நொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை

 

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயும் காலப்பொழுது. பள்ளி காலங்களில் இருந்தே ஞாயிற்றுக் கிழமை மாலைப் பொழுதுகள் பிடிப்பதே இல்லை. படிக்கும் காலத்திலாவது முடிக்க வேண்டிய வீட்டுப் பாடங்கள் எரிச்சலூட்டின. ஆனால் அது வேலைக்குப் போகும் இன்றைய நாட்களிலும் தொடர்வது ஆச்சர்யமே. அதிலும் நொய்டா போன்ற வட இந்திய நகரத்தில், டிசம்பர் மாத மாலை ஒருவித இனம்புரியா பயத்தையே என்னுள் நிரப்பிச் செல்கின்றது. அன்றும் அப்படித்தான் மாலை 5 மணி ஆகியிருக்கும். ஆனால் வெளியில் ஆறரை மணி போன்று இருட்டிவிட்டிருந்தது. இருள் மெல்ல பொழிந்து வெளியெங்கும் நிரம்பிக் கொண்டிருந்தது.

இத்தகைய மாலைப் பொழுதுகளில் அடர்ந்து நிற்கும் தனிமையைத் தவிர்க்க அறை நண்பர்களுடன் வெளியே சென்று ஒரு டீ குடிப்பது வழக்கமாக்கிக் கொண்டிந்தோம். அன்றும் கூடுதலாக அருணுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் சாஜூவும் சேர்ந்து கொண்டார். அவர் எங்களை விட வயதில் மூத்தவர். மலையாளி. அதை பறைசாற்றுவது போல அடர்த்தியான மீசை அவருக்கு. எப்பொழுதும் வெகுளியாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். அவரது மலையாளம் கலந்த உச்சரிப்பு தேன்பாகாகும். குளிரைக் காரணம் காட்டி மது அருந்த அடிக்கடி எங்கள் அறைக்குத்தான் வருவார். பாவம் மனைவிக்குப் பயந்த மற்றுமொரு ஜீவன் என்பதால் நாங்கள் கண்டு கொள்ள அதை பெரிது படுத்த மாட்டோம்.

நாங்கள் நால்வரும் மெதுவாக நடந்து அந்த கடைக்குச் சென்றோம். குளிர் காதைத் துளைத்தது. எப்போதும் நாங்கள் செல்லும் கடைதான். கடை என்றதும் நம் தமிழ் நாட்டிலிருக்கும் பாய்லர் டீக்கடைகளையும், டீக்கடை பெஞ்சுகளையும் நினைத்துக் கொள்ள வேண்டாம். இரு சாலையை பிரிப்பதற்கு நடுவில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிமெண்ட் திண்டின் மீது ஒரு கூரை. அதற்கு கீழ் ஒரு கெரசின் அடுப்பு. அதன் மேல் நமது திருமணங்களில் தண்ணீர் ஊற்றப் பயன்படுத்துவார்களே ஒரு பெரிய கமண்டலம் போன்ற பாத்திரம். அதில்தான் டீ தயாராகிக் கொண்டிருக்கும். அதைச் சுற்றி கண்ணாடிப் பாட்டில்களில் பிஸ்க்ட்டுகள், வருக்கிகள் மற்றும் அது போன்ற சில திண்பண்டங்கள் அடைக்கப் பட்டிருக்கும். அதற்கு மேலே கட்டப்பட்ட சிறிய கயிறு ஒன்றில் தேள் படமிட்ட குட்கா பாக்கெட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் இஞ்சி குறைவாக, மிதமான காரத்துடன் ஒரு நல்ல டீ கிடைக்கும். ஆனால் அதிர்ஷ்டம் என்பது அவ்வப்போதுதானே வரும். என்ன செய்வது.

அந்தக் கடையில் எப்போதும் ஒரு பாட்டி இருப்பாள். அவளிடம் எப்போதும் ஒருவித வெறுப்பு நிரம்பியிருக்கும். ஏதோ ஒ.சி.யில் டீ குடிப்பது போன்ற ஒரு பார்வையை வீசுவாள். அதையும் தாங்கிக் கொண்டுதான் ஒரு டீ குடிக்க வேண்டும். ஆனால் அன்று அந்த பாட்டி அங்கு இல்லை. ஒரு சிறு பெண் இருந்தாள். அவளின் பேத்தியாக இருக்க வேண்டும். இதற்கு முன் அவளை நான் அங்கு பார்த்ததில்லை. குளிர்காலத்திற்கு ஏற்ற எந்தவித ஒரு குளிர் தாங்கும் உடையும் அவள் அணிந்திருக்கவில்லை. ஒரு வேளை அந்த அடுப்பின் வெம்மையே குளிருக்கு ஏற்றதாக இருந்திருக்கக் கூடும்.

அவளிடம் சென்று நான்கு சாயி சொல்லிவிட்டு அந்த திண்டில் அமர்ந்தோம். வழக்கம் போல சாஜூவே பேச்சை ஆரம்பித்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர் நிறுத்தியிருக்கவே இல்லை. அவர் சவுதியில் ஜிடாவில் தங்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். மெதினாவிற்கு வருபவர்கள் பொதுவாக ஜிடாவில் தங்குவதே வழக்கம் என்றும் அவர் தங்கிய நாள் ஒன்றில் வரலாறு காணாத மழை அந்தப் பாலைவன நாட்டில் பொழிந்தது என்றும் ஆர்வமாக பேசிக் கொண்டே போனார்.

எனக்கு மறுநாள் செய்ய வேண்டிய வேலைகள் மனதில் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அந்தச் சிறுவன் வந்தான். அந்த பெண் அருகே வந்து எதையோ கேட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் பிரி.கே.ஜி படிக்கும் எனது அக்கா மகன் நினைவே வந்தது. அதே போன்ற ஒரு சுறுசுறுப்பு. ஒரு நிமிடத்திற்குள் பத்து தடவை அந்த திண்டின் மீது ஏறி இறங்கி கொண்டிருந்தான். ஏழ்மையிலும் அந்த முகத்தில் இருக்கும் ஒரு பொழிவு என்னை அவனை நோக்கி இழுத்தது. ஒரு நாய்க்குட்டி அதன் சொந்தக்காரரின் காலையேச் சுற்றிவருமே அதைப் போல அவன் அந்த இடத்தை சுற்றி வருவதும் அந்த பெண்ணிடம் ஏதோ ஒன்றை கேட்பதுமாக இருந்தான். அவள் அவனை அரற்றிக் கொண்டிருந்தாள்.

அவள் டீயை பேப்பர் கப்புகளில் ஊற்றிக் கொண்டிருந்த அந்த நொடியில் அவன் விறுவிறுவென்று பாட்டிலின் மூடியைக் கழற்றி ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கொண்டு எட்டி நின்று தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு சுயேட்சை வேட்பாளர் போன்ற ஒரு புன்னகை புரிந்தான். அதற்கு அந்த பெண் அருகில் இருந்த ஒரு சிறு கல்லை கோபத்தில் எறிந்தாள். அதிலிருந்து தப்பித்துவிட்டு அவளிடம் பழிப்பு காட்டிக் கொண்டிருந்தான்.

அன்று அதிர்ஷ்டம் எங்கள் பக்கமிருந்தது. டீயை குடித்துக் கொண்டிருந்தோம். சுடச்சுட ஆவி பறக்கும் டீ தொண்டையில் இறங்குவது குளிருக்கு இதமாக இருந்தது. சாஜூ சவுதியிலிருந்து இறங்கி கோட்டயத்திற்கு வந்திருந்தார். டீ பாதி காலியாகியிருந்தது. அப்போது மீண்டும் அந்தச் சிறுவன் அங்கு சுற்ற ஆரம்பித்திருந்தான். இந்த முறை மீண்டும் அவன் பிஸ்கட்டுகள் இரண்டை எடுத்திருக்கும் போது அவள் அவனை வசமாக பிடித்துவிட்டாள். எதிர்பார்த்திராத பொழுது சப்பென்று முதுகில் ஒரு அடி அடித்தாள். எனக்கு முதுகு சுர்ரென்று வலித்தது அப்படி ஒரு அடி.

அடி வாங்கிய வலியில், அதிர்ச்சியில் அவன் அந்த பிஸ்கட்டுகளை பாட்டிலிலேயே போட்டுவிட்டான். அந்த அடிச் சத்தத்தில் எல்லோருடைய கவனமும் அவர்கள் இருவரின் மீதும் குவிந்தது. அந்தச் சிறுவன் அதை உணர்ந்தவன் போல் தனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அந்த திண்டிற்கு கீழ் குத்துக்காலிட்டு உட்கார்ந்துவிட்டான். நேற்று பூத்த ரோஜா போல் அவன் முகம் சுருங்கிவிட்டிருந்தது.

திடீரென்று அந்தப் பெண் சிறுவனை அழைத்தாள். முதுகை மெதுவாக தடவியவாறு பிஸ்கட் பாட்டிலைத் திறந்து பிஸ்கட் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். அவன் இரண்டு வேண்டுமென்றான். அவள் முறைத்தவாறு இன்னொன்றை எடுத்துக் கொடுத்தாள். அவன் அதைப் பெற்றுக் கொண்டு நெருக்கமாக ஒரு பிறை நிலா புன்னகை புரிந்தான். பின்பு அங்கிருந்து மறுபடியும் துள்ளி குதித்து ஓடினான். எனக்கு மனது நிறைவாக இருந்தது. ஏதோ பிஸ்கட்டை நானே வாங்கியது போல.

பணத்தைக் கொடுத்துவிட்டு நாங்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அந்த மாலைப் பொழுது அழகாக தெரிந்தது. அப்போது சாஜூ என் தோளைத் தட்டிவிட்டு ஏதோ ஒன்றை காட்டினார். அவர் காட்டிய திசையில் மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் ஆளுக்கு ஒரு பிஸ்கட் இருந்தது. மற்றொரு பக்கம் அந்தச் சிறுவன் அதே சுறுசுறுப்பில் ஓடிக் கொண்டிருந்தான் வெறும் கையுடன்.

- டிசம்பர் 17, 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும் வந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் சரட் சரட்டென்று பேருக்கு கோலமென்று ஒன்றை இழுத்துவிட்டு, என்னை எழுப்ப வந்துவிடுவாள். பெரும்பாலும் நான்கு ...
மேலும் கதையை படிக்க...
மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே மழையை ரசிக்க மட்டுமே பிடிக்கும், நனையப் பிடிப்பதில்லை. மழைக்கு முந்திய குளிர்ந்த தென்றலும், மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசமும், ...
மேலும் கதையை படிக்க...
கடிதம் - 1: அன்பின் ஷிவ், நலம். நலமறிய அவா என்றெல்லாம் தொடங்குவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிகாலையில் உன்னுடன் அவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்போது கடித இலக்கணம் கருதி 'நலமா' என்று ஆரம்பித்தால் அது நகைப்புக்குரியதாகத் தான் இருக்கும். உன்னைப் போலவோ உனக்குப் ...
மேலும் கதையை படிக்க...
” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” – இதுதான் லிண்டா என்று அழைக்கப்படும் லிண்டா தாமஸ் அலுவலக விஷயம் தாண்டி என்னிடம் கேட்ட முதல் கேள்வி. பேசிய முதல் விஷயம். பெரும்பான்மையான நாட்கள் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்வார். 17 ...
மேலும் கதையை படிக்க...
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா ! உன்பாதம் சேரேனோ ! - அழுகுணிச் சித்தர். ஒரு கனிந்த பஞ்சவர்ண மாம்பழத்தின் தோலைப் போன்றிருந்தன அதன் உடலிலிருந்த ...
மேலும் கதையை படிக்க...
விசுவாசம்
மழை
ஒரு காதல், மூன்று கடிதங்கள்
லிண்டா தாமஸ்
நிழல் தேடும் ஆண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW