அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 14,802 
 

வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த கிழக்கு பார்த்துப் பொங்கல் விடும் முற்றம். குறுக்கே நீளவாட்டத்தில் சுவர்வைக்க, கொத்தனார்களும் கையாட்களும் வந்துவிட்டனர். கைப்பணிப் பலகை, முழுக்கோல், சிறுகோல், ரசமட்டம், குண்டு நூல், கரண்டி, சிமென்ட் சட்டி, மண்வெட்டி சகிதமாக எஞ்ஞான்றும் தகர்க்க இயலாத பிரிவினை. சுட்ட செங்கல்களும், அரித்த பழையாற்றுச் சிறுமணலும் நடுமுற்றத்தில் கிடந்தன.

எப்படி அளந்துபார்த்தாலும், முற்றத்தை நெடுநீளமாகப் பார்த்துக்கொண்டு, அமர்ந்த கோலத்தில் இருக்கும் புலைமாடனையும் புலைமாடத்தியையும் ஒரு பங்கில் வரும் விதத்தில் பாகம் பிரிக்க இயலவில்லை. வட பங்கில் புலைமாடத்தியும் தென் பங்கில் புலைமாடனும் போய் விழுந்தார்கள்.

சுவர் வைக்கும் கால்கோளின்போது சின்னையா கேட்டார்… ”சாமி பீடத்தை என்ன செய்யப் போறயோடே?”

மூத்தவன் சொன்னான் – ”புலமாடன் இதுவரை நாட்னது போரும் சின்னையா. அவுனுக்கே குடுத்திரும்.”

”என்னடே, சின்னவனே! உன் பங்கிலே சாமிக்குப் பீடம் போட்டுக்கிடுகியா?”

”எனக்கு என்னத்துக்கு சின்னையா இந்தச் சள்ளை… காலம் பூரா? பொம்பள நடமாட முடியாது. ஒரு நல்ல நாளுண்ணா வெளீல போக முடியாது. கொழுக்கட்டை அவிச்சாலும், ஓர்மையாட்டு, உப்புக்கூடப் பாக்காம, பீடத்துக்கு முன்னால கொண்டுவைக்கணும் மொதல்லே…”

”அப்பிடி என்னடே, புலமாடன் ஒங்களைக் கஸ்டப்படுத்தீட்டாரு? அஞ்சு தலமொறையாக் கூடவே இருக்காரு… காவலுக்குக் கெடக்காரு.”

”அப்பம் சின்னையா… கூட்டீட்டுப் போயி, உம்ம வீட்டிலே பீடம் போட்டு, நிலையம் விட்டுக் குடுமேன்.”

”வேணுண்டே எனக்கு! எழவுக்கு வந்தவ தாலியறுப்பா பாரு? என்னுண்ணும் போங்க… கூடுதலோ குறைவோ உங்களுக்கு!”

செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே!

சுவர் வைக்க வந்திருந்த கொத்தனார்களும் கையாட்களும் சற்று நின்று வேடிக்கை பார்த்தனர். ‘தென்காசி வழக்காகத் தீர்கிறதா?’ என்று நிதானித்திருந்தனர்.

”புலமாடன், சொடலைமாடன், கழுமாடன், கருப்பட்டி மாடன்னு ஆயிரத்தெட்டு சாமிகளை வெச்சு என்னத்தைக் கண்டோம்?” என்று புலம்பியபடி தம்பி வீட்டினுள் போனான். தனக்கும் இதற்கும் ஒரு பந்தமும் இல்லை என்று அண்ணன் வெயில் காய்ந்து நின்றான். கொத்தனார்களை ஏறிட்டுப் பார்த்த சின்னையா, ”பீடத்தைப் பேத்து பொறவாசல்லே ஆளுக்குப் பாதியாப் பங்குவச்சு வீசிருங்கவே!” என்றார், தரிக்காமல்.

