Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இடைவெளி

 

தினசரி படிக்க வந்து உட்கார்ந்த மகன் சேகரிடம், விசுவநாதன், “இதோ பார்… என்னுடைய கட்டுரை இன்றைய ஹிந்து பேப்பரின் ‘ஓபன் பேஜி’ல் வெளியாகி இருக்கிறது…” என்று உற்சாகத்துடன் தினசரியை நீட்டினார்.

அதை வாங்கி மேலோட்டமாகப் பார்த்த சேகர், “சரி… சரி… எப்போதும் போல புதிசு புதிசாக இங்கிலீஷ் வார்த்தைகளைப் போட்டு ஏதாவது எழுதியிருப்பேள்… அப்புறமா பார்க்கிறேன்…” என்று அந்தப் பக்கத்தை நிராகரித்து ஸ்போர்ட்ஸ் பக்கத்துக்குப் புரட்டினான்.

பொங்கி வந்த பாலில் குளிர் நீர் தெளித்தது போல் விசுவநாதன் உற்சாகம் வடிந்து போனவராய் அமைதியாகத் தன் கையிலிருந்த தினசரியின் மேல் கவனத்தைச் செலுத்தினார்.

விசுவநாதனுக்கு சேகரின் போக்கு கொஞ்ச நாட்களாகவே ஆச்சர்யமாக இருக்கிறது. முன்பெல்லாம் அவர் எழுதும் கட்டுரைகளையும், விமர்சனங்களையும், கடிதங்களையும், கதைகளையும் வார்த்தை விடாமல் படிப்பதுடன், “ஏம்ப்பா… இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்….?” எப்படிப்பா உங்களக்கு மட்டும் இப்படியெல்லாம் எழுதணும்னு தோணறது…?” என்று பாராட்டுவதோடு நில்லாமல் தன் மனைவி உமா, பையன் கார்த்திக், நண்பர்கள் எல்லோரிடமும், “எங்கப்பா சூப்பரா இங்கிலீஷ், தமிழ் இரண்டுமே எழுதுவாராக்கும்” என்றெல்லாம் பிரகடனம் செய்வான்.

ஆனால், கிட்டத்தட்ட கடந்த நான்கு ஐந்து மாதங்களாக அவன் பார்வை மாறி இருந்தது.

அவர் ஏதாவது புதிசாகப் புத்தகம் வாங்கி வந்ததைப் பார்த்தால், “ஹ்ம்… எதுக்குப்பா இந்தப் புத்தகம்… முதல்ல புதுசா புத்தகம் வாங்கினா அதை வைக்க இடம் இருக்கான்னு பாருங்கோ… இருக்கற புத்தகத்தை வச்சுக் காப்பாத்தவே உங்களால முடியாது…” என்று குற்றம் சாட்டுவான்.

விசுவநாதனுக்கு இந்த மாற்றம் புரியவில்லை; புத்தகம் வைக்க இடம் இல்லைஎன்பது நிசம்தான் என்றாலும், சேகர் அதைச் சொன்ன விதம் முள் போல் தைத்தது.

அன்று அப்படித்தான் அவரும், அவர் மனைவி பங்கஜமும், ‘ஷாப்பிங்’ போய்விட்டு தனக்கு ஒரு சட்டையும், பங்கஜத்திற்கு ஒரு புடவையும் வாங்கிக் கொண்டு வந்து காட்டியபோது சேகர் பேசியது கிட்டத்தட்ட எரிந்து விழுவது போல் இருந்தது.

“ஏம்பா… கேக்கறனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்கோ… நீங்க எங்க தினம் போறேள்? உங்களுக்கும் அம்மாவுக்கும் இப்ப எதுக்கு புதிசா டிரஸ்… உங்களுக்கு இந்த வயசில் இந்த மாதிரி ‘செக்ஸ்’ நன்றாகவா இருக்கும்? அம்மா புடவையும் ரொம்ப ‘காடி’யாக இருக்கு… நீ என்ன சொல்ற உமா…?” என்று மனைவியையும் சாட்சிக்கு இழுத்தான்.

உமா சாதுர்யமான பெண். பதில் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள். அதுவும் அவளின் அதிருப்தியைக் காட்டும் ஒரு செயல் போல்தான் தோன்றியது விசுவநாதனுக்கு. ஆனால், சேகரின் அந்த வார்த்தைகளின் உட்பொருள் உணர்ந்தவராய், “உன் காசில் நான் இதை வாங்கலை… என்னோட பணத்திலதான் வாங்கினேன்…” என்றார் சற்று சூடாக.

சேகர் ஒரு நிமிஷம் மௌனம் சாதித்தான். “யார் பணமா இருந்தா என்ன? எனக்குத் தோணினதைச் சொன்னேன்… அப்புறம் உங்க இஷ்டம்…” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டான்.

அதன்பிறகு அந்த சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ளும் போதெல்லாம் சேகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு, பிறகு, ‘அவன் சொன்னதும் சரிதான்… நமக்கும் நம் வயதுக்கும் இது அவ்வளவு பொருத்தமாக இல்லை’ என்று தோன்ற கழட்டி வைத்து விடுவார்.

பங்கஜம் அந்தச் சேலையை உடுத்தவே இல்லை.

பேரன் கார்த்திக் தாத்தாவுடன் முன்னெல்லாம் கிரிக்கெட் மாட்ச் பற்றி விவாதிப்பதை மகிழ்ச்சியுடன் கவனிப்பவன், “டேய்… கார்த்திக்… சும்மா என்ன கிரிக்கெட் டிஸ்கஷன்… தாத்தாவை தொந்திரவு பண்ணாம போய்ப் படி…” என்று விரட்டினான்.

“பாட்டி கிட்ட பாட்டு, ஸ்லோகம் எல்லாம் கத்துக்கோ” என்று பெண் சுருதியை ஊக்குவித்து பங்கஜத்துடன் ஒட்டி உறவாடவிட்ட உமாகூட, “சுருதி… உனக்கு நிறைய ஹோம் வொர்க் இல்ல… பாட்டு போதும்… பாட்டிய ‘ட்ரபிள்’ பண்ணாம போய் வேலயப் பாரு” என்று மென்மையாகக் கூறி விலக்கி விட்டாள்.
விசுவநாதனும், பங்கஜமும் அன்று மாலை ‘வாக்கிங்’ போன பின்னால் அருகிலிருந்த பிள்ளையார் கோயில் சென்று தரிசனம் செய்துவிட்டு அதற்குப் பின்பக்கமே இருந்த சிறிய விளையாட்டு மைதானத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சிகளில் அமர்ந்தனர்.

விசுவநாதன்தான் பேச்சை ஆரம்பித்தார்.

“கவனிச்சயா பங்கஜம்… வரவர சேகர், உமா இரண்டு பேருமே நம்மகிட்ட கொஞ்சம் விட்டேற்றியாக நடக்கிறத…” என்றார் வருத்தத்துடன்.
பங்கஜம் மகா சாது. அவளுக்கு கணவனையும், தன் பிள்ளை சேகரையும், பெண் ராதாவையும் தவிர வேறு உலகம் தெரியாது. ராதா கல்யாணமாகி புருஷனுடன் அமெரிக்காவில் ஷிகாகோவில் குடியேறி பத்து வருஷம் கடந்துவிட்டது. ஒரே ஒரு முறை இவர்களை அழைத்துக் கொண்டுபோய் மூன்று மாசம் வைத்துக் கொண்டதோடு சரி. அதுவும் அவளுக்கு அப்போது முதல் பிரசவம் பார்க்க வேண்டிய உதவிக்காக… பிறகு அழைக்கவேயில்லை.
அவளும் இந்தப் பத்து வருஷங்களில் ஒரே ஒரு முறைதான் கணவனுடன் இந்தியா வந்தாள். வந்தவளும் அப்பா-அம்மாவுடன் இரண்டு நாள் வந்து பார்த்து விட்டுப் போனதோடு சரி. அவள் புகுந்த வீடு வசதியும், வளமும் உள்ள இடம் என்பதால் மிகுந்த நாட்கள் அங்கேயே கழிந்தன.

சேகருக்கும், உமாவுக்கும், ராதாவின் கர்வம் நன்றாகத் தெரிந்தாலும், எரிச்சல் தந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
சேகர் வீடுதான் இனி தங்களுக்கு கதி என்று உணர்ந்த விசுவநாதன்-பங்கஜம் தம்பதிகளும் அநாவசியமாகப் பேசி பிரச்சினைகளை உருவாக்காமல் இருக்கவே பார்த்தனர். அவர்களிடம் அத்தனை பணமும் இல்லை, தனியாக இருந்து தங்களைப் பார்த்துக்கொள்ள இயலாத நிலையில் வயது வேறு ஏறிக்கொண்டே போகும்போது தங்களுக்கு வரவேண்டியது ‘விவேகம்’ என்பதை உணர்ந்தே இருவரும் பொறுமை காத்தனர்.

இதையெல்லாம் மனதில் ஓடியதை உணர்த்தும் வகையில் பங்கஜம் கணவருக்குப் பதில் சொன்னாள். “ம்… ஆமாமாம்… வித்தியாசமாகத்தான் ஆயிண்டு வரது… என்ன காரணமோ… அவாளுக்கு என்ன பிரச்சினையோ?” என்றாள் பொதுவாக.

“எனக்கு அதுதான் புரியல பங்கஜம்… இன்னிக்கு கார்த்தால பார்… ஹிந்து பேப்பரை தூக்கி எறியாத குறை… நான் ஒண்ணும் தப்பா பேசலையே…?” என்றார் விசுவநாதன்.

பங்கஜம் மௌனமாக இருந்தாள். பிறகு சொன்னாள், புன்னகையுடன்.

“நீங்கதான் நிறைய படிச்சு எழுதறவர்… உங்களுக்குத்தான் இதுக்கான காரணம் புரிஞ்சிருக்கணும்…”

விசுவநாதன் மனைவியை உற்றுப் பார்த்தார்.

“நான் சொன்னது தப்பா?” என்றாள் பங்கஜம்.

“தப்பில்ல… சரிதான்… அதான் புரியல… யோசிக்கிறேன்…” என்றார்.

“நன்னா யோசியுங்கோ… மனுஷா மனசப்பத்திக் கதை கதையா எழுதற உங்களுக்கு எத்தனையோ புத்தகம் படிச்சு, காலேஜில புரபசரா இருந்து ரிடையர்ட் ஆன உங்களுக்குத்தான் இதுக்கான காரணம் புரியணும்…”
விசுவநாதன் மௌனத்தில் ஆழ்ந்தார். பங்கஜம் சொன்ன பதிலில் இருந்த சத்தியம் அவரை ஆக்ரமித்துக் கொண்டது.

வாஸ்தவம்தான். சரித்திர விரிவுரையாளராகவும், பின்னால் பேராசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு எழுத்தும், படிப்பும்தான் மிகவும் அத்யந்தமான பொழுது போக்குகள். இன்றைய சமூகத்தில் அவரின் பாடத்திற்கு மரியாதை இல்லை.

பொறியியல், கணினித்துறை, விளம்பரம் என்று வளர்ந்து வரும் உலகத்தில் சில பத்திரிகைகளில் அவரின் கருத்துகளுக்கும் எழுத்துக்கும் மட்டுமே மதிப்பு இருந்தது. அவ்வளவே.

சேகர் அவன் மனைவி உமா இருவருமே கணிப்பொறி பத்து மென்பொருள் துறையில் பணியாற்றுகின்றனர். அவர் கடைசியாக வாங்கிய ஊதியம் அவர்கள் மாத சம்பள்ததில் கால்பங்கு கூடக் கிடையாது.

பணம், பதவி, வசதிகள், வாழ்க்கை முறைகள், சமூக கண்ணோட்டங்கள் இவை எல்லோரையும் அவரவர் தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தாற் போல் பாதிக்கிறது.

திடீரென்று விசுவநாதனுக்கு இறந்துபோன தன் பெற்றோரின் ஞாபகம் வந்தது. விசுவநாதனின் தந்தை சந்திரசேகரன் தஞ்சாவூருக்கும் திருச்சிக்கும் இடையில் இருக்கும் பொன்வயல் என்ற கிராமத்தில் ஒரு சிறிய மிராசுதார். அவருக்கு விசுவநாதன் ஒரே மகன்தான். வெகு நாட்கள் கழித்துப் பிறந்த மகனை கணவன்-மனைவி இருவரும் மிகுந்த ஆசையோடு வளர்த்தனர். விசுவநாதனுக்கு பள்ளி நாட்களிலேயே ஆங்கிலம், தமிழ் மற்றும் சரித்திரப் பாடத்தில் அதிக ஆர்வம் இருந்தது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களும் பெற்று திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. சரித்திரம் படித்து மேல்படிப்பிற்காக சென்னை மாநிலக் கல்லூரிக்குச் சென்றபோதும் மிகுந்த ஆசையுடன் விசுவநாதனின் விருப்பத்திற்கு ஈடு கொடுத்து செலவு பண்ணி படிக்க வைத்தார். கல்லூரி நாட்களில் தந்தை எட்டு முழ வேட்டியும், அரைக்கை சட்டையும் அணிந்து ஹாஸ்டலில் தங்கிப் படித்த விசுவநாதனைப் பார்க்க வரும்போதெல்லாம் விசுவநாதனுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஏற்படும். தன் தந்தை தன் விருப்பத்திற்கு செவி சாய்த்து செலவைப் பார்க்காமல் படிக்க வைத்ததன் பெருமையை தன் நண்பர்களுடன் மிகுந்த பெருமையுடன் பகிர்ந்து கொள்வார்.

கல்லூரிப் படிப்பு முடிந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு பின் சற்று தாமதமாகத்தான் விசுவநாதனுக்கு வேலை கிடைத்தது. வயதான சந்திரசேகரின் மனைவி திடீரென்று இறந்துவிட தனியாக சந்திரசேகரனால் ஓரளவுக்கு மேல் கிராமத்தில் இருக்க முடியவில்லை. குத்தகைக்கு விட்டிருந்த குறைந்த அளவு நிலங்களிலிருந்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

சென்னையில் கல்லூரியில் அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்து திருமணமும் செய்து கொண்டிருந்த விசுவநாதனுக்கு சந்திரசேகரனை கிராமத்தில் இருந்து தன்னுடன் கொண்டு வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

தந்தையை வீட்டில் வைத்துக்கொள்வதை அவரோ இல்லை அவர் மனைவி இந்த சாது பங்கஜமோ சுமையாக நினைக்கவில்லை. சந்திரசேகரனும் தன் நிலை உணர்ந்து அவருக்கு முற்றும் புதிதாக நகர வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொண்டிருந்தார்.

ஆனால், சிறிது நாட்களில் வீட்டுக்கு வரும் விசுவநாதனின் கல்லூரி நண்பர்களிடமும், உடன் வேலை செய்பவர்களிடமும் மாணவர்களிடமும் சந்திரசேகரன் தானே வலுவில் சென்று நட்புடன் பேச ஆரம்பித்தது முதலில் விசுவநாதனுக்கு பெருமையாகத்தான் இருந்தது.

ஆனாலும் வயதின் காரணமாக சந்திரசேகரன் தொணதொணவென்று விடாமல் பேசுவதும், எதிராளியின் மனநிலை தெரியாமல் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி வைப்பதும், நகர வாழ்க்கையையும், கிராம வாழ்க்கையையும் ஒப்பிட்டு தீர்ப்பு வழங்குவது போல் சில சமயங்களில் முழங்குவதும் வந்த விருந்தினருக்கும், விசுவநாதனுக்கும் சங்கடம் தர ஆரம்பித்தது. எதிராளி கிழவர் அடிக்கும் ‘போர்’ தாங்காமல் நெளிய ஆரம்பித்தால்கூட கிழவருக்குப் புரியாது. தான் மனம் போல் பேசிக்கொண்டே இருப்பார்.

இவை போகப்போக விசுவநாதனுக்கு எரிச்சலைத் தர ஆரம்பித்தது.

“அப்பா… நாங்க வேறு விஷயம் பேசணும்… நீங்கள் கொஞ்சம் உள்ள போறேளா…?” என்று கேட்கும்படி ஆகிவிட்டது.

“என்ன ஏண்டா உள்ள விரட்டற… நான் பாட்டுக்கு இங்கயே உக்காந்திருக்கேன்… நான் பேச மாட்டேன்” என்று வெகுளித்தனமாக கிழவர் சொல்லும்போது ஆதங்கம், அவமானம் இரண்டும் உண்டாகும் விசுவநாதனுக்கு.

பங்கஜத்திடம் வேறு மாதிரி “பொன்வயலில் வீட்டில் காய்க்கிற கத்திரிக்காயைப் போட்டு கொத்ஸு வைக்கணும்… எப்படி இருக்கும் தெரியுமா?” என்பார். “நீ என்ன இன்னிக்கு சாம்பார்ல புளி, காரம் இரண்டையுமே கண்ணில் காட்டல…?” என்பார்.

சாப்பிடுகிறபோது நாலு வாய்ச் சோற்றுக்கு நானூறு குற்றமா என்று பங்கஜத்திற்கு தோன்றும். “உங்கப்பாவுக்கு ரொம்ப நாக்கு நீளம்…” என்று மட்டும் கணவனிடம் சொல்லுவாள்.

இதற்கெல்லாம் அப்போது என்ன காரணம்?

இடைவெளி!

ஒரு தலைமுறைக்கும், இன்னொரு தலைமுறைக்கும் நடுவே விழுகின்ற கண்ணுக்குப் புலப்படாத பள்ளம்!

