கூட்டத்தில் ஒருவன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 17,314 
 

அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட் டி பிரிவில், டெல்லியிலும் மும்பையிலும் 25 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கொல்கத்தா வந்து சேர்ந்திருந்தான்.

காவிரிக் கரையில் வளர்ந்த மனைவி வேதவல்லி ‘ஆவோ… ஜாவோ’ என்று ஹிந்தியில் நான்கு வார்த்தைகளாவது கற்றுக்கொண்டாள். தொண்டைக் காற்று அதிகம் புரளும் பெங்காலி அவளை நான்கு சுவர்களைவிட்டு வெளியே கொண்டுவருவது இல்லை.

மூத்தவன், கண்ணன். சாஃப்ட்வேர் முடித்துவிட்டு, டிசிஎஸ் சாஃப்ட்வேர் சமுத்திரத்தில் ஒரு துளியாகச் சேரத் தேர்வாகி இருந்தான். அமெரிக்கா செல்ல நேரிடும் என்று ‘பீட்ஸா, பர்கர், ஹாட் டாக்’ என்று பழகத் தொடங்கி இருந்தான்.

அடுத்தது ஜானு. எட்டாவது படிக்கிறாள். ஸியால்டாவில் பள்ளி. அந்த புதன்கிழமை, அவளோடுதான் ரங்கா சோனார்பூர் ரயில் நிலையம் நோக்கி விரைந்துகொண்டு இருந்தான்.

புறப்படும்போது எட்டேகால் ஆகிவிட்டது. கேஸ் சிலிண்டர் மாற்ற வேண்டிஇருந்தது. இ-மெயில் அனுப்ப வேண்டியிருந்தது. ஃப்யூஸ் போட வேண்டி இருந்தது. அம்மாவுக்கு அமிர்தாஞ்சன் தடவிவிட வேண்டியிருந்தது.

நடைபாதையைக் கடைகள் ஆக்கிரமித்திருந்தன. பிளாஸ்டிக் சீப்புகள், கைக்குட்டைகள், காய்கறிக் கூடைகள், மீன் கூறுகள். குடை நிழலில் முடி திருத்தகம். மிச்சம் இருந்த சாலையில் திறந்துகிடந்த சாக்கடைச் சுரங்கத்தில் மரக்கிளை செருகப்பட்டு இருந்தது. பெங்கால் காட்டன் புடைவை அணிந்த வட்ட முகப் பெண்கள் மூக்கைப் பொத்திக் கடந்தார்கள்.

ஹ¨க்ளி நதி. தொங்கு பாலம். சங்கீத மொழி. சத்யஜித்ரே. ரவீந்திரநாத் தாகூர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர். பலி ஆடுகளின் மாமிசம் அறுத்துக் கூறு போட்டு விற்கும் காளி கோயில். திரும்பிய திசையெல்லாம் அழுக்கு. வியர்வை மற்றும் கடுகெண்ணெய் வாடை. விநோத நகரம் கொல்கத்தா.

ஸ்டேஷனை அடைந்தபோது ஸியால்டா லோக்கல் நுழைந்துகொண்டு இருந்தது.

“ஜானு, டபுள் அப்” என்றான். அப்பாவும் மகளும் பிளாட்ஃபாரத்தை நோக்கி ஓடினார்கள். கூடவே, ரயிலை நோக்கி ஆயிரம் பேர் ஓடி வந்தார்கள். மூட்டைகள் இடறின. தள்ளுவண்டிகள் வழி மறித்தன. ஏதோ ஒரு பார்சலில் இருந்து நீர் கசிந்து, பிளாட்ஃபாரத்தை ஈரமாக்கியது.

இந்தப் பெட்டியிலா, அந்தப் பெட்டியிலா என்று தேர்ந்தெடுப்பதிலேயே மூன்று பெட்டிகளும், 15 விநாடிகளும் கடந்துவிட்டன. அடுத்த பெட்டியை அணுகியதும் “ஜானு ஏறு…” என்று இரைந்து அவளை ரயிலுக்குள் தள்ளினான். நசுங்கிக்கொண்டு இருந்த இரண்டு பெண்கள் ஜானுவை உள்ளே இழுத்தார்கள்.

ரங்காவால் ஒரு காலை வைக்க முடிந்தது. ஒரு கையால் கைப்பிடிக் கம்பியைப் பற்ற முடிந்தது. இன்னொரு காலை வைப்பதற்குள் வண்டி ஜிவுக் என்று இழுபட்டது. வண்டியில் இருந்த ஒரு வங்காளி அவனை அணைத்துக்கொண்டான். ரங்கா தனது இன்னொரு காலை உள்ளே பதிக்க முடியாமல், சற்றே உயரத் தூக்கிக்கொண்டான். ஸ்டேஷனை விட்டு வெளிப்பட்டு வண்டி ‘கிர்ருய்ங்க்…’ என்று வேகம் பிடித்தது.

ஜானு எங்கே இருக்கிறாள் என்று தேடினான். கண்களுக்குத் தட்டுப்படவில்லை. கம்பியைப் பிடித்திருந்த கையில் வியர்வைப் பிசுபிசுப்பு.

வாசல் அருகே இரண்டு இளைஞர்கள் காதலைப் பேசினார்கள். உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது. கல்யாணமான பின் வாழ்க்கை உதைபடப் போகிற பந்தாக மாறப்போவதை இவர்கள் அறிவார்களா?

ரயில் காம்ராபாத் லெவல் கிராஸிங்கை நெருங்கிக் கொண்டு இருந்தது. ஒரு நிமிஷத்தில் அடுத்த ஸ்டேஷன் வந்துவிடும். மக்கள் கூட்டமாக இறங்குவார்கள்… ஏறுவார்கள். ஜானுவை எச்சரிக்க வேண்டும். “ஜானு…” என்று இரைச்சலாக அழைத்துப் பார்த்தான். காற்று அவனது குரலைக் கவர்ந்து சென்றது. ஜானுவிடம் இருந்து பதில் வரவில்லை.

ஜானு தென்படுகிறாளா என்று பார்ப்பதற்காகத் தலையைச் சற்று வெளியே நீட்டி அண்ணாந்தான். ரயில் பாலத்தை ஒட்டியிருந்த சிக்னல் கம்பத்தை அவன் கவனிக்கவில்லை. ‘ணங்’ என்று தலை மோதியது. கம்பியைப் பிடித்திருந்த கை பிய்க்கப்பட்டது. ரயில் பாதையின் ஸ்லீப்பர் கட்டைகள் மீது தட் என்று மோதி விழுந்தான். அவன் உடல் பட்டு சரளைக் கற்கள் எகிறின. ரயிலில் இருந்து குரல்கள் கூச்சலிட்டன.

கடந்து சென்ற பெட்டிகளில் தொற்றியிருந்தவர்கள் சரளைக் கற்களில் புரண்டுகிடந்த ரங்காவைப் பார்த்தார்கள்.

ரயில் பிளாட்ஃபாரத்தில் நுழைந்து நின்றது. தபதபவென்று பலர் இறங்கினார்கள். ரங்காவை நோக்கி ஓடி வரத் தொடங்கினார்கள்.

சிக்னல் கம்பத்தில் கொத்து முடி ஒட்டியிருந்தது. வீசிய காற்றில் தலைமுடி அங்கிருந்து பிய்ந்து உதிர்ந்துவிடும்போல் அசைந்தது.

என்ன நடந்தது என்றே ரங்காவுக்குப் புரியவில்லை!

ரயிலில்தானே வந்துகொண்டு இருந்தேன்? ஸ்லீப்பர் கட்டைகள் மீது ஏன் கிடக்கிறேன்? ‘ணங்’ என்ற சத்தம் கேட்டது நினைவிருந்தது. தலை எதன் மீதாவது மோதிவிட்டதா?

கையை நகர்த்த முடிந்தது. தலையைத் தடவிப் பார்த்தான். வலது பக்கத்தில் பிசுபிசுப்பாகக் கையில் ஒட்டியது. அடர் சிவப்பில் ஹீமோகுளோபின்கள் நிரம்பிய ரத்தம்!

சற்றுத் தொலைவில் மர ஸ்லீப்பர் கட்டைகள் செவ்வகங்களைப் போல அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. தூரத்தில் மக்கள் தன்னை நோக்கி ஓடி வந்துகொண்டு இருந்ததைக் கண்டான்.

ஸ்டேஷனில் நின்றிருந்த ரயில் ‘பாங்க்’ என்ற சிக்கன ஹாரன் ஒலியுடன் ஸியால்டா நோக்கி நகர்வதைக் கண்டான். ‘ஐயோ, ஜானு அதில் இருக்கிறாளே! ரயிலை இனி ஓடிப் போய்ப் பிடிக்க முடியாதே!’

நல்லவேளை. செல்போன் எங்கேயும் எகிறிவிடவில்லை. பாக்கெட்டிலேயே இருந்தது. எடுத்தான். மோகனை அழைத்தான்.

“மோகன், ரங்காடா. எனக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். காம்ராபாத்ல ரயிலை மிஸ் பண்ணிட்டேன். ஜானு எட்டரை லோக்கல்ல வந்துட்டிருக்கா. ஸியால்டால எறங்கினவுடனே என்னைத் தேடுவா. உடம்பு சரியில்லேன்னு பாதில எறங்கிட்டதாச் சொல்லு. ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டுடு. என்ன… தேங்க்ஸ்!” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான்.

வீட்டை அழைத்தான். ”வேதம், கண்ணன்கிட்ட கொடு.”

ஓடிவந்த மக்கள் அவனை நெருங்கிச் சூழ்ந்தார்கள்.

கண்ணனின் குரல் கேட்டதும், “கண்ணா. டேய்! ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். அம்மாவைப் பயமுறுத்த வேணாம். காம்ராபாத் லெவல் கிராஸிங்கிட்ட டிராக் ஓரமா இருக்கேன்டா. ரத்தம் வருது. ஹாஸ்பிடல் போயாகணும். துணைக்கு நீ இருந்தா நல்லா இருக்கும். வர்றியா?” என்று கேட்டான்.

“இதோ வந்துடறேம்ப்பா” என்று கண்ணன் சொன்னதும், போனை ஆஃப் செய்தான்.

சுற்றி நின்றவர்கள் படபடவென்று பெங்காலியில் ஏதோ கேட்டார்கள்.

மோகனுடன் பேசும்போதும் கண்ணனுடன் பேசும்போதும் உடலில் இருந்த சக்தி இப்போது இல்லை. பசிப்பது போலத் தோன்றியது. கண்ணை இருட்டிக்கொண்டு வருவது போல் இருந்தது.

”ஆஸ்பத்திரிக்குப் போகணும்” என்று அவன் முனகியது சரளைக் கற்களில் வீணானது.

கொல்கத்தா மக்கள் விநோதமானவர்கள். செருப்பு விற்பவர்கள், கவிதை தினசரி நடத்துவார்கள். நாவிதர்கள், நவீன ஓவியம் வரைவார்கள். ஆனால், பொதுவாக எல்லோரும் கோபமுள்ளவர்கள். சமூக அக்கறைகொண்டவர்கள். அரசாங்கத்தாலோ, அதிகாரிகளாலோ, அமைச்சர்களாலோ தங்களது உடைமைகளும் உரிமைகளும் சுரண்டப்படுவதாகத் தெரிந்தால், திரண்டு நின்று கோபமும் கொந்தளிப்புமாக எதிர்ப்பைக் காட்டுவார்கள்.

சாலையில் நீட்டிக்கொண்டு இருக்கும் நிர்வாண மின்கம்பி மிதித்தோ, விரையும் பேருந்தால் தேய்க்கப்பட்டோ சாலையில் பிணமாக வீழ்பவர்களை, ஆஸ்பத்திரி ஊழியர்களே வந்தாலும் அகற்றவிட மாட்டார்கள்.

அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொண்ட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டோ, சிறையில் அடைக்கப்பட்டோ தர்மத்துக்கு வெற்றி கிடைக்கும் வரை பசி, தாகம், வேலை என எதையும் பொருட்படுத்தாமல் பிணத்தைச் சுற்றி வியூகம் அமைத்துப் போராடுவார்கள். அவர்களுடைய சமூக விழிப்பு உணர்வு அப்படி.

அப்படிப்பட்டவர்கள்தான் இப்போதும் ரங்காவைச் சுற்றி வியூகம் அமைத்திருந்தார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவன் சிக்னல் கம்பத்தில் ஒட்டியிருந்த ரத்தத்தைக் காட்டினான். ஹோவென்ற இரைச்சல் அதிகமானது.

“ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு…” என்று ஒருவன் அடித்தொண்டையில் இருந்து குரல் எழுப்பினான்.

“முர்தாபாத்…”

“கொடூரமான ரயில்வே நிர்வாகம்…”

“முர்தாபாத்…”

மக்களின் கோஷங்கள் லெவல் கிராஸிங்கின் மறுபக்கமும் எட்டின. ரங்காவைச் சுற்றி மேலும் ஆட்கள் சேர்ந்தார்கள். கோஷம் இடும் குரல்கள் கூடின.

ரங்காவுக்குப் பார்வை மங்கியது. ‘குபுக்’ என்று சரளைக் கற்களின் மீது வாந்தி எடுத்தான். வேதவல்லி பிசைந்து கொடுத்த சாம்பார் சாதம் தொண்டைக் குழாயை எரித்துக்கொண்டு வெளிப் பட்டது.

“ப்ளீஸ்! தண்ணி… தண்ணி…” என்று உதடுகளை அசைத்துப் பார்த்தான். குரல் மிக பலவீனமாக இருந்ததால், ஆவேச மக்கள் யாரையும் அது எட்டவில்லை. களைப்பு மிகுதியில் ரங்கா கண்களை மூடிக்கொண்டான்.

ரயில்வே போலீஸ்காரர்களுக்கு விஷயம் எட்டி அவர்கள் ஒரு கொத்தாக ரங்கா விழுந்துகிடந்த இடத்தை நோக்கி வந்தார்கள். கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தார்கள்.

ரங்காவின் தலையில் இருந்து வழிந்துகொண்டு இருந்த ரத்தம் ஸ்லீப்பர் கட்டையில் திட்டாகப் பரவியிருந்தது.

“அந்தாளை ஆஸ்பத்திரில சேக்கணும்… நகருங்க” என்று ஒரு போலீஸ்காரன் முன்னால் வந்தான்.
“மயிரு…” என்றான் ஒரு பெங்காலி.

”அதுக்கு வேற ஆளைப் பாருங்கடா. போய் ஆபீஸர் அலிங்களை வரச் சொல்லுங்கடா. இந்த சிக்னல் கம்பத்தைப் புடுங்கி எறியணும். இந்தாளை இங்கேர்ந்து எடுத்துட்டா ஆபீஸருங்க மறுபடியும் சீட்டாடப் போய்டுவானுங்க.”

“ஆள் செத்துப் போய்டப்போறான்யா…”

மக்கள் ரங்காவைச் சுற்றி வியூகம் வகுத்தார்கள். “எவனாவது உள்ள நுழைஞ்சீங்க… போலீஸ்காரன்னு பாக்க மாட்டோம். போட்ருவோம். போய் ஆபீஸர் பொறுக்கிங்களை அனுப்பு. நாய் மாதிரி பாசஞ்சர் அடி பட்டுக்கெடக்கறதைப் பார்த்தாதான் புட்டத் துக்குக் கீழயே தண்ணி வந்திரிச்சிடான்னு அவனுங்களுக்கு உறைக்கும்… ஆக்ஷன் எடுப்பாங்க.”

சுற்றிலும் பெங்காலியில் சிதறிக்கொண்டு இருந்த இரைச்சலான வார்த்தைகள் ரங்காவுக்குப் புரியவில்லை. இமைகள் கனத்துக்கொண்டே வந்தன. ”தண்ணி… வேதம்… அம்மா… ஆஸ்பத்திரி… கண்ணா… ஜானு” என்று என்னென்னவோ வாய்க்குள்ளேயே முனகினான்.

ஆவேசக் கூட்டத்தினரிடம் இருந்து போலீஸ்காரர்கள் விலகினார்கள். தள்ளி நின்று, மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்கள். போராளிகளைச் சமாளிக்க காவல் படையை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒருவன் போலீஸ்காரன் பேசியதை ஒட்டுக்கேட்டான். போலீஸ் படை வரப்போகிறது என்ற செய்தியை ஒலி பரப்பினான். ஒரு சரளைக் கல் கூட்டத்தின் நடுவில் இருந்து பறந்து வந்து ஒரு போலீஸ் காரனின் தொப்பியைத் தாக்கியது.

கண்ணன், தன் நண்பன் அரவிந்துடன் பைக்கில் காம்ராபாத் லெவல் கிராஸிங்கை நெருங்கியபோது ஏராளமான ஷ்மக்கள் எதிர் திசையில் இருந்து ஓடி வந்துகொண்டு இருந்தார்கள். ஸ்டேஷன் அருகில் பிளாட்ஃபாரத்தை ஒட்டி அடுக்கப்பட்டு இருந்த ஸ்லீப்பர் கட்டைகள் திகு திகுவென எரிந்துகொண்டு இருந்தன. புகை சுருண்டு மேலேறியது. ரத்தம் சொட்டும் காலுடன் ஒருவன் “உங்கம்மாள…” என்று போலீஸ்காரர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி ஓடி வந்தான்.

“என்ன ஆச்சி?” என்று அரவிந்தன் பெங்காலியில் கேட்டான்.

“போலீஸ்கார நாய்ங்க தடியடி நடத்தறானுங்க…” என்று அவன் கத்திக்கொண்டே ஓடினான். தூரத்தில் கருங்கற்கள் ஏவுகணைகளாகப் பறந்தன.

வேடிக்கை பார்த்த கூட்டம், இரைச்சலும் ஆர்ப்பாட்டமுமாகச் சிதறி எட்டுத் திக்கும் ஓடிக்கொண்டு இருந்தது.

”நிக்காத, போ… போ…” என்று புதிதாக வந்து இறங்கிய போலீஸ் லத்தியைச் சுழற்றி பைக்கில் அடித்து இவர்களைத் துரத்தியது.

“கண்ணா. உங்கப்பா இந்தக் கலவரத்துலதான் காயப்பட்டுக்கிட்டாரா தெரியலையே? பக்கத்துல ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டிருப்பார்டா. அங்க போய்ப் பார்ப்போம். வீணா நாம இங்க அடிபட வேணாம்” என்று அரவிந்தன் அவசரமாக பைக்கைத் திருப்பினான்.

மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, போலீஸ் ஜீப்பில் ரங்காவின் அம்மாவும், வேதவல்லியும் காம் ராபாத் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். கண்ணன் அலைபேசியில் அழைக்கப்பட்டு, ஜானுவைப் பள்ளியில்இருந்து அழைத்து வந்து சேர்ந்திருந்தான்.

“ஐயோ… ஐயோ…” என்று மார்பில் அறைந்துகொண்டே வேதவல்லி உள்ளே ஓடினாள். ரங்காவின் அம்மாவைப் போலீஸ்காரர்கள் கைத்தாங்கலாக பிளாட்ஃபாரத்துக்குக் கூட்டிச் சென்றார்கள். பிளாட்ஃபாரத்தை நிறைத்து, போலீஸ் தலைகள். ஒரு மூலையில் ஸ்ட்ரெச்சர் தெரிந்தது. ரத்தத்தில் நனைந்த போர்வையை போலீஸ்காரர் விலக்கினார்.

கருநீலமான முகத்துடன் ரங்கா அடங்கிக்கிடந்தான். உடல் முழுக்க ரத்தம் திட்டுத் திட்டாக உறைந்திருந்தது.

“ரங்கா… ரங்கா. பெருமாளே… என்னடா அக்கிரமம் இது?” என்று ரங்காவின் அம்மா ஓலமிட்டாள். வேதவல்லி ஸ்ட்ரெச்சரில் தலையை மோதி மோதி அழத் தொடங்கினாள். ஜானுவும் கண்ணனும் பொறுக்காமல் கதறினார்கள்.

ஆஜானுபாகுவான அந்த காவல் துறை உயர் அதிகாரி நெருங்கினார். குன்றிப்போய் ரங்காவின் அம்மா அருகே குனிந்தார். “மாஜீ! கலவரத்துல ஈடுபட்ட மூணு பேரைக் கைது பண்ணிட்டோம் மாஜீ” என்றார்.

“அதனால..? ரங்காவோட உயிர் திரும்ப வந்துடுமா?” என்று வீறிட்டாள் ரங்காவின் அம்மா.

பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்விக்குப் பதில் தேடுவதற்குள் அவருடைய வாக்கிடாக்கி கரகரத்தது.

காவல் துறையின் அராஜகத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு ரயில் பாதைகளின் குறுக்கே கூட்டமாக உட்கார்ந்து மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதை உடனே கவனிக்கச் சொன்னது!

– அக்டோபர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *