Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாமி போட்ட கோலம்

 

அடுத்தவாரம் ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் மல்லேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தில் சரஸ்வதியுடன் எனக்கு அறுபதாம் கல்யாணம்.

எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தாலும், அமெரிக்காவில் இருக்கும் என் ஒரேமகன் ராகுலும், மருமகள் ஜனனியும் எங்களை வற்புறுத்தி இணங்க வைத்தனர்.

அதனால் நான் மூன்று மாதங்கள் முன்பே சிருங்கேரி சாரதா மடத்தை எங்கள் கல்யாணத்திற்காக முன்பதிவு செய்து கொண்டேன். இன்று அந்த மண்டபத்தில் எல்லா வசதிகளும் நன்றாக இருக்கின்றனவா என்று நேரில் பார்த்துவர சரஸ்வதியுடன் காரில் கிளம்பிச் சென்றேன்.

அங்கு சென்றதும் மானேஜர் வசந்தராவ் எங்களுக்கு மடத்தை சுற்றிக் காண்பித்தார். அதன் வசதிகளை பெருமையுடன் எடுத்துச் சொன்னார்.
சரஸ்வதி, “சனிக்கிழமை மாலையே நாங்கள் இங்கு வந்து கோலம் போட வேண்டும்” என்றாள்.

வசந்தராவ், “தாராளமா வாங்கோ….கோலம் போடறதுக்கு உங்க மனுஷா இல்லைன்னா, இங்க ஒரு மாமி வந்து எல்லா பங்க்ஷனுக்கும் கோலம் போட்டுத்தரா….ஆயிரம் ரூபாய்தான் சார்ஜ். நாளைக்கு ஒரு சீமந்தம் இங்க இருக்கு, அதுக்கு இப்பவே கோலம் போட்டுண்டு இருக்கா. உங்களுக்கு வேணும்னா நீங்க மாமியிடம் உடனே புக் செய்துவிடுங்கள்” என்றார்.

சரஸ்வதியும் நானும் மாமியைப் பார்க்கச் சென்றோம்.

குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்த மாமி நாங்கள் அருகில் சென்றதும் நிமிர்ந்து எங்களைப் பார்த்து புன்னகையுடன் நெற்றியில் வழியும் வியர்வையை இடது புறங்கையால் துடைத்துக்கொண்டே, . “சொல்லுங்கோ” என்றாள்.

சரஸ்வதி, “அடுத்த சண்டே எங்களுக்கு அறுபதாம் கல்யாணம்…நீங்கதான் எங்களுக்கு கோலம் போட்டுத்தரனும்” என்றாள்.

“பேஷா பண்ணிடலாமே…அடுத்த சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிக்கு இங்க வந்து கோலம் போட்டு விடுகிறேன்.”

தொடர்ந்து சரஸ்வதியும் மாமியும் குசலம் விசாரித்து நிறைய பேசினார்கள்.

மாமி என்றதும் பாட்டியாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் பார்த்தால் நாற்பத்தைந்து வயதுக்குமேல் இருக்காது என்று தோன்றியது. வரிசையான பற்களில், சிரித்த முகத்துடன் நல்ல நிறத்தில் களையான முகத்தில் வாளிப்புடன் இருந்தாள். அடிக்கடி ஆங்கிலம் பேசினாள். எனக்கு வயது அறுபதானாலும், அழகான பெண்களைப் பார்த்தால் உருகிவிடுவேன். மாமியைப் பார்த்ததும் அவளின் வனப்பில் என் மனசு உருகியது.

சீமந்தத்திற்காக தான் போட்ட கோலங்களை மாமி எங்களுக்கு காண்பித்தாள். இரண்டு மயில்கள் தோகை விரித்து ஆடிய ஒரு பெரியகோலம் எங்களை மிகவும் கவர்ந்தது. அதுதான் மாமியின் ட்ரேட் மார்க்காம். அது வேறு எவருக்கும் போட வராதாம். இதே கோலம்தான் எங்களுக்கும் போட வேண்டும் என்று சரஸ்வதி மாமியிடம் வேண்டினாள்.

நான், “அழகானவர்களுக்குத்தான் இவ்வளவு அழகாக கோலம் போடவரும்” என்றேன்.

சரஸ்வதி என்னை முறைத்துவிட்டு, தன் ஹேன்ட்பாக்கைத் திறந்து ஆயிரம் ரூபாய் எடுத்து மாமியிடம் கொடுத்துவிட்டு, “அடுத்த சனிக்கிழமை மறந்துடாதீங்கோ மாமி” என்று சொல்லிவிட்டு என்னுடன் கிளம்பினாள்.

காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது சரஸ்வதி என்னிடம் “குட்டிப்பா மாமிகிட்ட ரொம்ப வழியாதீங்க…” என்றாள்.

நான் சிரித்துக்கொண்டே “குசலம் விசாரிச்சியே மாமி என்ன சொன்னா?” என்றேன்.

“மாமி பாவம்….அவள் கணவர் பத்து வருஷத்துக்கு முன்னால ஒரு கார் ஆக்சிடென்ட்ல போயிட்டாராம். ஒரே பொண்ணுக்கு போன வருஷம்தான் கல்யாணம் பண்ணி வச்சாளாம்….இப்ப மாப்ள பொண்ணுகூட மல்லேஸ்வரத்துல இருக்காளாம். பொண்ணு ஸ்டேட் பாங்க்ல வேலை செய்றதாம்.”

அன்று முழுதும் மாமி என் மனசில் அலையடித்தாள்.
-௦-

சென்னை மற்றும் திருச்சியிலிருந்து என் இரண்டு தங்கைகள் சுந்தரி, ரேவதியும் மற்றும் சேலத்திலிருந்து என் தம்பி குமாரும் அறுபதாம் கல்யாணத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வந்திருந்தனர். அமெரிக்காவில் இருந்து என் மகனும், மருமகளும் வந்தனர். சரஸ்வதியின் உறவினர்களும் பலர் வந்துசேர வீடு கலகலப்பாக கல்யாணக் களை கட்டியது.

அன்று சனிக்கிழமை மாலை. நான், குமார், சுந்தரி, ரேவதி மற்றும் சரஸ்வதியுடன் கல்யாணம் நடக்கும் மடத்துக்கு சில பொருட்களை எடுத்துச் சென்றோம். .அப்போது மாமி அங்கு கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அதே மயில்தோகைக் கோலம். அதை அனைவரும் நின்று ரசித்தனர். கோலம் போட்டு முடிந்ததும் மாமி கலகலவென என் தம்பி, தங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எனக்கும் சரஸ்வதிக்கும் சிறப்பாக அறுபதாம் கல்யாணம் நடந்து முடிந்தது. வந்திருந்த அனைவரும் மாமியின் அமர்க்களமான மயில்தோகை கோலத்தை ரசித்து அதை மாமியிடமே பாராட்டி சிலாகித்தனர். மாமி எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து எங்கள் கல்யாணத்தை சிறப்பித்தாள்.

மறுநாள் வந்திருந்த அனைவரும் ஊர் திரும்பி விட்டனர்.

இரண்டு வாரங்கள் சென்றன.

மாமியின் ஞாபகம் அடிக்கடி என்னை அதிகமாக ஆக்கிரமித்தது. மாமியிடம் பேசவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் அதிகரித்தது. ஆனால் மாமியின் மொபைல் நம்பர் என்னிடம் இல்லை. சரஸ்வதி பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

நான் மெதுவாக வெளியே ஹாலுக்கு வந்து, வசந்தராவுக்கு என் மொபைலில் போன் செய்து, என் நண்பருக்கு அறுபதாம் கல்யாணம் என்றும், கோலம்போடும் மாமியின் மொபைல் நம்பர் வேண்டுமெனக் கேட்டேன்.

அவர் “மாமி கடந்த பத்து நாட்களாக மொபலை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளாள்….பரவாயில்ல நீங்களும் ட்ரை பண்ணுங்கோ, லைன்ல வந்தாக்க எனக்கும் போன் பண்ணச் சொல்லுங்கோ” என்று மாமியின் நம்பர் கொடுத்தார்.

நான் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை மாமியின் நம்பருக்கு ட்ரை பண்ணிப் பார்த்தேன். பயனில்லை. ஒருவேளை உடம்பு சரியில்லையோ அல்லது என்ன கஷ்டமோ மாமிக்கு என்று வருத்தப்பட்டேன்.

மூன்று மாதங்கள் சென்றன.

ஒரு புதன்கிழமை சரஸ்வதி என்னிடம், “குட்டிப்பா எனக்கு போரடிக்குது…. நம் ரெண்டுபேரும் ஏற்காடு போய் வந்தா என்ன?” என்றாள்.

நான் உடனே என் லாப்டாப்பை திறந்து வெள்ளி, சனி இரண்டு தினங்களுக்கு ஏற்காடு ஜிஆர்டி ஹோட்டலில் எங்களுக்கு ஏசி ரூம் புக் பண்ணினேன்.

வெள்ளிக்கிழமை காலை ஆறுமணிக்கு நானும் சரஸ்வதியும் என்னுடைய டொயாட்டா ஆல்டிஸ் ஆட்டோமேடிக் காரில் ஏற்காடு கிளம்பினோம். இரண்டு நாட்கள் ரிலாக்ஸ்டாக தங்கி சுற்றிப் பார்த்துவிட்டு, ஞாயிறு காலை பிரேக்பாஸ்ட் முடிந்தவுடன் அங்கிருந்து பெங்களூர் கிளம்பினோம்.

ஏற்காடு மலையில் இறங்கிக் கொண்டிருந்தபோது, சரஸ்வதி “என்னங்க சேலம் வழியாத்தானே போறோம். இன்னிக்கி சண்டே. உங்க தம்பி குமார் வீட்லதான இருப்பாரு… ஒரு சர்ப்ரைஸா அவர் வீட்டுக்கு போலாம் வாங்க…கடைசியா பெங்களூர்ல நம்மோட அறுபதாம் கல்யாணத்துல அவரைப் பார்த்தது” என்றாள்.

“சரி போலாமே” என்றேன்.

குமாருக்கு ஐம்பத்திஐந்து வயது. சேலம் கனிமவளத் துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கிறான். ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் மனைவி மஞ்சள் காமாலை நோயில் இறந்துவிட்டாள். அதன் பிறகு தன் ஒரேமகளை சோனா இஞ்சினியரிங் கல்லூரியில் நன்கு படிக்கவைத்து உடனே அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தான். அவள் தற்போது சிங்கப்பூர் அம்னெஸ்டி இண்டர்நேஷனில் வேலை செய்கிறாள்.

அவ்வப்போது நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் பாவம் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

அவன் வீட்டிற்கு அருகில் ஒரு மரநிழலில் காரை பார்க் செய்துவிட்டு இறங்கினோம்.

வீட்டினுள்ளே செல்லும்போது வாசலில் போட்டிருந்த மயில்தோகை கோலத்தைப் பார்த்து வியந்த சரஸ்வதி, “குட்டிப்பா இங்க பாருங்க நம்ம மாமி போட்ட கோலம் அப்படியே இங்கயும் போட்டிருக்கு” என்றாள்.

வீட்டினுள் சென்றபோது, என் தம்பி குமாரும், மாமியும் எங்களை வரவேற்றனர்.

எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. நானும் சரஸ்வதியும் மாமியை சற்றும் என் தம்பி வீட்டில் எதிர் பார்க்கவில்லை.

“சரியான நேரத்துலதாண்டா நீயும், மன்னியும் வந்திருக்கீங்க…முந்தாநாள் வெள்ளிக்கிழமைதான் எனக்கும் வனஜாவுக்கும் முருகன் கோவில்ல சிம்பிளா கல்யாணம் நடந்தது. இவ பொண்ணும், என்னோட பொண்ணும் எங்களிடம் ஸ்கைப்ல பேசி அப்ரூவல் குடுத்துட்டாங்க…. நீயும் மன்னியும் என்னை மறு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அடிக்கடி வற்புறுத்துவீங்க. அதுக்கு இப்பதான் நேரம் வந்தது. ஒரு கல்யாணத்துலதான் இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும்னு சொல்வாங்க. உன்னோட அறுபதாம் கல்யாணத்துலதான் எங்களோட கல்யாணம் முடிவாச்சு. நேர்ல வந்து உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கலாம் என்று நினைத்திருந்தோம். நீங்களே வந்துட்டீங்க.”

இருவரும் எங்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.

“உங்களோட அறுபதாம் கல்யாணத்தன்னிக்கிதான் இவர் எங்களோட கல்யாணப் பேச்சை என்னிடம் ஆரம்பித்தார். எனக்கு உங்களையும், சுந்தரி, ரேவதியையும் ஏற்கனவே ரொம்ப பிடித்திருந்தது. இவர் என்னை ப்ரப்போஸ் பண்ண நேர்மை எனக்கு இவர்மேல் மரியாதையை ஏற்படுத்தியது. எனக்கு பணம் காசுக்கு பஞ்சமில்ல. ஒரே பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன். கடமைன்னு ஒண்ணும் பாக்கி இல்ல. இனிமேல் என்னோட வாழ்க்கையை நான் சந்தோஷமா அமைச்சிண்டு எனக்கே நான் ஒரு அழியாக்கோலம் போட்டுண்டா என்னன்னு தோணித்து….அதான்.”

வனஜாவின் கண்கள் கலங்கின. சரஸ்வதி அவளை கட்டியணைத்துக் கொண்டாள். வனஜா வடை பாயசத்தோடு சமைத்தாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.

நாங்கள் கிளம்பும்போது வெளியே தரையில் இரண்டு மயில்கள் தோகை விரித்து ஆடிய கோலத்தில் போட்டிருந்த கோலத்தைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தோம்.

என் தம்பி அதிர்ஷ்டக்காரன்தான் என்று நான் நினைத்துக்கொண்டேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
கதிரேசன் காலையிலேயே களத்துமேட்டுக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு தற்போது இருபத்தியாறு வயது. பி.ஈ படித்து முடித்ததும் ஒருவருடம் சென்னையில் மென் பொறியாளராக வேலை பார்த்தான். ஆனால் அவனுக்கு அந்தப் பரபரப்பான சென்னை நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. அங்கு வெள்ளந்தியான மக்கள் குறைவு. பொய்யர்களும், ...
மேலும் கதையை படிக்க...
"பாலகுமார் சார், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு லஞ்சுக்கு கண்டிப்பா நீங்க வர்ரீங்க... என் பெரியம்மா மகள் கோயமுத்தூர்லர்ந்து வந்திருக்கு, உங்கள பார்த்து பேசனும்னு ஒத்த கால்ல நிக்குது.." "சரி ஏகாம்பரம், ஆனா அவங்க எதுக்கு என்ன பாக்கணும், பேசணும்? எனக்கு அவங்களோட ...
மேலும் கதையை படிக்க...
செய்தி வெளியானதும் தமிழகமே அலறியது. எதிர் கட்சித் தலைவரும், தேர்தலில் டெபாஸிட்கூட வாங்க முடியாத இன்னபிற லெட்டர் பேட் உதிரிக் கட்சிகளின் தலைவர்களும், தமிழக முதலமைச்சரை உடனடியாக ராஜினாமா செய்யச்சொல்லி கரடியாகக் கத்தினார்கள். தமிழகத்தில் பெண்கள் இனி பாதுகாப்பாக இருப்பது சாத்தியமில்லை என ...
மேலும் கதையை படிக்க...
அறுவை சிகிச்சை முடிந்து பதினைந்து நாள் நர்ஸிங்ஹோம் வாசத்திற்குப் பிறகு சரஸ்வதி இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாள். மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டி, உதடுகள் உலர்ந்து தளர்வாகக் காணப்பட்டாள். மெல்லிய குரலில் கணவனிடம், “எல்லாம் எடுத்துக் கொண்டீர்களா? பில் செட்டில் பண்ணியாச்சா?” ...
மேலும் கதையை படிக்க...
திருநெல்வேலியில் உள்ள கொட்டாரம் கிராமத்தில்தான் சிவசாமி பிறந்து வளர்ந்தார். தற்போது அவருக்கு வயது ஐம்பத்திஎட்டு. பத்தாப்பு வரையும் படித்திருக்கிறார். கொட்டாரம் கிராமத்து பள்ளியில் முப்பது வருடங்களாக நேரத்துக்கு மணி அடித்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர். பள்ளி ஆரம்பிக்கும்போதும், பள்ளி விடும்போதும் சரியான நேரத்துக்கு மரத்தில் ...
மேலும் கதையை படிக்க...
பிடித்தமான காதல்
ஐ.டி நடப்புகள்
மி டூ
ரிஸ்ட் வாட்ச்
முருங்கைக்காய்

மாமி போட்ட கோலம் மீது ஒரு கருத்து

  1. Revathy Balu says:

    நன்ராக சுவாரசியமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)