நம்பினார்க்கு சக்திவாய்ந்த தெய்வங்கள்தாம். பாரக்கோலின் இரண்டு நெம்புதலுக்கு நிற்கவில்லை. பீடம் தலையணைபோலப் பெயர்ந்து விழுவதை, முற்றத்தின் ஈசானிய மூலையில் நின்று புலைமாடன் புலைமாடத்தி அருவங்கள் பார்த்து நின்றன.

குரல் கனத்து, சங்கு அடைக்க, சற்று மூக்கும் உறிஞ்சிக்கொண்டு, புலைமாடத்தி சொன்னாள்…

”பாத்தேளா? இதான் மனுசன் புத்தி! எத்தனை பிள்ளைப்பேறு, சாமத்தியம், கலியாணம்கூட நின்னு நடத்திவச்சிருப்போம். பண்டம்பாடி, கண்ணுகாலி, மக்கா மனுசானு எத்தனை வருசம் காவலு! பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டோம்!” என்று சொல்லி, மூக்கைச் சிந்தி, பனைமரத் தூண் தூரில் துடைத்தாள்.

”ஏட்டீ! அந்தக் கடேசி வரி, பாரதிக்க பாஞ்சாலி சபதம்ல? விட்டுத் தள்ளுட்டீ! சவமே, போக்கிடமா இல்ல நமக்கு? எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! வா, எறங்கு…”

”எறங்கலாம் மனுசா… ஆனா நாம இருந்த இருப்பென்ன? வாழ்ந்த பவிசு என்ன? கண்ட கொடை என்ன? கேட்ட வில்லுப்பாட்டு என்ன? முரசென்ன, பம்பை என்ன, உடுக்கு என்ன?”

”ஆம் காலத்தே மட்டிப் பழக் குலை, வருக்கைப் பலா, கருங்கோழிச் சேவல்… போம் காலத்தே கடப்பாரைத் தென்னல்… இதுதான் சிறு தெய்வப் பெருவாழ்வு… சரி, நின்னு அறுதலிப் பெருமூச்சுவிட்டு என்ன காரியம்? நடயைக் கெட்டு…”

”தண்டம், சல்லடம், கச்சை, திருநீத்துக் கொப்பரை எல்லாம் எடுத்துக்கிட்டீரா?” என்றாள் புலைமாடத்தி.

”ஏட்டி! நாம என்னா திசை பலிக்கா போறோம்? தெண்டித் திங்க விதிச்சாச்சு. குடிக்கக் கூழுக்குப் போக்கில்லே, கொப்பளிக்கப் பன்னீருக் குப்பியை எடுத்துக்கிடச் சொல்லுகியே பைத்தியாரி…” என்றார் புலைமாடன்.

”ஒரு நிமிசம் நின்னும் மனுசா… நாமோ போறோம்ங்கதுக்கு ஒரு திருஷ்டாந்தம் காட்டாண்டாமா?”

”என்ன செய்யலாம்ங்கே? அண்ணந் தம்பி ரெண்டு பயங்களையும் கையைக் காலை மொடக்கீரவா?”

”ச்சே! அது ரெம்பக் கூடிப் போயிராதா? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நெனைக்கலாமா?”

”பின்னே என்னதாம்டீ செய்யச் சொல்லுகே?”

”கொஞ்சம் பொறும்… முத்தத்து இடைச் செவுரு அரையாளு ஒசரம் வந்திரட்டும்… அப்பிடியே, அம்பாரமா, நின்ன நிலைக்கு, தள்ளிவிட்டுட்டுப் போயிரலாம்.”

”சரி! செவுத்தையே தள்ளீருவோம்…”

முப்பதடி நீள முற்றம். ஒற்றைச் செங்கல் வைத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வரி செங்கலுக்கும் குண்டு நூல் பார்த்து, திருத்தமான செங்கல் பணி. காய்ந்த பிறகு இரு வசமும் பூசிக்கொள்ளலாம். பிறகு காலத்துக்கும் கவலை இல்லை. தோளுயரம் வந்துவிட்டது குறுக்குச்சுவர்.

