அற்றது பற்றெனின்

 

வீட்டை வந்து அடைந்த போது இருட்டிவிட்டது. கதவைத் திறந்து வீட்டினுள் நுழைய எதுவோ குறுக்கே ஓடுவது போல இருந்தது. அனேகமாய் எலியாய் இருக்கும். உடன் வாழ்வது ஏன் இன்னும் பழகாமல் இருக்கு என்று தோன்றும் அவருக்கு. கதவின் பின்னால் இருந்த ஸ்விட்சை போட்டவர், வெளிச்சத்தில் கண்களை சுருக்கி, வைத்தது வைத்த மாதிரி இருக்கா என்று பார்வையிட்டார். எல்லாம் அப்படியப்படியே இருந்தது. எதை தேடி ஓடியிருக்கும் இந்த எலி என்று யோசித்துக் கொண்டே சட்டையைக் கழட்டினார், அங்கிருந்த ஆணியில் மாட்டிவிட்டு, வேட்டியைத் திரும்பவும் உதறிக் கட்டிக் கொண்டார். வெற்று உடம்பில் குளுகுளுன்னு காத்தடித்ததில், நெஞ்சில் இருந்த மயிரெல்லாம் சிலிர்த்தது மாதிரி இருந்தது அவருக்கு.

அங்கணக்குழி அருகே இருந்த பிளாஸ்டிக் வாளியையும், அலுமினிய போனியையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குப் போய் குளிக்கக் கிளம்பினார். ஈரிழைத்துண்டை எடுத்து விரித்தவர், அதில் இருந்த கிழிசலைப் பார்த்த போது அவருக்கு சிரிப்பு வந்தது. இதை தைக்க அவருக்கு நேரம் வாய்க்கலை என்பது போல வீட்டின் மூலையில் இருந்த தையல் மெஷினைப் பார்த்தார். வேலை முடிந்து வீடு திரும்பியதும் போய் குளிக்கணும் சந்திரனுக்கு. அப்பத் தான் அவருக்கு கசகசப்பு போனது போல இருக்கும். தூக்கமும் வெரசா வரும். ஜன்னல் திண்டில் இருந்த தேய்ந்த சந்திரிகா சோப்பையும், பார் சோப்பையும் எடுத்துக் கொண்டு கிணற்று மேட்டுக்கு வந்து சேர்ந்தார். பிளாஸ்டிக் வாளி நிறைய நீரை இறைத்து நிரப்பி விட்டு, குளிக்க ஆரம்பித்தார். முதல் போனி தலையில் ஊற்றியவுடன் இருக்கிற சுகம் அவரை கண்ணை செருகி கிறங்க வச்சது போல இருந்தது. அணுபவித்துக் கொண்டே குளித்தார். இடையில் நிறுத்தி திரும்பவும் நீரிறைக்க ஆரம்பித்தார். வாளி நிறைந்ததும், போனியை எடுத்து, நீரைக் கோரி வைத்துக் கொண்டவர், உட்கார்ந்து சோப்பு போட ஆரம்பித்தார்.

கிணற்றடியில் பெரிதாய் வெளிச்சம் இருக்காது. ஒரே ஒரு குண்டு பல்பு தான் எரியும், கக்கூஸை ஒட்டி அதனால் வெளிச்சம் அதிகம் கிடையாது. அதனாலயே அவர், கொஞ்சம் இருட்டின பின்னாடி தான் வருவார். நல்லாத் தேய்ச்சு குளிக்கலாம் என்ற நினைப்பில். சோப்பைத் தேய்த்துக் கொண்டே வந்தவர், பொசுக்கென்று கம்மங்கூட்டில் சோப்பு காணாமல் போனது போல சிறுசாப் போனது. உடம்புக்கு சந்திரிகா சோப் போட்டுக்கிட்டவர் காலுக்குப் போட சோப்பு காங்கலையேன்னு யோசித்தார் சிறிது நேரம். துணிய அலசக் கொண்டு வந்த பார் சோப்பை கையில் எடுத்துட்டு சுத்துமுத்தும் பார்த்தார். யாரும் பார்க்கலைன்னு தெரிஞ்சதும், பார் சோப்பையே காலுக்கும் தேய்க்க ஆரம்பித்தார். பார் சோப்பு கரையாததைப் பார்த்தவுடன், இந்த மாதிரி ஏன் குளிக்கிற சோப்ப செய்ய மாட்டேங்கா எவனும்? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.

குளித்து முடித்து, துணிகளை அலசியபின்னால் நன்றாக உதறியவர், அதன் சாரலில் மெய்மறந்தார். கிணற்று மேட்டில் இருக்கும் கொடியிலேயே காயப்போட்டுவிட்டு, வாளியையும், போனியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். கிணற்றடியில் இருந்து வீட்டிற்கு நுழைவதற்குள் ஒட்டிய மண்ணை வாசலில் நின்ற படியே தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். அது ஒரு சின்ன அறை, ஓட்டுசாப்பு இறக்கிய வீடு. அடுப்படி, படுக்கையறை, சாப்பாட்டு அறை என்று எல்லாமிருக்கும் அறை அது. இவரோட சொத்து என்பது ஒரு ராமா தையல் மெஷின், ஒரு டிரங்கு பெட்டி, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் அப்புறம் ஒரு ஷோ கேஸ். ஷோ கேஸ், பிளைவுட் பலகையில் சி.எம். டெய்லர்ஸ் என்று எழுதியிருக்க, முன்னாடி கண்ணாடி வைத்த பெரிய சைஸ் டேபிள் அது. துணியை வெட்டுவதற்கும், மார்க்கிங் பண்ணுவதற்கும் வசதியான டேபிள்.

முன்னாடி சின்னதா ஒரு கடை வச்சிருந்தார், ராமையா வீதியில். சி.எம். டெய்லர்ஸ்னு. அப்போ மதுரையில பேமஸா இருந்த ஜி.எம். டெய்லர்ஸ் மாதிரி இவரோடது சி.எம். டெய்லர்ஸ். அதே மாதிரி நாமளும் பெரிசா வரணும்ங்கிற ஆசையில் ஆரம்பிச்சது. கடை இப்பவும் அங்கேயே தான் இருக்கு, பேரு தான் மாறிப்போய் விட்டது.

சந்திரனுக்கு சி அப்புறம் மரகதத்துக்கு எம். கடை ஆரம்பிக்க முதலு இல்லாத போது, கழுத்தில் போட்டிருந்த செயினை மரகதம் தான் கழட்டிக் கொடுத்தாள். கடை ஆரம்பிக்கும் போது மூணு மெஷினு இருந்தது அவரிடம். ரெண்டு தையல் மெஷினும் ஒரு ஓவர்லாக் மெஷினும். பெரும்பாலும் ஏதாவது ஒரு மெஷினுக்குத்தான் வேலை இருக்கும் எப்போதும். முருகனும் அவரும் ஒண்ணா இருந்த காலம் அது. இவரு கட்டிங்க்ல புலி, சும்மா வளைச்சு வளைச்சு கட் பண்ணுவார். அவ்வளவு நேர்த்தியா அவரு வெட்டுறதால, முருகனுக்கு அடிச்சு போடுறதில பிரச்னையே இருந்ததில்லை. அதுவும், ஒரு ஆளை பார்த்த மாத்திரத்தில அளவு சொல்லிடுவாரு. சந்திரனோட ராசியோ என்னவோ, நிறைய லேடீஸ் பிளவுஸ் தான் வந்தது. லேடீஸ் பிளவுஸ் தச்சா பெரிசா மிச்சம் பிடிக்கமுடியாது. விழற பிட்டுல எதுவும் செய்யமுடியாது, தலையாணிக்குள்ள பஞ்சு மாதிரி சேர்ந்தா, அடைக்கத்தான் லாயக்கு.

சி.எம். டெய்லர்ஸ் பேரப்பாத்துட்டு கொள்ளப்பேருக்கு, சந்திரன், முருகன் தான் சி.எம். நினைச்சிக்கிறது உண்டு. இவரு வம்பாடுபட்டு முதலப்போட்டு, கடையத் தொறக்க, இந்தப் பயலுக்கு பேரு. இவரு தான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா தைக்கச் சொல்லிக் கொடுத்தாரு. ஒழுங்கா பெடல மிதிக்க வராது. மரகதந்தான் போனாப் போகுது கத்துக் கொடுங்க மாமான்னு! சொன்ன வார்த்தைக்காக அவனுக்கு கத்துக் கொடுத்தாரு. அவன் என்னடான்னா, கொஞ்சம் தலையெடுத்தவுடனே, முதலாளி கணக்கா திரிய ஆரம்பிச்சுட்டான்.

கோன வாத்தியார் மகனுக்கு பேண்ட் தைக்கணும்னு எங்கேயோ இருந்து ஒரு நீலக்கலர் டெரிக்காட்டன் துணி கொண்டு வந்தார். பய நல்லா வெடவெடன்னு உயரமா இருப்பான், ஒரு மீட்டர் வேணும்னு சொல்ல, அவரு எம்பது பாயிண்ட கொண்டு வந்துட்டு ’தை தை’ ந்னு குதிச்சாரு! முடியாதுன்னு அணுப்பங்குள்ளேயும், முருகன் முந்திக் கிட்டு கொடுங்க அண்ணாச்சி! தச்சுப்புடலாம்னு! வாங்கிகிட்டான். கோன வாத்தியாருக்கு வெவரம் புரியாம, என்னப்பா டெய்லரே தைக்கிறேண்ட்டாரு! துணி வெட்டற உனக்கு எப்படிப்பா தெரியும்? அப்படின்னாரு. போயா நீயுமாச்சு! உன் வேலையுமாச்சு, அந்த துணிய அந்தாளுட்டேயே கொடுத்து போகச் சொல்லியாச்சு. அடுத்த நாளு பாத்தா, முருகன் அத தைச்சுட்டு இருக்கான்.

ஆருடே வெட்டினா? என்ற சந்திரனின் அதட்டலுக்கு,
”என்ன பெரிய கம்பசூத்திரம், தெரியாதா எங்களுக்கு? இம்புட்டு நாளா பாத்துட்டு இருக்கோம், கண்ணு பாத்தா கை செய்யுது?” ன்னு எதிர்கேள்வி கேக்குறான். போடா உன் சங்காத்தமே வேணாம்னு அவனை வெளியே போகச் சொல்லிட்டார். போனவன், மூணு மாசா கூலியே தரலை, மெசினத்தூக்குறேன்னு, தூக்கிட்டான். அப்பதான் தெரிஞ்சது, அவன் சரியானா காவாலிப்பயலா இருப்பான் போலன்னு… போய்த் தொலையறான்னு விட்டுட்டார். தையலு மெஷினும், ஓவர்லாக்கு மெஷினும் போதும் நமக்கு சனியன் விட்டதுன்னு இருக்கலாம்னு இருந்துட்டார்.

’ஊக்கு அடிக்க அக்காட்ட கொடுத்த பிளவுஸை எல்லாம் வாங்கிட்டு வந்துடுறா’ என்று காஜா பையனிடம் சொல்ல, போனவன் சும்மா வந்தான். என்னடா? பிளவுஸ் என்னாச்சு?
”அக்கா நீங்க சாப்பிட வாரயிலே தாரேன்னு சொல்லிச்சு!” என்று போய் மூலையில் உட்கார்ந்து கொண்டான். திருதிருன்னு முழிச்சிட்டு, ஸ்கேலை ஓங்கினார் அவனை நோக்கி, ஏண்டா கிராக்கி வந்திருக்குன்னு சொல்லியிருக்க வேண்டியது தானேடா? முழிக்கிற ஆடு களவாண்டவன் கணக்கா? என்ற போது அப்படியே சுவரோடு பம்மினான்.

அவருக்கு வயிறு பசிப்பது போலிருந்தது, ஒண்ணுக்கும் முட்டிக்கிட்டு வந்தது. டவுசர் பைக்குள் தடவிப்பார்த்ததில், ரெண்டு மூணு பீடி சிக்கியது. இது போதும் இன்னைக்கு பொழுதுக்கு, ரவிக்கைக்கு ஊக்கு வச்சிருந்தால், போய் கோமதியக்காக்கிட்ட கொடுத்துட்டு காசு வாங்கிவரலாம். ”என்ன தான் செய்வாளோ? ரவிக்கைக்கு ஊக்கு கூட வைக்காம? எப்பப்பார்த்தாலும், கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, பவுடர் அடிக்கிறதும், மையிழுவறதுமா இருப்பா? இப்படி சிங்காரிச்சிட்டு எங்கயோ சீமைக்குப் போறமாதிரி! கேட்டுட்டா அம்புட்டுத்தான், குரல்வளை அந்து போகிறமாதிரி கத்துவா! என்று மரகதத்தைப் பற்றி நினைத்தவர், தலையை ஒரு மாதிரி உதறிவிட்டு. காஜா பையன் பக்கம் திரும்பினார்.

சாப்பாடு கொண்டு வந்திருக்கியாடே? என்று இவர் கேட்டவுடன், ஷோ கேஸ் கீழ்ப்பகுதியில் வைத்திருந்த தூக்குப்போனியைக் காட்ட, அவருக்கு உடனே கண்ணு மண்ணு தெரியாம கோபம் வந்துவிட்டது. ’எத்தனை கஷ்டப்பட்டு, முத்தையாவ உருவு உருவுன்னு உருவி, இந்த ஷோ கேஸை செஞ்சிருக்கோம்?’ ’இந்த பயலுக்கு அதோட அருமை தெரியாம, அதுல போயி தூக்குப்போனிய வச்சிருக்கானே?’ என்று கையில் இருந்த அடிக்குச்சியால், அவனை படீரென்று அடித்தார். அடித்ததோடு நிற்காமல், அவனை கையை அவனை நோக்கி நீட்டிக் கொண்டு வையவும் ஆரம்பித்துவிட்டார்.

“தாயோளி! கூறுபாடு இருக்கா? எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், ஷோ கேஸ்ல எதுவும் வைக்கக்கூடாதுண்டு! ஒரு தடவை சொன்னா தெரியாது மடசாம்பிராணி!” என் உசிர வாங்கண்டே உங்க அப்பன், ஆத்தா பெத்து போட்ருப்பாய்ங்க போல்ருக்கு. அவன் கத்தியபடியே அவருக்குத் தெரியாமல், வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் பதிலுக்குத் திட்டிக்கொண்டே அங்கிருந்து எடுத்து ஓவர்லாக் மெஷினடியில் வைத்தான்.

இவரு தான் காஜா எடுக்க ஆளில்லன்னு படிச்சிட்டு இருந்த பயலை, அவங்கப்பன் கிட்ட நைச்சியமா பேசி, கையில கொஞ்சம் காசக்கொடுத்து இங்க கொண்டு வந்து வச்சிருக்கார். அது அவனுக்குந்தெரியும், இருந்தாலும், கூலி கொடுக்குறவன் இதெல்லாம் கேட்க மாட்டானா? என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். அவன் பதிலுக்கு ஏதும் சொல்லிவிடுவதற்குள், கடையப்பாத்துக்கோ, வீடுவரைக்கும் போயிட்டு வர்றேன்! என்று வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டார். பிள்ளையார் கோயிலை ஒட்டி விட்டிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு அழுத்து அழுத்தினார்.

எம்.கே.புரம் தாண்டும் போது, சிங் கடைல கடனுக்குக் கொஞ்சம் காராச்சேவு வாங்கிக்கொண்டார். பொட்டலத்தை எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டு, கொஞ்சம் வேகமாக அழுத்தினார் பெடலை. இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா போறதால, வெஞ்சனம் செய்ய லேட்டாகலாம் என்று தான், அவர் காராச்சேவு வாங்கிக்கொண்டதற்கு காரணமே! வெறும் ரசஞ்சாதம் இருந்தாக்கூட போதும், காராச்சேவ வச்சு சமாளிச்சிக்கலாம். போகும்போதெ கோமதி அக்காவின் ஞாபகம் வந்தது, என்ன ஒரு எடுப்பான உடம்பு? அதுவும் அவர் தைச்சுக் கொடுத்த ரவிக்கையப் போட்டபடி வந்து நின்னா, சும்மா கின்னுன்னுல்ல இருக்கும்? என்று நினைத்த போதே அவருக்கு ஒரே கிளுகிளுப்பாய் இருந்தது. மரகதத்துட்ட சொல்லி, ஊக்குத் தைக்கச்சொல்லி கையோட எடுத்துட்டுப் போய், கோமதியக்காளையும் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடணும் என்று கள்ளமாய் சிரித்துக் கொண்டார். பார்த்து பார்த்து என்னத்தக் கண்டோம்? என்று தனக்குள்ளே ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டார்.

வீட்டுக்கு வந்தவர், வீட்டின் முன்புறத்திலேயே சைக்கிளை விட்டுவிட்டு முன் நடைக்கதவைத் திறந்த போது, முருகனின் சத்தம் கேட்டது. ஏதோ அவன் சொல்ல, அவள் சிரிப்பது அவருக்கு விரசமாய் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க நினைத்தவர், என்னவோ நினைத்துக் கொண்டு ஓசைப்படாமல், திரும்பவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்குத் திரும்பினார். டேய்! சாப்பிட்டியா? என்றார். அவன் உதடு பிதுக்கியதும், இந்தா! என்று காராச்சேவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தார். ’அண்ணன் எவ்வளவு நல்லவரு!” இவரப் போயி கெட்டவார்த்தையிலே திட்டிட்டமேன்னு அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அவன் காராச்சேவு பொட்டலத்தை விரித்து சாப்பிட, அவர் கடைவாசலில் உட்கார்ந்து பீடி பிடிக்க ஆரம்பித்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
நாகு வந்து சொன்னபிறகு தான் தெரிந்தது, ஜோதிக்கு. பதினொரு குடும்பம் இருக்கும் காம்பவுண்டில் இது போல நடந்தால், யார் தான் பொறுத்துக் கொள்வார்கள். வீட்டுக்காரக் கிழவியும் வந்து சத்தம் போட்டுக் கொண்டு இருந்தது. வீட்டுக்காரக் கிழவிக்கு தயவு தாட்சன்யமே கிடையாது, காம்பவுண்டில் ...
மேலும் கதையை படிக்க...
குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது.  மேலுக்கு நல்லா சோப்பு போட்டு குளிச்சாலும், திருப்தி வர்றதில்லை.  கைக்கு எட்டாத முதுகைத் தொட்டு அழுக்கு தேய்க்க ஆளு இருந்தாதான் தோதுப்படுது.  மகராசி ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது. மழை அவளுக்காகவே காத்திருந்து பெய்கிற மாதிரி தோன்றியது, கைபிடித்து வீடு வரை விட்டபிறகு பெய்ய ஆரம்பித்தது மாதிரியும் தோன்றியது. நெற்றியில் வழிந்த ஒற்றைத் ...
மேலும் கதையை படிக்க...
குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி... கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ குடையை விரிக்கவே மாட்டார், வெயில் இருக்கும் போது பெரும்பாலும் சுனக்கமில்லாமல் நடந்து விடுவார் எவ்வளவு தூரமா இருந்தாலும், மழை வந்தால் ...
மேலும் கதையை படிக்க...
செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள். செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள, மாப்ள என்று வாய் நிறைய அழைத்திருக்கிறார் நிறைய சமயங்களில். ஆனால் அவரிருக்கும் நிலையில் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. செல்வியின் ...
மேலும் கதையை படிக்க...
"ஏய் கூறுகெட்ட கழுத! ஆம்பளப்பிள்ளைக திரியற வீட்ல இப்படித் தூமத்துணியக் கொண்டாந்து இங்கன போட்டிருக்கறவ?” என்று குப்பை டின்னில் இருந்த துணியப்பாத்து கத்தினாள், தாயம்மாக்கிழவி. பதினோரு வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், தாயம்மாக்கிழவியின் அரசாங்கம் தான். தாயம்மாக்கிழவியின் இரண்டு மகன்களும் அதே காம்பவுண்டில் முறையே ...
மேலும் கதையை படிக்க...
ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின் நட்பில் கட்டிய திரைச்சீலைகள் இன்னும் தோரணமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசுக்குள். சில உறவுகளில் இருக்கும் இந்த பிசுக்கு எப்போதும் போவதில்லை... ...
மேலும் கதையை படிக்க...
என் ப்ரிய சிநேகிதி எழுதிய ’டெம்பிள் எகய்ன்’ என்ற அவளின் அனுபவத்தின் தமிழாக்கம் இது, அவள் எழுதிய ஆங்கில வடிவத்தின் வீச்சுக்கு இது ஈடுகொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை... அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்... படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... ...
மேலும் கதையை படிக்க...
காலையில் வெயில் வருவதற்கு முன்பே எழுந்துவிடுவது தான் பெருமாள்சாமிக்கு பழக்கம். ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்பிரமணியபுரம் ரயில்வே லைனை கடக்கும் போது போடும் சத்தத்தில் எழுந்துவிடுவார் எப்படியும். முன்னெல்லாம் சத்தம் பெருசா இருக்கும், டிரெயின் பக்கத்துலயே ஓடுற மாதிரி கேட்கும். இப்போ வீடு ...
மேலும் கதையை படிக்க...
மரநிழலில் நீண்டிருந்த தெருவில் உதிர்ந்து கிடந்த சருகுகள் அவனின் காலுக்கு கீழே மொரமொரத்து நொறுங்கின. அது காலுக்கு கீழே நொறுங்கியதில் அவனுக்கு கொஞ்சம் கூச்சமாயும், சுவாரசியமாயும் இருந்திருக்க வேண்டும். செருப்பில்லாமல் காலங்காலமாய் நடந்து பாலம்பாலமாய் விரிசல் விட்டிருந்த பாதங்களில் இந்த கூச்சம் ...
மேலும் கதையை படிக்க...
கழுத்துப்புண்
நமச்சாரத்தில் துலங்கும் பொன்
அரிசி தின்னும் மயிலிறகு
திருப்பதி ஆசாரியின் குடை
புனல்பெருவழி
உண்டார்கண் நோக்கு
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
இறைமை
உள்ளத்தனையது
அவம்பொழுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)