Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

லூட்டி

 

“இத பாருங்க என்னால இனிமேலும் பொறுத்துக்க முடியாது.. இந்த நந்துவோட தொல்லை தாங்க முடியல்ல… பேசாம அவன ப்ளேஹோம்ல சேர்த்துட வேண்டியதுதான்.. ”

“என்ன விஜி இப்படி பேசறே? அஃப்டரால் அவனுக்கு ரெண்டரை வயசுதான். இந்த வயசுல குழந்தைங்க துறுதுறுன்னுதான் இருக்கும்.. எப்டியும் மூணு வயசுல நர்சரில போடப் போறோம். அதுவரை வீட்ல எஞ்சாய் பண்ணட்டுமே குழந்தை?”

“ஆனாலும் இவன் லூட்டி தாங்க முடியல்லயே? கீழ ஒரு சாமான் வைக்க முடில்ல…எல்லாத்தியும் உடைச்சி நொறுக்கிடறான். நேத்து என் ஃப்ரண்ட் சுமி விட்டுல போயி மானத்தை வாங்கிட்டான். ”

“என்ன செஞ்சான் அப்டி?”

“அவங்க ஆசை ஆசையா வாங்கி டீபாய் மேல வச்சிருந்த கிருஷ்ணர் பொம்மைய எடுத்துக் கீழ போட்டு உடைச்சிட்டான். குறும்பா கைதட்டி சிரிச்சிக்கிறான் தனக்குத் தானே.. அவங்க ஒருமாதிரி சொன்னாங்க ‘விஜி பையன் லூட்டி அடிக்கறான், சரியான எமன்’ அப்டின்னு.”

“என்னவோ எனக்கு என் மகன் சமத்தா தான் தெரியறான்.. ஆபீஸ் விட்டு வந்தது முதல் என் மடியில அமைதியா உக்காந்துட்டு இருக்கானே… ஒரு பொருளையும் எடுக்கல.. உடைக்கல… குறும்புத்தனம் சேட்டை எதுவும் காணோமே? நீ சும்மா அவன் மேல பழி போடறே?”

“எல்லாக் குழந்தைகளும் இப்படிதான் அப்பா எதிர்ல நல்லாவே ஆக்ட் பண்ணுதுங்க. பகலெல்லாம் அம்மாக்கள் உயிரை வாங்கி எடுத்திட்டு சாயங்காலம் அப்பா வந்ததும் சாது மாதிரி உக்காந்துட்டு நம்ம பேச்சைப் பொய் பண்ணுதுங்க. சரி சரி, இந்தாங்க காபி.”

“என்ன விஜி காபில உப்பு கரிக்குது?”

“எல்லாம் உங்க புத்திர பாக்கியத்தின் வேலைதான். சமையல் மேடைமேல எம்பி டப்பாக்களை எடுத்து ஏதாவது லூட்டி செய்துடறான். அதை எடுத்து இதுல இதை எடுத்து அதுலன்னு விஷமம் தாங்கல எனக்கு.. சுமி சொன்னாப்ல எமனா வந்து எனக்குப் பொறந்துருக்கான்..”

“குழந்தைய திட்டாத விஜி.”

“நீங்கதான் ஒருநாள் வீட்டைப் பாத்துக்குங்களேன், நான் அபீஸ் போய் வரென்.. அப்றோம் தெரியும் இவன் அட்டகாசம்.. இவன் ஒருத்தன் எனக்கு ஜன்மத்துக்கும் போதும்.”.

“அதான் உனக்கு ரெண்டாவதா குழந்தையே பொறக்க வாய்ப்பில்லேனு டாக்டருங்க சொல்லிட்டாங்களே.. சரி அதைவிடு விஜி சினிமா எதும் போகலாமா இன்னிக்கு?”