எப்படி பெருமைக்குரியவராக இருந்த தந்தை, தான் ஒரு குடும்பத் தலைவன் ஆனபின்னர் பழையதாக ஆனாரோ அதே கதைதான் இங்கும் நிகழ்கிறது.
இப்போது சேகர் ஒரு குடும்பத் தலைவன். அவனுக்கு என்று சில தனிப்பட்ட முகங்கள், விருப்பு-வெறுப்புகள், மதிப்பு, முக்கியத்துவம் இவை வந்துவிட்டன. அவற்றிற்குத்தான் அவன் முதல் மரியாதை தருவான். அது இந்தக் காலத்திற்கும், அவனுடைய அலுவலக, சமூக, குடும்ப, சூழ்நிலையையும், சொந்த விருப்பு-வெறுப்புகளையும் பொறுத்து மாறுபடும். காரணம்?
இடைவெளி!

வயது கூடக்கூட முதுமை மட்டும் கூடுவதில்லை. இரு தலைமுறைகளுக்கு நடுவே தோன்றும் இடைவெளியின் அகலமும் கூடத்தான்.

‘இன்னும் நான் ஒரு சின்னக் குழந்தை போல் என் பெருமை காட்ட என் கட்டுரை வெளியானதை நாற்பது வயது மகனிடம் சொன்னால் எப்படி அவன் ரசிப்பான்?’ அவன் இவரது அறிவை, திறமையை ரசித்தபோது இளைஞன். இன்று அவனும் ஒரு தனி மனிதன். அதிகாரி, குடும்பத் தலைவன். இதையே பதினைந்து வயது கார்த்திக் எழுதிக்கொண்டு வந்து காட்டினால் அவனுக்குப் பெருமையாக இருக்கும். அறுபத்தி ஐந்து வயது அப்பா பீற்றிக் கொண்டால்…?
விசுவநாதனுக்கு சிந்தனைகள் கிளைவிட்டு ஓடி உண்மை புரிந்தபோது துக்கமாக இருந்தது. இந்தச் சின்ன மனித மனோதத்துவம் தனக்குப் புரியாமல் போய்விட்டதே என்று தோன்றியது. தப்பு செய்து விட்டோம் என்று வருத்தம் ஏற்பட்டது.

“என்ன ஒண்ணுமே பேசாம யோஜனைல ஆழ்ந்துட்டேள்…. நான் சொன்னதைப் பத்தி நினைச்சிண்டிருக்கேளா…?” என்றாள் பங்கஜம். தொடர்ந்து, “போகலாமா… இருட்டிண்டு வரது… கண் சரியாகத் தெரியாது…” என்று எழுந்தாள்.

பெருமூச்சுடன், “ஆமாம் பங்கஜம்… இப்ப புரிஞ்சுடுத்து… போகலாம்… வா…” என்று தானும் எழுந்தார் விசுவநாதன்.

“என்ன புரிஞ்சுது…?”

“இடைவெளி… காப்…”

“என்னது….?”

“வயசும், காலமும், வாழ்க்கை முறைகளும் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக இணைக்கப் பார்த்துப் பார்த்து முடியாமல் தோற்றுப் போக வைக்கும் இடைவெளி…”

“சரிதான்… நமக்கு வயசாறது… புரிஞ்சு விவேகமா நடந்துக்கணும்கறேள்… அவா சிறுசுகள்.. சொன்னா சொல்லிட்டுப் போறான்னு இருக்கணும்கறேள்… அப்படித்தானே?” என்றாள் பங்கஜம் சிரித்தபடி.

விசுவநாதன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

“சிலசமயம் நான் சிரமப்பட்டு புதுசு புதுசா வார்த்தைகளைத் தேடிக் கோர்த்து பிரமாதமா சொல்றதா நினைக்கறத நீ ரொம்ப ‘ஸிம்பிளா’ சொல்லிடற…”
“வாங்கோ… போகலாம்… என்னப் பாராட்டினதுக்கு தாங்க்ஸ்” என்று நடக்க ஆரம்பித்தாள் பங்கஜம்.