காலம் என்பது எவர் கைப்பிள்ளை?

நல்ல ராகுகாலம் பார்த்து, அன்று செவ்வாய்க்கிழமை, மூன்று – நாலாரை ராகுகாலம், கிழக்குப் பார்த்து நின்று இருவரும் சுவரை நோக்கி ஊதினார்கள் ‘ப்பூ’ என்று. பெருமழைக்குச் சாயும் கொவர்ந்த மண் சுவர்போல ‘பொளேர்’ என மல்லாக்க விழுந்தது செங்கல் சுவர். நல்ல காலமாகக் கொத்தனார்கள், கையாட்கள் எவருக்கும் கை-கால் எலும்பு முறிவு என்ற எந்த ரத்தக் கோறையும் இல்லை. இல்லை என்றாலும் தென்னை மரத்தை அடித்தால் பனைமரத்துக்கு நெறிகட்டுமா?

எல்லார்க்கும் திகைப்பும் பெரும் பீதியும்!

”நாப்பத்து வருசமா கொத்தனார் பணி செய்யேன். என் சர்வீசிலே இப்பிடி ஆனதில்லே…” என்ற விக்கித்த முகம் கோரம் காட்டியது.

சத்தம் கேட்டு இரு வீட்டுச் சனப்படையும் அக்கமும் பக்கமும் –

”புலமாடன் வேலையைக் காட்டீட்டான் பாத்தியா?” என்றார் எதிர்த்த வீட்டுக்காரர். அவருக்கு சங்கதியின் இருப்பும் கிடப்பும் தெரியும்.

மூத்த கொத்தனார் கண்காட்ட, பிற கொத்தனார்களும் கையாட்களும் கரண்டி, சட்டி, கைப்பணிப் பலகை, முழுக்கோல், மண்வெட்டி எல்லாம் கழுவ ஆரம்பித்தனர்.

”என்னடே, கையைக் கழுவீட்டுக் கரையேறுகியோ? நேரம் நாலு மணிகூட ஆகல்லே!”

மூத்த கொத்தனார் சொன்னார், ”இனி பிரஸ்னம் வச்சுப் பாத்துக்கிட்டு ஆளைக் கூப்பிடுங்கோ என்னா? நம்மைக்கொண்டு மேற்கொண்டு செய்ய ஒக்காது… கண்கூடாப் பாத்தாச்சு.”

புலைமாடன், சகதர்மிணியைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

”என்னா தீர்ப்புக்கு வாறானுவளானு பாத்துக்கிட்டுப் போவமா?” என்றாள் புலைமாடத்தி.

”என்ன பேச்சுப் பேசுகே? மதி கெட்டுப்போச்சா? மதியாதார் வாசல் மிதியாமை கோடி பெறும்னு கேட்டது இல்லையா? பீடத்தோட பேத்துப் போட்டானுகோ… கொஞ்சம்கூடப் பயமோ, பக்தியோ, ஜீவ காருண்யமோ, சமூக நீதியோ இல்லாம! இனிமே இவுனுக குடிகாவல் நமக்கு வேண்டாம்… நீ கௌம்பு.”

வாசல் பக்கம் பெரியதொரு வேம்பு நின்றது. மூன்று முறை மன்மத வருடம் கண்டது. மூத்தார் ஒருவர் வைத்துப் பிடித்தது. அதன் செழுங்கிளை ஒன்று தெருவைக் கவித்து நிழல் போத்திச் சாய்ந்திருந்தது. வேம்பு பழுக்கும் ஆனி, ஆடி மாதங்களில் கிளிகளும் மைனாக்களும் உட்கார்ந்து சங்கம் வைத்து எம்மொழித் தமிழாயும். சிறார், வேப்பமுத்துப் பொறுக்க வருவார்கள். நள்ளென்ற சாமத்து இருட்டின் மோனம் கிழித்துப் பறந்து ஏகும் வெளவ்வால்கள் இலக்கற்ற வான்வெளியில்…

