இரண்டு பிரம்மச்சாரிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 18,775 
 

மேடும் பள்ளமும் வளைவும் நெளிவுமாக இருந்த அந்த கிராமத்தின் தார் சாலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற களிப்பில் அவனின் கார் துள்ளி துள்ளி ஓடிக்கொண்டிருந்தது . வலது புறமாக ஒருக்களித்து உட்கார்ந்து , தன்னை கடக்கும் மரங்களையும் ,மனிதர்களையும் , கால் நடைகளையும், பாதி வறண்டுபோன அல்லது பாதி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளையும் , ஒரு குழந்தையைப் போல பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்தான் . அகலம் குறைந்த அந்த சாலையில் ஒரு காரும் ஒரு இரண்டு சக்கர வண்டியும் ஒரு சேர பயணித்தால் எதிரில் வரும் வண்டி கண்டிப்பாக சாலையிலிருந்து இறங்கி நிற்க வேண்டி வரும் . இதில் ஆங்காங்கே வைக்கோல் பொதிகளும் , எள்ளு செடிகளும் , தான்ய வகைகளும், ஈர மல்லாக்கொட்டை (நிலக்கடலை ) குவியல்களும் சாலையில் பரப்பி காய வைத்திருந்தனர் . எதிர்ரெதிர் திசையில் வரும் வண்டிகள் இதை அனுசரித்து வண்டியை ஓட்டிக்கொள்ள வேண்டும் என்பது எழுதப் படாத விதி . ‘ பூமேனி ‘என்று எழுதப்பட்டிருந்த அந்த பெயர் பலகை வெளிர்ந்து வண்ணம் பெயர்ந்து துருப்பிடித்து , துண்டு விளம்பரங்கள் அடங்கிய காகிதங்கள் ஒட்டப்பட்டு , வலது புறம் அம்புக்குறி காட்ட இடதுபுறம் ஒடிந்து தொங்கி கொண்டிருந்தது . தார் சாலையிலிருந்து அந்த பெயர் பலகை தொங்கி கொண்டிருந்த அந்த செம்மண் சாலையில் வண்டி வலதுபுறமாக திரும்பி நுழைந்தது .

தலைக்கனமின்றி விழுதுகளை பரப்பி தன் சந்ததியின் அடையாளத்தை , அதன் பழமையை பெருமையோடு பறைசாற்றி அதே நேரத்தில் தன்னலமற்று தலை நிமிர்ந்து நின்ற ஆலமரங்களும் , பெரிய தெய்வங்கள் முதல் உள்ளூர் கருப்பசாமி , காத்தவராயன் வரை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இடம் கொடுத்து இதயம் கனிந்த அரசமரங்களும், குளிர்ச்சியை மட்டுமே கொடுக்கத் தெரிந்த வேப்பமரங்களும் சாலையின் இருமருங்கிலும் வருவோர் போவோரை இருகரம் கூப்புவது போல் வரவேற்று நின்றன . பிறந்த மேனியாய் இருந்த நண்டு சுண்டுகள் அந்த குளக்கரையில் தாழ்வாக இருந்த ஆலமர விழுகளை பிடித்துக்கொண்டு குளத்தில் குதித்து ஆட்டம்போட்டு ஆரவாரம் செய்துகொண்டிருந்தன . நெஞ்சுவரைக்கும் ஏற்றி கட்டப்பட்ட பாவாடையோடு பெண்கள் முகத்திலும் கால் பாதம் மற்றும் முழங்காலிலும், தாலியின் மீதும் மஞ்சளை வளைத்து வளைத்துப் பூசிக்க கொண்டனர் . அந்த காட்சிகளை ரசித்தவாறே அவன் கண்களை மூடி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான் . அவன் அலுவலராய் இருக்கும் அந்த கருவூல அலுவலகத்திற்கு அன்று அந்த அம்மாள் வந்திருந்தார் . எங்கோ எப்போது நெருங்கிப் பழகியது போன்ற ஒரு உள்ளுணர்வு அவனுக்குள் . சட்டென்று அவனுக்கு நினைவு வரவில்லை, இருந்தாலும் கண்ணை மூடி மூளையை லேசர் கதிர்களால் ஊடுருவி ஒருவழியாக நினைவுக்கு கொண்டு வந்துவிட்டான் . அதற்குள் பியூன் அந்த அம்மாவை அவனின் மேசைக்கே அழைத்து வந்துவிட்டான் .

” சார் , இந்த அம்மாவோட வீட்டுக்காரருக்கு ரெண்டு மாசமா பென்ஷன் வரலையாம் , அதான் யார பாக்கறதுன்னு தெரியாம நின்னிட்டு இருந்தாங்க . ஒங்க கிட்ட கூட்டியாந்தேன் ” . அவனை கை அமர்த்தி போக சொல்லிவிட்டு அந்த அம்மாவை உட்கார சொன்னான் .

” சார் … அது வந்து என்றவரை முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர் கணவர் பற்றிய விபரங்களை கணினியில் தட்டி என்ன குழப்பம் என்பதை அறிந்து சரி செய்து கொடுத்தான் . இன்னமும் அவரால் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை . அந்த அம்மாளின் வயோதிகமும் அவனின் வளர்ச்சியும் அதற்கு காரணமாக இருக்கலாம் . அவனின் பிள்ளைப் பருவத்தில் , அந்த அம்மாள் அவனைப் பார்த்தது , அந்த அம்மாளை அவரின் முப்பதுகளில் அவன் பார்த்தது , காலம் தான் எவ்வளவு விளையாடியிருக்கிறது இருவரின் வாழ்க்கையிலும் .

” அம்மா ஒரு நிமிஷம் ஏங் கூட வாங்க “என்று சொல்லி அவரை அந்த வேப்பமரத்தின் கீழிருந்த தேனீர் கடைக்கு அழைத்துக்கொண்டு சென்றான் .

வியந்து பார்த்த அந்த அம்மாள் ஒன்றும் பேசாமல் அவன் பின்னால் நடந்து சென்று அவன் காட்டிய மரப்பெஞ்சில் அமர்ந்துகொண்டார் . கையில் தேநீரோடு வந்தவனை பார்த்து ஆச்சர்யம் கொட்டிவிட்டு தேநீரை கையில் வாங்கிக்கொண்டு அவனை பார்த்தார் .

“அம்மா ! என்ன தெரியலையா ”

புருவத்தை சுருக்கி உற்றுப் பார்த்தவர் “தெரியலப்பா ” என்றார் .

” அம்மா ! நா பாலா ! பாலமுருகன் … ஆதிமங்கலம் ! … ஞாபகம் வருதா …

” ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாங் .. டேய் பாலா … நல்லா இருக்கியா ? “பாத்து எத்தனை வருஷமாச்சு ? எத்தனை புள்ளைங்க தம்பி … ”

” அது இருக்கட்டும் மா , அப்புறமா சொல்றேன் .. என்னம்மா … இப்படி எளச்சிப் போயிட்டீங்க . அடையாளமே தெரில . சார் எப்படி இருக்காரு ? இங்க எங்க நீங்க ?”

“ஒடம்பு சரில்லாம தான் இருக்காரு . வயசு எம்பதுக்கு மேல ஆய்டிச்சில்ல , வெளியில நடமாட முடியறதில்லை , வீட்டோடவே இருக்காரு . பென்சன் ரெண்டு மாசமா வரலன்னு ஒரே டென்ஷன் அவருக்கு .அதான் என்னானு பார்த்துப் போவலாம்னு நா நேர்ல வந்தேன் ” . நாங்க ஆதிமங்கலத்த விட்டுட்டு வந்து பதினைஞ்சி இருவது வருஷமாச்சி . இங்க தான் தரங்கம்பாடி பக்கத்துல பூமேனினு ஒரு ஊரு இருக்குது , அது தான் அவரோட சொந்த ஊரு , அங்கதான் இருக்கோம் . சேகரு பூனாவுல வேலைல இருக்கான் , இளைய ராசா விசாகபட்டணத்துல இருக்கான் ” .

” நா இந்த ஆஃபீசிலுதான் அசிட்டேன்ட மனேஜரா இருக்கேன் . இங்க வந்து பத்து வருஷமாச்சி . பக்கத்துல தான் நாகபட்டணத்துல குடியிருக்கேன் . அம்மா ! என்னால ஒங்கள மறக்கமுடியாது . எங்க அம்மா போனதுக்கப்புறம் நீங்க எத்தனை நாள் எனக்கு சோறு போட்ருப்பிங்க ! . ஒங்க வீட்டுல ஒருத்தனா ஒங்க புள்ள மாதிரி பாத்துக்கிட்டிங்களே … அதெலாம் என்னால மறக்க முடியாது … ” கண்ணில் திரண்ட திவலைகளை அவர் அறியாவண்ணம் துடைத்துக் கொண்டான் .

” அமுதா எப்படி இருக்காங்க ? அவுங்களுக்கு எத்தனை புள்ளைங்க ? ” என்று ஆவலாய் கேட்டான் .

சில நொடி மௌனத்திற்கு பிறகு ” எப்பிடி இருப்பா ? நாப்பது வயசிலியும் உன்னையே நெனச்சுக்கிட்டு இன்னும் அப்பிடியே தான் இருக்கா . அது சரி ஒனக்கு எத்தனை புள்ளைங்க ? ஒம்பொண்டாட்டி என்ன பண்றா ? … ”

இப்போது அவன் பதில் சொல்லமுடியாமல் அமைதிகாத்தான் . “நா .. நா .. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல …” அவன் முடிக்கும் முன்பே குறுக்கிட்டார் அந்த அம்மா .

” எனக்கு தெரியும் , நீயும் அவளையே நெனச்சுக்கிட்டு இருப்பேன்னு ” . எதுக்குடா இரண்டு பேரும் இப்படி இருக்கீங்க ? வயசுல சொல்லி இருந்தா நாங்க என்ன முடியாதுன்னா சொல்லிருக்கப்போறம் ? … ” பெரு மூச்சு விட்டார் . ”சரி சரி… வீட்டுக்கு வா … இங்கேர்ந்து முக்கா மணிநேரத்துல போய்டலாம் … என்று சொல்லி வழி சொன்னார் . நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்த விட்டு புறப்பட்டார் . போகும் போது சொன்னார் “ஒரு தரம் வந்து பாத்துட்டு போப்பா …

“சரிம்மா … சீக்கிரமே அடுத்த வாரமோ , அதுக்கு அடுத்த வாரமோ சனி ஞாயிறுல வரேன் . சார பாக்கணும் .. அமுதாவை பாக்கணும் .. நெறைய பேசணும் . எனக்கும் எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு … ” என்றான்.

“சார் … சார் … ” என்று டிரைவர் அழைத்தவுடன் அவன் நினைவுகளிலிருந்து மீண்டவனாய் கண்ணைத் திறந்து பார்த்தான் . கார் இப்போது ஏரியைக் கடந்து ஊருக்குள் சென்று கொண்டிருந்தது . ” பூமேனி “என்ற பெயர் பலகை வலதுபுறத்தில் தெரிந்தது .

“என்னப்பா ” என்றான் .

“சார் .. ஊருக்குள்ள வந்துட்டோம் . எங்க போவணும் ? ”

” நீ நேராப் போய்ட்டேயிரு .. நா எங்க நிறுத்தணும்னு சொல்றேன் “என்றான் .

வரிசையாக இருந்த விழல் வேயப்பட்ட குடிசைகளும் , சீமை ஓடு வேய்ந்த வீடுகளும் தரிசனம் கொடுத்த தெருவுக்குள் கார் நுழைந்தது . இரண்டு எருமை மாடுகள் வழியை அடைத்துக் கொண்டு முன்னால் மெதுவாக சென்று கொண்டிருந்தன . பக் பக் பக் என்று கொக்கரித்துக் கொண்டே கோழிகள் வழிவிட்டன . ஒரு வெண்ணிற ஆண் நாயும் ஒரு செம்மண் நிற பெண் நாயும் குரைத்துக் கொண்டே காரை தொடர்ந்து ஓடி வந்தன .

“சார் இதுக்கு மேல கார் போறது கஷ்டம் …”என்று இழுத்தான் ஓட்டுநர் . வெளியில் தலையை நீட்டி ஒரு முறை பார்த்துவிட்டு அவன் காரை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் . சிறிது தூரம் நேராக நடந்து இடது புறமாக இருந்த குறுகிய சின்ன தெருவில் நுழைந்து மீண்டும் வலது புறம் திரும்பி நான்காவதாக இருந்த அந்த குடிசை வீட்டின் முன் நின்றான் . இரண்டு கட்டு வீடு , முன் பகுதி கரும்பு விழல் வேயப்பட்டும் பின் பகுதி சீமை ஓடு வேயப்பட்டு தெரிந்தது .

“வீட்டுல யாருமில்லையா ? ” இரண்டு மூன்று முறை கூப்பிட்டான் . பதில் ஏதும் வரவில்லை . செல்போனை எடுத்து அந்த நம்பரை தொடுதிரையில் தொட்டுவிட்டு காத்திருந்தான் .

“பாலா “தோ வர்றேன் ,ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அணைந்தது அந்த வசியமான பெண் குரல் . ஐம்பது வினாடிகளுக்கு பிறகு அந்த மரக்கதவு திறந்தது . நாற்ப்பத்தைந்து வயதிலும் அமுதா ஆளை வீழ்த்தும் கண்களோடு இத்தனை வயதிலும் அழகாகவே இருந்தாள் . வசீகரமும் , வசிய சிரிப்பும் சிரிக்கும்போது மட்டும் வெளியில் தெரியும் தெத்துப்பல் ரகசியமும் இன்னும் அவனுள் உயிர்ப்போடு அவள் இருப்பதாய் உணர்ந்தான் . நெடிதுயர்ந்த ஒற்றை நாடியும் பிருஷ்டத்தில் தவழ்ந்த நரை காணாத கூந்தலும் , பூசி மெழுகிறனாற்போன்ற கன்னமும் , குத்தப்படாத மூக்கும் , குத்தாட்டம் போட்ட ஜிமிக்கியும் அவனை என்னவோ செய்தன .

“வா பாலா ” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு “சாரி .. வாங்க பாலா ” என்றாள் .

” ஏய் … என்ன புதுசா “இங்க போட்டு பேசற .. எப்போதும் போலவே கூப்புடு … என்று அவன் சொன்ன போது அவளது முகத்தில் ஒரு பளீர் மின்னல் வெட்டியது .

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அவனை சந்திக்க நேர்ந்தாலும் இன்னமும் அவன் அவளை ஒருமையில் அழைத்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது . அவன் இன்னமும் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகவே அவள் நினைத்தாள் . “எப்படி இருக்கே பாலா ? என் நெனப்பெல்லாம் இன்னும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ” .

” ம்ம் … இருக்கேன் . நா எப்பவும் அதே பழைய பாலா தான் . என்கிட்டே எந்த மாற்றமும் இல்ல . ஆமாம் நீ ஏன் அப்பிடியே இருக்க ? ”

” யார் சொன்னா ? எனக்கென்ன … சூப்பரா இருக்கேன் , ஏ வீட்டுகாரர் மிலிட்டரியில இருக்காரு … என்றாள் அமுதா .

“ஏய் எனக்கு எல்லாம் தெரியும் . ஒங்கம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க . பொய் சொல்லிட்டுத் திரியாத என்று அவன் சொன்ன அந்த வினாடியே அவளுக்கு ‘பொளக் ‘ என்று கண்ணீர் முட்டிக் கொள்ள உடனே உடைந்து அழுதுவிட்டாள் .

” திடீர்ன்னு எங்க காணாமப் போன நீ ? என்னாச்சி ஒனக்கு ? ”

” ஏய் மறந்துட்டியா … ஆதிமங்கலத்துல எனக்குன்னு யார் இருந்தா ? நாலாவது படிக்கிறப்பவே அம்மாவை தின்னுட்டேன் . ஒங்க அம்மா பெத்த புள்ளயா நெனச்சி எனக்கு பசிக்கிறப்பலாம் சோறு போட்டாங்க . எட்டாவது படிக்கிறப்ப அப்பா திடிர்னு செத்துப் போய்ட்டாரு . பெரியப்பன் சித்தப்பன் எல்லாம் எனக்கு ஓதவல . அவங்க கண்ணெல்லாம் எங்க நிலத்து மேல தான் இருந்துது . அம்மம்மா அம்மாப்பேட்டைக்கு கூட்டிட்டு போய்டிச்சி . அந்த வயசுல ஒங்ககிட்டலாம் சொல்லிட்டுப் போவணும்னு கூட எனக்கு தோணல . திடீர்னு அனாதையான மாதிரி இருந்துச்சி . நா பதினொன்னாவது படிக்கிறப்ப பாட்டியும் போய்டிச்சி , திரும்பியும் நா அனாதையாய்ட்டேன் . எப்டியோ படிச்சேன் , முகந்தெரியாத யார் யாரோ ஒதவிப் பண்ணாங்க . படிச்சி முடிச்சி ஒரு நல்ல வேலைக்கு போற வரைக்கும் தெனம் தெனம் வயித்துக்கே கஷ்டம் இதுல எங்க மத்தவங்கள பத்தி நெனைக்கறது… தன் பேச்சை நிறுத்தி விட்டு ஒரு கணம் அவளையே பார்த்தான் .

” நா உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்தேனே … என்னைய அம்போன்னு விட்டுட்டு போய்ட்டியே … ”

” அமுதா ஒரு உண்மைய சொல்லட்டுமா ? எனக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும் . எட்டாவது படிக்கிறப்ப என்ன வெவரம் தெரியும் சொல்லு? அந்த வயசுல அதுக்கு பேரு காதல் இல்ல . ஆனாலும் இன்னைய வரைக்கும் நீ என்னையவே நெனச்சுக்கிட்டு இருப்பேன்னு நா யோசிச்சிகூட பார்க்கல . ஒங்க அம்மாவை பாக்கற வரைக்கும் , நீ எங்கயாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்பேன்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன் . நல்ல வேல கெடச்சவொடனே ஒன்ன பாக்கறதுக்கு நான் ஆதிமங்கலம் போனேன் . சார் வேறு ஊருக்கு மாத்தலாகி போய்ட்டாருன்னு சொன்னாங்க . அவங்க யாருக்கும் ஒங்க புது விலாசங்கூட தெரிஞ்சிருக்கலா , ரொம்ப வருத்தத்தோடு நா திரும்பிப் போனேன் தெரியுமா ? ”

” சரி போவுட்டும் , அதுக்குப் பின்னாடி நீயாவது யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்திருக்கலாமே … ஏன் அப்பிடியே இருக்கே ? .. ” கண்ணீர் தாரைகள் அவளின் கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன , உடல் லேசாக அதிர்வை காட்டியது .

” அம்மு … ஒன்ன என்னால … ” அதற்கு மேல் பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதான் .

அவளின் நீண்ட தட்டையான விரல்கள் அவனின் கண்ணீரை துடைத்தன . இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டனர் பால்ய பருவத்துக்குப் பிறகு . பல ஆண்டு கால பிரிவோ என்னவோ நான்கு கண்களும் நிலைகுத்தி நின்றன சில நிமிடங்கள் அப்படியே . ஆடையில்லாமல் குளித்தகாலத்தில் நட்பாக துவங்கியது , ஆடை அணிந்து குளிக்கும் காலத்தில் என்னவென்று பெயர் தெரியாததாக திசுக்களிலெல்லாம் பரவி உரு மாற்றம் பெற்று காணாமல் போகாமல் மனத்துக்குள்ளயே இருந்து வாலிப வயதில் அது ஒருவருக்கொருவர் பிடித்தவராக மலர்ந்திருந்தது . அந்த ஏதோ ஒரு உணர்வு இருவரையும் அப்படியே கன்னி கழியாதவர்களாக வைத்திருந்ததில் பெரிய ஆச்சர்யம் ஏதும் இருக்கவில்லை . என்ன நினைத்தானோ தெரியவில்லை , அமுதாவை அப்படியே மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டான் . அந்த அணைப்பில் காதல் , காமம், சிநேகம் , தோழமை என்று எல்லாம் கலவையாக இருந்ததது . அவளும் அதற்காகவே காத்திருந்தவள் போல் , அதை விரும்பியவன் போல் அமைதி காத்தாள் . சில நிமிடங்கள் அந்த அணைப்பு படலம் ஒருவருக்காக மற்றொருவர் உயிர்க் காற்றை உள்ளிழுப்பது போல் உயிர்ப்போடு இருந்தது .

” எப்ப நீ அம்முனு கூப்டியோ அப்பவே நா எல்லாத்தையும் முழுசா உணர்ந்துட்டேன் . இந்த உலகத்துல அம்முனு கூப்பிட்ட, கூப்பிடுகிற ஒரே ஆள் , என்னோட உயிர் ! நீ தானே … நீ மட்டும் தானே … ” அவள் ரகசியமாக அவன் காதுமடல்களில் கிசுகிசுத்தாள் . கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன் இருவரும் அவசரமாக பிரிந்தனர் கண்களைத் துடைத்தபடியே .

“அது என்ன கைல .. “அமுதா கேட்டாள் .

அவன் கொண்டு வந்திருந்த இரண்டு பொட்டலங்களில் ஒன்றை பிரித்து அந்த மோதிரத்தை அவள் விரல்களில் மாட்டிவிட்டான் . அவளுக்காவகே அளவெடுத்து செய்யப்பட்டது போல கனகச்சிதமாக அவள் விரலுக்கு பொருந்திப் போயிற்று . பி எ என்று ஆங்கிலத்த்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மின்னின . “என்ன புடிச்சிருக்கா ? ” என்றான் .

விரலை திருப்பி திருப்பி பார்த்தவள் “ரொம்ப நல்லா இருக்கு , தேங்க்ஸ் என்றவள் மேலும் தொடர்ந்தாள் ” . அவன் எதிர்பாராத அந்த வினாடியில் அவன் கன்னத்தில் ப்ச் என்று தன் உதட்டை குவித்து முத்தமிட்டாள் . “அது என்ன பி எ ? ” பாலா – அம்முவா ?

“அம்மு கெழவி ” என்று அவன் சொன்ன போது அவளின் கண்களில் லேசான கோபம் தெரிந்தது . ” இல்லம்மா .. அதுக்கு ரெண்டு அர்த்தம் . பாக்கறவங்களுக்கு , கேக்கறவங்களுக்கு பழனிசாமி – அமுதான்னு சொல்லும் , உனக்கும் எனக்கும் பாலா – அம்மு … என்றான் கண்ணடித்தபடி .

அம்முவின் அம்மா கதவை திறந்து கொண்டு மோர் கொண்டுவந்து கொடுத்தார் . ” சார எங்க ? பாக்கலாமா ? ” .

“அப்பா பின் கட்டுல முத்தத்துல இருக்கார் . வாங்க போவலாம் . அவருக்கு காது சரியா கேக்கறதில்லை , அதுபோக சில சமயம் ஞாபகம் தப்பிடுது , என்ன பண்ண .. வயசாயிட்டே போவுதே …”

” ஏன் வையித்தியம் ஏதும் பாக்கலையா ? ”

“பாத்தோம் .. பெருசா ஒன்னும் பிரயோஜனமில்ல ”

அவர்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் பச்சை துண்டு வாத்தியார் என்கிற பழனிசாமி வாத்தியார் . அவனின் நான்காம் வகுப்பு வாத்தியார், அவனுக்கும் அவருக்கும் பல மறக்க முடியாத தொடர்புகளும் , நிகழ்வுகளும் , உயிர்ப்புகளும் இருந்தன .

” ஐயா ! வணக்கம் … ” என்று சத்தமாக சொல்லியபடியே நெடுஞ்சாண் கடையாக காலில் விழுந்து வணங்கினான் . பதறிப்போன அவர் எழுந்து அவனை தூக்கிவிட்டு “யாருப்பா நீ ? யாரா இருந்தாலும் நல்லா இருக்கணும் ! “ இரண்டு கைகளையும் மேலே தூக்கி வாழ்த்தினார் . முதுமையின் தாக்கத்தில் கேசத்தை , சில பற்களை இழந்திருந்தார் . தலையும் , கையும் சிலசமயம் அவரின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்தன . கையில் கொண்டு வந்திருந்த பச்சை வண்ண சால்வையை அவரின் தோளில் அணிவித்து அழுகுப் பார்த்தான் . எல்லா இடமும் பசுமையாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தில் அறுபது ஆண்டுகளை காதர் ஆடையும் ,பச்சை வண்ண தூண்டும் பயன்படுத்தி வருகிறார் அந்த வாத்தியார் .

” யாரு ? தம்பி யாரு ? ” ஏற இறங்க பார்த்து விட்டு கேட்டார் .

” இவுரு பாலா “என்றாள் அமுதா அவசரமாக

“எந்த பாலா ? ”

“ஆதிமங்கலம் கோவகம் மேலத்தெரு மொட்டராசு மவன் , உங்ககிட்ட நாலாம் வகுப்பு படித்த பாலமுருகன் வந்திருக்கேன் “என்று அவன் சொன்ன உடன் அவர் சரேலென்று நிமிர்ந்து உட்கார்ந்து அவன் முகத்தையே பார்த்தார் .

“நீ பாலாவா ? ஓப்பன் என்னோட நெருங்கிய செனேகிதன் , பாவம் ! சின்ன வயசிலேயே போய்ட்டான் . தங்கமான மவராசன் , எனக்கெல்லாம் எத்தனை ஒதவி செஞ்சிருக்கான் தெரியுமா ? ப்ப்ச் ” என்று உச்கொட்டினார் . ” என்ன வெஷயமா என்ன பாக்க வந்தே ? ”

” ஐயா நா இன்னக்கி ஒரு நல்லா நிலைமையில இருக்கறதுக்கு நீங்களும் அம்மாவுந்தா காரணம் ” என்றான் .

” என்னப்பா சொல்ற .. நீ படிச்சே , நல்ல வேலையா தேடிகிட்டே . இதுல நாங்க என்ன பண்ணிட்டோம் ? “என்றார் சாதாரணமாக .

” இல்லிங்கய்யா , நா இன்னைக்கி உசுரோட இருக்கறதுக்கு காரணமே அம்மா போட்ட சோறுதான் . ஓங்குளுக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல . நா நாலாப்பு முழாண்டு தமிழ் பரிட்சை எழுதனன்னைக்கி ராத்திரி எங்க அம்மா செத்துப் போய்ட்டாங்க . மிச்ச பரிட்சை நா எழுதவேயில்ல , ஆனாலும் நல்லா படிக்கிறப் பையன்னு சொல்லி நீங்க என்ன பாஸ் போட்டுட்டீங்க . அது மட்டுமா ? நாலாப்புலேர்ந்து எட்டாம்ப்புல அப்பா சாகறவரைக்கும் , நா அந்த ஊற விட்டு போற வரைக்கும் அம்மா கையாள தான் சாப்ட்ருக்கேன் ” கண்களில் நீர் பெறுக சொல்லிக்கொண்டே போனான் .

” அப்புடியா ! எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்லே . நீ நல்லா படிப்பே , அதனால பாஸ்போட்டிருப்பேன் . நா ஆதிமங்கலத்துக்கு வந்த புதுசுல ஓப்பன் செஞ்ச ஒதவிக்கி இதெல்லாம் ஒண்ணுமே இல்லப்பா . பசிச்சா சோறுபோட வேண்டியதுதானே மனுஷனோட கடமை , அதைதான் அம்மா செஞ்சிருப்பா . அது ஒரு பெரிய விஷயமில்லை . அதெல்லாம் நீ ஒன்னும் பெருசா நெனச்சுக்கிட்டு நன்றி கின்றின்னு சொல்லிட்டு இருக்காதே ” என்று அவர் சொன்ன போது ஐயா இன்னும் உயரமாக தெரிந்தார் .

” ஒங்க கிட்ட இன்னொன்னும் கேட்கணும் “என்றான் பாலா .

“என்ன ” என்பது போல் பார்த்தார் ஐயா .

” நா அந்த வயசில தெரியாம ஒரு தப்பு செஞ்சேன் , ஆனா நீங்க கடைசிவரைக்கும் என்ன தண்டிக்கவே இல்லையே . ஒரு வார்த்தை கூட அதப்பத்தி என்கிட்ட பேசவேயில்லையே …”

“எதை பத்தி கேக்க ? எனக்கு ஒன்னும் புரியலையே ? புருவத்தை சுருக்கி கேட்டார் .

” நானும் இன்னொரு பையனும் சேந்துக்கிட்டு ஒங்க இருக்கைல துருப்புடிச்ச ஆணிய வச்சோமே . அது கூட ஒங்கள பின்னால குத்தி நாலஞ்சு மாசம் ஒக்கார முடியாம கஷ்டப்பட்டீங்க . ஆனாலும் பெரிய வாத்தியார் கேட்டப்ப எங்களை நீங்க காட்டிக் குடிக்கலையே ? எதுவுமே சொல்லலையே ? இன்னைய வரைக்கும் எனக்கு அந்த சம்பவம் நிழலாடுது மனசுல . நீங்க ஏன் எங்களை தண்டிக்கல அன்னக்கி ? ” கண்களில் தளும்பிய திவலைகளை துடைத்துக் கொண்டான் .

கிட்டே அழைத்து தலையை கோதிக்கொண்டே ” டேய் எங்கயாவது புள்ள வெவரம் தெரியாம தப்பு செஞ்சா அம்மா தண்டனை குடுப்பாளா ? நீங்க எல்லாம் என்னோட புள்ளைங்க . ஒங்க அப்பா அம்மா என்ன நம்பி பள்ளிக்கூடத்து அனுப்பறப்ப நான் தானே எல்லாத்துக்கும் பொறுப்பு . நீங்க தெரியாம அன்னைக்கி ஆணிய வச்சிட்டீங்க , சின்ன புள்ளைங்க , விளையாட்டு புத்தி , பின் விளைவு என்னன்னு தெரியாம செஞ்சது . அதைப் போயி பெருசா எடுத்துக்கிட்டா அப்பொறம் நா நல்ல வாத்தியாரா இருக்கமுடியாது . நான் அன்னைக்கி தண்டிச்சிருந்த ஒன்னோட படிப்பு பாழாயிருக்கும் , உனக்குள்ள இன்னும் வன்மம் கூடியிருக்கும் . அப்பிடி செய்யாததால இன்னைக்கி நீ நல்ல புள்ளையா இருக்க . இதைவிட எனக்கு என்ன பெருசா வேணும் சொல்லு பாப்போம் ? ” . அவர் பேசப்பேச அவரின் உயரம் அவனின் மனதில் உயர்ந்து கொண்டே போனது . ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் அவர் காலின் மீது விழுந்து காலைக் கழுவியது .

அவரே மேலும் தொடர்ந்தார் ” ஒன்னுக்கொன்னு தெரியுமா ? இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் ஒன்னோட செனேகிதன் , அதான் அந்த ஆணி வெச்ச இன்னொரு பையன் என்ன வந்து பாத்திட்டு அழுதுட்டுப் போனான் . டெல்லியிலியோ எங்கியோ அறிவியல் விஞ்ஞானி யா இருக்கானாம் . பேரு கூட என்னவோ வேலனோ மாறனோனு சொன்னான் . அவன் வந்து போனப்பறம்தான் எனக்கு இந்த விஷயமே திரும்பியும் நெனவுக்கு வந்தது . ஒங்களையெல்லாம் பாக்கறப்ப , ஒங்கள பத்தி கேள்விப்படறப்ப ரொம்ப பெருமையா இருக்கப்பா . எங்கே இருந்தாலும் நல்லா இருங்கய்யா ” என்றார் தலையை கோதினபடியே .

பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அவன் குலுங்கி குலுங்கி அழுதபோது அம்முவின் விரல்கள் ஆதரவாய் அவளிருப்பைக் காட்டி அவன் கன்னங்களை வருடி தாரைகளின் தட ரேகைகளை அழித்துக் கொண்டிருந்தது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *