Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உற்றுழி

 

எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத் தொடங்கியது. அதை துளியும் பொருட்படுத்தாது, வைதேகி மின்னல் வேகத்தில் தினசரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, காலை பத்து மணிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு. ஆச்சரியம் இம்மட்டு அம்மட்டல்ல. இயக்குனர் மந்தாகினி சிங்கை வந்துள்ளாரா? இப்போது சிங்கப்பூரில் எந்தக் கலை நிகழ்வுமே இல்லையே! என்று இவள் யோசிக்க, அவரே விஷயத்தை விண்டுரைத்தார். அட! அவரது அண்ணா பொண்ணு சிங்கையிலிருப்பது, இப்போதுதான் இவளுக்கும் கூட நினைவுக்கு வந்தது. ஆமாம், திடீரென்று இவருக்கு எப்படி என் ஞாபகம்? என்று இவள் மனதுக்குள் வியக்க, “நாலு நாளாகவே உன்னுடைய பெயர் தானே வானொலியில் முழங்கிக் கொண்டிருக்கிறது? ஆமாம், நீ நாடகங்களெல்லாம் கூட எழுதுவாயா?” என்று கேட்க ஏனோ சிரிப்பு வந்தது.

வரும் ஞாயிறன்று சிங்கையின் தேசியதின சிறப்பு நாடகம் ஒலியேற இருப்பதற்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு சிங்கை வானொலி இந்த மகிழ்வை, சீரும் சிறப்புமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆக இன்றிரவு டின்னருக்கு அவரை அழைத்துப் போக வேண்டும். வீட்டுக்கு வந்தால், அவியல், ஓலன், காலன், பிரதமன், பப்படம் என பிரமாத விருந்தே கொடுக்கலாம். ஆனால் சைவ உணவே அவருக்கு ஆகாதாம். என்னை எங்காவது வெளியில் அழைத்துப்போ! என்று உரிமையோடு அவர் அன்புக்கட்டளை இட, பிறகுதான் தொடங்கியது சிக்கல். அசைவம் என்பதால் எங்கு அழைத்துப்போக? கணவரிடம் கேட்க, அவருக்கு வந்த எரிச்சல். “அது என்ன, உன்னைக்காண வரும் தோழிகள் யாருக்குமே வீட்டு சாப்பாடே பிடிக்காதா?” என்று சீறினாலும், ரெஸ்டாரெண்ட்டின் முகவரி தந்து, இருவருக்குமான சீட்டும் புக் செய்து உதவினார்.

மந்தாகினியை அழைத்து முகவரி சொல்லி, “குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டுக்கு வர முடியுமா?, என்று கேட்க, இவள் எதிர்பார்த்தாற்போலவே, “அதெல்லாம் முடியாது! நீ வந்து என்னை இட்டுச்செல்!” என்று மீண்டும் அன்புக் கட்டளை. இவள் இருப்பது ஒரு கோடி, தோழி இருப்பது மறு கோடி, ரெஸ்டாரெண்டோ இன்னொரு கோடியில். இதெல்லாம் பார்த்தால் ஆகுமா? விருந்தோம்பல் என்பதே மனசு நிறைந்து, சந்தோஷத்தோடு ஸ்வீகரித்தல் தானே?

இனி இந்த இயக்குனர் தோழி மந்தாகினி பற்றி:

இவர் ஓவியர், இயக்குனர் மட்டுமல்ல. ஒளி அமைப்பில் கலைநுட்பம் அதியற்புதமாக கற்றுத்தேர்ந்தவர். நவீன தொழில்நுட்ப பாணியில் குறும்படம் இயக்கும் இவரது சிறப்பு இவளால் பிரமிப்பாக, மனதில் பதிந்த விஷயம். முற்போக்கு சிந்தனையாளினி. கலை இயக்கத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் கூட முற்போக்காகவே வாழ்ந்து வருபவர்.

அதையே மேடையிலும் முழங்கியபோது ஆச்சரியமாக இருந்தது. இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்பதே இவளுக்கு அதிசயமாக இருந்தது. முதன் முதலாக கலை நிகழ்வுக்கு சிங்கை வந்த போதே, அவரை பேட்டி எடுக்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டாள். ஆனால், அன்போடு பேசப்போன மூத்த இயக்குனர் ஒருவரை, ஒட்டும் மரியாதை இன்றி, நக்கலாக அவர் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை. அவருடன் நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட சக இயக்குனரையும் ‘நீ, டா’ என்றே அழைத்துப்பேசிய ஸ்டைலும் ஹூம்… அன்று ஏனோ வைதேகி பேட்டி எடுக்கவில்லை.

மந்தாகினி இவளை விட வயதில் எவ்வளவோ மூத்தவர். நரைத்த தலையும், பழுத்த அனுபவமுமாய், மேடையில் பிட்டுப் பிட்டு வைத்த அவரது முற்போக்கை பலராலும் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் அவரது ஆற்ற‌ல் இவளுக்குப் பிடிக்கும். எந்தப் பெண் இயக்குனரும் தொடத் தயங்கும், நிலவரங்களை, அவர் துணிகரமாகவே எழுதியுள்ளார். அவரோடு தீவிர இலக்கியம் பேசும் ஆர்வம் இவளுக்கு இருந்தது.

காலிங்பெல்லை அழுத்தியபோது, யாரோ ஒரு முதிர் பெண்மணி தான் வந்து கதவைத்திறந்தார். மந்தாகினி சோபாவில் அலுங்கிய கூந்தலும், கசங்கிய உடையுமாக, அனந்த பத்மனாபன் சயனித்திருப்பதுபோல் படுத்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். வருகிறேன் என்று நேரம் குறிப்பிட்டும் கூட அவரது அசமந்தம் புரியவில்லை. வந்தாயா! என்று சிரித்துக்கொண்டே அறைக்குள் ஓடியவர், அடுத்த பத்து நிமிஷத்துக்குள், வெளியே வந்தபோது, அவருடன் வாசல் கதவைத் திறந்த முதிர் பெண்மணியும் அலங்கரித்துக்கொண்டு வந்தார்.

“இவர் தோழி மலர்! சிங்கப்பூருக்கு வருகிறேனென்று தெரிந்தவுடன், இவரும் சிங்கப்பூர் சுற்றிப் பார்க்கவேண்டுமென்று என்னுடன் வந்து விட்டார்”, என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்திருக்க மாட்டார், என்ன மலர்?” என்று கேட்க, மலர் அம்மா, உடனே கண் சிமிட்டி சிரித்தார். இவள் ரெஸ்டாரெண்டில் புக் செய்தது இரண்டு பேருக்கு மட்டுமே. இனி மலர் அம்மாவுக்காக, திரும்ப அழைக்கவேண்டும்.

அவளுக்கு ஆயாஸமாக இருந்தது. தலைவலி இப்பொழுது உச்சத்தில் இருந்தது. உடம்பெல்லாம் சிலிர்த்து, சிலிர்த்து, வந்தது. அந்த வட்டாரத்தில் டேக்சி கிட்டுவதே பெரும் பாடாக இருந்தது. பீக் ஹ‌வ‌ர் வேறு. முக்கால் மணிநேரம் காத்திருந்து, ஒரு வழியாய் டேக்சி கிட்ட, டேக்சியினுள் ஏறியபோது, கை காலெல்லாம் முறுக்கி முறுக்கி வலித்தது. மந்தாகினியும் அவரது தோழியும், இவளைப்பற்றி, துளியும் பொருட்படுத்தாமல், அவர்களுக்குள்ளாகவே இந்தியில் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ரெஸ்டாரெண்டினுள் நுழைந்ததும் அதுவரை கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த மலர் அம்மாவின் முகம் சட்டென்று மாறிவிட்டது. மெனுகார்டை நீட்டியபோதும் அவர் முகம் மலரவில்லை. இருவரும் குசு குசுவென்று பேசிக்கொள்வதும், இவளை ஏறிட்டுப் பார்ப்பதுமாய், சில நிமிஷங்கள் ஓடியபிறகு, மலர் அம்மா பளிச்சென்று கேட்டார்.

“இங்கு லிக்கர் கிட்டுமா? இந்த ரெஸ்டாரெண்டைப் பார்த்தால் அப்படித்தோணலியே?” வைதேகி ஒரு கணம் திகைத்துப்போனாள். சிங்கையின் மிகப் பிரபலமான ரெஸ்டாரெண்ட் இது. ஆனால் லிக்கர் கிட்டுமா என்று இவளுக்கும் தெரியவில்லை.

பெண்கள் மது அருந்துவதொன்றும் சிதம்பர ரஹஸ்யமல்ல, என்றாலும் இவளுக்கு சிரமமுண்டு. மது அருந்துபவர்களோடு இவளால் சரளமாக பேச முடியாது. மதுவின் நெடியும், அசைவ உணவின் வாடையும், இவளது நாசிக்கு, அடிவயிற்றுப் புரட்டலை கொடுத்துவிடும். கணவர் உடன் வந்தால் பிரச்சினையே இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் வரை கூட கணவர் இவளுக்குத் துணையாக வந்திருக்கிறார். ஆனால் சில அநுபவங்களுக்குப் பிறகு, எந்த ஜபதர்ஸ்து வந்தாலும் கணவர் வரமாட்டார்; இவளையும் அனுப்பமாட்டார் ஆனால் பெண்கள் அவர்களாக தொலைபேசியில் அழைத்துக் கேட்கும் போது இவளால் மறுக்க முடிவதில்லை. திட்டிக்கொண்டேதான் கணவர் அனுப்பி வைப்பார். அவர் பயந்தது போலவே, இன்றும் ஒரு அதிர்ச்சி.

மந்தாகினி கேட்டார்.”சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டு நீ இதுவரை ஒரு முறைகூட “பப்”புக்குப் போனதே யில்லையா?”

“இல்லை”

“பிறகு என்னதான் நீ எழுதிக் கிழிக்கிறாய்?” என்று கேட்டு அவர் சிரிக்க, மலர் அம்மாவும் குபுக்கென்று சிரித்தார்.

கோபம் வந்தது. இலக்கியத்துக்கும் மதுவுக்கும் என்ன சம்பந்தம்? மது அருந்துபவர்களால் மட்டும் தான் இலக்கியம் படைக்க முடியுமா? என்று ஒரு கணம் நெஞ்சு கொதித்தது. அதற்குள், பேரர், மெனு கார்டோடு அருகில் வர, உடனே இருவரும் அவர்களுக்கு வேண்டிய பிராண்டைச் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிஷம், குப்பிகளும், குமிழ் நீண்ட கிளாஸ்களும், மேஜையில் வந்தமர்ந்தது. கூடவே அவர்கள் ஆர்டர் செய்த, இறால், சிலி க்ராப் [நண்டு], பட்டர் சிக்கன், பைனேப்பிள் ரைஸ், ரயித்தா என உணவு அயிட்டங்களும் வந்து சேர அவர்கள் தொடங்கினார்கள்.

பாட்டிலைத் திறந்த லாவகமும், அளவாய் ஊற்றி, அழகாய் ஐஸ் துண்டங்களை மிதக்கவிட்டு, பொன் போல், அதை அவர்கள் ரசித்துக்குடித்த அழகும், தேர்ந்த அனுபவமென்பதை அவளுக்கு விளக்கியது. பெண்களுக்கு இதில் இவ்வளவு இன்பமிருப்பதை, இன்றுதான் இவ்வளவு அருகில் வைத்துப் பார்க்கிறாள். இரண்டாவது ரவுண்டில் மந்தாகினி பிரகாசமானார். மலர் அம்மா நண்டைக் குத்தி, முள்கரண்டியால் சதையைப் பொங்கப் பொங்க, வாயில் போட்டுக்கொண்டு “வெரி டெலிஷியஸ்’ என்றார். மந்தாகினி இறாலின் தோலைக்கூட எடுக்காமல், அப்படியே வாயில் வைத்து லாவகமாய் ,சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை பிளேட்டில் உமிழ்ந்தார்.

இவளுக்கு குப்பென்று உடல் சுட்டது. காய்ச்சல் வரும் போல் உடம்பு முழுக்க வலித்தது.

ஒவ்வொரு முறை அவர்கள் குமிழ்கிளாசை நிரப்பும்போதும், வெறும் ஆரஞ்சு ஜூஸ் மட்டும் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இவளின் கிளாஸிலும் ஐஸ் துண்டங்களைப் போட்டு விட்டார்கள். வேண்டாம் என்று சொன்னால் எங்கே இவளை மட்டமாக நினைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் வாயைத் திறக்கவில்லை. ஏற்கனவே உடல் முடியாமலிருக்க, ஐஸ் ஆரஞ்சை அப்படியே குடிக்க முடியாமல், துளிதுளியாக, ஸ்ட்ராவினால் நாவில் தொட்டுக்கொண்டிருந்தாள். மலர் அம்மா திடீரென்று பெங்களூரில் பப்புக்குச் சென்ற பெண்களை அடித்த ஆண்களை காரசாரமாகத் திட்டினாள். உடனே மந்தாகினி, ஒட்டு மொத்த ஆண்வர்க்கத்தையே சாடினார். அவர்கள் வெகு உக்கிரமாக பேசத் தொடங்கினார்கள். இந்த ஆண்வர்க்கம் பெண்களை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துகிறது என்பதை பட்டியலிடத்தொடங்கினார்கள். அவன்கள் குடித்துவிட்டு, நடுரோட்டில், காட்டிக்கொண்டு மல்லாந்து கிடப்பானாம். ஆனால் பெண்கள் குடிப்பதைக்கண்டால் மட்டும் அவன்களுக்கு விறைத்துக்கொள்ளுமாம். அங்கேயே மிதிக்கணும் அவன்களை”, இது மலர் அம்மா.

“ஆனால் ஆண்களையும் மட்டும் சொன்னாலும் போதாது. அவன்களுக்குத் துணி துவைத்து, வீடு கூட்டி, சமைத்துப்போட்டு, அவனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் படுத்துக்கொண்டு, அதனால் வரும் கருமத்தையும் சுமந்து, பெற்றுப்போட்டு, அவன்கள் கையால் அடிவாங்கியும், மொத்துப்பட்டும் வாழ்வதுதான் பத்தினி தர்மம் என்று வாழ்கிறார்களே, அந்த முதுகெலும்பில்லாத பெண்களை முதலில் கட்டி வச்சு உதைக்கணும்.” அடுத்து காது பொத்தும் நாராச வார்த்தைகள் பீய்ச்சியடிக்க, இவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. நாவெல்லாம் கசந்து வழிந்தது. தலை குத்தி குத்தி வலித்தது.

“ஒரு நாளாவது, எந்த பயலாவது, பெண்ணுக்கு சமைத்துப்போட்டு, அவளை உட்கார்த்தி வைத்து சந்தோஷப்படுத்தியிருக்கானா? அவளுக்குப் பிடித்தது என்ன என்று கேட்டு, அவளுக்காக தன்னை மாற்றிக் கொண்டதாக சரித்திரம் உண்டா? சமுதாய சீர்கேடுகளிலேயே பெண்களின் கொத்தடிமைத்தனத்தைத்தான் முதலில் மாற்ற வேண்டும். அடித்தால் அவன்களை திருப்பி அடிக்க வேண்டும்”. இந்த ரீதியில் போய்க்கொண்டிருந்தது பேச்சு.

ஹாவென்று பிரமித்துப்போய் அவர்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தாள் இவள். இந்த இரண்டு பெண்களுமே, வாழ்க்கையால், அனுபவத்தால், வயதால் கூட, எவ்வளவோ முதிர்ந்தவர்கள். அதனால் இவர்கள் சொல்வதுதான் சரியோ என்று இவளுக்கே கூட ஒரு கணம் தோன்றிவிட்டது. ஒரு நாளாவது கணவர் சமையல் கட்டுக்கு வந்திருப்பாரா? கணவர் என்றல்ல, இவர்கள் வம்சத்து ஆண்களுக்கே சமையல் தெரியுமா என்பதே சம்சயம் தான்.

மந்தாகினி உறுமினார். “இதில் இன்னொரு வெட்கக்கேடு என்ன தெரியுமா? படித்த பெண்களேகூட, இன்று வெளியில் போவதென்றாலும், முதலில் கணவரிடம் கேட்டு சொல்கிறேன் என்கிறாளே”, இவள்கள் இப்படி பத்தினி வேஷம் போடுவதாலேயேதான் அவன்களுக்கு —–” கூசிச்சுருங்கும் கெட்ட வார்த்தையால் எழுத்தாளினி திட்டினார்.

அப்பொழுது பேரர் வந்தார். “இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்று கேட்க, மலர் அம்மா, சட்டென்று அவன் கைகளைப் பிடித்து முத்தமிட்டார். “ஓ, நோ! யு ஆ சோ ஸ்வீட்! எவ்வளவு அருமையாக எங்களைப்பற்றி கவலைப்படுகிறாய்?” என்று உணர்ச்சி வசப்பட, அந்த பங்கலாதேஷ் இளைஞன் வெட்கிச்சிலிர்த்து, “அது என் கடமை” என்று சொல்ல, இவளுக்கு குளிரின் வேகத்தில் உடம்பு நடுங்கியது. “ஞானும் எவ்வளவோ தடவை, சமுதாய சீர்கேடு பற்றியும், பெண்ணியம் பற்றியும் பேசிப்பேசி அலுத்துவிட்டேன். எனது குறும்படம் என்றாலே புதுமை உண்டு, ஆனால் முரட்டு சிந்தனை, என்ற முத்திரையோடுதான் பாராட்டு தெரிவிக்கிறார்களே ஒழிய, என் அறிவை எவனுமே மதித்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இவன்களின் மதிப்பீட்டால் எனக்கென்ன நஷ்டம்? தொங்கத் தொங்கத் தாலியும், வகிட்டில் குங்குமமும் தான் பெண்ணுக்கு பெருமை எனும் முட்டாள்தனத்தை இவள்களே மாற்றினால்தானுண்டு,”.

சிக்கன் தொடையை முழுசாக கடித்துக்கொண்டும், பைனேப்பிள் ரைஸை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே, வாய் நிறைய நிறைய மந்தாகினி அலுத்துக்கொண்டார். பட்டர் சிக்கனும், பைனேப்பிள் ரைஸும் நல்ல காம்பினேஷன் என்று மலர் அம்மாவும் சப்புக்கொட்டிக்கொண்டார். பின் விருட்டென்று எழுந்து மலர் அம்மா கழிவறைப்பக்கம் போய் வந்தார். திரும்பி வந்தபோது மலர் அம்மாவின் துப்பட்டாவைக் காணோம். அதுபற்றிய பிரக்ஞையே இல்லாமல், வந்ததும் சிரித்துக்கொண்டே மந்தாகினியின் காதில் ஏதோ குசுகுசுத்தார் மலர் அம்மா. அடுத்த கணம் அது நிகழ்ந்தது. மந்தாகினி பளார் என்று மலர் அம்மாவின் கன்னத்தில் விட்டார் ஒரு அறை .

“எங்கே என்ன பேசுவது, என்ற விவஸ்தையே இல்லையா உனக்கு ஹூம்!” என்று உறுமினார்.

இவள் வெலவெலத்துப் போனாள். ஆனால் ஆச்சரியம். கன்னத்தில் அறை வங்கிய மலர் அம்மா கோபப்படவேயில்லை. அவர்கள் எழுந்துகொள்ள, இவள் பேர‌ர் கொண்டுவந்த பில்லுக்குப் பணமும் டிப்ஸும் கொடுத்துவிட்டு, வெளியே வரும்போதுதான் கவனித்தாள். மலர் அம்மாவின் பின்பாகம் [பிருஷ்டம்] நனைந்திருந்தது. சிறுநீரின் வீச்சம் குப்பென்று காற்றாய் வீசியது. அருகே சென்ற போதோ சிறுநீரின் வீச்சத்தில், குடலைப் புரட்டிக் கொண்டு வந்தது இவளுக்கு. டேக்சிக்காக நின்றபோது, காய்ச்சல் வேகத்தில் தலை சுழன்று கொண்டு வந்தது. மது அருந்திய அந்த இரண்டு பெண்களும் ஸ்டெடியாக நிற்க, குடிக்காத வைதேகி, நிற்கவே தள்ளாடினாள்.

அப்படியே சரிந்து, மடிந்து, தரையில் உட்காரும் முன்னரே, அதற்குமேலும் தாங்காமல், அடி வயிற்றிலிருந்து ஓங்கரித்துக்கொண்டு, குமட்டி குமட்டி வாந்தி எடுத்தாள்.

ஒவ்வொரு டேக்சியும் அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது.

- டிசம்பர் 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த அறைக்குள் நுழைந்தவுடனேயே கண்ணைக்கட்டி நிறுத்தியது, அறைக்குள் வீற்றிருந்த அந்த அலங்காரக் கண்ணாடி தான். இதுவரை இப்படி ஒரு கண்ணாடியை சோமசேகரன் பார்த்ததே இல்லை. முற்றிலும் நூதன வடிவில், மேலே கூம்பி, நடுவில் பரந்தும், அடிப்பாகத்தில் மீண்டும் கூம்பியுமாக,யாராக இருந்தாலும் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம் இன்னொரு பக்கம். மூத்த மகன் சரவணனால் பேசவே முடியவில்லை. சரவணனுக்கு இந்த 52 வயசுக்குப் பொருத்தமாக மண்டை முழுக்க சஹாராப்பாலைவனமாக ...
மேலும் கதையை படிக்க...
தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ? பாவாடைக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதுக்காக பூமாதேவி என்ன கருணையா பொழியப்போகிறாள்? கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை ஒரு பெரிய கரண்டியால் கலக்கிவிட்டு, ஒருசொட்டு உள்ளங்கையிலும் விட்டு நக்கிப்பார்த்தான் பாவாடை. உப்பு கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது. அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை. தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று எரி உபாதையில் கனன்று ...
மேலும் கதையை படிக்க...
தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ? பாவாடைக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதுக்காக பூமாதேவி என்ன கருணையா பொழியப்போகிறாள்? கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை ஒரு பெரிய கரண்டியால் கலக்கிவிட்டு, ஒருசொட்டு உள்ளங்கையிலும் விட்டு நக்கிப்பார்த்தான் பாவாடை. உப்பு ...
மேலும் கதையை படிக்க...
மின்மினி
புரை
விரல்
தாகம்
விரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)