Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சகுனம் சரியில்லை

 

பொதுவாகவே சகுனம் பார்ப்பதில் அனுவுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அனுவின் எஜமானியம்மாள், “அந்த எதிர்த்த வீட்டுக்காரனைப் பாத்துட்டுப் போனா எந்த காரியமும் விளங்குறதேயில்லை” என்று தாழ்ந்த குரலில் அவங்க புருஷன்கிட்ட சொல்றது அவ்வப்போது அனு காதிலும் வந்து விழும்.

சுமார் நாற்பது வயதிருக்கும் அந்த எதிர் வீட்டுக்காரர் பெரும்பாலும் கறுப்பு சட்டைதான் போடுவார். எஜமானியம்மாவுக்கு அதை பார்க்கும் போதெல்லாம் எரிச்சல் வரும். “அதென்ன? எப்ப பாத்தாலும் அபசகுனமா கறுப்புலேயே …. பேய் மாதிரி உலாத்திக்கிட்டு …” என்று தனக்குத் தானே அலுத்துக் கொள்வாள்.

ஆரம்ப காலத்தில் சகுனத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத அனு, அடிமேல் அடி வைத்தது போல, எஜமானியம்மாளின் இடைவிடாத புலம்பல்களைக் கேட்டு மதில் மேல் பூனை போல் நம்பலாமா வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிருந்தாள். ஆனால், போன மாதம் நடந்த கார் சம்பவத்திற்குப் பின் நம்ப ஆரம்பித்து விட்டாள்.

இப்படி அப்படி என்று இருந்த அனுவின் சகுன நம்பிக்கையில் இப்படி என்றால் அப்படித்தான் என்ற மாற்றம், இப்படித்தான் ஆரம்பித்தது. போன மாதம், ஒரு நாள் காலை, வழக்கம் போல வீட்டை விட்டு வெளியே கிளம்பியவள், தெருவில் இறங்கி, இரண்டு எட்டு கூட நடந்திருக்க மாட்டாள்.

தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவளின் எதிரில், மிக அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த எதிர் வீட்டுக்காரர். அனு அவரைப் பார்த்த அதே சமயம் அவரும் அனுவை நேருக்கு நேர் கண்களை ஊடுருவி ஒரு பார்வை பார்த்தார். தன் மீது பதித்த பார்வையை எடுக்காமலே அவர் கடந்து போன பின்பும், அந்த கறுப்பு சட்டையும், தன்னை ஊடுருவிப் பார்த்த நெருப்புப் போன்ற சிவந்த கண்களும் அனுவின் நினைவை விட்டு அகலவில்லை.

தான் தெருவில் நடக்கும் போது தன் வெள்ளைத்தோலுக்காக பலரும் உற்றுப் பார்ப்பது அனுவுக்கு ஒன்றும் புதியதில்லை. ஆனாலும் … இந்தப் பார்வை …. இது வேறு விதம், வேறு ரகம் என்றே அனுவுக்குப் பட்டது. ஏனோ தெரியவில்லை ! தன்னை அறியாமலே அனுவுக்கு ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது.

எஜமானியம்மாளின் புலம்பல்கள் மாறி மாறி நினைவுக்கு வந்தன. ஒரு வேளை அபசகுனமாக ஏதேனும் நடந்து விடுமோ ? சே ! இது என்ன மூடத்தனம் ? ஏன் அப்படி நடக்க வேண்டும் ? எதற்கு இப்படி நினைக்க வேண்டும் ? என்று பலவாறு நினைத்து, குழம்பிப் போய் தன்னையறியாமல் சாலையின் நடுவில் வந்துவிட்ட அனு, எதிரில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த காரை கவனிக்கவில்லை.

மிக அருகில் கேட்ட ஹார்ன் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் தன்னை நோக்கி ராட்சஷன் போல வந்து கொண்டிருந்த காரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தாள். கிறீச்….சென்ற பிரேக் சத்தத்துடன் அந்தக் கார் முழுவதுமாக இடது புறமாக ஒடித்து திரும்பியதும், ஏதோ ஒரு தன்னிச்சையான செயலில் அனு ஒரு அடி பின்னுக்கு நகர்ந்ததும் ஒரே நேரத்தில் நடந்ததால் மயிரிழையில் அவளை உரசித் தள்ளிய அந்தக் கார், மீண்டும் வேகமெடுத்து, மின்னல் போல கடந்து மறைந்து போனது.

அதிர்ஷ்டவசமாக சாலையின் ஓரத்தில் இருந்த புல் தரையில் விழுந்த அனுவுக்கு கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட சிராய்ப்புக் காயங்களைத்தவிர வேறு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் மரணத்தின் விளிம்புக்குப் போய் திரும்பி வந்த அதிர்ச்சி மட்டும் இன்னும் போகவேயில்லை.

இது நாள் வரை எத்தனையோ பேரைப் பார்த்திருந்தும் அந்த எதிர் வீட்டுக்காரரைப் பார்க்கும்போது மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் ? இது தற்செயலா ? விபத்தா ? கவனக் குறைவா ? அல்லது அபசகுனமா ? எஜமானியம்மாளின் எச்சரிக்கை புலம்பல்களும், அந்த விபத்தும், மீண்டும் மீண்டும் அனுவின் மனதில் அலைமோதிக் கொண்டேயிருந்தன. அதன் விளைவு ? இப்போதெல்லாம், அனு எப்போது வெளியே போனாலும் எதிர் வீட்டுக்காரர் கண்ணில் படாமல் போகவே விரும்பினாள். வாசலில் நின்று எதற்கும் ஒருமுறை எதிர் வீட்டைப் பார்த்துவிட்டுத்தான் வெளியே கிளம்புவாள். எதுக்கு சான்ஸ் எடுக்கணும் ?

வழக்கம் போல, இன்றும் கூட, வாசலில் நின்று ஒரு முறை எதிர்வீட்டைப் பார்த்து, யாரும் வெளியே வரவில்லை என்று உறுதி செய்த பின்புதான் அனு தெருவில் காலையே வைத்தாள். எதிர் வீட்டைக் கடந்தவள் அப்படியே போயிருக்கலாம். தற்செயலாக திரும்பி, மீண்டும் ஒரு முறை எதிர் வீட்டைப் பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள். எதிர் வீட்டு ஜன்னலில் இருந்து அனுவையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தக் கறுப்புச் சட்டை போட்ட எதிர் வீட்டுக்காரர்.

அந்த அபசகுனமான மனிதனை நேருக்கு நேராகப் பார்த்துவிட்ட அனு என்ற அந்த வெள்ளைப் பூனை, மியாவ் ! என்று ஒரு முறை எரிச்சலாகக் கத்தி விட்டு, சகுனம் சரியில்லை என்று முடிவு செய்து, வந்த வழியே திரும்பி, தன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
நாளை காதலர் தினம். கிரீஷ் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். நாளைக்கு அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான். கிரீஷ் யோசித்துப் பார்த்தான். கடந்த வாரத்தின் நிகழ்வுகள் மனதில் நிழற்படம் போல் ஓடியது. போன வாரம் வைத்தியுடன் இதைப் பற்றிப் பேச ஆரம்பித்ததையும் ...
மேலும் கதையை படிக்க...
மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும் நினைக்கவில்லை, மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. வழக்கம் போல இன்றும் கடவுள் தன் வேலையைத் தொடங்கினார்.. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் மனதை ...
மேலும் கதையை படிக்க...
காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருந்ததை விட தன் சாதியையும் தன் சாதி மக்களையும் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தார். ஒரு ...
மேலும் கதையை படிக்க...
மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிடமும் ஒவ்வொரு மரத்திடமும் கூட அவர் பேசியிருப்பார் அப்படி ஒரு ஈடுபாட்டுடன் அந்த ...
மேலும் கதையை படிக்க...
நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டேன். நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை ரயிலின் கூரையில் சீராக தாளம் போட்டுக்கொண்டிருந்தது. வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மனது, மாலை ...
மேலும் கதையை படிக்க...
காதலைச் சொல்லிவிடு
இன்னொரு கடவுளின் தரிசனம்
காதல் மறுப்பு தினம்
வாஸ்து
விருந்தோம்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)