ஜவஹர் எனும் நேரு

 

(இதற்கு முந்தைய ‘பெயர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

‘ஐயோ அம்மா” என்று ஜவஹர் போடுகிற கூச்சலும் காதைப் பிளக்கும். அந்த நிமிடம் உயிரே போகப்போகிற மாதிரிதான் இருக்கும் அவன் போடுகிற கூச்சல்.

ஆனால் ஜவஹரின் எல்லா கூச்சலும் அந்த ஒரு நாளைக்குத்தான். மறுநாள் அவனைப் பார்த்தால் அத்தனை அடி உதை வாங்கிய அடையாளம் அவனுடைய முகத்தில் கொஞ்சம்கூடத் தெரியாது. மனசு நிறைந்த ஒரு சிரிப்புதான் அவன் முகத்தில் பொங்கி வடிந்து கொண்டிருக்கும். நல்ல பையனாக பள்ளிக்கூடம் போய்வந்து கொண்டிருப்பான். எல்லாம் ரொம்ப நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும்.

மறுபடியும் என் மாமா வீட்டில் யாராவது பீரோ சாவியை மறந்துபோய் எங்கேயாவது வைத்து விடுவார்கள். சாவியும் சரியாக ஜவஹரின் கண்ணில் பட்டு வைக்கும். பணமும் ஜவஹரும் இரட்டைப் பிள்ளைகளாக சேர்ந்து அடுத்த நிமிஷம் காணாமல் போய்விடுவார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் என் மாமா. ஜவஹர் பணத்தோடு காணாமல் போகிற பழக்கத்தை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்கு வீட்டில் நடந்த்துகிற ‘மண்டகப்படி’ எல்லாம் பத்தவே பத்தாது என்பது மாமாவுக்குத் தெரிந்துவிட்டது. ஒருநாள் திடீரென போலீஸ் ஆட்களிடம் சொல்லி ஜவஹருக்கு கொஞ்சம் ‘தர்ம அடி’ கொடுக்கச் சொன்னால்தான் சரிப்பட்டு வருவான் என்கிற முடிவுக்கு மாமா வந்தார்.

மறுபடியும் ஜவஹர் என்றைக்குப் பணத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுவான் என்கிற மாதிரி என் மாமா மூக்கில் வியர்த்தபடி காத்துக் கொண்டிருந்தார். அவரை ரொம்பநாள் காக்க வைக்காமல் அந்த நாளும் வந்து சேர்ந்தது. பாக்கெட் நிறைய கிடைத்த பணத்துடன் ஜவஹர் சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் போய் இறங்கினான்.

இங்கே பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஜவஹரின் மேல் திருட்டுப் புகார் எழுதிக் கொடுக்க என் மாமா அவருடைய சைக்கிளில் போய் இறங்கினார். புகாரையும் விபரமாக எழுதிக் கொடுத்துவிட்டார். புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டால் போதும், மிச்சத்தை போலீஸ்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று என் மாமா ரொம்ப அப்பாவியாக நினைத்து விட்டார். ‘மிச்சத்தை’ போலீஸ்காரர்கள் பார்ப்பதற்கு முன் அவர்களை எவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டாக வேண்டுமென்பது என் மாமாவுக்கு பாவம் அப்போதுதான் தெரிந்தது.

முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் இருந்து போலீஸ்காரர்களுக்கு வேளா வேளைக்கு பரோட்டா சமாச்சாரங்களைப் பார்ஸல் கட்டி வாங்கி வாங்கி ஆள் மூலம் பாளை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் ‘டோர்’ டெலிவரி பண்ண வேண்டி இருந்தது! இதில் வாங்கிக் கொடுத்ததை வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிற பழக்கமும் போலீஸ் ஆசாமிகளுக்குக் கிடையாது. ஒரு போலீஸ்காரர் முட்டை பரோட்டா கேட்பார். இன்னொரு போலீஸ்காரர் சிலோன் பரோட்டா கேட்பார்.

ஒரு போலீஸ்காரர் பரோட்டாவுக்கு சாதாரண சால்னா கேட்டால், மற்றொரு போலீஸ்காரர் அதே பரோட்டாவுக்கு கோழி சாப்ஸ் கேட்பார். இதைத் தவிர ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தனியாக சிக்கன் பிரியாணியும் அதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் சிக்ஸ்டிபைவ் என்பார். இப்படி போலீஸ்காரர்கள் ஒவ்வொருத்தரும் ஆள் ஆளுக்கு கேட்ட வித விதமான நான்வெஜ் அயிட்டங்களை சப்ளை செய்து செய்து என் மாமாவுக்கு கையும் காலும் ஓய்ந்துவிட்டது. அவரின் கை காலுக்குத் தெம்பு கொடுப்பதற்கே முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் அவரும் அவ்வப்போது கொத்துப் பரோட்டா இரண்டு பிளேட்கள் சாப்பிட வேண்டி இருந்தது. எல்லாம் இந்த ஜவஹர்ப் பயலால் வந்த வினை.

இதில் ஒரு வேடிக்கை, இங்கே போலீஸ்காரர்கள் எல்லாம் மாற்றி மாற்றி பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் என் மாமா மகன் ஜவஹர் சென்னை அண்ணா சாலையில் இருந்த புஹாரி ஹோட்டலில் கொத்துப் பரோட்டாவை ரொம்ப ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

வழக்கம் போல கொஞ்ச நாளில் ஜவஹரின் பாக்கெட்டில் இருந்த பணம் எல்லாம் காலியாகிவிட்டது. வழக்கம்போல அவனும் திம்மராஜபுரம் திரும்பி வழக்கம்போல ஊர் எல்லையில் நின்று கொண்டிருந்தான். அதன்பின் நடந்தது எல்லாம் வழக்கத்திற்கு மாறானது. தினமும் பரோட்டா கொத்துக்கறி சாப்பிட்டு தெம்பாக இருந்த பாளை போலீஸ்காரர்களின் கண்ணில் ஜவஹர் பட்டுவிட்டான். அவ்வளவுதான், போலீஸ்காரர்கள் அவனை அலாக்காகத் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்கள். ஸ்டேஷனில் அவனைப் பின்னி எடுத்துவிட்டார்கள். “எந்தக் கிறுக்கண்டா உனக்கு ஜவஹர்ன்னு பேரு வச்சான்” என்று கேட்டுக் கேட்டு அவனை அவர்கள் பெண்டை நிமித்தி சுளுக்கு எடுத்துவிட்டார்கள்.

கண்மூடித்தனமாக அவர்கள் அடித்த அடியில் ஜவஹரின் ஒரு பக்கக் காலில் ஒரு எலும்பையே காணோம் என்றும் கேள்வி. நான்கு நாட்களுக்கு உள்ளே வைத்திருந்து எவ்வளவு தர்ம அடி கொடுக்கணுமோ அவ்வளவு தர்ம அடி கொடுத்து ஜவஹரின் காதை முறுக்கி “இனிமேயாவது ஒழுங்கா இரு…” என்று ஒரு மிரட்டல் மிரட்டி அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் மிகப் பெரிய சோகம் என்னவெனில், போலீஸ் ஸ்டேஷனைவிட்டு வெளியில் வந்த ஜவஹர் வீட்டுக்கு வரவில்லை. அப்படியே கிளம்பி எங்கேயோ தலைமறைவாகப் போய்விட்டான். எங்கே போனான் என்று யாருக்குமே தெரியவில்லை. ஜவஹர் கண் காணாமல் போய்விட்டான். அதன்பின் அவன் திரும்பியே வரவில்லை. அவனைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை.

என் மாமாவின் குடும்பம் கதி கலங்கிப் போய்விட்டது. ‘அவனுக்கு மனிதர் குல மாணிக்கத்தின் பெயரை வைத்தேனே; இப்படி ஆகிவிட்டதே’ என்று என் மாமா கிடந்து தினமும் புலம்பினார். அது தவிர கோயில் கோயிலாகப் போய் அழுதார். எந்தச் சாமியும் மாமாவின் அழுகையை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. ஜவஹரும் திரும்பியே வரவில்லை.

திம்மராஜபுரத்தில் ஒரு காலத்தில் இருந்த எண்ணற்ற நேருக்களில், இது ஒரு நேருவின் கதை. உதாரணத்திற்கு ஒரே ஒரு நேருவின் இந்தக் கதை நமக்குப் போதும்.

இனி ஒரு மோகன்தாஸ் காந்தியின் கதை… இது இன்னும் கொஞ்சம் மோசமான கதை. தேசப்பிதா காந்திஜியின் பெயருக்கே மோசமான களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமான கதை. இப்படிப்பட்ட மோசமான ஒரு கதையைச் சொல்ல வேண்டுமா என்று கூட எனக்கு ஒரு நேரம் தோன்றியது. சொல்லக் கூடாத கதைகளைத்தான் முதலில் சொல்லியாக வேண்டும் என்றும் ஒருபக்கம் தோன்றியது. அதனால் சொல்லிவிடலாம் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன்.

நான் சொல்ல வந்திருக்கும் எங்கள் ஊர் காந்தியின் கதையைச் சொல்வதற்கு முன், முதலில் அந்தக் காந்தியின் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிட்டால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனவே அவருடைய கதைதான் முன்கதை… 

தொடர்புடைய சிறுகதைகள்
தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும். வாசலில் நிழலாடவே ஐயர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு இளைஞன் அவரிடம், “சார் என் பெயர் நரசிம்மன். ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சமையல் அறை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எழுத்தாளர் லக்ஷ்மியின் படைப்பான ‘நாயக்கர் மக்களை’ ஏற்றுக்கொண்ட மதுரம் சித்தி, அகிலனின் ‘பாவை விளக்கு’ நாவலை ஏற்கவில்லை. அந்த நாவலில் படரவிடப் பட்டிருந்த பொய்மை, உண்மையில் ஒரு மானசீகக் கசடு ...
மேலும் கதையை படிக்க...
தற்போதைய உலகில் நாம் நேர்மையாக இருப்பதைவிட, சமர்த்து சாமர்த்தியமாக இருக்க வேண்டியிருக்கிறது. நம்மைச் சுற்றி பொய்யர்கள் அதிகமாகி விட்டார்கள். நாமும் அவர்களிடம் பொய் சொன்னால் தப்பில்லை. பொய்யர்களிடம் பொய் சொன்னால் அது நல்ல விஷயம்தான். அந்தகக் கவி வீரராகவ முதலியார் பிரபலமான பெரும் ...
மேலும் கதையை படிக்க...
ஜெயராமனுக்கு வயது இருபத்தி ஐந்து. பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மார்க்குகள் வாங்கியவன். ஊர் குற்றாலத்திற்கு அருகிலுள்ள இலஞ்சி. அவன் வேலை நிமித்தம் சென்னை வந்ததும், அவன் நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான். தனி அறை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘காந்திமதியின் சீற்றம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) பத்துமணி ஆனதும் கிளம்பலாம் என்ற எண்ணத்தில் ஜன்னல் வழியாக தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார். பஞ்சாயத்துக் கூட்டம் பத்துமணிக்கு என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்பது மணிக்கே அரச மரத்தின் கீழ் கூட்டம் ...
மேலும் கதையை படிக்க...
ஐயர் தாதா
பிள்ளையார் சுழி
பொய்யர்களிடம் பொய்
ஆரம்பக் காதல்
சபரிநாதனின் கொக்கரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW