கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 1,832 
 
 

(2015ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-4 | காட்சி 5-8

குறிப்பு: இந்த நாடகத்தில் விவரிக்கப் படும் சூழல், கதை மாந்தர் அனைத்தும் முழுக்கமுழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

காணிக்கை: மூன்றாம் தமிழாம் நாடகத் தமிழைக் கட்டிக் காத்துவரும் நாடகக் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்.

முதற்காட்சி

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடைப் பின்னணியில் இளவேனில் தொலைக் காட்சி என்ற பதாகை பெரிதாக உள்ளது. இளவேனில் தொலைக்காட்சி அலுவலகத்தின் வரவேற்புப் பிரிவு என்ற பலகை உள்ளது. நடுத்தர வயது மனிதர் ஒருவர் இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து இளம் மங்கை ஒருத்தி வருகிறாள்.)

இளம் பெண் : குட்மார்னிங் சார். ஜீவா சார் குட்மார்னிங்.

(நடுத்தர வயது மனிதர் நடப்பதை நிறுத்துகிறார்) ஜீவா : குட்மார்னிங்… ஹேமா..

ஹேமா : இங்க வரச் சொன்னீங்களாமே…

ஜீவா : ஆமாம். என்ன பரிமளா வரலை? ரிசப்ஷன்ல யாரையாவது உட்கார வைக்க வேணாமா…?

ஹேமா : அது அது…

ஜீவா : அது என் வேலை இல்லேன்னு சொல்வீங்க… அதானே…

ஹேமா : இல்ல… சார். கதிர்கிட்டே சொல்றேன் இங்க வரச் சொல்லி…

ஜீவா : அதை நான் சொல்லித்தான் சொல்வீங்களா…? உங்களை அட்மின்ல உட்கார வைச்சதுக்கு பதிலா புரொகிராமுக்கு அனுப்பி இருக்கணும்.

ஹேமா : சார். பரிமளா வந்துடுவாங்க சார் இப்ப… அதனாலதான்..

ஜீவா : சரி. உங்க ரூம்ல உட்கார வைச்சுருக்கீங்களே…அவரு….

ஹேமா : அவரு எங்க அப்பாவோட பங்காளி. பேரு ராஜமாணிக்கம். எனக்கு சித்தப்பா முறை. உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காரு. ஒங்களத் தெரியும்னாரு.

ஜீவா : அப்பாவுக்குப் பங்காளின்னா உங்களுக்கு சித்தப்பான்னு எனக்குத் தெரியாதா? என்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்காரா?

ஹேமா : அவர் உங்க பி.ஏ. கிட்ட பேசி இருக்காரு. நீங்க இன்னிக்கு பதினோரு மணிக்கு வரச் சொன்னீங்களாமே…

ஜீவா : சரியாப் போச்சு… இவர்தான்னு தெரியாம போச்சு… ஹேமா இவன் சாரி இவர் என் கிளாஸ்மேட்…

ஹேமா : பார்த்துருங்க. ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறீங்க.. சாவகாசமாப் பார்க்கணும்னா.. ஈவினிங்ல வரச் சொல்லவா…? ஜீவா : மாணிக்கம் எதுக்கு என்னைப் பார்க்க விரும்பறாரு… தெரியுமா…?

ஹேமா : தெரியலையே சார். நான் அதைப் பத்திப் பேசலை. அவரு எங்க வீட்ல தங்கல. வேற யார் வீட்லயோ தங்கி இருக்காரு. என்னைப் பார்த்ததும் விசாரிச்சாரு. நானும் வேறு வழி இல்லாம என் கேபின்ல உட்கார வைச்சேன்.

ஜீவா : அதைத்தான் கண்காணிப்பு கேமரால பார்த்தேனே.. ஹேமா அவரு கையோட ஒரு சூட்கேஸ் வைச்சுருக்காரு இல்ல.. ஹேமா : ஆமாம் சார். அதுல அவரோட துணிமணிதான் இருக்கும்.

ஜீவா : இல்ல.. கட்டு கட்டா…

ஹேமா : நோட்டு வைச்சுருக்காரா சார்…

ஜீவா : நோட்டா… நோட்டுதான். கரன்சி நோட்டு இல்ல. அவன் கதை எழுதின நோட்டுங்க வைச்சிருப்பான்.

ஹேமா : அப்படீன்னா…

ஜீவா : எழுதறதுக்கு சான்ஸ் கேட்டு வந்திருக்காரு புரியலையா..?

ஹேமா : ஸ்கிட் எழுத வெரைட்டியா எழுத நமக்கு ஆள் வேணும் இல்ல. ஃபிக்ஸ் பண்ணிக்கங்க. நீங்க ரெண்டு பேரும் ஃப்ரென்ட்ஸ் வேற. கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகும் சார்.

ஜீவா : கெமிஸ்ட்ரிய விடாதீங்க எல்லாரும். ஏம்மா நான் இருபத்திரண்டு வயசுல சென்னைக்கு வந்தேன். இவர் அம்பத்தோரு வயசுல சென்னைக்கு பேனாவைத் தூக்கிக்கிட்டு வர்றாரு. யார் வாய்ப்பு கொடுப்பாங்க?

ஹேமா : லேட்டர் பார்ட் ஆஃப் தி லைஃப்ல பெரிய ஆளானவங்க நிறைய பேர் இருக்காங்களே சார்.

ஜீவா : உங்களுக்கு என்ன நீங்க பேசுவீங்க.. வாய் கிழிய.. இவங்கள எல்லாம் வேலை வாங்க முடியுமா? நாம ஒரு ப்ரீஃப் சொன்னா அதை விட்டுட்டு வேற எங்கேயோ போவாங்க..

ஹேமா : சார். நீங்க அவரைத் தவிர்க்க விரும்பறீங்கன்னு தெரியுது. ஒரு வேண்டுகோள்.

ஜீவா : என்ன?

ஹேமா : நீங்க கமிட் ஆகாட்டாலும் சந்திச்சுப் பேசிடுங்க. ரொம்ப வருஷம் கழிச்சு ஒங்களப் பார்க்க வந்திருக்காரு.

ஜீவா : சரி வரச் சொல்லுங்க. சமாளிக்கிறேன்.

ஹேமா : சார்.. இப்பத்தான் ஷீலா வாட்ஸ்அப்லல மெஸேஜ் அனுப்பி இருக்காங்க. ஒங்க ரூம்ல டெகரேட்டிவ் ஒர்க் நடக்கப் போவுதாம். அதனால… என் கேபின்ல சந்திக்கிறீங்களா…

ஜீவா : எப்ப சொன்ன வேலை.. இப்பத்தான் செய்யறாங்களா.. எல்லாம் எம்.டி.கிட்ட இருக்கோம்ங்கிற…

ஹேமா : சார்…

ஜீவா : என் வாய்க்குப் பூட்டு போடறீங்களா?

ஹேமா : இல்ல சார். நீங்க ஜீ.எம். நீங்களே மத்தவங்கள இப்படிப் பேசறத யாராவது பார்த்தா நல்லா இருக்காதேன்னு…

ஜீவா : சரி. ராஜமாணிக்கத்தை கேன்டீனுக்கு வரச் சொல்லுங்க. நீங்க கூட வர வேணாம். வழிய காமிச்சு அனுப்பி விடுங்க.

ஹேமா : யெஸ் சார்.

(காட்சி மாற்றம்)

(விளக்குகள் அணைகின்றன. சில நிமிடங்களில் மீண்டும் ஒளிர்கின்றன. இளவேனில் தேநீர் அகம் என்ற பலகை பின்னணியில் இருக்கிறது. வட்ட வடிவ மேசைகள் உள்ளன. ஜீவா ஒரு மேசை அருகே நின்று கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து ராஜமாணிக்கம் வருகிறார்.)

ஜீவா : வாய்யா… சௌக்கியமா…?

(கை குலுக்குகிறார்)

ராஜமாணிக்கம் : வணக்கம்பா. சண்முகத்தோட பையன் கல்யாணத்துல பார்த்தது… எப்படி இருக்கே?

ஜீவா : நல்லா இருக்கேன்யா..காபியா இல்ல டிபன் சாப்பிடறியா..

ரா. மா. : டிபன் சாப்பிட்டுட்டேன் ஜீவா.

(ஜீவா காபி தரும்படி சைகையால் ஆணையிடுகிறார்.)

ஜீவா : சாரிப்பா. அங்க ரூம்ல வேலை நடக்குது. அதனாலதான் இங்க மீட் பண்ணச் சொன்னேன். தப்பா நெனச்சுக்காதே.

ரா.மா. : இதுல என்னப்பா. உன்னோட மும்முரமான வேலைக்கு நடுவுல எனக்குப் பார்க்க நேரம் குடுத்தியே.. அதுவே பெரிய விஷயம்பா…

(திரைப்படத் தயாரிப்பாளர் குருமூர்த்தி வருகிறார்.)

ஜீவா : ஃபில்ம் ப்ரொட்யூசர் குருமூர்த்தி வர்றாரு.

கு. மூ. : வணக்கம் ஜி. எம்.

ஜீவா : வணக்கம் சார். காபி குடிக்கிறிங்களா…?

கு. மூ. : இப்பத்தான் குடிச்சிட்டு வந்தேன். எம்.டி. டைம் கொடுத்தாரு. ஆனா… இன்னும் வரலை போலிருக்கு. அதான் இங்க வந்தேன். சார் யாரு?

ஜீவா : இவன் என்னோட பள்ளிகாலத்து நண்பன். எழுத்தாளன். பேரு ராஜமாணிக்கம். இன்னும் சரியான பிரேக் கிடைக்கல.

கு. மூ. : நேரம் கூடி வந்தால் எல்லாம் தேடி வரும். எனக்கு காமெடி ட்ராக் எழுதறதுக்கு ஆள் வேணும்னு சொன்னேன் இல்ல. ஒங்க நண்பர் எழுதுவாரா?

ஜீவா : உங்க கம்பெனிக்கு எழுத வாய்ப்பு கிடைச்சா பெரிய விஷயமாச்சே. கண்டிப்பா எழுதுவாரு.

கு. மூ. : நீங்கதான் சொல்றீங்க.. அவர் மௌனமாக இருக்காரு.

ஜீவா : சரின்னு சொல்லுப்பா. சாரை ஆபீஸ்ல போய் பாரு.

ரா. மா. : நான் வந்து சந்திக்கிறேன் ஐயா..

கு. மூ. : இந்தாங்க.. என்னோட விசிட்டிங் கார்டு. நாளைக்குக் காலைல பத்தரை மணிக்கு வாங்க.

(மொபைல் போனைப் பார்க்கிறார்)

ஷீலா மெசேஜ் அனுப்பி இருக்காங்க. எம்.டி. வந்துட்டாராம். நான் வர்றேன். வர்றேன் ராஜமாணிக்கம் சார்.

ரா.மா. : வாங்க ஐயா.

(காபி கோப்பைகளை ஒரு சிறுவன் மேசையில் வைக்கிறான்)

ஜீவா : காபி எடுத்துக்க ராஜமாணிக்கம். (இருவரும் காபி பருகுகின்றனர்)

ரா.மா. : என்னப்பா… சட்டமீறல்கள், விதிமீறல்களை எல்லாம் உங்க தொலைக்காட்சியில அம்பலப்படுத்தி கிழிகிழின்னு கிழிக்கிறீங்க. இங்க ஒங்க கேன்டீன்லே சைல்ட் லேபர்…

ஜீவா (தடுமாற்றத்துடன்) அது கான்ட்ரக்டர் வைச்சுருக்காருப்பா. நாங்க வேலைக்கு வைக்கிறதில்ல. நீ இதைப் பத்தி எல்லாம் எதுலேயும் எழுதிடாதேப்பா… தயவு செஞ்சு….

ரா.மா. : ஏம்பா… நான் எதுல எழுதப் போறேன்? இளம் வயசு எழுத்தாளரா இருந்தா ஃபேஸ்புக், பிளாக்-ன்னு எழுதுவாங்க. டிஜிட்டல் டிவைட்னாலே என்னை மாதிரி கம்யூட்டர் இல்லிட்ரேட்டுக்கு எங்கே களம் கிடைக்கும்…? ஏழை சொல் அம்பலம் ஏறாது. கவலைப்படாதே.

ஜீவா : (நிம்மதிப் பெருமூச்சுடன்) சும்மா சொன்னேன்யா… நீ சீரியஸா எடுத்துக்கிட்ட… வேறு என்ன விசேஷம்?

ரா.மா. : எல்லாம் நல்ல விஷயம்தான். இந்தா… பெரிய வங்கள பார்க்கும்போது நாம எழுதிய புத்தகம் கொடுக்கணும்னு சொல்வாங்க… நான் எழுதின நாவல் தேன்கூடு…

ஜீவா : தாங்க்ஸ்பா. படிச்சுட்டு உனக்கு என்னோட கமென்ட்ஸ் எழுதி அனுப்பறேன்.

ரா.மா. : நன்றி ஜீவா.

ஜீவா : இன்னும் கை காசுப் போட்டுத்தான் புஸ்தகம் போட்டுக்கிட்டு இருக்கியா?

ரா.மா. : அதுக்காகத் தான் உன்கிட்ட…

ஜீவா : (மேலே உரையாடலைத் தவிர்க்க நினைப்பவராய்) பார்த்தியா… உன்கிட்ட பேசக் கூட விட மாட்டேங்கறாரு. எம்.டி. வரச் சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்காரு. வரட்டுமா… இன்னொரு நாள் நீ கண்டிப்பா வரணும்… நாம நிறைய பேசணும்.

ரா.மா. : சரிப்பா. போய்ட்டு வா…

(ஜீவா ஓட்டமும் நடையுமாக மேடையின் இடப்பக்கமாகச் செல்கிறார்.)

(மேடையின் வலப்பக்த்திலிருந்து ஒல்லியான சிவந்த தேகம் கொண்டவர் வருகிறார்.)

வந்தவர் : சார் சுகமா இருக்கா… என்னைத் தெரியுமா….?

ரா.மா. : ஓ… சதாசிவம் நாயர்… எப்படி இருக்கீங்க… ஆச்சர்யமாக இருக்கு. உலகம் சின்னதா?

ச.சி. : நல்லா இருக்கேன் சார். கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டீங்க.

ரா.மா. : எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது. நீங்க ஞாபகம் வெச்சிருக்கீங்களே… இப்ப எல்லாம் சொந்தக்காரங்களே மறந்துடறாங்க.

ச.சி. : சார்… சார் எனக்கு செஞ்ச சகாயம் மறக்க முடியுமா? ஒங்க ஊர்ல என்னோட கடைய காலி பண்ணியே ஆகணும்னு ஓனர் சொன்னப்ப நீங்க பக்குவமா அவர்கிட்ட பேசி என்னை கடையை நடத்த வெச்சீங்க. எனக்கு அப்பப்ப பண உதவி செஞ்சீங்க.

ரா.மா : ஏதோ என்னால் ஆன உதவியை செஞ்சேன்.

ச.சி. : அப்ப நீங்க எனக்கு உயிர் கொடுத்த மாதிரி இல்லையா சார்… என்ன ஜி.எம். சார் ஒங்க கிட்ட சரியா பேசாம போறாரு. அந்த வயசுல ஒங்களோட இணை பிரியாம இருப்பாரு. நீங்க எழுதிட்டு வாசிப்பீங்க, இவரு கேட்பாரு.

ரா.மா. : இளமைக் காலம் திரும்பியா வரும்?… மனுஷங்க மாறாமலா இருப்பாங்க நாயர்?

ச.சி. : சாரே… உங்களுக்குத் தெரியாதா… ஜீவா சாரோட தாய் மாமன் புத்தகம் போடற கம்பெனி நடத்தறாரு. சித்தப்பாவும் அதே லைன்ல இருக்காரு. ஒங்க புக்ஸ் போட இவரு சகாயம் செய்யலாமே…

ரா.மா. : அதுக்குத்தான் வந்தேன் நாயர். இவர் கிட்ட அப்பான்ட்மென்ட்டும் வாங்கினேன்.

ச.சி. : நீங்க விஷயத்தை சொல்ல வந்ததும் அவாய்ட் பண்ணிட்டுப் போய்ட்டாரே… இதுவா நண்பனுக்கு அழகு சாரே… நான்தான் பார்த்துக்கிட்டு இருந்தேனே…

ரா.மா. : கல்லாவில உட்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்க்கிறதுதான் பொழுதுபோக்கா?…

ச.சி. : இது பொழுதுபோக்கு சேனல்… ஆபீஸ் இல்ல…

(அவரே சிரிக்கிறார்)

என்ன நீங்க சிரிக்க மாட்டேங்கறீங்க?

(ஒரு சிறுவன் காபி கோப்பைகளை எடுத்துச் செல்கிறான்)

ச.சி. : அச்சு… நில்லு. சார், இதான் என்னோட சன் அச்சுதன்.

ரா.மா. : சந்தோஷம். வாழ்த்துக்கள்.

ச.சி. : என்ன பேரன் வயசுல பையன்னு யோசிக்கிறீங்களா… எங்க குருவாயூரப்பன் புத்திர பாக்கியத்தை ரொம்ப லேட்டா ரிலீஸ் பண்ணிட்டான் சாரே… (சிறுவன் போகிறான்)

ரா.மா. : காலம் கடந்தாவது கொடுத்தானே… அதை நெனச்சு சந்தோஷப்படுங்க நாயர். பசங்கள சோம்பேறியா விடாமல் வேலை செய்ய வைக்கறது நல்லதுதான். ஆனா வீட்லதான் வேலை செய்யக் கத்துக் கொடுக்கணும். இந்த மாதிரி கடையில வைக்கக் கூடாது. நானே சந்தேகப்பட்டேன் பாருங்க. ஜீவா கிட்டயே கேட்டேன். சிறுவர்களை வேலைக்கு வெச்சிருக்கீங்களேன்னு… நீங்க செய்யற காரியம் ஒங்க கம்பெனி இமேஜை டேமேஜ் பண்ணுது பார்த்தீங்களா…

ச.சி. : சாரே.. நாட்டு நடப்பு தெரியாம பேசறீங்க… இப்ப எல்லாம் வேலை செய்ய ஆளே கிடைக்கறது இல்ல. இன்னிக்கு ஸ்கூல் லீவு. அதான் பையன் வந்திருக்கு. இல்லேன்னா… என் மனைவிதான் இங்கே வேலை செய்வா… டீ போடற மாஸ்டர் யாருன்னு நினைச்சீங்க… என் தம்பி மதுசூதனன்.

சாரே… அந்தக் காலத்துல நீங்க எனக்கு நிறைய ஹெல்ப் செஞ்சுருக்கு. வல்லிய ஆள் நீங்க. உங்களுக்கு நான் ஹெல்ப் செய்யணும்.

ரா.ம. : எப்படி செய்யப் போறீங்க? என்ன செய்யப் போறீங்க?

ச.சி. : சந்திரன்னு என்னோட நண்பர் அது என்ன சொல்வாங்க… பப்ளிகேஷன் நடத்தறாரு. தமிழ்ல, இங்கிலீஷ்ல புஸ்தகம் போடறாரு. டைம் வாங்கித் தர்றேன். சந்திச்சுப் பேசுங்க.

ரா.ம. : கண்டிப்பா. எப்ப போகணும்னு சொல்லுங்க.

ச.சி. : ஒங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். ஒங்க போன் நம்பர் எழுதிக் கொடுங்க. நான் கூப்பிடறேன்.

ரா.ம. : சரி. இந்தாங்க என் நம்பரு. வரட்டுமா… காபிக்கு காசு…

ச.சி. : அது கம்பெனி கணக்கு சாரே. வாங்க. நான் கூப்பிடறேன் போன்ல…

(ராஜமாணிக்கம் போகிறார்)

(சற்று நேரத்தில் சதாசிவத்தின் மனைவி மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறாள். வயதான பெண்மணி. ஆனால் தோற்றத்தில் வயது தெரியவில்லை.)

ச.சி. : ஜலஜா வா… நீ வந்ததும் இந்த இடம் ரொம்ப பிரகாசமா ஆயிடுச்சு.

ஜலஜா : வழியாதீங்க. பையனும், தம்பியும் இருக்கும்போது எப்படிப் பேசணும்னு தெரியாதா?

ச.சி. : தப்புதான். ஆனா… நீ இன்னும் இளமை மாறாம இருக்கே… அதனாலதான்.. ஜொள்ளு வழியப் பேசறேன்.

ஜலஜா : நீங்க எப்பவோ கிழவனாயிட்டீங்க. அதை மறக்காதீங்க. ஒங்களுக்கு என்ன வாயால வடை சுடுவீங்க. நான் வேலய பார்க்கறேன்.

ச.சி. : சரி. நீ போய் கையால வடை சுடு.

ஜலஜா : ஆம்பிளங்களுக்கு என்ன.. ஷேர் ஆட்டோவைப் பத்திப் பேச ஆரம்பிச்சு… ஷேர் மார்க்கெட் வரைக்கும் பேசிப் பேசியே பொழுதை ஓட்டிடுவீங்க.

ச.சி. : பொம்பளங்க எல்லாம் பேசாமலே மௌன சாமியாரா இருக்காங்க போலிருக்கு… என்ன மதுசூதனா.. சைகை காமிக்கறே…

ஜலஜா : கஸ்டமர்ஸ் வர்ற நேரம். ஒங்க சீரியலுக்கு தொடரும் போடுங்கன்னு சொல்றாரு ஒங்க தம்பி. புரியலையா?

ச.சி. : சரி. வாயைக் கட்டிக்கறேன்.

சஹானா

ஜலஜா : வாயைக் கட்டினா வம்புதும்பு இல்ல. வயிற்றைக் கட்டினா நோய்நொடி இல்ல..

ச.சி. : இதை இங்க பொன்மொழியா எழுதி மாட்டலாம் போலிருக்கே… சரி. வாயைக் கட்டிக்கறேன். வயிற்றைக் கட்டுன்னு நாம சொன்னா நம்ம வியாபாரம் அவ்ளோதான்.

(திரை)

இரண்டாம் காட்சி

(பின்னணியில் பூங்கா போன்ற அமைப்பு. திண்ணையில் சதாசிவம் நாயர் அமர்ந்திருக்கிறார். மாலை நேரம். மேடையின் வலப்பக்கத்திலிருந்து ராஜமாணிக்கம் வருகிறார். சதாசிவம் எழுந்து நிற்கிறார்.)

ச.சி. : நமஸ்காரம்.. வணக்கம் சாரே. ஒங்களுக்காக நீங்க சொன்ன நேரத்திற்கு இங்க வந்திட்டேன்.

ரா.ம. : வணக்கம். உட்காருங்க.

(இருவரும் நின்று கொண்டே பேசுகின்றனர்)

ச.சி. : இருக்கட்டும். கல்லாவுலே நாள் முழுக்க உட்கார்ந்துகிட்டுத்தானே இருக்கேன். என்ன விஷயம் சாரே… சந்திரனைப் பார்த்தீங்களா?

