Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆவியும் சதாசிவமும்

 

பெங்களூரில் இருந்து ஊட்டி போகும் வழியில், மாண்டியாவைத் தாண்டியதும், வலதுபுறம் இருந்த அந்த சிறிய பஸ்ஸ்டாண்டில் தனது காரை நிறுத்தச்சொல்லி இறங்கினார் சதாசிவம். இதே இடத்தில்தான் அந்த அரூபன் அறிமுகமானான். அவனால் தன் மனைவி சரஸ்வதி இறந்துபோனதை எண்ணி அங்கேயே சிறிதுநேரம் நின்று அழுதார்.

*****
அது புதன்கிழமை, ஜூலை பதினைந்தாம்தேதி, 2015ம் வருடம்.

சதாசிவம் சரஸ்வதியுடன் தனது சான்ட்ரோ காரில் ஊட்டியிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மைசூரைத் தாண்டி மாண்டியா வந்து கொண்டிருந்தபோது மழை பிய்த்து உதறியது. கார் திடீரென மக்கர் செய்தது. .

காரை உடனே ரோட்டின் இடது ஓரத்தில் நிறுத்தி, ஹஸார்டஸ் விளக்குகளை போட்டுவிட்டு, கொட்டும் மழையில் மனைவியுடன் காரிலிருந்து இறங்கி அருகே இருந்த ஒரு சிறிய பஸ்டாண்டின் கூரையின் கீழ் சென்று, மழை நிற்பதற்காக காத்திருந்தார். அப்போது மாலை ஆறுமணி. அடர்த்தியான மழைமேகத் திரட்சியினால் பயங்கர இருட்டு வியாபித்திருந்தது.

ரோடில் மெதுவாக ஊர்ந்துவந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தில் மழையின் வீச்சு நன்கு தெரிந்தது. அப்போதுதான் அந்த அமானுஷ்யமான நிகழ்வு நடந்தது.

ஹெட்லைட் வெளிச்சத்தில் ரோட்டின் குறுக்காக ஒரு அரூபமான மனித உருவம் மழையில் நனைந்தபடி அவர் நின்றிருந்த பஸ்டாண்டை நோக்கி விரைந்து வந்தது. அந்த உருவத்திற்கு எலும்புக்கூடு, சதைகள் இன்றி, உடலமைப்பின் வெறும் அவுட்லைன் மட்டும்தான் தெரிந்தது. .

மழையிலிருந்து விடுபட்டு பஸ்ஸ்டாண்டின் கூரைக்குள் வந்ததும் அந்த உருவம் மறைந்துவிட்டது. இதைப் பார்த்த சதாசிவமும், சரஸ்வதியும் பயத்தில் உறைந்து போயினர்.

தற்போது கூரையின் கீழ் அவர்களுடன் அந்த அரூபமும்.

இரண்டு வினாடிகளில், “சார் பெங்களூர் போறீங்களா? நானும் வருகிறேன்.” மிக அருகில் ஒரு ஆண்குரல் கேட்டது.

குரல் வந்த திசையில் பயத்துடன் பார்த்தார் சதாசிவம்.

“என்னை நீங்க பார்க்க முடியாது. என் பெயர் தங்கசாமி. நான் இறந்து முப்பது வருடங்களாகின்றன….இப்போது ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறேன்.”

சரஸ்வதிக்கு பயத்தில் உடல் வியர்த்தது. சதாசிவத்திற்கு பயத்தில் நாக்கு ஓட்டிக் கொண்டது. வேறு வழியில்லை அவனுக்கு மரியாதையாக பதில் சொல்லித்தானாக வேண்டும்.

மிகுந்த சிரமப்பட்டு ஈனமான குரலில், “ஆமா, பெங்களூர்தான்….ஆனால் கார் ரிப்பேர்…மழைநின்றவுடன் ஒரு மெக்கானிக்கை கூட்டிவந்து அப்புறம்தான் கிளம்பணும்…” என்றார்.

“கவலையே படாதீங்க சார். நீங்க மேடமுடன் முன்னால் உடகார்ந்ததும், நான் பின்னால் ஏறிக்கொள்கிறேன். உடனே கார் கிளம்பும்.”

சற்று நேரத்தில் மழை நின்றது.

சதாசிவம், சரஸ்வதியுடன் காருக்கு சென்று முன்னால் அமர்ந்ததும், பின்சீட்டின் கதவும் திறக்கப்பட்டு ஒருவர் உட்கார்ந்ததற்கான அழுத்தத்தில் கார் அசைந்து கொடுத்தது. பின்பு கதவு அடித்து சாத்தப்பட்டது.

சதாசிவம் காரைக் கிளப்ப, கார் மக்கர் செய்யாமல் சீராகச் சென்றது.

“சார் என்னை நினைத்து பயப்படாதீங்க…. உங்களுக்கு உதவி செய்யத்தான் நான் இருக்கேன். என்னை தங்கசாமின்னே கூப்பிடலாம்.”

சதாசிவம் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “நீங்க எப்படி ஆவியானீங்க?” என்றார்.

“சார் எனக்கு சொந்தஊர் ஊட்டி. என் இருபது வயதில் நான் கொலை செய்யப்பட்டேன். இப்ப ஆவியா இருக்கேன்…”

“அதெப்படி பேயா, பிசாசா அலையாம நீங்க ஆவீன்னு சொல்றீங்க?”

“முதல்ல எங்களைப்பற்றி நல்லா புரிஞ்சுக்குங்க….தற்கொலை செய்தவங்க மற்றும் கொலை செய்யப்பட்டவங்க அனைவரும், இயற்கையா சாவுற தேதிவரையும் ஆவியா அலைவாங்க…ஆவில ஆண்பால் பெண்பால் கிடையாது. அவர்களின் குரலும் மாறிவிடும்…

“அதே மாதிரி எதிர்பாராத விபத்துல சாகிறவுங்க ஆணாக இருந்தால் பேயாகவும், பெண்ணாக இருந்தால் பிசாசாகவும் இயற்கையா சாவுற தேதிவரையும் அலைவாங்க….”

வழியில் ராமநகரத்தில் நிறுத்தி ஒரு ஹோட்டலில் இருவரும் சாப்பிட்டுவிட்டு, காரில் காத்திருந்த அரூபத்துக்கு பார்சலும் தண்ணீரும் வாங்கிக் கொண்டார்கள்.

“இப்ப எதுக்கு எங்களோட ஓட்டிக்கிட்டீங்க?” பெங்களூர்ல எங்க இறங்கணும்?”

“எனக்கு பெங்களூர்ல ஒரு முக்கியமான வேல இருக்கு. என்னால அவ்வளவுதூரம் நடக்க முடியாது. நாய்களுக்கு எங்களை நன்கு தெரியும். அதனால் என்னைப் பார்த்தால் குரைக்கும். மனிதர்களைவிட மிருகங்களுக்கு ஆற்றல் அதிகம். சுனாமியில் ஒரு மிருகம்கூட இறக்கவில்லை… கட்டிப்போடப் பட்டிருந்தவைகளைத் தவிர. மனிதர்கள்தான் விவரம் புரியாது தன்னைப்பற்றி ஆறறிவு இருப்பதாக பீற்றிக்கொள்வார்கள். ஆனால் உண்மை வேறு.

“என்னை மனிதர்களால் பார்க்க முடியாது. ஆனா மழ பெஞ்சா என் உருவம் மனிதர்களுக்கும் தெரிந்துவிடும், இன்று உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி. இன்னிக்கு நைட்டு உங்க வீட்லதான் நான் தங்கிக்கொள்வேன்.”

“வேண்டாங்க போற வழில இறங்கிக்குங்க.”

“நான் சொன்னதை கேட்டால் உங்களுக்கு நல்லது” மிரட்டும் குரலில் அரூபம் எச்சரித்தது.

வீடு வந்துசேர்ந்ததும் ஒரு பெட்ரூமில் அரூபம் உள்ளே நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டது. அன்று இரவு பயத்துடனே அவர்கள் தூங்கினர்.

மறுநாள் காலை அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றது.

ஆனால் அடுத்த நாளும், அடுத்த வாரமும், பிறகு மாதக்கணக்கிலும் தொடர்ந்து அரூபம் அந்த வீட்டிற்குள் வருவதும் போவதுமாக இருந்தது. அடிக்கடி நாய் குரைப்பதால் சதாசிவத்திற்கு இதை உணர முடித்தது.
சிலசமயம் பொருட்கள் இடம்மாறி இருந்தது.

சரஸ்வதியிடம் அவர் இதைச் சொல்லவில்லை. சொன்னால் மிரண்டு விடுவாள். அவளுக்கு பலஹீனமான இதயம். தவிர, அரூபம் வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக அவள் நம்பிக்கொண்டிருந்தாள்.

சென்றவாரம் ஒருநாள் மாடி பெட்ரூமில் சதாசிவம் ஒரு தமிழ் மேகசீன் படித்துக் கொண்டிருந்தார். சரஸ்வதி கீழே சமையலறையில் வேலையாக இருந்தாள். மேகசீன் அட்டையில் இருந்த ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்த அரூபம், “ஐயோ பாவம் அநியாயமா கொலை செய்யப்பட்டு இப்ப ஆவியா அலையறாங்க” என்றது.

“என்னது கொலையா?”

“ஆமா சசிகலாவும் அவங்க உறவினர் டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து ஜெயலலிதாவை போனவருடம் செப்டம்பர் இருபத்தியொன்றாம் தேதியின் பின்னரவில் போயஸ்கார்டன் இல்லத்தில் நாற்காலியிலிருந்து கீழே தள்ளிவிட்டு அடித்தே கொன்றார்கள். அப்புறம் டாக்டர் சிவக்குமார் மருத்துவராக பணிபுரியும் அப்பல்லோவில் ஸி.எம் சீரியஸ் என்றுகூறி அட்மிட் செய்தார். அதன்பிறகு அவர்கள் அப்பல்லோவின் ஓனர் பிரதாப் ரெட்டியை மிரட்டி ஜெயலலிதாவின் பிரேதத்தை எம்பாமிங் செய்து 75 நாட்கள் காபந்து செய்தனர்.”

“உண்மையாகவா? இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”

“ஜெயலலிதாவே என்னிடம் சொன்னார். கொலை செய்யப்பட்டதால் அவர் இப்ப ஆவியாகத்தானே அலைகிறார்? ஆவிகள் நாங்கள் ஒருவருக்கொருவர் எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்வோம். பாம்புக்கு பால்வார்த்தேனே என்று இப்போது நொந்து கொள்கிறார். என்ன பிரயோஜனம்?”

“அவர் கொலை செய்யப்பட்டதை ஏன் எவரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை?”

“அவர் தனிமையில் ஒரு மர்மமாகவே வாழ்ந்தார். மர்மமாகவே இறந்தார். அவரது உறவினர்கள் எவரும் இந்தக்கொலை பற்றி புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபற்றி வெள்ளை அறிக்கை கொடுக்காமலேயே நம் மாநில அரசு இயங்குகிறது. அதிகார பூர்வமான புகார் எதுவும் வராததால் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. தவிர சசிகலா மிகுந்த பணபலமும், அதிகார பலமும் உடையவர். மக்களும் இந்த விஷயத்தில் மாக்களாக நடந்து கொண்டனர். நம் மக்களுக்கு கோபம், சொரணை எதுவும் கிடையாது.

“ஜெயலலிதா இறந்தவுடன் மிகுந்த பேராசையோடு முதல்வராக சசிகலா திட்டமிட்டார். அதற்காக கவர்னரிடம் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருந்தார். ஆனால் கோர்ட் உத்தரவினால் ஜெயிலுக்கு சென்றுவிட்டார்.

“ஒரு மாநிலத்தின் பிரபலமான முதல்வரை, வயலில் களை எடுப்பது மாதிரி கொலைசெய்து அப்புறப்படுத்தி விட்டார். அவருக்கு எவ்வளவு அசிங்கமான துணிச்சல்?

“மாலைவரை திடகாத்திரமாக இருந்த ஒரு முதல்வர் ஏன், எதற்காக, எப்படி அட்மிட் ஆனார்? என்னவிதமான சிகிச்சை? ஏன் அது பற்றிய எந்த ஒரு நிகழ்வையும் ஆவணப் படுத்தவில்லை? எப்படி ஒரு புகைப்படம்கூட வரவில்லை? எவரையும் பார்க்ககூட ஏன் அனுமதிக்கவில்லை? ஆனால் அப்பல்லோ ஹாஸ்பிடல் வெப்சைட்டில் எல்லா அறைகளிலும் காமிரா இருப்பதாகவும், பேஷண்ட்களை அயல் நாட்டிலிருந்துகூட கண்காணிக்கலாம் என பீற்றிக் கொள்கிறார்கள்.

“பிரதாப் ரெட்டியையும், டாக்டர் சிவக்குமாரையும் தனித் தனியே அழைத்து உண்மை அறியும் சிகிச்சையை மேற்கொண்டால் எல்லா உண்மைகளும் எளிதாக வெளிவரும். ஆனால் பணத்தினால் அனைவரையும் அடித்து விட்டார் சசிகலா. வீட்டின் வேலைக்காரி, ஒரு முதல்வரையே கொலை செய்துவிட்டு ரிமோட் கன்ட்ரோலில் தமிழ்நாட்டையே ஆளுவது எவ்வளவு கேவலமான அரசியல்? உங்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கவில்லை?

“இதற்கு என்னதான் தீர்வு?”

“சிட்டிசன் படத்தில், கோர்ட் க்ளைமாக்ஸ் காட்சியில் தண்டனை எப்படி வழங்கப்பட வேண்டும் என்று அஜீத் உணர்ச்சி பூர்வமாக விவரிப்பார். அதுதான் தீர்வு.”

“ஜெயலலிதாவின் ஆவிதான் தற்போது சசிகலாவை சிறைக்கு அனுப்பி வைத்தது. தான் கொலைசெய்யப்பட்ட உண்மைகள் வெளியேவந்து சசிகலா நிரந்தர ஆயுள்தண்டனை பெற்று ஜெயிலில்தான் மடியவண்டும் என்பது அவரது ஆவியின் சபதம். அதற்கான வேலைகளை ஆவி ஆரம்பித்துவிட்டது.

சதாசிவம் அரூபத்தின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்துகொண்டார்.

அடுத்த மாதத்தில் ஒருநாள்…..

சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி காலை பத்துமணிக்கு பாத்ரூமில் குளிக்கும்போது இறந்துகிடந்தாள்.

டாக்டர்கள் அவள் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக உறுதிசெய்தனர்.

சிலநாட்கள் கழித்து, சந்தானம் சோகத்தில் இருந்தபோது, அரூபன் அவரிடம் மன்னிப்புக்குரலில், “சரசியின் இறப்பிற்கு நான்தான் காரணம். நான் அவளிடம் நியாயம் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவள் பாத்ரூமில் ஷவரை நிறுத்திவிட்டு உடம்பிற்கு சோப் போட்டுக் கொண்டிருந்தாள். நான் அங்கு சென்று ஷவரைத் திறந்துவிட்டு அதனடியில் நின்றேன். என் உருவத்தை பார்த்த அதிர்ச்சியில் இறந்துபோனாள்.” என்றது.

“என்னது நீ நியாயம் கேட்கப்போனாயா?”

“ஆமாம் இது முப்பது வருஷத்துக்கு முந்தியகதை….என் உண்மையான பெயர் முருகேசன். அப்போது சரசியும் நானும் ஊட்டி கவர்ன்மென்ட் ஆர்ட் காலேஜில் படித்தோம். இரண்டு வருடங்கள் உயிருக்குயிராக காதலித்தோம். நான் ஏழை, அவள் செல்வந்தள். ஜாதிப் பிரச்சனை வேறு… அவளுடைய அப்பாவும் அண்ணனும் என்னை எச்சரித்தனர். நான் கேட்கவில்லை. அவர்கள் என்னைக் கொன்று ஊட்டி பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்தனர். அன்று ஆவியான நான், ஒருமாதத்தில் சரசியின் அண்ணனைக் கொன்றேன். புத்திரசோகத்தில் அவள் அப்பாவும் உடனே இறந்தார்.

அதன் பிறகுதான் அவசர அவசரமாக பெங்களூரில் இருந்த உனக்கும் சரசிக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள். .

‘நம் காதலைப் பிரித்ததும் இன்றி, என்னைக் கொலையும் செய்தது நியாயமா?’ என்று என் முன்னாள் காதலியிடம் சூடாக நாலு வார்த்தை கேட்கத்தான் அவளிடம் நான் சென்றேன். ஆனால் என் உருவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் இறந்துவிட்டாள்.

“உன்னை நான் எப்படி நம்புவது?”

“ஊட்டி பார்ஸன் வாலியில் இன்றும் என் பெற்றோர்கள் ஏழ்மையில் தவித்துக்கொண்டு உயிருடன் இருக்கிறார்கள். இது அவர்களின் அட்ரஸ்…” காற்றில் ஒரு பேப்பரை நீட்டியது அரூபம்.

சரஸ்வதிக்குப் பின்னால் இவ்வளவு சம்பவங்களா? சதாசிவத்தால் நம்ப முடியவில்லை. உண்மைகளை தெரிந்துகொள்ளத்தான் இப்போது ஊட்டி சென்று கொண்டிருக்கிறார்.

******
ஊட்டி சென்று ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டார்.

முதலில் கல்லூரிக்குச் சென்று, 1987 ம் வருஷத்தில் சரஸ்வதி முருகேசனுடன் ஒன்றாகப் படித்ததையும், அவன் கொலையுண்டதையும், அவள் கல்லூரியிலிருந்து நின்று கொண்டதையும் உறுதிசெய்துகொண்டார்.

அடுத்து மாமியாரிடம் சென்றார்.

“முருகேசனை ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டதும் மாமியார் வெடித்து அழுதாள்.

“அவரைக் கொன்ற பாவம்தான் இந்தக் குடும்பத்தை இன்றும் வதைக்கிறது மாப்ள… உங்களிடம் எல்லாவற்றையும் மறைத்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தேன். இப்ப அவளும் உயிருடன் இல்லை. புத்திரபாக்கியமும் இல்லை. எங்களுடைய வம்சம் பெருகவில்லை. இனி என் இறப்பு மட்டும்தான் பாக்கி.” என்றாள்.

மறுநாள் சதாசிவம் பார்ஸன் வாலி சென்று அட்ரஸை தேடிக் கண்டுபிடித்தார்.

முருகேசனின் பெற்றோர்கள் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும். சதாசிவம் அவர்களிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, இனி அவர்கள்தான் தனக்கு பெற்றோர்கள் என்று அவர்களிடம் கெஞ்சி, தன்னுடன் வருமாறு வற்புறுத்தினார்.

மறுநாள் அவர்களுடன் காரில் பெங்களூர் வந்து சேர்ந்தார்.

நியாயமாக சரஸ்வதி-முருகேசனின் காதல், திருமணத்தில் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அநியாயமாக முருகேசன் கொல்லப்பட்டான். ஆனாலும் தன் மனைவியின் குடும்பம் செய்த பாவத்திற்கு தான் ஒரு சிறிய பிராயசித்தம் தேடிக்கொண்டதாக நினைத்து திருப்தியடைந்தார்.

முருகேசனின் ஆவியும் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து சதாசிவத்திற்கு நிறைய உதவிகள் செய்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)