தி நேம் இஸ் மணி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,031 
 
 

ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய், கறுப்பு வெள்ளை நிறமுடையது. எங்கள் வீட்டின் தாவாரத்திலும் வெளித்திண்ணையிலும் தங்கி ஊரில் உலவி வருவதால், அது எங்கள் நாயாக அறியப்படுகிறது. ‘பூவரச மரத்து வீட்டு நாய்’ என்று ஊரில் அதை அடையாளப்படுத்துகிறார்கள்.

நாய்களுக்கு, ஷாரூக், இந்தியா என்பன போன்ற பெயர்களும் இப்போது வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பு எதிர்க்கோட்டை அழகர்சாமியவர் எங்களுக்குக் கொடுத்த சிப்பிப்பாறை நாய்க்கு, ‘ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ்’ எனப் பெயர் வைத்தேன். பெயரின் நீட்சி தாங்காமல், பத்து ஆண்டுகள் தாண்டுவதற்குள் செத்துப்போய்விட்டது. இந்தக் கறுப்பு வெள்ளை வந்து சேர்ந்து, வீட்டார் ‘மணி’ என்றபோது, மறுப்பில்லாமல் ஏற்றுக்கொண்டேன். நாய்கள் காலமே போன்றவை. ‘மணி’ என்பது பெருங்கொண்ட காலத்தின் சிறு அளவு. மகாபாரதத்தில் கடைசியில் தருமரின் பின் சென்றதும் நாய்தான். விசுவாசம் வைத்துவிட்டால், அது அதர்மனின் பின்னாலும் செல்லும் பண்புடையது. அதனால், கால பைரவனாகவும் அகால பைரவனாகவும் அது நிற்கிறது. இவ்வளவு நிமிர்த்தாமல் எளிமையாகச் சொல்கிறேனே. மணி என்பது ‘நாய்’ என்பது மாதிரியே இரண்டெழுத்து உடையது. பெயரின் கடைசியில் ஒரு வாலும் வைத்திருக்கிறது.

மணி வந்த காலம் நான் வெளியூரில் இருந்தேன். இப்போதும் வெளியூரில்தான். ஊருக்குச் செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகள்தான், எனக்கும் மணிக்குமான உறவு. முதலில் பெரிய அளவு அதன் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. நாமே வளர்ந்த வீட்டில், ஒரு நாய் வளர்வது ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஊருக்குச் செல்கிறபோது, ‘வந்தியா வா வா!’ என்கிற அளவில் வெகுகாலம் அது என்னைப் பாவித்து வந்தது.

அது என்னுடன் எவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது என்பதை விளக்க ‘மணி மொழியில்’ சொற்கள் இருக்கலாம். தாய்மொழியில் இல்லை. நான் அதனுடன் இணக்கமான புள்ளி நன்றாக நினைவிருக்கிறது. மிகுந்த மனச் சோர்வின்போது (அது நிஜத்தில் மனச் சரிவு. நெடுஞ்சாலையில் அடிபட்ட நாய் போல மனம் கூழாகி இருந்தது.) மணியின் நெருக்கத்தை உணர்ந்தேன். உணவைத் தவிர, எதன் மீதும் பற்றுக்கொள்ளாமல் அலைந்த நேரம். உண்மையில் அப்போது உணவின் மீதான ஈடுபாடு மட்டுமே பிற்பாடு என்னை உலகின் பற்சக்கரங்களுடன் பொருந்தவைத்தது.

அந்த நாட்களின் ஒருநாள், மாலை நேரத்தில் ‘மாலைக் கடனைக் கழிக்க’ வெளிக்காட்டுப் பக்கம் செல்வதற்கு முடிவெடுத்து நடந்தேன். நிழலைப் போல கூடவே நடந்து வந்தது மணி. எனக்கு, ‘இது ஏன் கூட வருகிறது?’ எனத் தோன்றியது. பிறகு ‘ஒரு கம்பெனிக்கு வருவதாக இருக்கட்டும்’ என நினைத்து மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மனிதன் அநாதை ஆகிவிடுவதில்லை என்றும் பட்டது அப்போது.

மசக்கிருட்டில் ஓர் இடம் தேடி நான் அமர்ந்தபோது, அது தார்ச்சாலை ஓரம் நின்றது. எனக்கு ‘வெளியே’ போவதென்பது பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்வது மாதிரி. கல் தேடி எடுத்துக்கொண்டு, பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து அடுத்து தீக்குச்சி பொருத்தும் முன் பார்த்தேன். லேசாகக் குக்கிய நிலையில் மணி ‘விட்டை’யைப் போட்டது. பிறகு..! பிறகென்ன? என்னை அம்போவென விட்டுவிட்டு, அதுபாட்டுக்கு கிழக்கு நோக்கி ஓட்டமெடுத்தது வீடு நோக்கி. நான் ஓர் அநாதையின் சிரிப்பை வாய்விட்டுச் சிரித்தேன். மணிதான் கம்பெனிக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

தரிசனம் என்றால் இதுதான் தரிசனம். ‘வாழ்வில் ஒரு நாயையும் குறைத்து மதிப் பிட்டுவிடக் கூடாது’ என எனக்குள் தத்துவம் புகுந்த தங்க மாலைப் பொழுது அது. அதற்குப் பிறகு மணியின் மீது அலாதி வாஞ்சை வந்து பெட்டிக்கடை தோறும் ரொட்டி வாங்கிப் போட ஆரம்பித்தேன். அதுவும் பதிலுக்கு நான் ஊர் செல்லும்போதெல்லாம் என் மீது தொத்துக்கால் போட்டு ஏறி, என் சட்டைகளை மேலும் அழுக்காக்கியது. இரு புற விலாப் பகுதிகளை முன்னங்காலால் பிறாண்டி முத்தமிட முயன்றது. அத்தனை ஆவேசமான அன்புப் பாய்ச்சலை மனித உயிர்களிடம் அது வரை நான் அனுபவித்ததில்லை. ‘நானும் நாயும் யாராகியரோ… மழைச் சுவரண்டின ஈருயிராய் அன்புடை நெஞ்சந் தாங்கலந்தோம்.’

ஊரின் ஒவ்வொரு மணியும் அதற்கென சிற்சிறு சிறப்பம்சங்கள் கொண்டவையே. எங்கள் ஊர் வங்கியின் காசாளர் அன்பு பாராட்டும் வெள்ளை மற்றும் காப்பி கலர் கொண்ட நாயானது, வங்கியின் கேஷ் கவுன்டர் வரை வந்து உலவும். அது அங்கே டெஸ்க்கில் தொத்துக்கால் போட்டபோது, எங்கே காசு விநியோகித்துவிடுமோ என ஐயப்பட்டிருக்கிறேன்.

பசு மாடுகள் பெற்றிருக்கும் அவ்வளவு நிறங்களையும் பெற்றிருக்கும் எட்டுப் பத்து நாய்கள் ஊரின் கடைவீதியில் உலவுகின்றன. ஆண்மணிகள், பெண்மணிகள்.

ஒரு கழுதை வயதை (20) நான் எட்டுவதற்கு ஒரு வருடம் முன்பு, விவேக சூடாமணியோ என்னவோ படித்துவிட்டு, பெண் நாய்க்கு பால் ஸ்தனங்கள் பத்து உள்ளனவா என்று ஒரு பாலத்துக் கல்லுக்கட்டில் குனிந்து ஆராய்ச்சி செய்த ஒரு மத்தியானத்தில்தான் நண்பர் சண்முகவேல் சொன்னார்… ”நண்பா! நீ சீக்கிரம் ஊரைவிட்டுப் போய்விடுவது உனக்கும் ஊருக்கும் நன்மை பயக்கும்.”

இந்த வாக்கியத்தைப் பெற்ற சில நாட்களிலேயே ஊரிலிருந்து வெளியேறுமாறு பட்டேன். இரண்டு கழுதை வயதை எட்டுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே நிலுவையில் உள்ள எனக்கு மணியைப் பிடிக்கவே பிடிக்கும்.

மணியைப் பற்றி நான் விவரிப்பது என்பது அதனது குணம் சார்ந்ததாகவே அமைந்துவிடுகிறது.

மிக விதிவிலக்கான நேரங்கள் தவிர, எங்கள் மணி கடிப்பதுமில்லை, குரைப்பதுமில்லை. சமீபத்தில் எங்கள் வீட்டு முன்னால் நிறுத்திவைத்த சைக்கிள் திருட்டுப்போன இரவில், மணி அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. சைக்கிள் பரவாயில்லை. வீட்டு முகப்பின் கிழக்குப் பகுதி, திண்ணை சார்ந்த தேநீர் விடுதி ஆகையால், பெரியப்பா வீட்டு கேஸ் சிலிண்டர் எப்போதும் வெளியில் இருக்கும். அதையும் யாரோ களவாடிச் சென்றுவிட்டார்கள். பணம், நகை களவுபோவதைவிடவும் இப்படியான பொருட்கள் களவுபோவது உடனடியாகக் கையறு நிலையைத் தோற்றுவிக்கும்தானே?

மணி உலகையே தனதாகப் பாவித்து வருவதால், யாரும் அந்நியம் கிடையாது. இழந்த பொருட்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கையில் புகழேந்தி சொன்னான். ”உங்க நாய் இருக்கே, அதை ஏறி மிதிச்சாத்தான் கடிக்கும்.”

அவன் கூற்றில் உண்மை இருக்கிறது. தெரியாமல் ஏறி மிதித்ததற்காக, அது என் குழந்தையைக் கடிக்கச் சென்றிருக்கிறது. அப்புறம் மணி, மகள் சுவேதா இருவரிடம் தன்மைகளை விளக்கி இருவரும் கலந்து உறவாடுமாறு ஏற்பாடு செய்தேன். இப்போது மகள், ”எங்க மணி!” எனச் சொந்தம் கொண்டாடுமளவும், ”நம்ம மணி எப்படி இருக்குதப்பா?” என்று என்னை வினவுமளவும் தயாராகிவிட்டாள்.

மிதிபடுவதற்கும் கடிக்கப்போவதற்கும் மிகவும் வாகானதாக மணியினது புவியியல் இருப்பு அமைந்துவிட்டது. பூவரச மரத்தில் ஒரு பச்சைக் குழல் விளக்கு எரியும் சோமரசம் மங்கிய மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுக் கடைக்கும் அதை அடுத்த புரோட்டாக் கடைக்கும் இடையில் ஒரு கறுப்பு நிற நாய் படுத்துக்கிடந்தால், அது மிதிபடவே செய்யும் என்பது சூரியன் மேற்கில் மறையும் என்பதற்கு இணையான உண்மை. மிதிபட்டதும் பல்படாமல் ஒரு கடி கடிக்கும். பிறகு அவர்கள் கொலைநோக்கில் வரவில்லை, தொலைநோக்கில் வந்திருக்கிறார்கள் என்ற உண்மை உணர்ந்து அத்துடன் விட்டுவிடும். ஆனால், அப்பாவுக்கோ பெரியப்பாவுக்கோ, பிராதுகள் வந்து சேரும். வெறிகொண்ட நாயைத் தெருவில் விட்டு அலையவைப்பதாக.

மணிக்கு, தள்ளிக்கொண்டு செல்லப்படும் கார்கள், லாரிகளைப் பிடிக்காது. தொடக்கத் தொல்லை (ஸ்டார்ட்டிங் டிரபிள்) கொண்ட ஏதாவது வாகனம் அந்தப் பகுதியில் சிக்கிவிட்டால், பாடு திண்டாட்டமே. வண்டி கிளப்ப முயற்சிக்கும் ஓட்டுநருக்குப் பக்கவாட்டில் ஓடி ஓடி, திடீரென முன் பகுதிக்கும் வந்து போக்குக்காட்டும். ‘செல்ஃப் மோட்டார் சரியாக இல்லாதவனுக்கு இந்தச் சாலையில் என்னடா வேலை?’ எனக் கேட்பதைப் போல இருக்கும் அதன் நடவடிக்கை.

வாகனங்களைத் துரத்திக்கொண்டு ஓடி, தான் சாகாமல் பிற விபத்துகளை உண்டுபண்ணிய புகழ்பெற்ற நாய்கள் ஏற்கெனவே ஊரில் வாழ்ந்திருக்கின்றன. மின்சாரம் நின்றுபோனதையும், நீர் தீர்ந்து வெறும் மோட்டார் ஓடுவதையும், இரவுக் காட்டில் தண்ணீர் மாறியவர்களுக்குத் தெரிவித்த புத்திசாலி நாய்கள் எல்லாம் சுற்றுவட்டத்தில் உண்டு.

எங்கள் நாயைப்பற்றி யோசிக்கிற வேளையில், ஓர் ஒப்பீட்டுக் காரணியை வைத்து பிரிட்டிஷ் அரச குடும்பம் நினைவுக்கு வரும். அங்கே பிரதமர்கள் கட்சி ஆட்சிகள் மாறினாலும் அரச குடும்பம் ஒன்றுதானல்லவா. நாங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த புரோட்டாக் கடை இப்போது ஐந்தாறு கைகள் மாறிவிட்டது. ஆனால், கடை யாருடைய பார்வையில் இருந்தபோதும் மாலை தவறாமல் மணி சுற்றிச்சுற்றி வந்தது உணவு மேஜைகளுக்கிடையில். கிராமத்து வாடிக்கையாளர்கள், நாயின் குறுக்கீட்டைப் பெரிதுபடுத்துவதில்லை. மணிக்கு மட்டும் மனித எத்தனத்தில் கிஞ்சித்தாவது இருந்தால், அது இந்நேரத்துக்கு புரோட்டா பரிமாறப் பழகியிருக்க வேண்டும். இந்த ஏப்பை சாப்பைகளை விடுங்கள், மோப்பத் திறனால் நாளிதழில் புகைப்படமாக வரும் நாய்களும் உண்டு. அவை பன்னாட்டு அதிபர்களின் வருகைக்கு முன்னால், காந்தியின் கல்லறையைச் சுற்றி வந்து புகைப்படமாக வெளியாகின்றன. எப்படியாயினும் நாயினமும் புகழடையவே செய்கின்றன. அவற்றை வளர்ப்போருக்கு அவற்றால் பெருமை. அவப்பெயர்கள் வருவதானால், அவை எப்படியும் வந்தேகும். தொட்டுப் பொட்டு வைத்த கணவன், கட்டிய மனைவி, ஊட்டி வளர்த்த பிள்ளை, பட்டி ஆடு, கட்டாது வளர்த்த நாய்… ஏதொன்றும் தலைக்குனிவை உண்டு செய்யலாம்.

எங்கள் நாயை எத்திக் கடிபட்ட சிலர், எதிரிகள் தென்படாத நிலையில் எம் வீட்டின் முன்பு நின்று முதலில் நாயைத் திட்ட ஆரம்பித்து, இறுதியில் எங்களைத் திட்டினார்கள். நாயின் இருப்புக்கு எதிர்ப்பு கூடிவருவதைத் துலக்கமாக உணர்ந்து வந்தேன். சமீபத்தில் மணி, ஆடு ஒன்றைத் துரத்தி ஓட்டிப் போய் லாரியின் சக்கரத்தில் தள்ளி, லாரிக்காரனுக்கு நட்டத்தையும் இரவு ஊரில் கறி வாசத்தையும் உண்டுபண்ணியதற்கு மறு வாரம் உள்ளூர் நண்பன் விஜயபாஸ்கரனைச் சந்தித்தேன்.

இருவரும் தனித்திருந்த வேளையில் அவன் மிக மெதுவாக, ”நான் உங்கள் நாயைக் கொல்லப்போகிறேன்” என்றான். நான், நாயின் நியாயங்களை எடுத்தியம்பினேன்.

அவனது பதில் விநோதமாக இருந்தது. முப்பத்தி ஐந்து வயதாகியும் எதிலும் பற்றுக்கொள்ளாமலும் ஊன்றாமலும் அலைந்து வரும் வாழ்க்கை நிலை அவனுடையது. அவன் சொன்னான். ”யோசிச்சுப் பாரு, ‘பாஸ்கரனை வீதியில விட்டு நாய் கடிச்சிருச்சு’ங்கிற அவப்பெயர் வந்துட்டா, அதுக்கப்புறம் நான் வாழ முடியுமா? ஒண்ணு நான்… இல்லாட்டி நாய்” என்றான். இது கருதத்தக்க புள்ளியாக இருந்தது. அவன் நல்ல வேட்டைக்காரன். பாம்படி வீரன். எண்ணற்ற முயல், அணில்களை வீழ்த்தியவன். ஒரு முறை தங்கையின் பிரியத்துக்காக, அணில் குட்டி ஒன்றினுக்கு ‘மை நிரப்பி’ கொண்டு பால் வார்த்த சில காலத்துக்குப் பிறகு அணிற்கொலையைக் கைவிட்டு விட்டவன்.

”உயிர்க் கருணையாளனாகிய நீயே இப்படிப் பேசலாமா நண்பா?” என்றேன்.

”தன்னுயிருக்குப் பிறகே பிறவுயிர்” என்றவன் மணியைக் கொல்ல ஒரு ஆள் ‘கறியில் விஷம் வைத்துக் கொல்லுமாறு’ ஆலோசனை நல்கியதையும் சொன்னான்.

”ஏற்கெனவே ஒண்ணைக் கொன்னுதான் கறி கிடைக்குது. அந்தக் கறியைவெச்சு இன்னொரு உயிரைக் கொல்றதா..? அது எப்படிங்க சரியாகும்?” என்று அப்பாவித்தனமாக என்னிடம் கேட்டான். உலகத்தரமான அப்பாவித்தனங்கள் உண்டென்று அப்போது தெரிந்துகொண்டேன். ”நம்ம பக்கத்து ஊர்க்காரங்க பண்ணின மாதிரி மடத்தனமான காரியம் நான் பண்ணப்போறதில்லை” என்றான். என்ன மடத்தனமான காரியம் என்றும் சொன்னான். நாய்கள், பட்டி ஆடுகளைப் பிடிக்கின்றன என்பதற்காக… பக்கத்து ஊர்க்காரர்கள் ஆட்டுக் குடலுக்குள் குருணை மருந்தைப் போட்டுக் கட்டி சந்தைத் திடலில் வீசிவிட்டுப் போய்விட்டார்கள். அப்பாவி நாய்கள் குப்பலாக இறந்தன. பட்டிக்குப் போய் ஆடு பிடிக்கும் நாய் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆறிய கறியைத் தின்னுமளவு அவை எரணம் கெட்டுப் போகவில்லை. நாய்களைக் கொல்வதற்கு ஆறறிவு காணாது, பேரறிவு படைத்திருக்க வேண்டும்.

அந்த நாளின் முடிவில், நட்பின் பெயரால் ‘மணி’ மீதான வன்மத்தைக் கைவிடும்படி அவனிடம் சொன்னேன். ”தினம் நூற்றுக்கணக்கான குடிக்கிற முகங்களைப் பார்த்துப் பேதலித்து அது உளவியல் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது. தவிரவும் அது எங்கள் வீட்டில் வளர்கிறது என்பதையும் நீ கணக்கில் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

அடுத்த நாள் காலை பேருந்து பிடித்துக் கிளம்பி விட்டேன், நாய்கள் குழந்தைகளைக் கடித்துக் குதறும் நான் வாழும் ஊருக்கு.

அந்த மாலையில், புவியியல் அமைப்பு காரணமாக விஜயபாஸ்கரன், நாயை மிதித்துவிட்டான். இடுப்பில் தொற்றி ஏறி, உயிர்க்கிலியை உண்டுபண்ணிவிட்டு பிறகு அவனை அது மன்னித்திருக்கிறது. உடனே எங்கள் பெரியப்பாவைச் சந்தித்த விஜயபாஸ்கரன், ”தயவுசெய்து நாயைக் கட்டிப்போடுங்கள்!” என மன்றாடியிருக்கிறான். மன்றாட்டுக்கு மனமிரங்கி பெரியப்பாவானவர், மணியைத் தினமும் கட்டிப் போடுவதற்கு ஆயத்தம் பண்ணினார்.

நாளது தேதியில் நாளுக்குப் பத்து மணி நேரமாவது கட்டப்பட்ட நிலையில் மணி ஜீவித்து வருகிறது. இம்முறை நான் ஊருக்குப் போனபோது, அது தொத்துக்கால் போடவுமில்லை, தொற்றி ஏறவும் இல்லை. மிகப் பழைய தினங்களைப் போலவே, ‘வந்தியா… வா… வா!’ என்றே எதிர்கொண்டது. கொஞ்சம் சதை போட்டிருக்கிறது. என்னுடைய விலா எலும்புகள் ஏமாற்றமடைகின்றன.

அடிபடாமல் நீண்ட நாள் வாழணுமென்றால், கொஞ்சம் கட்டுக்குள்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது!

– ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *