அரையுயிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,689 
 

நாலுவேதபதி கிராமம்.

அக்ரஹாரத்து பெருமாள் கோயில் தெரு, ஆவணி அவிட்டம் நாளில் கூட்டம் களை கட்டி இருந்தது.

தாத்தா,அப்பா,பேரன் என வரிசைக்கட்டி குடும்பம் குடும்பமாக அமர்ந்து வேதாராம்பம் எனும் யஜூர் உபகர்மா மற்றும் புனிதநூல் அணியும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோயிலின் வாயிலில் வாழைமரம், மாவிலைத் தோரணம், யானை, கன்றுடன் பசுமாடு என அழகான தோற்றத்துடன் அந்த தெருவிலே போவோர் வருவோர் எல்லாம் ஆச்சரியமாக பார்த்தபடி சென்றுக் கொண்டு இருந்தனர்.

ஏண்டா மகேஷ்? எப்போ வந்தாய்?

என விசாரித்து, தான் பிறகு அகத்திற்கு வருவதாக கூறிச் சென்றார். கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி அய்யர், மகேஷின் தந்தையான குன்னம் கோபாலய்யரின் பால்ய காலத்து நண்பர்.

கோபாலய்யருக்கு வயது எழுபது இருக்கும், ‘குன்னத்தார் அகம்’ என்பது சுருங்கி குன்னத்தாராம் என்ற அடைமொழியோடு இந்த அக்ரஹாரத்தில் வாழ்ந்து, மனைவி கோமளத்தை இழந்து ஐந்து வருடமாக தனியே வசித்து வருபவர். மகேஷ் பெங்களூரில் மனைவி மற்றும் மகளோடு தனி ஜாகை,

மாதாமாதம் செலவுக்கு பணம் அனுப்பவதும், அப்போப்போ போனில் நலம் விசாரிப்பதுமே அவனின் அப்பா மீதான அக்கறை. அனுப்பும் பணம் இவரின் அன்றாடத் தேவைகளுக்கும் இல்லத்தின் பராமரிப்பிற்கே போதுமானதாக இருந்தது.

அலுவலக வேலையாய் சென்னை வரை வந்த மகேஷ் இந்த வருட ஆவணி அவிட்டத்தில், அப்பா கூட சேர்ந்து பூணூல் போட்டுக்கொண்டு அப்பாவின் கைப்பக்குவத்தில் வைத்த சாம்பார் ,பாயாசம் சாப்பிட்டு விட்டு ஊருக்கு கிளம்ப தயாரான போது, கிட்டு மாமா வந்தார்.

மகேஷ்?! கிளம்பிட்டியா?

கிளம்பிண்டே இருக்கேன் மாமா, மத்யானம் 2.30க்கு ரயில்.

என்னப்பா, இங்கே ஷோகேஸில் இருந்த நீ பெற்ற வெற்றி சான்றிதழ், மெடல், மற்றும் கோப்பையெல்லாம் காணலை? என்றார்.

மாமா நான் வாங்கி இருக்கிற புது வீட்டில் உள்ள ஷோகேஸில் இடம் நிறைய காலியாக இருக்கு, இதை வைத்துப் பார்த்தால் எனக்கும் என் பொண்ணுக்கும் மோட்டிவேட்டாக இருக்கும், அதான் அதையெல்லாம் எடுத்துண்டுப்போறேன்.

அவசியம் எடுத்துண்டுப் போ! நன்னா இருக்கும், ஆனால்.. …

அந்த வெற்றிக்கெல்லாம் நீ மட்டும்தான் காரணமா? என்று கேட்டு நிறுத்தினார்.

எஸ் மாமா அப்கோர்ஸ்! என்றான், ஏன் அப்படி கேட்கிறேள்? எதிர் கேள்வி இட்டான்.

நீ பெற்ற வெற்றிகளுக்கு கிடைத்த ஜடப் பொருளை எல்லாம் கொண்டாடத் தெரிந்த உனக்கு, உன் வெற்றிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருந்து, உன் கூடவே பயணித்து, தான் கஷ்டங்களை அனுபவித்தாலும் பராவாயில்லை உன் செளகரிம்தான் முக்கியம் என்று இந்த கிராமத்திலே தனிமையில் உனக்காக வாழ்கிற உண்மையான உயிர் பொருளை அல்லவா நீ உன் வீட்டில் வைத்து அழகு பார்க்கனும், என்று கூறவே…

அவசியம் மாமா, நீங்க சொல்கிறது சரிதான்.

ஆனால்… அப்பா உங்கக்கிட்டே இதை சொல்லலியா? என்று தயங்கினான்.

எதை?என்றார்.

என் மனைவி சோஃபியாவிற்க்கு மூன்று வருடத்திற்கு முன் புற்றுநோய் வந்து, ஷீ ஈஸ் கவுண்டிங் ஹர் டேஸ் மாமா!

ஓ சாரிடா, கேட்கவே வருத்தமா இருக்கு.

எந்த அப்பனும் தன் பிள்ளைக்கு வருகிற கஷ்டங்களை யாரிடமும் சொல்றதேயில்லை, உன் அப்பா மட்டும் என்ன விதிவிலக்கா?

நானும் அப்பாவிற்கு துணையாக ,கொஞ்ச நாட்களிலே என் மகள் சான்டியோட இங்கேயே வந்திடுவேன் மாமா என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

போடா கிட்டு ! உனக்கு எல்லாம் சொல்லனும்னு அவசியமா?

குழந்தை கிளம்புகிற நேரத்திலே கரைய விட்டுண்டு, என்றார் தாயுள்ளத்தோடு கோபாலய்யர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *