லட்சுமணக்கோடு

 

தங்கத்துக்கு விடியற்காலையிலேயே விழிப்பு தட்டி விட்டது. எழுந்து உட்கார்ந்தாள். சற்று முன் கண்ட கெட்டக் கனவு……?, வேர்த்துக் கொட்டுகிறது. தன் குடும்பத்தில் நடக்கப் போகும் ஏதோ ஒரு கெட்ட சம்பவத்திற்கான சமிக்ஞையாகவே அவளுக்குப் பட்டது. பக்கத்தில் தத்தம் கனவுகளுடன் உறங்கிக் கொண்டிருக்கும் மகள்களைப் பார்த்தாள். பெரியவள் சாந்திக்கு போன சித்திரையோடு முப்பது முடிந்துவிட்டது. சின்னவளுக்கு பதினொன்று.

“பிள்ளையாரப்பா! மடியில நெருப்ப கட்டி வெச்சிங்கீறனே, ஆறேழு வருசமா தேடி அலையறனே. எங்கொழந்தைக்கு ஒருநல்ல எடத்த காட்டக் கூடாதா?. அவ கன்னி கழியாம இருக்கிறது ஞாயந்தானா?.”

வெளியே தெருவில பாவு விரிக்க ஆரம்பிச்சாச்சி.

தட்….தட்….தட்…..அளவுகோலு போட்ற சத்தம் கேக்குது. போவணும். மாத்தாளுக்கு மாத்தாளு. நாம இன்னிக்குப் போயி அவங்க பாவை தோய்ஞ்சாத் தான் நாளைக்கு நம்ம பாவு தோய அவங்க வருவாங்க.. சின்னவ புரண்டு படுத்தாள். ஹும்! மேத்தாரையில படிஞ்சி உக்காந்து நாலு கெஜம் நெய்ய துப்பில்லாதவன்லாம் இருவது சவரன் போடு, முப்பது போடு, அப்புறம் வண்டி, கட்டிலு, பீரோ, நூத்தம்பது உருப்படிகள்ல சீர்வரிசைன்னு அடுக்குறான். எங்க போறது?.ஐயோ! இன்னா பண்ணப் போறனோ? ஜோஸ்யன் வேற பெரியவளுக்கு நாகதோசம்னு சொல்றான். எல்லாம் என் தலையெழுத்து. வெளியே இப்ப பாவு நனைச்சாச்சி. அளவுகோலு தட்ற சத்தம் கேட்க ஆரம்பிச்சாச்சி.. அவசரமாய் எழுந்தாள்.

“சாந்தீ!….சாந்தீ!…அடியாய்!.”——பெரியவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

“பாவாண்ட போறேன்.வெளிச்சமானப்புறம் சின்னவளை எழுப்பியனுப்பு.”

“சரிம்மா.”

“மசமசன்னு நிக்காத. பச்சரிசி நொய்யி அன்னக்கூடையில மூடி வெச்சிருக்கேன் பாரு. அரப்படி போட்டு பொங்கிடு. சின்னவளுக்கு டபராவில போட்டு,கடிச்சிக்க பச்சை மொளகா ஒண்ணு இல்லேன்னா ஒரு வெங்காயம் வெச்சிடு. தெர்தா?.”
சின்னவள் அம்மாவோடு நின்று பாவு தோய்ந்துவிட்டு,எட்டு மணிக்கு மேல தறிகொட்டாய்க்கு கோர்த்து வாங்கப் போவணும்.அவளை ஐயாயிரம் அட்வான்ஸுக்கு விட்டிருக்கு. தங்கம் பாவடியில் மும்முரமாய் வேலையிலிருந்தாள்.நனைந்த பாவைத் தட்டி,உலர்த்தி, கஞ்சிப் பையை உருட்டும்போது பசை சீராக இழைகளில் படியும்படி கீறிசுப்பலால் கீறி, இழைகள் ஒன்றோடொன்று ஒட்டாதபடிக்கு தட்டி, அறுந்த இழைகளை இழுத்து புனைத்து…..ஆயிற்று வேலை முடியறப்போ மணி ஏழரையத் தாண்டிடுச்சி. வேலையினூடே அந்தக் கனவு?.

“ஐயோ! விடி நேரம் கண்ட கனவு பலிச்சிப்புடும்னு சொல்வாங்களே. என் அப்பனே முருகா!.”

தோட்டத்தில் வேலையாயிருந்துவிட்டு வீட்டிற்குள்ள நுழகிறாள்.. கதவைத் திறந்தவுடன் புஸ்ஸென்று காலடியில் பெருசாய் ராஜநாகம். கருகருவென்று இடுப்பு உசரத்திற்கு படம் எடுத்து ஆடுகிறது. எம்மா நீட்டு?.உள் கூடம் நீட்டுக்கு. அசைஞ்சா காலி. மூச்சு முட்டுது. முருகா….முருகா!…விழிப்பு வந்துவிட்டது. இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியலியே.. சற்று தூரத்தில் ஷண்முகம் அய்யா கஞ்சிப்பையுடன் நின்றிருந்தார். வேலை முடிஞ்சிட்டது.கஞ்சி திப்பியை கீழே பிழிஞ்சிட்டு தண்ணியில அலச வேண்டியதுதான்.அந்தத் திப்பியை சாப்பிட தயாராய் நாய்கள் கூட்டம், ஒன்றோடொன்று சண்டைபோட்டுக் கொண்டிருந்தன. நாலுந்தெரிஞ்ச மனுசன்.

“கனவில வூட்டுக்குள்ள பாம்பு வர்றது நல்லதா கெட்டதா மாமா?.ஐயோ! எங்கொழந்தைங்களுக்கு இன்னா தீம்பு வருமோ தெரியலியே அப்ப்பா….!கன்னங்கரேல்னு எவ்ளோ பெருசு?..”——-உடம்பை சிலிர்த்துக் கொண்டாள்.

“நீ கவலைப் பட்றதுக்குண்ணே காரணம் தேடுவ போல. இதோ பாரு தங்கம்!. கனவிலியோ, நெசத்திலியோ பாம்பு வர்றது நல்லதில்லை.ஏன்னா? நெசத்திலன்னா கடிச்சா உசுரு போயிரும். கனவிலன்னா தூக்கம் போயிரும்.”—–சொல்லிவிட்டு இடி இடியென்று சிரித்தார்..ச்சீ! குசும்பு புடிச்ச கெழம்., இதுங்கிட்ட போய் கேட்டேன் பாரு.

சில வருஷங்களுக்கு முன்னால தங்கத்துக்கு ஒரு கெட்டக் கனவு வந்தது. அப்போதுதான் சாந்தியின் புத்தி தடம் புரண்டு போயிருந்தது தெரிய வந்தது. எத்தனை நாளு வீட்டில் நடைபிணமாய் வாழ்ந்தோம்?. ஸ்கூல் வாத்தியாரு மரியதாஸு மவன் ஜேம்ஸை காதலிக்கிறாளாம். ஐயோ! நம்ம வீட்லியா இப்படி?. கால் வயிறு கஞ்சின்னாலும் கவுரவமா குடிக்கிறோம்னு இருந்தேனே. தலை தலையென்று அடித்துக் கொண்டு அழுதாள்.

“அடியேய்! உங்கப்பன் தெருவுல எறங்கி நடந்தா ஊரே எழுந்து நிக்கும்டீ. ஏழையாயிருந்தாலும் அம்மாம் மானஸ்தன். அதனாலதான் சாவறவரைக்கும் ஊரு பெர்தனத்த பார்த்தாரு.. அப்பிடிப்பட்டவங்களுக்குப் பொறந்துட்டு ஒரு கிருஸ்துவப் பையனை கட்டிக்கப் போறியா?.அடுக்குமாடீ? ஊர்ல கைத்தட்டிடுவானுங்கடீ. முண்டச்சி வளர்த்தது உருப்படல பார்த்தியா?ன்னு .பொரணி பேசுவானுங்கடீ. வேணாண்டீ கண்ணூ!.”

பலநாட்கள் புத்தி சொல்லி சொல்லி வேப்பிலை அடிச்சும்அவள் எதற்கும் மசிபவளாக இல்லை. தங்கத்திற்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது. மானம் போனபெறவு எதுக்கு இந்த ஜென்மம்?. பெண்ணை தீர்க்கமாக பார்த்தாள்.

“இதோ பார்றீ! முந்தாநாள் கூத்துல லட்சுமணன் சீதைக்கு இதைத் தாண்டி வராதேன்னு ஒரு கோடு போட்டானே பார்த்த இல்லே?. அதுமாதிரி இப்ப நானு உனுக்கு ஒரு கோடு போட்றேண்டீ, லட்சுமணக்கோடு. .அது உன் மனசுக்குப் போட்ற கோடு. இதைத் தாண்டி நீ வரக்கூடாது ஆமா. தாண்டின சீதை இன்னா கதிக்கு ஆளானான்னு பார்த்தேயில்லே?. ராவணன் கிட்ட மாட்டி சீரழிஞ்சா. ஜாக்கிரதை. அலையிற மனசை அடக்கு. மீறினா என் பொணத்தத்தான் பாப்ப.”—–ஆவேசமாய் கத்திவிட்டுப் போய் விட்டாள்.

ஒரு நாள் அந்த கிருஸ்த்துவப் பையன் தனியாக வந்து அவளிடம் கெஞ்சினான். பாலிடெக்னிக் முடிச்சிட்டு சென்னையில் கை நிறைய சம்பாதிகிறானாம். எங்களை சேர்த்து வையுங்க உயிராய் வெச்சிக் காப்பாத்தறேன்னு வசனம் பேசி அழுதான்.”

“தம்பீ! ஏழைங்களுக்கு மானந்தான் சொத்து. எங்களுக்கு சாதி,மதம் முக்கியம். மானம் போயிடும். வேண்டாம்பா. இது நடக்காது, ஒதுங்கிடுப்பா. இல்லேன்னா என் ஜென்மத்தை முடிச்சிக்குவேன்.இது சத்தியம்..”——–அவளும் அழுதாள். கிஞ்சித்தும் வெளியே தெரியாமல் நடந்த அந்த விஷயங்கள் மனசில் ஓடியது. இது நடந்து அஞ்சாறு வருஷங்கள் ஓடிவிட்டன.

தங்கம் கேழ்வரகை நோம்பிக் கொண்டிருந்தாள் .லாவகமாய் கையசைய, கல்லும், மண்ணும் தன்னால் புரண்டு வந்து முறத்தின் முன்விளிம்பில் குதிக்கின்றன. அவற்றை ஒதுக்கி கீழே தள்ளிவிட்டு,இரண்டு முறை புடைத்து அன்னக்கூடையில் கொட்டினாள். இப்பவே மிஷினுக்குப் போய் அரைச்சிக்கிணு வந்து மாவு புளிக்கப் போட்டாத்தான் நாளைக்கு கூழாக்க முடியும். நெசவாளிங்க வீடுகள்ல ஜீவசர்பத் கூழ்தான். செலவு கம்மி. ஒறப்புக்கு ஒரு பச்சைமொளகா போறும்,கடகடன்னு எறங்கிடும். அப்போது, எதிர் வீட்டு கெழவி வந்தாள்.

“ஏன்டீ தங்கம்! மானாம்பதியில இருந்து யாரோ வந்தாங்களாமே சாந்திய பார்த்துப்புட்டு இன்னா சொன்னாங்க?.

தங்கம் அதுக்கு பதில் பேசவில்லை. உச்சுக் கொட்டினாள்.

“காவலைப் படாதடீ. நல்ல எடம் வாய்க்கும் பாரேன். அவளுக்கு சிரிச்சா ரெண்டு கன்னத்திலியும் குழி விழுது பாரு. அதிர்ஷ்டக்காரி.”