மருமகளால் வீடு கடத்தப்பட்ட மாமியாரின் மனநிலையில் இருந்தாள் புலைமாடத்தி. கிழக்கு நோக்கித் தெருவில் படர்ந்து சூரியனையும் வாடையையும் தென்றலையும் சாரலையும் உண்டு வாழ்ந்திருந்த வேப்பமரத்துச் செழுங்கிளை அவள் கண்ணில் பட்டது. கோடரி கொண்டு வெட்ட இரண்டு பேர் வேண்டும். மின் அறுப்பான் முயலலாம் சில மணித்துளிகள். ஓரடி விட்டத்துக்கும் குறைவற்ற கருநீல வைரம் பாய்ந்த கிளை அது.

பம்பை பறட்டையாகக் கிடந்த தலையைச் சொறிந்து நகக் கண்ணில் கறை ஏறிக்கிடந்த இடது கைச் சுண்டு விரலால் கிளையைத் தொட்டுத் தாழ்த்தினாள். மடமடவெனப் பெருஞ் சத்தத்துடன் தெருவை மறித்துக்கொண்டு சாய்ந்தது கிளை.

”ஐயையோ… இதென்ன கூத்தாட்டு இருக்கு?” என்றாள் ஒருத்தி, திகைத்து.

”காத்துமில்லே, மழையுமில்லே… இலைகூட அனங்கல்லே… என்ன கேடு காலமோ?” என்றாள் மற்றொருத்தி, பதைத்து.

”கேடு காலந்தான், வேற என்னா? சிமென்ட் சாந்து வச்சுக் கொட்டின மதிலு அம்பாரமா சரிஞ்சு கதை எங்கினயாம் கேட்டிருக்கியா? உப்புத் தின்னா தண்ணி குடிக்கணுமே!”

சற்றுநேரம் பள்ளிக்கூடப் படிப்பரையில் இருந்து சாலையில் போவோரை வருவோரை, ஆத்துக்குக் குளிக்கத் துவைக்க வருவோரை, தண்ணீர் கோரப் போகும் பெண்டிரை, வயற்காடுகளுக்குப் போய்வருவோரை, வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

அகத்தே அன்றிப் புறச்சுமை ஏதும் இல்லை. மாற்றுத் துணி இல்லை. பல் தீற்ற, தலைக்குத் தேய்க்க, மேலுக்குப் புரட்ட ஏதும் தேவையற்ற அரூபப் பிறவிகள். அடுத்திருப்பது தெரியாது. ஆனால் அடுத்தே அமர்ந்திருக்கும்.

பொழுது சாயத் தொடங்கியது. கறவைகள் திரும்பின. பறவைகள் கூடடைந்தன. உள்ளூர் நூலகத்தின் வானொலி, பால்குடி மாறிய பிள்ளை முதல் பல் விழுந்து பாடையில் பயணம் செய்யக் காத்திருக்கும் கிழடு வரை காமம் கிளர்த்த ஆரம்பித்திருந்தது. யாவும் குறி விதிர்ப்பை நேரதுடைத்த பாடல்கள்… புலைமாடன் செவிப்பட, காமப் பார்வை ஒன்றை புலைமாடத்தி மீது பரவவிட்டான்.

”ஆமா… நேரம் பார்த்திருக்காரு. மொதல்ல கெடக்க எடம் பாரும் மனுசா!” என்றாள் மாடத்தி.

”இருட்டட்டும் செல்லம்… இத்தனை மாமங்கம் வாழப்பட்ட ஊர்லே, நமக்குன்னு ஒரு எடம் வாய்க்காமலா போயிரும்?”

இரவு உணவும் கடைசித் தொலைக்காட்சி நாடகமும் ஆன பிறகு, கதவடைத்து, விளக்கு அணைக்க ஆரம்பித்தனர் ஊர்மக்கள். தெய்வங்களுக்கு ஊண், உறக்கம், வெயில், மழை, பனி, கொடுங்காற்று, ஒளி, இருள், ஆதார் அட்டை… என ஒன்றும் இல்லை. என்றோ எவரோ எழுதியபடி – ஊழிக்கு ஓர் உட்சுவாசம், ஒரு வெளி சுவாசம்…

நினைத்த பொழுதில் நினைத்த இடம் ஏகும் நியதிக்கு ஆட்பட்டு, முத்தாரம்மன் கோயில் படிப்புரைக்குப் போனார்கள். வடக்குப் பார்த்த வாசல். பெரும்பாலும் முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன் யாவரும் அந்தப் பகுதியில் வடக்குப் பார்த்தே அமர்ந்த வடக்கு வாழ் செல்விகள்.

கோயில் முன்வாசலின் இரு சிறகுகளிலும் இரண்டிரண்டு பேர் புரண்டு படுக்கலாம். நேர் சிறகில் பக்கத்துக்கு நான்கு பேர் இருக்கலாம். எதற்கு எவருக்கும் இடைஞ்சல் என்று கிழக்குப் பக்கம் இருந்த வான் பெரிய நீளப் படிப்புரையில் வந்து அமர்ந்தனர்.

முத்தாரம்மனுக்கு வைரவன் காவல். எப்போதும் அம்மனுக்குப் பக்கத்திலே வைரவன். பாரப்பிள்ளை புலைமாடன். ஆனால், அந்தத் திருத்தலத்தில் புலைமாடனுக்கு நிலையம் இல்லை. கோயில் வளாகம் மொத்தத்துக்கும் காவல் அரவணைப் போத்தி என்று கிழக்குச் சுவரின் சாம்பான் சாமி – தெய்வத் திருமேனிகளின் வாசம் உணர்ந்து அரவணைப் போத்தி எட்டிப் பார்த்தார்.

அரவம் உணர்ந்த புலைமாடன் திரும்பிப் பார்த்து, ”என்னா போத்தி, சொகம்தானா?” என்றார்.

”சொகத்துக்கென்னா? எங்க, ஒரு நாளும் இல்லாத் திருநாளா நாச்சியாரையும் கூட்டிக்கிட்டு? ஊரடங்கு முன்னே நகர்வலமா?”

”இல்லடே! சங்கதி இப்பிடி யிப்பிடியாக்கும்… போக்கிடம் இல்லாம ஆயிப்போச்சு. கைலாசத்தில் இருந்து எறங்கி வந்தாச்சு… ஏறிப் போகப்பட்ட தடமும் ஓர்மையில்லே! எண்ணிறந்த பேய்ப்படையும் ஏகப்பட்ட ஆயுதமும் இருந்த காலம் போச்சு. கொல்ல வரம் வெல்ல வரம் எல்லாம் போச்சு… குந்த இடமும் குண்டித் துணியும் தர்க்கத்துக்கு வந்தாச்சு.”

சற்று அனுதாபத்துடன் ஆழ்ந்து இரங்கி ஆலோசித்தார் சாம்பான் சாமி அரவணைப் போத்தி.

”இங்கினயே இருந்துக்கிடலாம். எதுக்கும் அம்மன்கிட்டேயும் வைரவன் கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லீரும்… நீரு பாரப்பிள்ளை. உமக்கு இல்லேன்னா சொல்லப்போறா? ஆனா காரியம் முன்னைப்போல் இல்ல பாத்துக்கிடும். பகலானா தாயக்களி, சீட்டுக்களி, நாயும் புலியும்… கருங்கல்லிலேயே கட்டம் வரைஞ்சுவச்சிருக்கதைப் பாத்தேரா? பின்னே, அஞ்சாறு கூதறப் பயக்கோ கெடந்து, சூம்படஞ்ச ஒறக்கம்… தண்ணியைப் போட்டுக்கிட்டு வந்து தி.மு.க ஒரு பக்கம் அண்ணா தி.மு.க ஒரு பக்கம் கட்சிச் சண்டை. அன்னைக்கு ஒரு நா ராத்திரி, ரெண்டு பயக்கோ ஒரு பிச்சைக்காரிக் குட்டியைத் தள்ளீட்டு வந்திற்றாம் பாத்துக்கிடும். உமக்கு இங்கின பீடமும் இல்லையா, எப்பிடி சகிச்சுக்கிட்டு கெடப்பீரு? அம்மை வேறகூட இருக்கா! ஒத்தப்பொறம் கூட்டாளியும் இல்லே!”

புலைமாடன், புலைமாடத்தியைப் பார்க்க இருவரும் எழுந்தார்கள். பதறிப்போய்ச் சொன்னார், அரவணைப் போத்தி, ”அதுக்கு இப்பம் நான் உங்களைப் போகச் சொல்லலியே…”

‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை’ – என்றொரு திருக்குறளை வீசிவிட்டு எழுந்து நடந்தார்கள்.

வேறு எந்த பேய்க்கோயிலில் இவர்களை அண்ட விடுவார்கள்? ஏற்கெனவே இருபத்தேழு வாதைகளுக்கும் இட நெருக்கடி. ரேஷன் கார்டுக்கும் வாக்காளர் அட்டைக்கும் அடிதடி.

யோசித்துப்பார்த்ததில் எங்குமே இடம் காலி இல்லை. இஸ்லாமியருக்கு வீடு தருவது இல்லை, தலித்துகளுக்கு வீடு இல்லை, மாமிசம் உண்பாருக்கு வீடு இல்லை வாடகைக்கு என்பது போல… சாத்தாங்கோயில், பிள்ளையார் கோயில் சுற்றுப் பிராகாரங்களில் உட்கார நீதம் இல்லாமல் பார்த்தீனியம், எருக்கு, குருக்கு, நாயுருவி, சீமைக் கருவேலம் மற்றும் பிளாஸ்டிக் அடைசல்கள், பாலித்தீன் கவர்கள், குடித்துப் போட்ட குப்பிகள், ஆலமர மூடுகள், அரசமர மூடுகள், வேப்பமர மூடுகள், வில்வமர மூடுகள், பூவரசமர மூடுகள். தென்னை மர, புன்னைமர, புங்கமர, முருங்கமர மூடுகள் தெய்வங்கள் உறைய உகந்தவை அல்ல. புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா? மருதமர மூடுகளில் ஒண்டுக் குடித்தனங்களாக நாகர் பெரும்படை… ஆதிசேசன், வாசுகி, கார்க்கோடகன், அனந்தன், தக்கன், சங்கன், பதுமன், குளிகன் போன்ற பெரு நாகர்களுக்கு அரண்மனை வாசம்.

மனச்சோர்வுடன் நடக்கும்போது, கல்லுப் படிப்புரை வீட்டு தென்மேற்கு மூலையில் இருந்து, இருட்டை இடைவெட்டிச் சிறுமியின் குரல் ஒன்று ஒலித்தது.

”யாத்தா பெரியாயி… எங்க, நடைக்கெல்லாம் வரவே மாட்டியே? இங்க யாரு வீட்டுக்குப் பொறப்பாடு?”

புலைமாடத்தி வெடுக்கெனத் திரும்பினாள்.

”ஏட்டி, நீ கல்லுப்படி வீட்டுக் கன்னியா? ஏ, மக்கா! ஏன் இந்த ரெண்டுங்கெட்ட நேரத்திலே வாசல் படிப்புரையிலே வந்து உட்காந்திருக்கே!”

”எம்மா! பொலமாடத்தி! இன்னும் என்ன ஓர்மை இருக்கா? பத்து அம்பது வருசம் இருக்குமே, உங்க வீட்டு முத்தத்திலே வந்து நான் வெளையாடி! உங்க வீட்டுப் பொறவாசல்லே மஞ்சணத்தி மூட்டுக் கருநாகம் கொத்தித்தானே செத்துப்போனேன். உனக்க பீடத்துக்கு முன்னாலதான தூக்கிக் கெடத்திப் போட்டிருந்து… நீ நெனச்சாக் காப்பாத்தி இருக்கலாம்.”

”எங்களைத்தான் மலையாளத்தான் வாயைக் கெட்டிப் போட்டிருந்தானே! திருஞானசம்பந்தனோ அப்பர் சுவாமிகளோ இருந்திருந்தா, பதிகம் பாடி உன்னை உசிரோட எழுப்பிவிட்டிருப்பா. போட்டு மக்கா… விதிச்சதுதானே நடக்கும். செல்லும் செலவுமா இருக்கியாட்டி?”

”என்னத்தச் சொல்ல என்னைப் பெத்தவளே! ஏதோ இருக்கேன். கன்னி மூலைனு பேரு. ஆம்பிளைகளுக்குத் தான் அறிவில்லாமப்போச்சுனா பொட்டைச்சிறுக்கியோ என்ன ஆட்டம் போடுகாளுவோ? கேளு தாயி! வீட்டிலே ஒரு வடை சுட்டானு வையி, ஒரு தட்டிலே ரெண்டு கன்னிக்கு வைக்கமாட்டாளா? முத ஈடுதானே புட்டுப் புட்டுத் திங்கா பாத்துக்கோ… என்னைப் பாக்கவச்சு, கொழுந்தனைக் கெட்டிப் புடிக்கா. எனக்கு ஒரு டிரங்குப் பெட்டியும் அதுக்குள்ளே மூணு வருசம் மிந்தி எடுத்த பாவாடை தாவணியும் கண்ணாடி வளையலும் உண்டும். ஒரு நல்ல நாளு பெரு நாளுன்னா நம்மளை யாரு கூட்டாக்குகா?”

”அதான் ஊரடங்குன பெறகு இப்பிடி நடமாடுகியாக்கும்?”

”பின்னே என்ன செய்யச் சொல்லுகே? வீட்டுக்குள்ளே நடமாடினா பாவம் சின்னப் பிள்ளையோ பயந்து உறக்கம் கெடும். நம்மோ சலங்கையைக் கழத்திவச்சுக்கிட்டு நடமாட முடியுமா? அது கெடக்கட்டும், எம் பொறப்பு இப்பிடிப்போச்சு… ஒங்களுக்கு என்ன புத்தி முட்டு?”

”அது பெரிய கதை மக்கா… இப்பிடித் தெருத்தெருவா நடக்கும்படி ஆகிப்போச்சு.”

”ஏன்? அங்கேருந்து கௌப்பீட்டாளா? அப்ப குடியிருக்க எடம் தேடியாக்கும் பொறப்பாடு! சரி, ஒரு காரியம் சொன்னா கேப்பேளா? சின்னச் சவம் அறியாமப் பேசுதுனு தள்ளீரப்பிடாது.”

”சொல்லு மக்கா!”

”நம்ம களத்திலே தொழுவத்தை ஒட்டுன மூலையிலே தெக்குப் பாத்து ஒரு பீடம் உண்டும். அதுவும் புலமாடன், புலமாடத்தியும்தான். கன காலமா அளக்கமே காணோம். எடுபட்டுப் போயிட்டாங்கபோல. பேசாம அங்கின போயிக் குத்தவைங்க. எப்பிடியும் வருசத்துக்கு ஒரு சிறப்பு உண்டும். அம்மன் கோயில் கொடைக்கும் சாத்தாங்கோயில் நம்பிரான் வெளையாட்டுக்கும் படுக்கை உண்டும். ஆடு, கோழி இல்லேன்னாலும் கோழி முட்டையோ கும்பளங்காயோ வெலி குடுப்பானுகோ.”

தம் தலைவிதியை எண்ணி சற்றுக் கலங்கினார்கள். கன்னி தொடர்ந்து பேசினாள்-

”ஒண்ணும் யோசிக்காண்டாம் ஆத்தா. பேசாமப் போயி குத்தவைங்கோ. இதைவிடத் தோதான எடம் உனக்கு வாய்க்கவா போகு? எனக்கும் ஒரு கூட்டு ஆச்சு!”

”சரி மக்கா.. நீ நம்ம பிள்ளே. ஆலோசிக்கட்டும்.”

”ஆனா ஒரு காரியம்…”

”என்னட்டீ கண்டிசன் போடுகே?”

”கண்டிசன் இல்லே. நீங்க அங்க உக்காந்ததுக்கு எனக்கொரு திருஷ்டாந்தம் காட்டீரணும்.”

”உனக்குப் புடிக்காத யாரையாம் சொல்லு. கையைக் காலை மொடக்கீருவோம்.”

”நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஒருத்தன்… பத்து வருசமாட்டு. மாட்டுச் சந்தையிலே தலைமுண்டுக்குள்ளே கை போட்டுத் தரகு பேசினவன். இப்பம் கொட்டாரம்போல வீடு… ஆறு காரு, பதினாலு லாரி ஓடுது.”

”ஓடீட்டுப் போகு. உனக்கு என்னா?”

”இட்டிலி, தோசை, இடியாப்பம், கொழுக்கட்டை, ஆப்பத்துக்கு மாவரச்சு எக்ஸ்போர்ட் பண்ணுக பேக்டரி வச்சிருக்கான்.”

”நாட்டுக்கு நல்லதுதானே! தொழில் பெருகும்.”

”வேலைக்குப்போன ரெண்டு கொமருகளைக் காணோம். நாலு பேருக்கு வயத்திலுண்டும். சம்மதிச்சுப் போறவளையெல்லாம் நான் கணக்கிலே சேக்கல்லே.”

”என்ன செய்யலாம்ங்கே?”

”காலம்பற அஞ்சு மணிக்கு காரிலே வந்து நம்ம ஆத்தங்கரையிலேதான் வாக்கிங் போவான்.”

”சரி…”

”நடந்து போகச்சிலே ஒரே அடி. ரெத்தம் கக்கிச் சாகணும்.”

”ஏன்? எதிர்க்கட்சிக்காரன் மேலே போலீஸு எஃப்.ஐ.ஆர் போடதுக்கா? பாவம்லாட்டி எதிர்க்கட்சிக்காரன்?”

”நீங்கள்லாம் பின்ன எதுக்குத்தான் தெய்வம்? அன்னும் கேக்காம, நின்னும் கேக்காம? சும்மா அரிசிப் பாயசத்துக்கு செலவாட்டு? பொறப்பட்டு வந்த எடத்துக்கே போய்ச் சேருங்கோ.”

சுருக்கெனத் தைத்தது புலைமாடனுக்கும் புலைமாடத்திக்கும். வலி தோய்ந்த குரலில் புலைமாடன் சொன்னார்…

”சரி மக்கா! நீ உன் டிரங்குப் பெட்டிக்குள்ளே போயிப் படு. நாங்க இப்பிடியே போறோம் பையப் பைய. கும்பிடப்பட்டவனுக்குத் தெய்வம் வேணுமானு கூவிக்கிட்டு.”

மேற்கு பார்த்து, பழையாற்றின் கரை நோக்கி, நடை தளர்ந்து, இருவரும் போவதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது கன்னி. முதுமையும் தொய்வும் சலிப்புமானவர்களை காலம் எப்போது கைலாசம் கொண்டுசேர்க்கும்?

பழம் தின்னி வெளவ்வால் ஒன்று வடக்கிருந்து தெற்குப் பாய்ந்தது. எங்காவது புன்னையோ கமுகோ பழுத்திருக்க வேண்டும். தெரு மூலை வீட்டுப் புறவாசலில் நின்ற மாமரத்தில் இருந்து கூகை ஒன்று கூவியது. இரவும் இருளும் நள்ளென்று ஒலித்தன. கன்னி தனது விடுதலையைச் சிந்தித்தவாறு டிரங்குப் பெட்டிக்குள் ஒடுங்கலாயிற்று!

சிறுகதை: – மார்ச் 2015

Print Friendly, PDF & Email

1 thought on “அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *