குருதிக் கொடை

 

ஓர் இனிய மாலைப்பொழுதில் அந்தக் கலை அறிவியல் கல்லூரி மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் கல்லூரியில் குருதிக் கொடை நிகழ்வு (இரத்ததான முகாம்) ஒன்று நடைபெற இருந்ததே அதற்குக் காரணம்.

குருதிக் கொடைஅரசுத்துறை, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் இவற்றுடன் இணைந்து அந்தக் கல்லூரியே முன் நின்று குருதிக் கொடை நிகழ்வை நடத்த இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளில்தான் பேராசிரியர்களும் மாணவர்களும் முனைந்திருந்தார்கள்.

குருதி கொடுக்க வரும் கொடையாளிகளாகிய சுற்றுப்புற மக்களுக்கு வழி காட்டவும் உதவிகள் செய்யவும் தேவையான வேறு பணிகளைச் செய்யவும் பல மாணவ மாணவியர் தன்னார்வலர்களாகப் பெயர் கொடுத்திருந்தார்கள்.

கல்லூரியில் ஏறத்தாழ அத்தனை மாணவ மாணவியருமே குருதி கொடுக்கத் தயாராக இருந்தார்கள்.

நான்கைந்து நாட்களாகவே பேராசிரியர்கள் குருதிக் கொடையைப் பற்றி வகுப்புகளில் பேசிப் பேசி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார்கள்.
குருதியில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, யார் யாருக்கு எந்த வகைக் குருதி பொருந்தும் என்பதெல்லாம் இப்போது மாணவர்களுக்கு அத்துப்படி ஆகியிருந்தது.

குருதி கொடுப்பவர்களுக்கு அரசு உயரதிகாரி கையொப்பமிட்ட சான்றிதழ் கிடைக்கும். இந்த நிகழ்வால் கல்லூரிக்கு மிகவும் பெருமை கிடைக்கும் என்றெல்லாம் கூறிப் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கமூட்டியிருந்தார்கள்.

குருதி கொடுத்த உடனே சுவையான திண்பண்டங்களும் கிடைக்கும் என்று ஆசையும் காட்டியிருந்தார்கள், சில குறும்புக்காரப் பேராசிரியர்கள்.

இப்படியாக ஒரு பெருத்த எதிர்பார்ப்புடனும் நிகழ்ச்சி நன்றாக நடக்கவேண்டுமே என்ற பதைபதைப்புடனும் சிறப்பாக நடந்தேறி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடனும் அந்தக் கல்லூரி இயங்கிக் கொண்டிருந்தது.

கல்லூரி முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமான தங்கப்பன், தம் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் இசைவாணனிடம் இப்படிக் கூறிக் கொண்டிருந்தார் -

“”இசைவாணா, உன்னைத்தான் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறேன்… கல்லூரி மாணவர் தலைவன் நீ! உனக்குக் கூடுதல் பொறுப்புகள் நிறைய இருக்கின்றன. காலை எட்டரை மணிக்கே வந்துவிடுவாய் அல்லவா?”

“”உறுதியாக வந்துவிடுவேன் ஐயா!”
என்று பணிவோடு கூறிவிட்டு விடைபெற்றான் இசைவாணன்.

ஆனால் இசைவாணன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை! ஆம், இசைவாணன் மறுநாள் கல்லூரிக்கு வரவேயில்லை. தவித்துப் போய்விடடார் கல்லூரி முதல்வர்.

இசைவாணனின் தங்கை இளவரசியும் அதே கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
அவளை அழைத்துவரச் செய்த முதல்வர், “”எங்கே இசைவாணன்? ஏன் இன்னும் அவன் வரவில்லை?” என்று உறுமினார்.
நடுநடுங்கிப் போன இளவரசிக்குக் கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. “”தெரியவில்லை ஐயா, காலையில் நான்கு மணிக்கே அண்ணனும் அப்பாவும் மரக்காணத்திற்குப் போவதாய்ச் சொல்லிவிட்டுப் போனார்களாம்… பாட்டிதான் சொன்னார். அண்ணனின் அலைபேசிகூட வீட்டில்தான் இருக்கிறது. அப்பாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.”

”என்னது மரக்காணத்திற்கா? அங்கே எதற்குப் போனான்? இங்கே கல்லூரியில் இவ்வளவு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைவிட அவனுக்கு அங்கே என்ன பெரிய வேலை? உன் அப்பாவிற்காவது தெரிய வேண்டாமா? பள்ளி ஆசிரியர்தாமே அவர்! வரட்டும் உன் அண்ணன் – கல்லூரியை விட்டே தூக்கிவிடுகிறேன் பார்!” கொதித்துப் போய் பேசினார் முதல்வர்.

இளவரசி கலங்கிய கண்களுடன் அமைதியாய் வெளியேறினாள்.

ஒருவர் இல்லை என்பதற்காக இந்த உலகம் சுற்றுவதை நிறுத்தி விடுவதில்லையே… இசைவாணன் இல்லாமலேயே நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

குருதி கொடுத்த பொதுமக்களெல்லாம் சான்றிதழ்களைக் கையோடு கொடுத்து விட்டார்கள். ஆனால் மாணவர்களுக்கு மாலையில் விழா வைத்து அரசு உயர் அதிகாரி கையால் சான்றிதழ் கொடுப்பதாக ஏற்பாடு.
ஆகவே வீட்டுக்குப் போய் இளைப்பாறிவிட்டுப் புத்துணர்வோடும் புத்தாடைகள் அணிந்தும் மாணவ மாணவியர் மாலையில் கல்லூரியில் கூடத் தொடங்கினார்கள்.

அப்போது வியர்வை பொங்கி வழிய, கசங்கிய உடைகளுடன் களைத்துப் போனவனாய்க் கல்லூரிக்குள் நுழைந்தான் இசைவாணன்.
உடனே பாதுகாப்பு வளையம் அமைப்பது போல அவனைச் சூழ்ந்துகொண்ட அவன் தோழர்கள் அவனைக் கல்லூரி முதல்வரின் அறைக்கு அழைத்துப் போனார்கள்.

நெருப்புப் பார்வையால் அவனைச் சுட்டெரித்துக் கடுஞ்சொற்களால் அவனைத் துளைத்தெடுக்கப் போகிறார் முதல்வர் என்று அஞ்சியபடியே வந்த தோழர்கள், அவர் புன்சிரிப்போடு இசைவாணனைக் கட்டி அணைத்துக் கொண்டபோது வியப்பின் உச்சிக்கே போனார்கள்.

“”அப்பாவிடமிருந்து இப்போதுதான் தொலைபேசியில் செய்தி கேள்விப்பட்டேன். மிகவும் மகிழ்ச்சி… பெருமையாக இருக்கிறது… வா, மேடைக்குப் போவோம்” என்று கனிவுடன் பேசி, அவனைத் தன்னுடனே முதல்வர் அழைத்துச் செல்ல, வாய்பிளந்து, குழம்பியபடியே பின் தொடர்ந்தது நண்பர்கள் கூட்டம்.

விழா மேடையில் இசைவாணனை நிற்க வைத்துக் கல்லூரி முதல்வர் பேச ஆரம்பித்தார் -

“”எனதருமை மாணவச் செல்வங்களே! இன்று அதிகாலை மூன்று மணியளவில் மரக்காணத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டுப் பல உயிர்களைக் காவு வாங்கிய துன்பச் செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்…

அந்த விபத்திலே படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாகக் குருதி தேவை என்று உள்ளூர்த் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய செய்தியைப் பார்த்த நம் இசைவாணன், உடனேயே தன் அப்பாவுடன் கிளம்பி மரக்காணத்துக்கு ஓடியிருக்கிறான்.

அவனும் அவன் அப்பாவும் கொடுத்த குருதி, மூன்று உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் வரும்வரை அவர்களுக்குத் துணையாகவும் இருந்துவிட்டு வந்திருக்கிறான் நம் இசைவாணன்.

நம் கல்லூரிக்குப் பெருமை வரவேண்டும்… நல்ல பெயர் கிடைக்கும்… சான்றிதழ் பெறலாம் போன்ற உள்நோக்கங்களையெல்லாம் வைத்துக் கொண்டுதான் நாமெல்லாம் குருதிக் கொடை அளித்தோம். ஆனால் இசைவாணன் அளித்த குருதிக் கொடை எந்த உள்நோக்கமுமின்றி, உயிர்களைக் காக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வில் அளிக்கப்பட்ட கொடை!

அதுவே உயர்ந்தது! அதுவே சிறந்தது! இசைவாணனின் அருள் உள்ளத்தைப் பாராட்டும் முகமாய் அனைவரும் எழுந்து நின்று கைதட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்…”

மாணவர்களும் பேராசிரியர்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் எழுப்பிய கரவொலி ஓசையில் கல்லூரிக் கட்டிடங்களே அதிர்ந்தன!

- டிசம்பர் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆம் அவனுக்காக இப்பொழுதே அழுதுவிடுங்கள்... ஏனென்றால், அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகிறான்! அவன் இறந்தபின் அழுவதற்கு, நீங்களும் உயிரோடு இருக்கப் போவதில்லை! அதனால்தான் சொல்கிறேன் அழுதுவிடுங்கள். இப்பொழுதே உங்களுக்குமாய்ச் சேர்த்து! அவன் ஒரு மனித வெடிகுண்டு...! தலைவரின் தனியறைக்குள் அவனோடு சேர்த்து அந்த நான்கு பேரும் நுழைந்தார்கள். காடாய் மண்டியிருந்த தாடி மீசை, தோள்வரைத் தொங்கிய தலைமுடி, யானையைப் போன்ற ...
மேலும் கதையை படிக்க...
ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியை உங்களுக்கு நினைவிருக்கும். திராட்சைப் பழத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலைந்த அந்த நரி, அது கிடைக்காத ...
மேலும் கதையை படிக்க...
சென்னை. தலைமைச் செயலகம். முதல்வரின் அலுவலகம். 28 வயது இளைஞனை அவன் என்று விளிப்பதுதான் மரபு. ஒரு மாநிலத்தின் முதலவரை அவர் என்று அழைப்பதும் மரபுதான். 28 வயது இளைஞனே முதல்வராக இருக்கும் போது அவரை அவன் என்றழைப்பதைத் தவிர்த்து விடுவோமே... பணி ...
மேலும் கதையை படிக்க...
தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார். இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் ஒரு வடிகட்டிய கஞ்சன். யாருக்கும் ஒரு சிறு உதவிகூடச் செய்ய மாட்டான். ஆனால், பேராசைக்காரனான அவன், சோதிடர்களைக் கண்டுவிட்டால் உடனே ஓடோடிச் சென்று அவர்களை அழைத்துவந்து, வீட்டில் தங்க வைத்து விருந்து ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்காக அழுதுவிடுங்கள்…!
சீச்சீ திராட்சை
நிலவின் அகதிகள்
சோளக்கொல்லை பொம்மை!
நரி ஜோசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)