அடுத்த வாரம் தினமலர் வாரமலரில் அவரது சிறுகதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. அவர் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. ஞாயிற்றுக் கிழமையானதால் பிற்பகல் வீட்டில் இருந்த சேகர் அந்தக் கதையைப் படித்துவிட்டு தன் பெட்ரூமில் இருந்து வெளியே வந்து ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த விசுவநாதனிடம் வந்து, “என்னப்பா… உங்க கதை இன்னிக்கு வாரமலரில் வந்திருக்கு… சொல்லவே இல்லையே… யாருதுன்னு தெரியாமலே படிக்க ஆரம்பிச்சேன்…. சூபர்ப்… படிச்சு முடிச்சு பார்த்தா உங்க பேர்… உமா… நீ படிச்சியா?” என்று உற்சாகமாகக் கேட்ட சேகருக்கு விசுவநாதனிடம் இருந்து கிடைத்த பதில், ஒரு மௌனப் புன்னகை மட்டுமே.
அடுத்த இரண்டு நாட்களில் பங்கஜத்தின் தீவிர சிபாரிசில் பங்கஜம் தனக்காக வாங்கி வந்த புடவை உமா ஆபீஸுக்குப் போகும்போது அவள் உடம்பை அலங்கரித்தது.

“டேய்… கார்த்திக்… எங்க எப்படா வாங்கின இந்த செக்ஸ்ட் ஸ்லாக்… உனக்கு சூப்பரா ஸூட் ஆகறதே… எப்படா, யார் காசு குடுத்துடா வாங்கின…?” என்று சினிமாவுக்கு நண்பர்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்த மகனைப் பார்த்துக் கேட்டான் சேகர்.

‘கூல் டாட்’ என்று சிரித்தபடி ஷூவில் காலை நுழைத்துக் கொண்ட கார்த்திக், “இட்’ஸ் க்ராண்ட்பா’ஸ் கிஃப்ட்…” என்றபடி வண்டி சாவியைச் சுழற்றிக் கொண்டு வெளியேறினான்.

இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த விசுவநாதன் நினைத்துக் கொண்டார். ‘மனிதர்களும், வாழ்க்கையும் உள்ளவரை இடைவெளிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். அதை உணர்ந்து, கடக்கத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு சுவாரசியமான பாலம், தெரியாதவர்களுக்கும், புரியாதவர்களுக்கும் அது ஒரு சறுக்கி விடும் பள்ளம்! 

தொடர்புடைய சிறுகதைகள்
மவுனத்தின் குரல்!
மனோகருக்கு, "விர்' ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது ஏதாவதொரு சந்தோஷமான கனவு என்ற அளவில் தான் நினைவு இருந்தது. ஏனென்றால், அவன் எதற்காகவோ, மகிழ்ச்சியுடன் கனவில் சிரித்த போதுதான், ...
மேலும் கதையை படிக்க...
அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது. சோர்ந்து போன அவன் முகம் க்ளோஸ் அப்பில் வர 'இவன் போன்றோரின் பயணங்களுக்கு முடிவில்லை' என்ற வாசகத்துடன் திரை ஒளிர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸை எடுக்கப்போன டிரைவர் முருகன் சற்றுத் தொலைவில் கல்யாண சுந்தரம் தட்டுத் தடுமாறி பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்ற பதட்டத்தில் ஓடிவருவதைப் பார்த்து நிறுத்தினான். “என்ன முருகா... எடுக்கலை?” என்று கேட்டபடி வந்த கண்டக்டர் பாலனிடம் “அத பார்... அய்யரு ஓடியாரரு... அதனால்தான் ...
மேலும் கதையை படிக்க...
மறுபக்கம்
"ரெசிடன்சி கிளப்'பின் அந்த அரை வெளிச்சமான, "பாரில்" அமர்ந்து, தனியாக உற்சாக பானம் பருகிக் கொண்டிருந்தார் விசுவம். ஆயிற்று... இன்றோடு அவர் வேலையிலிருந்தும் ஓய்வு பெற்று, ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. "ஒவ்வொரு சமயம், காலம் இறக்கை கட்டி பறக்கிறது; சில சமயங்களில், ...
மேலும் கதையை படிக்க...
சென்னை "ஸிடி ஸென்டரில்" முன்னாள் தோழி சந்தியாவை பார்க்கப் போகிறோம் என்பதை இந்து எதிர்பார்க்கவே இல்லை: அதுவும் சந்தியாவை அவள் கணவன் முரளியுடன். "ஒடிஸி' புத்தகக் கடையில் ஏதோ புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த இந்துவின் தோளைத் தட்டினாள் சந்தியா. "ஹாய்... வாட் எ ...
மேலும் கதையை படிக்க...
மவுனத்தின் குரல்!
நாளை….
ஒரு கிலோ சந்தோஷம்
மறுபக்கம்
சந்தித்த வேளையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)