வீட்டுப் பசி

 

நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப் பாதிக்காத வரையில்…

சிலருக்கு பக்திப் பசி; பலருக்கு பணப் பசி; பாலியல் பசி; குடிப் பசி; ரேஸ் பசி; சீட்டாட்டப் பசி; பதவிப் பசி என்று பல பசிகள்.

சில சந்தர்ப்பங்களில் இந்தப் பசியே நம்மைப் புசித்தும் விடும். என்னுடன் படித்த மாடசாமிக்கு சிறிய வயதிலேயே அகோர வீட்டுப் பசி…

ஒரு கல்யாண வீட்டுக்குப் போனால்கூட பந்திக்கு முந்தாமல், அந்த வீட்டின் சுவற்றையும், சன்னலையும், கதவையும் ஆசை ஆசையா தொட்டு தொட்டுப் பாத்துகிட்டு நிப்பான் மாடசாமி.

கல்யாண வீடுன்னு இல்லை – எந்த வீட்டுக்குப் போனாலும் சரி, போற ஒவ்வொரு வீட்டையும் தொட்டு தொட்டுப் பாத்துகிட்டு நிக்கறதுதான் மாடசாமியின் தனிப்பட்ட குணம். வீடுன்னு சொன்னாப் போதும், அப்படியொரு பைத்தியக்காரத்தனமான ஈடுபாடு அவனுக்கு.

எங்கேயாவது யாராவது புதுசா வீடு கட்டிக்கிட்டிருந்தா அந்த வீடு கட்டப்படும் அழகை அலுக்காம பாத்துகிட்டு நிப்பான். அதே மாதிரி புதுசா யார் வீட்டுக்காவது போய்ட்டு வந்தான்னா அன்னிக்கி ராத்திரி பூரா தூங்காம அந்த வீட்டைப் பத்தியே நெனச்சிகிட்டு இருப்பான்.

மாடசாமியின் வீடு குடிசை வீடு. மழை பெய்தால் ஒழுகும். ஆனால் அவன் தன் வீட்டுக்குள்ள இருக்கவே மாட்டான், எப்பப் பாத்தாலும் யார் வீட்லயாவது போய் விளையாடிகிட்டு இருப்பான். ஊர்ல இருக்கிற அழகழகான வீடுங்களை எல்லாம் தன்னோட வீடா நெனச்சி கற்பனை பண்ணிக்கிடுவான்.

பத்தாப்பு படிச்சு முடித்ததும். ஒரு வீடு கட்டற கொத்தனார்கிட்டப் போய் சித்தாளா வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அங்கு பறந்து பறந்து வேலை பார்த்தான். அவனோட சொந்த வீட்டைக் கட்டுறமாதிரி அப்படி ஒரு லயிப்பு, வேகம், ஈடுபாடு.

அடுத்த சில வருடங்களில் சித்தாளா இருந்தவன் கொத்தனாரா; மேஸ்திரியாக வளர்ந்தான். மாடசாமியின் கையில் நிறைய துட்டும் சேர ஆரம்பித்தது. அவனே ப்ளான் போட்டு அழகாக சொந்தமாக ஒரு வீடு கட்டியிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யாமல், ஊர்க்காரன் எவனாவது கட்டிக் குடியிருக்கும் நல்ல வீடா பாத்து எப்படியாவது அந்த வீட்டை ஒரு அமுக்கு அமுக்கிரணும்னு திட்டம் போட்டுக் காத்திருந்தான்.

ரெட்டியார் காலனியில மாடசாமியை கிறுக்கா ஆக்கின அழகிய வீடு ஒண்ணு இருந்திச்சி. அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் மாடசாமி அந்த வீட்டையே கண் கொத்திப் பாம்பு மாதிரி பாத்துப் பாத்து பெருமூச்சு விடுவான்.

மாடசாமியின் யோகமோ; இல்லை அந்த வீட்டுச் சொந்தக்காரன் சுப்பையாவின் கெட்ட நேரமோ தெரியலை, சுப்பையா அந்த ஊர் பழக்கடை பழனியிடம் தன் தொழிலில் ஏற்பட்டிருக்கும் பண முடையைச் சொல்லி அழுதான். யாராவது ஒத்தாசை செய்தால் உதவியாக இருக்கும் என்றான்.

விஷயம் மாடசாமியின் காதுக்கு வரவும், மாடசாமி உஷாரானான். தான் உதவி செய்வதாகவும் ஆனால் ஒரு பந்தோபஸ்துக்காக சுப்பையா தன் வீட்டுப் பத்திரத்தின் மீது சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபிசில அடமானப் பத்திரம் ஒண்ணுமட்டும் எழுதித் தரணும்னு சொன்னான்.

சுப்பையா மனசுக்குள்ள பட்சி ஒண்ணும் சொல்லிச்சி. ‘மாடசாமி இப்ப நல்ல ஏறுகால்ல இருக்கான். அவன்கிட்ட கடன் வாங்கற நேரம், தனக்கும் அதிர்ஷ்டம் கூரையைப் பொத்துக்கிட்டு கொட்டிரும்’ என்று நம்பி அவனோட வீட்டை மாடசாமிக்கு அடமானப் பத்திரம் எழுதி பதிஞ்சு கொடுத்திட்டு ஒரு பெரிய தொகையை கடனா வாங்கிட்டுப் போனான்.

ஆனால் சில மாதங்களில் சுப்பையாவால் வட்டியையே திருப்பித் தர முடியவில்லை. மாடசாமிக்கும் அதுதானே வேணும்? அதனால் வட்டிக் கணக்கைப் பார்க்காமல் மாடசாமி அடமானப் பத்திரத்தை தலையணைக்கு அடியில் வச்சிகிட்டு அவன் பாட்டுக்கு உறங்கிக்கிட்டு கிடந்தான். ஆனால் வட்டி உறங்குமா?

நாலே நாலு வருசம் – கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாம சுப்பையா தன் வீட்டைத்தூக்கி மாடசாமியின் கையில் குடுத்துப்பிட்டு ராவோட ராவா ஊரைவிட்டே ஓடிப்போயிட்டான்.

இப்படித்தான் மாடசாமி அவனோட முதல் வீட்டை வாங்கினான். ஆசைப்பட்ட வீட்டை வாங்கியதில் ரொம்பக் குஷியானான். சொந்த வீடுல்ல வாங்கிட்டான்!? அதுவும் ஊரான் வீடு.

மாடசாமிக்கு பொண்ணு கொடுக்க நான் நீன்னு போட்டி போட்டார்கள். சல்லடை போட்டு அலசி, அதில் ஒரு நல்ல பசையான இடமாகத் தேர்வு செய்து கவிதாவைத் திருமணம் செய்துகொண்டான். கவிதா மூக்கும் முழியுமாக மிகவும் லட்சணமாக பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாள்.

அடுத்து இன்னொரு வீட்டுமேல ஆசைப்பட்டா என்னான்னு யோசிச்சான். வீடு கட்டிக்கிறதில புத்தி போகலை அவனுக்கு.

மாடசாமி சுப்பையா வீட்டை வாங்கிட்டாரு; பொன்னையா வீட்டை வாங்கிட்டாரு; ராமையா வீட்டையும் வாங்கிட்டாருன்னு ஊருக்குள்ள எல்லாரும் அவனைப்பத்தி பேசணும்னு போதை கொண்டான்.

யோசித்தான். மொத்தக் கிரயம் கொடுத்து வீட்டை வாங்கக்கூடாது. அதே நேரத்ல ஊர்ல இருக்கிறவன் வீடா பாத்து வாங்கித் தள்ளனும்.

வீட்டுப் பத்திரத்தை அடமானமா எழுதி வாங்கிக்கிட்டு கடன் கொடுக்கிறதையே தொழிலா பண்ணினா என்னன்னு யோசிச்சான். ஒரு நல்ல நாளில் அதையே புதுக்கணக்கில் பூஜைபோட்டு ஆரம்பித்தான்.

சின்ன வயசில எப்படி தேனீயா பறந்து பறந்து ஓடியாடி சம்பாரிச்ச பய இப்ப என்னடான்னா சோம்பேறியா உக்காந்துகிட்டு கிடக்கான் என்று எனக்கு ஒரே ஆச்சரியம்… அதுசரி வரும் பணம் எப்படி வந்தால் என்ன?

மாடசாமி கடை விரித்ததும், ஊருக்குள்ள வீடு வாசலோட இருந்து வியாபாரம் சரியா நடக்காம லம்பிக்கிட்டிருந்த பார்ட்டிகளில் சிலர், மாடசாமி விரித்த வலையில் புளியம்பழம் விழற மாதிரி ஒவ்வொன்னா விளுந்திருச்சிக. பாவம் ஆத்தைக் கண்டதுகளா இல்லை அழகரைக் கண்டதுகளா அதுக?

ஐம்பதாயிரம் கொடுங்க போதும்னு கேட்டவங்களுக்கு ஒருலட்சம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்தான்னா – மாடசாமி ஒண்ணும் பைத்தியக்காரப் பய கிடையாது. அதுக்கான வட்டியைக் குடுக்கறதுக்குள்ள எத்தனை கடன் காரர்களுக்கு தாலி அந்து போகும்னு அவனுக்கு நன்றாகத் தெரியும்.

எவனாவது மாசா மாசம் ஒழுங்கா வட்டியைக் கொண்டாந்து குடுத்தாக்கூட மாடசாமி ரொம்பப் ‘பிரியக்கடை’ பண்ணிப்பான். “இப்ப வட்டிக்கு என்ன அவசரம்? மொதல்ல உன் வியாபரத்தை நீ நல்லா விரிச்சி செய்யி… என் வட்டி எங்கியும் ஓடிப் போயிராது” என்று உருகுவான். ரொம்ப இளகின மனசைக் காட்டி கடங்காரனை அனுப்பிட்டு வட்டிக்கு வட்டி கணக்குப் போட்டு கணக்குப் பொஸ்தகத்துல எளுதி வச்சிருவான்.

இதுலேயே மாடசாமி இன்னொரு ‘நேக்’ வச்சிருந்தான். வட்டியை ஒழுங்கா கொடுத்து காலா காலத்துல கடனையும் அடைச்சி வீட்டை மீட்டுட்டுப் போற ஆசாமிகள்ள ஒருத்தன் மறுபடியும் வீட்டுமேல கடன் கேட்டான்னா மாடசாமி அவனுக்கு காலணா தரமாட்டான்.

இப்படிக் கடன் குடுத்து குடுத்து மாடசாமி அமுக்கின மொத்த வீடுகள் இருபது. இருபது வீடுகளை அமுக்கி வாயில் போட்டுக்கொண்டாலும் மாடசாமியின் வீட்டுப் பசி அடங்கவே இல்லை.

ராட்சஸ பசி மாடசாமிக்கு… அந்தப் பசிக்கு ஏத்தாப்ல ராச்சஸத்தனமான வீடு ஒண்ணை வேற மாடசாமி பாத்துட்டான். அவ்வளவுதேன். அவனோட கோரப்பசியை மேலும் தூண்டி விட்டிரிச்சி அந்த வீடு.

‘நாராயணா! கெடைச்சா இப்படியாப்பட்ட வீடு கெடைக்கணும். இல்லைன்னா இத்தனை வருஷம் இந்த வியாபாரம் நான் செஞ்சி என்னா பிரயோசனம்னு மாடசாமி நாராயண சாமிய கெடந்து கும்பிட்டான். அவருதேன் அவனோட இஷ்ட தெய்வம்.

அதுவரைக்கும் மாடசாமி வாங்கிய இருபது வீடுகள் உள்ளூர்ல வாங்கியது. இருபத்தி ஒன்றாவது வீடா அவன் நாராயணனை கும்பிட்டவீடு மட்டும் வெளியூறு.

சும்மா அதை வீடுன்னு சாதாரணமா சொல்லிரக்கூடாது. ஒரு அரண்மனை அந்த வீடு. ரொம்பப் பழைய காலத்து வீடுதேன். ஆனாலும் அழகு சொட்டற வீடு. வச்ச கண்ணை எடுக்கவே முடியலை மாடசாமியால். ஆனா ரொம்ப வருசமா வெள்ளையடிக்காம; வார்னிஷ் குடுக்காம; சின்ன ரிப்பேருகூட பாக்காம; சுவர்கள் பிளவுபட்டு அழுது வடிஞ்சிகிட்டு கிடந்திச்சி. செலவைப் பாக்காம கம்ப்ளீட்டா மராமத்து பண்ணிட்டா எவனும் அதன் அழகில் சொக்கிப் போய்விடுவான் என்பது மாடசாமிக்கு புரிந்தது.

வீடு அந்தக் காலத்து ஜமீன்தாருங்க பரம்பரையில வந்த வீடு. இப்ப அவய்ங்க பழைய பெருங்காய டப்பா என்பதை மாடசாமி புரிந்துகொண்டான். மூக்கு வேர்த்துப்போச்சி அவனுக்கு !. மூக்கை இன்னும் கொஞ்சம் நோழச்சிப் பார்த்தான். வீட்டை வித்து தலையை முழுகிப்புட்டு ஓடிரலாம்னு ஜமீன்தாரோட வாரிசுக காத்திகிட்டு கெடந்தாய்ங்கே என்கிற முழு விசயத்தையும் கிரகித்துக்கொண்டான் மாடசாமி.

ஜமீன்தார் வாரிசுகளுக்கு அந்த வீட்டை அப்படியே கெரயத்துக்கு கொடுப்பதாகத்தான் ஐடியா.

ஆனா எவ்வளவு கடன் வேண்டுமானாலும் வீட்டு மேல தரேன்னு மாடசாமி ஒத்தக் கால்ல நின்னான். அதனால பேச்சு வார்த்தை ஆரம்ப நிலையிலேயே நின்னு போச்சு.

இங்க மாடசாமி நாராயணா நாராயனான்னு அந்த வீட்டையே நெனச்சிகிட்டு புலம்பிகிட்டு கெடந்தான். அங்க அவிங்க மாடசாமியை நெனச்சிகிட்டு ஒறக்கம் வராம கெடந்தாய்ங்க. இப்படியே ரெண்டு மாசம் போச்சி.

திடீர்னு ஒருநா ஜமீன் வாரிசுங்க கெளம்பி வந்து, “வீட்டு மேல அதிகபட்சம் எவ்வளவு கடன் தருவீங்க?” ன்னு மாடசாமியைக் கேட்டாங்க. “உங்களுக்கு எவ்வளவு வேண்டும் அதைச் சொல்லுங்க…” மாடசாமி திருப்பிக்கேட்டான்.

அவங்க ஒரு பெரிய தொகையைக் கேட்டதும், மாடசாமி உடனே ஒப்புக்கொண்டதும் அடமானப் பத்திரத்தை எழுதிப் பதிஞ்சு குடுத்திட்டு கையோட துட்டையும் வாங்கிகிட்டு அப்பாடான்னு மூச்சு விட்டாங்க.

எண்ணி ஏழே வருசம் அந்த வீட்டுச்சாவி மாடசாமி கைக்கு வந்திருச்சி. கோர்ட்ல அட்டாச் பண்ணி, டிகிரி வாங்கி, முப்பத்தேழு வருசத்துக்கு முந்தி மொதல் மொதலா சுப்பையா வீட்டை வாயில போட்டு முழுங்கின மாதிரியே இந்த ஜமீந்தார் வீட்டையும் மாடசாமி லபக்குன்னு முழுங்கிட்டான்.

ஜமீன்தாரு வீடு கைக்கு வந்த மறுவாரம் தடபுடலா மாடசாமி ரெண்டு மேஸ்திரிகளை கூட்டிக்கிட்டு அந்த வீட்டுக்குப் போனான். வீட்டைப் பூரா சுத்தமா மராமத்துப் பண்ணிடனும்னு முடிவு செஞ்சி, எதை எதை எப்படிப் பண்ணனும்; எவ்வளவு செலவாகும்; வேலைய முடிக்க எத்தனை நாளாகும் என்று விலாவாரியா ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்த நேரத்துலதான் மின்னல் மின்னுற மாதிரி அந்த சோகச் சம்பவம் நடந்து போயிருச்சி…

மாடசாமி நின்னுக்கிட்டு இருந்த பக்கத்துப் பெரிய சுவர் அப்படியே மட மடன்னு சரிஞ்சி அவன் தலை மேலேயே இடிஞ்சி விளுந்திரிச்சி… அந்த இடத்துலேயே மாடசாமி பரிதாபமாக துடிதுடித்து செத்துப் போனான்.

அவனுடைய பசியே அவனைப் புசித்து விட்டது.

பாவம் கவிதாவை நினைத்தால்தான் எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘சபரிநாதனின் கொக்கரிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இரண்டொரு கணங்கள் பூட்டிய கதவின்மேல் சாய்ந்தபடியே நின்றார். மலங்க மலங்க விழித்தார். பின்பு வேகமாகச்சென்று கொல்லைப்புற கதவைத்திறந்து பின்புறமாக ஓடலானார். பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடினார். மனித நடமாட்டமில்லாத கற்களும் ...
மேலும் கதையை படிக்க...
அது 1988 ம் வருடம்.... முப்பது வருடங்களுக்கு முன், சுதாகருக்கு சுமதியுடன் கல்யாணம் ஆனது. பெண் பார்த்து, பெரியோர்களின் ஆசியுடன் முறைப்படி நடந்த கல்யாணம். முதலிரவில் சுதாகர் மனைவியிடம் மனம்விட்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவளை அன்றே கலவிக்கு வற்புறுத்தவில்லை. அதனாலேயே சுமதிக்கு கணவன் மீது ...
மேலும் கதையை படிக்க...
காலையில் கல்யாணியிடமிருந்து ஈ மெயில் வந்தது. ராகவன் பரபரப்புடன் மெயிலைத் திறந்து படித்தான். “டியர் ராகவன், நம்முடைய ஐந்து வருடக் காதல், இந்த வருடமாவது நம் கல்யாணத்தில் முடியும் என்று நினைக்கிறேன். தை பிறந்து விட்டது. இனி நம் காதலுக்கு வழியும் பிறந்துவிடும் என்று திடமாக நம்புகிறேன். ‘எல்லோரும் ...
மேலும் கதையை படிக்க...
‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு மெலிதாக பவுடர் அடித்துக் கொண்டார். அவர் இன்று காலை பத்து மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு ‘கொரோனா’ பற்றிய விழுப்புணர்வை ...
மேலும் கதையை படிக்க...
மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் போகலாமுங்களா...கருக்கல்ல போனாத்தான் சீக்கிரம் திரும்பியாரலாம்” என்றான். இவன் ஒரு புன்சிரிப்புடன் மேஜையின் இழுப்பறைகளைப் பூட்டிவிட்டு, சாவிக் கொத்துகளை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘விஷச் சொட்டு’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). நாட்கள் ஓடின. ராஜாராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது. மாதங்கள் ஓடின. அவனுடைய கல்யாணமும் சிறப்பாக முடிந்தது. திம்மராஜபுரத்தில் இந்த மாதிரி கல்யாணம் இதற்கு முன் நடந்திருக்குமா என்று ஊரே அசந்து போகிறமாதிரி ராஜாராமனின் கல்யாணம் தடபுடலாக ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘ஈடிணையற்ற பெண்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சங்க காலத்தில் பல சிறந்த பெண் புலவர்கள் இருந்தனர். உதாரணமாக குறமகள் குறி எயினி; காமக்கணி பசலையார்; ஒவ்வையார்; நல்வெள்ளியார்; நக்கண்ணையார்; மதுரை ஓலைக் கடையத்தார்; நப்பசலையார்; வெள்ளி வீதியார்; ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அந்தக் காலத்தில்...’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளை மதுரம் சித்தி ஒன்று விடாமல் ஒரு தீவிரத் தன்மையோடு வாசித்துக் கொண்டிருந்தார். அம்பை, சிவசங்கரி, இந்துமதி, லக்ஷ்மி, ...
மேலும் கதையை படிக்க...
நம் அனைவருடைய பெயர்களும் நம்மைக் கேட்காமலே நம் பெற்றோர்களால் நமக்கு வைக்கப்பட்டு விடுகின்றன. நம்மில் சிலருக்கு நம்முடைய பெயரையே பிடிப்பதில்லை. பின் என்ன? குஞ்சிதபாதம்; பாவாடைசாமி என்று பெயர்கள் வைத்தால் நமக்கு எப்படிப் பிடிக்கும் ? நம்மைக் கூப்பிடுபவர்கள் வேண்டுமென்றே அப்பாவியாக முகத்தை ...
மேலும் கதையை படிக்க...
கதிரேசனுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். மிகச் சுதந்திரமான வாழ்க்கை. எல்லாம் சேர்ந்து கதிரேசனை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன. கதிரேசன் பொதிமாடு மாதிரி வாட்டசாட்டமாக இருப்பான். இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. பணக்கார வீட்டுப் பையன் என்பதால், மதுரையில் வசிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
தெய்வீகக் காந்திமதி
பத்தினிகள்
காதல் கல்யாணம்
கொரோனா விதிகள்
சபலம்
கோழிக்கோட்டில் வரவேற்பு
சங்ககாலப் பெண் புலவர்கள்
தேவன்
பெயர்கள்
ஆன்ம பலம்

வீட்டுப் பசி மீது ஒரு கருத்து

  1. Revathy Balu says:

    இந்த உலகில் தான்- எத்தனை விதமான- காரெக்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)