ஈரம்!!

 

மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்திருந்தது.

“தாத்தா.. தாத்தா.. வீட்டுக்குப் போலாம்..”, என மீண்டும் அனத்த ஆரம்பித்தான் கேசவ்.. இங்கு வந்ததிலிருந்து இதே பாட்டுத்தான் பாடுகிறான்..

“டே.. உனக்கென்ன மூளை கீள கொழம்பிப் போச்சா.. நீயும் பார்த்திட்டுத் தானே இருக்கற…! நாமலே உயிரக் கையில பிடிச்சிட்டு தப்பிச்சு வந்து இந்த பள்ளிக்கூடத்துல உட்கார்ந்திருக்கோம்.. இப்ப மறுபடியும் வீட்டுக்குப் போலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க… உனக்கு திமிர் தானே..!, எனச் சொல்லி.. ஓங்கி ஒன்னு வைத்தாள் பாட்டி..

வீலென கத்தி அழ ஆரம்பித்தான்…

“கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கு வெள்ளம்.. வடியற வழியவே காணோம்.. ஆளாளுக்கு தண்ணி போற பக்கமெல்லாம் ப்ளாட் போட்டு வீடு கட்டி வச்சிட்டாங்க.. இந்த வெள்ளத்துல நம்ம ஓட்டு வீடு இதுவரைக்கும் தப்பிச்சு இருக்குதானே தெரியல..”, பாட்டியின் புலம்பல் தொடர‌…

கேசவின் அனத்தலும் தொடர்ந்தது.

தாத்தாவிற்கு இளகிய மனசு.. பேரன் இப்படி தேம்பி தேம்பி அழுவதைப் பொறுக்க முடியவில்லை..

அப்பாவும், அம்மாவும் பட்டணத்தில் வேலை செய்ய.. அங்கு படிக்கவைக்க கட்டுப்படியாகாது என.. கேசவை கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் இருந்து படிக்கும்படி விட்டுவிட்டார்கள்… அவனும் ரொம்ப நல்ல பையன்.. படிப்பில் சுட்டி.. உதவி செய்வதில் கெட்டி.. மரம், செடி, கொடி.. விலங்குகள் அனைத்திடமும் ரொம்பவும் பாசமாய் இருப்பான்..

அவனது அழுகை தொடர்ந்து கொண்டிருந்தது. தாத்தா.. தாத்தா.. வீட்டுக்குப் போலாம்…. என்னை ஒரே ஒரு வாட்டி கூட்டிட்டுப் போங்க.. ம்.. ம்..”,

“சரி.. சரி.. அழுகாத.. வீட்டுக்கு எப்படி போலாம்னு பார்க்கறேன்”, என்றவர் அதற்கான தயாரிப்புகளில் இறங்கினார்.

ஒரு பெரிய குச்சியை துணைக்கு எடுத்துக்கொண்டார்.. துண்டை இடுப்பில் நன்றாய் கட்டிக் கொண்டார்.. கேசவைத் தூக்கி அவரது தோளுக்கு மேலே உட்கார வைத்துக் கொண்டார்.. இவரது செயல்பாடுகள் பிடிக்காத பாட்டி.. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“கேசவு.. நல்லா இறுக்கி பிடிச்சிக்கோ… தண்ணி ரொம்ப வேகமா ஓடுது.. மெல்ல நடந்து நாம வீட்டுக்குப் போயிடலாம்”

“சரிங்க தாத்தா..”, எனச் சொல்லி தாத்தாவை இறுகப்பற்றி உட்கார்ந்து கொண்டான்…

வெள்ள ஓட்டத்தின் ஊடே.. மெல்ல அடி மேல் அடி வைத்து நடக்க ஆரம்பித்தார் தாத்தா.. ‘சிறு செடிகள்…’ ‘துணிகள்..’ ‘வாட்டர் பாட்டில்கள்..’ ‘குப்பைகள்’ என எல்லாமே மிதந்த சென்றன வெள்ளத்தில்…

கேசவிற்கோ ஏரோப்ளேனில் பறப்பது போன்ற உணர்வு.. அவ்வப்போது பயத்தில் கண்களை மூடிக்கொண்டான்..

ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து ஊர்ந்து வந்ததில் அவர்களது ஓட்டு வீட்டின் மேல்பாக ஓடுகள் கண்ணில் பட்டது.. மற்ற சுவரெல்லாம் தண்ணீரில் அடித்துப் போனதைப் புரிந்து கொண்டவன்.. .

மீண்டும் கத்தி அழ ஆரம்பித்தான்.. “டே.. கேசவ்.. அழாத.. அதான் பக்கத்துல வந்துட்டோமே!” “தாத்தா.. வீட்டுல இருந்த எல்லாமே தண்ணில அடிச்சிட்டுப் போயிருக்குமா!” “ஆமான்டா” “ம்.. ம்.. “, என கேசவின் தேம்பல் தொடர்ந்தது.

அப்படியே நடந்து வீட்டிற்கு அருகில் வந்தனர்.. வீடு முழுவதும் தண்ணீர்… தாத்தாவின் மேலிருந்தே அங்குமிங்கும் பார்த்தான் கேசவ்…

“என்னத்தடா தேடுற?” “ம்.. அப்படியே வீட்டுக்கு வெளியே ஒரு சுத்து சுத்துங்க தாத்தா”

“என்னடா சொல்ற.. நம்ம வீடு எப்ப கோயிலாச்சு..?” வீட்டுக்குப் பின்னே போனதும் ஒரு சத்தம் கேட்டது… “செல்லம்”, என இவன் சத்தம் போட.. சட்டென இவனது கைகளுக்குள் தாவி வந்து அமர்ந்து கொண்டது ஒரு நாய்க்குட்டி..

பயம் மற்றும் ஈரத்தால் உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. அதனை இறுக்கக் கட்டிக் கொண்டான். “ஓ… இதக் காப்பாத்த தான் அழுதியா?” “ஆமா… தாத்தா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் வீட்டுக்கு தூக்கிட்டு வந்தேன். “செல்லம்”னு பேரு கூட வச்சேன்.. ராத்திரி நான் தூங்கிட்டு இருக்கும் போதே என்னை கூட்டிட்டு அங்க போயிட்டீங்க.. அப்ப இருந்து என் செல்லத்த காப்பாத்தனும்னு தவிச்சிக்கிட்டே இருந்தேன்.. பாருங்க இது கூட நான் வருவேனு காத்துட்டு இருந்தேனு சொல்றத…”, எனச் சொல்லி கலகலவெனச் சிரித்தான்.

கூடவே பவ்.. பவ்..வென மென்மையாய் குரைத்து சிரிப்பில் கலந்து கொண்டது அந்த நாய்குட்டி…. மீண்டும் கேசவோடு நாய்க்குட்டியையும் மேலே உட்கார வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் தாத்தா..

இப்போது இருந்த உற்சாகமான, நிம்மதியான மன நிலையால் மீண்டும் விமானப்பயணம் போலவே தொடர்ந்தது கேசவின் தோள் பயணம்..

- திருச்சி தினமலர் வாரமலர் (2020ம் ஆண்டுக்கான சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை)

அ.வேளாங்கண்ணி, சோளிங்கர் 

தொடர்புடைய சிறுகதைகள்
'ஆண்டவா.. இருக்கற எல்லா பிரச்சனைக்கும் விமோச்சனமே இல்லையா..?' என மனதிற்குள் வேண்டிக்கொண்டே தொழிற்சாலைக்கு கிளம்பினார் குருசாமி... எடுபிடி வேலை தான்.. ஆனாலும் வயது அதிகமாகிவிட்டதால் ஓடியாடி வேலை செய்ய முடிவதில்லை.. ஒரே பரபரப்புடன் காலை வேலை முடிந்து சுள்ளென்று பசிக்க ஆரம்பித்தது. ...
மேலும் கதையை படிக்க...
"கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!" என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
"மழையினைப் பார்த்து விதைகளை விதைத்த காலம் போய்.. கடன்களை வாங்கி பொழப்பை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறான் விவசாயி.. உலகிற்கே சோறு போட்டவனின் வீட்டில் இன்று சோறு இல்லை.. உலகிற்கே பசி போக்கியவன் இன்று பசியால் வாடுகிறான்.. ...
மேலும் கதையை படிக்க...
"சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு... சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க... பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா... ஒரு மணி நேரமாகும் வீட்டுக்கு போறதுக்கு... இப்பவே மணி ஆறாச்சு... இருட்டிக்கிட்டு வேற கெடக்கு...", என நான் புலம்பியது யார் காதிலும் விழுந்த ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க சார்.. வாங்க சார்... வாங்க சார்"னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, "சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு" ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி.. எதுக்கு எங்க... அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்... ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு... யாருக்கிட்ட எப்ப ...
மேலும் கதையை படிக்க...
அன்பைத் தவிர என்னிடம் சொல்ல எதுவும் இல்லை
வ‌ருவாரா மாட்டாரா?
விடிவு காலம்
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
ரசவாதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)