“தே சொம்மாகெட. இன்னா அதிஷ்டம்?. இருளனுக்கு அதிஷ்டம் வந்தா மிச்சமா ரெண்டு எலிகுஞ்சுதான் ஆப்புடுமாம். அந்தக் கதைதான்.”——-கடனே என்று நூல் இழைத்துக் கொண்டிருந்த மகளை ஒரு பார்வை பார்த்தாள். பாவம் குழந்தை முன்னைக்கு இப்ப எவ்வளவோ இளைச்சிட்டா. மனசு வெதும்பிற்று.

“ஏன்டீ! போன வாரம் புதுப்பேட்டையில இருந்து கரிச்சட்டியாட்டம் ஒரு புள்ளை வந்தானே, அவன் அயவுக்குக் கூடவா சாந்திய புடிக்கலையாம்.?.”—–தங்கம் இதற்கு பதில் சொல்லவில்லை. தறியில் ஈரிழை பாய்ந்து போனதை பிரித்து விழுதில் வாங்கி புனைப்பதில் கண்ணாயிருந்தாள். அவளுக்கு ஒரு குறியீடு உண்டு. அன்றாடம் ஒரு பீஸ் லுங்கியை நெய்ஞ்சி முடிச்சி அறுத்து சுற்றி வெச்சிட்டுத்தான் தறியை விட்டு இறங்குவாள். ராத்திரி எட்டு ஆயிரும். அதுவரைக்கும் பெரியவ நூல் எழைக்கணும். அக்கம் பக்கங்களில இருந்து நூல் பொந்துகளும், நூல் எழைக்கிற டப்பாக்களும் ரெடியா வந்து குவிஞ்சிக் கிடக்கும். கூலிக்கு எழைச்சிக் குடுக்கிற தொழிலு. சின்னவ தறி கொட்டாய்ல இருந்து ஆறு ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவா. அதுக்கு மேல அம்மாவின் தறிக்கு தார் சுத்தியாவணும் கட்டளை. தங்கம் எட்டுமணிக்கு மேல தறிய வுட்டு எறங்கி அடுப்பில உலையேற்றி சோறு, ஒரு காரக்குழம்பு ரெடி என்பதற்குள் ராத்திரி பத்து மணியைத் தாண்டிவிடும்.அதற்குள் பலநாட்கள் சின்னவள் தூங்கி விடுவாள். எழுப்பி போடவேண்டும், தூக்கக் கலக்கத்தில்படிக்குப் பாதிதான் எறங்கும்.

“இன்னாடீ கேக்கறேன் கம்னு இருக்கிற?.”—கிழவி லேசில் விடமாட்டாள்.

“என்னா சொல்லச் சொல்ற?. இதுவரைக்கும் பொண்ணு பாக்கறேன்னு எத்தினி பேரு வந்திருப்பான்?. இவளுக்கு இன்னா கொறை ஆத்தா?. ஒருத்தி எத்தினி தபா அலங்காரம் பண்ணிக்கிட்டு போயி நிக்கிறது?. பொண்ணாப் பொறக்கக் கூடாது ஆத்தா. இதுவரைக்கும் எத்தினி பேரை இவந்தான் புருசன்னு, இவந்தான் புருசன்னு நெனச்சி நெனச்சி அழிச்சிருப்பா?. போதும் ஆத்தா போதும். என் கொழந்தை இந்த பாவி வயித்தில பொறந்து சீர்பட்டது போதும்..”—அவள் விசும்பினாள்.

“ச்சீய்! மனசை வுட்றாதடீ. இவளுக்குன்னு ஒரு ராசகுமாரன் பொறந்திருக்காண்டீ.வருவான் பாரு.”

கிழவியின் வாக்கு பலித்து விட்டது. அப்படித்தான் ஒரு ராஜகுமாரன் நேற்று வந்துவிட்டான். கோவிலூரிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். பையன் பட்டுத்தறி நெய்யறான்,பெரிய ரகமாம், சேலைக்கு மூவாயிரம் கூலியாம்.சேலை உடல் பூரா சரிகை புட்டா போட்ற ரகமாம். இம்மா சின்ன வயசிலேயே அந்த பெரிய ரகமா?.பையன் தரவசானவன்தான் போல.. வீட்ல வசதி ஒண்ணும் சொல்லிக்கிறாப்பல இல்ல. இனிமேதான் துளுக்கணும் போல. இருக்கட்டுமே ஏழைக்கேத்த எள்ளுருண்டை. பையனைப் பார்த்ததும் அவளுக்கு மனசில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டது. கறுப்பானாலும் முகக்களை. நெடுநெடுவென்று நல்ல உயரம். உக்காந்து பேசினால் இன்னா வெல போவானோ? என்றிருந்தது அவளுக்கு. மானசீகமாய் சாந்தி பக்கத்தில் அவனை நிக்கவெச்சி அழகுப் பார்த்தாள்.
பொண்ணும் புள்ளையும் ஒருத்தரையொருத்தர் பார்த்து விட்டு சம்மதம் சொல்ல, அன்றைக்கே விஷயம் ஒரு முக்கியக் கட்டத்துக்கு வந்து விட்டது. பேரம் துவங்கியது. பொண்ணுக்கு முப்பது சவரன், புள்ளைக்கு அஞ்சி, ஹீரோ ஹோண்டா வண்டி,கட்டில் பீரோ என்று ஆரம்பித்து கவுண்ட்டவுனில் குறைத்துக் கொண்டே வந்தார்கள். அவள் கெஞ்சி கூத்தாடி,அவர்கள் முறுக்கி…..இறுதி ஏலத்தொகையை பையனின் அப்பாவே சொல்லி விட்டார்

“தோ பாரும்மா! நாற்பது—பத்துக்கே ஆள் தயாரா இருக்கு. பையன் உம்பொண்ணை எங்கியோ பார்த்திருக்கான். அவனுக்கு புடிச்சிருக்குன்றதாலதான் இம்மா தூரம் எறங்கி வர்றேன். இருபது போட்ரு, புள்ளைக்கு மூணு. மத்தபடி கட்டில், பீரோ, சீர்வரிசைகளை மொறையாப் பண்ணிடு. எனுக்கு இவன் ஒரே புள்ள. எல்லாம் உம் பொண்ணுக்குத்தான செய்ற? .கல்யாணத்தைக் கூட நாங்க பண்ணிக்கிறோம்.”——அவர் எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுவிட்டார். அவர் முடித்து விட்டார் என்று அர்த்தம். தங்கத்தால் கையைப் பிசையத்தான் முடிந்தது. எட்டாத உசரத்தில் ஏலத்தொகை. மொத்தத்தில் பதினைஞ்சி சவரன் போட்டுட்றேன்னு கெஞ்சினாள். கண்கலங்கினாள்.அவர்கள் வீட்டிற்குப் போய் கலந்துவிட்டு தகவல் சொல்கிறோம் என்று போய்விட்டார்கள். என்ன பதில் வரும் என்று அவளுக்குத் தெரியும். ஜாதகப் பொருத்தமில்லை.. பெண் வீடானாலும் சரி,பிள்ளை வீடானலும் சரி. கழிச்சிக் கட்றதுக்கு ஜாதகந்தான் கைகண்ட மருந்து. உண்டென்றால் பொருத்தம் உண்டு, இல்லையென்றால் அது இல்லை. தங்கத்தால் அழத்தான் முடிகிறது.. சாந்தி இது எதைப் பற்றியும் சிந்தனையின்றி தாழ்வாரத்தில் உட்கார்ந்து யந்திரமாய் நூல் இழைத்துக் கொண்டிருக்கிறாள். வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இற்றுப் போய்விட்ட நிலை.

தங்கத்திற்கு ஒரு நொடி அந்த கனவு வ்ந்துப் போனது. ஒரு வேளை சாந்தி மறுபடியும் காதல் கத்தரிக்காய் என்று ஏதாவது…..சேச்சே! அவள் தடம் மாறமாட்டாள்.. கோட்டைத் தாண்டமாட்டாள்;. எங்கண்ணு எல்லாத்தையும் சேர்த்து வெச்சி அன்னைக்கே அழுது தீர்த்து விட்டாள்.

“அம்மா! உன் சம்மதமில்லாமல் எந்தத் தப்பும் பண்ணமாட்டம்மா..அப்பா இல்லாம எங்களக் காப்பாத்த தினிக்கும் நீ பட்ற பாடு எதையும் நாங்க மறக்கமாட்டோம்மா. இப்பவே அவனை மறந்திட்றேம்மா. சத்தியமா இந்த நிமிசத்திலயிருந்து அவன் நெனைப்பை விட்டுட்டேம்மா.”——-அம்மாவை கட்டிக் கொண்டழுதாள்.தங்கத்துக்கும் துக்கம் பொத்துக்கொள்ள குலுங்கினாள். . இன்னாத்துக்கு இந்த பொட்டச்சி ஜென்மம்?. சொன்னபடியே நிர்தாட்சண்யமாய் துண்டித்துக் கொண்டாளே.மனசில் வரித்தவன் நெனைப்பை இரவில் யாருக்கும் தெரியாமல் அழுதழுது கரைத்ததைப் பார்த்து தங்கத்தாலும் அழத்தான் முடிந்தது.

ஆயிற்று பாவு கிட்டடித்து மறு பாவையும் புனைத்து தறியேத்தியாச்சு. உண்டை நூல் வந்தால்தான் தறியில் காலை வெக்கமுடியும். உண்டைநூல் வாங்க பணிக்கரு வீட்டுக்குக் கிளம்பினாள். தேரடியைத் தாண்டும்போது யாரோ கூப்பிட்டார்கள். மரியதாஸ் வாத்தியார் பையன். முன்னைக்கு இப்ப சதை போட்டிருந்தான். எங்கியோ திருச்சி பக்கம் வேலை செய்றதாகக் கேள்வி. வணக்கம் சொன்னான். பக்கத்தில் அவன் பொண்டாட்டி.மாநிறமாயிருந்தாள். ஹூம்! சாந்தி செவப்புக்கு கிட்ட வரமுடியாது. இடுப்பில் கொழுக் மொழுக்கென்று குழந்தை. இவளைப் பார்த்து பொக்கை வாய் திறந்து அழகாய் சிரித்தது.

“பாட்டிடா! பாட்டிக்கு குட்மார்னிங் சொல்லு.”

ஒரு நொடி அவனைப் பார்த்தாள். திரும்பிக் கொண்டான். அப்புறம் கொஞ்ச நேரம் நலம் விசாரித்து விட்டு அகன்றாள். மனம் கொந்தளிக்கிறது. இனிமேல் தாளாது. வீட்டை வித்துப்புடலாம். சாந்தி கல்யாணத்த முடிச்சே ஆவணும். ஐயோ! வீட்டை வித்துப்புட்டா அப்புறம் எதை வெச்சி சின்னவள கரை சேர்க்க முடியும்?. அதுவும் வந்தேன் வந்தேன்னு வளர்ந்துட்டாளே. இல்லை அதுங்கதை அப்புறம். மொதல்ல அந்த கோவிலூர் பையனை வுடக்கூடாது. அவங்க கேட்டதை செஞ்சிப்புடலாம் ஏற்கனவே மேலத்தெரு சம்பத்து செட்டி நம்ம வீட்டு மேல ஒரு கண்ணு வெச்சிக்கிணு இருக்கான்.. புரோக்கருங்கள விட்டு குடுத்துட்றியான்னு அசக்கிப் பார்த்துக்குனே இருக்கான். தலை காஞ்சவதான எப்படியும் ஒரு நாளைக்கு பேரம் படிஞ்சிடும்னு கணக்கு. பணிக்கரு வீட்டுக்குப் போறதை விட்டுட்டு கல்யாண புரோக்கர் வீட்டுக்குப் பறந்தாள்.

நாம ஒண்ணு நெனைக்கிறோம், கடவுள் அதை வேறமாதிரி முடிக்கிறார். அதைத்தான் விதி என்கிறோம். தங்கம் அங்கியே சுருண்டு உட்கார்ந்து விட்டாள். அந்த இடமும் தட்டிப் போச்சி. வேற எடத்தில முடிஞ்சிட்டதாம். நேத்துதான் கையை நனைச்சிட்டுப் போனாங்களாம். சன்னதித் தெரு லோகன் பொண்ணாம். அந்தப் பொண்ணை இவளுக்குத் தெரியும். பொண்ணு சுமாருதான். கருப்பு, பையன் ஒசரத்துக்கு பாதிதான் தேறும். தலையில் ஜானூண்டு குச்சிப் பின்னல். ஹும்! என் கொழந்தை மயிரு எம்மா நீட்டு?. பின்னல் போட்டு விட்டால் பாம்பு எரை முழுங்கினாப்பல கதுமனா ஆடுமே. அதனாலென்ன/. ஐம்பது சவரனாம், பிள்ளைக்கு ஏழு சவரன்,டிரஸ்ஸுக்கு மட்டும் பத்தாயிரம் ரூவா, ஹோண்டா வண்டியாம்,கட்டில் பீரோ,சீர்வரிசைங்களோடு கன்னிகாதானம். பணம் பணம்னு போறவங்களுக்கு இப்பிடித்தான் ஆப்புடும்.

ராத்திரியெல்லாம் தூக்கமின்றி புரண்டுக் கொண்டிருந்தாள். அழத்தான் முடிகிறது. காலையில் விடி நேரமே எழுந்து குளித்து முடித்தாள். தலையைத் துவட்டிக் கொண்டு, நெற்றியில் விபூதி பூசி, சாமி படத்தண்டை வந்து நிற்கையில் கண்ணீர் கரகரவென்று ஊறுகிறது.

“முருகா! என் அப்பனே!. உங்கிட்ட நான் எதைக் கேக்கப் போறேன்? நீ எதை குடுக்கப்போற?.”——புரோக்கரு வீட்டுக்குக் கிளம்பினாள்.காலையிலேயே போனால்தான் அவனைப் பிடிக்க முடியும்.

“அம்மா!”

எதிரில் சாந்தி. குளிச்சி முடிச்சி, ஈரத்துணியுடன், நெற்றியில் பொட்டு, அதற்குக் கீழாய் புருவ மத்தியில் கீற்றாய் விபூதி. பளிச்சென்று இருந்தாள்.

.”என்னடீ அதிசயம்? காலங்காத்தால குளிச்சிட்ட?.”

”மறந்துட்டியாம்மா?. என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா. இன்னைக்கு என் பொறந்த நாளு.”——–காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தினாள். கண்கள் ததும்புகின்றன. முப்பத்திமூணு வயசு முடிஞ்சிப் போச்சி. அம்மாவே எல்லாமென்று போட்ட கோட்டைத் தாண்டமாட்டாமல், தன் உணர்வுகளைப் புதைத்து விட்டு நிற்கும் தன் குலக் கொழுந்தை, தலைமுதல் கால் வரைப் பார்க்கிறாள். துக்கம் அடைக்கிறது. சாந்திக்கு இளமை கலைய ஆரம்பித்திருந்தது. முகத்தில் முத்தல் வந்துவிட்டது. காதோரங்களில் நரைமுடிகள்.. ஐயோ! கண்ணே! எஞ்செல்லமே! நீயாவது துணிஞ்சி அந்தப் பையனோட ஓடிப் போயிருக்கக்கூடாதா?

அடக்கமுடியாமல் ஓவென்று கதறும் அம்மாவைப் பார்த்து, எதற்காக அழுகிறாள்? என்று புரியாமல் அவளைத் தேற்ற ஆரம்பித்தாள்.

- 11-05-2008 

தொடர்புடைய சிறுகதைகள்
“இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான் நம்ம தலையெழுத்து. என்ன பண்றது?.” சமீபத்தில் மதுரைப் பக்கம் நடந்த சாதிச் சண்டையில் நாலைந்து பேர் செத்துப் போனதைப் பற்றி பேச்சு ...
மேலும் கதையை படிக்க...
அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு. போறும். வேலைக்கு சுலுவு. வேணும்னா முந்திரி பருப்பை சித்த உபரியா சேர்த்துக்கோ. பசு நெய்யை தளற வார்த்துக்கோ. .கையிலெடுத்தா நெய் ...
மேலும் கதையை படிக்க...
சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட மாட்டியிருக்குன்னு அர்த்தம். “என்னடா?.”------என்னை குறுகுறுவென்று பார்த்தான்.. அதி ஜாக்கிரதையாய் தன் ஜேபியிலிருந்து சின்ன பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான். “என்னது இவ்வளவு ரகசியமாய்?.ப்ரவுன் ஷுகரா?.” “த்தூ! ...
மேலும் கதையை படிக்க...
சுவாமிநாதன் வீட்டின் முன்னால் சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வைக்கோல் போட்டு கொளுத்தி காய்ச்சியதில் நமர்த்துப் போயிருந்த வார்கள் இறுகி தப்பட்டைகள் கணகணவென்று பேசுகின்றன. மங்கா... கிழவி போய்விட்டாள். மங்கா..? மங்கையர்க்கரசியின் திரிபு. ஓடிக் களைத்த ஜென்மம். கூடத்தில் அவளை ...
மேலும் கதையை படிக்க...
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர் இருக்கிறது. இரைச்சலுடன் போகும் பெரிய லாரிகளின், கண்டெய்னர் வாகனங்களின், கார்களின், சத்தங்களுக்கிடையில் சிலுசிலுவென்று பனிச்சாரலுடன் வீசும் காற்றினால் குளிர் கவ்வுகிறது. ...
மேலும் கதையை படிக்க...
“இது உண்மையாக நடந்த சம்பவம்பா. ரொம்ப வருசங்களுக்கு முன்னே நான் வேலை பார்த்த ஊரில் நடந்தது.” — என்ற பீடிகையோடு பக்கத்து வீட்டு பெரியவர் தான் சொல்லப் போகிற கதையின் அஸ்திவாரத்தை பலமாகப் போட்டார். சுற்றிலும் எங்கள் குடும்பத்தினர்கள் உட்கார்ந்திருக்கிறோம். அவர் கதை ...
மேலும் கதையை படிக்க...
ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, ...
மேலும் கதையை படிக்க...
இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது?. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான்?..செல்லை ஆன் பண்ண, நோக்கியா இரவு 11--50. என்றது. அதற்குள் இரண்டு தடவை ஒலித்துவிட்டது.. திறந்தேன். வெளியே ஆபீஸ் ...
மேலும் கதையை படிக்க...
விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் என் அப்பா ஸ்வீட்டோடு வந்திறங்கி விட்டார். கண்கள் கசிய சரஸுக்குட்டீ! என்று வந்து அணைத்துக் கொண்டவர், உணர்ச்சியில் அழுதேவிட்டார். எதையோ படித்துக் கொண்டிருந்த என் கணவர் பெட்ரூமிலிருந்தபடியே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மனசு நிறைந்திருந்தது.இப்பத்தான் நீண்ட ...
மேலும் கதையை படிக்க...
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக் கொண்டிருந்தனர்.. சிலர் சந்தோஷத்தில் குதிப்பதும், சிலர் சோர்ந்து நிற்பதுமாக…., பொதுவாக எங்கும் ஒரே கூச்சலாயிருந்தது. இன்று ஒருநாள் எல்லா செல்போன்களும் ...
மேலும் கதையை படிக்க...
தோற்றப்பிழை
விமோசனம்
சுவாமிஜீ
மங்கா
நெடுஞ்சாலையில் ஒரு…
வேட்டை
உழவு
மனோபாவம்
புரிதல்
உந்துதல் (அ) ’சடையன்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)