ரா.ம. : சந்திரன் ஆபீஸ்ல பிசியா இருந்தாரு. வீட்டுக்கு வாங்கன்னாரு. அங்க போனா என் கிட்டே இரண்டு நிமிஷம் பேச முடியல… பையன் குடிக்க பணம் கொடுன்னு நச்சரிக்கிறான். அவர் பொண்ணுக்கு என்ன உடம்புன்னு தெரியல… ரூம்ல அடைச்சு வைச்சிருக்காங்க. வெளியே விடுங்கன்னு கத்துது. எனக்கு வருத்தமா போச்சு. இவ்வளவு பிரச்சினைக்கு நடுவுல பிசினெஸ்ல வெற்றிகரமாக இருக்காருன்னா.. அவரைக் கண்டிப்பா பாராட்டணும். அவரைப் பார்த்து பிரமிச்சுப் போய்ட்டேன்.

ச.சி. : குடும்ப பாரம் சிலருக்கு சுகமா இருக்கும். சிலருக்கு பாறாங்கல்லா அழுத்தும். சந்திரனுக்கு பாறாங்கல்லா இருக்கு.

ரா.மா. : அவரும் அவரோட மனைவியும் இப்படிப்பட்ட சூழலை எதிர்கொண்டு மனம் தளராம சமாளிக்கிறாங்க பாருங்க. இன்னிக்கு காலைல எழுந்ததும், குளிச்சு முடிச்சு சந்திரன் சார் குடும்பத்துக்காக பிரார்த்தனை செஞ்சேன். அவரோட பையன் திருந்தணும். அவர் பெண்ணுக்கு தெளிவு ஏற்பட்டு நல்ல வாழ்க்கை அமையணும்னு வேண்டிக்கிட்டேன். கண்டிப்பா கடவுள் செவி சாய்ப்பான்.

ச.சி. : கடவுள் ஒங்க வேண்டுதல காது கொடுத்து கேட்கறது இருக்கட்டும். ஒங்க புக்ஸ் பத்தி அவரு என்ன சொன்னாரு? அதைச் சொல்லுங்க.

ரா.மா. : நான் பேசினதைக் கேட்டாரு. என் புத்தகங்கள் பத்தின அறிமுகக் குறிப்பு வாசிச்சுப் பார்த்தாரு. ஸ்கிரிப்ட்டையும் மேலோட்டமாய் பார்த்தாரு.

ச.சி. : என்ன சொன்னாரு. அதைச் சொல்லுங்க.

ரா.மா. : நீங்க ஒங்க டேஸ்ட்டுக்கு ஏத்தா மாதிரி எழுதியிருக்கீங்க. இதை மார்க்கெட் பண்ணி விற்க முடியாது. சும்மா பிரிண்ட் பண்ணி வெச்சுக்கிட்டு நான் இவ்வளவு புத்தகம் எழுதியிருக்தேன்னு சொல்லிக்கலாம்னாரு.

ச.சி. : அப்ப.. அவரோட கம்பெனியில ஒங்க புஸ்தகங்கள ஏத்துக்கல… அப்படித்தானே?

ரா.மா. : ஆமாம் நாயர். அவங்க ஆங்கிள்ல பார்த்தா, அவங்க சொல்றது சரின்னுதான் தோணுது.

ச.சி. : தட்டிக் கழிச்சு அனுப்பிட்டாரு. நான் பேசினதுக்கு மதிப்பு இல்ல சாரு. வருத்தமாக இருக்கு. பரிசீலிக்கறேன்னு கூட சொல்லலியே.

ரா.மா. : நாயர்… நீங்க ஏன் வருத்தப்படறீங்க…? அவங்க ஆதாயத்தைப் பார்க்க மாட்டாங்களா?

ச.சி. : சரி. சினிமா தயாரிப்பாளர் குருமூர்த்தி என்ன சொன்னாரு… அவரைப் பார்க்கப் போறேன்னு போன்ல சொன்னீங்களே…

ரா.மா. : அவர் ஆபீசுக்குப் போனேன். காமெடி டிராக் எழுதச் சொன்னாரு. ரெண்டு மூணு ட்ராக் எழுதிக் கொடுத்தேன்.

ச.சி. : சாருக்கு காமெடி வருமோ? எப்பவும் சீரியஸ் மூஞ்சி அல்லே…

ரா.மா. : நகைச்சுவை உணர்வு எல்லார்கிட்டேயும் இருக்கத்தான் செய்யும். நீங்க இப்படி சொல்றீங்க. அவரு நான் எழுதினதை உடனே படிச்சாரு. விழுந்து விழுந்து சிரிச்சாரு. கண்ல கண்ணீர் வந்துச்சு.

ச.சி. : சிரித்தாலும் கண்ணீர் வரும். அழுதாலும் கண்ணீர் வரும்னு ஒரு பழைய சினிமாப் பாட்டு உண்டு இல்லே… சரி. மேலே சொல்லுங்க.

ரா.மா. : நல்லா இருக்கு. ஆனா.. இன்னிய ட்ரெண்டுக்கு ஏத்தா மதிரி இல்லையேன்னு சொல்லிட்டாரு.

ச.சி. : இன்னிய ட்ரெண்ட் எப்படியாம்?

ரா.மா. : அதான். ஒருத்தன் ஏடாகூடமா ஏதாவது பேசி வர்றவன் போறவன் கிட்ட எல்லாம் அடி வாங்கறது.

ச.சி. : உள்ளாடை போடலை வேட்டிய இழுக்காதேன்னு சொல்றது..

ரா.மா. : அதான். இயற்கை உபாதைகளை வெச்சு சீன் உருவாக்கறது…

ச.சி. : இப்படி எல்லாம் நீங்க எழுதலைங்கறதுனால உங்களுக்கு தகுதி இழப்பு.. அப்படித்தானே..?

ரா.மா. : ஆமாம் நாயர்.

ச.சி. : நீங்க எழுதின ஸ்கிரிப்டை பத்திரமா வெச்சுக்கங்க. சந்தர்ப்பம் கிடைக்கும்போது பயன்படத்திக்கங்க. அப்ப மெட்ராஸ் ட்ரிப் பிரயோசனமில்லையா…?

ரா.மா. : அப்படி சொல்ல முடியாது. ஒங்க சானல் ஆபீஸ்ல…

ச.சி. : என் சேனலா… எம்.டி. அடிக்க வந்துடுவாரு.

ரா.மா. : சரி. நீங்க கேன்டீன் வெச்சிருக்கிற ஆபீஸ்ல ஒர்க் பண்றாங்களே.. ஹேமா… அந்தப் பொண்ணோட அப்பா பார்த்திபன் எனக்கு பங்காளி… அவர்கிட்ட டாக்டர் கைலாசம், அவரோட வாழ்க்கை வரலாறு சொல்லச் சொல்லி எழுதுவதற்கு ஒரு எழுத்தாளர் வேணும்னு சொல்லி இருக்காரு. ச.சி. : டாக்டர் கைலாசம் மிகப் பெரிய புள்ளி. அவுரு.. ரா.மா. : அவர் ஒங்க ரிலேட்டிவ்னு சொல்லிடாதீங்க. ச.சி. : அவருக்கு பலவிதமான அனுபவங்கள். அரசியல்ல.. சினிமாவுல… சுயசரிதை எழுத வேண்டியது அவசியம்தான். ஆனா… நீங்க கிரியேட்டிவ் ரைட்டர்… சிற்பி அம்மி கொத்தப் போகணுமா?

ரா.மா. : சிற்ப வேலைக்கு மதிப்பு இல்லைன்னா… அதைத்தான் செய்யணும். அவரைச் சந்திச்சேன். ஆஸ்பத்திரியில பேச முடியாது. பாரதி பூங்கால வெயிட் பண்ணுங்க… வரேன்னு சொல்லியிருக்காரு. இந்த அலங்கார லைட் கிட்ட தான் இருக்கச் சொன்னாரு. வர்ற டைம்தான்.

ச.சி. : அவரும் இந்த ஸ்பாட்ல வரச் சொல்லி இருக்கா? அவர் வர்ற நேரம்… நான் வேற லூஸ் டாக் பேசிட்டேன்.

ரா.மா. : அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஒங்க மனசுல பட்டதைச் சொன்னீங்க.

ச.சி. : நான் போய்ட்டு வர்றேன். நல்ல அமௌன்ட்டு பேசிக்கங்க. அது என்ன சொல்வாங்க… ம்ஹும்.. குட் லக். ரா.மா. : நன்றி நாயர்.

(சதாசிவம் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்) (மேடையின் வலப்பக்கத்திலிருந்து செல்போனில் பேசிய படியே டிப்டாப் உடை அணிந்த நடுத்தர வயது நபர் வருகிறார்)

நபர் பேசுதல் : சரி சரி. பார்த்துக்கலாம். சுவாரஸ்யமா எழுதறதுக்கு ஆள் கிடைக்காமல்.. தேடிக்கிட்டு இருக்கேன். அப்புறம் பேசறேன்… பை.. பை.

(அவர் ராஜமாணிக்கத்தை ஏற இறங்கப் பார்க்கிறார்)

நபர் : அண்ணே… நீங்க ராஜமாணிக்கம் தானே…? ரா.மா : ஆமாம். சார் யாரு? தெரியலையே.

நபர் : நான்தான் விசுவநாதன். நீங்க காலேஜ் படிக்கும்போது ஒங்க கூட ஓங்க வீட்ல கேரம் விளையாடுவேன்… ஞாபகம் வருதா…?

ரா.மா. : அடடே! ஆமாம். அப்ப ஸ்கூல்ல படிச்சுகிட்டு இருந்தீங்க. எப்பப் பார்த்தாலும் எங்க கோஷ்டியோடவே சுத்திகிட்டு இருப்பீங்க. ஒங்களப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம்… என்ன பண்றீங்க…?

விசு : என்ன அண்ணே… மரியாதையோட பேசறீங்க. நீன்னே கூப்பிடுங்க. உங்களைப் பார்த்து எழுத ஆரம்பிச்சவன் நான். நீங்க எனக்கு துரோணர். நான் ஏகலைவன்.

ரா.மா. : எழுத்து ஒரு மோகினிப் பிசாசு. பிடித்தால் விடாதுன்னு சொன்னாரு புதுமைப்பித்தன்.

விசு : மோகினிப் பிசாசு எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்கு. சண்டே அப்சர்வர் தமிழ் எடிஷனோட காபி எடிட்டர் நான். ரா.மா. : அட்றா சக்கை. கடலூர் விசுவநாதன்கறது நீங்கதானா… நீதானா… படிச்சிருக்கேன்.

விசு : மேகசைன் எப்படி இருக்கு அண்ணே? ரா.மா. : நல்லா இருக்குப்பா. ரெகுலரா படிக்கறேன்.

(சதாசிவம் வருகிறார்)

ச.சி. : என்ன சாரே? டாக்டர் வரலையா… இவர்தான் வந்தாரா?

ரா.மா. : இவரைத் தெரியுதா? நம்ம ஊரு விசுவநாதன். ச.சி. : தெரியுமே… ஒரு தடவை பந்தாடி என் பாய்லரைத் தள்ளிட்டு ஓடினவரு இவருதான்.

ரா.மா. : ஒங்க ஞாபக சக்தியை நிரூபிக்க இதுதான் வேளையா? சும்மா இருங்க நாயர்.

ச.சி. : சாரி. தப்பா நெனக்காதீங்க. வணக்கம் நான்தான் சதாசிவம் நாயர்.

விசு : வணக்கம். வயசானாலும் நாயர் குணம் மாறாம கலகலன்னு இருக்கீங்க.

ச.சி. : விசு சாரே. நீங்க பேசினதைக் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். நம்ம சாருக்கு நீங்க சந்தர்ப்பம் கொடுங்களேன் ஒங்க பத்திரிகையில.

விசு : கிரேட் ஐடியா நாயர். அண்ணே.. எங்க ஆபீஸுக்கு வந்திருடங்க. ட்ரான்ஸ்லேஷன் எழுதிக் கொடுங்க. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எழுதணும்னு இல்லே. சாரத்தை வெச்சிகிட்டு ஒங்க பாணியில ஜமாய்ங்க. அரை நாள் வந்தா போதும். நல்ல சம்பளமாக கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன்.

ச.சி. : அப்புறம் என்ன சாரே. பருத்தி புடவையா சாரி வேஷ்டியா மாறி ஒங்க கையில வந்து விழுந்துடுச்சு. எடுத்து உடுத்திக்கங்க.

ரா.மா. : அதெல்லாம் சரிதான்.

விசு : தெரிஞ்சவர்கிட்ட எப்படி ஒர்க் பண்றதுன்னு யோசிக்கறீங்களா…

ரா.மா. : அது இல்லப்பா விசு. நாயர்… டாக்டர் கைலாசத்தோட ஊட்டியிலே தங்கி அவரோட வரலாறு எழுதணும்னு சொன்னேன் இல்ல.

ச.சி. : ஊட்டியில தங்கறத பத்தி எல்லாம் நீங்க சொல்லவே இல்லையே. சாரே… அது பத்தி பேச்சு வார்த்தையே முடியல. இங்க ரெண்டே நிமிஷத்துல டீல் முடிஞ்சுடுச்சு பாருங்க. விசு சார் கிட்ட ஒத்துக்கங்க. உங்களுக்கு தங்குவதற்காக ஜாகைக்கு நான் ஏற்பாடு பண்றேன்.

(ஓர் இளைஞன் மேடையின் மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறான்)

இளைஞன் : சார்.. இங்க ராஜ மாணிக்கம் யாரு?

ரா.மா. : நான்தான் சொல்லுங்க.

இளைஞன் : வணக்கம். என் பேர் சக்தி. டாக்டர் கைலாசத்தோட உதவியாளன். டாக்டர் அவசர வேலையா இன்னிக்கு ஹாங்காங் போயிருக்காரு. ஒங்கள அப்புறம் தொடர்பு கொள்வோம்னு சொல்லச் சொன்னாரு. தப்பா நெனச்சுக்க வேணாம்னு சொன்னாரு. போன்ல சொன்னா நல்லா இருக்காதுன்னு என்னை அனுப்பி வெச்சாரு.

ரா.மா. : சரிங்க. நன்றி. அவருக்கு நேரம் ஒழியறப்ப பார்த்துக்கலாம். பரவாயில்ல.

இளைஞன் : நன்றி சார். ஒங்கள சந்திச்சதுல சந்தோஷம். வரேன் சார். இந்தாங்க என்னோட கார்டு. வெச்சுக்கங்க. நான் வரேன்.

ரா.மா. : நன்றி. வாங்க.

(இளைஞன் செல்கிறான்)

விசு : அண்ணே, அப்புறம் என்ன? வாங்க. வெல்கம் டு சண்டே அப்சர்வர்.

ரா.மா : (உணர்ச்சி வசப்பட்டு விசுவநாதனின் கரங்களைப் பிடித்துக் கொள்கிறார்.) ரொம்ப நன்றி விசு.

ச.சி. : சாரே உணர்ச்சி வசப்படாதீங்க. இனிமேல் உங்களுக்கு வானமே எல்லை. தூள் கிளப்புங்க. விசு சாரே, நான் சொன்னது சரியா…

விசு : கரெக்ட் நாயர். வாங்க போகலாம்.

ச.சி. : அண்ணன் ட்ரீட் தர மாட்டாரு. சுருக்குப் பைய அவிழ்க்க மாட்டாரு. நீங்கதான் ட்ரீட் தரணும். வாங்க போகலாம்.

ரா.மா. : நாயர்…

ச.சி. : சரி. பேச்சைக் குறைக்கறேன். வாங்க.

(மூவரும் சிரித்துக் கொண்டே செல்கின்றனர்)

(திரை)

மூன்றாம் காட்சி

(பின்னணியில் நடுத்தரக் குடும்பத்தின் வீடு. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சதாசிவம் நாயர் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார். மேடையின் இடப்பக்கத்திலிருந்து அவரது மனைவி ஜலஜா வருகிறான். நின்று கொண்டே பேசுகிறாள்)

ஜலஜா : என்ன இது… மலையாளம் பேப்பர் வாங்கறது ஜம்பத்துக்காகவா இல்லே நிஜமாவே படிக்கறீங்களா…

ச.சி. : இத்தனை நாளா இல்லாம இப்ப திடீர்ன்னு கேட்கறே? ஜலஜா : ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன்.

ச.சி. : இன்னிக்கு இதைக் கேட்டு வம்புக்கு இழுக்கலாம்னு முடிவு செஞ்சியா…

ஜலஜா : ஆமாம். தினமும் ஒங்கள வம்புக்கு இழுக்கறதுதான் எனக்கு வேலையா… வேற வேலை இல்லையா… சரி. ஒங்க நண்பரை எங்க அப்பா அம்மா வீட்ல தங்க வெச்சுட்டீங்க… ச.சி. : நீ எதுவும் மறுப்பு சொல்ல மாட்டேங்கற தைரியத்துலதான் அவரைத் தங்க வைச்சேன். அவரு எனக்கு சகாயம் நிறைய செஞ்சு இருக்காரு.

ஜலஜா : எப்பவோ உதவி செஞ்சதுக்கு நீங்க இப்ப பதில் உதவி செய்யறீங்களா… புனித யாத்திரை போய் இருக்கிற எங்க அப்பா அம்மா வந்தா எங்கே தங்குவாங்க…?

ச.சி. : திரும்பி வந்தா பார்த்துப்போம்.

ஜலஜா : (முறைக்கிறாள்) என்ன சொல்றீங்க…?

ச.சி. : அவங்க வர்றதுக்குள்ள அவருக்கு வேற இடம் பார்த்துக் கொடுக்கறேன். போதுமா?

ஜலஜா : (குழைவுடன்) அதுக்கு இல்ல சேட்டா… ஒத்தை ஆள தங்க வெச்சிட்டீங்கன்னா கூட்டம் சேரும் தண்ணி அடிப்பாங்க. அக்கம்பக்கத்துல நம்ம பேரு ரிப்பேர் ஆயிடும் இல்ல…

ச.சி. : ஜலஜா.. அவரு தங்கமானவரு. இங்க அவருக்கு உடனே சேரும்படியா வேலை கிடைச்சுடுச்சு.. நான் முடிவு எடுத்தா நீ ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு நெனச்சேன்.

ஜலஜா : இப்ப மட்டும் என்ன சொல்லிட்டேன்? மனசுல பட்டதைச் சொன்னேன். உங்க முடிவுக்கு என்னிக்கு நான் தடை சொல்லியிருக்கேன்?

ச.சி. : அதான் என் கொடுப்பினை. மனைவி அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு கவியரசு பாடினாரே… இறைவன் எனக்கு வரம் கொடுத்துட்டான். போயி நல்ல பெண்டாட்டியோட வாழ்ந்து பாருன்னு வரம் கொடுத்துட்டான்.

ஜலஜா : ஆமாம். ஒங்க நண்பருக்கு குடும்பம் இல்லையா? ச.சி. : அதைப் பத்தி சரியான விவரம் தெரியல. அவரு முகத்துல எதையோ பறிகொடுத்த சோகம் தெரியுது. குடும்ப வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிருந்தா அவங்கள பத்தி ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலயாவது பேசாம இருக்க மாட்டாங்க. இவருக்கு நல்லபடியா அமையலேன்னு நெனக்கறேன். அதனாலதான் அதைப் பத்தி கிளறக் கூடாதுன்னு நான் எதுவும் கேட்கல.

ஜலஜா : ஆச்சரியமா இருக்கு.

ச.சி. : என்ன?

ஜலஜா : இல்ல… உங்க கிட்ட எப்படி இப்படி ஒரு பக்குவம். ரொம்ப படிச்சவங்களே ஏடாகூடமா கேள்வி கேட்டு மத்தவங்கள சங்கடப்படுத்தறாங்களே…

ச.சி. : படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டுன்னு படிக்காத மேதை சினிமா பாட்டு கேட்டிருக்கியா? நான் அப்படிப்பட்ட படிக்காத மேதைகள்ல ஒருத்தன்.

ஜலஜா : ஆமாம். ஆமாம். சொல்லிக்கிட்டாங்க. (மேடையின் இடப்பக்கத்தை நோக்கிச் செல்கிறாள்)

ச.சி. : என்ன கிளம்பிட்டே…

ஜலஜாவின் குரல் : நான் என்ன ஒங்கள மாதிரி சோம்பேறியா உட்கார்ந்துகிட்டே இருக்கறதுக்கு…? வேலை நிறைய இருக்கு.

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து ராஜமாணிக்கம் வருகிறார். அவருடன் தள்ளாடியபடியே ஓர் இளைஞன் வருகிறான். ராஜமாணிக்கம் அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்கிறார்.)

ச.சி. : வாங்க சாரே.. யார் இந்த இளைஞரு ?

(எழுந்து நிற்கிறார்)

ரா.மா. :என்ன தெரியலையா? இவர்தான் சந்திரன் சாரோட பிள்ளை.

ச.சி. : சந்திரனோட மகன் சுந்தரா? என்ன என்ன இது அலங்கோலம்? வாப்பா… இந்த சேர்ல உட்காரு. சாரே உங்களுக்கு ஒர சேர் கொண்டு வர்றேன்.

(ஜலஜா நாற்காலியுடன் வருகிறாள்)

ச.சி. : ஜலஜா… என்னோட வீட்டுக்கார அம்மா… ஜலஜா… சார்தான் ராஜமாணிக்கம்.

ஜலஜா : வணக்கம்.

ரா.மா. : வணக்கம்மா. சௌக்கியமா? (உட்காருகிறார்)

ச.சி. : என்ன ஆச்சு சொல்லுங்க…

ரா.மா. : சுந்தரை நம் வீட்டு கிட்ட இருக்கிற பஸ் ஸ்டான்ட்ல பார்த்தேன் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்று நெனச்சப்ப சந்திரன் வீட்ல பார்த்தது நினைவுக்கு வந்தது. நான் கிட்ட வர்றதுக்குள்ள அவருக்கு தர்ம அடி கொடுக்க ஜனங்க வந்தாங்க. நான் தடுத்து காப்பாத்தி இங்க அழைச்சுகிட்டு வந்தேன்.

ச.சி. : புரியுது. போதையால வந்த வினை.

ரா.மா. : யார் கிட்ட என்ன வம்பு செஞ்சார்னு தெரியல. ஜனங்க கிட்ட கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி மீட்க வேண்டியதா போச்சு. இவருக்கு கொஞ்சம் தெளிச்சப்புறம் வீட்ல கொண்டு விடுவோம்.

ச.சி. : சரி. ஜலஜா கொஞ்சம் தண்ணி கொண்டு வா.

(ஜலஜா ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வருகிறாள். சதாசிவம் சுந்தரின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்)

ச.சி. : நீ போதை தலைக்கேறி வம்பை விலை கொடுத்து வாங்கினே. இவுரு ஒன்னை இங்க அழைச்சுகிட்டு வந்துட்டாரு. ஒங்க அப்பா வந்து சாமியாடப் போறாரு.. தம்பி சுந்தர்

(பதிப்பாளர் சந்திரன் மேடையின் வலப் பக்கத்திலிருந்து வேகமாக வருகிறார். பருமனான தேகம். ஜம்பது வயதுக்கு மேலான தோற்றம். பெரிய மீசை. முகத்தில் கோபம்.)

சந்திரன் : ஒங்கள யார் சார் இவனை அழைச்சுகிட்டு வரச் சொன்னங்க?

ரா.மா. : சார். ஜனங்க அடிக்க வந்தாங்க. காப்பாத்தி இங்க அழைச்சுகிட்டு வந்தேன். தெளிஞ்சப்புறம் வீட்ல கொண்டு விடலாம்னு இருந்தேன்.

சந்திரன் : ஏன் ஒங்களுக்கு வேலை வெட்டி இல்லையா? இதெல்லாம் ஒங்கள யாரு செய்யச் சொன்னாங்க?

ச.சி. : வாங்க. உட்காருங்க. ஏன் கொந்தளிக்கிறீங்க? அவரு நல்லதுதானே செஞ்சு இருக்காரு.

சந்திரன் : சதாசிவம் உன் ஃப்ரெண்டு கிட்ட சொல்லி வை. என் பையன் விஷயத்தில மூக்கை நுழைக்க வேணாம். பொழுது போகலேன்னா சமூக சேவைன்னு நெனச்சுகிட்டு இந்த மாதிரி வேலைல இறங்க வேணாம்னு சொல்லி வை. வாடா. கிளம்பிட்டாங்க காப்பாத்தறதுக்கு.

(இளைஞனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு மேடையின் வலப்பக்கமாக சந்திரன் வெளியேறுகிறார்.)

ஜலஜா : என்ன இப்படி பேசிட்டுப் போறாரு. சார் நல்லதுதானே செஞ்சாரு.

ச.சி. : நல்லதுக்குக் காலம் இல்லே ஜலஜா. சாரே… வருத்தப்படாதீங்க.

ரா.மா. : உணர்ச்சி வேகத்தில பேசிட்டாரு. பிள்ளையாலே அவமானமா இருக்கேன்னு ஆதங்கம். ஆதங்கம் ஆத்திரமா வெளிப்படுது.

ச.சி. : ஆத்திரம் திசை மாறி நல்லது செஞ்ச உங்களை இல்ல தாக்குது. இந்த பையன் இங்க இருக்கான்னு அவருக்கு எப்படி தெரியும்?

ரா.மா. : நான் தான் அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வெச்சேன்.

ச.சி. : வெகுளியா இருக்கீங்க… இன்னும் என்னென்ன அனுபவிக்கப் போறீங்களோ….?

ரா.மா. : நாள் பிறக்கும் போது நானும் பிறக்கிறேன். புதுப்பாடம் படிக்கிறேன். என்ன… பாடம் படிச்சாலும் எச்சரிக்கையா இருக்கத் தெரிய மாட்டேங்குது. சரி, வரேன் நாயர். வரேன் சிஸ்டர்.

(மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறார்)

ஜலஜா : இப்ப புரியுதா ஜனங்க ஏன் சுயநலமாவே இருந்துகிட்டு… மத்தவங்களுக்கு உதவி செய்யாம இருக்காங்கன்னு.

ச.சி. : உதவி செஞ்சா செஞ்சவங்களுக்கு உபத்திரவம் வரும்னு சொல்றே.

ஜலஜா : நமக்கும் இவரால என்னென்ன உபத்திரவம் வரப் போவுதோ… பாருங்க.

ச.சி. : அதெல்லாம் ஒண்ணும் வராது.

ஜலஜா : பார்க்கத்தானே போறேன்.

நான்காம் காட்சி

(பின்னணியில் பூங்கா போன்ற அமைப்பு. திண்ணையில் ராஜமாணிக்கம் உட்கார்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். மேடையின் வலப் பக்கத்திலிருந்து பருமனான சரீரம் கொண்ட நடுத்தர வயது பெண்மணி வருகிறார். ராஜமாணிக்கத்தின் அருகில் வந்து நிற்கிறார்.)

பெண்மணி : வணக்கம் சார்.

(ராஜமாணிக்கம் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து நிற்கிறார்)

ரா.மா. : வணக்கம் மேம். நீங்க…

பெண்மணி : என் பேரு வசந்தி சந்திரன். சுந்தரோட அம்மா. உட்காருங்க.

ரா.மா. : பரவாயில்லை. சுந்தர் எப்படி இருக்காரு?

வசந்தி : இப்ப நல்லா இருக்கான் சார். என் ஹஸ்பண்ட் நிதானம் இல்லாம நடந்துகிட்டாரு மன்னிச்சிடுங்க.

சாயங்கால நேரத்துல நீங்க இந்த பூங்கால இருப்பீங்கன்னு நாயர் சொன்னாரு. ஒங்கள சந்திச்சு என் கணவருடைய நடத்தைக்காக மன்னிப்பு கேட்க வந்தேன்.

ரா.மா. : என்ன மேம்… பெரிய வார்த்தைய எல்லாம் பேசறீங்க. தெரிஞ்ச பையனை ஜனங்க அடிக்கும்போது பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?

வசந்தி : நீங்க மட்டும் அங்க இல்லேன்னா என்ன ஆகியிருக்குமோ நெனச்சாலே பயமாயிருக்கு. என் கணவர் ஒங்களத் திட்டிட்டு வந்துட்டாருன்னு கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன். மன்னிச்சிடுங்க.

ரா.மா. : அதை விடுங்க. சுந்தர் எப்படி இருக்காரு? போதைப் பழக்கத்துலேந்து விடுபடறதுக்கு நீங்க தான் பக்குவமா பேசி வழிக்கு கொண்டு வரணும்.

வசந்தி : அதற்கெல்லாம் அவசியமே இல்லை. போதைப் பழக்கத்தாலே அவமானப்பட்ட கதை, நீங்க காப்பாத்தின சம்பவம், ஒங்ககிட்ட அவங்க அப்பா நடந்த விதம் எல்லாத்தையும் புள்ளைகிட்ட சொன்னேன். இனிமேல் மதுபானத்தைத் தொடவே மாட்டேன்னு சொல்லி இருக்கான். குடிகாரன் பேச்சா போயிடுமா… நிஜமாவே நடக்குமான்னு தெரியல. பொறுத்துத்தான் பார்க்கணும்.

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து இளைஞன் சக்தி வருகிறான். வசந்தி அவனைப் பார்க்கிறாள்)

வசந்தி : சரிங்க சார். என் கூட வாக்கிங் வந்த நெய்பர் லேடி காத்திருப்பாங்க. நான் வரேன். இன்னொரு சந்தர்ப்பதுல சந்திக்கறேன்.

ரா.மா. : வாங்க மேம். நன்றி. (அமர்கிறார்)

(வசந்தி மேடையின் இடப்பக்கத்தை நோக்கி வேகமாகச் செல்கிறாள்.)

சக்தி : வணக்கம் சார்.

ரா.மா. : வணக்கம் சக்தி வாங்க.

சக்தி : ஒரு தடவைதான் பார்த்தீங்க. கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்க.

ரா.மா. : சொல்லுங்க. என்ன விஷயமாகப் பார்க்க வந்தீங்க? சக்தி : டக்னு பாயின்ட்டுக்கு வந்துட்டீங்க.

ரா.மா. : தொடர்பு இல்லாத விஷயங்களைப் பேசி நேரத்தை செலவிடறதுல என்ன பிரயோசனம்?

சக்தி : டாக்டரோட சுயசரிதை புராஜெக்ட் இன்னும் டேக் ஆஃப் ஆகலை. எங்க ஹாஸ்பிட்டல் பத்தி ஒரு காஃபி டேபிள் புக் பண்ணியிருக்கோம். ஒங்க கிட்ட காமிச்சு கருத்து கேட்டு வரச் சொன்னாரு எங்க பாஸ்.

ரா.மா. : என்னை மாதிரி அவுட்சைடரோட கருத்து கிடைச்சா நல்லா இருக்கும்னு டாக்டர் நெனச்சுருக்கலாம். சரி காமிங்க. பார்ப்போம்.

(சக்தி டம்மியைத் தருகிறான். ராஜமாணிக்கம் புரட்டிப் பார்க்கிறார்)

ரா.மா. : என்னோட கருத்து எப்படி இருந்தாலும் வெளிப்படையா சொல்லாமா?

சக்தி : சொல்லுங்க சார். உங்க கருத்துக்கு மதிப்பு இருக்கிறதுனாலேதான் டாக்டர் அனுப்பி வைச்சு இருக்காரு.

ரா.மா. : நான் சொல்றதை அப்படியே டாக்டர் கிட்ட நீங்க சொல்வீங்களா?

சக்தி : நீங்க சொல்றதை ஒங்க குரல்லயே அவர்கிட்ட கொடுத்துடுவேன். இதோ என் செல்போன்ல வாய்ஸ் ரிகாட் ஆன் பண்ணிட்டேன்.

ரா.மா. : இது அள்ளித் தெளிச்ச அவசரக் கோலம். ஐம்பது ஆண்டுகளாக இருக்கிற ஆஸ்பத்திரி, மெடிக்கல் டூரிஸத்திற்காக வெளிநாட்டிலேந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல பேர் வந்து போற ஆஸ்பத்திரியோட காஃபி டேபிள் புக் இப்படியா இருக்கும்? காஃபி டேபிள் புக்-ல டெக்ஸ்ட் அதிகம் இருக்கக் கூடாது. படங்கள்தான் பேசும் படங்களா இருக்கணும். உங்க நிறுவனத்தைப் பத்தி நீங்க சொல்ல நெனச்சதை படங்கள் கம்யூனிகேட் பண்ணனும். நீங்க ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சு ஐம்பது வருஷம் ஆகுதுன்னா அப்ப சிறிய அளவுல இருந்த மருத்துவமனையோட ஃபோட்டோக்கள் அந்தக் காலத்தில ஒங்கள பத்தி நியூஸ் வந்த பேப்பர் கிளிப்பிங் எல்லாம் இருக்கணும். அதுக்கு உழைக்கணும். பழைய பைலை எல்லாம் தூசியப் பார்காம மூக்கை மூடிக்கிட்டு தட்டி எடுக்கணும். அப்பத்தான் நீங்களே எதிர்பார்க்காத விஷயங்களும், படங்களும் கிடைக்கும். இதை மட்டும் அச்சடிச்சுடாதீங்க. ப்ளீஸ். என்னிடம் கருத்து கேட்டதற்கு நன்றி.

(ராஜமாணிக்கம் பதிவை நிறுத்துமாறு ஜாடை காட்டுகிறார். சக்தி நிறுத்துகிறான்)

ரா.மா. : ஆமாம். என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த லேடி, உங்களப் பார்த்ததும் ஏன் அவசரமா கிளம்பிப் போனாங்க? சக்தி : அது வந்து அது வந்து…

ரா.மா. : என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க. தயக்கம் இருந்தா வேண்டாம்.

சக்தி : அது… சொல்றேன் சார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணவேணி என்னோட அத்தை. (கிருஷ்ணவேணி என்கிற பெயரைக் கேட்டதும் ராஜமாணிக்கம் முகத்தில் அதிர்ச்சி தோன்றுகிறது. எழுந்து நிற்கிறார். சக்தி அவருடைய முகபாவத்தைக் கவனிக்கவில்லை.) நிறைய சினிமாப் படங்கள், விளம்பரப் படங்கள் எல்லாம் அவங்க கைவண்ணத்துல வந்திருக்கு. வெற்றிக்கொடி கட்டி இருக்கு. அவங்க கிட்ட இந்த வசந்தி மேடத்தோட பொண்ணு வீணா அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணா. அப்ப எனக்கும்… அவளுக்கும்…

ரா.மா. : (அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்) காதல் உருவாச்சு. அதானே…

சக்தி : ஆமாம் சார். பம்பரமா சுழன்று எங்க ஆன்ட்டிக்கு ஈடுகொடுத்து வேலை செஞ்சுகிட்டு வந்த வீணாவுக்கு போதும் இந்த வேலை, திருமணம் செஞ்சுகிட்டு ஹோம் மேக்கர் ஆயிடலாம்னு எண்ணம் வந்திச்சு. நான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னேன்.

ரா.மா. : வீடு, வாசல் எல்லாம் வாங்கினப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனச்சு இருக்கீங்க.

சக்தி : நாட் எக்ஸாக்ட்லி. சமூகத்தில நல்லா சம்பாதிக்கக் கூடியவங்களுக்குத் தானே மரியாதை. அந்த நிலையை நான் அடைஞ்சப்புறம் திருமணம் செஞ்சுக்கலாம்னு நான் சொன்னேன். ஆனா, வீணா நான் தட்டிக் கழிக்கறேன், கைவிடப் பார்க்கறேன்னு நெனச்சுகிட்டு என்கிட்ட பேசறதை நிறுத்திட்டா. அதோட முடியலை… பெரிய ஏமாற்றமா நெனச்சதால மனசைப் போட்டு குழப்பிக்கிட்டு லேசா மனநிலை பாதிக்கப்பட்டவளா ஆயிட்டான்னு கேள்விப் பட்டேன்.

ரா.மா. : புரியுது. அதனால் வீணாவோட தாயார் ஒங்க மேலே கோபமா இருக்காங்க.

சக்தி : ஆமாம் சார். வீணாவுக்கு உளவியல் ரீதியா பிரச்சினை ஏற்படும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல சார்.

ரா.மா : கடவுள் ஏற்படுத்தற ட்விஸ்ட் ரெண்டாவது முறை சந்திக்கும்போது ரொம்பநாள் பழகினா மாதிரி ஒங்க பர்சனல் விஷயங்களை என்கிட்ட பகிர்ந்துகிட்டீங்க. நன்றி. (புறப்படுகிறார்.)

சக்தி : சார். ஒங்க மேல ஏதோ நெருக்கம் ஏற்பட்டு, எல்லாத்தையும் கொட்டிட்டேன். நீங்க வெறும் நன்றின்னு கிளம்பறீங்க.

ரா.மா. : சரி. நான் என்ன செய்யணும் சொல்லுங்க. ஒங்க தலைவலிக்கு நீங்கதானே மாத்திரை சாப்பிடணும் தம்பி.

சக்தி : என்ன சார்… நீங்க பெரிய மனுஷன். ஏதாவது வழி சொல்வீங்கன்னு தானே ஒங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்.

ரா.மா. : இதோ இருக்கே வழி… தம்பி… நீங்க போட்ட முடிச்சு சிக்கலாப் போச்சு. எப்படி அவிழ்க்கறதுன்னு பார்ப்போம். யோசிச்சு சொல்றேன். அந்தப் பெண்ண நான் ஒருமுறை பார்த்து இருக்கேன். மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. சக்தி : நான் இப்படி எல்லாம் ஆகும்னு…

ரா.மா. : கனவுல கூட நெனச்சு இருக்க மாட்டீங்க. சக்தி : ஆமாம் சார்.

ரா.மா. : கலங்காதீங்க. கடவுள் நல்ல வழி காமிப்பாரு. வரேன். குட் லக்.

சக்தி : தாங்க்ஸ்.

(ராஜமாணிக்கம் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்.)

(திரை)

– தொடரும்…

– சஹானா (நாடகம்), முதல் பதிப்பு: ஜூலை 2015, வெளியீட்டாளர்: எஸ்.மதுரகவி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *