Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மகன்

 

நான் போய் இறங்கியபோது, பண்ணைப்புரத்தில் வித்தியாசமான சூழல் நிலவியது. ஊரின் தெற்கை எல்லை கட்டியிருந்தது வாகான புளியமரம். புளியமரத் தூரைச் சுற்றி மழையை நேரே வேருக்குள் இறக்கிவிடுவது போல் பள்ளம் நோண்டி சுற்றி வட்ட மேடை கட்டியிருந்தார்கள். செழிக்க தண்ணீர் குடித்த புளிய மரம் குளு குளுவென்று நிழல் பரப்பி முன்வெயில், பின்வெயில் படாமல் வட்ட மேடையில் அமர்ந்தவர்களைக் காத்தது.

இறந்து கிடக்கும் அன்னகாமு அத்தையின் மகன் நிலப்பிரபு மாதிரி இருந்தான். பண்ணைப் புரத்துக்காரர்கள் புளிய மரத்து மேடை அருகே அவனை மறித்து நிறுத்தி இருந்தார்கள். அவன் சொந்த ஊரான புத்தூரிருந்து பண்ணைப்புரத்துக்கு ஆட்களை வேன் நிறைய கூட்டி வந்திருந்தான். பாலைவனபுரம் என்று பெயர் கொடுத்திருக்க வேண்டும். நத்தம் காடுகளின் மத்தியில் பாலைவனத்தில் குடியேறியவர்களின் தொடக்ககால ஆசையை பண்ணைப்புரம் என்ற பெயர் காட்டிக்கொண்டிருந்தது. பண்ணைப்புரத்தை நட்ட நடுவாகப் பிளந்து கொண்டு பல ஊர் பஸ்களும் லாரிகளும் கார்களும் ஓடுகிற சிறு நகரமாக இப்போது மாறியிருக்கிறது.

இறந்து நாற்காயில் சாத்திவைக்கப்பட்டிருக்கும் அன்னகாமு அத்தை எனக்கு நேரடி உறவில்லை. கொடி வழி, கிளை வழி தேடித் தொட வேண்டும். உடம்புக்குச் சீக்காகி ரொம்ப முடியாமலிருந்த இரண்டு மாதங்களுக்கு முன் சேதி வந்த போது போய்ப் பார்த்தேன். அப்பன் பிறந்து வளர்ந்த பூமியைத்தான் சொந்த ஊர் என்றழைக்கிறார்கள். அம்மா பிறந்த ஊர் பிள்ளைகளுக்குச் சொந்த மண்ணாகத் தென்படுவதில்லை. அம்மா ஊருக்குப் போயிருந்தேன் என்று பிரித்துச் சொல்வதே பழக்கமாயிருக்கிறது. சொந்த ஊரிலிருந்து ஒரு வருஷம் முன்னாலேயே தாய், தகப்பனை விரட்டியடித்த மகனை மறித்து நின்ற பண்ணைப்புரத்து ஆட்கள் தயார் நிலையில் நின்றார்கள். விரட்டியடிக்கப்பட்ட அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் மூத்த மருமகன் என்ற பெயரில் வருகிறவர்களையெல்லாம் அண்டக்கொடுத்து ஆதரிக்கும் நிழல் பண்ணைப்புரத்தில் அவர்களுக்குக் கிடைத்தது.

மகன் முதல் ஸீட் வைத்த வேன்தான் பேசினான். பிணத்தைச் சொந்த ஊருக்கு எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்ய வசதியாக ஸீட் வைத்த வேன் தேவைப்பட்டது. ஆனால் பிணம் என்று தெரிந்தவுடன் வேன்காரர்கள் பின் வாங்கினார்கள். கடைசியில் ஸீட் வைக்காத இந்த டெம்போ வேன் கிடைத்தது.

“வந்தது வந்திட்டீங்க. போய் அழுகிறவங்க அழுங்க. ஆனா அந்த அம்மாவை ஊருக்கு எடுத்திட்டுப் போறது செய்றதுங்கறது வேலை வேண்டாம்”

ஊரிலிருந்து மகன் தண்ணி வாங்கிக்கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்திருக்கிறான். இப்போதெல்லாம் அப்படித்தான் நடக்கிறது. கல்யாணம், கருமாதி, சடங்கு, அம்மன் கொடை என்று எந்த நிகழ்ச்சியானாலும் இதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு நடந்து வருகிறது. தண்ணி வாங்கி ஊத்தாமல் எந்த விழாவும் நடக்கக்கூடாது என்பதில் கிராமத்துக்காரர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதற்கு எதிரான சாட்சிய சுத்தமாய் நிற்கிறது பண்ணைப்புரம். ஏறு வெயில் சூடு காலையிலேயே எகத்தாளம் போட்டது. இறங்கி கூட்டத்துக்கு நடுவில் நான் பாதை உண்டாக்கியபடி நடக்க வேண்டியிருந்தது.

போன தடவை இந்த இடத்தில் காலடி வைத்தபோது அன்னகாமு அத்தை மரணப்பாதைக்குள் கருணையில்லாமல் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நார்க்கட்டில் படுத்தபடியே அழுதாள். மகன் பற்றின சித்திரம் அப்போது புலப்பட்டது.

கூட்டத்தை விலக்கியபடி நடுவுள்ள மகள் தனபாக்கியம் கண்ணில் கட்டிய நீர்த்துளிகளுடன் என்னை எதிர் கொண்டாள். இடுப்புக் குழந்தை என்னிடம் வரத் தாவியது.

“எப்ப இறந்தது?”

“ராத்திரி ஒன்பது மணி, ஒங்களுக்குச் சேதி சொன்ன கொஞ்ச நேரத்தில் உயிர் அடைஞ்சிட்டது”

முதல் நாள் நினைவு தப்பியது, தொடர்ந்து இரண்டு நாட்கள் நினைவு தப்பிய நிலையிலேயே எமனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். நினைவு மீண்டும் புத்திப் பிசகு இல்லாமல் இருந்த அந்த ஒரு கணத்தில் அன்னகாமு அத்தை சொல்லியிருக்கிறாள்:

“தம்பி வந்ததுக்கப்புறம் தான் என்னைத் தூக்கணும்”

“அப்பிடிச் சொல்லிச்சி அம்மா” என்று கலங்கியபடி வந்தாள் தனம்.

“அவன் நிக்கிறானே” என்பது போல் நான் தயக்கப்பட்டு திரும்பிப் பார்த்த போது,

“நீங்க பேசாம வாங்க மாமா”

இழவுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த தெருவுக்குள் நடந்தாள். இழவுச் சூழலுக்குப் பொருந்தாத காட்சி பந்தலில் உட்கார்ந்திருந்த எல்லோரையும் தூக்கிப்போட்டு மிதி, மிதி என்று மிதித்தது. ஏதாவது ஒரு மாய்மாலம் செய்து, அந்த இளைஞரைப் பந்தலிருந்து நகர்த்திப் போனால் நல்லது என்று தோன்றியது. துட்டி (இழவு) கேட்டுப் போகிறவர்களுக்கு முதல் சாவு எப்படி விழுந்தது என்று உணர்த்தியிருக்க வேண்டும். எப்படிப்பட்டவர் சாவு என்ற தராதரமும் உள்ளது.

முப்பது வயதில் அடி வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர், நேர்த்தியான பேண்ட், சபாரி கோட், விலை கூடுன மிதியடி, வலது கையில் பிராஸ்லெட், இடது கையில் தங்கக் கெடிகாரம், இரண்டு விரல்களில் சேவல் கொண்டை போல் அகலமாய் மோதிரம்.

பல நேரங்களில் இள வயதிலேயே தலையில் குறுக்கிடும் பாலைவனத்தை மறைக்க தொப்பி இல்லாமல் முடியாது. ஆனால் இழவுச் சூழலுக்குரிய சூதானம் இல்லாமல் அந்த இளைஞர் அங்கே தென்பட்டார். மகன் மரத்தடியில் வித்தியாசமான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தபோது அவர் பந்தலுக்கடியில் பொருத்தப்பாடு இல்லாத காட்சியை விதைத்துக் கொண்டிருந்தார். ரகசியப் போலீஸ் பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் அளவில் உள்ள அதிகாரி என்று சொன்னார்கள். வேறெங்கேயோ போய் விட்டு நேரே இங்கு வந்து தோரணையாய் நிற்கிறார் என்று தெரிந்தது. அவர் யாரோடும் பேச்சுப் பழக்கம் போகாமல் தனியாக நின்றார். யாருடனும் அவர் பேசப்பிரியப்படவில்லை. அதே பொழுதில் இழவு வீட்டின் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் சாமியாரப்பன் அங்கும் இங்கும் பகடி பேசியபடி உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்தார். ஒரு இடத்தில் இருப்புக்கொள்ளவில்லை. யார் இழவுக்கு உரியவரோ அவரே கொண்டைக் கரிச்சான் குருவி போல் அலைந்து கொண்டிருந்தார்.

வெளி விளிம்பில் உட்கார்ந்திருந்த குடிமகன் கனகராசு “இவரைப் பாத்தா, உள்ளே சாத்திவைத்திருக்கிற அம்மாவுக்குப் புருஷன்னு தோணுதா” என்றான்.

“அதானே” என்ற சின்னராஜ், சாமியாரப்பனின் கையை வெடுக்கெனச் சுண்டி, “ஆமா. மாமா. அந்த அம்மாவுக்கு நீங்க யாரு?” என்றார் கேலியாக.

பேச்சு சாதுர்யம் வளைந்து வளைந்து கொட்டிக் கொண்டிருந்தது. ஓடைக்கரை தண்ணீருக்குள் உட்கார்ந்து, உட்கார்ந்து எழுகிற தாடிக்கொம்பு போல மாமாவின் பேச்சு வளமாய் நனைந்து எழும்பி, எழும்பி, மேலே வந்தது. இழவு வீட்டுக்குச் சரிப்பட்டு வராத அவரையும் அந்த இளைஞரையும் அங்கிருந்து நானே நகர்த்திக் கொண்டு போய்விட நினைத்தேன். அதுதான் அந்தச் சூழலுக்குத் தோதாயிருக்கும்.

“மாமா. யார் யாருக்கு தாக்கல் அனுப்பினீங்க?” நான் கேட்டேன். உண்மையிலேயே வெற்றிலை குதப்பியபடி, ததபுதா, ததபுதா என்று குதித்துக் கொண்டிருந்த அவரை அந்தச் சூழலுக்குள் கொண்டு வரவேண்டியிருந்தது.

“அது கொள்ளேத் துட்டில்ல ஆயிருச்சி” என்றார் பட்டென்று.

இங்கு பேச்சு சாதுரியம் முக்கியம் அல்ல, பொருத்தமான பதிலை உதிர்க்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை.

“எந்தெந்த ஊருக்கு அனுப்பினீங்க?”

“முந்தின நாள் பொழுதடைஞ்சு ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் உயிர் அடைஞ்சுது. ஆனாலும் கிழவிக்கு இரண்டு நாள் நல்ல போராட்டம் தான். யோசிச்சு, யோசிச்சு வரிசைக் கிரமமா எல்லா ஊருக்கும் போன் போட்டாரு மூத்த மாப்பிள. அது எவ்வளவோ துட்டு ஆகிறது?”

“கடைசியில சொந்த ஊரை விட்டுட்டீராக்கும்,”

“பெத்த மகனுக்கும் ஒரு வார்த்தை… ம்ஹீம், சொல்லத் தோணலே.”

சின்னராசு குறுக்கிட்டார், பட்டியல்கல்லில் துணிதப்புவது போல்.

படீரென்று கொதித்தார் மாமா.

“சொந்த ஊர் எனக்கு இல்லையே?”

“அப்ப மகன்?”

“மகனா? அதான் அவனை அன்னைக்கே தலை முழுகியாச்சே”

பதில் குறிவைத்து அடித்தது மாதிரி எல்லோரையும் கலக்கியது. அதில் கூடுதல் சுதாரிப்போடேயே இருந்தார். சின்னராசு இடக்காகக் கேட்டார்,“அப்ப இதுயாரு, ஊரு?”

“நா ஏதோ வவுத்துக் கஞ்சிக்கு இங்க வந்திருக்கேன்”

மாமாவின் பதில் மறுபடியும் தாக்கியது. மூத்த மருமகனை அது சுட்டியிருக்க வேண்டும். வேலையாய்ப் போவது போல், பெஞ்சிலிருந்து எழுந்து போனார். நிலைமை மீறிப் போகாமல், நான் மாமாவைப் பார்த்துக் கையமர்த்தினேன். குளிப்பாட்டுவதற்கு முன் தலைக்கு எண்ணெயும் சீயக்காயும் வைக்கிற சடங்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. எண்ணெயும் சீயக்காயும் குழைத்த பாத்திரம் அத்தையின் தலைமாட்டுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டது. வயதான பெரியம்மா ஸ்டூல் போட்டு உட்கார்ந்து, ஒவ்வொருவர் கையிலும் சீயக்காய் குழம்பை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தாள். ஆண்கள் என்றால் இடக்கை, பெண் என்றால் வலக்கை. எந்தப் பிரேதமாக இருந்தாலும் அதுதான் வழக்கம். பெண்ணுக்கு வலக்கை செயல்படுகிற உரிமை நீக்கப்பட்டிருந்தது.

மாமா முதல், பிறகு வரிசையாய் மருமகன்கள், பூனை போல் பம்மிப் பம்மிப் பின்னாலே வந்த மகன் சட்டென்று எண்ணெய்க்குக் கை நீட்டியிருந்தான். அந்தப் பெரியம்மாவின் கையும் மேலே உயர்ந்து தாழ்ந்தது. பெரியம்மாவுக்குப் பக்கத்தில் நின்று கைகழுவத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மூத்தமகள் மல்லிகா, சட்டென்று கையைத் தட்டி விட்டாள். எண்ணெயும், சீயக்காயும் அவன் மூஞ்சியில் அடித்தது. கூட்டம் பதட்டமாகியது. வரக்கூடாது, சடங்குகள் செய்யக்கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பதை முன்பே வெளிப்படையாகத் தெரிவித்து விட்டிருந்தார்கள்.

“என்ன இருந்தாலும் பெத்த மகன் இல்லையா? அவன் தானே செய்யனும்? அப்பனும் ஆத்தாவும் மகனுக்குக் கட்டுப்பட்டவங்க தான். இன்னைக்கு அடிச்சிக்கிருவீங்க, நாளைக்கு ஒண்ணாக் கூடிக்கிருவீங்க.”

மகன் கூட்டி வந்திருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் அவனுக்காகப் பேசினார்கள். அன்னகாமுவின் சடலத்திற்கு முன்னால் வெலம் எடுத்து சாமியாடியபடி நின்றார் மாமா. ஆங்காரங் கொண்டிருந்த பெண்கள், அவனை மறித்து நின்றார்கள். மூத்த மகள் மல்லிகா எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போய் விட்டிருந்தாள்.

சுடுகாட்டில் சிதை மேல் அன்னகாமு அத்தையைப் படுக்க வைத்திருந்தது. முகத்தை மூடு முன் எல்லோரையும் ஒரு முறைபார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். பெண் என்பதால் பூமாதேவியைப் பார்த்தபடி குப்புறப்படுக்க வைத்தார்கள். ஆண் என்றால் வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கப் படுக்க வைப்பார்கள்.

“அவனைக் கொஞ்சம் விடுங்கய்யா. கொள்ளி வைக்கட்டும்” கூட்டத்தில் யாரோ சொன்னார்கள். மகன் கொள்ளிக்குடம் எடுத்தால் குடம் கொத்தமாட்டோம் என்று ஒண்ணு போல ஐந்து மருமகன்களும் மறுத்துவிட்டிருந்தார்கள். யாருக்கு இஷ்டமோ கொத்திக்கோங்க என்று அரிவாளை வாங்க மறுத்தார்கள். அதற்கும் தயாராய் மாமன் முறைவேண்டிய ஆளை ஏற்பாடு செய்து, சொந்த ஊரிருந்து கூப்பிட்டு வந்திருந்தான் அவன்.

மல்லிகா சடக்கென்று முன்னால் வந்தாள், “யாரும் வைக்கக்கூடாது, எங்கம்மாவுக்கு நான் வைக்கிறேன்.” அவளுடைய வலது தோளில் கொள்ளிக்குடம் ஏறியது.

“பாத்து, பாத்து. ஆண்களுக்குத்தான் வலது தோள்ல வைக்கிறது.”

ஞாபகப்படுத்தினார்கள். மல்லிகா மூன்று முறைசுற்றி வந்தாள். மூத்த மருமகன் ராம்குமார் குடம் கொத்த, துவாரம் வழியாகத் தாரை பீறிட்டு மண்ணை நனைத்தது. சடலங்கள் எரிந்த எலும்புச் சில்லுகள் கால்களில் குத்தின. ஒரே வெறியாய் சன்னதம் வந்தது போல் மூன்று முறைசுற்றி வந்தவள் தலை மாட்டில் குடத்தைப் போட்டுடைத்தாள்.

“உடைச்சாச்சா? அப்படியே திரும்பிப் பார்க்காம போ”

எண்ணெயும் சீயக்காயும் குழைத்து எடுத்துவிட்ட பெரியம்மா கட்டளையிட்டு, கூட்டிக்கொண்டு நடந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
தடயம்
பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள். வங்கியின் வாசலில் ஏறியபோது என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு கால்களின் நடுக்கத்தை உணர்ந்தாள். உணவைவிட அச்ச உணர்வுக்குப் பயண வேகம் அதிகம். ...
மேலும் கதையை படிக்க...
முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது. அப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண் அக்கினிச் சட்டி ஏந்துவது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல் கூட இன்னும் மறையவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
தடயம்
தாலியில் பூச்சூடியவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)