கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 2,019 
 
 

(2015ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-4 | காட்சி 5-8 | காட்சி 9-12

ஐந்தாம் காட்சி

(பதிப்பாளர் சந்திரன் வீடு. வசதியான வீட்டின் அறிகுறிகள் பின்னணியில் காணப்படுகின்றன. விலை உயர்ந்த சோபாக்களும், நாற்காலிகளும் காணப்படுகின்றன. இரவு நேரம் சுவர்க்கடிகாரம் மணி எட்டைக் காட்டுகிறது. வேட்டி சட்டை அணிந்த கனத்த சரீரம் கொண்ட நடுத்தர வயது உள்ளவர் இப்படியும், அப்படியும் நடந்து கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து சந்திரனின் மனைவி கையில் காபி கோப்பையுடன் வருகிறாள்.)

வசந்தி : என்ன குட்டி போட்ட போட்ட பூனை மாதிரி உலாத்திக்கிட்டு இருக்கே… ஒரு இடத்துல உட்காரு. இந்தா காபிய குடி. நில்லுப்பா. ராஜேஷ் நில்லு.

ராஜேஷ் : (நிற்கிறார்) என்ன அக்கா… இவ்வளவு பிரச்சினைக்கு நடுவுலயும் நீ சாதாரணமா இருக்கியே.. எப்படி? வசந்தி : அதுக்காக… என்ன செய்ய முடியும்? உம்முன்னா இருக்க முடியும் பீமா சாரி ராஜேஷ்.

(சுந்தர் மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறான்.)

சுந்தர் : மாமாவை பீமான்னுதான் கூப்பிடுவியா அம்மா. ராஜேஷ் : ஆமாண்டா. மாமாவை எப்படி கூப்பிடு வாங்கன்னு தெரிஞ்சுக்கறதுதான் இப்ப முக்கியமா?

சுந்தர் : மாமா, நீங்க வந்தததாலதான் இந்த வீட்ல கலகலப்பு எட்டிப் பார்க்குது. கொஞ்ச நாள் இங்கேயே இருங்க. எங்க வீட்ல தொலைஞ்சு போன சந்தோஷத்தை ஒங்களாலதான் கொடுக்க முடியும்.

வசந்தி : ஆமாம் பீமா… சாரி. கொஞ்ச நாள் இங்க தங்கு. இந்தா காபிய குடு.

(ராஜேஷ் காபியை வாங்கிப் பருகுகிறார்)

ராஜேஷ் : இவ்வளவு நடந்திருக்கு. எனக்கு சொல்லவே இல்லே. இந்த சிகாமணி எப்படி இருக்காரு? திருந்திட்டாரா…?

சுந்தர் : நான் திருந்திட்டேன் மாமா. என் ஃப்ரெண்டோட அட்வர்டைசிங் ஏஜென்சியிலே ஒர்க் பண்றேன். அவனுக்கு பொறுப்பான ஒரு ஆள் தேவைப்பட்டது. நீ வர்றியான்னு கேட்டான். ஒத்துக்கிட்டேன்.

வசந்தி : ரெண்டு வாரமா வேலைக்குப் பொறுப்பா போய்க்கிட்டு இருக்கான் பீமா…

ராஜேஷ் : பீமான்னு கூப்பிடாமல் உன்னால பேச முடியாதா? பொறுப்பான ஆள் நீயா…? நம்ப முடியலயேப்பா.

சுந்தர் : சந்தேகப்படாதீங்க மாமா. இனிமேல் அப்பா, அம்மாவுக்கு என்னால மனக்கஷ்டம் வராது. நான் வாழ்க்கையில் முன்னேறிக் காமிக்கிறேன்.

ராஜேஷ் : இந்த மாற்றம் நிலைச்சு இருந்தா சந்தோஷம்தான். சரி. வீணாவை எப்படி சகஜ நிலைமைக்கு கொண்டு வரப் போறோம்..?

வசந்தி : அதுக்குத்தான் இங்க உன்னை வரவழைச்சேன். உன் மனைவி எப்படி அனுப்பி வைச்சான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு…

ராஜேஷ் : இப்ப எதுக்கு அவளை இழுக்கறே… சரி. வீணாவை வீட்லய அடைச்சு வெச்சிருக்கீங்க. நான் வெளியே அழைச்சுகிட்டுப் போறேன். ஏண்டா… நீயாவது தங்கச்சிய ஜாக்கிரதையாப் பார்த்துக்க வேணாமா…?

வசந்தி : அவனே வேற உலகத்தில இருந்தான். இப்பத்தான் இங்க இறங்கி வந்திருக்கான்.

சுந்தர் : அம்மா..

வசந்தி : சரி… பழசை எல்லாம் கிளறலை. மாமனும் மருமகனும் சேர்ந்து வீணாவை நல்ல நிலைமைக்குக் கொண்டு வாங்க. அது போதும் எனக்கு.

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து சந்திரன் கையில் அலுவலகப் பையுடன் வருகிறார்)

சந்திரன் : வாய்யா…சௌக்கியமா…?

ராஜேஷ் : சௌக்கியம்தான் மாமா… நீங்க சௌக்கியமா? (சந்திரன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் மேடையின் நடுப்பக்க வழியாக வேகமாகச் செல்கிறார். உள்ளே சென்று வசந்தி என்று குரல் கொடுக்கிறார். வசந்தி வரேன் என்றபடியே அந்த வழியாக செல்கிறாள்.)

ராஜேஷ் : ஏம்பா… பையன் எப்படி இருக்கான்? பாஸ் பண்ணிட்டானா என்ன. மார்க்ன்னு ஒங்க அப்பா எதுவும் கேட்கல பாரு. விர்னு போயிட்டாரு. குணம் மாறவே இல்ல…

சுந்தர் : நீங்க வேற… வருண் பரீட்சையில வாங்கின மார்க் பத்தி நீங்க சொல்லி இருந்தா.. அது என்ன பெரிய விஷயம்… இப்ப எல்லாம் மார்க்கை அள்ளிப் போடறாங்களேன்னு சொல்லி இருப்பாரு. ஒங்க முகம் வாடிப் போயிருக்கும்.

ராஜேஷ் : நீ சொல்றதும் சரிதான். ஒங்க அத்தை சொல்லி அனுப்பினா. அவர்கிட்ட வாயைக் கொடுக்காதீங்கன்னு.

(இளம்பெண் வீணா மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள்.)

வீணா : மாமா எப்ப வந்தீங்க மாமா… (கை குலுக்குகிறாள்)

ராஜேஷ் : இப்பத்தான் வந்தேன் கண்ணு. சௌக்கியமா இருக்கியா…?

வீணா : அப்பா.. இந்த வீட்ல என்கிட்ட பேசறதுக்கு வந்த ஒரே ஆள் நீதான் மாமா. இவங்க மூணு பேரும் உம்மணா மூஞ்சிங்க… அம்மாவுக்கு விதம்விதமா சமைக்கணும். அப்பாவுக்கு பரிமாறணும். அப்பாவுக்கு பிசினெஸ் பிசினெஸ்னு பறக்கணும். இவனுக்கு… அதை நான் எப்படி சொல்வேன். எனக்கு என்னவோ ஆயிடுச்சுன்னு ரூம்ல அடைச்சு வைக்கறாங்க. நீதான் இவங்கள ஒரு பிடி பிடிக்கணும். என் வீணாவை ஏன் இப்படி கொடுமைப்படுத்தறீங்கன்னு கேட்கணும்.. விளாசு விளாசணும்.

ராஜேஷ் : (குரல் தழுதழுக்க) கண்டிப்பா கேட்கறேன்.. என் கண்ணு.

வீணா : மாமான்னா மாமாதான். சும்மாவா சொல்றாங்க தமிழ் சினிமால… தாய்மாமன் தாய்க்குச் சமம்னு.

ராஜேஷ் : சரி. உன்னை ஏன் ரூம்லயே இருக்கச் சொல்றாங்க சொல்லு.

சுந்தர் : மாமா…

ராஜேஷ் : இருப்பா… கண்ணம்மா என்ன சொல்லுதுன்னு கேட்போம்.

வீணா : ஒண்ணும் இல்ல மாமா.. இந்த ஃபிளாட் மொட்டை மாடியில ஒரு காதல் ஜோடி சாயங்கால நேரத்துல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் அந்தப் பொண்ணுகிட்ட சொன்னேன். கல்யாணம் பண்ணிப்பானா இல்லையான்னு உறுதியாக தெரிஞ்சுகிட்டு ரொமான்ஸுக்கு இடம் கொடு. ஏமாந்து போகாதேன்னு சொன்னேன். அவன் வி.ஐ.பி.யோட பையனாம். நான் இப்படி பேசினதால பிரச்சினை ஆயிடுச்சுன்னு என்னை இப்படி ஜெயில்ல அடைச்சுட்டாங்க.

சுந்தர் : இந்த ஒரு சம்பவம் மட்டும் இல்லே மாமா. இதே மாதிரி ரோட்ல பார்த்த இளம் ஜோடிங்க கிட்டயும் வம்பு பேசியிருக்கா. அதனாலதான் அப்பா அம்மா வீட்லய அடைச்சு வைச்சிருக்காங்க.

ராஜேஷ் : சரிம்மா.. நடந்தது நடந்து போச்சு. என்கூட வா. நாம ஊரைச் சுத்திப் பார்ப்போம். நீ எங்கே போகணும்னு நெனக்கறயோ அங்கெல்லாம் போய்ட்டு வரலாம். நீ முதல்ல மாதிரி துறுதுறுன்னு இருக்கணும். தயாரா இரு. நாளைக்குப் போகலாம். இன்னொரு விஷயம்…

வீணா : சொல்லு மாமா…

ராஜேஷ் : நீ வேலைக்குப் போறத விட்டதுதான் தப்பாப் போச்சு. மறுபடியும் வேலைக்குப் போறதா இருந்தா சொல்லு. ஒங்க மேடம்கிட்ட நான் பேசறேன்…

வீணா : நான் போகத் தயாராத்தான் இருக்கேன். கிருஷ்ணவேணி மேம் கிட்ட என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லி வைச்சிருக்காங்களே… அங்க வேலை செய்யற படுபாவிங்க.

ராஜேஷ் : நான் அவங்களப் பாத்து பேசி தெளிவுப் படுத்தறேன். நான் பேசினப்புறம் நீ வேலைக்குப் போகாம இருந்தா என் மூஞ்சி தொங்கிப் போயிடும்.

வீணா : நீ பேசு மாமா. எனக்கு மாற்றம் தேவை. அவங்க கிட்ட பேச எனக்கு கூச்சமா இருக்கு.

ராஜேஷ் : சரிம்மா நல்லது. நான் பேசறேன். நீ போய் சாப்பிட்டுட்டுத் தூங்கு. குட் நைட்…

வீணா : குட் நைட் மாமா. இந்த வீட்ல குட் நைட் சொன்ன முதல் ஆள் நீதான்.

(வீணா மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறாள். ராஜேஷ் அவளையே பார்க்கிறார். சுந்தர் ராஜேஷைப் பார்க்கிறான்.)

ஆறாம் காட்சி

(பின்னணியில் ‘காபி ஷாப்’ அமைப்பு. மங்கலான வெளிச்சம். திரை இசைப்பாடல் சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடுவே ஒரு மேசை. அருகே உள்ள நாற்காலி யில் வெள்ளை ஜிப்பா, வேட்டி அணிந்த மெலிந்த தேகம் கொண்ட ஒருவர் அமர்ந்திருக்கிறார். பெரிய மனிதரின் கம்பீர தோரணை. வயது அறுபது வயதுக்கு மேல். ஆனால் தோற்றத்தில் தெரியவில்லை. மேடையின் இடப்பக்கத்திலிருந்து நாம் முன்பு சந்தித்த கடலூர் விசுவநாதன் வருகிறார்.)

விசு : வணக்கம் சார். பெரிய மனுஷரைக் காக்க வெச்சுட்டேன். மன்னிக்கணும். (அமர்கிறார்)

பெரியவர் : அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் இப்பத்தான் வந்தேன். என்ன வேணும்… ஆர்டர் பண்ணு.

விசு : நான் வந்தாலே அவங்க கொண்டு வந்துடுவாங்க. ஆர்.கே. சார் மாதிரி ஒரு எடிட்டர், பப்ளிஷர் என்னை அவசரமாப் பார்க்கணும்னு சொன்ன உடனே எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன விஷயம் சார்? ஒங்க கதம்பம் வார இதழுக்கு என்னை ஆசிரியரா ஆக்கப் போறீங்களா சார்…

ஆர்.கே. : இருப்பா… அவசரப்படாதே.

விசு : கோல்டு காபி வரட்டும். நிதானமாவே பேசலாம். சொல்லுங்க என்ன விஷயம்?

ஆர்.கே. : உன்னை என் பத்திரிகைக்கு கூப்பிட்டா நீ வரவா போறே.. நீதான் வட இந்திய கம்பெனியோட பத்திரிகையில ராஜா மாதிரி இருக்கே…

விசு அப்பா… நான் ராஜான்னா… ஒங்கள சக்கர வர்த்தின்னுதான் சொல்லணும்.. இந்தாங்க. கோல்டு காபி வந்திடுச்சு.

ஆர்.கே. : என்னோட கதம்பம் பத்திரிகையில சஹானான்னு எழுதிகிட்டு வந்தாங்க தெரியுமா?

விசு : அந்த ‘காலம்’ ரொம்ப பாப்புலர் ஆச்சே. பிரின்ட் மீடியம் விழுந்துட்டதுன்னு சொல்ப்படற இந்தக் காலத்துல சஹானா என்ன எழுதியிருக்காங்கன்னு ஜனங்க விரும்பி வாசிக்கறாங்க. ஃபேஸ்புக்ல கூட சஹானா மாதிரி கருத்து சொல்லாதேன்னு கமென்ட் எழுதறாங்க.

ஆர்.கே. : அந்த சஹானா…

விசு : நீங்க தானா?

ஆர்.கே. : என்னைப் பேச விடுப்பா.

விசு : மன்னிக்கணும். பேசுங்க.

ஆர்.கே. : சஹானாங்கறது ஓர் ஆள் இல்ல. மூணு யங் கேர்ல்ஸ். சஞ்சனா, ஹாசினி, நாகலட்சுமி.

என் டாட்டர் மூலம் அறிமுகம் ஆனவங்க. மூணு பேரும் சேர்ந்து சஹானாங்கற பேர்ல எழுதறேன்னு சொன்னாங்க. வாராவாரம் பல விஷயங்களைப் பத்தி எழுதினாங்க. நீ சொன்ன மாதிரி வாசகர்கள் கிட்ட வரவேற்பு இருந்தததால் ரெகுலர் காலமா அவங்களுக்கு ரெண்டு பக்கம் கொடுத்தேன்.

விசு : ரெண்டு பேர் சேர்ந்து எழுதுவது தெரியும். சுந்தர் பாலா – சுபான்ற பேர்ல எழுதறாங்க. இப்ப தமிழ் சினிமால தூள் கிளப்பறாங்க. சிட்டிங்கற முதுபெரும் எழுத்தாளர், தி.ஜா., சிவபாதசுந்தரம், பெ.சு. மணி, கு.ப.ரா. கூட எல்லாம் ஜோடி சேர்ந்து பல ஆழமான ஆராய்ச்சி நூல்கள் எழுதி இருக்காரு. மூணு பேரு சேர்ந்து எழுதறது ஆச்சர்யம்தான் சார்.

ஆர்.கே. : உன் விஷய ஞானத்தை வெளிப்படுத்தறியா?

விசு : சாரி… சொல்லுங்க.

ஆர்.கே. : என்னோட எடிட்டோரியல் டீம்ல இருக்கறவங் களுக்கு கூட சஹானா யார்னு தெரியாது. அவங்க நூறு வாரம் எழுதி முடிச்சதும்… அதை புத்தகமாக வெளியிட்டு அவங்கள அந்த மேடையில அறிமுகப்படுத்தலாம்னு இருந்தேன். என்கனவுல மண்ணைப் போட்டுட்டாங்க.

விசு : என்ன ஆச்சு? எழுதப் போறதுல்லன்னு சபதம் போட்டுட்டாங்களா? சரி, நான் குறுக்கீடு செய்யல. சொல்லுங்க.

ஆர்.கே. : உன்னை ஒன் ஒய்ஃப் எப்படித்தான் சமாளிக்கிறாளோ… அந்த மூணுபேரும் பொறுப்பில்லாம தொடர்பை துண்டிச்சுகிட்டாங்க. மொபைல் நம்பரை மாத்திட்டாங்க. மெயில் பண்ணா ரெஸ்பாண்ட் பண்றது இல்லே. அவங்க தங்கி இருந்த லேடீஸ் ஹாஸ்டல்ல போய் பார்க்கச் சொல்லி ஆள் அனுப்பினா… காலி பண்ணிக்கிட்டு போய்ட்டாங்கன்னு சொல்றாங்க.

விசு : ஒங்க டாட்டர் அறிமுகப்படுத்தினவங்கதானே…?

ஆர்.கே. : என் பொண்ணுக்கு போன வாரம் கல்யாணம் நடந்துச்சு. ஹனிமூன் போயிருக்கா. சாரி, உன்னைக் கூப்பிடலை. விட்டுப் போச்சு. அவளை எப்படி தொந்தரவு செய்ய முடியும்? என்கிட்ட இருக்கிற கான்டாக்ட் நம்பர்தானே அவகிட்டயும் இருக்கும்.

விசு : அட… ஆமாம். எனக்குத் தெரிஞ்ச மாரின்னு ஒரு துப்பறியும் நிபுணர் இருக்காரு. அவரை அழைச்சுகிட்டு வரவா?

ஆர்.கே. : உன்னையே என்னால தாங்க முடியல. அவர் வேறயா? அவங்கள வலை வீசித் தேடற வேலை எல்லாம் நாம் பார்க்க முடியாது. இந்த வாரம் நான் இஷ்யு குளோஸ் பண்ணனும். சஹானா ஸ்டைல்லேயே எழுதிக் கொடுக்க ஒரு ரைட்டர் வேணும். அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். நீயே எழுத முடியும்னா எழுதிக் கொடு.

விசு : எடிட்டர் எழுதக்கூடாதுன்னு நீங்க தானே சொல்வீங்க. எடிட்டர் வேலை பார்க்க ஆரம்பிச்சப்புறம் நான் அதிகமாக எழுதறது இல்ல. மேலும் கம்பெனி ரூல்ஸ் பிரகாரம் நான் இன்னொரு பத்திரிகைக்கு எழுதக் கூடாது சார். ஆர்.கே. : உன் முதலாளி கொடுத்து வைச்சவன். விசுவாசத்தின் அடையாளம் விசுவநாதன்.

விசு : எனக்குத்தான் சரியா படி கொடுக்க மாட்டேங்கறாரு. சரி. அது போகட்டும். ஒங்களுக்கு அருமையான ஒரு எழுத்தாளர் தர்றேன். நீங்க சொல்ற ப்ரீப்க்கு ஏத்தா மாதிரி எழுதிக் கொடுப்பாரு. நீங்க புள்ளி வெச்சா அவர் கோலம் போடுவாரு.

ஆர்.கே. : ரொம்ப தூக்கி வெச்சுப் பேசற…

விசு : என்னால அவரைத் தூக்க முடியாது… வெயிட் ஜாஸ்தி.

ஆர்.கே. : போதும்பா. கடிக்காதே. இந்தா என் கார்டு. நீயே அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லிடு. மீட் பண்றது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். எழுதி என்னோட பர்சனல் மெயில் ஐ.டிக்கு அனுப்பச் சொல்லு.

விசு : என்ன சார்… யாரு என்ன பேரு… ஊரு எதுவும் கேட்காம தட்டை மாத்திக்கறோம். உடனே கல்யாணம்னு சொல்றீங்க.

ஆர்.கே. : எனக்கு உன் மேல அந்த அளவுக்கு நம்பிக்கைங்கறது புரியலையா… வரட்டுமா.

(எழுந்து நிற்கிறார்)

விசு : சார்… சார்…

ஆர்.கே : என்னப்பா… பில் பே பண்ணணும் இல்லே. சாரி. இந்தா ஐநூறு ரூபாய் போதுமா? எனக்கு இன்னொரு முக்கியமான மீட்டிங் இருக்கு. வரேன். தேங்க்யூ.

(மேடையின் இடப்பக்கத்தை நோக்கி விரைகிறார்)

(சில நிமிடங்கள் விளக்குகள் அணைந்து பின்னர் மீண்டும் ஒளிர்கின்றன)

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து ராஜமாணிக்கம் வருகிறார். விசுவநாதனின் அருகில் வந்து நிற்கிறார்.)

விசு : வாங்க அண்ணே. என்ன அண்ணே கையில… ரா.மா. : கதம்பம் பத்திரிகை

விசு : சஹானா பேஜ் படிக்கிறீங்களா…

ரா.மா. : தொடர்ந்து படிக்கறேனே… நல்லா எழுதறாங்க அந்த அம்மா…

விசு : ஒரு அம்மா இல்ல…

ரா.மா. : என்ன சொல்றீங்க…

விசு : அது வந்து என்னஅண்ணே நமக்குள்ள மரியாதை?

ரா.மா : என்ன இருந்தாலும் நீங்க எனக்கு பாஸ்… சரி… ஏன் இங்கு வரச் சொன்னீங்க?

விசு : கதம்பம் எடிட்டர் பப்ளிஷர் எனக்கு ரொம்ப வேண்டியவரு.

ரா.மா : நீங்களும் எடிட்டர். அவரும் எடிட்டர்.

விசு : அவர் கோடீஸ்வரர். முதலாளி. நான் வேலைக்கு அதை இருக்கறவன். விடுங்க. சஹானா பக்கம் எழுதறவங்களுக்கு உடம்பு முடியலையாம். மேஜர் ஆபரேஷன் போலிருக்கு. ஒரு ரெண்டு வாரம் அந்த பக்கம் அதே பாணியில நீங்க எழுதிக் கொடுங்க… இந்தாங்க … இதுதான் அவரோட கார்டு. நீங்க எழுதி, அவருக்கு மெயில் பண்ணிடுங்க. கோல்டு காபி குடிக்கறீங்களா…

ரா.மா. : நான் இவ்வளவு காஸ்ட்லி காபி குடிக்க மாட்டேன். என்னங்க சொல்றீங்க… நீங்க சொல்றது… கோஸ்ட் ரைட்டிங். சர்வ சாதாரணமாக சொல்றீங்க.

விசு : கஸ்ட் ரைட்டிங் கோஸ்ட் ரைட்டிங் எதுவாக இருந்தால் என்ன? வாய்ப்பு வரும்போது கவ்விப் பிடிச்சுக்கங்க. கவ்வியதை விடேல்னு பாரதி சொல்லி இருக்காரு. நான் நேர்மை தவறாதவன்னு வசனம் பேசாதீங்க. உங்களுக்கு வர வேண்டிய அமௌண்ட் வந்துடும். அவரையும் அறிமுகப்படுத்தி வைக்கறேன். நீங்க எங்கேயோ போகப் போறீங்க.

ரா.மா. : இல்ல விசு. அது வந்து….

விசு : அண்ணே… சொன்னா கேளுங்க. சந்தர்ப்பம் உங்க காலிங் பெல்ல அழுத்தும்போது, எழுந்து வந்து கதவைத் திறக்காம தூங்கிகிட்டு இருக்காதீங்க. இன்னிக்கே எழுதி அனுப்பிடுங்க. ஒங்களால கம்போஸ் பண்ண முடியாது இல்ல. எழுதி ஸ்கேன் பண்ணி அனுப்புங்க. என்னோட பி.ஏ. சுசீலாகிட்ட கொடுங்க. அவங்க ஸ்கேன் பண்ணி மெயில்ல அனுப்பிடுவாங்க.

ரா.மா : விசு நான்…

விசு : நம்ம பப்ளிஷர் அக்பர்ஜி டெல்லிலேந்து வர்றாரு. நான் ஏர்போர்ட் போய் ரிசீவ் பண்ணணும். வாங்க. ஒங்கள வழில ட்ராப் பண்றேன். நீங்க எழுதறீங்க… அனுப்பறீங்க. நீங்க யாருன்னு காட்றீங்க. வாங்க.

(இருவரும் மேடையின் இடப்பக்கத்தை நோக்கிச் செல்கிறார்கள்)

(திரை)

ஏழாம் காட்சி

(சதாசிவம் நாயரின் வீடு. மாலை நேரம் சதாசிவம் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து ஜலஜா வருகிறாள்.)

ஜலஜா : காலைல மனோரமை. இப்ப வனிதா…. எதுக்கு காசை இப்படி வீணடிக்கறீங்க சேட்டா.

சதாசிவம் : இதை மட்டும் நீ கேரளத்துல சொல்லியிருந்தா உன்னை மரத்துல கட்டி வைச்சுருப்பாங்க. இரவலாப் படிக்காம பத்திரிகையை காசு கொடுத்து வாங்கிப் படிக்கறவங்க மலையாளிங்க மட்டும்தான். தெரியுமா?

ஜலஜா : தமிழ்நாட்ல ஆந்திரத்துல கன்னட தேசத்துல எல்லாம் ஜனங்க ஓசியில படிக்கறீங்களா… அப்புறம் எப்படி இத்தனை பத்திரிகை அச்சடிச்சு விற்கறாங்க சொல்லுங்க.

ச.சி. : நல்ல கேள்வி நீ கேட்ட கேள்வி. நான் வாசிச்சு பொழுதுபோக்கறேன். நீ சாயங்கால நேரத்துல வீட்ல விளக்கு கூட ஏத்தாம அரட்டை அடிச்சுட்டு வரே… ஆமாம். என்ன பேசிட்டு இருந்தே?

ஜலஜா : வம்பு பேசினோம்னு குத்தம் சொல்றீங்க. என்ன வம்புன்னு தெரிஞ்சுக்க அலையறீங்க…

ச.சி. : இல்ல.. அக்கம்பக்கம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும் இல்ல. லீலா சேச்சி என்ன சொன்னாங்க? ஜலஜா : சண்டே வந்தாதான் அவங்கள பார்க்க முடியுது. பேசிகிட்டு இருந்தேன்.

ச.சி. : அதான் என்ன ஸ்பெஷல் நியுஸ்னு கேட்கறேன்.

ஜலஜா : நச்சரிக்கறீங்க. சொல்றேன். பக்கத்துல இருக்கற விசாலாட்சி மேடம் நடத்தற லேடீஸ் ஹாஸ்டல்ல இருந்த மூணு பொண்ணுங்களையும் கேங்கேங்ஆக ஆளுங்க வந்து தொல்லை கொடுத்துகிட்டு இருந்தாங்களாம். விசாலாட்சி மேடம் போலீஸ்ல சொல்லி ஆக்ஷன் எடுக்கறேன்னு சொன்னாங்களாம். ஆனா அவங்க அதெல்லாம் வேணாம்னு திடுதிடுப்னு காலி பண்ணிகிட்டுப் போய்ட்டாங்களாம். அந்த மூணு பேரோட பேரு… வந்து…

ச.சி. : சஞ்சனா, ஹாசினி, நாகலட்சுமி…

ஜலஜா : தாத்தா பாட்டி பேர் கூட தெரியாது. இந்தப் பேர் எல்லாம் எப்படி கரெக்ட்டா சொல்றீங்க.

ச.சி. : இந்த தெருவுல ஆம்பிளைங்க வட்டாரத்துலயும் அதைப் பத்தித்தான் பேச்சு. அந்த மூணு பொண்ணுங்களும் அழகா இருப்பாங்களா…?

(ஜலஜா பத்திரிகையைப் பிடுங்கி சதாசிவத்தின் தலையில் அடிக்கிறாள்)

ஜலஜா : வயசானாலும் அலையற புத்தி அடங்காது போலிருக்கு..

ச.சி. : தலைல அடிக்கக் கூடாது தெரியுமா?

(ஜலஜா மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறாள்)

(மேடையின் வலப்பக்கத்தில் ஓர் இளைஞர் நின்று கொண்டு சார்…. சார் என்று குரல் கொடுக்கிறார்.)

ச.சி. : யாரு… வாங்க. உள்ளே வாங்க.

(இளைஞர் உள்ளே வருகிறார். நின்று கொண்டே பேசுகிறார்) இளைஞன் : வணக்கம் சார்.

ச.சி. : வணக்கம். நீங்க யாரு?

இளைஞன் : நான் கொல்லம் ரவி.

ச.சி. : உட்காருங்க. என்ன விஷயம்? மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கா?

ரவி : (நாற்காலியில் அமர்கிறார்) நம்ம இளவேனில் தொலைக்காட்சியில வர்ற மயிலே மயிலே சீரியல்… பார்க்கறீங்களா… ? அந்த டைரக்டர் நான்தான்….

ச.சி. : முன்னெல்லாம் சினிமால எப்பவாவதுதான் பொம்பளங்கள வில்லியா காட்டுவாங்க. நீங்க எல்லாம் எல்லா சீரியல்லயும் எப்பவும் பொம்பளங்கள பொல்லாதவங்களா காட்றீங்களே… ஏன்?

ரவி : தியாகத் திருவிளக்குகளாகவும் பெண்களை நாங்க காட்டறோமே… அதெல்லாம் ஒங்க கண்களுக்குத் தெரியறது இல்லையா?

ச.சி. : சரி. இங்கே விவாத அரங்கம் வேணாம். சொல்லுங்க.. சார் மலையாளி அல்லே…

ரவி : இல்ல…

ச.சி. : அப்ப கொல்லம் ரவின்னு பேர் வெச்சிருக்கீங்க…

ரவி : முன்பெல்லாம் தலைப்பிரசவத்துக்கு பிறந்த வீட்டுக்குப் போவாங்க… தாத்தா பாட்டி இல்லாததால எங்க அம்மா கொல்லத்தில இருந்த எங்க மாமா வீட்டுக்குப் போனாங்க. அங்க தான் நான் பிறந்தேன். அதனால என் பேரை கொல்லம் ரவின்னு வெச்சுகிட்டேன்.

ச.சி. : பரவாயில்லையே. உங்க சுயசரிதையில் இதை மறக்காமல் எழுதுங்க. நானும் இனிமேல் என் பேரை கோழிக்கோடு சதாசிவம்னு மாத்திக்கறேன். சொல்லுங்க. பெரிய ஆளு நீங்க. என்னை மாதிரி சாதாரண ஆளத் தேடி வந்திருக்கீங்க… நான் என்ன செய்யணும் சொல்லுங்க.

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து ஜலஜா காபிக் கோப்பையுடன் வருகிறாள்.)

ச.சி. : இவங்க என் மனைவி…

ரவி : வணக்கம்.

ஜலஜா : வணக்கம். காபி எடுத்துக்கங்க.

ரவி : நன்றி.

ச.சி. : சார் பேர் தெரியுமா? கொல்லம் ரவி… நம்ப சேனல்ல சீரியல் டைரக்டர்.

ஜலஜா : நீங்க பேசினதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். ச.சி. : எங்க இருந்தாலும் என் மனைவிக்கு நான் பேசுவது கேட்டுடும். சரி சார் வந்த விஷயம்…

ரவி : இப்ப ஒரு லைட் சப்ஜெக்ட்ல சீரியல் பண்ண பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஒரேவிதமான கேரக்டர்கள். ஆனா வாரா வாரம் வெவ்வேறு சூழல் சம்பவம்… ஒரு சோஷியல் மெஸேஜ். (காபி கோப்பையை கீழே வைக்கிறார்)

ச.சி. : எஸ்.வி. சேகர் சார் தூர்தர்ஷன்ல் முன்னே வண்ணக்கோலங்கள், நம் குடும்பம்னு பண்ணாரே அது மாதிரியா?

ரவி : அது மாதிரிதான். இன்றைய காலகட்டத்துக்கு ஏத்தாமாதிரி பிளான் பண்ணப் போறோம்.

ச.சி. : நான் நடிக்கணுமா அதுல… நான் தயார். தலைல விக் வெச்சுக்கணும்.

ரவி : இல்ல சார். என்னோட ரைட்டர் அர்ஜுனுக்கு பிரம்மாண்டமான ஒரு சினிமாவுல எழுதறதுக்கும், அசோசியேட்டா ஒர்க் பண்றதுக்கும் சான்ஸ் கிடைச்சுடுச்சு.

ச.சி. : எனக்கு கதை வசனம் எல்லாம் எழுத வராதே….

ரவி : ஒங்க நண்பர் ராஜமாணிக்கம் இருக்காராமே. அவரு நீங்க சொன்னா கேட்பாருன்னு கேள்விப்பட்டேன்.

ச.சி. : இப்படி எல்லாம் வேற செய்தி பரவிக் கிடக்குதா…

ஜலஜா.. பார்த்தியா என் பெருமைய.

ஜலஜா : ஆமாம் ஆமாம். ரொம்பத்தான் பெருமை.

ரவி : நீங்க அவரோட எனக்கு மீட்டிங் ஏற்பாடு பண்ணிக் கொடுக்கணும்.

ச.சி. : சரி. ஒங்க விசிட்டிங் கார்டு கொடுங்க. அவர்கிட்ட பேசிட்டு கூப்பிடறேன். ஆனா… அவரை வற்புறுத்த முடியாது. அவருக்கு நீங்க சொல்ற புராஜெக்ட் பிடிச்சிருந்தா எழுதிக் கொடுப்பாரு.

ரவி : தாங்க்ஸ் சார். நான் வரேன். வரேன் மேம்.

ஜலஜா : வாங்க.

(ரவி மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறான்)

ஜலஜா : பார்த்தீங்களா.. நம்ம வீட்ல அவரை குடி வெச்சீங்க. அவரு காட்டுல மழை கொட்டுது. வாய்ப்புகள் தேடித் தேடி வருது அவருக்கு. நம்மள கவனிக்கச் சொல்லுங்க.

ச.சி. : வருமானத்தில பாதியக் குடுத்திடச் சொல்லலாமா? பாவம் அவரே இத்தனை வருஷமா பணத்துக்குப் பின்னால அலையாம விட்டாரு. இப்பத்தான் அவரைத் தேடி பணம் வருது.

ஜலஜா : நாமளும் கைக்கும் வாய்க்கும்தானே இருக்கோம். உதவி கேட்கலாமேன்னு சொன்னேன்.

ச.சி. : அவர் கேட்காமலே செய்வார் …பாரு.

ஜலஜா : நீங்க குசேலரும் இல்ல கேட்காமலே கொடுக்க அவரு கிருஷ்ண பரமாத்மாவும் இல்ல.

ச.சி. : பணம் நட்பைப் பிரிச்சிடும். உதவி செஞ்சதுக்கு பதிலாக பண உதவி கேட்கறது முறை இல்ல..

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து இளம்பெண் ஒருத்தி வருகிறாள்.)

இளம்பெண் : (முகமலர்ச்சியுடன்) சேச்சி…

ஜலஜா : ஷோபை வா வா.

ஷோபா : நமஸ்காரம் அங்கிள்.

ச.சி. : நமஸ்காரம். குட்டி யாருன்னு தெரியலயே… ஜலஜா : என்னோட சொந்தக்காரங்கள மறந்துடுவீங்களே. நம்ம கல்யாணத்தில் பட்டுப் பாவாடை உடுத்திட்டு ஓடிக்கிட்டு இருந்த சின்னப் பொண்ணு இவதான் ஷோபை.

ச.சி. : அப்படியா…?

ஜலஜா : அப்படியாவாம்.. ஷோபை… நீ லக்கேஜ்லாம் வெச்சிட்டுப் போய் குளி. காபி, டிபன் தயார் பண்றேன். ஷோபா : சரி சேச்சி. தாங்க்ஸ் அங்கிள்.

(அவள் துள்ளல் நடையோடு உள்ளே போவதை சதாசிவம் பார்த்தபடியே நிற்கிறார்)

ஜலஜா : தப்பான பார்வை பார்த்தீங்க ரெண்டு கண்ணையும் புடுங்கிடுவேன். அப்புறம் கோல் வெச்சுகிட்டு நடக்கணும்.

ச.சி. : நான் அவளுடைய இளமைத் துள்ளலை ரசித்தேன். நீதான் தப்பா வேறுவிதமாக சிந்திக்கறே. அவளை எதுக்கு வரவழைச்சு இருக்கே?

ஜலஜா : எல்லா வேலையும் என் தலைமேல. வீட்லயும், கடையிலயும். நீங்க உட்கார்ந்து உட்கார்ந்து நாற்காலியத் தேய்க்கறீங்க. எனக்கு சகாயமா இருக்கட்டும்னு வரவழைச்சேன். அவங்க கஷ்டப்படற குடும்பம். இன்னொரு எண்ணம் இருக்கு. ஐயப்பன் இஷ்டப்பட்டா நடக்கும்.

ச.சி. : கல்யாணமே வேண்டாம்னு இருக்கற தம்பி மதுசூதனன் வளைப் பார்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லணும்.

ஜலஜா : அதே அதே…

ச.சி. : உன் திட்டம் பலிக்குதான்னு பார்ப்போம். சரி. நான் ராஜமாணிக்கம் சாரைப் பார்த்துட்டு வர்றேன்.

(சதாசிவம் மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறார்.)

(திரை)

எட்டாம் காட்சி

(பின்னணியில் வசதியான நடுத்தரக் குடும்பத்தின் தோற்றம். மாலை நேரம். சிறிய டைனிங் மேசை அருகே நாற்காலிகளில் ஓர் இளம் பெண்ணும், வேட்டி சட்டை அணிந்த வாட்டசாட்டமான மனிதரும் அமர்ந்திருக்கின்றனர். மேடையின் இடப்பக்கத்திலிருந்து நடுத்தர வயதுப் பெண்மணி, தட்டில் தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள். மேசையில் வைக்கிறாள். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்கிறாள்.)

இளம்பெண் : என்ன மிஸ்டர் புருஷோத்தமன்… நீங்க தானே கேட்டரிங் டிபார்ட்மெண்ட். இவங்க தேநீர் போட்டு கொண்டு வர்றாங்க.

பெண்மணி :என்னடி அப்பாவை பேர் சொல்லி கூப்பிடறே… கீதா.. கொழுப்பா?

கீதா : ஏன் இப்படி ரியாக்ட் பண்றீங்க டாக்டர் நர்மதா. நீங்க என்ன அந்தக் காலத்துப் பெண்மணியைப் போல் புருஷன் பேர் சொல்ல மாட்டீங்களா? இல்ல பசங்க பேர் சொல்றதைப் பொறுத்துக்க மாட்டீங்களா?

நர்மதா : சும்மா இருடி. இன்னிக்குத்தான் எனக்கு டைம் கிடைச்சிருக்கு. ஒங்க ரெண்டு பேர்கிட்டயும் பேச வேண்டிய விஷயங்களைப் பேசிடறேன்.

புருஷோ : சொல்லும்மா.. என்ன விஷயம்…

கீதா : அம்மா நீங்க சொல்றதுக்கு முன்னால நான் ஒரு விஷயம் சொல்லணும்.

நர்மதா : சரி. நீயே முதல்ல சொல்லு. இந்தா ரஸ்க்கைத் தோய்ச்சு சாப்பிடு.

கீதா : உன்னோட பரிவுக்கு நன்றி. ரஸ்க் எனக்குப் பிடிக்காது. காலேஜ்ல என்கூட படிக்கற பொண்ணுங்க எல்லாம் எங்க அப்பா எஞ்சினியர், எங்க அப்பா போலீஸ் ஆபீசர், கவர்ன்மெண்ட் ஆபீசர்ன்னு எல்லாம் சொல்றாங்க. நான் மட்டும் அப்பா என்ன செய்யறார்னு சொல்ல முடியல.

புருஷோ : கண்ணா… சேத்தன் பகத்ன்னு இண்டியன் இங்க்லீஷ் ரைட்டர். நான் ஹோம்மேக்கர். என் வைஃப் தான் வேலைக்குப் போறாங்கன்னு பேட்டி கொடுக்கறாரு. அவருக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே நான் ஹோம்மேக்கர் ஆனவன். ஒங்க அம்மா பிசியா மெடிக்கல் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தததால் ஒன்னையும் ஒங்க அண்ணனையும் வளர்க்கறதுக்காக நான் வேலைய விட்டேன். ஒங்கள வளர்த்து ஆளாக்கினேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன?

கீதா : இதெல்லாம் தெரியாதா டாடி? ஸ்கூல்ல படிக்கும்போது ஒண்ணும் தெரியல. காலேஜ்ல மத்தவங்க எல்லாம் என் அப்பா அப்படி என் அப்பா இப்படின்னு தம்பட்டம் அடிச்சுக்கும்போது நான் வாயடைச்சு நிற்க வேண்டிய நிலைமை.

நர்மதா : ஏண்டி.. அப்பா கல்வியாளர்னு சொல்ல வேண்டியதுதானே… அதான் நம்ம ஸ்கூல் இருக்கு. அறக்கட்டளை இருக்கு. அதெல்லாம் பார்த்துக்கறார்னு சொல்ல வேண்டியதுதான்.

கீதா : ஆமாம். பள்ளிக்கூடத்தை இவர் எங்கே பார்த்துக்கறாரு? வீட்டுவேலையே சரியா இருக்கு. ராஜமாணிக்கம் அங்கிள் தான் இத்தனை வருஷமா நல்லா பார்த்துகிட்டு இருந்தாரு. அறக்கட்டளை வேலையையும் அவர் இழுத்துப் போட்டுப் பார்த்துக்கிட்டாரு. இப்ப அவர் மெட்ராஸ் போய்ட்டாரு. ஸ்கூல் என்ன கதில இருக்கோ… அறக்கட்டளை வேலை எல்லாம் நடக்குதா இல்லையா யாருக்குத் தெரியும்?

நர்மதா : அப்பாவைக் குறை சொல்லலைன்னா தூக்கம் வராது உனக்கு.

புருஷோ : விடு. அவ சொல்றதும் உண்மைதானே.

நர்மதா : சரி. நீ சங்கடப்படாதே. எங்க அப்பா எஜுகேஷனலிஸ்ட் சொல்லிக்கோ.. தாத்தா ஆரம்பிச்ச ஸ்கூல் கைமாறாம இருக்கே அதுக்கு ராஜமாணிக்கம் அண்ணன்தான் காரணம். சொற்ப சம்பளத்துல இத்தனை வருஷமாக நல்லா பார்த்துக்கிட்டாரு.

கீதா : அப்ப அவரை எதுக்கு மெட்ராஸுக்கு அனுப்பி வைச்சிங்களாம்?

நர்மதா : நம்ம கிட்டேயே எவ்வளவு காலம் இருப்பாரு? அங்கே போனதும் அவரு விருப்பத்துக்கு ஏத்த வேலை கிடைச்சிருக்கு. இனிமேலாவது அவரு வாழ்க்கையில பொருளாதார முன்னேற்றம் ஏற்படட்டும்னுதான் அனுப்பி வைச்சேன். போனா அது மட்டும் இல்ல. அங்கே மனவேறுபாடால் பிரிஞ்சு போன மனைவியோட சேருவதற்கு வாய்ப்பு உண்டாகலாம்னு ஒரு எண்ணம்.

கீதா : ஸ்கூல எப்படி நடத்தப் போறீங்க? அறக்கட்டளை பணிகள் அங்கிள் விட்ட இடத்திலேயே இருக்கு… அப்பாவை நம்பாதீங்க… அவரு அதுக்கு எல்லாம் சரிபட மாட்டாரு.

புருஷோ : பெத்த பொண்ணு நல்லா சர்டிஃபிகேட் கொடுக்கறா பாரு.

நர்மதா : விடுங்க. அவ விளையாட்டாதானே பேசறா. சரி. ஒங்க கிட்ட பேசணும்னு சொன்னது நம்ம பள்ளிக்கூட நிர்வாகம், அறக்கட்டளை நிர்வாகம் பத்தித்தான்.

புருஷோ : நீயே மெடிக்கல் ப்ராக்டீஸுக்கு முழுக்கு போட்டுட்டு பார்த்துக்கப் போறியா?

கீதா : அப்படியாவது நிறைய நேரம் நீங்க வீட்ல இருப்பீங்க. ஒங்களோடு ரொமான்ஸ் பண்ணலாம்னு திட்டம் போடறாரு டாடி.

புருஷோ : கீதா…

கீதா : சும்மா கிண்டலுக்குப்பா. கோச்சுக்காதீங்க. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடேன்னு பாரதி பாட்டு.

நர்மதா : என்னைப் பேச விட மாட்டீங்க அப்பாவும் பொண்ணும்.

புருஷோ : சரி சொல்லு.

நர்மதா : நம்ம அவுட் ஹவுஸ்ல தங்க வைச்சிருக்கேனே…

கீதா : பெரியம்மா பொண்ணு அக்கா நாகலட்சுமி

நர்மதா : ஒன் அக்கா மட்டும் இல்ல. அவளோட சஞ்சனா, ஹாசினின்னு ரெண்டு பேரு வந்திருக்காங்க. மூணு பேரையும் அங்க தங்க வைச்சிருக்கேன்.

புருஷோ : நாகலட்சுமி நம்ம சொந்தக்காரப் பொண்ணு. மத்தவங்கள ஏன் இங்க தங்க அனுமதிச்சே…?

நர்மதா : நீங்க ஆட்சேபணை பண்ண மாட்டீங்கன்னு நெனச்சேன். அடைக்கலம்னு வந்திருக்காங்க.

கீதா : அடைக்கலம்னா சொல்றீங்க அம்மா…?

நர்மதா : ஆமாம்.

கீதா : நெனச்சேன். சென்னைப் பொண்ணுங்க இங்க வந்திருக்காங்களேன்னு. ஏதோ வில்லங்கம்னு நெனச்சேன்.

நர்மதா : சுருக்கமாக அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு சொல்லிடறேன். சஞ்சனா – அந்தப் பெண்ணுக்கு அவளோட டாப் பாஸ் பாலியல் தொந்தரவு கொடுக்கப் பார்த்திருக்கான். இவ இணங்கல. அதனால இவளுக்கும் திருமணம் ஆன இன்னொரு கலீக்குக்கும் கள்ளத்தொடர்புன்னு ஆபீஸ்ல வதந்தி பரப்பிட்டான். அந்த கலீக்கோட வைஃப் வரைக்கும் விஷயம் போனதால அவ தற்கொலை முயற்சி பண்ணிட்டாளாம். இவ ரிசைவன் பண்ணிட்டு வந்துட்டா. ஆனாலும் பழைய பாஸ் ரௌடிங்கள அனுப்பி தொந்தரவு கொடுத்திருக்கான். தற்கொலை முயற்சி பண்ணவ இன்னும் ஆஸ்பத்திரியில இருக்கா…

கீதா : அடுத்த பொண்ணு கதை என்ன?

நர்மதா : வம்பு கேட்கறதுல ஆர்வத்தைப் பாரு. ஹாசினி பெரிய தொழிலதிபரோட இரண்டாம் தாரத்துப் பொண்ணு. அம்மா இல்ல. அப்பா சமீபத்துல போய்ட்டாரு. அப்பா எழுதி வெச்சது எல்லாம் கொடுக்க முடியாது. கொடுக்கறதை வாங்கிகிட்டு வேற எதுவும் வேணாம்னு எழுதிக் கொடுன்னு முதல் தாரத்துப் பசங்க துரத்தறாங்க. கொலை மிரட்டல் விடறாங்க. உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை.

கீதா : சரி. அக்காவுக்கு என்ன பிரச்சினை? இத்தனை நாளா உன்னைப் பார்க்க வராதவ வந்திருக்கா…

நர்மதா : அம்மா இல்லாததுதான் பிரச்சினை. தேரோட போச்சு திருவிழா. தாயோட போச்சு சந்தோஷம்னு சொல்வாங்க. என் அக்கா இல்லாததால மாமாவைத் தட்டிக் கேட்க ஆள் இல்ல. அங்க லோக்கல்ல இருக்கற தாதாவோட பையனுக்குக் கட்டி வைக்கப் பார்க்கறாரு எங்க மாமா. போலீஸ் கிரிமினல் ரிகார்ட்ல அவன் பேரு இருக்கு. அப்பாவையும் சின்னம்மாவையும் விட்டு விட்டு லேடீஸ் ஹாஸ்டல்ல வந்து தங்கினா. எங்கே போனாலும் தாதாவோட பையன் ஆளுங்க அண்ணி அண்ணின்னு கூப்பிட்டு தொந்தரவு கொடுத்தாங்க.

கீதா : சரி. மூணு பேருக்கும் மூணு விதமான பிரச்சினை. நிர்வாகத்துக்கும் இவங்களுக்கும் என்ன தொடர்பு?

நர்மதா : இவங்க மூணு பேரும் சேர்ந்து நம்ம பள்ளிக்கூட நிர்வாகம், அறக்கட்டளைப் பணிகள் பார்த்துக்கறேங்கறாங்க. அடிப்படைத் தேவைகள் நிறைவேறினாலே போதும்னு சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?

கீதா : ராஜமாணிக்கம் மாதிரி ஒருத்தரு போயி மூணு பேரா கிடைச்சுட்டாங்கன்னு சந்தோஷப் படறீங்களா மம்மி?

நர்மதா : நீங்க என்ன நக்கலா சிரிக்கறீங்க?

கீதா : டாக்டர் மேம். அப்பா ஏன் சிரிக்கிறார்ன்னா… மெட்ராஸ்ல வேலை செஞ்சவங்க இந்த ஊர்ல பொருந்தி உட்காருவாங்களான்னு நெனச்சு சிரிக்கறாரு.

புருஷோ : அது மட்டும் இல்ல. கல்யாண வயசுல இருக்கற பொண்ணுங்க. மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு வருஷம் நம்ம கூட இருந்தாலே அதிகம்.

நர்மதா : கல்யாண வயசுல இருக்கறவங்க வாழ்க்கைப் பாதையில போயிடுவாங்கன்னு எனக்குத் தெரியாதா? நாகலட்சுமிக்கு உதவ வேண்டியது நம்ம ரெண்டு பேரோட கடமை. நாகலட்சுமிக்கு அப்பா இருந்தும் பிரயோசனமில்லை. மதத்தவங்களுக்கு அப்பா அம்மா இல்ல. அடைக்கலம்னு வந்திருக்காங்க. அவங்க இங்க இருக்கற வரைக்கும் நம்ம பள்ளிக்கூட நிர்வாகத்தையும், அறக்கட்டளை வேலைகளையும் அவங்ககிட்ட ஒப்படைப்போம். என்ன சொல்றீங்க?

கீதா : எனக்கு ஓகே. ஆனா… அப்பா சொன்ன மாதிரி ஒரு வருஷம்தான் நம்ம கூட இருப்பாங்க. அதுக்கு முன்னால கூட போயிடுவாங்க நம்மள விட்டு.

நர்மதா : அதுக்குள்ள ராஜமாணிக்கம் அண்ணன் திரும்ப வந்தாலும் வந்திடலாம்.

புருஷோ : ரொம்ப சுயநலம்தான். ராஜமாணிக்கம் முன்னேற்றம் பத்திப் பேசின வாய்.

நர்மதா : சரி. நீங்க என்ன சொல்றீங்க?

புருஷோ : அதான் கீதா ஓகே சொல்லிட்டாளே. பொறுப்பை ஒப்படைச்சுடு. பார்த்துப்போம்.

நர்மதா : நீங்கதான் அவங்களுக்கு என்னென்ன பணி பொறுப்புன்னு எடுத்துச் சொல்லணும்.

கீதா : அம்மா… ராஜமாணிக்கம் அங்கிள்கிட்ட ரெண்டு நாள் இங்க வரச் சொல்லுங்க. அவரு சொல்லுங்க. அவரு ட்ரெயினிங் கொடுக்கட்டும். அதுக்கப்புறம் அப்பா அவங்கள அப்பப்ப போய் கண்காணிச்சுக்கட்டும். என்ன அப்பா?

புருஷோ : நல்ல ஐடியா. அவர்கிட்ட நீ பேசறியா.. நான் பேசவா?

நர்மதா : நானே பேசிடறேன். சரி நான் போய் சமையல் வேலைய பார்க்கறேன்.

கீதா : இன்னிக்கு நைட்டு அம்மா சமையலா? அப்பா… இது என்ன சோதனை?

புருஷோ : கவலைப்படாதே. கீதா வயிறு சரி இல்லேன்னா அவங்களே மாத்திரை கொடுப்பாங்க.

(நர்மதா முறைக்கிறாள்)

கீதா : அப்பா… ஓடிடுங்க. அம்மா அடிக்கப் போறாங்க… (புருஷோத்தமன் எழுந்து செல்கிறார்)

(நர்மதா சிரிக்கிறாள்)

(திரை)

– தொடரும்…

– சஹானா (நாடகம்), முதல் பதிப்பு: ஜூலை 2015, வெளியீட்டாளர்: எஸ்.மதுரகவி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *