தாய்

 

கணவன் – மனைவி இருவருக்கும் மாநகரத்தில் ஆளுக்கொரு பக்கம் வேலை. யாரும் துணை இல்லை. அக்கம் பக்கம் உறவில்லை.

இது அவர்களின் துரதிர்ஷ்டம்.!!

அதனால் கணவன் மனைவி இருவரும் ….. கைக்குழந்தையாய் இருக்கும் தங்கள் மகள் யாழிசையை நல்ல வேலைக்காரியாய் அமர்த்தி, கண்காணிக்கச் செய்வது என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்காகத் தங்கள் தேவையை அக்கம் பக்கம் என்று தெரிந்த நாலு இடங்களில் சொல்லி வைத்திருந்தார்கள்.

மாட்டினாள் அமலா. அவளுக்கும் ஒரு கைக்குழந்தை உண்டு. பக்கத்து வீடுகளில் உயர்வாகச் சொல்ல ‘பக் ‘ கென்று அவளைப் பிடித்துக்கொண்டாள்.

காலை 9. 00 மணிக்கு இவர்கள் வீட்டை விட்டு அலுவலகம் கிளம்புவதற்குள் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டோடு இருக்க வேண்டும். மாலை தாய் வீட்டிற்கு வந்ததும் விட்டு செல்ல வேண்டும். மாதம் சுளையை ஐயாயிரம் ரூபாய் சம்பளம்.

சாப்பாடு, கவனிப்பு என்று எந்த குறையுமில்லை.

குழந்தையைக் கவனிப்பது தவிர வேறு வேலை கிடையாது.

இருந்தாலும்….

”அடிக்கடி வந்து பார்த்துப் போங்க மாமி ! ” என்று பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியிடம் சொல்லி இருந்தார்கள். அவள் எப்போதாவது வருவாள், பார்ப்பாள், செல்வாள். ஆனால் வராமல் இருக்கமாட்டாள்.

இன்று…..

அலுவலகம் முடிந்து மைதிலி கடைத்தெருவைக் கடக்கும் நேரம்.

எதிரே காய்கறிக் கூடையுடன் நின்ற பங்கஜம். ..

” நிறுத்து !… நிறுத்து ! ” என்று இவள் வண்டியை வழி மறித்தாள்.

மைதிலி ஓரம் கட்டி நிறுத்தினான்.

” என்ன மாமி ! வீட்டுக்கு வர்றீங்களா. .? ” அருகில் வந்தவளைக் கேட்டாள்.

” வரலை. இன்னும் வேலை இருக்கு. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதான் நிறுத்தினேன்.” அவள் சொன்னாள்.

வண்டியை அணைத்து. ..

” சொல்லுங்கோ. .? ” என்றாள் இவள்.

” கேட்டு கோபப்படக்கூடாது . தாம் தூம்ன்னு குதிச்சு காரியத்தைக் கெடுத்துடக் கூடாது. நான் சொல்றபடி நடக்கணும். .” பங்கஜத்தின் எச்சரிக்கை எடுத்ததுமே பலமாக இருந்தது.

மைதிலி அவளைக் கலவரமாகப் பார்த்தாள்.

” உன் குழந்தை யாழிசை கஞ்சித் தண்ணியைக் குடிச்சு வளர்றாள்ன்னு நினைக்கிறேன். ” மாமி அடுத்து இடியை இறக்கினாள்.

” என்ன மாமி சொல்றீங்க. .? ” இவள் அதிர்ந்தாள்.

” உன் குழந்தைக் கஞ்சித் தண்ணியைக் குடிச்சதை நான் கண்ணால பார்க்கல. ஆனா. .. நடப்பைச் சொல்றேன். அமலா உன் வீட்டுக்கு வேலைக்கு வந்த மறுநாள் மதியமே…. வீட்டை சாத்திட்டு உன் கைக்குழந்தையுடன் என் வீட்டுக்கு வந்தாள். ”

”…………………….”

” என்னடிம்மான்னேன் …..? சோறு வடிச்சிட்டிடீங்களா. . கஞ்சிச் தண்ணி இருக்கான்னு கேட்டாள். இருக்குன்னேன். முடிஞ்சா தினமும் கொடுங்கன்னு சொன்னாள். உன் குழந்தைக்குத்தான் கொடுக்கிறாளோன்னு என் மனசுக்குள் சின்ன உறுத்தல், சந்தேகம். அவள் வாங்கிட்டுக்குப்போனதும் கண்காணிச்சேன் . குழந்தைக்கு கொடுக்கும்போது கையும் மெய்யுமாய் அகப்பாடலை. ”

”………………………..”

” ஆனா. .. ரெண்டு மூணு நாள் கழிச்சி அதுக்குச் சாதகமா வேறு வகையில் மாட்டினாள். தாள்ல பால் பவுடரைக் கொட்டி அவள் தன் இடுப்புல சொருகினத்தைப் பார்த்தேன். எனக்கு விஷயம் விளங்கிப் போச்சு. இவள் உன் குழந்தைக்குக் கஞ்சித் தண்ணியைக் கொடுத்துட்டு தன் குழந்தைக்குப் பால் பவுடரை எடுத்துட்டுப் போராள்ங்கிறதை. ..” நிறுத்தினாள்.

மைதிலிக்குப் படபடத்தது.

பங்கஜம் தொடர்ந்தாள். ..

” இப்போ நீ ஒன்னும் பண்ண வேணாம். நான் கவனிக்கிறது அவளுக்குத் தெரியாது. இப்போ நான் சென்றபடி செய். …” என்று திட்டத்தை ரொம்ப சரியாகவே சொல்லி முடித்தாள்.

மைதிலிக்கு அது சரியாகப் பட்டது.

” சரி . நீ போ. நான் பின்னால வர்றேன். ” பங்கஜம் விடை கொடுத்தாள்.

‘புட்டிப்பால் இருக்க. … குழந்தை கஞ்சித் தண்ணி குடித்து வளர்கிறதா. .? வேலைக் கேத்தப்படி சம்பளம் கொடுக்கும்போது எப்படி இப்படி துரோகம் செய்ய மனசு வருகிறது. .? பங்கஜம் மாமியைக் கொஞ்சம் கவனிக்கச் சொன்னது ஒரு வகையில் நல்லதாகப் போய்விட்டது. ‘ – மைதிலி நினைத்துக்கொண்டே வண்டியைக் கிளம்பினாள்.

வாசலில் வந்து நின்றாள்.

மாமி சொன்னது ஞாபகமிருக்க. . எதுவும் தெரியாதவள் போல் வீட்டிற்குள் நுழைந்தாள் .

குழந்தை யாழிசை தரையில் அமர்ந்து பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுக்காக அமர்த்திய அமலா. . வீட்டு வேலையாய் அலமாரியில் எதையோ அடுக்கினாள்.

மைதிலி கவனித்தாள். .

பங்கஜம் மாமி சொன்னது போல் அவள் இடுப்பு பகுதி லேசாக மேடிட்டிருந்தது.

திரும்பி இவளைப் பார்த்த அமலா. ..

” வாங்கம்மா. ..” என்றாள்.

அடுப்படிக்குள் சென்று திரும்பியவள் காப்பியுடன் வந்தாள்.

மைதிலி குழந்தையை எடுத்தாள். சோபாவை அமர்ந்து மடியில் கிடத்தினாள்.

அவளிடமிருந்து காப்பியை வாங்கினாள்.

” அது என்ன இடுப்புல. .? ” என்று உற்றுப் பார்த்தாள். .

” ஒ. .. ஒண்ணுமில்லியேம்மா. ..” என்ற அமலா பங்கஜம் மாமி சொன்னது போல் தடுமாறினாள், மிரண்டாள்.

” அப்போ காட்டு. ..? ”

விழித்தாள்.

” முந்தானையை அவுரு. .?! ”

” பா. . பால் பவுடரும்மா. .” அமலா அதற்கு மேல் தப்பிக்க வழி தெரியாமல் தவிப்பாய்ச் சொன்னாள்.

” எதுக்கு. .? ”

” யாழிசைக்குப் புட்டிப்பால் குடிக்கப் பிடிக்கலம்மா. அதிகமா தாய்ப் பால் கொடுத்திருக்கீங்க. அந்த சுவையைத்தான் விரும்புது. முதல் நாளே புட்டிப் பால் குடிக்காம ரொம்ப அடம். என்ன செய்யிறதுன்னு தெரியாம தவிச்சேன்……… ”

” அப்புறம். ..?…..”

” ஆபத்துக்குப் பாவமில்லேன்னு நானே தாய்ப்பால் கொடுத்தேன். குழந்தை ஆர்வமா, ஆசையா குடிச்சுது. வீட்டில குழந்தையை விட்டு வந்த எனக்கும் நெஞ்சு பாரம் கொஞ்சம் இறங்கின மாதிரி இருந்துச்சி. அன்னையிலிருந்து இதுதான் இதுக்கு வழின்னு முடிவுக்கு வந்தேன். அப்படியே செய்யிறேன். நான் தாய்ப்பால் கொடுக்கிறதை நீங்க ஏத்துக்க மாட்டீங்க. அந்த பயம் உங்ககிட்ட என்னால உண்மையைச் சொல்ல முடியல. ..”

”………………………”

” இந்த குழந்தக்குப் பால் கொடுக்கிறதுனால என் குழந்தைக்குத் தாய்ப்பால் இல்லை. அதனால் பால் பவுடரை எடுத்துப்போய் என் புள்ளைக்குக் கொடுக்கிறேன். இது தப்புன்னா என்னை மன்னிச்சுடுங்கம்மா. .” அழுதாள் அமலா.

அவள் தாய்மையைக் கண்ட மைதிலிக்கு நெக்குருகியது.

” அமலா ! நீ வேலைக்காரி இல்லேடி. என் சகோதரி. .” சடக்கென்று எழுந்து இறுக அணைத்தாள்.

வெளியில் நின்று கேட்ட பங்கஜம் மாமிக்கு மனம் உருகி இளகி கண்ணீர் வந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்..... அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவனுக்கு மனைவி, மக்கள் தெரிகிறார்கள்.!! முத்தம்மாளோடு இவன் சேர்ந்த பிறகு அவர்களை மறந்தே போனான். ரங்கநாதனுக்குத் திருட்டு, ஜேப்படி, வழிப்பறி... இது மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
'இந்த வீட்டில் இன்டர்நெட்லிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் கூப்பிடுவறங்க எண் தெரியற வசதி இல்லாத சாதாரணம். ஏன் இப்படி ?'' வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் கொண்டிருந்த ரமேசுக்குள் திடீர் கேள்வி. 'நண்பன் பொம்பளை விசயத்துல அப்படி இப்படி. ...
மேலும் கதையை படிக்க...
அறுபத்திரண்டு வயதான ஆறுமுகம் ஓய்வு பெற்ற பேராசிரியர். பெற்ற மகன்கள் இருவரும் சென்னை, டில்லியில் மனைவி மக்களோடு நல்ல நிலையில் இருக்க... இவர் மட்டும் மனைவியோடு...சொந்த ஊரான கும்பகோணம் பக்கத்தில் உள்ள கொட்டையூரில் வாழ்க்கை. நல்ல மனிதர். அவர் தினம் சுயமாய் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் அறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சாவித்திரியிடம் அவள் தாய் சிவகாமி தயக்கத்துடன் போய் அமர்ந்தாள். '' என்னம்மா..? '' என்றவாறு தாயின் முகத்தைப் பார்த்தாள் அவள். '' ஓ.... ஒண்ணுமில்லேம்மா... '' தாயின் தடுமாற்றம் தயக்கத்தைப் பார்த்த சாவித்திரி... '' சும்மா ...
மேலும் கதையை படிக்க...
பள்ளி வளாகத்தினுள் அன்னை அருள்மேரி ஆங்கிலப்பள்ளியின் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்களாக பெற்றோர், பொது மக்கள். மேடையில்;....சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அதிகாரி அமர்ந்திருக்க... ஆசிரியை ஆர்த்தி அறிவிப்பின்படி தலைமை ஆசிரியை மரிபிலோமினா மாணவ மாணவிகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கிக் ...
மேலும் கதையை படிக்க...
தவறுகள் தண்டிக்கும்…!
தொ(ல்)லைபேசி? – ஒரு பக்க கதை
மண்ணில் சில மனிதம்ங்கள்…..!
உயிரில் கலந்த உறவு…!
ஷாலினிக்குப் பாராட்டு….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)