நாய் விற்ற காசு

 

நான் அந்தத் தனியார் கம்பெனியில் எட்டு மாதங்களுக்கு முன்பு சேர்ந்த உடனேயே சக ஊழியர்கள் ரம்யாவைப் பற்றி பலவாறான கிசு கிசுக்களை என்னிடம் சொல்லி எச்சரித்தார்கள். அவ்வித எச்சரித்தல்கள் உண்மைதான் என்பதை புரிந்துகொள்ள எனக்கு வெகு நாட்களாகவில்லை.

ரம்யா எங்கள் ஜெனரல் மானேஜரின் பர்சனல் செகரட்ரி. அவருடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவிற்கு தைரியமானவள்.

ஜெனரல் மனேஜருக்கோ எவளாவது புடவை கட்டியிருந்தால் போதும், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஜொள்ளு விடும் ஜாதி.

ரம்யா ஜி.எம்.செகரட்டரி என்று பெயர்தானே தவிர, உட்கார்ந்து வேலை செய்ய உடம்பு வணங்காது. ஜெனரல் மானேஜருடன் படுத்து வேலை செய்யத்தான் அவளுக்கு உடம்பு வணங்கும் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்த படியால் நாங்கள் (சக ஆண் ஊழியர்கள்) அவளைப் பற்றி அடிக்கடி மட்டமாக பேசிக் கொள்வோம்.

அவளால் கம்பெனிக்கு உபகாரம் இல்லாவிடினும் உபத்திரவம்தான் ஜாஸ்தி. அந்தக் கிளை அலுவலகத்தில் நூறு பேர்கள் அடங்கிய எங்கள் அனைவரையும் ஜி.எம். பேரைச் சொல்லியே பயமுறுத்தி வேலை வாங்குவாள்.

ஜெனரல் மானேஜரின் இந்த வீக்னசினால் எங்க கம்பெனியில் பெண்களுக்குத்தான் இன்கிரிமென்ட, ப்ரமோஷன் இத்யாதி அனுகூலன்கள்.

இதனாலேயே நாங்களெல்லாம் சீக்கிரம் பெண்களாக மாறுவதற்கு ஆப்பரேஷன் செய்துகொள்ள வேண்டியதுதான் என்று ஜோக்காகப் பேசிக் கொள்வோம்.

அதுவும் இந்த ரம்யாவினால் எனக்குத்தான் நிறைய தொந்திரவு. நான் முழு நேர ஸ்டெனோ என்பதால் அவள் அடிக்க வேண்டிய ஸ்டேடமென்ட்,

கடிதங்கள், டெண்டர் அனைத்தையும் என்னிடமே தள்ளி விடுவாள். நான்,

உள்ளுக்குள் அவளைத் திட்டிக்கொண்டே மாங்கு மாங்கென்று டைப்படிப்பேன்.

அவள் என்னடாவென்றால் சீட்டைத் தேய்த்துவிட்டு, பிரஷ்ஷினால் தன் தலையைக் கோதி, கையகல கண்ணாடியில் முகம் பார்த்து, லிப்ஸ்டிக்கை ஒத்திக்கொண்டு, தன உருண்டையான பிருஷ்டங்களை அழகாக ஆட்டியபடி நான்கு மணிக்கே ஜி.எம்முடன் அவருடைய ஏ.ஸி காரில் குலாவியபடி சென்று விடுவாள்.

சரி, ஒழிந்தார்கள் என்று நினைத்தால், ஆறு மணிக்கு ஏதாவது ஒரு சாக்கில் எனக்கு போன் பண்ணுவாள். அது நான் இருக்கேனா இல்ல வீட்டுக்கு போயிட்டேனா என்று செக் பண்ணுவதற்குத்தான் என்பது புரிய எனக்கு வெகு நாட்களாகவில்லை.

ரம்யா இருக்கும்போதுதான் ஜி.எம்.முகத்தில் சிரிப்பு இருக்கும். அவள் ஒரு நாள் ஆபீஸ் வரவில்லை என்றால் ஜி.எம். மூஞ்சி சிடு சிடுவென இருக்கும். எங்க மேல நாய் மாதிரி விழுந்து புடுங்குவார். அதிலும் நான்தான் அவரிடம் அதிகம் குரைபடுவேன்.

ரம்யா ஜி.எம்மை கையில் வைத்திருந்த படியால் அவர் என்னைத் திட்டும்போது, “ நீ என்னய்யா வேலை செய்யற? என் செகரட்டரிக்கு உடம்பெல்லாம் பயங்கர மூளை” என்பார்.

ஆமாம், கழுத்துக்குக் கீழே அவளுக்கு மூளை ஜாஸ்திதான் என்று நான் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன்.

அன்று நானும் என் மனைவியும் கமர்ஷியல் தெருவில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, “ஹாய் கீது, எப்படிடி இருக்க? கல்யாணம் எப்ப ஆச்சு? எப்ப பெங்களூர் வந்த? இப்ப என்ன பண்ற?” என்ற கேள்விகளை அடுக்கியபடி ரம்யா என் மனைவி கீதாவைக் கட்டியணைக்க நான் ஒரு கணம் அசந்து போனேன்.

என் மனைவியை இவளுக்கு ஏற்கனவே தெரியமா என்று நான் வியந்தபோது, ரம்யா என்னைப் பார்த்து, “யு நோ, கீதாவும் நானும் திருச்சி சீதாலஷ்மி காலேஜ்ல ஒண்ணாப் படிச்சோம்” என்றாள்.

கீதாவின் மொபைல் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டாள்.

அன்று இரவு கீதா என்னிடம், “அவளுக்கு படிக்கிறப்பவே பாய் ப்ரெண்ட்ஸ் ஜாஸ்தி… சரியான ஊர் சுற்றி, ஹாஸ்டல்லையே தங்க மாட்டா..” என்றாள்.

இப்பவும் அவ ஒன்னும் மாறல என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

மறுநாள்…

அலுவலகத்தில் ரம்யா என்னிடம், “கீது உன்னோட மனைவின்னு எனக்குத் தெரியாது. அவ படிப்பில ரொம்ப கெட்டிக்காரி, அவளை நீ ஏன் வேலைக்கு அனுப்பல? நீங்க ரெண்டுபேரும் சம்பாதித்தால் ரொம்ப வசதியாக இருக்கலாமே” என்றாள்.

“இருக்கலாம்தான்… வேலைக்கு அவள் முயற்சி பண்ணலை” என்று நான் பொத்தாம் பொதுவாகச் சொல்லி அவளிடமிருந்து நழுவப் பார்த்தேன்.

“அவளுடைய வேலைக்கு நான் பொறுப்பு, என்னோட கீதாவை நல்ல வேலையில் அமர்த்துவது என் கடமை. இது கூட நான் அவளுக்குச் செய்யலேன்னா பெங்களூர்ல இவ்வளவு காண்டாக்ஸ் வைத்திருப்பதில் அர்த்தமேயில்லை” என்றவள் உடனே செயல் படத் தொடங்கினாள்.

என் முன்னாலேயே காதம்பரி இண்டஸ்ட்ரீஸ் பர்சனால் மானேஜருடன்

தொடர்பு கொண்டு, “ஹாய் சிவா, ஐ ஹாவ் எ கேண்டிடேட்” என்று ஆரம்பித்தாள்.

தொடர்ந்து அவனிடம் தொலைபேசியில் குழைந்தாள். அந்த சிவா இவள டின்னருக்கு கூப்பிட்டான் போல, “ப்ளீஸ் சிவா, என்னால இன்னிக்கு டின்னருக்கு வர முடியாது, இந்த முசுடு (ஜி.எம்) என்னை எங்கயும் தனியா விடறதில்ல, ஒரே சந்தேகம், நாளைக்கு பாம்பே போறது… நாளை ராத்திரி எட்டு மணிக்கு உன்னோட அபார்ட்மென்டுக்கு கண்டிப்பா வரேன்…மெக்ஸிக்கோ நாட்டு சலவைக்காரன் ஜோக் சொல்றேன்…

அது சரி ட்ரிங்க்ஸ் ஸ்டாக் என்ன வச்சிருக்க? வோட்கா அப்சல்யூட் இருக்கா?” என்று சிரித்தாள்.

என் மனைவியின் பொருட்டு, எவனோ ஒரு சிவாவுடன் அவன் அபார்ட்மெண்டில் தண்ணியடித்துவிட்டுப் புரளப் போகிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு உடம்பில் கம்பிளிப் பூச்சி ஊறுவதைப் போல் இருந்தது.

அன்று இரவு என் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி, ரம்யா மூலம் ஏதாவது வேலை கிடைத்தால் அது வேண்டாம் என்றேன்.

“என்னங்க நீங்க? பர்சனலா அவ எப்படி இருந்தா உங்களுக்கென்ன? அவள் என்னுடன் படித்தவள், என் தோழி. அவளுடைய காண்டாக்ஸ் மூலம் எனக்கு வேலை கிடைச்சுதுன்னா அதை ஏன் வேண்டாம்னு சொல்லணும்?”

“அது எந்த மாதிரி காண்டாக்ஸ்னு யோசிச்சியா கீதா? உடம்பை அர்ப்பணிக்கிற காண்டாக்ஸ்தான் அவளுக்கு அதிகம். இதெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கலை கீதா.”

“அதப் பத்தி உங்களுக்கு என்னங்க? நாய் விற்ற காசு குரைக்கவா போகுது? உங்களுடைய ஒருத்தர் சம்பாத்தியத்தில் நாம என்னத்த சேர்த்து எத வாங்க முடியும்? வேலை மட்டும்தான அவ வாங்கித் தரப்போறா?

வேலைக்குப் போய் உழைத்து சம்பாதிக்கிறது நாந்தானே? சாமர்த்தியமா இருக்க கத்துக்குங்க” என்றாள். நான் அடங்கிப் போனேன்.

ரம்யா சொன்னதோடு நிற்காமல், என் மனைவிக்கு இரண்டே வாரத்தில் இண்டர்வியூ முடித்து மாதம் முப்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்கான ஆர்டர் அனுப்பச் செய்து, அதைத் தொடர்ந்து என் வீட்டிற்கும் வந்து கீதாவை ஸ்வீட் செய்யச் சொல்லி ரசித்துச் சாப்பிட்டாள்.

என் மனைவியும் வேலைக்குச் செல்லலானாள்.

மாதங்கள் ஓடின.

இருவர் சம்பாத்தியத்தில் தாராளமாக செலவு செய்ய முடிந்தது. அவ்வித செலவுகளில் ஒரு சொகுசான அனுபவித்தல் இருப்பது புரிந்தது. கார் வாங்க முடிந்தது. கலர் டி.வி., வாஷிங் மிஷின், பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் என வீட்டில் வசதி அதிகமானது.

மாதக் கடைசி என்கிற இழுபறி இல்லாமல், மாற்றங்கள் தெம்பாக இருந்தன.

காட்சிகள் மாறின…

இப்போதெல்லாம் என் அலுவலக சக ஊழியர்கள் ரம்யாவைப் பற்றி மட்டமாகப் பேசும்போது, நான் அதில் பங்கு கொள்ளாது ஒரு அமைதியான பார்வையாளனாக மட்டுமே இருக்கத் தொடங்கினேன். முடிந்தவரை அவர்களுடன் இருப்பதைத் தவிர்த்தேன்.

அவர்களுக்கு என் மனைவி வேலைக்குப் போவது தெரியாது. என்னுடைய இந்த மாற்றம் அவர்களுக்குப் புரிய நியாயமில்லை.

நாய் விற்ற காசு குரைக்கவில்லைதான்… 

தொடர்புடைய சிறுகதைகள்
கதிரேசனின் மனைவி சரோஜாவுக்கு கேன்சர் முற்றிய நிலை. கடந்த இரண்டு வருடங்களாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். கீமோதெரபியினால் அவளது தலைமயிர் முற்றிலும் உதிர்ந்துவிட்டது. கண்கள் வறட்சியுடன் முகம் பொலிவிழந்து அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. கதிரேசனுக்கு வயது முப்பத்தி எட்டு. திருமணமாகி பத்து ...
மேலும் கதையை படிக்க...
கர்நாடகாவின் நஞ்சன்கூடு அரசு உயர்நிலைப்பள்ளி தனது நூறு வருடங்களுக்கான கல்விப்பணி சாதனையை ஒரு பெரியவிழா எடுத்து கொண்டாடியது. அதில் கர்நாடகாவின் கல்வி மந்திரி மாண்புமிகு மஞ்சுநாத் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வந்திருந்தார். பள்ளியின் முதல்வர் தனது முன்னுரையில், “நம் கல்வி மந்திரி மாண்புமிகு மஞ்சுநாத் ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் பாஸ்கரன். பெங்களூரில் ப்ரிகேட் டவர்ஸின் பதினெட்டாவது மாடி B 1808ல் மனைவி, மற்றும் ஒரேமகன் திலீப்புடன் குடியிருக்கிறேன். ஒரேமகள் மாலினி திருமணமாகி மல்லேஸ்வரத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறாள். திலீப் பெங்களூர் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அடுத்த பெண்மணி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இந்தக் கல்யாணம் நிச்சயமானத்தில் சபரிநாதனுக்கு இரண்டு விதத்தில் சந்தோஷம். முதல் சந்தோஷம், வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏழ்மையில் உழன்றாலும் ராஜலக்ஷ்மி ரொம்ப அழகான பெண்ணாக இருந்தாள். இரண்டாவதாக, பார்ப்பதற்கு ...
மேலும் கதையை படிக்க...
“மாமி, நெஜமாவா சொல்றீங்க ஒங்களுக்கு எழுபது வயசுன்னு?” அலமேலு நூறாவது தடவை இந்தக் கேள்வியை வேதவல்லி மாமியிடம் கேட்டிருப்பாள். “ஆமாண்டி, எனக்கு இந்தச் சித்திரை வந்தா எழுபது வயசு முடியறது.” “நம்பவே முடியலை மாமி.” “ஒன்னோட பெரியம்மா மதுரம் இருக்காளே, அவ என் கூட நடுத்தெரு பள்ளிக் ...
மேலும் கதையை படிக்க...
மண்ணுளிப் பாம்புகள்
வளர்ப்பு
பதினெட்டாவது மாடி
புது மாப்பிள்ளை
இளமை ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)