Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வனாந்திர ராஜா

 

(காட்டை அழித்துவிடக் கூடாது என்பதையும், மரங்களால்தான் மழை வருகிறது என்பதையும், மரங்கள் மனிதனுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் நிறையப் பயன் தர வல்லவை என்பதையும், இந்தக் கதை ரொம்ப சுவாரஸ்யமாய்ச் சொல்கிறது.)

ஒரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்!

ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!…. மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்!

“வாங்க பெரியவரே….” நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். “நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடியும் நீரு வர்ற ஆள் தானே? அதான்…. ம்… வெரசா வந்து சேரும்!”

ஆனால் மழை என்னை சட்டை பண்ணுகிறாப்போல இல்லை. புதுசா நார்த்தொப்பி ஒண்ணு நான் மாட்டிக்கிட்டிருந்தேன். மழை பெய்தால் அதோட கதி அதோகதிதான்!…. தாங்காது என்று நினைத்துக் கொண்டே வரும்போது, ஒரு வசமான பிர் மரத்தை நான் கவனித்தேன்!

நல்ல நிழலாய் மொத்த முழுமைக்கும் விரிந்து பரவியிருந்த மரம்! அதன் கொப்புகள் எல்லாம் கீழ்ப்பக்கமாகச் சரிந்திருநதன. பருவம் தாண்டிப்போன பிறகு, சூரிய வெளிச்சம் தேடி இப்போ கிளைகள் மேல்நோக்கித் தூக்க ஆரம்பித்திருந்தன. மெல்ல மெல்ல நன்றாய்க் கீழிறங்கி, பூமியைத் தொட்டு, அபபடியே கவிழ்ந்தாற்போல வேர்விட்டு பூமியை அவை பற்றிக் கொண்டிருந்தன!

சில கொப்புகளை ஒடித்து, பக்கத்து தடுப்பையெல்லாம் பலமாக்கிக் கொண்டேன். உள்ளே நுழைய வழியும் தோது பண்ணிக்கொண்டேன். சில கொப்புகளைத் தரையில் பரப்பி உள்ளே உட்காரவும் ஒழுங்கு பண்ணிக் கொண்டேன்! உள்ளேபோய் உட்கார்ந்து சாவகாசமாய் மழையுடன் என் பேச்சைத் தொடரலாமென்று பார்த்தால், அப்போதுதான் எனக்கு எதிர்த்த மாதிரி… மரம் ஒண்ணு… தீ பற்றிக் கொண்டதைக் கவனித்தேன். சட்டென்று ஒரு பெரிய கொப்பை ஒடித்து சின்னச் சின்னதாகச் சேர்த்து விளக்குமாறு மாதிரி கொத்தாய்ப் பிடித்துக்கொண்டு தீயில் அறைந்து அறைந்து அணைத்தேன்! மரத்தைச் சூழ்ந்துகொண்டு பட்டையை அது சுவைப்பதற்குள், உள்ளே ஓடும் கூழையே அது கரியாக்குமுன் நல்ல வேளை! நான் அதை அணைத்துது விட்டேன்!

அந்த மரத்தடியிலோ குப்பை செத்தை எரித்த அடையாளம் எதுவும் இல்லை! அது பசுக்கள் மேய்கிற இடமும் அல்ல!… ஆக இடையன்கள் கூமுட்டத்தனமாக தீயினைப் பற்றவைத்து விட்டாற் போலவும் தெரியவில்லை! ஊமைக்குசும்பு நிறைந்த என் சின்ன வயதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்!…. யாரோ சேட்டைக்காரப் பையன் மரம் வடித்த பிசினில் தீமூட்டி, எண்ணெய் பொங்கி அது பைத்தியம் மாதிரி உஸ்ஸென்று சிரிக்கிறதைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பான்!

அந்த வயதில் தீக்குச்சி கொளுத்திப் போட்டு மரத்தை எரிய விடுவது ரசமான விஷயந்தான்! பிசினை எரிய விடுகையில் அந்த படுவா ராஸ்கல் திடீரென்று என்னை கவனித்துவிட்டு, பக்கத்துப் புதருக்குள் எங்காவது பம்மிக் கொண்டிருக்க வேண்டும்! அதனால், நான் என்பாட்டுக்குப் போகிறாப்போல, விசில் அடிச்சிக்கிட்டே சும்மா முப்பதடி போய்விட்டு, திடீரென்று புதருக்குள் எட்டிப் பார்த்துவிட்டுத் தலையை இழுத்துக் கொண்டு…. ஒரு சுண்டெலி போல கச்சிப்பென்று காத்திருந்தேன்!

அந்த படுவா என்னை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கவில்லை! ஏழெட்டு வயசிருக்கும் அவனுக்கு! சூரிய வெளிச்சம் வாங்கி வாங்கி பழுப்பான தைரியமான கண்கள்! கச்சலான கச்சிதமான உடம்பு! டவுசர் மாத்திரம் மாட்டியிருந்தான்! புதருக்கு வெளியே வந்து நான் எட்டிப் பார்த்த பகுதியில் ஒரு விரோதமான பார்வையுடன் தேடினான் அவன்!

ஒரு பிர் மரக் கம்பைக் கையில் எடுத்து என் திசையில் அவன் சர்ர்ரென்று வீசியெறிந்தபோது, அவன் விசிறியடித்த வேகத்துக்குத் தானே ஒரு ரவுண்டடித்தான்! ஆனாலுங்கூட அந்த வனாந்திர ராஜா நிலை தடுமாறாமல் சமாளிச்சி நின்னான்! தன் டவுசர் பைக்குள் கைவிட்டபடியே அவன் மரத்தில் நெருப்பு பற்ற வைத்த இடத்தை நோட்டம் பார்த்தபடி சொன்னான் – “வெளிய வா ஜேனா! அந்தாளு போயாச்சி!”

அவனைவிட வயசில் கொஞ்சம் பெரியவளான நெட்டையான பெண் ஒருத்தி, பெரிய கூடையுடன் வெளியே வந்தாள்! “ஜேனா?” என்றான் அவன். “என்னாச்சி தெரியுதா?”

அமைதியான விசாலமான கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். “என்னாச்சி?” என்று மட்டும் கேட்டாள்.

“ஹா, ஹா… உனக்குத் தெரியல!” அவனுக்குச் சிரிப்பு! “அந்தாளுமட்டும் சரியான சமயத்தில் வந்து தீயை அமத்திருக்காட்டி…. முழு காடுமே குப்புனு பத்திக்கிட்டு எரிஞ்சிருக்கும்! பாத்திருக்கலாம்!”

“நீயொரு மடையன்!” என்றாள் ஜேனா.

“சரியாச் சொன்னே ஜேனா!” என்றேன் நான் வெளியே வந்தபடி! “இப்பிடியொரு காரியத்துக்குப் பெருமையடிச்சிக்கிற பைத்தியக்காரத்தனம்!…”. நான் சொல்லி முடிக்கு முன்னால் அந்த, யாருக்கும் அடங்காத பயல் எடுத்தான் ஓட்டம்! ஆனால் ஜேனா அவன் பின்னாலேயே ஓடிப்போக முயற்சி செய்யவில்லை. சிறிது அதிர்ந்தாற்போல புருவத்தை நெறித்து என்னை அவள் பார்த்தாள்.

எதையும் கவனித்து உள்வாங்கிக் கொள்ளக்கூடிய சின்னப்பெண்! விஷயத்தை விளக்கி அவளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவள் மூலமாக அந்த வனாந்திர ராஜாப்பயலைக் கையோடு பிடிக்கலாம் என நான் நினைத்தேன்! இதற்கிடையே எல்லா ஜீவராசிகளும் மழை மழை என்று ரொம்பவே தவிக்க ஆரம்பித்தாற் போலிருந்தது!

“ஜேனா?” நான் கூப்பிட்டேன். “பாத்தியா, ஒவ்வொரு குட்டி இலையும், புல் தாளும் எப்பிடி மழைக்காகக் காத்திட்டிருக்கு…. இந்தக் காட்டுக்கொடி கூட ஒரு கொம்பைக் சுத்திக்கிட்டு மேலே எட்டிப் பாத்து, தண்ணி குடிச்சிப் பாக்கத் தயாரா இருக்கு பார்!”

என் பேச்சு அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அவள் உற்சாகமாகிப் புன்னகத்தாள்.

“வாங்க பெரியய்யா!” நான் மழையிடம் சொன்னேன். “நாங்க ஏற்கனவே நொந்து நூலாயிட்டோம். சட்டு புட்டுனு இப்பவே வருவீங்க… ஆமாம்!”

ஆனால் இப்போ மழை சொன்னபடி கேட்டது! அந்தச் சின்னப் பெண் அட, என்கிறாப் போல என்னைப் பார்த்தாள்! எல்லாம் தமாஷ் போல இருந்தது…. ஆனால் மழை வருகிறதே!…. என்கிற மாதிரி அவள் உதடுகளில் ஆச்சரியம்!

“ஜேனா?” என்று நான் அவசரமாய்க் கூப்பிட்டேன். “அந்தப் பெரிய கூடையில் என்ன வெச்சிருக்கே?”

அவள் காட்டினாள். இரண்டு பெரிய நாய்க்குடைகள்! என் புதிய நார்த்தொப்பியை அதனுள் போட்டு இலை தழைகளால் மூடினோம். நான் தயார் பண்ணியிருந்த கூண்டுக்குள் நுழையுமுன்னால், இன்னும் கொஞ்சம் கிளைகளை முறித்து, நாங்கள் நனையாதபடிக்கு வசதி பண்ணிக் கொண்டு, உள்ளேபோய் உட்கார்ந்தோம்!

“வாஸ்யா?” அவள் கத்தினாள். “கிராக்குத்தனம் பண்ண வேண்டாம்! வெளிய வா!”

மழை துரத்திவிட்டதில், அந்த வனாந்திர ராஜா மேலும் தாமதிக்காமல் உடனே அங்கே வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டான்! என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவன் பேச ஆரம்பிக்கு முன்னால், ஒற்றை விரலை உயர்த்தி நான் அவனை எச்சரித்தேன்! பேசவே கூடாது!

நாங்கள் மூன்று பேரும் அசையாமல், சத்தமே போடாமல் அங்கே உட்கார்ந்திருந்தோம்! காட்டுக்குள், ஒரு பிர் மரத்தடியில், கதகதப்பான கோடை மழைக்காய் ஒதுங்கிக் கொள்ளும் அனுபவத்தின் ஜாலியை விளக்கிச் சொல்லவே முடியாது! கொண்டையுடன் காட்டுச் சேவல் ஒன்று அடர்ந்த மரத்தின் நடுப்பகுதிக்கு வந்து எங்கள் கூண்டுக்கு மேற்பக்கம் இறங்கியது! தொங்கும் ஒரு கிளைக்குக் கீழே பதுங்கிக் கொண்ட சிறு குருவியை நாங்கள் பார்த்தோம்! முள்ளம்பன்றி ஒன்றும் உள்ளே வந்து சேர்ந்து கொண்டது! முயல் ஒன்றின் புதுநடை!

மழை தொடர்ந்து கொட்டிக் கொண்டே, தனது ரகசியங்களை மரத்துக்குச் சொல்லிக் கொண்டே யிருந்தது!

நாங்கள் வெகுநேரம் மௌனமாக, ஆனந்தமாக உட்கார்ந்திருந்தோம்! காட்டின் நிஜமான ராஜாவாகிய மழை, எங்கள் ஒவ்வொருவரின் காதிலும் ரகசியங்களைக் கிசுகிசுத்தாற்போல இருந்தது!

- ருஷ்யச் சிறுகதை / மிகைய்ல் பிரிஷ்வின்; தமிழில்/ஞானவள்ளல் 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை நேரம். இனிமையான காதல் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே சென்றது பேருந்து. ஏதோ ஒரு நிறுத்தத்தில் அந்தப்பெண் ஏறினாள். அதுவரை காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே கனவில் மிதந்துகொண்டிருந்த ரஞ்சித்துக்கு அவள் தேவதையாய் தெரிந்தாள். அவனுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. சாதாரணமாக ஒரு பெண்ணை ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாவது ஆட்டம். கொட்டிக் கவிழ்த்து நெல்லிக்காய்கள் போல கூட்டம் கொலேரென்று சிதறி பிரிந்தது. நேற்று வெளியான படம் நான்காட்டத்தோடு கடைசி என்பதால் பார்க்க வேண்டிய நிலை. நண்பன் நடித்தான் என்பதற்காக கஷ்டம். சாந்தியிலிருந்து மாம்பலம் போகவேண்டும். ஆட்டோவைப் பார்த்தான் சேகர். இரண்டு மூன்று நின்றதில் கிடைத்தவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன். தலைக்குப் பின்புறம் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த ஏர் கூலர், மின்சாரம் தடைப்பட்டு நின்றிருக்கிறது. காரை பெயர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த விட்டத்தை சில ...
மேலும் கதையை படிக்க...
எதிரே நின்றான் அந்த முஸல்மான் பக்கிரி. தலையில் பச்சை கிர்க்கி முண்டாசு. உடலில் கறுப்பு அங்கி. இடுப்பில் கைலி. இடது கையில் ஒரு யாழ்ப்பாணத்து கப்பறை. வலது கையில் ஒரு துணி மூடிய கூண்டு. அதன்மீது அநேக கண்ணாடி மணிகள் போடப்பட்டிருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா... மேரி கணவனை இழந்த நிலையிலும் தன்னபிக்கையுடன் அவளின் குழந்தை திவ்யாவை நன்றாக வளர்க்க விரும்பினால் அதைப் போன்றே திவ்யாவை வளர்த்தும் வந்தால்.. திவ்யா பள்ளிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அழகான ராட்சஸி
கடவுள் பாதி மிருகம் பாதி…
வழிப்போக்கன்
வானம்பாடி
அகழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)