பழனியம்மா!

 

“”பழனியம்மா… ரெடியாயிட்டியா புள்ளே?”
“”ரெடியாயிட்டுதேன் இருக்கேன்…”
“”முத்துலட்சுமி போட்டோவையும், ஜாதகத்தையும், மஞ்சப் பைல வச்சு, குலுக்கைக்கு மேல வச்சிருக்கேன். அதை எடுத்தாந்திரு.”
“”ஆகட்டும் மாமா.”
பழனியம்மாவும், குழந்தை ஆர்த்தியும் அமர்க்களமாக டிரஸ் அணிந்து, பழனிவேலு சொன்ன மஞ்சப்பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
“”இதென்ன புள்ள மேக்கப்பு? பீரோவுல இருந்த அம்புட்டு நகையையும் அப்பிக்கிட்டு நிக்குதே.”
“”நாம பட்டணம் போதோமுல்ல, அதேன்!”
“”பீரோவுல, அய்த்தை பாம்படம் இருக்குமுல்ல, அத்தையும் எடுத்து போட்டுக்கோ, பட்டணத்துல எல்லாரும் உன்னதேன் பாப்பாக.”
பழனியம்மா!“”போ மாமா, என்னை <லூசுன்னு நினைச்சுப் புட்டியா? அய்த்தை, அவுக காலத்துல, சோழத்தட்டைய ஒடிச்சி, அதுக்குள்ள இருக்குத பெண்டை பிச்சி, காது ஓட்டையில போட்டு, பாம்படம் போடுததுக்கு பெருசா வளத்தாக. அப்படியிருக்க, நானு எப்படி காதுல போடுததாம்?” என்று சிரித்த பழனியம்மாள் தொடர்ந்தாள்…
“”அதேன், மூணு வரிசை கல்லு வச்ச தோடும், சிமிக்கியும் போட்டுக்கிட்டேன். அய்த்தையோட, ரெண்டு சர சங்கிலியும், என்னோட முகப்பு வச்ச மூணு சர சங்கிலியும், பதக்கச் சங்கிலியும், ஒத்த கையில அவலு வளையலும், ஒத்த கையில நெளிவு வளையலும் போட்டேன்…”
“”பாப்பாவுக்கு எதுக்கு புள்ள வளையலு, இத்தனை செயினு, இவ்வளவு பெரிய தோடு, தொங்கட்டான்?”
“”நம்ம மவ, பத்ரகாளியம்மா பங்குனித் திருவிழா கழிச்சு, ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இப்பதேன் போடுதா, அதுக்குப் போயி பேச வந்திட்டீகளாக்கும்…”
சிரித்துக்கொண்ட பழனிவேலு, கதவை மூடி சாவியை தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் போட்டு, பஸ் நிறுத்தம் நோக்கி நடக்க, அவன் பின்னால் நடந்தாள் பழனியம்மா.
பழனிவேலு குழந்தையாய் இருந்தபோதே, அவன் தந்தை இறந்துவிட, அவன் தாய், பழனிவேலுவுடன் அவள் தம்பி வீட்டிலேயே செட்டில் ஆகியிருந்தாள். பழனிவேலுவின் படிக்காத தாய் மாமா தான், அவனை படிக்க வைத்து, ஆசிரியர் ஆக்கியிருந்தார். அவர்கள் சொந்த கிராமத்திலேயே இப்போது தமிழாசிரியராக பணிபுரிகிறான்.
தாய்மாமாவுக்கு நன்றி கடனாகவே, அவரது மூத்த மகள் பழனியம்மாவை திருமணம் செய்து கொண்டான். பழனியம்மா, மூன்றாம் வகுப்புக்கு மேல் செல்ல மறுத்து விட்டாள். அவள் தங்கை முத்துலட்சுமி எம்.எஸ்.சி., – பி.எட்., முடித்துவிட்டு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிகிறாள். இன்னும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை.
ஒரு வரன் வீட்டார் விலாசம் கொடுத்து, அந்த இடம் முத்துலட்சுமிக்கு சரியாக இருக்குமா என பார்த்து வரும்படி அவனது மாமா கேட்டுக் கொண்டதால், பழனிவேலு, பழனியம்மாள் தம்பதியினர், தங்கள் குழந்தை ஆர்த்தியுடன், மாப்பிள்ளை வீடு பார்த்துவர புறப்பட்டிருந்தனர்.
அந்த கடலோர நகரத்தின், கடற்கரை மெயின்ரோட்டில், கடலை பார்த்த வண்ணம் அமைந்திருந்த வீடுகளில், நான்கு வீடுகள் ஒரே மாதிரியான கட்டட அமைப்பும், வண்ணமும் கொண்டிருந்தன.
அதில், முதல் வீட்டின் அழைப்பு மணியை பழனிவேலு அழுத்த, மாப்பிள்ளையின் தந்தை வேலுச்சாமி வாத்தியார் வெளியில் வந்தார்.
அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான். பெண் வீட்டிலிருந்து வந்திருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்ட அவர், அவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்தார். அவரது மனைவி, காபி, பலகாரம் கொடுத்து உபசரித்தாள்.
“”எங்க வீட்டுல எதுவானாலும் எங்க மூத்த பொண்ணு அமுதா சொல்றதுதேன்… பக்கத்துவீட்டுலதேன் அவ இருக்கா… இந்தா கூப்பிடுதேன்…” என்ற வேலுச்சாமி வாத்தியார், அமுதாவை அழைத்து வந்தார்.
அறிமுகப்படலம் முடிந்ததும், அமுதா பேச ஆரம்பித்தாள். சுற்றி வளைக்காமல், நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
“”சார்… நானும், ரெண்டு தம்பிகளும்ன்னு எங்க அப்பாவுக்கு நாங்க மூணு பிள்ளைங்க. எனக்கு ஒரு வீடு கொடுத்து, நாப்பது பவுன் நகைபோட்டு, பேங்க் ஆபீசருக்கு கல்யாணம் செய்து வச்சாங்க. என் தம்பிகளுக்கும் ஆளுக்கொரு வீடு இருக்கு. ஒவ்வொருத்தர் கல்யாணம் முடிஞ்சதும், அப்பா வீடு கொடுத்து, தனிக்குடித்தனம் வச்சிருவாங்க. நானும், அப்பா கொடுத்த பக்கத்து வீட்டிலேயே தனிக்குடித்தனம் இருக்கிறேன். இந்த நாலு வீடும் எங்களோடது தான். அப்பா, அம்மா ஒரு வீட்டில் இருந்துப்பாங்க. நாங்க மூணு பிள்ளைகளும், வரிசையா அடுத்த அடுத்த வீட்டில் இருக்க வேண்டியதுதான்…
“”எம்.காம்., முடிச்சிட்டு பேங்க் ஆபீசராக என் பெரிய தம்பி வேலை செய்கிறான். அவனுக்குத்தான் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்க வீடு பீச்ரோட்டில், கடலைப் பார்த்தபடி இருப்பதால், ஒவ்வொன்றின் மதிப்பும், 75 லட்சத்தைத் தாண்டும். என் தம்பி பங்குக்கு வரும் வீட்டின் மதிப்பு கூட, 50 லட்சத்துக்கு மேலேதான்,” என்ற அமுதா, நிபந்தனையைச் சொன்னாள்…
“”உங்க பொண்ணுக்கு, மினிமம் முப்பது லட்சம் மதிப்புள்ள வீடு, இல்லாட்டி அதுக்கு ஈடான மனை, நகைகள், பேங்க் டெபாசிட்ன்னு வச்சிருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பேசலாம் சார். எங்க தகுதிக்கு சமமா பெண் பார்த்தா தானே மதிப்பா இருக்கும்?”
பழனியம்மா தன் வாய்மேல் கேள்விக்குறிபோல், ஆள்காட்டி விரலை வைத்து, “”அடக்கொடுமையே, படிச்ச பொம்பளையா இப்படி, தயவு தாட்சணை இல்லாம, முகத்துல அறைஞ்சாப்பு<ல பேசுதா,” என்று சன்னமான குரலில் சொல்ல, பழனிவேலு காதில் அது பட்டதும், “பேசாதே…’ என்று சைகை காட்டினான்.
பழனிவேலுவின் முகம் வாடிவிட்டதைப் பார்த்த பழனியம்மா, “”மதினி, எங்க அய்யா, படிக்காதவுகனாலும் வயக்காட்டுல, பருத்தி போட்டு, எனக்கும், எந்தங்கச்சிக்கும் ஆளுக்கு முப்பது பவுன் சேத்து வச்சாக. அய்யாவுக்கு ஆறு ஏக்கர் நிலமிருக்கு. கல்யாண பந்தி வைக்குதாப்புல, பெருசா ஓட்டுவீடு இருக்குதேன். ஆனா, கிராமத்துல எங்க வீட்டையும், நிலத்தையும் வித்தா, ஒன்றரை லட்சம் கூட தேறாது. ஒங்க சொத்து மதிப்போட ஏணி போட்டாலும் எங்க அய்யாவால எட்ட முடியாது. எங்க தரத்துக்கேத்தாப்புல நாங்க வேற இடம் பாத்துக்குதோம்,” என்று சொல்லி, ஆர்த்தியைத் தூக்கியபடி, “”அப்ப வாறோம் மதினி… புறப்படு மாமா…” என்று வெளியே வந்தவள், சற்றே தொலைவில் தெரியும் கடலை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள்.
நாட்கள் கடந்தன. பக்கத்து கிராமத்தில், அரசு பள்ளியில் பணிபுரியும் வரலாற்று ஆசிரியருக்கு முத்துலட்சுமியை மணம் முடித்து வைத்தனர்.
இருபது வருடங்கள் கடந்து விட்டிருந்தது. இன்ஜினியரிங் படித்து முடித்திருந்த ஆர்த்தி, ஒரு எம்.என்.சி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியராக சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தாள்.
மகளை விட்டுப் பிரிந்திருக்க, மனமின்றி, பழனிவேலுவும், சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்து விட்டான். கிராமத்தை விட்டு வந்துவிட்டதால் சொந்தபந்தங்களின் தொடர்பும், கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போயிருந்தது.
ஆர்த்திக்கு வரன் பார்க்க, நியூஸ் பேப்பரில், “மேட்ரிமோனியல்’ பகுதியில் விளம்பரம் கொடுத்திருந்தான்.
அவ்விளம்பரத்தைப் பார்த்து, வேலுச்சாமி வாத்தியாரின் மகள் அமுதா போனில் தொடர்பு கொண்டாள். தாங்களும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னையில் இருப்பதாகவும், நேரில் வருவதாகவும் சொல்லிவிட்டு, பழனிவேலு வீட்டிற்கு தன் கணவனுடன் வந்தாள். வந்தவர்களை வரவேற்று உள்ளே அமரச் செய்த பழனிவேலு, “”இதாபுள்ள, யாரு வந்திருக்காகன்னு பாரு,” என்று தன் மனைவிக்கு குரல் கொடுத்தான்.
வீட்டின் உள்ளிருந்து வந்த பழனியம்மா, அங்கிருந்த அமுதாவை பார்த்ததும், “”வாங்க மதினி. நல்லா இருக்கீகளா? இருபது வருசத்துக்கு முன்ன பாத்தது,” என வரவேற்றாள்.
இப்போதுதான் தான் யார் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று அமுதாவிற்கு புரிந்தது.
சுதாரித்தவள், “”ஓ… எப்படி இருக்கீங்க? ரொம்ப சந்தோஷம். உங்க பொண்ணைத்தான் பாக்க வந்திருக்கிறோமா?” என்றாள்.
பழனிவேலு முகத்தில் ஆனந்தக்களை கட்டியது.
“”பலகாரம் கொண்டு வர்றேன் மதினி, சாப்பிட்டுட்டு பேசலாம்,” என்றாள் பழனியம்மா. காபி, பலகாரம் கொடுத்து ரொம்பவே உபசரித்தாள். குசல விசாரிப்புகள் முடிந்ததும், பேச ஆரம்பித்தாள் பழனியம்மா.
“”மதினி… எம்மவளுக்கு, நூறு பவுன் நகை சேத்து வச்சிருக்கோம். என் நகை முப்பது பவுனு. அய்த்தை பாம்படம் மட்டும் பதினோறு பவுனு. அய்த்தையோட ரெண்டு சர சங்கிலி அஞ்சு பவுனு. எம்பங்குக்கு வந்த அம்மா நகை பத்து பவுனு இருக்கு. எங்க அய்யா, எம் பங்கா மூணு ஏக்கர் நிலம் கொடுத்தாக. வீட்டை நானும் என் தங்கச்சியும் ஆளுக்கு பேர்பாதியா பிரிச்சுக் கிட்டோம். பக்கத்துல இருந்த பட்டணத்தோட எங்க கிராமம் கலந்து போச்சி. எம் மூணு ஏக்கர் நிலத்த, பதினைஞ்சு கோடிக்கு, பிளாட்டு போட்டு விக்கிறவுக கேக்காக,” அவள் சொல்லச் சொல்ல அமுதாவின் முகம் வாடிப் போனது.
“”உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல மதினி, இருபது வருசத்துக்கு முன்னால, பவுன் நானூறு ரூபாவுக்கு வித்த தங்கம், இப்ப கிராமு மூவாயிரம் மேல இருக்கு. ஆர்த்தி எங்களுக்கு ஒரே புள்ள. எல்லாம் அவளுக்குத்தான். எம் மவளுக்கு நகை, வீடு, நிலமுன்னு பதினாறு கோடி தாண்டும். ஒங்க மவனுக்கு, பதினாறு கோடி மதிப்பு, சொத்திருந்தா சொல்லுங்க மதினி, பேசுவோம். தரத்துக்கு ஏத்தாப்புள்ள இருந்தாத்தேன் மருவாதின்னு உங்களுக்கு தெரியாதாக்கும்?” என்று சொல்லி முடித்தவள், தொடர்ந்து குரலைத் தாழ்த்திக் கேட்டாள்…
“”ஏம்… மதினி… சுனாமியில் உங்க டவுனுல பெரிய சேதமுன்னு, “டிவி’யில பாத்தோம். உங்க டவுனுல, பீச்சோரமா, இடமோ, வீடோ யாரும் வாங்கறதில்லைன்னு பேப்பருல பாத்ததா இவுக சொன்னாக…”
“”சுனாமிக்கப்புறம் எங்க வீடுகளோட மதிப்பு தலைகீழா குறைஞ்சிருச்சீங்க. நாங்க அந்த ஏரியாவை விட்டுட்டு, டவுனுக்குள்ளே வாடகை வீட்டில் இருக்கிறோம்… சுனாமியின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில், அம்மா, புத்தி சுவாதீனம் இல்லாம போயிட்டாங்க. இருந்த நகையை எல்லாம் விற்றுதான், அம்மாவுக்கு, “ட்ரீட்மென்ட்’ கொடுத்தோம். உங்க சொத்துக்கு சமமா எங்க கிட்ட சொத்து இல்லைங்க,” கலங்கிய குரலில் கூறிய அமுதா, “”சாரிங்க… உங்களை அன்னைக்கி, மனம் நோக பேசி விட்டேன். எங்க பையனுக்கு வேற இடத்துல பெண் பாத்துக்கிறோம்,” என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.
“”மன்னிச்சுக்குங்க மதினி… ஒங்கள நோவடிக் கணும்ன்னு இப்படி பேசல. ஒங்க தப்ப ஒணத்தனுமுன்னு பேசிப்புட்டேன். தங்கத்தோட மதிப்பும், நிலத்தோட மதிப்பும் ஏறும், இறங்கும். அதவச்சித்தேன் சம்பந்தம் பேசணுமாக்கும்? அட, குடும்பம் நல்ல குடும்பமா, ஒழுக்கமானதா, படிப்பு, உத்தியோகம், திறமை நல்லா இருக்கா… அதுக்குமேல புள்ளைகளுக்கு புடிச்சிருக்கான்னு பாக்கணும்… அதை விட்டுப்புட்டு, ஒங்கள மாதிரி பாக்கக் கூடாது. ஒங்க மவனுக்கும், எங்க மவளுக்கும் பிடிச்சுப் போச்சுன்னா, புள்ளைக சொல்ற தேதியில, கலியாணத்தை வச்சிப்புடுவோம்,” என்றாள் பட்டிக்காட்டு, படிக்காத பழனியம்மாள்.
தன் தவறை உணர்ந்து தரையை பார்த்து முகத்தைத் தொங்க போட்ட வண்ணம், கூனி குறுகி நின்றாள் அமுதா.
“”அட சட்டுபுட்டுன்னு போயி பையன் போட்டாவ குடுத்தனுப்புங்க… இப்படியே நின்னுகிட்டிருந்தா எப்பிடி மதினி…” என்று சிரித்தாள் பழனியம்மா.
தன் மனைவியை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டான் பழனிவேலு.

- ஆர்.மகாலட்சுமி (டிசம்பர் 2012)
கல்வித்தகுதி : பி.ஏ., பி.எட்., இந்தி – பிரவிண், எம்.எஸ்.சி., (யோகா)
சொந்த ஊர் : கோவில்பட்டி
தமிழ் நாளிதழ், வார இதழ் படிப்பதும், இவரது பொழுது போக்கு. எழுத்தின் மூலம், சமுதாயத்துக்கு பயனுள்ள செய்திகளை சொல்ல வேண்டும் என்பது இவரது லட்சியம். 

தொடர்புடைய சிறுகதைகள்
பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க வரும் மாப்பிள்ளை ஸ்மார்ட்டாக சிரித்துக் கொண்டிருந்தார். அவளுக்குப் பிடித்திருந்தது. பூஜாவின் அப்பா இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
(சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995) லண்டன் 1994. கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. அவள் திரும்பிப் படுத்தாள். கணவரின் குறட்டை ஒலி தொடர்ந்தது தவிர குறையவில்லை. ஒருதரம் தூக்கம் குழம்பிப்போனால் அவளால் நீண்ட நேரம்வரை தூங்க முடியாது. கணவர் எவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
சாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான்! இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து ...
மேலும் கதையை படிக்க...
எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள். அம்மா பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி மகிழ்ந்தாள். அவர்களையும் மகிழ்வித்தாள். பிள்ளைகள் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக ரசமான கதைகள் சொல்லி, சாதத்தை ...
மேலும் கதையை படிக்க...
பெரிய ஃபிளாஸ்க்குடனும் நான்கு டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன மங்களாம்பாள், 'சட்'டென நின்று விட்டாள். உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் காதில் அறைந்தன. "ஒண்ணு ஞாபகத்துலே வச்சுக்கோங்க... கல்யாணிக்கு சட்புட்டுனு ஒரு கல்யாணத்தை நடத்திப்புடணும்" - மூத்தவன் ரமேஷ். "என்ன அண்ணா... திடீர்னு சீர்திருத்தவாதியாயிட்டே" ...
மேலும் கதையை படிக்க...
முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்
யாத்திரை
சைக்கிள்
கெட்டிக்கார மருமகள்
கல்யாணீ…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)