சார்… ஐ லவ்யூ!

 

(‘மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் இவளோ வித்தியாசமாய்… சீ இஸ் கிறேட்!’)

நியூஜேர்சியில் உள்ள நியூபோர்ட் சென்டர் மாலில் உள்ள தனது கடையை மூடிவிட்டு சுசீலா வெளியே வந்த போது வழக்கத்துக்கு மாறாக வானம் இருண்டு வெண்மணலை வாரி இறைப்பது போல பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு காற்றோடு சேர்ந்து குளிர் வேறு ஊசியால் குத்திக் கொண்டிருந்தது. திறந்தவெளி கார் பார்க்கில் நிறுத்தப் பட்டிருந்த கார்கள் எல்லாம் வெண்பனியால் போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தன.

சுசீலா அங்கே நிறுத்தி இருந்த தனது காரில் படிந்திருந்த பனித் துகள்களைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்த போது முன் வீதியோரம் நிறுத்தப் பட்டிருந்த வெள்ளை நிறக்கார் ஒன்று அவளது கவனத்தைக் கவர்ந்தது.
காரின் சொந்தக்காரராய் இருக்கலாம், காரைச் சுற்றிச் சுற்றி வருவதும் கதவைத் திறப்பதற்காக அதை இழுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். அவருக்கு ஏதாவது உதவி தேவைப் படலாம் என்று எண்ணி தனது காரை அவருக்கு அருகே நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி வந்தாள் சுசீலா

‘எக்யூஸ்மீ..! ஏதாவது உதவி தேவையா?’
அவர் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். பனி ஆடையில் அவரது முகம் மட்டும் வெளியே தெரிந்தது – ஒரு எஸ்கிமோபோல! நீண்டதொப்பி காதோடு சேர்த்து தலையை மூடிக்கொண்டிருந்தது.
‘இல்லை! நானே சமாளித்துக் கொள்வேன்!’ என்றார் கம்பீரமான் குரலில்!
‘கதவு திறக்க முடியலையா?’
அவர் சற்றுத் தயங்கிவிட்டு ‘ஆமா!’ என்று தலையசைத்தார்.
அவள் ஒவ்வொரு கதவாகப் பிடியில் கைவைத்து இழுத்துப் பார்த்தாள். ஏமாற்றம் தான் மிஞ்சியது.
‘சாவி இல்லையா?’ என்று கேட்டாள்.
‘சாவி இருந்தால் நானே கதவைத் திறந்திருப்பேனே!’
‘புரியுது, உள்ளே வைத்துக் கதவைச் சாத்தீட்டீங்க, அப்படித்தானே?’
‘ஆமா!’ என்றார்.
‘இப்போ என்ன செய்யப் போறீங்க?’
‘உங்க கிட்ட செலுலர்போன் இருந்தால் கொடுங்களேன், ஏ.ஏ.ஏக்கு போன் பண்ணினா அவங்க வந்து கதவைத் திறந்து விடுவாங்க!’
‘இந்தக் கொட்டும் பனியிலே அவங்க வர ரொம்ப நேரமெடுக்கும், அதுவரை காத்திருந்தா நீங்க குளிரில் விறைச்சுப் போயிடுவீங்க!’
‘அப்போ என்னை என்ன தான் செய்யச் சொல்லுறீங்க?’ இயலாமையின் தொனியில் கேள்வி பிறந்தது.
‘ஒரு வழியிருக்கு..!’
‘என்ன?’
‘உங்க வீடு அருகில் இருக்கா?’
‘சற்றுத் தொலைவுதான்! ஏன்?’
‘உங்க வீட்டிலே இதற்கு ஒரு மாற்றுச் சாவி இருக்கும் தானே?’
‘ஆமா, இருக்கு!’
‘என்கூட காரில் வாங்க, நாங்க அங்கே போய் சாவியை எடுத்திட்டு வருவோம்’.
‘வேணாம், உங்களுக்கு ஏன் வீண் சிரமம்!’
‘இது ஒன்றும் சிரமமில்லை! ஒருவருக் கொருவர் அவசரத்திற்கு உதவி செய்யாவிட்டால் ஏன் இந்த மனித வாழ்க்கை? வாங்க, வந்து காரில ஏறுங்க!’

அவரது பதிலுக்குக் காத்திராமல் அவள் தனது காரின் கதவைத் திறந்து விட்டாள். அவர் தன் வீட்டுக்கு வழிகாட்ட, அவள் காரை ஓட்டிச் சென்றாள்.
பல்கலைக்கழக கம்பவுண்டுக்கு உள்ளே பிரமாண்டமான ஒரு பங்களா முன் கார் நின்றது.
அவள் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.
‘இது… இது… புரொபஸர் ராமநாதனோட பங்களா தானே?’
‘ஆமா!’ என்று தலையசைத்தார்.
‘அப்போ நீங்க..?’
அவர் கீழே இறங்கி தலையை மூடியிருந்த தொப்பியைக் கழட்டினார்.
‘மைகாட்! நீங்களா ஸார்! நீங்க மாறவேயில்லை! அப்படியே இருக்கிறீங்க, என்னை ஞாபகம் இருக்கா, நான் தான் சுசீலா!’
‘சுசீலா!’ அவர் நினைவிற்குக் கொண்டு வரப்பார்த்தார்.
‘எந்த இயர் ஸ்டூடன்ட்?’
முன்பு நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி அவருக்கு அவள் ஞாபகமூட்டினாள். பாடம் முடிந்து கேள்வி கேட்கும் நேரத்தில் அவள் அவரிடம் சிரித்துக் கொண்டே ஒரு கேள்வி கேட்டாள்,
‘ஸார்! உங்க இளமையின் ரகசியம் என்ன?’
‘அதுவா தினமும் காலையில் எழுந்து ஜாக்கிங் போறேன், உணவு விஷயத்தில் ரொம்பக் கண்டிப்பாக இருக்கிறேன், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.. அவ்வளவுதான்!’ அவரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
‘இவ்வளவுதா..னா..?’ என்று அவள் ஏமாற்றத்தோடு கேட்டபோது எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். அவரிடம் இருந்து வேறு ஏதாவது பதிலை எதிர்பார்த்தாளோ என்னவோ, பதில் சப்பென்றிருந்தது.
‘இப்போ புரியுது, வாயாடி சுசீலாதானே!”" சிரித்துக் கொண்டே கடந்த காலத்தை அவர் நினைவுபடுத்திப் பார்த்தார்.
அவள் தன்னைப் பற்றி, பட்டப்படிப்பு முடிந்தபின் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னாள்.
அவரிடம் படித்தது, திருமணமானது, ஒரு பெண்ணுக்குத் தாயானது, கார் விபத்திலே குடிகாரக் கணவனை இழந்தது, அவர் விட்டுச் சென்ற கடையின் வருமானத்தில் இப்போது சீவனம் நடத்துவது, இப்படிப் பல விடயங்களையும் அவரிடம் சொன்னாள்.
‘உட்காரு! என்ன சாப்பிடறே? காப்பி..?’
‘இல்லை சார், பரவாயில்லை!’
‘புக்ஸ் படிச்சிட்டிரு, நான் காப்பி கொண்டு வர்றேன்!’
அவர் சமையலறைக்குள் நுழைந்ததும், ஹோலை நோட்டம் விட்டாள் சுசீலா. பெண்கள் இல்லாத வீடு என்பது புரிந்தது.
அங்குமிங்குமாக இறைந்து கிடந்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும் ஒழுங்கு படுத்தி வைத்தாள். டைனிங் ரூமில் கீழே விழுந்து கிடந்த மேசை விரிப்பை எடுத்து மேசையில் விரித்து பூச்சாடியை அதற்குமேல் வைத்து அழகுபடுத்தி விட்டாள். ஐந்து நிமிடத்தில் அந்த வரவேற்பறை பளீச்சென்று காட்சி தந்தது.
‘வாவ்! இது நம்ம வீடா..?’ சுடச்சுடக் காப்பியோடு வந்த ராமநாதனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அவரது புகழுரையில் அவளது முகம் பூவாய் மலர்ந்தது.
‘எது எது எங்கே இருக்கணுமோ, அது அது அங்கே இருந்தால் தான் அது அழகு, அதற்கு மதிப்பு’ என்றாள்.
அவர் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார்.
‘ம்….! மகள் போனதோட எல்லாவற்றையும் மறந்திட்டேன், வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் போயிடிச்சு!’ என்று பெருமூச்சு விட்டார்.
மனைவி காலமானது, ஒரே மகள் அவரின் கண்டிப்பான வளர்ப்புப் பிடிக்காமல் தனக்குப் பிடித்தவனோடு வீட்டை விட்டு வெளியேறியது, அதன்பின் ஏனோ தானோ என்று தனிமையில் இங்கே வாழ்வது, இப்படிப் பல விடையங்களையும் அவளிடம் மனம்விட்டுப் பேசினார்.
ஆப்புறம் மாற்றுச்சாவியுடன் இருவருமாகச் சென்று அவரது கார் கதவைத் திறந்தார்கள். சுசீலாவிற்குப் பல முறை நன்றி சொல்லி விடைபெற்றார் ராமநாதன்.
அதன் பின்னர், அடிக்கடி நேரம் கிடைத்தபோதெல்லாம் சுசீலாவின் கடைப்பக்கம் செல்லத் தொடங்கினார் ராமநாதன். ஆதன் மூலம் தனிமை என்ற அந்தப் பயங்கரமான சிறையில் இருந்து மௌ;ள மௌ;ளத் தன்னை விடுவித்துக் கொள்வது போன்ற ஒரு வகை உணர்வு அவருக்கு ஏற்படத் தொடங்கியது.
சுசீலாவின் வேண்டுகோளின் படி வார இறுதி நாட்களில் அவளது வீட்டிற்குச் சென்று அவளின் பதினெட்டு வயதான மகள் நிலாவிற்கு பிரத்தியேக டிய+ஷன் கொடுக்கத் தொடங்கினார். அங்கே தான் ஒருநாள் கணிதத்தில் கல்குலஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அவர் சற்றும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்தது. பாடம் நடக்கும் போது நிலாவின் கவனம் முழுவதும் பாடத்தில் இல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அப்போது கவனித்தார்.
‘என்னம்மா, என்ன யோசனை?’
‘இல்லை, யூ ஆர் ஸோ.. ஹாண்ட்ஸம்..’ என்றாள் சட்டென்று!
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவர் ஒரு கணம் அதிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.
‘என்ன சார், பயந்திட்டீங்களா?”" என்றாள் நிலா மெல்லிய புன்சிரிப்போடு.
‘என்னம்மா, நீ படிப்பிலே கவனம் செலுத்தலையே!’ என்றார் கண்டிப்பான குரலில்.
‘நீங்க அழகாய் இருக்கிறீங்க என்று சொல்லக்கூட எனக்கு அனுமதி இல்லையா ஸார்?’
அவர் ஒரு வினாடி தயங்கி, ‘சொல்லலாம், ஆனால் படிக்கும் போது பாடத்தில் மட்டும் தான் கவனம் செலுத்தணும்!’ என்றார்.
“”அப்படின்னா, பாடம் முடிந்ததும் உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்!”"
பாடம் முடிந்து அவர் வீட்டிற்குக் கிளம்பும் போது அவள் ஓடிவந்து வழிமறித்தாள்.
‘என்னம்மா..?’
அவள் உடனே அவருக்கு அருகே வந்து ‘ஐ லவ்யூ’ என்று சொல்லி சட்டென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவர் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போய்விட்டார். அவரளவில் அவரது மகள் ஓடி வந்து “அப்பா” என்று ஆசையுடன் கட்டியணைத்து முத்தம் தந்தது போல உள்ளம் குளிர்ந்து போனாலும் மனசுக்குள் ஏதோ உறுத்தியதால் தன்னைச் சுதாரித்துக் கொண்டு,
‘டூ யூ லைக் மீ?’ என்றார் பாசத்தோடு.
‘நோ!’ ஐ லவ் யூ! நான் உங்களைக் காதலிக்கிறேன்!’ என்றாள் நிலா உறுதியாக.
‘காதலா? என்னம்மா சொல்லுறே?, உனக்கு அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா? உன்னைவிட வளர்ந்த பெண் ஒருத்தி எனக்கு இருக்கிறாள். இப்படி எல்லாம் தத்துப்பித்துனு நீ சொல்லக் கூடாது! நான் உன் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறவன்!’
‘அப்பா ஸ்தானத்திலா.. நீங்களா? யார் சொன்னா..?’
அவர் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடுவதற்குள், அவள் தனது அறைக்குள் ஓடிச்சென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டாள். அவளிடம் எங்கேயோ ஏதோ குறைபாடு இருக்கிறது என்பது அவருக்கு உடனே புரிந்தது.
‘உன்னைப் போலவே உன் பெண்ணும் வாயாடியாக இருக்கிறாள்’ கடைப்பக்கம் சென்ற போது அவர் சுசீலாவிடம் பீடிகை போட்டார் ராமநாதன்
தொடர்ந்து, அவர் நிலா நடந்து கொண்ட விதத்தை எடுத்துச் சொன்னபோது, சுசீலாவிற்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.
‘அப்பா இல்லாத பொண்ணு, அதனாலே தான் பாசத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் திண்டாடுறா!”‘ மகளின் சார்பில் மன்னிப்புக் கேட்டாள் சுசீலா
‘கவலைப்படாதே சுசீலா, இந்த வயதிலே இதெல்லாம் இயற்கையாக ஏற்படுகிற ஒருவகை ஈர்ப்புதான் இது, ஆனால் யாரிடம் சொல்லணும்னு தெரியாம சொல்லிட்டா! போகப் போக சரியாய்ப் போயிடுவா.’
‘இல்லை! அவளோட பிடிவாதம் எப்படிப் பட்டதென்று எனக்குத் தான் தெரியும்! அவ மனதிலே இருக்கிற தப்பான எண்ணத்தை வளரவிடாமல் உடனே மாத்தணும், அதற்கு நீங்க தான் எனக்கு ஒரு உதவி செய்யணும்.. செய்வீங்களா?’ என்றாள் சுசீலா தயக்கத்துடன்.
‘நானா, எப்படி? அவளுக்குப் புத்திமதி சொல்லட்டுமா?’
‘புத்திமதிகளை எல்லாம் கேட்கக்கூடிய நிலையில் அவள் இல்லை, இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு, என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பீங்களா?’
‘சுசீலா..! நீ என்ன சொல்றே?’ ராமநாதன் அதிர்ந்தார்.
‘ஆமா! எனக்கும் ஒரு நிரந்தரமான துணை வேண்டும், அதற்கு நீங்கள் தான் பொருத்தமானவர் என்பதை உங்களோடு பழகும் போது நான் நன்கு புரிந்து கொண்டேன். தவிர, என் பெண்ணுக்குப் பாசம் மிக்க ஒரு அப்பா வேண்டும், அது நீங்களாக இருந்தால் நல்லது எனபது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால் அவளுடைய மனதிலே தப்பான ஒரு உறவு முறையை வளர்த்து வைத்திருக்கிறாள். அது தவறு என்பதை உங்களால் தான் உணர்த்த முடியும்!’
‘எப்படி?’
‘நீங்களா, அப்பாவா? என்று உங்களைப் பார்த்துக் கேட்டாளே, அதனாலே நீங்கதான் இனிமேல் அவளுக்கு அப்பா என்று நாம அவளுக்கு நிரூபிக்கணும், எனக்காக இதைச் செய்வீங்களா?’ அவரிடம் யாசிப்பது போல கையேந்தினாள் அவள்
சுசீலா அழைப்பு மணியை அடித்தபோது நிலாதான் ஓடிவந்து கதவைத் திறந்து விட்டாள். வாசலில் மாலையும் கழுத்துமாகத் தாயும், புரெபஸர் ராமநாதனும் நிற்பதைக் கண்டு திக்குமுக்காடிப் போனாள்.
‘நிலா இனி இவர் தான் உனக்கு அப்பா!’ அம்மாவின் பார்வையின் அர்த்தம் அவளுக்குச் சொல்லாமலே புரிந்தது. அன்று முழுக்க மூவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாமல் ஒரு மௌனப் படமாக நாள் நகர்ந்தது.
இரவு தற்செயலாக விழித்த நிலா, தன்னை அணைத்தபடி அம்மா படுத்திருப்பதைக் கண்டு சட்டென எழுந்து உட்கார்ந்தாள்.
‘நீங்களாம்மா? நீங்க.. இங்..கே ஏன்;?’
‘இது என்னடி கேள்வி? தினமும் உன்கூடத்தானே படுக்கிறேன்?’
‘என்னம்மா இது, எத்தனை நாளைக்கு இப்படி என்னோட..?’ சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் விம்மினாள் நிலா.
‘சரி, சரி.. எனக்குத் தூக்கம் வருது, இப்ப நீங்க எழுந்து உங்க ரூமுக்கு போங்க, நான் தொந்தரவு இல்லாமல் தூங்க விரும்பறேன்!’
மகளின் இந்தப் பேச்சால் சுசீலா மிகவும் நொந்து போனாள். தயக்கத்துடன் எழுந்த அவளை ஒரே பிடிவாதமாக பிடித்து இழுத்துச் சென்று ராமநாதன் இருந்த படுக்கை அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்திவிட்டு வந்து கட்டிலில் விழுந்தாள் நிலா
காலையில் நிலா எழுந்து வந்தபோது சுசீலா சமையலறையில் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள்.
‘இந்தா காபி..’
‘தாங்ஸ், ஆமா அப்பா எங்கேம்மா?’
‘அப்பாவா..?’ சுசீலா நம்பமுடியாமல் கேட்டாள்.
‘ஆமா, அப்பாவைத்தான் கேட்கிறேன்’
‘அவர் ஹால்ல பேப்பர் படிச்சிட்டிருக்கிறார்.’
‘காபி கொடுத்தியா?’
‘இல்லை!’
‘கொடு, நான் கொண்டு போய்க் கொடுக்கிறேன்.’ என்று வாங்கிக் கொண்டு போய் ராமநாதனிடம் நீட்டினாள்.
‘காபி சாப்பிடுங்க அப்பா…’
பாசத்தோடு ‘அப்பா’ என்று அழைக்கும் குரலைக்கேட்டு எத்தனை காலமாச்சு என்று எண்ணிப் பெருமூச்சு விட்டவர் ஒன்றும் பேசாமல் அவளிடம் இருந்து காபியை வாங்கி மேசையில் வைத்தார்.
‘ஒரு தாங்ஸ் கூடச் சொல்ல மாட்டீங்களா?’ ஏக்கத்தோடு கேட்டாள் நிலா.
அவரது மௌனம் அவளது மனதை ஆழமாகப் பாதித்தது.
‘நீங்க தாங்ஸ் கூடச் சொல்லவேண்டாம், என்னை மன்னிச்சிசேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அதுவே எனக்குப் போதும்! அவரது கைகளைப் பற்றிக் கொண்டு விம்மியபடி கேட்டாள் நிலா.
‘என்னம்மா, என்ன இது? ஏன் அழறே?’ என்றார் அவர் பதைபதைத்து.
‘நான் உங்க மனசை நோகடிச்சுட்டேனப்பா, நான் எடுத்த முடிவு சரியோ, தப்போ.. ஆனா அதை நிறைவேத்திக்க நான் தேர்ந்தெடுத்த வழி முறை நிச்சயம் தப்புத்தானப்பா! பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க!’
‘எனக்குப் புரியலைம்மா! என்ன முடிவு? என்ன வழிமுறை?’
அப்பா இறந்ததுக்கப்புறம் அம்மா எனக்காகவே வாழ்ந்தாங்க. அவங்க ஆசைகள் உணர்ச்சிகள் எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு ஒரு ஜடமாகவே வாழ்ந்துட்டிருந்தாங்க. முப்பத்தெட்டு வயசு ஒரு வயசா? மறுகல்யாணம் பண்ணிக்குங்கம்மானு பலமுறை எடுத்துச் சொன்னேன், பிடிவாதமாய் மறுத்திட்டாங்க. அப்புறம் நீங்க எனக்கு அறிமுகமானீங்க. நீங்களும் அம்மாவும் நல்ல புரிந்துணர்வோடு பழகினீங்க, அதனாலே அம்மாவிற்கு நீங்க தான் ஏற்ற துணை என்று நான் முடிவெடுத்தேன். அதைச் செயற்படுத்த நான் ஒரு அதிரடி நாடகம் போட்டேன். அம்மாவை வழிக்குக் கொண்டுவர இதைவிட வேறு வழி எனக்குத் தெரியல்லை! நான் எடுத்த முடிவு தப்பானதென்றால் என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்!’
‘இல்லையம்மா…, நீ ஒரு தப்பும் பண்ணலை, மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்த முதல் பெண்ணை இப்போதான் பார்க்கிறேன். யூ ஆர் கிறேட்!’
‘உண்மையாய்தான் சொல்லுறீங்களா? அப்போ என்மேலே உங்களுக்குக் கோபமில்லையே?’ அவள் விழி உயர்த்தி ஆவலாய்க் கேட்டாள்.
மகளை அணைத்து அவளின் முன்னுச்சியில் பாசத்துடன் முத்தமிட்டார் ராமநாதன். 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ ...
மேலும் கதையை படிக்க...
' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’ இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. அது கொழும்பு துறைமுகம்… ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
(காதலுக்காக ஏங்குவதும், காத்திருப்பதும், கிடைக்காமல் போனால் மனம் உடைந்து போவதும்…! தோல்விகள் எல்லாம் தோல்விகளுமல்ல, வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமல்ல...!) அன்று பௌர்ணமி. மொட்டை மாடியில் நின்று உன் எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்;தேன். கண்ணுக்குள் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி என் ...
மேலும் கதையை படிக்க...
ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கானக்குயில் ஒன்று மேடையில் கீதமிசைத்துக் கொண்டிருந்தது. இது கனவல்ல நிஜம்தான் என்பது, அந்த அழகு மயில் அங்குமிங்கும் மெல்ல அசைந்து கொண்டிருந்ததில் அவனுக்குப் புரிந்தது. சற்று ...
மேலும் கதையை படிக்க...
"பிடிச்சிருக்கா?" அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக் கொண்டு வந்து காட்டிய அந்தப் படங்களைப் பார்த்ததும் பிரமித்துப் போய் விட்டான். இப்படி ...
மேலும் கதையை படிக்க...
காதல் ரேகை கையில் இல்லை!
நங்கூரி
இங்கேயும் ஒரு நிலா!
இதயத்தைத் தொட்டவள்..!
பெண் ஒன்று கண்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)