கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 1,792 
 
 

(2013ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-2 | காட்சி 3-4 | காட்சி 5-6

மூன்றாம் காட்சி

(விளக்குகள் ஒளிர்கின்றன. பின்னணியில் நிலவு. நிலா முற்றம். தளபதி நம்பியின் வீடு. நிலவைப் பார்த்துக் கொண்டே மதுபானம் அருந்திக் கொண்டிருக்கிறார் தளபதி நம்பி. ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் உயரமானவர். கட்டுடல் கொண்டவர். மீசை மழிக்கப்பட்ட முகம். முகத்தில் ஏதோ சோகக்களை. ஓர் இளம்பெண் அருகில் வந்து நிற்கிறாள்.) 

நம்பி : சொல்லுங்கள் மலர்விழி. என்ன வேண்டும்? 

மலர்விழி: தங்களைக் காண புலவர் உருத்திரங்கண்ணனார் வந்திருக்கிறார். இன்று பார்க்கிறீர்களா? அல்லது…

நம்பி: தேடி வந்தவரைத் திருப்பி அனுப்பக் கூடாது. காக்க வைக்கவும் கூடாது. அழைத்து வாருங்கள். நான் நிதானத்தில்தான் இருக்கிறேன். இங்கே மாடத்திற்கு அழைத்து வாருங்கள். ஓர் ஆசனத்தை எடுத்து வாருங்கள் அவருக்காக. 

மலர் விழி : அப்படியே செய்கிறேன். 

(சற்று நேரத்தில் மேடையின் வலப்பகத்திலிருந்து மலர்விழியும் உருத்திரங்கண்ணனாரும் வருகிறார்கள். மலர்விழி ஓர் ஆசனத்தை வைக்கிறாள். அதில் உருத்திரங் கண்ணனாரை அமரும்படி சைகை காட்டுகிறார் தளபதி.) 

உருத்திரங்கண்ணனார் : வணக்கம். மது வேளையில் வந்து தங்களைத் தொந்தரவு செய்கிறேனா? 

தளபதி : அதெல்லாம் ஒன்றுமில்லை. நீர் என் நண்பர் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்க உமக்கு உ உரிமை உண்டு. வாரும். 

உருத்திரங்கண்ணனார் : நன்றி. 

(மலர்விழி ஒரு குவளையைக் கொண்டு வந்து வைக்கிறாள்.) 

தளபதி : பருகுங்கள். மோர்தான். பசியாறி விட்டீர்களா? 

உருத்திரங்கண்ணனார் : முடிந்தது. தங்களுடன் பானம் பருகுவதால்… 

தளபதி: தங்களை யாரும் தவறாகப் பேசி விட மாட்டார்கள். இங்கே இந்த இளம் பெண்மணி மட்டும்தான் இருக்கிறார். அவர் வம்பு பேசும்பழக்கம் இல்லாதவர். 

உருத்திரங்கண்ணனார் : பெருமையாக இருக்கிறது. வயதில் இளைய பெண்களையும் மரியாதையுடன் குறிப்பிடுகிறார் தளபதி. 

தளபதி : பெண்கள் மீது என்றும் மரியாதை வைத்துள்ளவன் நான். அதனால்தான் என்னவோ என் மனைவியும் மகளும் பிரிந்து விட்டார்கள்…. (சிரிக்கிறார்) இந்தப் பெண் மட்டும் என்னுடன் இருக்கிறார். அதுதான் என் விதி தெரிந்த எனக்கே வியப்பாக இருக்கிறது. பெண்கள் என்னோடு ஒட்டமாட்டார்கள். இவர் பெயர் மலர்விழி. படை வீரர் முத்தழகனின் மனைவியார். எனக்கு உறுதுணை புரிவதற்காக முத்தழகன் அனுப்பி வைத்திருக்கிறார். என்னுடைய விரல்நுனி கூட அவர் மீது பட்டதில்லை. என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டியவர்கள் கவனிக்க மறந்தார்கள். என்னைத் துறந்தார்கள். இவர் என்னைத் தமது தந்தையைப் போல் எனக்குப் பணிவிடைகள் செய்து வருகிறார். ஊர் பேசுவதை எல்லாம் இவரும் இவருடைய கணவரும் பொருட்படுத்துவதில்லை. அற்புதமான பிறவிகள். 

மலர்விழி : அய்யா… 

தளபதி : என்னம்மா… முகத்துக்கு எதிரே முகமன் கூறுவதாக நினைக்கிறீர்களா? உண்மையைத் தான் கூறினேன். 

மலர்விழி : அது இல்லை. 

தளபதி : ஓ! வெகுநேரமாகி விட்டது அல்லவா. குழந்தைகளும் அவரும் காத்திருப்பார்கள். நீங்கள் புறப்படுங்கள். 

மலர்விழி : உணவு பரிமாற வேண்டாமா? 

தளபதி : உணவு… நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள். தனியாகச் செல்லாதீர்கள். கீழே யார் இருக்கிறார்கள்? 

மலர்விழி : மணிவண்ணன் இருக்கிறார். 

தளபதி : அவரை வழித்துணைக்காக அழைத்துச் செல்லுங்கள். மன்னிக்க வேண்டும். இன்று நெடுநேரம் ஆகிவிட்டது.

மலர்விழி : தாங்கள் இப்படி எல்லாம் பேசலாமா? உங்களுக்குத் தொண்டு செய்வதுதான் எனக்கும் அவருக்கும் பூரிப்பு. மகனுக்கு உடல் நலம் சரியில்லை… அதனால்தான் … 

தளபதி : உடனடியாகச் செல்லுங்கள். ஏன் முன்பே கூறவில்லை? 

மலர்விழி : பெரிதாக ஒன்றும் இல்லை. பார்த்துக் கொள்கிறேன். உத்தரவு பெறுகிறேன். 

தளபதி : சீக்கிரம் புறப்படுங்கள். 

(மேடையின் வலப்பக்கமாக விரைந்து செல்கிறாள் மலர்விழி) 

உருத்திரங்கண்ணனார் : அற்புதமான பண்புநலன் கொண்ட தாங்கள் இப்படி போதையில் விழுந்து கிடக்கலாமா?

தளபதி: உங்களைப் போன்ற புலவர்களுக்கு கற்பனை போதையாக அமையும். காதலர்களுக்கு காதல் போதை தரும். எங்களைப் போன்றவர்களுக்கு மதுபான போதையை விட்டால் வேறு என்ன இருக்கிறது. தமிழ்ப் பாட்டைக் காக்கிற நீங்களும் தாய்நாட்டைக் காக்கிற நானும் எப்படி நண்பர்களாக இருக்கிறோம் வயது வித்தியாசமும் தடையாக இல்லையே என்று ஊர் எல்லாம் நம் நட்புமீது கண் வைத்துள்ளது. கண்ணூறு நம் நட்பைக் கெடுக்காமல் இருக்க வேண்டும்.

உருத்திரங்கண்ணனார் : (சிரித்து) நம் நட்புக்குப் பங்கம் வராது. போதையிலும் நன்றாகப் பேசுகிறீர்கள். தளபதியின் நண்பன் என்பதால்தான் போர் வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசினாயா என்று என்னைச் சிலர் கேட்கிறார்கள். 

தளபதி : அவர் நண்பராக வாய்க்காவிட்டாலும் நான் அப்படித்தான் பேசியிருப்பேன் என்று பதில் கூறியிருப்பீரே. 

உருத்திரங்கண்ணனார் : எப்படி என் மனதைத் துல்லியமாய் படித்து விடுகிறீர்கள்? 

தளபதி : எங்களைப் போன்றவர்கள் மக்களின் மனங்களைத்தான் படிக்க முடியும். ஏடு எடுத்து வாசிக்க முடியாது. சரி. இந்த வேளையில் என்னைப் பார்க்க வர மாட்டீர்களே. என்ன சேதி? 

உருத்திரங்கண்ணனார் : தளபதி அவர்களே. நிலவொளியில் உங்கள் ஆளுமை ஜொலிக்கிறது. 

தளபதி : குடிகாரனைப் புகழும் புலவர் நீர் ஒருவராகத் தான் இருப்பீர். என்ன வேண்டும்? கூறும். 

உருத்திரங்கண்ணனார் : விடை காண முடியாத கேள்விக்கு எல்லாம் தங்களிடம் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே வந்துள்ளேன். 

தளபதி : அப்படி வாரும் வழிக்கு. நீரும் காரியவாதிதான் என்பதை நிரூபிக்கிறீர். (சிரிக்கிறார்) முகம் மாறுகிறது.சரி. சொல்லுங்கள். என்ன கேள்வி? 

உருத்திரங்கண்ணனார் : தாங்கள் மாமன்னருக்கும் அவருடைய தந்தையாருக்கும் சேவை செய்து வந்தவர். அரண்மனை ரகசியம் ஒன்றை தங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்… என்று…

தளபதி : தயக்கம் என்ன? கூறுங்கள். என்ன இரகசியம் தெரிய வேண்டும்? 

உருத்திரங்கண்ணனார் : ராஜநர்த்தகி முல்லையை என்னுடைய நண்பர்… 

தளபதி : உமது நண்பர் தாமோதரனார் காதலிக்கிறார். ஊரறிந்த சேதியாயிற்றே…. 

உருத்திரங்கண்ணனார் : தங்களிடம் சொல்வதற்கு என்ன? முல்லையின் தந்தையார் யார் என்பது தெரியாததால், தாமோதரனாரின் பெற்றோர்… 

தளபதி : காதல், திருமணமாகப் பரிணாமம் பெற முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள். அதுதானே? 

ருத்திரங்கண்ணனார் : சரியாகச் சொல்லி விட்டீர்கள். 

தளபதி : இதைக் கூட சொல்ல முடியாவிட்டால் இரண்டு அரசர்களுக்கு சேவகம் புரிந்த தளபதி என்பதில் அர்த்தம் இல்லாமல் போய் விடுமே… 

உருத்திரங்கண்ணனார் : ஆனால், வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், முல்லையைப் பற்றியும் அவருடைய சிற்றன்னையைப் பற்றியுமே யாருமே அவதூறு பேசுவ தில்லை. 

தளபதி: ஊர் வாயைக் கட்டியது எது என்று யோசிக்கிறீர்களா… 

உருத்திரங்கண்ணனார் : இல்லை. அந்தப் பெண்கள் இருவரும் அரண்மனைக்கு நெருக்கமானவர்களின் புதல்விகளாக இருக்க வேண்டும் என்று.. 

தளபதி : நீர் அனுமானிக்கிறீர். 

உருத்திரங்கண்ணனார் : முல்லையின் தந்தை யார் என்பது தெரிந்தால் கூறுங்கள். காதலர்களை சேர்த்து வைக்க உறுதுணை புரியுங்கள். 

தளபதி (சிரிக்கிறார்) : காதலிதான் வேண்டும் என்றால் அவள் யாரிடமிருந்து வந்தவள் என்ற தகவலைத் தேடி அலைய வேண்டிய அவசியம் என்ன? தாய்க்குத் தாயாக தந்தைக்குத் தந்தையாக இருந்து அவளை வளர்த்த மரிக்கொழுந்தையே தந்தையாகப் பாவித்து திருமணம் பேச வேண்டும் தாமோதரனாரின் பெற்றோர். மரிக்கொழுந்து தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லையே. அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும் அல்லவா? 

உருத்திரங்கண்ணனார் : (சற்று கோபத்துடன்) தங்களிடம் ஆலோசனை கேட்க வரவில்லை. மரிக்கொழுந்தின் அக்காள் தாமரை எங்கே இருக்கிறாள்? தாமரையின் கணவர் யார்? இந்த வினாக்களுக்கு எல்லாம் விடை தெரிந்தால் சொல்லுங்கள். தெரியாவிட்டாலும் தெரியவில்லை என்று சொல்லி விடுங்கள். நான் புறப்படுகிறேன். 

தளபதி : அப்பா…நண்பர் பற்றியும் அத்தை பற்றியும் பேசிய உடனேயே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. இளைய நண்பா! பெண்ணைப் பற்றி சந்தேகப்பட்டால் காதலிக்கக் கூடாது. காதலித்து விட்டால் சந்தேகப்படக் கூடாது. 

உருத்திரங்கண்ணனார் : பொன்மொழிக்கு நன்றி. நான் விடைபெறுகிறேன். 

(மேடையின் வலப்பக்கமாக உருத்திரங்கண்ணனார் வேகமாக வெளியேறுகிறார்) 

தளபதி : (சிரிக்கிறார்) ஒரு நண்பரின் காதலுக்காக மற்றொரு நண்பர் மீது சினம். ஊராரின் கண்ணூறு வேலை செய்கிறது போலிருக்கிறது. இளைய நண்பா! நீ என்னைத் தேடி வருவாய் மீண்டும். 

(திரை) 

நான்காம் காட்சி 

மரிக்கொழுந்து வீட்டு மாடம். பின்னணியில் பகல் வெளிச்சம். மரிக்கொழுந்து ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். ஓர் இளம் பெண் விசிறிக் கொண்டிருக்கிறாள். மேடையின் வலப் பக்கத்திலிருந்து மல்லிகை வருகிறாள். மரிக்கொழுந்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்) 

மல்லிகை : சின்னம்மா என் மீது என்ன கோபம்? இரண்டு நாட்களாகப் பேசாமல் இருக்கிறீர்கள்? நான் என்ன செய்தேன்? 

மரிக்கொழுந்து : இவளே… அவளைக் கீழ் தளத்திற்குப் போகச் சொல். மாடிக்கு வர வேண்டாம். என்னைப் பார்க்க வேண்டாம் என்று சொல். 

மல்லிகை : இவளே… நான் சொல்வதைச் சொல். அப்பா யார் என்று தெரியாது. அம்மா எங்கிருக்கிறார் என்று தெரியாது. சித்தியும் முகத்தில் முழிக்காதே என்று சொல்வதால் மல்லிகை கடல்மாதாவிடம் அடைக்கலம் ஆகப் போகிறாள் என்று சொல்… (போக எத்தனிக்கிறாள்) 

மரிக்கொழுந்து எழுந்து நிற்கிறாள். மல்லிகையின் கரங்களைப் பிடித்து இழுக்கிறாள்.) 

மல்லிகை : இவ்வளவு பாசம் இருக்கும்போது சிற்றன்னைக்கு ஏன் இந்த பொய்க்கோபம்? 

மரிக்கொழுந்து : உன் அக்காவுடன் நீதானே அரண்மனையில் வளைய வருகிறாய். காதலில் விழாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இப்பொழுது நேர்ந்த விபரீதங்களைப் பார். முல்லைக்கு நேர்ந்த நிலையைப் பார். நஞ்சைக் குடிக்கும் அளவுக்கு நெஞ்சை நோகடித்திருக்கிறான் அந்த அவைப் புலவன். அவளை உயிருடன் பார்ப்போமோ என்றாகி விட்டது எனக்கு. 

மல்லிகை: அம்மா. காதலிக்கும்போது தங்கையைக் கேட்டுக் கொண்டு யாரும் காதலிக்க மாட்டார்கள். 

மரிக்கொழுந்து : பெரியவள் நான். என்னிடம் இந்தக் காதல் விவகாரத்தை நீ ஏன் மறைத்தாய்? 

மல்லிகை : ஊருக்கே தெரிந்தது உங்களுக்குத் தெரியாதது போல் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று நினைத்தேன். நீங்களும் ஒரு காலத்தில் நவரசம் காட்டிய நடன மங்கைதானே? 

மரிக்கொழுந்து : நல்ல வேளையாக அவள் அருந்திய நஞ்சு கொடிய நஞ்சாக இல்லாமல் போனது நமது நல்வினைப் பயன். இவள் தன்னை அழித்துக் கொள்ள முயன்றதை எவருக்கும் தெரிவிக்காதே. 

மல்லிகை : முதலில் உங்களுடைய இவளேயிடம் சொல்லி வையுங்கள். கீழே யாரோ வருவதுபோல் இருக்கிறது. நான் போய்ப் பார்த்து விட்டு வருகிறேன். 

(மேடையின் வலப்பக்கமாக செல்கிறாள் மல்லிகை. சற்று நேரத்தில் பெரிய மனித தோரணையில் உள்ள நடுத்தர வயது மனிதருடன் திரும்பி வருகிறாள்.) 

மரிக்கொழுந்து : அமைச்சர் கீரனார் அவர்களுக்கு வணக்கம். என் குடிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமர்ந்திடுங்கள். (ஆசனத்தில் அமர்கிறார். மரிக்கொழுந்தும் மல்லிகையும் நிற்கிறார்கள். மல்லிகை, வெள்ளிக் கிண்ணத்தில் பழரசம் தருகிறாள். அமைச்சர் பருகுகிறார்) 

மரிக்கொழுந்து : இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். அழைத்திருந்தால் நானே வந்திருப்பேன். 

கீரனார் : அரசாங்கத்தின் ஆடல் மங்கை அரண்மனை பக்கம் வராவிட்டால் என்ன காரணம் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அமைச்சனின் கடமை. மன்னர், திடீரெனக் கேட்டால் பதில் சொல்ல முடியாத நிலை வரக்கூடாது அல்லவா. முல்லைக்கு என்னவாயிற்று? 

மரிக்கொழுந்து: ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை. சற்றே உடல் தளர்ச்சி. சுகவீனம். ஓரிரு நாட்களில் குணமாகி விடும். நிகழ்ச்சி ஏனுேம் இருந்தால் சொல்லுங்கள். இவள் என்னுடைய இரண்டாவது மகள் மல்லிகை. இவள் நடனமாட வருவாள். 

கீரனார் : மல்லிகையைப் பார்த்திருக்கிறேன். மல்லிகையின் நடனத்தைப் பார்த்தது இல்லை. அரசருக்காக ஆடல் மங்கை வரவழைக்கப்படுவதில்லை அரண்மனையில். வெளிநாட்டு ராஜப் பிரமுகர்கள் வந்தால்தான் அழைப்போம். நிகழ்ச்சி இருந்தால் நான் தெரிவிக்கிறேன். முல்லையை வரச் சொல்கிறீர்களா? நான் பார்க்கலாமா? 

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து தளர்ந்த நடையில் முல்லை வருகிறாள்) 

முல்லை : மந்திரியாருக்கு அடியாளின் வணக்கங்கள். 

கீரனார் : ஆசிகள் அம்மா. உடல் நிலை சரியாகி விட்டதா? 

முல்லை : சரியாகிக் கொண்டிருக்கிறது ஐயா. 

கீரனார் : நன்றாக ஓய்வு எடுத்துக் கொள். அரண்மனை மருத்துவரை அனுப்பி வைக்கட்டுமா? 

மரிக்கொழுந்து: வேண்டாம். வேண்டாம். நானே கை வைத்தியம் பார்த்து, பத்திய உணவு அளித்துப் பராமரித்து வருகிறேன். 

கீரனார் : ஊரே தங்களை வியந்து பாராட்டுகிறது! பெற்ற தாய் தாமரை வளர்த்து இருந்தாலும் இப்படி கண்ணுக்குள் வைத்துப் பார்த்திருப்பாளா? மரிக்கொழுந்து தங்கள் இருவருக்கும் கிடைத்த பொக்கிஷம். சிறிய தாயாரின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறிய தாயார் அல்லள். இவர்தான் உங்களுக்குப் பெரிய தாய். 

மல்லிகை : ஆம். அமைச்சரே. பெற்ற தாயே நேரில் வந்தாலும் நாங்கள் சீண்ட மாட்டோம். தீண்ட மாட்டோம். ஒட்ட மாட்டோம். எங்கோ இருக்கிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். தமது தங்கைக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கவில்லை. பெற்றெடுத்து எங்களை இவரிடம் சேர்த்துவிட்டு… கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார். வரட்டும் நேரில் பிரசன்னம் ஆகட்டும். நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற்போல் கேள்விகள் கேட்கிறேன். 

கீரனார் : பொறுமையாக இரு பெண்ணே. நான் வருகிறேன். மரிக்கொழுந்து மல்லிகையின் மனதில் எதையோ கிளறி விட்டேன் போலிருக்கிறது. 

(மேடையின் வலப்பக்கமாக வேகமாக வெளியேறுகிறார்) 

முல்லை : ஏன் இந்த வேகம் உனக்கு? ராஜபிரமுகர் எதிரே… அம்மா என்றால் நமக்கு சித்தி மட்டும்தான். தாமரை அம்மா பற்றி யாராவது பேசினால் உனக்கு கோபம் வருகிறது. அதைத் தவிர்க்க வேண்டும். 

மல்லிகை : எல்லாம் உன்னால்தான். சித்தி மீது பரிவும் பாசமும் இருக்கிறவள் கோழைத்தனமாக உயிரை மாய்த்துக் கொள்ள ஏன் துணிந்தாய்? ஏன் அவரைப் பதற வைத்தாய்? தாமரை யார்? தாமரையின் கணவர் யார் என்று அரண்மனை முழுவதும் வம்புப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. வீணாக நம்மைப் பற்றி ஊரார் வம்பு பேசும் நிலைக்குத் தள்ளி விட்டாய். 

முல்லையின் தந்தை யார் என்று தெரியாததால் முல்லையைப் புலவர் குடும்பம் ஏற்கவில்லை என்று முரசு அறைந்து அறிவிக்காத குறை… காதலனைக் கைக்குள் போட்டுக் கொண்டு வீண் பேச்சைத் தவிர்த்து வெற்றி பெற தெரியவில்லை. 

(மரிக்கொழுந்து மல்லிகையின் கன்னத்தில் அறைகிறாள்)

மரிக்கொழுந்து : அவளுடைய உடல்நிலை தேற வேண்டாமா? அவள் மீது ஏன் குற்றப் பத்திரிகை வாசிக்கிறாய்? அவள் மீது தவறு ஒன்றும் இல்லை. பருவ வயதில் காதல் எல்லாம் இயல்புதான். காதலில் குழப்பம் வரத்தான் செய்யும். 

மல்லிகை : இதுவரை அடிக்காதவர், என்னை அடித்து விட்டீர்கள் அல்லவா? நான் என்ன தவறாகப் பேசி விட்டேன். அவளுடைய செய்கைகள் நம்மை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கின்றன என்று அவளுக்குப் புரிய வேண்டாமா? 

(மல்லிகை, அழுது கொண்டே மேடையின் வலப்பக்கமாக வெளியேறுகிறாள்) 

முல்லை : ஏனம்மா. தங்கையை அடித்தீர்கள். எனக்கு விழ வேண்டிய அடி அல்லவா அது? நான் அனைவரையும் நோக அடித்து விட்டேன் அல்லவா? 

மரிக்கொழுந்து : அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. என் கண்ணே. மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே. (கட்டி அணைக்கிறாள்) 

(முல்லை அணைப்பிலிருந்து விலகுகிறாள்) 

முல்லை : மல்லிகையை சமாதானப்படுத்துங்கள். சட்டென்று கை நீட்டி விட்டீர்கள். 

மரிக்கொழுந்து : சரி போகிறேன். நீ குழம்பிக் கொள்ளாதே. மரகதம் நீ இங்கேயே இரு. இவளிடம் பேசிக் கொண்டிரு. 

(மரிக்கொழுந்து மேடையின் இடப்பக்கமாக செல்கிறாள்) 

(பணிப் பெண் இவளிடம் மாட்டிக் கொண்டு விட்டோமே என்ற நினைப்பில் நெளிகிறாள்) 

முல்லை : (ஆசனத்தில் அமர்கிறாள்) மரகதம். என் கதை சிரிப்பாய்ச் சிரிக்கும் அளவுக்கு ஆகி விட்டதா? 

மரகதம்: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. எசமானி அம்மா கூறியதுபோல் நீங்கள் எதை எதையோ நினைத்து குழம்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நடனம் ஆடும்போது எல்லோரும் மெய்மறந்து தங்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடனம் ஆட தெம்பு வேண்டும் அல்லவா? மனம் குழம்பினால் உடலில் தெம்பு சேராது. (விசிறுகிறாள்) 

முல்லை : விசிறுவதை நிறுத்து. உன்னிடம் அறிவுரை கேட்க 

வில்லை. உனக்குத் தெரிந்த தகவலைச் சொல். 

மரகதம் : நீங்கள் கேட்பீர்கள். நான் சொன்னால் எசமானி கோபித்துக் கொள்வார். ஏன் என்னை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள்…? 

முல்லை : உன்னைப் பற்றித்தான் யோசிக்கிறாய். என்மீது பரிவு இல்லை உனக்கு… 

மரகதம் : ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? தங்கள் அரங்கேற்றத்திற்கு ஓடியாடி வேலைகள் செய்தவள் நான். ஜடை அலங்காரம் செய்தவள் நான். ஒப்பனை செய்தவள் நான். ஓரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தவள் நான். என்னை சுயநலக்காரி என்று இமைப்பொழுதில் கூறிவிட்டீர்களே… உங்கள் மீது எனக்கு அன்பு இல்லாமலா உங்களுக்காக இத்தனைக் காலம் வேண்டியதை எல்லாம் செய்கிறேன். 

முல்லை: அப்படியானால் இந்த நிலையிலிருந்து மீள வழி சொல். கலகலப்பாக இருந்த குடும்பத்தில் நிலவும் இந்த அமைதி மயான அமைதியாக இருக்கிறது. 

மரகதம் : அறச் சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். காலம் மாறும். உங்கள் கவலைகள் எல்லாம் தீரும். 

முல்லை : நான் அருள் வாக்கு கேட்கவில்லை. நடந்தது நடந்து விட்டது. மீண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வழி சொல்லடி. 

மரகதம்: சரி. சொல்கிறேன். காதலைத் தூக்கி மூட்டை கட்டி வையுங்கள்.கலையில் புதுப்புது உத்திகளைப் புகுத்துங்கள். புதிய நாட்டிய நாடகங்களைப் பற்றி சிந்தியுங்கள். நடந்தது எல்லாம் ஏதோ கெட்ட கனாவென்று நினைத்து மனத்திலிருந்து துடைத்து எறியுங்கள். காதலர் நாடி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். நீங்களாகப் போய்ப் பார்க்காதீர்கள். 

திருமணம் பற்றிப் பேசாதீர்கள். ‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்றார் கவியரசு. நாம் இறைவனை நம்பி வந்தவர்கள், நாட்டியத்திற்குத் தங்களை அர்ப்பணியுங்கள். ஆண்கள் கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள். காதல் ஆட்டத்தை ஆடி ஜெயிப்பவர்கள் சிலபேர் மட்டுமே. நமக்கு வேண்டாம் அந்த ஆட்டம். ஆடல் போதும். தங்கையையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஆடல் சகோதரிகள் என்று உலகம் உங்களைக் கொண்டாடும் நிலையை நோக்கி நகருங்கள்.

முல்லை : சரியாகச் சொன்னாய்.வயதில் சிறியவளாக இருந்தாலும் பக்குவமாகப் பேசுகிறாய். இந்த புத்தி எனக்கு வரவில்லை பார். ‘பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்து மாரி அம்மா பலனேதும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா’ என்று முண்டாசுக்காரன் பாடியது எனக்கு முற்றிலும் பொருந்துகிறது. இனி… ஆடலே எனது மூச்சு அதில் என் வீச்சைக் காட்டுகிறேன். 

மரகதம்: அம்மா. காதலர்களைப் பிரிக்க நான் தூபம் போட்டதாக நீங்களோ பிறரோ நினைத்துவிடக் கூடாது. 

முல்லை : நீதான் சொன்னாயே. நன்றாக ஆட்டம் ஆடத் தெரிந்தவர்கள் தான் காதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்று. ஆடத் தெரியவில்லை என்றால் விலகி விடுவதுதான் நல்லது. நீ எனக்கு நல்லதுதான் கூறியிருக்கிறாய். இனிமேல்தான் என்னுள் நீ ஒரு புதிய முல்லையைப் பார்க்கப் போகிறாய். 

(முல்லை ஆசனத்திலிருந்து எழுந்து விரைவாக மேடையின் இடப்பக்கம் செல்கிறாள்) 

(வலப்பக்கத்திலிருந்து மரிக்கொழுந்து வருகிறாள். ஆசனத்தில் அமர்கிறாள். மரகதம் விசிறுகிறாள்) 

மரிக்கொழுந்து : என்ன… நீ அவளைக் குழப்பினாயா? அவள் உன்னைக் குழப்பினாளா? 

மரகதம் : தெளிவாகத்தான்… 

மரிக்கொழுந்து : என்ன? 

மரகதம் : தங்கள் புதல்வியார் தெளிவாகத்தான் சிந்திக்கிறார் என்று சொல்ல வந்தேன். 

மரிக்கொழுந்து: இளம் தலைமுறையினரை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

மரகதம்: அவர்களும் இதையே சொல்கிறார்கள். 

மரிக்கொழுந்து : என்ன? 

மரகதம் : இல்லை எசமானி அவர்களே… மூத்தவர்கள் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று இளையவர்கள் புகார் கூறுகிறார்கள். 

மரிக்கொழுந்து : அன்பைப் பொழிந்து செல்லம் கொடுத்து வளர்த்தால் இதுவும் சொல்வார்கள். இதற்கு மேலும் சொல்வார்கள். உன் வாய்ப்பூட்டை நான் திறந்து விட்டேன் அல்லவா…நீயும் பேசுவாய். 

மரகதம் : நான் கீழே சென்று பணிகளைக் கவனிக்கிறேன். 

(மரகதம் மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறாள். மரிக்கொழுந்து கவலை தோய்ந்த முகத்துடன் ஆசனத்தில் அமர்கிறாள்.) 

(திரை) 

– அமைதிப் புறா (நாடகம்), முதற் பதிப்பு: ஜூலை 2013, கௌரி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *