Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்

 

மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார காலத்திற்கு ரங்கநாதன் ஃப்ரான்ஸ் போய் வர வேண்டுமாம். கேட்ட வினாடியில் இதயம் உச்சந்தலைக்கும் அடிவயிற்றுக்கும் குத்தாட்டம் போட்டது. அத்தனை குஜால்களுக்கும் ஃப்ரான்ஸில் இடம் உண்டு என்று யாரோ அவனிடம் கொளுத்திப் போட்டிருந்தார்கள். அந்த ’கொளுத்தல்’ அவனது உற்சாகத்திற்கு காரணமாக இருந்தது.

தெற்கு ப்ரான்ஸில் இருக்கும் மாண்ட்பெல்லியே என்ற ஊரில் ரங்கு பணியாற்றும் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இருக்கிறது. இந்தியாவில் இருந்து அவ்வப்போது யாரேனும் சென்று அவர்களுக்கு உதவியாக இருப்பது வழக்கம். இந்த முறை ரங்கநாதனை போகச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பை டீம் லீடர் அல்லது மேனஜர் தான் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த முறை ரங்கநாதனை போகச் சொல்லும் போதே அவன் ‘அலர்ட்’ ஆகியிருக்க வேண்டும். ஆனால் ரங்கு ஒரு வெப்பளத்தான். புரியும் படி சொன்னால் டூமாங்கோலி. சரி என்று மண்டையை ஆட்டிவிட்டான்.

ஃப்ரான்ஸ்க்கான விசா வாங்குவதில் பெரும் சிரமம் இருக்கவில்லை. நான்கு நாட்களில் கிடைத்துவிட்டது. அதன்பிறகாக பயணத்திற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் அவனும் அவனது அம்மாவும் அலப்பறையை ஆரம்பித்திருந்தார்கள்.

ரங்குவின் அம்மா காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல பதட்டத்தோடு அலைந்து கொண்டிருந்தார். ஊறுகாயில் ஆரம்பித்து உப்பு உட்பட அத்தனை சமையல் சாமான்களையும் மூட்டைகளாகக் கட்டி வைத்துவிட்டார். ஏரோப்ளேனின் பின்னாடி தனியாக ஒரு லாரியைக் கட்டிக் கொண்டு பறந்தால் வேண்டுமானால் அத்தனையும் எடுத்துக் கொண்டு போகலாம் போலிருந்தது.

ரங்குவைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. மொபைல் பில் இரண்டு மூன்று நாட்களில் ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. தனது மொபைலில் இருக்கும் அத்தனை எண்களுக்கும் போன் செய்து தான் ஃப்ரான்ஸ் போவதாகச் சொல்லிவிட்டான். எப்பொழுதோ நெம்பர் வாங்கி வைத்திருந்த முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆட்டோக்காரரிடம் கூடச் சொன்னான். அவருக்கு சத்தியமாக இவனைப் பற்றிய ஞாபகம் இருந்திருக்காது. தனக்கு ஏர்போர்ட் வரைக்கும் ஒரு சவாரி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு வாழ்த்தைச் சொன்னார். இவர்களின் போர்க்கால நடவடிக்கையில் லுங்கியெல்லாம் கூட மட மட வென அயர்ன் செய்யப்பட்டது. லுங்கி மட்டுமில்லை. பனியன் ஜட்டியையும் விட்டு வைக்கவில்லை.

அவனவன் பொடக்காலிக்கு போவது போல வெளிநாடுகளுக்கு போய் வரும் காலம்தான் என்றாலும் ரங்கநாதனுக்கு இதுதான் முதல் விமான பயணம் என்பதால் நடுக்கமாகத்தான் இருந்தது. முடிந்தவரைக்கும் நடுக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தான். அவனது அம்மா ”பத்திரம் பத்திரம்” என்று இதுவரை பல்லாயிரம் முறைகள் சொல்லிவிட்டார். விமான நிலையத்தில் அவனை பிரியும் வரையிலும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பெங்களூரில் இருந்து பாரீஸ் பிறகு அங்கிருந்து மாண்ட்பெல்லியே என இரண்டு விமானங்களில் பறக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடையை விடவும் அதிகமாக இருக்கிறது என ஏகப்பட்ட பொருட்களை பெங்களூர் விமான நிலையத்திலேயே கழித்துவிடச் சொன்னார்கள். அம்மா கட்டி கொடுத்திருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்த போது ரங்கநாதனையும் அறியாமல் அவன் கண்கள் கசிந்து கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட பத்து மணி நேர பயணம். மாண்ட்பெல்லியேவில் பதிவு செய்யப்பட்டிருந்த விடுதியை அடைந்தவன் ஒரு குளியலை முடித்து சட்டை லுங்கியோடு வெளியே வந்தான்.

எதிர்பட்டவர்கள் ‘போன்ஜூர்’ என்று வணக்கம் வைத்தார்களே தவிர ஒவ்வொருவரும் இவனது லுங்கியை முப்பத்திரண்டு டிகிரி கோணத்தில் மார்க்கமாக பார்த்தார்கள். அதனால் வெளியே போன வேகத்திலேயே அறைக்குத் திரும்பி முடங்கிவிட்டான். கண்டதையெல்லாம் பெட்டியில் வைத்தவர்கள் ஒரு அரைக்கால் டிரவுசரை எடுத்து வைக்காமல் மறந்துவிட்டார்கள்.

ஹோட்டலுக்கு வெளியே குளிர் மைனஸ் டிகிரிகளில் இருப்பதாகச் சொன்னார்கள். குளிரை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் லுங்கி அவனை வெளியில் அனுமதிக்கவில்லை. பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாக அவனது அம்மாவுக்கு போனைச் செய்துவிட்டு தூங்கிப்போனான். அப்பொழுதும் அவனது அம்மா ‘பத்திரம்’ என்றார்.

அடுத்த நாள் காலையில் அலுவலகம் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த வாடகைக் கார் வந்திருந்தது. விடுதியை விட்டு வெளியே வந்த கணத்தில் அந்த ஊரின் குளிரை உணர்ந்தான். ஜெர்க்கினை மீறியும் முதுகெலும்புகளில் ஊசிகளை இறக்குவது போலிருந்தது. பனியில் நனைந்த இரண்டு நிமிடங்களுக்குள் தொண்டை கமறத் தொடங்கியது. முகம் வறண்டு போனது. வேகமாக ஓடி காரில் ஏறிக் கொண்டான்.

விடுதியில் இருந்து அலுவலகம் வெகுதூரத்தில் இருந்தது. அலுவலகம் இருக்கும் பகுதி ஒரு வனாந்திரம். வழி நெடுகிலும் காடுகளையும் அதன் மீதான வெண்பனியையும் மட்டுமே பார்த்தான். அப்பொழுது தன்னை ஃப்ரான்ஸூக்கு அனுப்பிய மேனஜரின் ’பெருந்தன்மை’யை நினைத்து டைப் அடித்துக் கொண்டிருந்த பற்களை சிரமப்பட்டு நறநறத்தான்.

ரங்கு அலுவலகத்தை அடைந்த போது அது அத்தனை சிறிய அலுவலகமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த அலுவலகத்தில் மொத்தமே பதினேழு பேர்கள்தான் வேலை செய்தார்கள். இவனுக்கு முன்பாகவே பதினேழு பேரும் வந்திருந்தார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் மட்டும் ஆக்சஸ் கார்ட் இருந்தது. கதவை வெளியில் இருந்து திறப்பதற்கு ஆக்சஸ் கார்ட் அவசியம். அலுவலகத்தின் உள்ளே இருந்து கதவைத் திறக்க கார்ட் அவசியம் இல்லை. கதவு அருகில் இருக்கும் ஒரு சுவிட்சை அழுத்தினால் உட்புறமாக இருந்து திறந்து கொள்ளலாம். ஆக்சஸ் கார்ட் இல்லாமல் வெளியே நின்று கதவைத் தட்டுபவர்களுக்கு ஸ்டிஃபானியே என்ற நளினமான ரிசப்சனிஸ்ட் தான் கதவைத் திறந்துவிடுவாள்.

முதல் நாளிலேயே தாமதமாக போனதன் குற்றவுணர்ச்சியுடன் இருந்தவனை ஒலிவியே தேற்றினான்.

“ஸ்டிஃபானியே வருவதற்கு முன்பாக நீ வந்திருந்தால் வெளியில் இருக்கும் குளிரில் நீ விறைத்திருப்பாய்” என்றான்.

அதுவும் சரியெனப்பட்டது. மாலையில் விடுதிக்கு திரும்பும் போதும் கவனமாக இருக்குமாறு ஒலிவியே சொன்னான். ஸ்டிஃபானியே நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பிவிடுவாளாம். உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிட்டால் கதவு தானாக மூடிக் கொள்ளும் பிறகு ஆக்சஸ் கார்ட் இல்லாமல் திறக்க முடியாது என்பதையும் நினைவூட்டினான்.

“ஒருவேளை உனது வாடகைக் காரை தவறவிட்டுவிட்டால் நீ வெளியில் குளிரிலேயே விறைக்க வேண்டியதாகிவிடும். இந்தப் பகுதியில் அறிமுகம் இல்லாத கார்களை நம்பி லிஃப்ட் கேட்பதைப் போல ஆபத்து வேறு எதுவுமில்லை” என்றான் ஒலிவியே.

ரங்கு திகிலுடன் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தான். பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றிற்காகவோ கொலை செய்துவிட்டு காட்டிற்குள் வீசுவது சகஜம் என்றான்.

அந்த நாளிலோ அல்லது மற்றொரு நாளோ ரங்கநாதன் உறைபனியில் மாட்டிக் கொள்வான் என்றுதான் இந்தக் கதை முடியும் என நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆம். சரிதான். அந்த நாளின் மாலையில்தான் குளிரில் உறையும் வைபவம் நிகழ்ந்தது.

ரங்கு அன்றைய தினத்தின் பணியை முடித்திருந்தபோது ஸ்டிஃபானியே அலுவலகத்திலிருந்து வெளியேறியிருந்தாள். அலுவலகத்தின் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் கவனமாகவே வெளியில் எட்டிப்பார்த்தான். வாடகைக் கார் நின்று கொண்டிருந்தது. திறந்த கதவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு டிரைவரிடம் கையசைத்துக் காட்டினான். டிரைவரும் கார் கண்ணாடியை திறக்காமலேயே சைகை காட்டினான். தனக்காக வந்திருந்த கார்தான் என நினைத்துக் கொண்டு அருகில் போன போது அலுவலகத்தின் கதவு மூடிக் கொண்டதை ரங்கு பார்த்தான். டிரைவரிடம் ஆங்கிலத்தில் பேசிய போது அவன் ஃப்ரெஞ்சில் பேசினான். விடுதியின் விசிட்டிங் கார்டை காட்டினான். டிரைவர் சலிப்படைந்த முக பாவனையைக் காட்டிவிட்டு காரை நகர்த்தினான். ரங்குவுக்கு ஒரு கணம் உயிர் போய் திரும்பி வந்தது. உயிர் திரும்ப வந்து பேச்சை ஆரம்பிப்பதற்குள் கார் அந்த இடத்தை விட்டு போய் இருந்தது.

யாராவது கதவைத் திறக்க மாட்டார்களா என தட்டிப்பார்த்தான். குளிர் எலும்புகளில் சில்லிட்டது. யாரும் கதவைத் திறப்பதாக இல்லை. பனியில் தனது உதடுகள் வெடிப்பதை உணர்ந்தான். முகம் முழுவதும் பனி படந்தது. கண்கள் சிவக்க கன்னத்தை தடவிய போது பனிவெடிப்புகள் ஆழமான கீறல்களாய் விழுந்து கொண்டிருந்தது. மூச்சுவிடுவதும் சிரமமாக இருந்தது. பனியின் தாண்டவம் ரங்கநாதன் மீது நிகழ்ந்து கொண்டிருந்த போது இன்னும் சில நிமிடங்களில் தான் இறந்துவிடக் கூடும் என முடிவு செய்து கொண்டான். சில கடவுள்களிடம் வேண்டினான். அம்மாவை நினைத்துக் கொண்டான். விரல்கள் விறைத்திருந்தன. கிளம்புவதற்கு முன்பாக போன் செய்த பேசிய ஆட்டோக்காரனின் முகம் காரணமில்லாமல் சில வினாடிகள் வந்து போனது.

தன் அம்மாவை யாராவது கடைசி வரைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு முறை ஆழ்மனதில் நினைத்துக் கொண்டான். அது அவனைப் பொறுத்தவரைக்கும் கடைசி ஆசை அல்லது அல்லது கடைசி பிரார்த்தனை. அப்பொழுது ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. காடு, கொலை, பணம் என்று ஒலிவியே சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது என்றாலும் துணிந்து லிப்ட் கேட்டான். கார் மிகுந்த சப்தத்துடன் ப்ரேக் அடித்து நின்றது. ரங்கநாதன் ஏறிக் கொண்டான்.

ரங்கநாதன் உறைபனியில் மாட்டிக் கொள்வான் என்பதை யூகித்த நீங்கள் ரங்கநாதன் என்ன ஆனான் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

- ஜூன் 25, 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
உங்ககிட்ட எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லி இருக்கேனா? அதுவே ஒரு பெரிய கதை. ஆனால் இங்கு அது ஒரு கிளைக்கதைதான். எனக்கு பொண்ணு பார்க்கப் போகிற செய்தி கிடைத்தவுடன் வீட்டில் பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனக்கு காதல் திருமணம் செய்து கொள்ளத்தான் ...
மேலும் கதையை படிக்க...
என்னால் துளி கூட‌ நம்பமுடியவில்லை. மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வல்லுநருக்கு, ரோட்டில் குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண் மீது காதல் வந்திருக்கிறது என்றால் நீங்கள் மட்டும் நம்பவா போகிறீர்கள். ஆனால் நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. காதல் எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் ...
மேலும் கதையை படிக்க...
கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும் அளவுக்கான சமூக அக்கறை. பெங்களூர் சாலைகளில் ஓடும் இன்னோவோ, ஸ்கார்ப்பியோ, சஃபாரி, புதிதாக வந்திருக்கும் எக்ஸ்.யூ.வி போன்ற பெரிய வாகனங்களில் ...
மேலும் கதையை படிக்க...
அருள்பரதன் சொல்லும் வரைக்கும் அவன் சக்கிலி என்று தெரியாது. ஜீன்ஸ் பேண்ட்டையும் டீ சர்ட்டையும் சக்கிலியும் கூட அணிந்திருக்க முடியும் என்று அதுவரைக்கும் எனக்கு உறைத்ததும் இல்லை. பரதனை முதன் முதலாக ஃப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில்தான் பார்த்தேன். கதிர்வேலுதான் அறிமுகப்படுத்தினான். அப்பொழுதெல்லாம் பத்தாம் ...
மேலும் கதையை படிக்க...
ஜாலியான சோகக் கதை
என்ன‌ கொடுமை சார் இது?
மொக்கையான சோகக் கதை
தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கொல்ல காத்திருப்பவன்
சக்கிலிப் பையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)