ஒரு றெயில் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 4,220 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது.

கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில், மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து ஏதேதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். காற்சட்டை போட்ட உத்தியோகம் பார்க்கும் மனிதர்களும், சாரம் அணிந்த சாதாரண தொழிலாளர்களும், கோவணம் தரித்த மீனவரும், பெண்களும், கிழவர்களும், இளைஞரும், குமரிகளும், கிழவிகளும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக, திட்டுத்திட்டாக அமர்ந்திருந்து ஏதேதோ அளவளாவினார்கள். மனிதர்கள் பிறந்த நாள் தொடக்கமே கதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆதாமும், ஏவாளும் கூடக் கதைத்திருப்பார்கள். இவர்கள்ளுக்கு எப்போதுதான் இக்கதை முடியுமோவென நான் எண்ணினேன்,

அவர்களில் பலர் சிரிப்பது போலவும், சிலர் உற்சாகமாகச் சத்தமிட்டுக் கதைப்பது போலவும், சிலர் நோயால் வருந்தி முனங்குவது போலவும், சிலர் அழுவது போலவும் எனக்குத் தெரிந்தது. ஆக இந்த மனித சமுதாயத்தின் பல் வேறு விதமான பல்வேறு தரப்பட்ட பிரதிநிதிகளும் அங்கு காட்சி தந்தார்கள்.

றெயில் நெடுமூச்சு விட்டவாறே விரைந்தது. ஏதோ வோர் ஸ்ரேசன் நெருங்கி விட்டதற்கு சமிக்ஞை தருவதைப் போல, கீச்சிடும் குரலெடுத்துக் கூவியது. இறுதியில், ஒரு முக்கல், முனங்கல், குலுங்கலுடன் ஒரு ஸ்ரேசனில் நின்றது. வெளியே மேய்ந்து கொண்டிருந்த என் கண்களை திடீரென உள்ளே திருப்பினேன். ஒரு நடுத்தர வயது மனிதரும், வயது இருபது மதிக்கத்தக்க, கண்டவரை மயக்க வல்ல ஒரு வித கவர்ச்சி கொண்ட இளம் சிவப்புநிறச் சேலையணிந்த ஒரு பெண்ணும் என்னுடன் மோதுவதுபோல, வாசல் கதவில் பிடித்து இறங்கிச் சென்றார்கள். வேறும் பலர் அக்கொம்பாட்மென்டிலிருந்து இறங்கினார்கள். என் மனம் அப்பெண்ணிலேயே இலயித்து விட்டது. அவளும், அம்மனிதரும் பிளாட்போமில் தெரிந்த மனிதத் தலைகளுடன் தலைகளாய் வேகமாக தெற்கே சென்று மறைந்தார்கள்.

நான் அவளின் நினைவில் மயங்கிக் கிடந்தேன். வெறுமே என் கண்கள் பிளாட்போமை நோக்கிக் கொண்டிருந்தன. பிளாட்போமில் கேட்ட வடை…. வடை , சோடாச் சத்தங் கள். மெதுவாக என் நினைவுத் திரையில் தட்டின.

புறப்படுவதற்கு ஆயத்தமாக றெயில் கூவியது. வெளியே எட்டிப்பார்த்தேன். றெயிலின் வட அந்தத்திலிருந்த பெட்டியிலிருந்து காட் பச்சைக் கொடியைக் காட்டினார். றெயில் ஒரு குலுக்கலுடன் மெதுவாக ஊர்ந்து புறப்படத் தொடங்கியது. அந்தப் பெண் பிளாட்போமில் எங்காவது தென்படுவாளாவென என்மனம் ஏங்கியது. மெதுவாக ஊர்ந்த றெயில் படிப்படியாக தன் துரிதகதியை எட்டிக்கொண்டிருந்தது. பிளாட்போம் மறைந்தது. தூரத்தில் ஸ்ரேசன் என் கண்களிலிருந்து மறையும் வரையும் நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சுடன் தலையை உள்ளே திருப்பினேன். றெயிலில் கூட்டம் குறைந்திருந்தது. என்னைத் தவிர மற்றவர்கள் யாபேரும் ஆசனத்தில் அமர்ந் திருந்தார்கள். எனக்கும் ஆசனம் கிடைக்குமோ எனத் தடவினேன்.

இருஜோடிக்கண்கள் குறுகுறுவென என்னையே உற்றுப் பார்ப்பதைக் கண்ட நான் துணுக்குற்றேன். திடீரென நான் தன்னைப் பார்ப்பதைக் கண்ட அவள் முகம் சிவக்கக் கீழே குனிந்தாள். அவளின் முகம் நிலாவட்டமாக என் மனதில் பதிந்தது. எலுமிச்சம் பழத்திலும் சிறிது மங்கிய நிறம் கொண்டவளாக அவள் இருந்தாள். மெல்லிய கோடுகளாக அவள் நெற்றியில் விபூதி அணிந்திருந்தாள். நெற்றியின் மையத்தில் சின்னஞ்சிறிய ஒரு கறுப்புப் பொட்டு இட்டிருந்தாள். தலையை நேர்வகிடாய் பிரித்துப் பின்னி, சிவப்பு றிபன் கட்டியிருந்தாள். வெள்ளை நிற அரைப்பாவாடையும், வெள்ளையில் பச்சைப் பூப்போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். வாழைத்தண்டு போன்ற அவள் கைகளில் இரு புத்தகங்களையும். ஒரு கொப்பியையும் ஏந்தியிருந்தாள். மேலேயிருந்த புத்தகத்தின் பெயரை வாசிக்க முயன்றேன். ‘பாரதியும் ஷெல்லியும்’ என்றிருந்தது. ஓர் இலக்கிய இராசிகை போலுமென்று எண்ணிக் கொண்டேன். என் கண்கள் அவளை விட்டகல மறுத்தன.

மீண்டும் தலையைத் தூக்கி என்னைப் பார்த்த அவள். நான் தன்னையே பார்ப்பதைக் கண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

நான் புன்முறுவலுடன் தலையை வெளியே திருப்பிக் கொண்டேன். என் மன இயல்பை எண்ணி வியந்தேன். சற்று தேரத்தின் முன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளில் மயங்கி, அவளை இன்னோர் முறை பார்க்க மாட்டேனோ என்று தவித்த நானா, இப்போது இப்பெண்ணைப் பார்த்து, இவள் அழகை அணுவணுவாக இரசித்து, இவளையே பார்க்க வேண்டும் போலத் தவித்துக் கொண்டிருக்கிறேன்?

என் மனம் அவளைப் பார்க்குமாறு தூண்டியது.

என் மனதின் இப்போக்கை எப்படியும் அடக்குவதென்று தீர்மானித்தேன், மனதை அவளின் நினைப்புக்களில் இலயிக்க விடாமல் வலிந்து திருப்ப முயன்றேன்.

மாலை நேரத்து இளம் வெயில் காய்ந்து கொண்டிருந் தது. கடல் நீர் வெயிலில் பளபளத்தது. வெண்ணிற அலைகளில் பட்ட வெயில் என் முகத்திற்கு நேரே பிரதிபலித்துக் கொண்டிருந்தது. தூரத்தே அடிவானத்திற்கு இப்பால் மங்கலாய், சிறிய புள்ளியாய் ஒரு கப்பல் விரைந்து கொண்டிருப்பது தெரிந்தது. கரைக்கு அண்மையில் வடமேல் பக்கத்தில் பாய் விரித்த படகொன்று காற்றின் போக்கிற்கு அமைய அசைந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு மனிதர்கள் இருப்பதுபோல மங்கலாக இரு புள்ளிகள் தெரிந்தன. ஆணும் பெண்ணுமாக இரு தம்பதிகள். புகையிரத வீதியோரத்தில் ரெயிலையே பார்த்தவாறு நின்றனர். அவர்கள்ளுக்கிடையே நின்ற மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன். ரெயிலைப் பார்த்து, கெக்கட்டமிட்டுச் சிரித்த வண்ணம் கையைக் காட்டினான்.

றெயில் ஒரு குலுக்கலுடன் அடுத்த ஸ்ரேசனில் நின்றது. என்னையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அவள் ஒரு புன்னகை பூத்தவண்ணம், அப்பாலே திரும்பி வானத்தைப் பார்த்தாள்.

எனக்குச் சிரிப்பு வந்தது. அதை வலிந்து அடக்கிக் கொண்டு நான் இருப்பதற்காக ஓரிடத்தைத் தேடினேன். அவளுடன் எப்படியாவது பேசித்தான் தீருவது என்று சங்கல்பம் பூண்டுகொண்டேன்.

நல்ல வேளையாக அவளின் அருகிலேயே, அவளை ஒட்டினாற்போல, ஒரு ஆள் இருக்கத்தக்க இடம் காலியாக இருந்தது. அவள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தயங்கியவாறு சென்று அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.

அவள் அலட்சியமாக திரும்பி என்னைப் பார்த்தாள்! இதை அவள் எதிர்பார்த்திருந்தவள் போலத்தென்பட்டாள். அவள் கண்கள் ஒருவித கிறங்கவைக்கிற அழகைத் தந்து மின்னின. அவளுடன் எனது உடல் உராஞ்சுவதைப்பொறுக்காதவள் போல மெல்ல நெளிந்து கொண்டாள். என்னுடன் ஏதேதோ பேசத் தவிப்பவள் போல அவள் காணப்பட்டாள்.

வண்டி ஒரு குலுக்கலுடன் மீண்டும் புறப்பட்டது. அவள் என்னை அலட்சியம் செய்பவள்போல பழைய படியே ஜன்னலூடாக அப்பாலே தெரிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் ஒரு பெருமூச்சுடன் என் கண்களை வண்டியினுள்ளே உலாவவிட்டேன். என் பெருமூச்சினால் தன் கவனம் கலைந்தவளைப்போல அவள் என்னைத் திரும்பிப்பார்த்தாள். நான் அவள் பார்ப்பதைக் கவனியாதவன் மாதிரி வண்டிக்குள்ளே எதையோ வெறித்துப்பார்ப்பதாக பாசாங்கு செய்தேன். அவள் என்னை தலையில் இருந்து உள்ளங்கால் வரை அவதானிப்பதை நான் என் ஓரக் கண்களால் கண்டும் காணாதவன் போலிருந்தேன்.

குழந்தையொன்று அவலக்குரலெழுப்பி அழுதது. எனக்கு முன்னிருந்த சீற்றில் இருந்த அந்த இளம் தாய். அதை மார்போடு அணைத்து தூங்கவைக்க முயன்றாள். அவளின் அணைப்பின் இதத்தில் சுகங்கண்ட குழந்தையின் அழுகை ஓய நான் அப்பால் என் கவனத்தைச் சற்றுத் திருப்பினேன். வண்டியில் கூட்டம் கூடியிருந்தது. கடந்த ஸ்ரேசனில் இரண்டு மூன்று பேர்கள் வண்டியில் புதிதாக ஏறியிருப்பார்களென எண்ணினேன். நான் நின்ற இடத்தில் ஒரு வாலிபன் நின்று கொண்டு ஏதேதோ கதைகளில் மூழ்கியிருந்தான். அப்பால் ஒரு மீனவன் தன் வெறுமையான கூடையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தான் சுவீப் ரிக்கெற் விற்கும் பையன் ஒருவன் தன் சுவீப்ரிக்கற்றுக்கள் கொண்ட பலகையை கையில் பிடித்த வண்ணம் கடற்கரையை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான். அவனுக்கு அப்பால் இருந்த ஓர் தாடிக்காரக் கிழவன் என்னையும், அவளையும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி ஒரு நவீன சினிமாப் பாடலைப் பாடிய வண்ணம் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள், எனக்கும் அவளுக்கும் முன்னால் வந்து நின்று கொண்டு அந்தப் பாட்டைப் பாடி கையை நீட்டினாள்.

நான் எனது காற்சட்டைப் பையில் கையை விட்டு துழாவினேன். ஒரு ஐம்பது சதக்குத்தி தவிர வேறொன்றும் கையில் தட்டுப்படவில்லை. அவள் தனக்குப் பக்கத்தில் இருந்த கறுப்பு நிறக்கைப்பையை எடுத்து நாசூக்காகத் திறந்து ஒரு பத்துச்சதக்குத்தியை எடுத்து பிச்சைக்காரியின் கையில் போட்டாள். அவள் அந்தக் கைப்பையை வைத்திருந்ததை நான் இதுவரையில் காணவில்லை.

பிச்சைக்காரி என்னைப் பார்த்தாள். நான் இல்லை போ என சைகை செய்தேன், அவளுக்குப் பக்கத்தில் இருந்து அப்படிச் செய்ய எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்னால் வேறோன்றும் செய்ய முடியவில்லை. பெண்களின் கவனத்தை தம்பால் கவரவேண்டுமென்பதற்காக தம் கையில் இருக்கும் எதையும் கொடுத்து விடும் சில மன்மதக் குஞ்சுகளை போல அந்த ஐம்பது சதத்தைக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை.

அவள் என்ன நினைத்தாளோ எனக்குத் தெரியாது. ஒரு விதமாக என்னைத் திரும்பி பார்த்தாள். நானும் பார்த்தேன், மௌனமாக தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். பழைய செந்தழிப்பு முகத்தில் தென்படவில்லை. பிச்சைக்காரி அப்பால் சென்று தன் பிலாக்கணத்தை மீண்டும் ஆரம்பித்தாள். நான் மனதில் அப்பிச்சைக்காரியைத் திட்டினேன்.

வண்டி, அடுத்த ஸ்ரேசனில் நின்றுவிட்டு புறப்பட்டது. பிச்சைக்காரக் கிழவியும் சுவீப் ரிக்கெற் பையனும் இறங்கியிருந்தார்கள். குழந்தையை வைத்திருந்த பெண் அதை அணைத்த வண்ணம் பின்னுக்கு தலையைச் சாத்தி அமர்ந்திருந்தாள். கூடைக்கார மீனவன் அதில் இருந்த வண்ணம் அப்போ பிரசித்தமாயிருந்த ஒரு சிங்களப்பாடலை முணு முணுத்துக்கொண்டிருந்தான். வாசலில் நின்ற வாலிபன் முன்னைப்போலவே ஏதோ கனவில் ஆழ்ந்திருந்தான். தாடிக்காரக்கிழவன் ஆழ்ந்த தூக்கத்தில் இலயித்திருந்தான்.

அவளைப் பார்த்தேன்; அப்பாலே தெரிந்த காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்தவள்போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அழகிய கைகள், அந்தப் புத்தகங்களையும், கொப்பியையும் இறுகப் பற்றியிருந்தன. இப்போது, அப்பற்றுதலில் அவளின் கைப்பையும் சேர்ந்திருந்தது.

புகையிரதம் கரைப்பகுதியை விட்டு நாட்டுக்குள் புகுந்து ஓடத் தொடங்கியது. அழகிய வயல் பிரதேசங்களுக்கூடாக நெழிந்து. வளைந்து செல்லும் தண்டவாளத்தின்மீது அது வேகமாக சென்று கொண்டிருந்தது. இருண்டு வரும் மங்கிய வெளிச்சத்தில், அப்பகுதி அழகிய சோபை பெற்று மிளிர்ந்து கொண்டிருந்தது. நானும் அவளுடன் சேர்ந்து வெளியழகை நோக்கிக் கொண்டிருந்தேன்.

வழியிலிருந்த ஆற்றுப் பாலத்தில் பயங்கரச் சத்தத்தை எழுப்பிக்கொண்டே புகையிரதம் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் இரண்டு பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள், பாதையின் அருகினில் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும் வாழைத் தோட்டங்களும் காணப்பட்டன.

இயற்கையையே பார்த்துப் பார்த்துச் சலித்த நான் மீண்டும் என் கவனத்தை அவள் மேல் திருப்பினேன். அவளின் கோலத்தில் எதுவித மாற்றமும் இல்லை. வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இந்தப் புத்தகத்தை ஒருமுறை தருவீர்களா” என்றேன். எனது குரல் மெல்லிய ஸ்தாயியில் ஒலித்தது. அவள் ஏதோ பிரமையில் இருந்து விடுபட்டவள் போல ஒருமுறை அசைந்து கொடுத்தாள். பின்னால் திரும்பிப் பார்க்காமலே தன் பின்னலில் ஒன்றைத் தூக்கி முன் பக்கம் போட்டு அதை அழகுப்படுத்தினாள். அவள் தன் பின்னலைத் தூக்கி முன்னால் போடும் போது அது என்னைத் தழுவி அணைத்துச் சென்றது. அவள் என்னைத் தழுவ மாட்டாளோவென ஏங்கினேன். நான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை. அது அவளின் காதில் விழவில்லைப் போலும் என எண்ணினேன்.

புகையிரதம் ஒரு குகையில் புகுந்து ஓடியது. அதனால். புகையிரதத்தினுள்ளே ஒரு செயற்கையான இருள் பரந்திருந்தது. அப்போது அவள் தன் முகத்தை உள்ளே திருப்பி இருப்பாளென நினைக்கிறேன். புகையிரதம் குகையை விட்டுக் கழிந்ததும் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்; பார்வையும் பார்வையும் முட்டி மோதிச் சிதறின. அவள் நாணம் மிக்க ஒரு புன்முறுவலுடன் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டாள்.

கூடையில் இருந்த மீன்காரக்கிழவன் ‘ஆதரே மம ஆதரே’ (நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன்) என்று முணு முணுத்தான். தாயின் அணைப்பிலிருந்த குழந்தை கையைக் காலை ஆட்டி விளையாடியது. வாசலில் நின்ற இளைஞன் ஏதோ நினைவில் சிரித்துக் கொண்டான்.

நான் அவளைப்பார்த்து “இந்தப் புத்தகத்தை ஒருமுறை தருவீர்களா?” என மீண்டும் வினாவினேன். அவள் கைகள் அசைந்தன. அந்தப் புத்தகத்தை எடுத்து பவ்வியமாக என் கையில் தந்தாள். அப்போது கீழே இருந்த புத்தகத்தை அவதானித்தேன். “இரு மகாகவிகள்” – கலாநிதி க. கைலா சபதி என்றிருந்தது … நான் நினைத்தது சரிதான். இவள் இலக்கியத்தில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவள் தான் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

புத்தகத்தின் அட்டையைப் புரட்டினேன். பிரமிளா என்ற பெயர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிக்கொண்டே “உங்கள் பெயர் பிரமிளாவா?” என்றேன்.

ஆமாம் என்று தலையசைத்த அவள் “உங்கள் பெயர் என்ன?” வென்றாள் தொடர்ந்து.

“இளங்கோ” என்றேன். “ஓ! சிலப்பதிகாரம் எழுதியவரின் பெயரையே கொண்டிருக்கிறீர்களே” என்று கூறிச் சிரித்தாள்.

நான் புத்தகத்தின் பக்கங்களைத் தட்டினேன். ஓரெழுத்தையாதல் படிக்க மனம் வரவில்லை. அவள் நான் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உங்களுக்குச் சிங்களம் தெரியுமா?” எனத் திடீரென வினாவினேன். அவள் சொன்னாள். “எனக்கு இலக்கியத்தில் ஆழ்ந்த பற்று. தமிழ் இலக்கியத்தைப் படித்துக்கொண்டிருந்த நான் தற்செயலாக ஒருநாள் ‘வீடு’ என்றதோர் கவிதையைப் படிக்க நேர்ந்தது. அந்த அருமையான கவிதையை ஒரு சிங்களக் கவிஞன் எழுதியிருந்தான். நான் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையே படித்தேன். அன்றிலிருந்து நான் சிங்களம் படித்து சிங்கள இலக்கியங்களைப் படிப்பதென்று முடிவு செய்தேன். இன்று எனக்கு சிங்களம் பெருமளவு தெரியும்!”

“அப்படியானால் எனக்கு சிங்களம் படிக்க உதவுகிறீர் களா?” என்றேன் நான்.

அவள் பலத்துச் சிரித்தாள், “நாம் இப்போது றெயிலில்” என்றாள். தொடர்ந்து “இப்பிரயாணத்தில் நானும் நீங்களும் நண்பர்கள். பின் நான் யாரோ நீங்கள் யாரோ” என்று கூறி ஒரு பெருமூச்சு விட்டாள்.

எனக்கு எங்கிருந்து தான் அவ்வளவு துணிவு வந்ததோ தெரியாது. நான் சொன்னேன். “இந்த ரெயில் பயணத்தில் சந்தித்த உன்னை, நான் என் வாழ்க்கைப் பயணத்திலேயே மறக்கமுடியாது பிரமிளா: நீ என் மனதில் ஏதோ ஒரு விதத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டாய்”

அவள் மௌனமாகச் சிரித்தாள். அவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் பளிச்சிட்டன. என்ன நினைத்தாளோ தெரியாது. என் மார்பில் முகத்தைப் புதைத்து அழுதாள். நான் அவள் தலையைக் கோதினேன்.

தாடிக்காரக் கிழவன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்களை நான் கவனிக்கவில்லை.

ரெயிலின் வேகம் குறைந்தது. தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் “நான் இவ்வளவு நாளும் எதையோ எதிர்பார்த்திருந்தேன். அது இங்கேதான் கிடைத்தது” என்று என் மார்பைத் தொட்டுக் காட்டினாள்.

பழையபடியே கலகப்பாக அவள் மாறினாள். “என் புத்தகத்தைத் தருவீர்களா? நான் இறங்கவேண்டிய ஸ்ரேசன் வந்து விட்டது”

நான் புத்தகத்தை மூடி அவளிடம் கொடுத்தேன். றெயில் நின்று விட்டது.

அவள் இறங்கி என்னைப் பார்த்துச் சொன்னாள். “நீங்கள் சொன்னதுபோல இந்த ரெயில் பயணத்தில் சந்தித்த உங்களை. இந்த வாழ்க்கைப்பயணத்திலேயே மறக்கமுடியாது. நான் எதிர்பார்த்ததை உங்களிடமே பெற்றேன். வாழ்க்கை என்பதே எதிர்பார்ப்புகளில் தானே தங்கியுள்ளது” அவள் கைகளைக் கூப்பி என்னிடம் விடைபெற்றாள்.

அவளின் அழகிய உருவம் என் கண்களிலிருந்து மறைந்து கொண்டது. றெயில் சோகமயமான குரலெடுத்து கூவிக் கொண்டு புறப்பட்டது. அவள் கைகளை அசைத்து விடை கொடுத்தது, கண்ணீரினால் நனைந்திருந்த என் கண்களுக்கு மங்கலாகத் தென்பட்டது. நானும் பதிலுக்கு கைகளை அசைத்தேன்.

றெயில் நீண்ட தூரம் வந்துவிட்டது. உள்ளே கவனத்தை திருப்பினேன். கூடைக்கார மீனவனும். குழந்தையை வைத்திருந்த இளம் தாயும், வாலிபனும் இறங்கியிருந்தார்கள் தாடிக்காரக் கிழவன் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களை வெளியே திருப்பினேன், மேகத்திரையினுள்ளே மூன்றாம் பிறைச்சந்திரன் உதயமாக எத்தனித்துக் கொண்டிருந்தான்.

றெயில், தன் பயண இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

– 1968 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *