தீக்குள் விரலை வை

 

சரவணன் கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கிருந்த கவலையெல்லாம் அவனது தாத்தாவை என்ன செய்வது என்பதுதான். அவனது தாத்தா அவனது எல்லாச் சுதந்திரங்களிலும் தலையிட்டுக் கொண்டிருந்தார். அவன் இப்போதுதான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பதினைந்து வயது இளைஞன். மிகவும் துடிப்பான, சுறுசுறுப்புள்ள இளைஞன். படிப்பிலும் அக்கறை செலுத்துபவனாகவும் இருந்தான். இருந்தும் அவனது பொறுப்பில்லாத விளையாட்டுத்தனம் அவனது தாத்தா சிங்கராயருக்குப் பிடிப்பதில்லை.

அவனது ஒன்பதாவது வயது வரை தாத்தா அவனுக்குப் பிடித்தவராகவும், மனதுக்கு இதந்தருபவராகவும்தான் இருந்தார். அப்போதெல்லாம் அவர் சொல்லும் பழங்கதைகள் அவனை குதூகலிக்கச் செய்து உற்சாகப்படுத்தும். அவர் சொல்லும் கதைகளைக் கேட்டு கை கொட்டிச் சிரித்து துள்ளிக்குதித்து அவர் தோளைக் கட்டி அவரது கன்னத்தில் முத்தமிட்ட ஒரு காலம் இருந்தது. அது அவனது தாத்தாவுடனான பொற்காலம். இப்போது அந்த இடத்தை அவனது தங்கை தேனுகா சுவீகரித்துக் கொண்டுவிட்டாள். தாத்தா இவனை விட்டுவிட்டு தேனுகாவை கொஞ்ச ஆரம்பித்த போதுதான் இவன் மனம் அவரிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. இவனும் கூட கொஞ்சிக் கூத்தாடும் அந்தப் பருவத்தைக் கடந்திருந்தான்.
அப்பாவை விட அம்மாவே அவனுக்கு அதிகம் செல்லங்கொடுத்துப் பழக்கியிருந்தாள். அதனால் அப்பாவிடம் ஏதும் சாதிக்க வேண்டுமாயின் அம்மாவுக்கூடாகவே அவன் காய் நகர்த்தினான். சிலபோதுகளில் அப்பா பாராமுகமாக இருந்தாலும் தாத்தா அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தார். அதன் காரணமாக அவனுக்குக் கிடைக்கவிருந்த பல சலுகைகளை அவன் இழக்க நேரிட்டிருக்கின்றது.

இப்போது தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித்தரும் படி அம்மாவை அவன் நச்சரித்துக் கொண்டிருந்தான். இது விடயம் தாத்தாவுக்குத் தெரியவந்தபோது அவர் மிகக்கடுமையாக தன் ஆட்சேபனையைத் தெரிவித்தார். அவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான வயது இன்னமும் வரவில்லையென்றும் அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுவது சட்டத்துக்கு எதிரான குற்றம் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். தாத்தா தான் தனக்கு மோட்டார் சைக்கிள் கிடைப்பதற்கு தடையாக இருக்கிறார் என்றும் அவர் தனக்கு எல்லாவிதத்திலும் எதிரியாகி விட்டார் என்றும் சரவணன் அவர் மேல் பெரும் கோபங்கொண்டிருந்தான்.

இருந்தாலும் அவன் தன் முயற்சியைக் கைவிடவில்லை. தான் மோட்டார் சைக்கிள் வாங்கித் தரச் சொல்வது பழகுவதற்குத்தான் என்றும், குறுக்குப் பாதைகளிலும் விளையாட்டு மைதானத்திலும் மட்டும்தான் ஓட்டப் போவதாகவும் வாதம் செய்தான். அவன் அம்மாவுக்கு அவன் இவ்விதம் கெஞ்சிப் புலம்புவது பரிதாபமாகவும், பச்சாதாபமாகவும் இருந்தது. அவள் இரவெல்லாம் தன் கணவனின் காதில் “சரவணனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் என்ன, நமக்கிருப்பது ஒரே ஒரு பையன்தானே அவன் ஆசையை நிறைவேற்றினால் என்ன?” என்று வேதம் ஓதிக்கொண்டே இருந்தாள்.

சரவணனின் அப்பா இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் தனது தந்தை சிங்கராயர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் ஒருபோதும் தன் தந்தையின் சொல்லை மீறுவதில்லை. எனினும் தனது ஒரே மகனதும், மனைவியினதும் இந்தக் கோரிக்கையை எப்படித் தட்டிக்கழிப்பது என்பது மிகுந்த சங்கடத்துக்குரிய சங்கதியாக அவர் மனதை தொல்லை செய்தது. அவர்களது முகங்களை ஏறிட்டுப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. அவரின் தந்தை சுமார் முப்பதாண்டு காலத்துக்கு மேல் அப்பிரதேசத்தின் பிரதான கல்லூரியொன்றில் அதிபராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மாணவரிடையே ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுப்பதில் மிகவும் கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றவர். அவர் நிறையவே நன்மாணாக்கர்களை உருவாக்கியிருந்தார்.

சில தினங்கள் இப்படி இருதலைக் கொள்ளி எறும்பாக தீர்மானங்கள் இன்றிக் கழிந்து போயின. சரவணன் நொந்து போயிருப்பதும் விரக்தியடைந்திருப்பதும் அவன் தோற்றத்திலிருந்தே தெரிந்தன. கண்டிப்பு, ஒழுக்கம் என்பவற்றை விட பாசத்துக்கு வலிமை அதிகம் போலும். அடுத்த நாள் “பிரதான பாதைகளில் சைக்கிளை ஓட்டக்கூடாது” என்ற நிபந்தனையுடன் சரவணனுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சரவணன் மிகக் குதூகலத்துடன் காணப்பட்டான். அவன் தான் சைக்கிள் ஓட்டிப் பழகும் காலத்தில் எந்தவிதமான தவறும் ஏற்பட்டு விடாதபடி மிகக் கவனமுடனேயே நடந்து கொண்டான். இருந்தாலும் தான் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிவிட்டதை நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும் அதனைத்தான் ஓட்டும் விதத்தை அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் நண்பர்கள் வசிக்கும் பிரதேசம் வரை செல்ல வேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது நகரத்தின் ஒரு பிரதான வீதியில் இருந்த சந்தி ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்தியை அண்மித்ததுமே அவனுக்கு பதற்றம் அதிகரித்தது. அந்த நேரம் பார்த்து ஒரு சிறுமி பாதைக்குக் குறுக்கே வந்துவிட்டாள். அவன் பிரேக் போடவும் அந்தச் சிறுமி மேல் வண்டி மோதவும் நேரம் சரியாக இருந்தது.

சிறுமி பெரும் கதறலுடன் சற்றே தூர வீசப்பட்டு விழுந்தாள். உடனேயே அவ்விடத்தில் கூட்டம் கூடத் தொங்கிவிட்டது. சிலர் சரவணனின் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் அறைந்தனர். சில நிமிடங்களில் சற்றுத் தூரத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருந்த டிரபிக் கான்ஸ்டபிள் அவ்விடத்துக்கு வந்தார். அவர் நிலைமையைச் சமாளித்து சிறுமியை உடனேயே வைத்தியசாலைக்கு அனுப்பச் செய்து சரவணனுடன் அவனது வண்டியையும் பொலிஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்றார். அங்கே அவனுக்கு எதிராக அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியது. அவ்விதம் ஓட்டுவதற்கு வயதுத் தகைமை இல்லாமை, போதிய கவனம் எடுத்துக்கொள்ளாமை, சிறுமிக்கு காயம் உண்டாக்கியமை போன்ற குற்றங்களுக்காக புகார் பதியப்பட்டது.

சரவணனின் உடைகளைக் களைந்து அவனை உள்ளாடையுடன் ஒரு மூலையில் நிலத்தில் உட்கார வைத்திருந்தனர். அவன் மிகுந்த குற்ற உணர்வுடன் அவமானமடைந்து கூனிக்குறுகி அமர்ந்திருந்தான். அவன் கண்களில் கண்ணீர் வடிந்தோடிக் கொண்டிருந்தது. தான் இவ்வளவு பெரிய குற்றத்தையா செய்துவிட்டோம் என்று அவனால் உணர முடியாதிருந்தது. விசயத்தைக் கேள்விப்பட்டவுடன் அவன் அப்பா பொலிஸ் நிலையத்துக்கு ஓடோடி வந்தார். தனது பிள்ளை இருக்கும் நிலை கண்டு கலங்கிப் போனார். அவர் உடனேயே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைப் பார்க்கச் சென்றார்.

அவரைக் கண்டதுமே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆசனத்தில் இருந்து எழுந்திருந்து அவருக்கு மரியாதை கொடுத்தார். ‘‘ஏதும் பிரச்சினையா?” என்று மரியாதையுடன் விசாரித்தார். ‘‘ வேறொன்றும் இல்லை. அங்கே பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சரவணன் எனது பிள்ளைதான்’’ என்று அவர் கூறினார். “அப்படியா சார், நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். நான் இந்த விடயத்தைக் கவனிக்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் “சரவணனை உடை உடுத்தி கூட்டி வா” என்று பணிப்புரை வழங்கினார்.

பின் சரவணன் வந்ததும் சரவணனின் அப்பாவைப் பார்த்து பின்வருமாறு கூறினார். “சேர் உங்க அப்பா சிங்கராயரின் மாணவன்தான் நான். நானும் இந்த சரவணன் மாதிரித்தான் பொறுப்பில்லாமல் திரிந்தேன். சிங்கராயர் சேர் எங்களை புத்தி கூறி அடித்து திருத்தாதிருந்திருந்தால் நான் இன்னைக்கு இந்தப் பதவியில் இருந்திருக்க மாட்டேன். உங்கள் அப்பாவுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் இவனை அழைத்துப் போய் கண்டித்து வையுங்கள். இந்தக் கேசை நான் பார்த்துக் கொள்கிறேன். கேஸ் நடந்தால் இவனுக்கு இரண்டு வருடத்துக்கு சிறைத்தண்டனை கிடைக்கும்’’.

அன்று சரவணன் தன் தாத்தாவின் நற்பெயரால்தான் தண்டனையில் இருந்து தப்பினான். அத்துடன் தாத்தா மேல் அவன் கொண்டிருந்த பகைமை மறைந்து போனது. அவன் மீண்டும் தாத்தாவுடன் ஒட்டிக்கொண்டு விட்டான். அவன் தங்கையையும் நண்பியாக்கிக் கொண்டான். அவனது சைக்கிளில் அடிபட்ட அந்த சிறுமியின் வீட்டாரைச் சந்தித்து சமாதானம் பேசி அவர்கள் கேட்ட நட்டஈட்டைக் கொடுத்து வழக்கை சுமுகமாக முடித்துக்கொண்டனர். பலருக்கும் சுட்டால்தான் தீ சுடும் என்பது தெரிகிறது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ரவியும் பூர்ணிமாவும் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டு சம்சார பந்தத்தில் இணைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி விரைவிலேயே ஒரு குழந்தைச் செல்வமும் கிடைத்தது. குழந்தைக்கு தனுஷ் என்று பெயர் வைத்து சீராட்டிப் பாராட்டி கொஞ்சுவது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது. அதன் மேல் ...
மேலும் கதையை படிக்க...
பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து வட்டாரத்தில உள்ள பத்துத் தோட்டங்களும் தெரியும். எங்க தோட்டத்திலேயே ரொம்ப ஒசரமான ஒரு எடத்துல அது கம்பீரமா ஒரு பாறைக்குன்று ...
மேலும் கதையை படிக்க...
அங்கஜனுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவன் அந்த பாடசாலையின் விவசாயப் போதனாசிரியராக அண்மையில்தான் நியமனம் பெற்று வந்திருந்தான். அவனது அந்த பாடசாலை அதிபர் அவன் என்ன விதமான விவசாயக் கல்வியை அந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டுமென்று விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அவர் அண்மைக் காலமாக ...
மேலும் கதையை படிக்க...
அக்கா என்றால் அம்மா
இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் எனது மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டத்தை பெற்றுக்கொள்ளும் நான் பட்டம் பெறுவதை பார்த்து பெருமையடையவும் அதன் பின் என்னை வாழ்த்திக் குதூகலமடையவும் என் பெற்றோரும் என் தம்பியும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார். அவர் தனக்கென்று எதனையும் செய்வதில்லை. போட்டி போட்டுக் கொண்டு போலிம்களில் முன்செல்ல முனைந்ததில்லை. பஸ்ஸிலோ, கோச்சியிலோ பயணம் செய்த போது ...
மேலும் கதையை படிக்க...
குழந்தையின் உயிர் – தங்கம்
சூடேறும் பாறைகள்
என்ன காரணம்?
அக்கா என்றால் அம்மா
அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)