பையன் புத்தி..!

 

நான் வாசலில் எனது இரு சக்கர வாகனத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன்.

என் மூத்த மகன் விக்னேஷ் பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படிப்பவன் எனக்கு உதவியாய் இருந்தான்.

எதிர் வீட்டு வாசலில்… இளைஞன் வெள்ளையும் சள்ளையுமாய்க் கிளம்பி அலுவகத்திற்குப் புறப்பட தயாராய் வந்து புது தன் ஹீரோ ஹோண்டாவை எடுத்தான்.

பின்னாலேயே வழியனுப்ப அவன் இளம் மனைவி சுந்தரி கையில் ஆறு மாத குழந்தையுடன் வந்தாள்.

முதலில் இவர்கள் பேர், ஊர் எனக்குத் தெரியாது. இரண்டு மாதங்களுக்கு முன் எதிர் வீட்டிற்கு இவர்கள் குடி வந்தார்கள்.

அவர்கள் குடியமர்ந்த இரண்டு நாட்கள் கழித்து விக்னேஷ்…….

” அப்பா. ..! ” அழைத்தான்.

” என்ன …? ” ஏறிட்டேன்.

” எதிர் வீட்ல குடி வந்திருக்கிறவங்களை உங்களுக்குத் தெரியுமா. ..? ” கேட்டான்.

” தெரியாது. .! ” சொன்னேன்.

” பொண்ணு பேர் சுந்தரிப்பா. ஒண்ணாம் வகுப்பிலேர்ந்து பத்தாம் வகுப்பு முடிக்கிறவரைக்கும் என்னோடு படிச்சவள். வகுப்புத் தோழி !..” சொன்னான்.

உண்மையில் இது எனக்கு வியப்பு திகைப்பாய் இருந்தது. வலிய வந்து இந்த அறிமுகம் எதற்கு. .? என்ற கேள்வியும் உள் எழுந்தது.

அவளுடன் விக்னேஷ் பேசிக்கொண்டிருந்தால் தன்னைத் தவறாக நினைக்கக் கூடாதென்பதற்காக முன் ஜாக்கிரதை நடவடிக்கையா இந்த அறிமுகம். .? – குழம்பினேன்.

” நல்ல பெண்ப்பா .! ” விக்னேஷ் மறுபடியும் என்னிடம் வலிய சொல்லி சான்றிதழ் கொடுத்தான்.

அத்துடன் அந்த குடும்பத்திப் பற்றிய பேச்சு எங்களுக்குள் முடிந்தது.

அடுத்து…. நானும் அந்த குடும்பத்தைப் பற்றி அவ்வளவாய் அக்கறை காட்டவில்லை. பழக்கம் இல்லாததால் எதிர் வீட்டிலும் பேச்சு தொடர்பில்லை.

அவள் அப்படி பழகாததற்குக் காரணம். .. தன் வகுப்புத் தோழனுக்கு முன் கைக்குழந்தையுடன் எதிரில் நிற்க வெட்கமாய் இருக்கலாம். இல்லை. … வகுப்புத் தோழனென்று விக்னேசுடன் பேசிப் பழகினால் குடும்பத்தில் அனாவசியப் புகைச்சல் வரும் என்பதைத் தவிர்ப்பதற்காக இப்படி பாராமுகமாய் இருக்கிறாள். எப்படியோ. .. அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் தானும் தொல்லையில் அகப்படாமல் இருப்பவள் நல்ல பெண் என்று மனதிற்குப் பட்டது.

இப்போது. ..

” சுந்தரி ! நான் போய் வர்றேன் .” என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

” இந்துக்குட்டி ! அப்பாவுக்கு டாடா சொல்லு. .” அவள் குழந்தையின் கையைப் பிடித்து ஆட்டி கணவனுக்கு டாடா சொன்னாள்.

கணவன் தலை மறைந்தது குழந்தையுடன் வீட்டினுள் சென்றாள்.

எனக்குள் பளீரென்று மனதுக்குள் மின்னலடித்தது.

” விக்னேஷ் ! ” அழைத்தேன்.

அவன் செய்த வேலையை நிறுத்திவிட்டு. ..

” என்னப்பா. ..? ” பார்த்தான்.

” சுந்தரி உன் வகுப்புத் தோழிதானே. .? ”

” ஆமாப்பா. ”

” இருபது வயசுல அவள் ஒரு கணவனுக்கு மனைவி, ஒரு குடும்பத்துக்குத் தலைவி. இதையும் மீறி ஒரு குழந்தைக்கும் தாய் ! ” நிறுத்தினேன்.

இந்த திடீர் விளக்கத்தைக் கேட்டு விக்னேஷ் என்னைப் புரியாமல் பார்த்தான்.

” உன் வயசுக்காரியான அவள் வாழ்க்கையைத் தொடங்கி வாழ ஆரம்பித்து விட்டாள். நீ இன்னும் படிக்கும் மாணவனாய் இருக்கே. ” நடப்பைச் சொன்னேன்.

உண்மை உரைக்க. .. அவன் முகத்தில் திகைப்பு வந்தது.

” ஆமாப்பா. .” ஆச்சரியமாகச் சொன்னான். ஆமோதித்தான்.

” நீ வாழ்க்கையைத் தொடங்க படிப்பை முடிக்கணும். அடுத்து வேலை கிடைக்கனும். உன் சம்பாத்தியத்தை நம்பி ஒருத்தன் உனக்கு பெண் கொடுக்கனும். அப்புறம் வாழ்க்கை. நீண்ட இடைவெளி இல்லே. ..?! ”

” ஆமாம்ப்பா. .” அவன் இதற்கும் தலையாட்டினான்.

” பெண்கள் பொதுவா பதினெட்டு, இருப்பது வயசுக்கெல்லாம் வாழ்க்கையை ஆரம்பிச்சுடுறாங்க. ஆண் தொடங்க இருபத்தி ஏழு வயசுக்கு மேல் ஆகுது. அப்படி ஏழெட்டு வயசு முன்னாடித் தொடங்கினாலும் பெண்… கணவன், குழந்தைன்னு சின்ன வட்டத்துக்குள்ளேயே அடங்கிப் போகிறாள். பெண்ணைவிட தாமதமாக வாழ்க்கையைத் தொடங்கும் ஆண். ..அம்மா, அப்பா என்கிற பெத்தவங்களையும் தாங்கும் கூடுதல் பொறுப்பையும் ஏத்துக்கிறான். அதோடு மட்டுமில்லாமல்…. தம்பி, தங்கைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை வேற செய்யிறான். ஆக. .. ஆணுக்கு வாழ்க்கையைத் தொடங்கியும் சுமை. கூடுதலான பொறுப்புகள். ” நிறுத்தினேன்.

விக்னேஷ் நான் சொன்ன எல்லா உண்மைகளையும் மனதில் பட மவுனமாக இருந்தான். நான் எடுத்துக் காட்டியதால் அவன் முகத்தில் தன் சுமையும் பொறுப்புகளும் புரிந்தது.

” என்னங்க. .! ” என் மனைவி உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.

” என்ன. .? ”

” கொஞ்சம் உள்ளே வாங்க. .”

நான் எழுந்து உள்ளே சென்றேன்.

அருகில் சென்றதும். ..

” புள்ளைகிட்ட என்ன பேச்சு பேசனும் என்கிற புத்தியே உங்களுக்குக் கிடையாது ! ” திடீரென்று முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு குற்றம் சாற்றினாள்.

” என்ன. .? ” அதிர்ச்சியாய்ப் பார்த்தேன்.

” பின்னே. .. படிக்கிற புள்ளைகிட்ட….. உன் வயசுக்காரி கையில் குழந்தையோட இருக்க…. உனக்கு இப்போ கிடையாதுன்னா சொல்றது. .? ” சாடினாள்.

” ஏன். .. சொல்றதுல என்ன தப்பு. .? ”

” மூஞ்சி. .! ”

” சொர்ணா ! அவனும் வயசுக்கு வந்த புள்ள. அவனுக்கும் வாழ்க்கைன்னா என்ன. . அதன் கஷ்ட கஷ்டமெல்லாம் தெரியும்.! ”

” அதான் சொல்லிக் கொடுத்தீங்களா. ..? ”

” ஆமா. வயசுக்கு கோளாறு பையன் ஜொள்ளு விட்டுக்கிட்டு காதல், கத்தரிக்கான்னு பொண்ணுங்க பின்னால அலையுறதாய்க் கேள்விப் பட்டேன். இவனை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நெடுநாளாய் மனசுக்குள் ஒரு ஓட்டம், உள்ளுக்குள் உறுத்தல். இன்னைக்கு அவன் வகுப்புத்தோழி வழியாய் இந்த வாய்ப்பு கிடைச்சுது. அதான். .. உனக்குக் காதல் , கத்தரிக்காய்… கல்யாண வயசு எல்லாம் இப்போ இல்லே. நீ படிப்பை முடிக்கனும். வேலை தேடனும், கிடைக்கனும். அடுத்து கலியாணம். கலியாணம் முடிச்சி…. மனைவி, மக்கள், தன் குடும்பம்ன்னு சின்ன வட்டமில்லாம அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளையெல்லாம் காப்பாத்துற பொறுப்புகள் இருக்குன்னு சொன்னேன். பையன் ஆடிட்டான். ” நிறுத்தினேன்.

மனைவி மவுனமாக நின்றாள்.

” சொர்ணா. .! வயசுக்கு கோளாறினால் பையன்கள் அப்படி இப்படித் தவறத்தான் செய்வாங்க. பெத்தவங்க, பொறந்தவங்கதான் பொறுப்பா கண்டுபிடிச்சு திருத்தனும். அதைத்தான் நான் செஞ்சேன். ” நிறுத்தினேன்.

மனைவிக்குப் புரிந்தது.

வெளியில் விக்னேஷ் மரம் போல் நின்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு கைபேசி கலவரம்
இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது. தெளிவாய்த் தெரிந்தது. விழுந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து நாற்காலியை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். கூடத்தில் தொலைக்காட்சிப் ...
மேலும் கதையை படிக்க...
கணவன் - மனைவி இருவருக்கும் மாநகரத்தில் ஆளுக்கொரு பக்கம் வேலை. யாரும் துணை இல்லை. அக்கம் பக்கம் உறவில்லை. இது அவர்களின் துரதிர்ஷ்டம்.!! அதனால் கணவன் மனைவி இருவரும் ..... கைக்குழந்தையாய் இருக்கும் தங்கள் மகள் யாழிசையை நல்ல வேலைக்காரியாய் அமர்த்தி, கண்காணிக்கச் செய்வது ...
மேலும் கதையை படிக்க...
தலைவிரிகோலமாய் அழுத்த கண்ணும் சிந்தையுமாய் ஆனந்தி வீடு மூலையில் சிலை மாதிரி அமர்ந்திருந்தாள். அவள் எதிரில் கூட நிற்க பிடிக்காதவனாய் சாரங்கன் இறுகிய முகத்தோடு வீட்டை விட்டு வெளியேறினான். அவனுக்குள் அம்மா சொன்னது காதில் எதிரொலித்தது. "இதோ பார் சாரங்கா! ஆனந்தி செஞ்சது மகா தப்பு. ...
மேலும் கதையை படிக்க...
துணிக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது எனக்கும் என் மனைவிக்குமான முரண். தீபாவளி நெருக்கம். கடையில் கூட்ட கசகசப்பு. தரை தளத்தில் புடவையைத் தேர்வு செய்யத் தொடங்கியதுமே என் மனைவி, ''படைக்க ஒரு வேட்டி துண்டு எடுத்து வந்துடுங்க.'' சொன்னாள். அவளால் மாடி ஏற முடியாது. முழங்கால், ...
மேலும் கதையை படிக்க...
காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவன் ஆனந்த் அலுவலகத்திற்கு 8 .45 க்குப் புறப்பட்டுச் சென்றபிறகு எல்லா வீட்டு வேலைகளையும் மடமடவென்று முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு நூலகப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தபோதுதான் வாசல் அழைப்பு மணி அடித்தது. 'யாராக இருக்கும்..? ! ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கைபேசி கலவரம்
தாய்
சிவப்பு முக்கோணம்..!
படையல் துணி!
விட்டுக் கொடுப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)