“இந்த வாலு விடுவானா? நினைவிருக்கா, வேட்டையாடு விளையாடு முதல்பாதி நீங்களும் கடைசி பகுதி நானும் பாத்திட்டு வீடு வந்ததும் கதை கேட்டு புரிஞ்சிட்டோம்.. நந்து அங்க வந்து உரக்க ஏதோ பாட்றான்.. முன் சீட்டுக்கார லேடீஸ் தலைல இருக்கற பூவைப் பிச்சி எடுக்கறான். தியேட்டர்ல எல்லாரும் உச்சு உச்சு’ங்கறாங்க… மானம் போகுது.. ஒரு நிமிஷம் அடங்கறதில்ல… அத்தனை சேட்டை.. பாருங்க முகத்துலயே டன் கணக்குல குறும்பு வழியுது? எனக்கு நந்துவோட நாள் முழுக்க ஓடி அவன் குறும்பை சமாளிச்சி களைச்சிப் போயிட்றேன். அமைதியா கொஞ்ச நேரமாவது வீட்ல இவன் சத்தம் லூட்டி இல்லாம நான் இருக்கணும்..”

“சரி… இன்னிக்கு இவனை நைட் 10 மணிவரை உன் கண்லயே காட்டலை. போதுமா? நான் பாத்துக்கறேன்.”

“ரொம்ப சந்தோஷம் முடிஞ்சா உங்களுக்கு கோயிலே கட்டுவேன், எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு தர்ரதுக்கு…. முதல்ல உங்க மகனை அழைச்சிட்டுப் போய்ச் சேருங்க. ”

கணவனையும் மகனையும் அனுப்பிவிட்டு ஹாலை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறாள் விஜி. மூலைக்கொன்றாய் பொம்மைகள் செய்தித் தாள்கள் என்று கிடந்தன. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விஜி நிமிர்ந்தபோது மணி எட்டு ஆகிவிட்டது. நிம்மதியாய் ஷவரில் ஷாம்பூ போட்டுக் குளித்தாள். தலை முடியை வாரி அலை அலையாய் முதுகில் பரப்பிக்கொண்டாள்.

நிதானமாய் முகத்திற்கு ஒப்பனை செய்து கண்ணாடியில் பார்த்தபோது முப்பது வயதில் ஆறு வயது குறைந்த மாதிரி இருந்தது.

வீடே அமைதியாய் அதது வைத்த இடத்தில் அழகாய் இருந்தது. அந்தச் சூழ்நிலையை ரசித்து பார்த்தபடி ஹாலில் சோபாவில் அமர்ந்தாள்.

கண்ணைமூடி ஆனந்தமாய் அப்படியே உறங்க ஆரம்பித்தவளை அழைப்பு மணி ஓசை எழுப்பியது.

“யாரு?”

கேட்டபடி கதவைத் திறந்தவள் கதவுக்கு வெளியே நின்ற நபரைப் பார்த்து குழப்பமாய் கேட்டாள், ‘யா…… யார் நீங்க? யாரைப் பாக்கணும்?’

“மேடம், இது சிவகுமார் வீடுதானே?”

“ஆமா நான் அவர் மனைவி விஜி. என்ன விஷயம் நீங்க யாரு?”

“மே…. மேடம்… உங்க ஹஸ்பண்ட் கொஞ்ச முன்னாடி ரோட் கிராஸ் செய்யறப்போ கைல குழந்தையோட ஒரு கார்ல அடிபட்டு கீழ விழுந்துட்டாரு.. விபத்தாயிடிச்சி ..”

‘அய்யோ..’

“சாருக்கு பலத்த அடீ இல்ல……. அ… ஆனா…. குழந்தை….”

“அய்யோ குழந்தைக்கு என்ன ஆச்சு? ”

“நேர்ல வந்து பாருங்கம்மா என்னால் இதுக்கு மேல சொல்ல முடியாது.”

வந்தவனின் குரல் உடைந்து வரவும் திகிலோடு விஜி அவனைப் பார்த்தாள். அவனைத் தொடர்ந்து அந்த விபத்து நடந்து இடத்திற்கு சென்றாள்.

அங்கே…

அவளின் அருமை மகன் நந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

“பாவம் பச்சபுள்ள.. ஓடி ஆட வேண்டிய வயசுல அப்படியே அடங்கிக் கிடக்கான் பாருங்க.. யாரு பெத்த புள்ளையோ? ”

“அய்ய்யோ.. இது என் மகன் நந்தூ….. கண்முழிடா நந்தூ இப்படி கிடக்காத. இந்த அமைதி என்னைக் கொன்னுடும்டா…. நந்தூ நீ இப்படி ஒரே இடத்துல கிடக்க வேணாம்…. உன் லூட்டியும் விஷமமும் குறும்பும் எனக்குத் தேவைடா கண்ணா.. ”

********** ********** **********

” விஜி என்னாச்சு? ஏன் இப்டி கெட்ட கனவு கண்ட மாதிரி திகிலா எழுந்து உக்காந்துருக்கே? நான் இப்பதான் நந்துவோட வெளியே போய் வரேன்… நீ சொன்னது உண்மைதான்… போன இடத்துல ஒரு நிமிஷம் சும்மா இருக்கல.. ஓட்றான்.. குதிக்கறான்.. கடைக்குக் கூட்டிப் போனா அங்க சாக்லேட் பாட்டிலை உடைச்சிட்டான். ஃப்ரண்ட் வீட்டுக்குக் கூட்டிப் போனேன். அங்க சின்ன பசங்களைச் சீண்டி விடறான்.. அவங்க வீடு நீட்டா நல்லா இருக்கு. நந்து போயி எல்லாத்தியும் கலைச்சிட்டான்… அவங்க வீட்டு அமைதியே இவனால் குலைஞ்சி போயிடிச்சி…”

“போதும் நிறுத்துங்க… குழந்தைன்னா குறும்புத் தனமாத் தான் இருக்கும். பொருள்களை எடுத்துப் புரட்டிப் போடும்… வீடென்ன மியூசியமா அமைதியாயும் அப்படியே வச்சது வச்ச இடத்துல இருக்கவும்? குழந்தையோட குறும்பை ரசிக்கணுங்க,,,இதெல்லாம் அவங்க வளர்ந்த பிறகு நமக்குக் கிடைக்குமா என்ன?”

சிவகுமார் தன் மனைவியை திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
வசந்தகாலத்தின் தொடக்க நாளில் நான் பிறந்தேனாம் அதனால் அம்மா எனக்கு 'வசந்தம்' என்று பெயர் வைத்ததாக அப்பாதான் சொன்னார். வாய் நிறைய 'வசந்தம்! வசந்தம்!' என்று என் அம்மா அழைக்க, அதைக் கேட்டு மகிழும் பேறினை நான் ஒருவயதிலேயே இழந்துவிட்டேன். வசந்தம்! எத்தனை ...
மேலும் கதையை படிக்க...
பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி தித்தித்தது ஆனந்தனுக்கு. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு பணி செய்ய ஆனந்தன் புறப்படும் முன்பு கடைசியாய் சந்தித்தது. நீண்ட நேரம் பேசிமுடித்துப் பிறகு பிரியும்போது விளையாட்டாகப் பேசிக்கொண்டதுதான்,"சரியாக பத்துவருஷம்கழித்து இதே போல ...
மேலும் கதையை படிக்க...
வேறு ஏதோ ஒரு வேலையாக தியாகராய நகருக்கு வந்த தியாகு, பக்கத்தில்தானே நண்பன் பரமேஷின் வீடு இருக்கிறது. ஒரு எட்டு போய்ப்பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டான். பரமேஷின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி னான். கதவைத் திறந்த பரமேஷ், ''ஹாய்... வாடா!'' என்று ...
மேலும் கதையை படிக்க...
முப்பதாயிரம் டாலர்கள் ! ஏறக்குறையை பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் ! செக்கை வாங்கும்போதே எனக்குக் கை நடுக்கியது. ஆனந்தப் பரவசத்தில் உடம்பு ஒரு நிமிஷம் உலுக்கிப் போய்விட்டது. "உன் உழைப்புக்குக் கிடைத்த பரிசு ! பாராட்டுக்கள் !" என்று அழகான அமெரிக்க ஆங்கிலத்தில் கல்லுhரி ...
மேலும் கதையை படிக்க...
ஆபீசில் வேலையில் மனம் லயிக்கவே இல்லை அனுலாவிற்கு. கீபோர்டில் மானிட்டரில் மௌசில் என்று பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் வந்து அவளைப் பாடாய்ப் படுத்தியது. அபிஜித்தின் நினைவு மனதில் அலை அலையாய் வந்து மோதிற்று. அவனைப் பிரிந்த இந்த சிலமணிநேர அவஸ்தையைத் தாங்க இயலாதவளாய் ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் வசந்தம்
ரகசிய சினேகிதியே
விளக்கேத்த ஒரு பொண்ணு
தாத்தாவின் நினைவாக
பிரியாத மனம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)