கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 5,759 
 
 

“நீங்கள் ஒரு சுவாரஸ்யமான கதையைக் கவனிப்பீர்களா?’

வியப்பில் நான் அந்த மனிதரைப் பார்த்தேன். சற்று முன்னர்தான் நாங்கள் அறிமுகமாகிக் கொண்டோம், அதுவும் மிகுந்த ஈடுபாட்டுடன் எல்லாம் இல்லை. நான் ரயிலுக்குக் காத்திருக்கிறேனா என்று விசாரித்தார். ஆமாம் என்று சொன்ன நான், ஒரு மரியாதைக்காக எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டேன்.

‘நான் எங்கேயும் செல்லவில்லை’ புன்னகையுடன் பதிலளித்தார் அவர். ‘என் மனைவியை வரவேற்கவே இங்கு வந்தேன். அவள் சிட்டகாங்கில் இருந்து வருகிறாள். ரயில் இரண்டு மணி நேரம் தாமதம். திரும்பச் செல்லும்படியான எண்ணம் இல்லை. வீட்டுக்குச் சென்று பின்னர் திரும்ப வருவதற்குப் பதிலாகக் காத்திருக்கலாம் என நினைத்தேன்.’

அந்த அளவிற்குத்தான் எங்களிடையேயான அறிமுகம். இந்த தெளிவற்ற தொடர்பின் பலம் பற்றி ஒருவர் கேட்டால், ஒரு சுவாரஸ்யமான கதையைக் கவனிப்பதாக இருந்தால், குறைந்தபட்சம் சிறிது ஆச்சரியம் அடைவார். அந்நியர்கள் என்னிடம் கூறும் கதைகளில் நான் நாட்டம் கொள்வதில்லை. அதுவுமில்லாமல், சுவாரஸ்யமான கதை எனக் கூறப்படுபவை ஒருபோதும் அவ்வாறு இருப்பதில்லை என்பதை எனது நீண்ட அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

நான் அமைதியாக இருந்தேன். அவர் புத்திசாலியானவராக இருந்திருந்தால் எனது அமைதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருப்பார். இல்லாவிட்டால், அவரது கதையை நான் கேட்க வேண்டியிருக்கும்.

அந்த மனிதர் சிறிதளவு கூட புத்திசாலி என்பதை நிரூபிக்கவில்லை. தனது பையிலிருந்த தகரப் பெட்டியிலிருந்து பான் பாக்கை எடுத்து வாயிலிட தயார் செய்தபடி கதையைச் சொல்லத் தொடங்கினார்.

‘உங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று எனக்கு சிறப்பான நாள். இந்த சிறப்பான நாளில் எனது கதையை யாருக்காவது சொல்ல வேண்டும் என உந்துதல் ஏற்படுகிறது. நீங்கள் அனுமதித்தால், நான் சொல்கிறேன்.’

‘மிகவும் நல்லது’

‘உங்களுக்கு பான் வேண்டுமா?’

‘இல்லை, எனக்கு வேண்டாம்’

‘ஸ்வீட் பான் தான், சாப்பிட்டுப் பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்.’

‘இந்த சிறப்பான நாளில் உங்கள் கதையோடு பான்னும் கொடுப்பீர்களா?’

அவர் சிரித்தார். இனிமையானவர். நாற்பது வயதிருக்கும். திடகாத்திரமானவர். மின்னும் வெண்ணிறக் குர்தாவும் பைஜாமாவும் அவருக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. அவரது மனைவிக்காக மிகக் கவனமாக உடையணிந்திருப்பது போலத் தோன்றினார்.

‘இந்தச் சம்பவம் இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இயற்பியலில் ஹானர்ஸ் பட்டம் பெறுவதற்காக டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னை தெளிவாகப் பார்க்க முடியாதவாறு இந்த இடம் மிகவும் இருட்டாக இருக்கிறது. இங்கே போதுமான வெளிச்சம் இருந்திருந்தால் நான் கம்பீரமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு இளவரசன் போலிருந்தேன். உண்மையில் மாணவர்கள் மத்தியில் நான் பிரின்ஸ் என்றே அறியப்பட்டேன். இதில் வேடிக்கையான விஷயம், பெண்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை- பெண்கள் ஒருபோதும் ஆண்களின் தோற்றத்தால் ஈர்க்கப்படுவதில்லை. ஆண்களின் தோற்றத்தைத் தவிர எல்லாவற்றையும் அவர்கள் கவனிக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் எந்தப் பெண்ணும் நட்பாகப் பழகவோ பேசவோ கூட என்னிடம் வரவில்லை. நானும் அதற்கு முனைப்புக் காட்டவில்லை. ஏனென்றால் எனக்குத் திக்கு வாய். என்னால் சரளமாகப் பேச முடியாது.’

அவரை இடைமறித்த நான், ‘ஆனால், இப்போது நீங்கள் திக்கவில்லை, உங்கள் பேச்சு மென்மையாக உள்ளது’ என்றேன்.

‘எனது திருமணத்திற்குப் பிறகு என் திக்கு வாய் குணமானது. அதற்கு முன்னர் மிக மோசமாக இருந்தது. எல்லா சிகிச்சையையும் முயன்றேன்- வாயில் கோலிக்குண்டுகளைப் போட்டுப் பேசுவது முதல் ஹோமியோபதி வரை, இஸ்லாம் ஞானியரிடமிருந்து தாயத்துக் கூட- எதையும் விட்டுவைக்கவில்லை. எப்படியோ, கதைக்குப் போவோம். கணிதமும் வேதியியலும் எனக்குத் துணைப்பாடங்கள். வேதியியல் துணைப்பாட வகுப்பில் ஒரு பெண் என்னை மூச்சிழக்க வைத்தாள். எவ்வளவு அழகானவள்! நீளமான இமைகள், கருநிற விழிகள். எப்போதும் சிரித்த கண்கள். நீங்கள் எப்போதாவது காதலித்திருக்கிறீர்களா?’

‘இல்லை.’

‘அப்படியென்றால் எனது மனநிலையை என்னால் விளக்க இயலாது. அவளை முதன் முதலாகப் பார்த்த போது நான் காய்ச்சலில் விழுந்தேன். இரவு முழுதும் தூங்கவில்லை. எனது தொண்டை சில நிமிடங்களுக்கு ஒருமுறை வறண்டு போனது. நான் செய்ததெல்லாம் தண்ணீர் குடிப்பதும் மோஷின் விடுதியின் தாழ்வாரத்தில் மேலும் கீழும் உலாத்துவதும் தான்.’

‘எங்களுக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு துணைப்பாட வகுப்புகள் தான். நான் விரக்தியுடனும் துன்பத்துடனும் அழ விரும்பினேன். ஒவ்வொரு நாளும் துணைப்பாட வகுப்பு இருந்தால் என்ன கெட்டுவிடும்? ஒவ்வொரு பாடத்திற்கும் ஐம்பத்தைந்து நிமிடங்கள் என வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் அதாவது நூற்றுப் பத்து நிமிடங்கள். இந்த நூற்றுப் பத்து நிமிடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சென்றுவிடும். அதுவுமில்லாமல், அந்தப் பெண் அடிக்கடி வராமலிருந்தாள். சில நேரங்களில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு அவள் வகுப்புகளுக்கு வராமலிருந்ததும் உண்டு. அந்த மாதிரியான தருணங்களில் எனது எல்லா வேதனையையும் கடுந்துயரையும் முடிவுக்குக் கொண்டு வர மோஷின் விடுதியின் கூரை மேலிருந்து குதிக்க வேண்டும் என்ற உணர்ச்சி வேகம் இருக்கும். நான் எவ்வளவு பயங்கரமாகப் பாதிப்படைந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் காதலித்தது இல்லை.’

‘நீங்கள் அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று கூறவில்லை. என்ன பெயர்?’

‘அவளது பெயர் ரூபா. எனினும் அந்தச் சமயத்தில் எனக்குத் தெரியாது- அவளைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. அவள் எந்தத் துறையில் படித்தாள் என்றுகூடத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவளது துணைப்பாடங்களுள் ஒன்று வேதியியல் என்பதும் பல்கலைக்கழகத்திற்கு மோரிஸ் மைனர் காரில் வந்தாள் என்பதும்தான். அதன் எண் V8781.’

‘நீங்கள் அவளைப் பற்றி விசாரித்தீர்களா?’

‘இல்லை, நான் விசாரிக்கவில்லை. ஏனென்றால் நான் அப்படி விசாரிக்கப் போய் அவள் வேறு யாருடனாவது நட்பில் இருப்பதை அறிய வேண்டி வருமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நிகழ்ந்த சம்பவத்தைச் சொன்னால் நான் கூற வந்ததை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். துணைப்பாட வகுப்பு முடிந்ததும் அவள் வேறு ஒரு பையனிடம் சிரித்துப் பேசுவதை நான் திடீரெனக் கவனித்தேன். நான் நடுங்கத் தொடங்கினேன். நிலைகுலைந்து விழுவேனோ என நினைத்தேன். எந்த வகுப்புக்கும் செல்லாமல் வெளியே வந்தேன்- சிறிது நேரத்தில் என் உடல் காய்ச்சலால் காய்ந்தது.’

‘என்னவொரு விநோதம்’

‘உண்மையாகவே அது விநோதம் தான். இப்படியே நான் இரண்டு வருடத்தைக் கடந்தேன். கிட்டத்தட்ட எனது படிப்பைக் கைவிட்டேன். அதற்குப் பின் மிக தைரியமான ஒன்றைச் செய்தேன். மோரிஸ் மைனர் கார் ஓட்டுநரின் மூலம் அவளது முகவரியைத் தெரிந்து கொண்டேன். அவள் பெயரைக் குறிப்பிடாமல் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். என்ன எழுதினேன் என்பது சரியாக நினைவு இல்லை என்றாலும், அவளை மணம்புரிய விரும்புகிறேன் என்றும் அதற்கு அவள் சம்மதிக்க வேண்டும் என்பதும்தான் அதன் சுருக்கம். அதுவரை, உண்ணாமல் அவள் வீட்டு வாசலில் நிற்பேன். சாகும் வரை உண்ணாவிரதம். கதை சுவாரஸ்யமாக இருக்கிறதா? ’

‘ஆமாம் இருக்கிறது. அதற்குப் பிறகு என்ன ஆனது? கடிதத்தை அஞ்சலில் சேர்த்தீர்களா?’

‘இல்லை, நேரிலேயே கொடுத்தேன். காவலாளியிடம் அதைக் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண் இங்கே வசிப்பது உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டேன். அவளிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள் என்றேன். அதைப் பணிவுடன் பெற்ற காவலாளி சிறிது நேரத்தில் திரும்பி வந்து, அந்தப் பெண்ணிற்கு உங்களைத் தெரியாதாம் என்றார். அவள் சொல்வது சரிதான், ஆனால் எனக்கு அவளைத் தெரியும். அது போதும் என்றேன்.’

‘பிறகு நான் வாசலுக்கு வெளியே முகாமிட்டேன். நீங்கள் உணர்வது போல அது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. அப்போது நான் சுயநினைவிலேயே இல்லை. தர்க்கப்பூர்வமாக என்னால் சிந்திக்க இயலவில்லை. எப்படியோ, காலை ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை வாசல் கதவு முன் நின்றிருந்தேன். அவ்வப்போது சில ஆர்வமிக்க கண்கள் முதல் மாடியின் ஜன்னலிலிருந்து என்னை உற்று நோக்குவதை நான் கவனித்தேன். மாலை நான்கு மணிவாக்கில் அந்த வீட்டிலிருந்து வந்த ஒரு மனிதர் கண்டிப்புடன் கூறினார்- “போதும் உன் பைத்தியக்காரத்தனம், வீட்டுக்குப் போ.”

‘ ”போக மாட்டேன்”, என்று நானும் கண்டிப்புடன் கூறினேன்.’

“நாங்கள் போலீசுக்குச் சொல்கிறோம். அவர்கள் உன்னைக் கைது செய்வார்கள்”.

‘ ”நான் கவலைப்படவில்லை. செய்ங்க” ’

‘ “ராஸ்கல், இது என்ன நீ குடிச்சு கூத்தடிக்கிற இடமா?” ‘

‘ “என்னை ஏன் திட்டுகிறீர்கள்?. நான் உங்களைத் திட்டவில்லையே” ’

‘எரிச்சலடைந்த அவர், வீட்டுக்குள் திரும்பச் சென்றார். அதன் பிறகு உடனே கனமழை பெய்யத் தொடங்கியது. அடைமழை. நான் நனைந்தாலும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அப்படிச் செய்ததால் எனக்கு காய்ச்சல் வருவதை உணர்ந்தேன். கடும் வெயிலில் நின்ற பிறகு, மழையில் என்னால் நிற்க இயலாது. ஆனால் அப்போது நான் வெறித்தனமாக இருந்தேன்- முடிவைப் பற்றி நான் பயப்படவில்லை. பசியாலும் சோர்வாலும் நான் நிலைகுலைந்தேன். எப்போது வேண்டுமானாலும் நான் மயக்கமடைவேன் என நினைத்தேன்.’

‘இதற்கிடையே, அவ்வழியே ஆர்வத்துடன் பார்த்துச் சென்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் நான் வெற்றியடைந்தேன். அதில் நிறைய பேர், என்ன விஷயம்? ஏன் இந்த மழையில் நனைந்து நிற்கிறாய்? என்று கேட்டனர். அவர்களுக்கெல்லாம், என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், நான் ஒரு பைத்தியம் என்று கூறினேன்.’

‘அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இந்த விநோத சம்பவத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தொலைபேசியில் கூறியிருக்க வேண்டும். மூன்று வெவ்வேறு கார்கள் வீட்டின் முன் வந்து நின்றன. அதில் வந்தவர்கள் வீட்டில் நுழையும் முன் என் மீது கோபப் பார்வை வீசிச் சென்றனர்.’

இரவு மணி ஒன்பது ஆகியிருந்தது. சிறிது நேரம் கூட மழை விடவில்லை. எனக்குக் காய்ச்சல் கொதித்தது. அதற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. கால்களை நீட்டி அமர்ந்தேன். காவலாளி என்னிடம் வந்து, அய்யா போலீசை அழைக்க விரும்புகிறார், ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதில் விருப்பமில்லை, உன் நிலையைப் பார்த்து அழுகிறாள். அப்படியே உட்கார் என்று கிசுகிசுத்தான்.

‘நான் நன்றாக உட்கார்ந்தேன்.’

‘மணி பதினொன்று. வீட்டின் தாழ்வாரத்தில் விளக்குகள் எரியத் தொடங்கின. வரவேற்பறையின் கதவைத் திறந்துகொண்டு அந்தப் பெண் வெளியே வந்தாள். அவள் குடும்பத்தினர் அவளைத் தொடர்ந்து வந்தனர். யாரும் தாழ்வாரத்தைத் தாண்டி வரவில்லை. அந்தப் பெண் மட்டும் என்னிடம் வந்தாள். என் முன் நின்று, நம்பவே முடியாத மென்மையான குரலில், இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? என்று சொன்னாள்.’

‘குழப்பத்துடன் நான் அவளைப் பார்த்தேன். ஏனென்றால் அவள் அந்தப் பெண் அல்ல. வேறு ஒருத்தி. அவளை நான் பார்த்ததே இல்லை. அந்த மோரிஸ் மைனர் கார் டிரைவர் வேண்டுமென்றே எனக்கு வேறு முகவரியைத் தந்துவிட்டான்.’

‘வீட்டுக்குள்ள வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கு, வாங்க என்று மென்மையாகக் கூறினாள்.’

‘நான் எழுந்து நின்றேன். தயவுசெய்து விடு, நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன். நீ அந்தப் பெண் அல்ல. நீ வேற யாரோ என்று சொல்ல முயற்சித்தேன். ஆனால் கருணை மிகுந்த அவள் கண்களைப் பார்த்து என்னால் அப்படிச் சொல்ல முடியவில்லை. எந்தப் பெண்ணும் என்னை ஒருபோதும் அவ்வளவு மென்மையாகப் பார்த்ததில்லை. ‘

‘காய்ச்சல் காரணமாக என்னால் சரியாகக் கூட நடக்க முடியவில்லை. நீ நலமாக இல்லை. என் கையைப் பிடி. ஒருவரும் தடுக்க மாட்டார்கள் என்றாள்.’

‘தாழ்வாரத்தில் நின்றிருந்தவர்கள் என்னை வெறுப்புடன் நோக்கினர். அவர்களை அலட்சியம் செய்த அந்தப் பெண் கைகளை நீட்டினாள். ஒரு தீவிரமான அன்பைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை மனிதனுக்குக் கடவுள் அளிக்கவில்லை. நான் அவள் கை பிடித்தேன். அதை இருபது வருடங்களாகப் பிடித்திருக்கிறேன். சில நேரம் மன உளைச்சல் அடைகிறேன். அடையாளம் மாறிப்போன இந்தக் கதையை என் மனைவியிடம் சொல்லவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஆனால் என்னால் முடியாது. அப்போது உங்களைப் போன்ற அந்நியர்களை நாடிச்சென்று இதைச் சொல்வேன். ஏனெனில் இந்தக் கதை என் மனைவியை ஒருபோதும் சென்றடையாது என்பது எனக்குத் தெரியும். சரி, நான் செல்ல வேண்டும். ரயில் வருகிறது.’

அவர் எழுந்தார். சற்றுத் தொலைவில் ரயிலின் விளக்கு வெளிச்சத்தைக் காணமுடிந்தது. ரயில் பாதைகள் அதிர்ந்தன. உண்மையாகவே, ரயில் வரப்போகிறது.

ஹுமாயுன் அஹமத் – வங்கச் சிறுகதை

ஆங்கிலம் வழி தமிழில்: க. ரகுநாதன் – 25/06/2022

நன்றி:சொல்வனம்.காம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *