சரஸாவின் காதல்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 21,239 
 

உடம்பெல்லாம் வலித்தது, அயர்ச்சியில் கண்ணைத் திறக்கவே கஷ்டப்பட்டான் அலெக்ஸ். இந்துசமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த அவன் கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது? இப்போது எங்கே இருக்கின்றான் ?

கடைசியாக இரவு வேகமாக புயல் அடித்ததும், கப்பல் கட்டுப்பாடில்லாமல் திணறியதும் இறுதியில் கப்பல் கவிழ்ந்தபோது ஒவ்வொருவராக ஒவ்வொரு திசையில் பாய்ந்து நீந்தத்தொடங்கியதும் ,மூச்சு முட்டும்வரை நீந்தியதும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது. கடைசியாக எப்போது உணர்வு இல்லாமல் போனதென்று ஞாபகமில்லை.

அவன் கண் விழித்தபோது மெதுவாக உடம்பைச் சூடாக்கிக்கொண்டிருந்த வெயில் விடிந்திருந்ததை உணர்த்தியது. கால்களை அசைக்க நினைத்தபோதுதான் கால்கள் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

கைகள் கட்டப்பட்டிருக்கவில்லை. கண்களைக் கசக்கி முழுவதுமாக கண்களைத் திறந்து பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்ததும்தான் ஒரு ஆபத்தில் இருந்து இன்னொரு ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தான் அலெக்ஸ்.

கறுப்பான ,குள்ளமான ,கொஞ்சம் குண்டான உடம்புடன் கையில் ஈட்டியை வைத்துக்கொண்டு சுற்றி நின்றது ஒரு கூட்டம். எல்லோரும் இடுப்பிலே இலைகளால் வேயப்பட்ட ஆடையை சுற்றி இருந்தார்கள். ஏதொ ஒரு காடு சார்ந்த இடத்தில் கரை சேர்ந்து ஒரு ஆதிவாசிக்கூட்டத்தில் பிடிபட்டதை உணர்ந்துவிட அதிக நேரம் எடுக்கவில்லை அலெக்ஸ்சுக்கு.

“இது எந்த இடம்? இவர்கள் எந்த ஆதிவாசிக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்?”

இதுவரை எந்த புத்தகத்திலேயோ, வீடியோவிலோயோ இந்த முக அமைப்புடைய மனிதர்களைப்பார்த்ததில்லை அலெக்ஸ்.

அவர்களின் உடல் அமைப்பு முழுவதுமாக மனிதர்களைப் போல இருந்தாலும், முக அமைப்பு அதிகமான மயிர் வளர்ந்து கொரில்லாவின் முகத்துக்கும் மனிதனின் முகத்துக்கும் இடைப்பட்டதாக இருந்தது.

கூட்டத்தில் இருந்த ஒருவன் சத்தமாக ஏதோ சொல்ல அவர்களில் ஒருவன் அலெக்ஸுக்குப்பக்கத்தில் சென்று அவன் ஆடைகளை முழுவதுமாக பிய்த்தெறிந்தான். அப்போது இருந்த நிலமையில் தான் நிர்வாணமாக நிற்பது அலெக்ஸுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை. அவர்கள் பேசிய மொழி என்னவென்று புரியவில்லை. ஆனால் சத்தமாகச் சொன்னவன் தான் அந்தக்கூட்டத்தின் தலைவன் என்று மட்டும் புரிந்தது.

இன்னொருவன் ஒரு கோர்க்கப்பட்ட இலைகளை அலெக்ஸின் இடுப்பைச் சுற்றிக்கட்டிவிட்டு ,அவன் கைகளையும் ஒரு கொடியினால் இறுக்கிக் கட்டினான்.

கைகள் கட்டப்பட்ட பின் அலெக்ஸின் கால்களில் கட்டியிருந்த கொடி அவிழ்த்துவிடப்பட்டது .

“ஐயம் அலெக்ஸ்”

கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவரின் முகத்தை மாறி மாறி பார்த்ததிலிருந்து அவன் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை என்று புரிந்தது.

கூட்டத்தில் இருந்த ஒருவன் ஈட்டியால் அலெக்ஸின் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே நடக்க மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அவன் சொன்னது புரியாவிட்டாலும் தன்னை நடக்கச்சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டு அலெக்ஸும் நடக்கத்தொடக்கினான்.

சுற்றிவர காடு, மனிதர்கள் இருப்பதற்கு அடையாளமே இல்லாத காடு.

அலெக்ஸின் வாய் வரண்டு, அவன் இரவு நீந்தும்போது அவனது கட்டுப்பாடு இல்லாமல் தொண்டைக்குள் இறங்கிய உப்புத்தண்ணீர் அவன் தொண்டையை அரித்து அவன் தாகத்தை இன்னும் அதிகமாக்கியது.

“எனக்குத் தண்ணி வேண்டும் “சைகையால் சொன்னான் .

அவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ தெரியாது, அலெக்ஸுக்குப் பின்னுக்கு நின்ற‌வன் சத்தமாக ஏதோ சொல்லிவிட்டு ஈட்டியை இன்னும் கொஞ்சமாக அழுத்தமாக முதுகில் தன்னை சத்தம்போடாமல் நடக்கச் சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டு தள்ளாடிக்கொண்டே நடக்கத் தொடங்கினான் அலெக்ஸ்.

பின்னுக்கு வந்தவர்கள் ஏதோ சத்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள்.எதுவுமே அலெக்ஸுக்குப் புரியவில்லை.இடையிடையே அவர்கள் சிரித்துக்கொண்டது மட்டும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தியது.

“ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்?”

ஒருவேளை மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக இருப்பார்களோ?அவர்கள் உணவுக்கு தான் கிடைத்துவிட்டதால்தன் இவ்வளவு மகிச்சியாக இருக்கிறார்களோ? அலெக்ஸை கொஞ்சம் கொஞ்சமாக மரணபயம் தொற்றிக்கொண்டது.

ஆதிவாசிகள் மனிதர்களை உயிருடன் எரிப்பது,கொதிக்கும் எண்ணெயில் போடுவது பற்றியெல்லாம் படித்தது ஞாபகத்துக்கு வந்து அவன் மரணபயத்தை இன்னும் அதிகரித்தது.

கொஞ்ச நேர நடைக்கபுறம் மேலே முழுவதும் மரங்கள் வியாபித்திருந்தாலும் கீழே செடிகொடிகளை வெட்டி ,காய்ந்த இலைகளாலும் மரப்பட்டைகளாலும் கட்டப்பட்ட சின்ன குடிசைகள் நிரம்பிய ஒரு இடத்தை அடைந்தார்கள்.

அலெக்ஸைக் கூட்டிவந்தவன் ஏதோ சத்தமாக கத்த எங்கிருந்து வந்தார்களென்றே தெரியாது ,திடீரென நூற்றுக்கணக்கானோர் அலெக்ஸைச் சுற்றிக்கொண்டனர். எல்லோரும் அலெக்ஸை புதுவித உயிரினத்தைப் பார்க்கும் தோரணையில் பார்த்துக்கொன்டிருந்தனர்.

இப்போடு கூடி இருந்தவர்களில் பெண்களும் ,குழந்தைகளும்கூட இருந்தனர். பெண்களும் இடுப்பைமட்டுமே சுற்றி இலைகளால் மறைத்திருந்தனர்.

கூடிநின்றவர்கள் மாறி மாறி தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர்.குழந்தைகள் பயந்துகொண்டே அலெக்ஸுக்குப் பக்கத்தில் வந்து அவனைத் தொட்டுப்பார்த்துவிட்டு சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடினர்.

நாம் மிருகக்காட்சி சாலைக்கு செல்லும்போது அங்கே இருக்கும் மிருகங்களோடு விளையாடுவதைப்போல அலெக்ஸுடன் அங்கிருந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன.

அவர்கள் பேசிய எதுவுமே விளங்கவில்லை.ஆனால் இடையிடையே அலெக்ஸைக் காட்டி அவர்கள் சிரித்துகொன்டது அலெக்ஸுக்குப் இன்னும் பயத்தைக்கூட்டியது.

அலெக்ஸுக்கு நாக்கு வரண்டு தாகத்தால் எச்சில் ஊறுவதுக்கூட நின்றிருந்தது. உயிர்போகும் பசி.

“ஐ வோன்ட் வோட்டர் …”

வாயைத்திறந்தான் ,சத்தம் வரவில்லை. சத்தம் வந்தாலும் அவர்களுக்கு விளங்கப்போவதுமில்லை. “எப்படியோ என்னைக்கொல்லப்போகின்றீர்கள் அதுக்கு முன் கொஞ்சம் தண்னியாவது தாங்க” என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது. அதுக்கு ஒரே வழி சைகைதான். கையை வாய்க்குப்பக்கத்தில் கொண்டுபோய் சைகை காட்டினான்.

அந்தக்கூட்டத்தின் தலைவன் ஏதோ சத்தமாகச் சொல்ல,கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண் ஒரு குடிசைக்குள் சென்று ஒரு மரத்தில் குடையப்பட்ட ஒரு பாத்திரத்தைக்கொண்டுவந்தாள், ரெண்டுபேர் ஈட்டியுடன் வந்து கைகளை அவிழ்த்துவிட்டு பக்கத்திலே நின்றுகொண்டார்கள்.

அந்தப்பெண் அந்த மரக்கோப்பையைக் கொடுத்தாள, வாங்கினான்,உள்ளே தண்ணீர்.

வாங்கி ஒரேயடியாகக் குடித்துமுடித்தான். அந்தப்பெண் பக்கத்தில் மெல்ல சிரித்துக்கொன்டிருந்தாள்.அப்போது அது தெய்வீகச் சிரிப்பாக தெரிந்தது.

கையால் வயிற்றைத் தொட்டுக்காட்டினான்.

ஏதோ புரிந்துகொண்டவள் போல ,திரும்பவும் குடிசைக்கள் போனவள்,கையில் காயவைக்கப்பட்ட கொஞ்சம் இறைச்சியையும் பழங்களையும் கொண்டுவந்து கொடுத்தாள்.
இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டான். உப்புப் போடாத அந்த இறைச்சிகூட அப்போது அவனுக்கு அமிர்தமாக இருந்தது.

அது என்ன பழங்கள் என்றுகூடத் தெரியவில்லை.இதுவரை அவன் அந்தப்பழங்களைப்பார்த்ததில்லை.

சாப்பிட்டான். இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாகத்தான் இருந்தது.

சாப்பிட்டு முடித்தவுடன், அந்தக்கூட்டத்தின் தலைவன் மீண்டும் ஏதோ சொன்னான்.

பக்கத்தில் நின்றுகொன்டிருந்த ரெண்டுபேரும் அலெக்ஸைத்தள்ளிக்கொன்டு நடந்தார்கள்.

பசியும்,தாகமும் தீர்ந்தவுடன் மரணபயம் இன்னும் அதிகமானது.

“எங்கே கொண்டுபோகின்றார்கள்? கொல்லப்போகின்றார்களா?”

கால்கள் நடுக்கமெடுத்தன. அவனுக்கு சாப்பாடும் தண்ணியும் கொடுத்த பெண் புன்னகைத்துக்கொன்டிருந்தாள். அவளின் சிரிப்பில் இருந்த தெய்வீகத்தன்மை,இவர்கள் கொடுரமானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை உண‌ர்த்துவதுபோலவும் இருந்தது.

இப்போது வந்து சேர்ந்திருந்த இடத்தில், மரக்கட்டைகளால் ஆன ஒரு பெரிய கூடு இருந்தது.

உள்ளே அடைக்கப்பட்டான். மரக்கட்டைகளைகளால் மட்டும் ஆன கூடுதான் ஆனால் அதில் இருந்து தப்பித்துக்கொள்வது சாத்தியமில்லையென்று அடைபட்டு கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துகொன்டுவிட்டான் . நிலத்திலே காய்ந்துபோன சருகளைக் கொட்டி வைத்திருந்தார்கள்.

“இனி இந்தச் சருகுகள்தான் என் படுக்கையா?

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க வேண்டும்? இவர்கள் என்னை என்ன செய்யப்போகின்றார்கள்?” அலெக்ஸின் மனம் அலைபாய்ந்துகொண்டேயிருந்தது.

அந்த இக்கட்டான நிலமையிலும் அயர்ச்சியில் அப்படியே சாய்ந்துவிட்டான்.கண்விழித்தபோது இரூட்டிக்கொண்டிருந்தது.

மீண்டும் பசி ,தாகம்.

மரக்கட்டைகளுக்கிடையே இருந்த இடைவெளிகளால் வெளியே பார்த்தான். யாருமே இல்லை.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடு மட்டுமே தெரிந்தன.

கொஞ்சநேரம் அப்படியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் பார்த்துக்கொன்டிருந்ததுக்கு எதிர்ப்ப்புறமாக ஏதோ சத்தம், திரும்பிப்பார்த்தான்.

அந்தக்கூட்டில் இருந்த இன்னொரு சிறிய கதவு திறந்தது.

அதற்குள்ளே வெளியே நின்றிருந்தவரின் முகம் மட்டுமே தெரிந்தது.அவனுக்கு சாப்பாடு தண்ணி கொடுத்த அதே பெண்.

ரெண்டு மரக்கோப்பைகளை அந்த இடைவெளிகக்குல் நீட்டினாள்.ஒன்றில் காய்ந்த மீன்.இன்னொன்றில் தண்ணீர்.

“சாயுவோ “என்றால்

“சாயுவோ என்றால் சாப்பிடுங்கள் என்று அர்த்தமா?”

“தேங்க் யூ “என்றால் இவளுக்கு விளங்கப்போவதில்லை.

தலை அசைத்துச் சிரித்தான் ,அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.

கதவை மூடிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அவல் கொடுத்த அந்தப்பெரிய‌ மீன் அவன் பசியை போக்கப் போதுமானதாக இருந்தது.

இப்போது முற்றாக இருட்டியிருந்தது.

பசி தீர்ந்ததும் வயிறு முட்டியது. மலம் கழிக்க வேண்டும், சிறுநீர் கழிக்க வேன்டும். கொஞ்ச நேரம் அடக்கிப்பார்த்தான். ம்ம்ம்ம்ம்ம் …..முடியவில்லை.

“ஹெல்ப்… பிளீஸ் ஹெல்ப்” சத்தம் போட்டான் யாரும் இல்லை.

இதற்குமேலும் வேற வழியில்லை. அந்தக்கூட்டின் ஒரு மூலைக்குப்போய் மண்ணைத் தோன்டினான். அதகுள்ளே மலம் கழித்து மன்ணால் மூடிவிட்டான். சருகளை டொயிலட் பேப்பராக பாவித்துக்கொண்டான். மரக்கட்டைகளில் இருந்த இடைவெளிகளுக்குள்ளால் வெளியே சிறுநீர் கழித்துகொண்டான்.ஆண்களுக்கு மட்டும் இருக்கும் வசதி அது.

அப்படியே திரும்பவும் கண்ணயர்ந்துவிட்டான்.

அடுத்தநாள் கண்விழித்தபோது விடிந்திருந்தது.

அந்தச் சின்னக்கதவு திறக்ப்பட்டது. வெளியே அதே பெண். ரெண்டு மரப்பாத்திரத்தைக்கொடுத்தாள்.தண்ணியும் சாப்பாடும் இருந்தது.

ஏதோ சொன்னாள்.

நேற்றுக்கொடுத்த பாத்திரங்களைக் கேட்கிறாளோ?

எடுத்துக்கொடுத்தான். வாங்கிக்கொண்டவள் “நசுவா” என்றாள்

நசுவா என்றால் நன்றியா?

இவனும் பதிலுக்கு “நசுவா “என்றான்.சிரித்துக்கொண்டே ஏதோ சத்தமாக சொன்னாள்.

அவனை உள்ளே போட்டபோது திறந்த கதவு மீண்டும் திறந்தது.

ரென்டுபேர் ஈட்டியுடன் உள்ளே வந்து அவனை தள்ளிக்கொண்டு போணார்கள்.

ஒரு அருவியின் கரைக்குப் பக்கத்திலே கொண்டுபோய்

“டசிலா” என்றான் ஒருவன். ஓ மலம் கழிக்க கொண்டுவந்திருக்கிறார்களா?

டசிலா என்றால் மலம் கழிக்கிறதா?

மலம் கழித்து பக்கத்தில் இருந்த வாவியில் கழுவிக்கொன்டான்.வாவியின் ஓடிக்கொண்டிருந்த நீர் குளிர்மையாக இருந்தது.

முகம் கழுவி உடம்பையும் அலசிக்கொண்டான்.ஏதோ புத்துணர்ச்சி வந்ததுபோல இருந்தது.

மீண்டும் அந்த மரக்கூட்டுக்குள் அழைத்துப்போனார்கள்.

போகும் வழியில் அந்தப்பெண் எதிரே வந்துகொண்டிருந்தாள். “நசுவா” என்றான்.

அவளும் பதிலுக்கு “நசுவா” என்று சிரித்துவிட்டுப்போனாள்.

அவனை அழைத்துப்போன ரெண்டுபேரும் ஒருநளிலேயே அவர்களின் மொழியைப் பேசிய அவனை ஆச்சரியமாகப்பார்த்தார்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் காலை மாலை என சாப்பாடு தண்ணி, காலையில் வாவிக்கு அழைத்துப்போகுதல் எல்லாமே அந்த பெண்ணின் புண்ணியத்தில் நடந்துகொன்டிருந்தது.

ஒன்றிரண்டு வார்த்தைகளாகத் தொடங்கி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பெண்ணிடம் அவர்களின் பாஷையில் பேசத்தொடங்கிவிட்டான் .

அந்தக்கூட்டத்தின் தலைவனின் மகள் சரஸா தான் அந்தப் பெண்.இன்னும் மணமாகாதவள்.

அந்தக்கூட்டத்தின் ஐதீகப்படிதான் அலெக்ஸை சிறை வைத்திருக்கின்றார்கள். அவனை வெளியில் விட்டால் தங்கள் கூட்டத்திற்கே ஆபத்து வரும் என்று நினைத்துத்தான் சிறை வைத்துள்ளார்கள், ஆனால் அவன் தப்பிக்கொள்ள நினைக்கும் வரை அவனை கொல்ல மாட்டார்கள். இதையெல்லாம் ச‌ரஸாவிடம்தான் கேட்டறிந்துகொன்டான்.

அலெக்ஸ் அந்த சனக்கூட்டத்துக்கு ஒரு செல்லப்பிராணியாக மாறிப்போனான். அந்தப்பெண்ணும் அவனோடு ஆரம்பத்தில் அப்படித்தான் பழகினாள்.ஒரு செல்லப்பிராணிக்கு சாப்பாட்டு தண்ணி வைப்பது போலதான் அலெக்ஸுக்கும் வைத்தாள்.

அலெக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பாஷையைப் பழகியது ,அவளுடன் பேசியது எல்லாமே சரஸாவைக் கவர்ந்தன. இப்போதெல்லாம் சாப்பாடு கொண்டு வரும்போது மணிக்கணக்கில அலக்ஸோடு பேசுவாள். அவனோடு பேசுவதற்காகவே இப்போது அடிக்கடி சாப்பாடோ ,தண்ணியோ கொண்டுவரத் தொடங்கிவிட்டாள்.

சரஸா தங்கள் பழக்க வழக்கங்கங்கள், அந்தக் காட்டின் அருமை பெருமை என எல்லாம் அவனுக்குச் சொன்னாள்.

சரஸா ‘எனக்கு இப்படி அடைபட்டுக்கிடப்பது கஷ்டமாக இருக்கின்றது?”

“உங்களை நான் வெளியே அழைத்துப்போகின்றேன்”.

“எப்போ”

“இன்னும் ரெண்டு நாளில் எங்கள் ஊர் ஆண்கள் எல்லோரும் தூரத்தில் இருக்கும் இன்னொரு காட்டுக்கு வேட்டைக்குப் போவார்கள், அன்றைக்கு எல்லாப் பெண்களும் குழந்தைகளும் பயத்தில் வீட்டுக்குள்ளே இருந்து விடுவார்கள் கட்டாயம் அன்றைக்குக்கு அழைத்துப்போகின்றேன்” உறுதியளித்தாள்.

அன்றைய தினம் !

யாருமில்லாத அந்தக்காட்டில் முதன் முதலாக சுதந்திரமாக சுற்றிவந்தான் அலெக்ஸ். கூடவே அந்தப் பென்ணும்.

அருவியில் குளித்தான், கூடவே அவளும் குளித்தாள்.

தண்ணீரை அவன்மீது வாரி அடித்தால், சுழியோடி கையாலே மீன் பிடித்து அருவி ஓரத்திலே நெருப்பு மூட்டி சுட்டுக்கொடுத்தாள். தர தரவென மரங்களில் ஏறி பழங்களைப் பிடுங்கிக்கொடுத்தாள்.

அலெக்ஸின் கைபிடித்துக்கொண்டு ஓடினாள்.

அவள் ஒரு மரத்தின் உச்சியில் இருந்த பழத்தைக்காட்டி “இதுதான் அலெக்ஸ் இந்த காட்டின் ஸ்பெஷல் பழம் .உங்களுக்காக பறித்துதருகிறேன்” சொல்லி சில செக்கன்களில் மர உச்சிக்குச் சென்றுவிட்டாள். கீழே அலெக்ஸ்

ஏதோ உறுமும் சத்தம், திரும்பிப்பார்த்தான் ஒரு புலி.

மெது மெதுவாக அலெக்ஸை நோக்கி வந்துகொண்டிருந்தது. அலெக்ஸ் திரும்பியதும் திடீரென வேகமாக அலெக்ஸை நோக்கி ஓடி வந்தது. அவன் கையில் எதுவுமே இல்லை .என்ன செய்வது திகைத்துப்போய் நின்றான்.

அவனுக்குப் பக்கத்தில் வந்துவிட்டது, அடுத்தது அவன் மீது பாயப்போகின்றது.

அவன் கால்கள் நடுக்கமெடுத்தன.

ஸ்ர்ர் ….உறுமிக்கொண்டே அவன் மீது பாய்ந்தது.

சரார் என மரத்தின் உச்சியில் இருந்து புலியின் மேல் பாயந்தாள் சரஸா.

புலியின் தலையை இரண்டு கையாளும் பிடித்து திருகினாள், புலி திணறியது அவள் விடவில்லை.புலியின் கால் நகம் கிழித்து அவளின் காலில் இருந்து இரத்தம் வழிந்தது.
அவள் விடவில்லை, அவளோடு போராடி களைத்துப்போனது புலி.

அப்படியே அமைதியாக நிலத்தில் சாய்ந்தது.

அவளும் தன் பிடியை மெதுவாக விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் மெதுவாக தலையைத் தூக்கிய புலி, ஸ்ர்ர் கண நேரத்துக்குள் கன்ணில் இருந்து மறைந்தது.

காலில் வழியும் இரத்தத்தையும், வலியையும் பொருட் படுத்தாமல் கைகொட்டிச் சிரித்தாள்.

பறித்துக் கீழே போட்டிருந்த பழங்களை அவனுக்குச் சாப்பிடக்கொடுத்தாள்.

“எங்கள் ஊர் எப்படி இருக்கும் தெரியுமா சரஸா?”

“எப்படி இருக்கும் இதைப்போல நிறைய மரங்கள் இருக்குமா ?இல்லாட்டி இதைவிட பெரிய மரங்கள் இருக்கா?”

“மரமா? அது வேறு ஒரு உலகம் சரஸா?”

தன் ஊரின் பெருமையை அவளுக்குச் சொன்னான்.

ஏதோ சின்னவயசில் காட்டூனில் வரும் கற்பனை உலகத்தை ஆச்சரியத்துடன் ரசி‍ப்பதுபோல அலெக்ஸ் சொன்ன விடயங்களை ரசித்தாள்.

“நான் என் காட்டினை சுற்றிக்காட்டிவிட்டேன், எனக்கு உங்கள் இடத்தினைக் காட்ட மாட்டீங்களா?”

“எனக்கும் உன்னைக்கூட்டிக்கொண்டு என் ஊரை சுற்றிக்காட்டவேண்டும் என்றுதான் ஆசையா இருக்கு …. ஆனா எப்படி??”

“அடுத்த கிழமையும் இப்படி ஒரு நாள் எல்லோரும் வேட்டைக்குப் போய்விடுவாங்க அன்றைக்கே அழைத்துப்போங்கள்”

ஒருநாளில் போய்வரக்கூடிய இடம் என நம்புமளவுக்கு வெகுளியாக இருந்தாள்.

சரஸா இப்போது அலெக்ஸை முழுவதுமாக நம்பியிருந்தாள்.

“அங்கே போவதென்றால் கடல் கடந்துதானே போக வேண்டும். அதற்குப் படகு செய்ய வேண்டுமே?”

“வாருங்கள் அலெக்ஸ்”

ஒரு மூங்கில் காட்டுக்குக் கூட்டிப்போனாள்.

முறிந்து கிடந்த மூங்கில்களைச் சேர்த்துக்கட்டினார்கள்.

நேரம் இருட்டிக்கொண்டுவந்து.

“வேட்டைக்குப்போனவங்க‌ திரும்பி வந்துவிடும் நேரம் வந்துவிட்டது. நாம் நம் இடத்துக்குப் போகவேண்டும். இனி ஒவ்வொரு நாளும் காலையில் காலைக்கடன் கழிக்க நானே அழைத்து வாரன், அப்போது இங்கே வந்து கொஞ்சம் கொஞ்சமாக இதைச் செய்து முடிப்போம்.”

“ஓம்… ஆனா இந்த விடயம் யாருக்கும் தெரியாம இருக்கவேண்டும் சரஸா”

“நிச்சயமா, நாம் இன்று வெளியில் வந்ததுகூட யாருக்கும் தெரியக்கூடாது அலெக்ஸ்”

“…ம்ம் ”

திரும்பி கூட்டினை அடைந்தான் அலெக்ஸ்.

அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என நாட்கள் ஓடியது.

சரஸாவும் சொன்னபடி ஒவ்வொரு நாளும் அந்த மூங்கில் காட்டுக்கு அவனை அழைத்துப்போனாள்.

ஒரு கிழமைக்குள் யாருக்கும் தெரியாமல் மூங்கில் படகைத் தயார்செய்து விட்டார்கள்.

அன்று காலை ஆண்கள் எல்லோரும் வேட்டைக்குப் போய்விட்டார்கள்.

“சீக்கிரம் அலெக்ஸ் ”

படகை இழுத்து கடலில் விட்டு சரஸாவுடன் ஏறிக்கொண்டான் அலெக்ஸ்.

ரெண்டு மூங்கில்களைச் சேர்த்து செய்திருந்த துடுப்பை, வலிக்க வலிக்க‌ படகு ஆழ்கடலை நோக்கிச் சென்றது.

சுற்றிவர கடல் மட்டுமே தெரிந்தது, இவ்வளவு ஆழத்துக்கு சரஸா இதற்கு முதல் வந்ததே இல்லை.

உப்புக்காற்றில் உடம்பு சிலிர்த்தது.

பக்கத்தில் மனதுக்குப்பிடித்த அலெக்ஸ் இருந்தது இன்னும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

எந்தக் திசையில் போவது என்று தெரியாமல் துடுப்பை வலித்துக்கொண்டிருந்த,அலெக்ஸ் அவன் அடைபட்டிருந்த காடு கண்ணைவிட்டு மறைந்ததும் கொஞ்சம் திருப்தியுடன் மெதுவாக வலிக்கத்தொடங்கினான்.

தூரத்தில் ஒரு புள்ளியாக ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

அதைக்கண்டதும் மீண்டும் வேகம் வந்து வேகமாக வலிக்கத்தொடங்கினான்.

ஒட்டுமொத்த பலத்தையும் சேர்த்து வலித்து வலித்து கப்பலுக்குப்பக்கத்தில் வந்து சேர்ந்துவிட்டான்.

அடுத்தநாள் அவன் நாட்டுப் பத்திரிகையில்!

கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து உயிர்தப்பிய அதிசய மனிதன் அலெக்ஸ் என்பதுதான் தலைப்புச் செய்தி.

அலெக்ஸ் உயிருடன் பிடித்துவந்த மனித அமைப்புடைய வித்தியாசமான மிருகம் இப்போது மிருகக்காட்சிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது . காலை நீட்டி உட்காரக்ககூட இடமில்லாத ஒரு சிறிய க‌ம்பிக்கூட்டுக்குள் இருந்த சரஸாவை நாடுமுழுவதுமிருந்து வந்து நிறையப்பேர் பார்த்துச்செல்கிறார்கள்.

வருகிறவர்கள் எல்லோரிடமும்.”மசா காஜா ஜோ “என்று கேட்டுக்கொன்டே இருக்கிறாள்

‘என் காதலன் எங்கே ,என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்கள் தயவு செய்து அவரை எதுவும் செய்து விடாதீர்கள்” என அவளது பாஷையில் கெஞ்சுவதை பசியில் அழுவதாக நினைத்து ஜன்னல் கம்பியூடாக‌ சில பிஸ்கட்டுக்களையும்,பழங்களையும் எறிந்துவிட்டுப்போகின்றார்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “சரஸாவின் காதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *