகிறவர்கள் கிடைத்தால் தேவலாம்….

அவன் பாக்கெட்டில் கைவிட்டு சில்லரையை எடுத்து எண்ணினான்: மூணு ரூபாய் கூட இல்லை. ‘தூமப் பசங்க….எங்கியோ கெடந்து வந்து கோரி மேட்டுல இந்த ஆஸ்பத்திரி கட்டினாலும் கட்டினாங்க….ரிக்ஷாக்காரன் பொழப்புல மண்ணாப் பூடுத்து….ஆஸ்பத்திரி கட்டினானோ இல்லையோ, கண்டவனல்லாம் ‘டெம்போ ‘ கொண்ணாந்து உட்டுட்டான். அப்புறம் சைக்கிள் ரிக்ஷாவுல எவன் ஏர்றன்றான்…சங்கமாங்கிப் பசங்க…. ‘ டர்ருன்றான், டிர்ருன்றான், முப்பது பைசாவுக்கு எங்க பார்த்தாலும் கொண்ணும் போய் உட்டுட்றான். சர்ருன்னு அதில போயி எறங்கறதப் பாப்பானா….லொங்கு லொங்குன்னு ரிக்ஷாவுல வருவானா, பத்தாத்துக்கு டவுன் பஸ்ஸ்உ வேற…. ‘

அவன், ‘ரிக்ஷா வேண்டும் ‘ முகங்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு வந்தான். தளர்ச்சியோடும், அசமந்தமாகவும் மெல்ல அசங்கி, அசங்கி மெறித்துக் கொண்டு வந்தான். தொழிலாளார் சங்கத்துக் கொட்டகையைத் தாண்டி கொஞ்ச தூரம்–அவன் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன….

‘மெய்தானா ?…பத்து ரூபா நோட்டா அது ‘ ‘

அவன் அவசரமாக பிரேக்கை இழுத்து கீழே இறங்கினான். இறங்குவதற்குள் ஃப்ரன்ட்டு வீல் எட்டாக மடிந்து கிடந்த நோட்டின் மேல் ஏறி நின்றது. அவன் வண்டியை கொஞ்சம் அசக்கி அதை வெளியில் எடுத்தான். ‘பத்து ரூபாய்– ‘ ‘ நெஞ்சு விம்மிப் பூரித்தது– ‘யாருடையதோ– யாராவது இடுப்பில் செருகி வைத்துக்கொண்டு போகும்போது கீழே விழுந்து விட்டிருக்கலாம்… ‘

கையில் நோட்டைத் திணித்து மறைத்துக் கொண்டு யாருக்கும் சந்தேகம் தோணாத வகையில் காற்று போதுமா….சரீயாக இருக்கிறதா என்று பார்ப்பவன் மாதிரி வீலை அமுக்கிப் பார்த்து, செக் நட்டையும் சும்மா ஒப்புக்கு நன்றாக திருகி இறுக்கிக் கொண்டு சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான்.

மனம் உற்சாகத்தால் துள்ளியது. உதட்டோரத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு. ‘இன்னைக்கு கூட ஒரு ‘தெரான் ‘ அடிக்கலாம்: அவளுக்கு ஒரு ரவிக்கைத் துண்டு எடுத்துக் கொடுக்கலாம்; பசங்களுக்கு இஷ்டம்போல் துண்ண வாங்கிக் கொடுக்கலாம்; சினிமாவுக்கு இட்டுக்னு போகலாம்; அப்படியே காபகமாக அங்காளம்மனுக்கும் ஒரு பணத்துக்கு சூடம் வாங்கிக் கொளுத்தி விட வேண்டும் ‘

அவன் சந்தேகத்தோடு பாக்கெட்டை அழுத்தி, நிமிண்டிப் பார்த்துக் கொண்டான். நோட்டு ஆப்டது மெய்தான். உள்ளே அப்படியே பத்திரமாய்த்தான் இருக்கிறது. மாயமாய் கீயமாய் மறைந்து விடவில்லை. மொத்தம் பார்த்தால் பதிமூணு ரூபாய் மாமுல் வருமானத்துக்கு மேலே ‘ அதுவும் ரெண்டு மணிக்குள்ளாக…. ‘

அன்றையப் பொழுதுக்கு இனி அவன் வண்டியை ஓட்ட வேண்டியதில்லை. அவன் வருமானத்துக்கு மேலேயே அவனுக்குக் கிடைத்துவிட்டது. இனி அவன் கள்ளுக்கடைக்குப் போகலாம்; சாராயக்கடைக்குப் போகலாம்; பகலாட்டம் சினிமாவுக்குப் போகலாம்; அல்லது வண்டியை எங்காவது மரத்து நிழலில் விட்டு விட்டு நிம்மதியாகத் தூங்கலாம்….

ஆனால் அவன் ரிக்ஷாவை மெறித்துக் கொண்டிருந்தான். ரிக்ஷாவுக்காக வேண்டி நிற்கும் முகங்களைத் தேடிக் கொண்டிருந்தான். காலியாகவே உருட்டிக் கொண்டு வந்தான். கொஞ்சம் சோர்வடைந்தான். மந்தமாக ஒரு சாயா குடிக்கலாம் என்று சங்கர நாயர் கடையண்டை வண்டியை நிறுத்தினான்.

பின்னாலிருந்து யாரோ ஒருவர் குரல் கேட்டது ‘ரிக்ஷா ‘ அவன் திரும்பினான்.

ஒட்டிய கன்னமும், கருத்த உதடுகளில் சுருட்டும், முன்புறம் சரிந்த தொப்பையுமுடைய ஒரு பெரியவர் கேட்டார் ‘ஏம்ப்பா நெல்லித்தோப்பு வர்ரியா ‘

‘நெல்லித்தோப்புல எங்கே ‘…. ‘

‘காளியம்மன் கோவில் சந்து. ‘

‘சரி ஏறுங்க…. ‘

‘எவ்வளவோ கேக்கற…. ? ‘

‘ஏறுசாமி; எட்டணா குடு…. ‘

‘எட்டணா தாங்காதுப்பா; ஆறணா குடுத்துடறேன். ‘

‘எதனாகுடுசாமி –ஏறு…. ‘

அவன் உற்சாகமடைந்தான். அவன் முகத்தில் புதிய ஒளி பிரகாசித்தது. குதூகலத்துடனும் சந்துஷ்டியுடனும் வண்டியை எடுத்தான். ரயில்வே கேட்டைத் தாண்டி கொஞ்சம் சறுகலான ரோட்டில் வண்டி ஓடியது. காற்று பின் வாட்டத்தில் அடித்தது. அவன் எழுந்து நின்று சரசரவென்று மெறித்து ‘ஸ்பீட்பிக் அப் ‘ பண்ணிவிட்டு சீட்டில் உட்கார்ந்தான். வண்டி மெறிக்காமலே ஓடியது. சவாரி கிடைத்த சந்தோஷமும், வண்டி வாழைப்பழம் மாதிரி நழுவுகிற குஷியும் மனசுலேசாகி பறப்பதைப் போலிருந்தது. எதிரே பரவலாக வரும் சைக்கிள்களுக்கும் இடையில் அவன் லாவகமாகவும் அசாதாரணமாகவும் வண்டியை ஓட்டிச் சென்றான்.

பின்னால் உட்கார்ந்திருந்த பெரியவர் ‘பார்த்துப்பா ‘ ‘ என்றார்.

அவன் அனாவசியமாகவே மெறித்தான். பூரிப்போடு சிரித்துக் கொண்டான். நெல்லித்தோப்பு சீக்கிரமே வந்துவிட்டது. காளியம்மன் கோவில் சந்து திரும்பி, பெரியவர் காட்டிய வீட்டெதிரில் வண்டியை நிறுத்தினான்.

பெரியவர் கீழே இறங்கி மடியில் கைவைத்து அவிழ்த்து சில்லரையை விரித்தார். கசங்கிய ஒரு ஒத்தை ரூபாய் நோட்டு; ஒரு நாலணாதுட்டு; ஒரு பத்து பைசா. அவன் வண்டியை விட்டு இறங்காமலே பார்த்தான்.

‘முப்பத்தஞ்சி பைசாதாம்பா இருக்குது; ஒரு ரூபாய்க்கு சில்ற வச்சிக்கினுகிறியா ? ரெண்டு பைசா கொறையது…. ‘

‘காட்டுசாமி….பரவால்ல ‘ எவ்வளோ துட்டு எப்படியெப்பிடியோ அழியிது. இப்ப இந்த ரெண்டு பைசால தானா வந்துடுத்து….நீதான் சாப்டு போ சாமி… ‘

அவன் பெருமிதத்தோடு சில்லரையை வாங்கி ஜேபியில் போட்டுக் கொண்டு, அடுத்த சவாரியை எதிர்நோக்கி தெம்போடு வண்டியை மெல்ல ரோட்டில் உருட்டினான்.

Print Friendly, PDF & Email

1 thought on “காசுக்காக அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *