கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 2,298 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12

5.பெரிய மறவன் ரகசியம் 

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்தக் கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்டான். அவன் இட்ட கட்டளையையும் கேட்டான். அதைத் தொடர்ந்து வேல்களைத் தாங்கித் தன்னை நோக்கி வந்த மற்ற நான்கு மறவர்களையும் பார்த்தான். இத்தனைக்கும் அவன் அச்சத்தையும் காட்டவில்லை. இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, பேச்சுக் கொடுக்கவுமில்லை. ஆனால் கள்ளைக் குடித்து அரைமயக்கத்திலிருந்த முறைப்பிள்ளை மட்டும் தள்ளாடி எழுந்து, வந்தவர்களை நோக்கி, “இவன் ஒற்றனல்ல” என்று உளறினான். 

இதைக் கேட்டதும் மேட்டில் ஏறி வந்த நால்வரும் பாதி வழியில் நின்றுவிடவே பெரிய மறவன் மட்டும் முன்னால் வந்து, ‘இவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று வினவினான். 

சிறிது தள்ளாடி நின்ற முறைப்பிள்ளை தன்னைத் திடப்படுத்திக் கொள்ள பப்பகுமாரன் தோளைப் பிடித்துக் கொண்டு, “தெரியும்” என்றான். 

“யார்?” என்று எழுந்தது பெரிய மறவன் அதிகாரக் குரல். 

“காதலன், கள்ளக்காதலன்” என்று தடுமாறிச் சொன்னான் முறைப்பிள்ளை. 

“என்ன உளறுகிறாய்?” என்று சீறினான் பெரிய மறவன். 

அப்பொழுது முறைப்பிள்ளைக்குக் குடி தலைக்கு ஏறிவிடவே, “மாப்பிள்ளையை… உளகிறாய் என்று கேட்பது மரியாதை அல்ல” என்று நிதானித்து நிதானித்துப் பேசினான். 

“மாப்பிள்ளையின் முகத்தைப் பார். இந்தப் பைத்தியத்தையும் பிடித்துக் கட்டுங்கள் மரத்தில்” என்றான் பெரிய மறவன். 

“கட்டுங்கள் கட்டுங்கள்… யார் யாரைக் கட்டுவது? இவன்தான் அவளைக் கட்டினான், நான் பார்த்தேன்” என்று உளறிய முறைப்பிள்ளை நான்கு அடிகள் முன்னால் வைத்து, “மாமா! நானே பார்த்தேன் மாமா. இவன் செல்வியைக் கட்டிக்கொண்டான்..” என்று கூறி, மாமாவின் மார்பில் சாய்ந்து கொள்ள, பெரிய மறவன் அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, மற்ற மறவர்களை நோக்கி “உம். ஏன் தாமதிக்கிறீர்கள்? பிடித்துக் கட்டுங்கள் அவனை” என்று கூறி, பின்னால் நின்ற நான்கு மறவர்களை நோக்கித் திரும்பினான். 

அந்தச் சமயத்தில் வெகு வேகமாகச் செயல்பட்ட பப்பகுமாரன் தனது நீண்ட வாளை மின்னல் வேகத்தில் உருவிப் பெரியமறவன் கழுத்தைத் தடவினான். “அவர்களை வேல்களை கீழே போடச் சொல். இன்று இங்கு ஒரு கொலை நடந்தது போதும், மேலும் கொலை வேண்டாம்” என்று கூறித் தனது வாளின் நுனியைச் சற்று பெரிய மறவன் கழுத்தில் அழுத்தினான். 

ஆனால் பெரிய மறவன் அதைப்பற்றிச் சிறதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “மறக்குலத்தவர் சாவுக்குப் பயப்படுவதில்லை. உன் கத்தியை வேண்டுமானால் பாய்ச்சி விடு. அதனால் நீ தப்பிவிட முடியாது. இந்த நான்கு மறவர்களும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டார்கள்” என்றான். 

அப்பொழுது மாமாவின் காலில் கிடந்த முறைப் பிள்ளை கண்விழித்து, “மாமா! இவனைக் கொல்ல முடியாது. இவன் பாப்பாவல்ல, குமாரன்” என்று கூவினான். காலின் அடியிலிருந்து எழுந்திருக்காமலே. 

”டேய்! வாயை மூடு” என்று முறைப்பிள்ளையை எச்சரித்த பெரிய மறவன், “இவனைப் பிடியுங்கள்” என்று மற்ற மறவர்களுக்கு உத்தரவிட, மற்றவர்கள் வேல்களுடன் பப்பகுமாரனை வளைக்க முயன்றார்கள். 

பப்பகுமாரன் தனக்கு இருபுறத்திலும் நெருங்கி வந்த வேல் மறவர்களை ஒரு கணமே நோக்கினான். அடுத்து தனது வாளை இடது கைக்கு மாற்றிக்கொண்டு பெரிய மறவன் கழுத்தில் வலது கையின் முஷ்டியால் குத்தவே பெரிய மறவன் வெட்டுண்ட காட்டுமரம் போல் தரையில் விழுந்தான். அடுத்து குமாரன் இரு பக்கத்திலும் வேல்களைப் பாய்ச்ச முயன்றவர்கள் மீது பாய்ந்து ஒருவன் கையில் தனது இடது கையிலிருந்த வாளைப் பாய்ச்சி வலது கையால் அவன் ஈட்டியை இழுத்துக் கொண்டான். சற்று பின்னால் நகர்ந்து வாளை தாமரைச் செல்வியின் கையில் கொடுத்து விட்டு, வேலை மட்டும் கொண்டு மீதியிருந்த மூவரையும் சமாளிக்க முற்பட்டான். அவன் வேல் வீச்சில் ஒருவன் வேல் கையிலிருந்து பறந்தது. இன்னொருவன் வேல் அவன் வேலால் அடிபட்டு மண் தரையில் பதிந்தது. நான்காமவன் கழுத்தை அவன்வேல் தடவ,வேல் மறவரிடையே திக்பிரமை நிலவியது. கீழே கிடந்த வேல்களைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்ட குமாரன் கையிலிருந்த வேலைக் குடிசைக்கு அப்பால் எறிந்து விட்டுப் பின்னால் நகர்ந்து தாமரைச்செல்வியின் கையிலிருந்த வாளை மீண்டும் பெற்றுக் கொண்டான். அந்த வாளைக் கையில் பிடித்த வண்ணம் அதிகாரத் தோரணையில் பேச முற்பட்டு, “உங்களுக்கு உயிரின் மீது ஆசை இருந்தால் நீங்கள் திரும்ப உங்கள் இல்லங்களுக்குச் செல்லலாம்” என்று அறிவித்தான். 

“எங்கள் தலைவர்” என்று ஒரு மறவன் முனகினான். 

”அவனுக்கு எந்த ஆபத்துமில்லை. நீங்கள் போகலாம்” என்று வாலிபன் உத்தரவிட அந்த நான்கு மறவர்களும் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். “நாங்கள் இங்கு வரும்போது ஒருவன் சடலம் புரவி மீத பிணைக்கப்பட்டு ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவனைக் கொன்றது யார்?” என்று வினவினான் நால்வரில் ஒருவன். 

சற்று சிந்தித்த பப்பகுமாரன், “உங்கள் தலைவரின் மகள் அம்பெய்து கொன்றாள். என்னிடம் வில்லுமில்லை, அம்புமில்லை” என்று விளக்கினான். 

அவன் கூறியதில் உண்மையிருந்ததைக் கவனித்த மறவர்களில் இன்னொருவன் பெரிய மறவனை நோக்கி, “தலைவரே நாங்கள் போகட்டுமா?” என்று வினவினான். 

பப்பகுமாரனின் குத்து கழுத்தில் விழுந்ததால் நிலை குலைந்து தரையில் சாய்ந்துவிட்ட பெரிய மறவன் அப்பொழுதுதான் சற்றுத் தெளிவடைந்து எழுந்து உட்கார்ந்திருந்தான். அந்தக் குத்தின் வேகம் அவனுக்குத் தலைசுற்றல் உண்டாக்கி விடவே, வந்திருப்பவன் கை இரும்பை விடக் கடினமானதென்பதையும், குத்திய முறையிலும் ஒரு லாகவமிருந்ததையும் உணர்ந்ததால், பிரமை பிடித்து ஏதும் புரியாத நிலையிலும் இருந்ததால், மறவர்களைக் குழப்பத் துடனேயே நோக்கினான். பிறகு பக்கங்களில் சிதறிக்கிடந்த வேல்களை நோக்கினான். மறவனொருவன் கைக்காயத்திலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த குருதியையும் பார்த்தான். அதன் விளைவாக வெறுப்பு நிறைந்த குரலில், “போய் வாருங்கள். நீங்கள் இருந்து தான் என்ன பயன்? நான்கு மறவர்கள் ஒருவனால் முறியடிக்கப்பட்டது புதிய சரித்திரம்’ என்று துன்பம் தோய்ந்த குரலில் கூறினான். 

அப்பொழுது மாப்பிள்ளை குறுக்கிட்டு, “மாமா! தவறு” என்று சொல்லிக்கொண்டு படுத்த நிலையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். 

”என்ன தவறு?’ என்று கேட்டான் பெரிய மறவன். 

“சரித்திரத்தை நீங்கள் சரியாகச் சொல்லவில்லை.” 

“நீ தான் சொல்லேன், மகா புத்திசாலி.’ 

“மாமா!” 

“என்னடா?” 

“இவரால் முறியடிக்கப்பட்டது நான்கு பேரல்ல.” 

“பின் என்ன?” 

“உங்களையும் சேர்த்து ஐந்து பேர்” என்று திருத்தியதும் உக்கிரமான கோபத்துக்கு இலக்கான பெரிய மறவன் அவனை உட்கார்ந்த நிலையிலிருந்து மீண்டும் கீழே தள்ளினான். “திரும்பவும் எழுந்திருந்து உளறினாயோ உன்னைக் கொன்று விடுவேன்” என்றும் சீற்றத்துடன் சொற்களை உதிர்த்தாலும் ‘மாப்பிள்ளையின் சொற்களில் உண்மை இருக்கிறது’ என்று முணுமுணுத்தான். 

அப்பொழுதும் நகராமல் நின்ற மறவர்கள் நால்வரையும் நோக்கி, “சரி போய் வாருங்கள், நாளைக்குக் கடையில் சந்திப்போம்’ என்று கூற, நான்கு மறவர்களும் நகர்ந்தார்கள். அவர்கள் தங்கள் வேல்களைப் பொறுக்கிக் கொண்டு நடையைக் கட்டியதும் பெரிய மறவன், அப்பொழுது குடிசைவாயிலில் சிலையென நின்ற தனது மகளைக் கவனித்தான். 

முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் நின்றிருந்தாள் தாமரைச்செல்வி. அப்படி உணர்ச்சியைக் காட்டியபோது அந்த உணர்ச்சி வியப்பினால் விளைந்ததாக அமைந்திருந்தது. அதற்குக் காரணத்தைப் பெரிய மறவன் உணர்ந்து கொண்டதால் சற்று தலையையும் குனிந்து தரையை நோக்கிய வண்ணம், “இன்று கடையில் குடிக்கக் கள்ளில்லை செல்வி. அதனால் உன் அப்பன் சுரணையுடனிருக்கிறான்” என்று கூறினான். 

அப்பொழுது மாப்பிள்ளை தனது சுபாவத்தை மறுபடியும் காட்டினான். மாமனார் அடித்துக் கீழே சாய்த்த நிலையிலிருந்து சற்றுப் புரண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு, “கடையில் கள் இல்லையா?” என்று வினவினான். 

பெரிய மறவன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது “இருந்தால் உனக்கென்ன? இல்லாவிட்டால் உனக்கென்ன?’ என்று கோபம் குரலிலும் ஒலிக்கக் கேட்டான். 

மாப்பிள்ளை விடவில்லை. “இருந்தால் குடிப்பேன். இல்லாவிட்டால் நீங்கள் இன்றிருப்பதுபோல் இருப்பேன்” என்று சொன்னான். 

பெரிய மறவன் மாப்பிள்ளையை உக்கிரமாகப் பார்த்தான். “இரவில் உன்னை யார் இங்கு வரச்சொன்னது?” என்று வினவினான் கடும் சொற்களால். 

“மாலையே புறப்பட்டேன். நடுவில் எங்கள் கடையில் சிறிது நேரமாகிவிட்டது. ஆமாம் மாமா! எங்கள் கடையில் கள்ளிருந்ததே. அங்கு வந்தால் உங்களைக் கள்ளில் மூழ்க வைத்திருப்பேனே?” என்று சொன்னான். 

அதைப் பெரிய மறவன் ரசித்ததாகத் தெரியவில்லை. “கள்ளுக்குப் பிச்சை கேட்கும் நிலைக்கு நான் வரவில்லை” என்றான். 

“பிச்சை கேட்கச் சொல்லவில்லையே! மாமாவுக்கு மரியாதையுடன் கலயத்தை இரு கைகளாலும் தூக்கிக் கொடுக்க மாட்டேனா?” என்ற மாப்பிள்ளை, “மாமா!” என்று ரகசியமாக அழைத்தான். 

“என்ன?” என்று விசாரித்தார் மாமா. 

“கல்யாணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம்?” என்று வினவினான் மாப்பிள்ளை. 

“எந்தக் கல்யாணம்?” என்று கேட்டார் மாமா. 

“எனக்கும் தாமரைச்செல்விக்கும்.” 

“அதற்கு என்ன அவசரம் இப்பொழுது?” 

“நீங்கள் இல்லாதபோது அவள் இங்கு துணையில்லாமல் இருக்கிறாள்.” 

“இருந்தாலென்ன?” 

“பப்பகுமாரன் மாதிரி, அதுதான் இவர் மாதிரி, யாராவது வந்தால்…!” 

“வந்தால்?” 

“அவளைக் கட்டிக் கொள்கிறார்கள்.” 

பெரிய மறவன் குரல் பயங்கரமாக ஒலித்தது. “என் மகளைப் பற்றி என்ன சொன்னாய்?” என்று கேட்டான். 

மாப்பிள்ளை பதில் சொல்லவில்லை. தாமரைச்செல்வியை நோக்கி, “செல்வி! எனக்கு இன்னும் ஒரு மொந்தை கொண்டு வா” என்று கூறி, அவள் கொண்டு வந்த மொந்தைக் கள்ளைச் சிறிது பருகினான். அதனால் வேகம் கொண்டு “மாமா! ரொம்பவும் மிரட்ட வேண்டாம் என்னை” என்றான். 

“மிரட்டினால் என்னடா செய்வாய்?” என்று பெரிய மறவன் எழுந்து நின்று கொண்டான். 

மாப்பிள்ளையும் தள்ளாடித் தள்ளாடி எழுந்து நின்றான். பெரிய மறவனை அணுகி அவன் தோளில் சாய்ந்து, ”உன் குட்டை உடைத்து விடுவேன்” என்று காதோடு காதாகச் சொன்னான். அந்த ரகசியமும் குடியின் விளைவாக ரகசியமாக இல்லாததால் அது தெளிவாக பப்பகுமாரன் காதிலும் விழுந்தது. 

மாப்பிள்ளை உரைத்த ரகசியம் எதுவாயிருக்கும்? என்று பப்பகுமாரன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே பெரிய மறவன் பெரிதும் அடங்கி விட்டான். மகாவீரனான அவன் உடலும் சிறிது ஆட்டம் கண்டது. ஆகவே முறைப்பிள்ளையை சாந்தப்படுத்த முயன்று. ”மாப்பிள்ளை! வீணாகக் கலங்காதீர். வெகு சீக்கிரம் கல்யாணத்தை நடத்தி விடுவோம்” என்றான். 

அதற்குள் குடிவெறி அதிகமாகி விடவே, “அப்படி வா வழிக்கு. உன் மகளிடமும் சொல்லி வை, குமாரன் வந்தால் அவனை விரட்டி விடும்படி, அடுத்து நீ மாட்டு வேட்டைக்குப் போகும்போது நானும் வருகிறேன்” என்று கூறிவிட்டு தாமரைச்செல்வியை நோக்கித் தலையசைத்து விட்டு குடிசை மேட்டுச் சரிவில் இறங்கி நடந்து சென்றான். சில விநாடிகளில் மாட்டுக் கூட்டத்துக்குள் மறைந்தும் விட்டான். 

அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய மறவன் முகத்தில் கவலை நிறைந்து கிடந்தது. மாப்பிள்ளை சென்றதும் திரும்பி பப்பகுமாரனை நோக்கிய பெரிய மறவன், ”ஐயா! உங்களைப் பார்த்தால் பெரிய வீரராகத் தெரிகிறது. நீங்கள் யார்?” என்று வினவினான். 

பப்பகுமாரன் இதழ்களில் முறுவல் விரிந்தது. “நீங்கள்தான் சொன்னீர்களே மன்னர் ஒற்றனென்று? தெரிந்ததைக் கேட்பானேன்?” என்று வினவினான் அந்த வாலிபன் முறுவலின் ஊடே. 

”நான் செய்த தவறு அது. மன்னர் ஒரு ஒற்றனை அனுப்பியிருப்பதாகவும், அவர் இன்றோ நாளையோ காஞ்சி வரலாமென்றும் காஞ்சியில் பேசிக் கொண்டார்கள். உங்களைப் பார்த்ததும், உங்கள் தோரணையைக் கண்டதும் நீங்கள் அந்த ஒற்றராயிருக்கலாமென்று நினைத்தேன். அது தவறென்பது இப்பொழுது புரிந்து விட்டது” என்று மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பேசிய பெரிய மறவன் சட்டென்று ஒரு கேள்வியையும் வீசினான்; “அந்தப் பைத்தியம் சொன்னதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று. 

“என்ன சொன்னார் மாப்பிள்ளை?” என்று வினவினான் பப்பகுமாரன். 

“ஏதோ மாட்டு வேட்டை என்று உளறினானே?” என்றான் பெரிய மறவன். 

“அப்படியா? அப்படியொன்றும் என் காதில் விழவில்லையே” என்று ஒரே அடியாக சாதித்தான் பப்பகுமாரன். 

பெரிய மறவன் முகத்தில் சிறிது தெளிவு ஏற்பட்டதை வாலிபன் கவனிக்கத் தவறவில்லை. அடுத்து நடந்த உபசாரங்களிலும் அவன் ஏமாறவில்லை. அன்றிரவில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி அவன் ஊகத்தை உறுதிப்படுத்தியது. 

சிறிது உணவு அருந்திப் புல்தரையிலேயே படுத்திருந்த பப்பகுமாரன் நள்ளிரவில் குடிசைக்குள் பெரிய மறவன் மகளுக்குச் செய்த உபதேசம் காதில் விழுந்தது. “மகளே! இவனை ஒழித்தால்தான் நாம் பிழைத்தோம்” என்று தாமரைச்செல்வியிடம் பெரிய மறவன் ரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். 

6.கன்றல்ல, காளை! 

நள்ளிரவில் நங்கை தாமரைச்செல்வியிடம் தன்னை ஒழித்துவிடும் அவசியத்தைப் பற்றி பெரியமறவன் ரகசியமாய்ச் சொன்னதைக் காதில் வாங்கிய பப்பகுமாரன் சிந்தையில் பல எண்ணங்கள் எழுந்து உலாவின. தாமரைச்செல்வியை மணக்கும் உரிமை பெற்ற முறைப்பிள்ளை கடைசியாக பெரிய மறவன் காதில் ‘உன் குட்டை உடைத்து விடுவேன்’ என்று ரகசியம் சொன்னதுமே பெரிய மறவன் போக்கு அடியோடு மாறிவிட்டதையும் மாப்பிள்ளையிடம் அவன் மிகவும் அடக்கத்தையும் பரிவையும் காட்டியதையும், மாட்டு வேட்டையைப் பற்றி மாப்பிள்ளை குறிப்பிட்டபோது பெரிய மறவன் திகிலுற்றதையும், பிறகு தன்னை சமாதானப்படுத்த முயன்றதையும் எண்ணிப்பார்த்த குமாரன், தான் வந்த காரியத்திற்கு வித்து இருக்கும் இடம் பெரிய மறவன் வசிக்கும் அந்தக் குடிசைதானென்று ஓரளவு முடிவுசெய்து கொண்டான். 

அப்படி அவன் சிந்தனையில் திளைத்திருந்த சமயத்தில் உள்ளேயிருந்து மேலும் பேச்சுக் குரல் கேட்கவே மறுபடியும் காதுகளைத் தீட்டிக் கொண்டான் குமாரன். குடிசைக்குள்ளேயிருந்த தாமரைச்செல்வி கேட்டாள்; “இவரை எதற்காக ஒழிக்க வேண்டும்?” என்று. 

“இவன்தான் மன்னன் ஒற்றன். சந்தேகமில்லை” என்றான் பெரிய மறவன் திட்டமாக. 

“யாராயிருந்தால் நமக்கென்ன? மன்னன் ஒற்றர்களுக்குக் குற்றவாளிகளல்லவா அஞ்ச வேண்டும்?” என்றாள் தாமரைச் செல்வி. 

இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை பெரிய மறவன். சிறிது சிந்தித்துவிட்டு, “உனக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன மகளே” என்று கூறினான். 

‘நான் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அப்படி என்ன குற்றம் புரிந்து விட்டீர்கள்?’ என்று தாமரைச் செல்வி வினவினாள். 

“இவன் போகட்டும். காலையில் சொல்கிறேன்” என்றான் பெரிய மறவன். 

“அவர்தான் உறங்கிக் கொண்டிருக்கிறாரே?” என்றாள் தாமரைச் செல்வி. 

“அது உண்மை உறக்கமா, பொய்த் துயிலா என்று சொல்ல முடியாது. ஒற்றன் செவிகள் எப்பொழுதும் பாம்புச் செவிகள்” என்ற பெரிய மறவன் “உறங்கு மகளே, காலையில் பேசிக் கொள்வோம்” என்றும் சொன்னான். 

அடுத்து அவன் நன்றாகப்படுத்துப் பெருமூச்சு விட்டு அசையும் அரவம் கேட்டது. ஆனால் தாமரைச்செல்வி படுத்ததாகவோ படுக்க முயன்றதாகவோ தெரியவில்லையாகையால், அன்றைய இரவு நாடகம் முற்றுப் பெற வில்லையென்பதை உணர்ந்து கொண்ட குமாரன் நிலவு, வெளிச்சத்தில் மல்லாந்து படுத்துக் கிடந்தவன், தனது கையைப் பக்கத்திலிருந்த வாளின் பிடியின் மேலும் வைத்திருந்தான். 

உள்ளே மீண்டும் தாமரைச்செல்வியின் குரல் மெதுவாக ஒலித்தது; “அப்பா! உறக்கம் வராவிட்டால் சிறிது மது அருந்திப் படுப்பதுதானே?” என்று கேட்டாள். 

“கடையில் கள் இல்லையென்று நான் சொன்னது பொய் மகளே. கள் இருந்தும் குடிக்கவில்லை, இந்த ஒற்றனைப் பற்றிய செய்தி எட்டியதால். அதனால்தான் வழக்கத்துக்க மாறாகக் குடிக்காமல் வந்தேன்” என்றான் பெரிய மறவன். 

“அந்தக் கெடுபிடிதான் முடிந்து விட்டதே. இப்பொழுது அருந்துங்கள். அனாவசியமாகக் கண் விழிக்க வேண்டாம்” என்று கூறிய தாமரைச்செல்வி குடிசையின் ஓரத்துக்குச் சென்று ஒரு மொந்தையை எடுத்து வந்து தந்தையிடம் நீட்டினாள். பெரிய மறவன் அதை வாங்கிக் களகளவென்ற சத்தத்துடன் குடித்துவிட்டு, “அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டான். 

சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் நன்றாக உறங்கி விட்டதை உள்ளிருந்து கேட்ட ‘உர் உர்’ ரென்ற அவனது பயங்கரக் குறட்டை வெளிப்படுத்தியது. அப்பொழுதும் சிந்தை வசப்பட்ட குமாரன், தாமரைச் செல்வி எதற்காக வலுக்கட்டாயமாக அவனுக்குக் கள்ளைக் கொடுத்து உறங்க வைத்தாள்?’ என்று வினவிக் கொண்டான். 

நேரம் ஓடியது. அந்தக் காட்டுப் பகுதியில் எங்கும் அமைதி நிலவியது. பறவைகள் கூட எந்தவித சத்தமும் செய்யாமல் கூண்டுகளில் உறங்க முற்பட்டன. குடிசை மேட்டுச் சரிவை அடுத்த சமதரையில் நின்ற மாடுகளில் சில படுத்து அசைபோடத் துவங்கின. சில மாடுகள் மேட்டிலும் ஏறிவந்து படுத்துக்கொண்டன. அந்தப் பசுக் கூட்டத்தில் பெரும்பாலும் பெரியமாடுகளே இருந்தாலும் இரண்டொரு சின்னஞ்சிறு காளைக் கன்றுகளும் இருந்தபடியால் அவை துள்ளி வந்து குமாரன் பக்கத்தில் நின்று குடிசைக்குள் பார்த்தன. அப்பொழுது குடிசைக்குள் இருந்து எட்டிப் பார்த்த தாமரைச்செல்வி அந்தக் கன்றுகள் இரண்டையும் கழுத்தில் அணைத்துப் பிடித்து, “டேய் போங்கடா அப்பா தூங்குகிறார்” என்று அவற்றைத் தட்டிக் கொடுக்கவே, அவை போக மறுத்து அவளுக்கு இருபக்கத்திலும் நின்று உராயத் தொடங்கின. 

தாமரைச்செல்வி அந்த இரண்டு கன்றுகளையும் ஓட்டும் பாவனையில் அவற்றைக் கழுத்தைப் பிடித்து அணைத்து இழுத்த வண்ணம் மேட்டுச் சரிவில் இறங்க முயன்றவள் மெல்லத் தனது காலால் குமாரன் காலைத் தட்டிவிட்டுச் சென்றாள். அவள் சரிவில் நடந்து சென்றதைக் கவனித்த குமாரன் அவளது அழைப்பைப் புரிந்து கொண்டதால் எழுந்து மெதுவாக அவளைத் தொடர்ந்து சென்றான். 

சரிவில் இறங்கி மாட்டுக் கூட்டத்தை அணுகியதும் கன்றுகளை அந்தக் கூட்டத்துக்குள் ஓட்டிவிட்டுத் தானும் அந்தக் கூட்டத்தில் மறைந்தாள். அவளைத் தொடர்ந்த குமாரன் மாட்டுக் கூட்டத்தை ஆராய்ந்து, சற்று எட்ட தாமரைச்செல்வியின் தலை தெரிவதைக் கண்டு மாடுகளை விலக்கிக்கொண்டு அவள் இருந்த இடத்தை அணுகினான் அவனை தன்னைத் தொடரும்படி சைகை செய்த தாமரைச்செல்வி மாட்டுக் கூட்டத்துக்குள் மேலும் நடந்து அவற்றைக் கடந்து காட்டின் அடர்ந்த பகுதிக்கு வந்து ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்றாள். 

அவளை அணுகிய குமாரன், “செல்வி! என்னை எதற்காக அழைத்தாய்?” என்று வினவினான். 

“நீங்கள் உடனடியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களை ஆபத்து எதிர் நோக்குகிறது” என்று மெதுவாக சொன்னாள் தாமரைச்செல்வி. 

“அப்படி என்ன ஆபத்து எனக்கு ஏற்பட்டுவிட முடியும்?” என்று வினவினான் குமாரன். 

தாமரைச்செல்வியின் தாமரைக் கண்கள் குமாரனை நன்றாக ஏறெடுத்து நோக்கின. “உயிர் போவது ஆபத்தல்லவா?” என்று கேட்டாள். 

குமாரன் மெல்ல நகைத்து, “தாமரைச்செல்வி! என் உயிரை அத்தனை சுலபமாக யாரும் வாங்கி விட முடியாது. உன் தந்தையும் நான்கு மறுவர்களும் இன்று முயன்றதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டான். 

”அது நேர்ச்சண்டை. தூங்கும்போது உங்கள் மார்பில் குத்தினால் என்ன செய்வீர்கள்?” என்று அவள் வினவினாள். அவள் குரலில் துன்பம் தோய்ந்துகிடந்தது. 

“அப்படிச் செய்வது அதர்மமல்லவா?” என்று கேட்டான் குமாரன். 

‘குடிகாரனுக்கு தர்மம், அதர்மம் எல்லாம் ஒன்றுதான். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலைமையைக் குடி விளைவிக்கிறது” என்ற தாமரைச்செல்வி “பேச்சை வளர்த்துக் காலம் கடத்தாதீர்கள். போய் விடுங்கள். அதோ உங்கள் புரவி நிற்கிறது” என்று தூர இருந்த அவன் புரவியையும் சுட்டிக்காட்டினாள். 

குமாரன் தாமரைச் செல்வியின் கண்களை சந்திக்க முயன்றும் முடியவில்லை, அவள் நிலத்தில் கண்களை நிலைக்க விட்டிருந்த காரணத்தால். ஆகவே, அவளை நன்றாக நெருங்கி அவள் தாமரைவதனத்தை நிமிர்த்திக் கண்களைச் சந்தித்தான். அந்த மரத்தடியில் இலைகளில் புகுந்து விழ முயன்ற இரண்டு சிறிய சந்திர கிரணங்கள் அவள் முகத்தில் விழுந்ததால் கண்களிரண்டும் ஒளி வீசின. அந்தக் கண்களின் அழகை நீண்ட நேரம் பருகிய குமாரன் திடீரென்று அவற்றில் தனது இதழ்களைப் பொருத்தி மீண்டான். அவள் தடையேதும் செய்யவில்லை. ஆனால் ஆர்வத்தையும் காட்டவில்லை. அவன் இடது கை அவள் இடையை வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தது. வலது கை தலையை லேசாகப் பின்னுக்குச் சாய்க்க அவன் உதடுகள் அவள் கழுத்தில் புதைந்தன. 

அப்பொழுதும் அவள் மரக்கட்டையென உணர்ச்சியற்று நின்றாள். அடுத்து அவள் உடலை முழுதுமே அணைத்த குமாரன் அவள் இதழ்களை நாடினான். தனது இதழ்களுடன் இணைத்தான். இம்முறை அவள் மரக்கட்டை நிலையிலிருந்து மீண்டு விட்டாள். உணர்ச்சிகள் துள்ளியதால் தனது இதழ்களால் அவன் இதழ்களை எதிர்கொண்டாள். 

குமாரன் சொர்க்கத்திலிருந்தான். சதா சிந்திக்கும் திறன் வாய்ந்த அவன் மூளை சிந்திக்க மறுத்தது. இன்னொருவன் முறைப் பெண்ணைத் தான் தீண்டுவது முறையா? என்பதை அவன் மனம் எண்ணிப் பார்க்க மறுத்தது. ஒருநாள் பழக்கத்தில் தனக்கும் தாமரைச் செல்விக்கும் இத்தனை நெருக்கம் எப்படி ஏற்பட்டது? இது இயற்கையா? இல்லை அவள் நடிக்கிறாளா? சாதாரணமாக எழக்கூடிய கேள்வி எதையும் அவன் புத்தி எழுப்பவில்லை. 

அவள் மலர் உடலின் மென்மை அவன் மனத்தை, மனத்தின் வலுவை, உரத்தைச் சிதறடித்தது. அவன் கைக்கு அகப்பட்ட வழவழத்த அவள் உடற்பகுதிகளை அவன் வலதுகை இறுகப் பிடித்தது. பிறகு திடீரென அவன் விலகி நின்றான். 

அதன் காரணத்தை அறியாத தாமரைச்செல்வி வினாதொடுத்த கண்களை அவன்மீது நிலைக்கவிட்டாள். அவள் வினா புரிந்தே இருந்தது குமாரனுக்கு. ‘செல்வி! நான் எதைத் தேடி வந்தாலும் உன்னைப் போன்ற மாசில்லா மாணிக்கத்தைத் தேடி வரவில்லை. சண்டையைத் தேடி வந்தேன். அதில் ஒரு சாந்தியும் கலந்திருக்கும் என்பதை நான் உணரவில்லை. திருட்டைக் கண்டுபிடிக்க வந்தேன். நானே ஒரு பெண்ணின் உள்ளத்தைத் திருடுவேன் என்று நினைக்கவில்லை. நான் வருகிறேன். எதற்கும் கவலைப்படாதே. நான் எப்போதும் உனக்கு அருகிலிருப்பதாக எண்ணிக்கொள்” என்று கூறிவிட்டுத் தனது புரவியை விளித்துத் தன்னை தொடரும்படி சைகை செய்து காஞ்சியை நோக்கி நடக்கலானான். 

புரவி ஒருமுறை தாமரைச்செல்வியையும் பார்த்து குமாரனை யும் பார்த்தது. பிறகு குமாரனைப் பின்பற்றி நடந்தது. எசமானும் புரவியும் போவதைப் பார்த்துக் கொண்டே நின்ற தாமரைச்செல்வி மீண்டும் குடிசையை நோக்கி நடந்தாள். அவள் மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் எழுந்து அவளை உலுக்கிக் கொண்டிருந்தன. அதன் விளைவாக மெதுவாக மேட்டில் ஏறிக் குடிசைக்கு வந்தவளை வாயிலில் முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பெரிய மறவன், “வா மகளே” என்று வரவேற்றான். 

தந்தையைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற தாமரைச்செல்வி, “அப்பா” என்று அழைத்தாள். 

“என்னம்மா?’ 

“நான்…!” 

”உம்?” 

“நமது கன்றுகளைப் பார்க்கப் போயிருந்தேன்.” 

பெரிய மறவன் உதடுகளில் பயங்கரப் புன்முறுவல் விரிந்தது. ”அது க்ன்றல்லம்மா” என்ற அவன் சொற்களிலும் பயங்கரம் இருந்தது. 

”வேறு என்னப்பா?” என்று கேட்டாள் தாமரைச் செல்வி அச்சம் துளிர்த்த குரலில் 

“காளை” என்ற பெரிய மறவன் குரல், பயங்கரமாய் ஒலித்தது. 

7.விராட பர்வம் 

மதுவைக் குடித்துவிட்டு மயங்கிக்கிடப்பதாகத் தான் நினைத்த தந்தை குடிசைவாயிலில் முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்த தாமரைச் செல்வியின் மனம் திடுக்குற்றாலும் அதைச் சமாளித்துக் கொண்ட அவள், தான் கன்றுகளைப் பார்க்கப் போனதாகச் சொல்லியும் அந்தப் பொய்யில் விழுந்து விடாத பெரிய மறவன், அவள் பார்க்கப் போனது கன்றல்ல, காளை என்பதைச் சொன்னதும் அவள் அதிர்ச்சியும் அச்சமும் அதிகப்பட்டதால் குடிசைக்குளே செல்ல முயன்றாள். ஆனால், பெரியமறவன் அவளை உள்ளே செல்ல விடாமல் அவள் கையை இறுகப் பிடித்து நிறுத்தி “உள்ளே பிறகு போகலாம். உண்மையைச் சொல்” என்று மேலும் கேட்டான். 

அதைக்கேட்டு அவன் முகத்திலிருந்த சீற்றத்தையும் சொற்களில் ஒலித்த பயங்கரத்தையும் கண்ட தாமரைச்செல்வி, “எந்த உண்மையை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்? எதைச் சொல்லச் சொல்கிறீர்கள்?” என்று அலட்சியமாகவே கேட்டாள் தந்தையை நோக்கி. அவன் இறுகப் பிடித்திருந்த கையையும் உதறி விடுவிடுத்துக் கொண்டாள். 

பெரிய மறவன் கண்கள் அவள் அலட்சியத்தையும் துணிவையும் காணவே செய்ததால், தனது ஆத்திரத்தைச் சிறிது துறந்து, “நீ மறக்குல மகள். எதற்கும் அஞ்சாத இனம். அதனால்தான் துணிவுடன் பேசுகிறாய்” என்று சிலாகித்தான்: “சரி சொல். அவன் யார்? அவனை அழைத்துக்கொண்டு எதற்காக மாட்டுக் கூட்டத்தில் புகுந்தாய், மறைந்தாய்?” என்றும் கேட்டான். 

“அவர் யாரென்பது தெரியாது எனக்கு. இரவு ஆரம்பத்தில்தான் வந்தார். இரவு ஏறிவிட்டதால் இங்கு தங்கினார். அதற்குள் நீங்கள் வந்து நாடகம் துவங்கினீர்கள்” என்றாள் தாமரைச்செல்வி. தந்தை துவங்கிய நாடகத்தின் விளைவை நினைத்து இகழ்ச்சிக் குறியையும் வதனத்தில் படரவிட்டாள். 

பெரியமறவன் நிலத்தை நோக்கியவண்ணம் “தாமரைச்செல்வி! வந்தவனுக்கும் உனக்கும் இத்தனை சீக்கிரம் எப்படிப் பாசமும் பந்தமும் ஏற்பட்டது?” என்று வினவினான் சந்தேகக் குரலில். 

தாமரைச்செல்வியின் வதனத்தில் விரவி நின்ற இகழ்ச்சி அதிகமாயிற்று. “எந்த மறக்குல மகளுக்கும் அனாதரவான ஒரு மனிதனிடம் ஏற்படும்பாசபந்தந்தான் எனக்கும் ஏற்பட்டது. நமது வீரத்தால் வெல்ல முடியாத ஒரு வீரனை வஞ்சத்தால் அழிக்க நான் விரும்பவில்லை. உங்கள் மனத்தில் உதயமாகியிருக்கும் எந்தவித முறையற்ற பாசமோ பந்தமோ ஏற்படவில்லை எனக்கு. போதாக்குறைக்கு நீங்கள் எனக்காகத் தேர்ந்தெடுத்துள்ள மாப்பிள்ளையும் உடனிருந்திருக்கிறார்” என்று மட்மடவெனச் சொற்களை உதிர்த்த தாமரைச்செல்வி, “விடுங்கள் வழியை” என்றாள் உள்ளே செல்ல. 

“ஆனால் பெரிய மறவன் வழியை விடாமல் இடித்த புளியைப் போல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தான். “மகளே! அந்த மக்கு மாப்பிள்ளையை சாக்குக் காட்டி என்னை ஏமாற்றி விடலாமென்று நினைக்காதே. இந்த ஒற்றனை நீ தப்புவித்ததற்குக் காரணம் உன்னுடைய கருணையாக மட்டும் இருக்க முடியாது” என்ற பெரிய மறவன், “அப்படியிருந்தால் நான் கள் குடிக்கும் போதெல்லாம் தடுத்து வந்த நீ இன்று வலுக்கட்டாயமாகக் கள்ளைக் குடிக்கத் தூண்டியிருக்க மாட்டாய். ஆனால் அதிலும் உன் அப்பனை நீ புரிந்து கொள்ளவில்லை. ஒரு மொந்தையில் உறங்கும் அப்பனல்ல உன் தந்தை. நீண்ட நாளாகக் குடிக்கிறேன். ஐந்து மொந்தை உள்ளே போனாலொழிய மயக்கமோ உறக்கமோ வராது” என்று தனது குடி சாமர்த்தியத்தையும் சுட்டிக்காட்டினான். “நான் உறங்கியதும், குறட்டை விட்டதும் உன்னைச் சோதிக்கத்தான். கச்சி பெரிய மறவனை அவன் மகள் கூட ஏமாற்ற முடியாது” என்றும் சொன்னான். 

தாமரைச்செல்வியின் இதயத்தில் தந்தையின் பேச்சைக் கேட்டதால் முதலிலிருந்த அருவருப்பு அதிகமாகவே, “அப்பா! குடியைத் தவிர வேறு எதிலாவது உங்கள் வீரதீர பராக்கிரமம் உண்டா?” என்று கேட்டாள், வெறுப்பு துலங்கிய குரலில். 

பெரிய மறவன் அதைக்கேட்டு சீற்றம் கொண்டானில்லை. ”உண்மை மகளே! இதோ இந்த மாட்டுக் கூட்டம் உன் அப்பன் திறமையால் திரட்டப்பட்டது” என்றான். 

“திரட்டப்பட்டதா? திருடப்பட்டதா?” என்று கேட்டாள் தாமரைச் செல்வி. 

பெரிய மறவன் முகத்தில் மீண்டும் சினம் தாண்டவமாடியது. ”மகளே! சொற்களை அளந்து பேசு. இல்லாவிட்டால் உன்னை வெட்டி இங்கேயே புதைத்து விடுவேன்” என்றான் சுடு சொற்களால். 

‘சினத்தால் பயனில்லை தந்தையே. மாடு பிடிப்பதைப் பற்றி மாப்பிள்ளை சொன்னதும் நீங்கள் பணிந்து விட்டதைப் பார்த்தேன். திடீர் திடீரென்று எங்கிருந்தோ மாடுகளை ஓட்டி வருகிறீர்கள். மன்னன் ஒற்றனை அனுப்பியிருப்பதாகக் கேள்விப்பட்டதும் அச்சமடைகிறீர்கள். இதையெல்லாம் பார்த்தால் இந்த மாடுகள் நமக்குச் சொந்தமா என்று சந்தேகம் ஏற்படுகிறது” என்றாள் கடுமையான குரலில். “என்னை வெட்டி விடுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் கொடுத்த உயிரை நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். அவ்வளவுதானே? தந்தையே! மறக்குல மகள் மரணத்துக்கு அஞ்சமாட்டாள் என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை?” என்றும் வினவினாள். 

பெரிய மறவன் அதற்கு மேல் பேசவில்லை. அவள் உள்ளே சென்றதைத் தடுக்கவும் இல்லை. தாமரைச் செல்வி உள்ளே சென்று படுத்துக்கொண்டு கண்களை மூடினாள். அவள் கண்கள் முன்பு பப்பகுமாரனின் வீர உருவம் தோன்றியது. அவன் கைகள் தனது உடலைப் பிடித்த இடங்களை நினைத்து இன்ப வேதனைப் பட்டாள், தாமரைச்செல்வி. அதனால் சிறிது முனகவும் செய்தாள். ‘இவள் திருமணத்தை சீக்கிரம் நடத்த வேண்டும், வயது வந்த பெண்’ என்று அவள் முனகலுக்கு வியாக்கியானம் செய்தான் பெரியமறவன். குடிசைவாயிலில் உட்கார்ந்திருந்தவன் குடிசையின் பக்கவாட்டுத் தட்டியில் சாய்ந்தபடியே உறங்கலானான். 

தாமரைச்செல்விக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. ‘அந்த வாலிபன் என்ன அழகாக எனது குழலை வாரினான். சிக்கெடுத்தான்!’ என்று சிந்தித்துக்கொண்டே இருந்தாள். ‘இங்கும் ஏதோ சிக்கலை எடுக்க வந்திருப்பதாகச் சொன்னானே அது எதுவாயிருக்கும்? பொருள் பொதிந்த வார்த்தைகளைப் பேசினானே. அவன் பெரிய ஆசாமியாகத்தான் இருக்கவேண்டும். தந்தை சொல்கிறபடி ஒற்றனாயிருந்தாலும் சரியான ஒற்றன்தான்’ என்று உள்ளூரச் சொல்லிக்கொண்டாள். 

தாமரைச்செல்வி குடிசையில் குமாரனைப் பற்றி நினைத்திருந்தது போலவே அவனும் அவளை நினைத்த வண்ணமே காஞ்சி நகரத்தை நோக்கிச்சென்றான். சிறிது நேரம் புரவியில் ஏறாமல் நடந்தே சென்ற குமாரன், ‘பெரிய மறவன், என்னைப்பற்றி சந்தேகப்படுகிறான், நான் வந்தபிறகு மகள்மீது சந்தேகப்பட்டு அவளைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?’ என்று சிந்தித்தான். தாமரைச்செல்வியின் அழகிய வதனமும் கருவிழி களும் உடலமைப்பும் எத்தனை அழகு என்று நினைத்துப் பெருமூச்செறிந்தான், மாடுகளுக்கிடையில் தன்னை அவள் அழைத்துவந்த தந்திரத்தையும் பிறகு மரத்தடியில் தான் அணைத்தபோது எதிர்ப்புக் காட்டாததையும் நினைத்து, ‘நான் அவள் இடையைப் பிடித்தபோது எப்படி வளைந்தாள்! அந்த வளைவின் விளைவாக அவள் அங்க லாவண்யங்கள், எழுச்சிகள் எப்படி என் மீது உராய்ந்தன! அப்பா அதில்தான் என்ன இன்பம்! என்று நினைத்து நினைத்து உணர்ச்சிவசப் பட்டான். இந்த எண்ணங்களுடன் காஞ்சியின் புறக்காட்டைத் தாண்டி நகரின் எல்லைக்குள் நுழைந்தபோது விடியற்காலம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நகரம் துரிதமாக விழிக்க முற்பட்டது. மக்கள் நடமாட்டம் எங்கும் ஏற்பட்டது. 

குறுக்கே வந்த வேகவதி நதியின் வாய்க்காலொன்றைத் தாண்டிச் சென்ற குமாரன் எட்ட இருந்த திருவெஃகாவைக் கண்டான். வேகவதி ஆற்றில் அணைபோட தானே குறுக்கே படுத்துவிட்ட திருமாலின் அந்தக் கோட்டத்திலிருந்து மறையவர் மறைஓதும் கம்பீர ஒலி நாதவெள்ளமாகப் பாய்ந்தது, குமாரன் செவிகளில். கொற்றக்காவலர் புரவிகள் மீது ஆங்காங்கு விரைந்து கொண்டிருந்தார்கள். காஞ்சியின் பிரதான வாசலிலிருந்து கறவை மாடுகளும் கன்றுகளும் மேய்ச்சலுக்குச் சென்று கொண்டிருந்தன. அந்த மாடுகளின் அமைப்பிலிருந்து அவை தொண்டை மண்டல மாடுகள் அல்லவென்பதைப் புரிந்துகொண்ட குமாரன் தனது புரவிமீது ஏறி அவற்றைத் தொடர முற்பட்டான். ஆனால் அவற்றை ஓட்டி வந்த வீரர் இருவர் அவனை நோக்கிக் கம்புகளும் கையுமாக வந்து- “என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார்கள். 

“மாட்டைப் பார்க்கிறேன்” என்றான் குமாரன். 

“இதுவரை மாட்டைப் பார்த்ததில்லையா நீ?” என்று இருமறவர் களும் அவனை நெருங்கினார்கள். 

“மாடுகளைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சாதியைப் பார்த்ததில்லை” என்றான் குமாரன். 

“இதிலும் சாதி உண்டா?” என்று ஒருவன் கேட்டுக் கையிலிருந்த கம்பையும் சற்று உயர்த்தினான். 

”உண்டு; இவை தொண்டை மண்டல சாதியல்ல” என்றான் குமாரன், 

“வேறு எந்த மண்டல சாதி?” என்று கேட்டான் ஒருவன். 

“வடக்கத்தி சாதி” என்றான் குமாரன். 

அடுத்த மறவன் தனது கம்பை ஓங்கினான் தலைக்கு மேலே. அடுத்த விநாடி அவன் கம்பு திடீரெனப் பறிக்கப்பட்டது அவன் கைகளிலிருந்து. அந்த மறவனும் மேலே தூக்கப்பட்டான். வலிய இரு கைகளால் தூக்கி மாட்டுக் கூட்டத்தின் மீது வீசவும் பட்டான் வேகமாக. 

திடீரென ஒரு மனிதன் தங்கள் மீது விழுந்ததால் மாடுகள் சிதறின. கூட்டத்திலிருந்து தாறுமாறாக ஓடி இன்னொரு மறவனை முட்டித் தள்ளிக் கால்களால் இடறின. இரு மறவர்களும் சமாளித்து எழுந்திருப்பதற்குள் குமாரன் தனது புரவி மீது தாவி மாடுகளை மறுபடியும் வளைத்தான் ஒரு கூட்டமாக. 

அப்பொழுது தூரத்திலிருந்த ஒரு பெரிய வீட்டிலிருந்து நாகரிக உடை அணிந்த ஒரு மனிதன் குமாரனை உற்று கவனித்துக் கொண்டிருந்தான். மாடுகள் ஒரு கட்டுக்குள் வந்து மறவர்கள் அவற்றை ஓட்டிச்சென்றதும் அந்த மனிதன் கையைத் தட்டி குமாரனை அழைத்தான். குமாரனும் புரவியை நடத்திக் கொண்டு அந்த மனிதனை அணுகியதும், “ஐயா! உங்களைப் பார்த்தால் இந்த ஊராகத் தெரியவில்லை?” என்றான் அந்த மனிதன். 

”இல்லை.” -குமாரன் ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னான். 

“எந்த ஊரோ?” 

“வடக்கு தேசம்.’ 

“இங்கு எங்கு வந்தீர்?” 

“வேலை பார்க்க.” 

“என்ன வேலை?” 

“எந்த வேலையாயிருந்தாலும் பாதகமில்லை” 

அந்த மனிதன் சிறிது சிந்தித்தான். பிறகு அன்புடன் பேசத்துவங்கி, “அப்பா! உன்னைப் பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளையாகத் தெரிகிறதே” என்றான். 

“பெரிய இடத்துப் பிள்ளைகள் வேலை பார்க்கக் கூடாதா?” என்று குமாரன் கேட்டான். 

“பார்க்கலாம். ஆனால் உனக்குத் தகுந்த வேலை கொடுக்க வேண்டுமல்லவா? உன்னைப் பார்த்தால் மாட்டை ஓட்டுபவனாகத் தெரியவில்லை. வீரனாகத் தெரிகிறது. வீரனுக்குரிய வேலை பார்க்கிறாயா?” என்று கேட்டான் அந்த மனிதன். 

“எதுவும் இடத்தையும் ஊதியத்தையும் பொறுத்தது” என்றான் குமாரன். 

“இடம் இதுதான். ஊதியத்தைப் பற்றிக் கவலைப் படாதே. ஆனால் நான் அளிக்கும் பணி அபாயமானது” என்றான் அந்த மனிதன். 

ஒரு விநாடிதான் சிந்தித்தான் குமாரன். “அபாயத்தைப் பற்றிக் கவலை இல்லை” என்று சொன்னதும் அந்த மனிதன் பப்பகுமாரனை உள்ளே அழைத்துச் சென்றான். 

வீடு விசாலமாயிருந்தது. உள்ளே சென்றதும் அந்த மனிதன் வேகமாகத் திரும்பினான் குமாரனை நோக்கி, “வீரனே! நான் கொடுக்கப் போவது அரசாங்க அலுவல் வேலை. எந்த விநாடியிலும் உன் உயிர் போகலாம். சம்மதிக்கிறாயா?” என்று கேட்டான். 

“சம்மதிக்கிறேன்” என்றான் குமாரன். 

அந்த மனிதன் சற்று நிதானித்தான். “காஞ்சியின் மீது எந்த நிமிடத்திலும் படையெடுப்பு ஏற்படலாம். அதைத் தடுக்காவிட்டால் காஞ்சி அழியும்” என்றான் அந்த மனிதன். 

‘அதை நான் எப்படித் தடுக்க முடியும்?” என்று வினவினான் குமாரன். 

“மாட்டுத் திருட்டை நிறுத்தினால் தடுத்துவிடலாம். அதைத் தடுப்பது உன் முதல் வேலை” என்று கூறினான் அந்த மனிதன். 

“ஒரு கூட்டத்தைத் தடுத்தால் மாட்டுத் திருட்டு நிற்கும். மாட்டுத் திருட்டு நின்றால் காஞ்சி பிழைக்கும். அந்த விவரங்களை நீ உணவருந்திய பிறகு சொல்கிறேன். முதலில் நீராடிவிட்டு வா.” 

இதைச் சொன்ன அந்த மனிதன் வீட்டுக்குப் பின்னாலிருந்த குளத்தைக் காட்டினான். குமாரன் நீராடி உணவருந்திய பிறகு காஞ்சியின் நிலையையும், காரணத்தையும் சொன்னான் அந்த மனிதன். நிலைமை மிகப் பயங்கரமாயிருந்தது. 

“பஞ்சபாண்டவர் காலம் முதல் இதே கதைதான்” என்றான் அந்த மனிதன் முடிவில். 

“அதற்கும் காஞ்சி நிலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று குமாரன் கேட்டான். 

“விராட பர்வத்தைப் படித்துப் பார்” என்றான் அந்த மனிதன். 

8.மது மண்டபம் 

‘வீராட பர்வத்தைப் படித்துப் பார்’ என்று அந்த மனிதன் சொன்னதும் அதன் அடிப்படையைப் புரிந்து கொண்ட பப்பகுமாரன், உண்மையில் காஞ்சியின் ஆபத்து அதிகந்தா னென்பதை உணர்ந்து கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமலும், அந்த மனிதன் வாய் மூலமாகவே உள்ள நிலையை அறியவும் முடிவு செய்து “விராடபர்வம் படித்திருக்கிறேன். மகாபாரத்தைப் படிக்காதவன் பாரதத்தில் யார் இருக்க முடியும்?” என்று கேட்டான். 

காஞ்சியின் பெரிய மனிதர், “நல்லது. அதே நிலைதான் இன்று காஞ்சிக்கும். அந்த மாடு பிடிச் சண்டையைப் போலவே இங்கும் நிகழலாம்” என்று சொன்னார். 

“அங்கு கௌரவர்கள் பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தை. அதற்காகப் பாண்டவர்கள் போட்ட வேஷத்தைக் கலைக்க விராடன் மாடுகளைக் கைப்பற்றினார்கள். அதனால் ஏற்பட்டது இரண்டு அரசுகளின் மோதல். இங்கு அப்படி என்ன இருக்கிறது? எந்த இரண்டு அரசுகள் மோத இருக்கின்றன? இங்கு மறைவில் பதுங்கி இருப்பவர்கள் யார்?” என்று வினாக்களைத் தொடுத்தான் குமாரன். 

அந்த மாளிகைக் கூடத்தின் அலங்கார ஆசனத்தில் உட்கார்ந்திருந்த அந்த மனிதர் பப்பகுமாரனை உற்று நோக்கினாரே தவிர அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. பதில் சொன்னபோதும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தவே முயன்றார். “வீரனே! நீ கேட்ட கேள்விகள் உன் கூர்மையான புத்தியைக் காட்டுக்கின்றன. நீ யார்? காஞ்சிக்கு ஏன் வந்தாய்? எங்கிருந்து வந்தாய் என்ற விவரங்களைச் சொல்” என்று கேட்டார். 

சிறிதும் சிந்திக்காமலே பதில் சொன்னான் பப்பகுமாரன். “ஐயா, நான் ஆந்திர நாட்டிலிருந்து வருகிறேன். இங்கு ஏதோ திருட்டுகளும் கலவரங்களும் நடப்பதாகக் கேள்விப்பட்டதால் என் வாளுக்கு இங்கு வேலை கிடைக்கும் என்று வந்தேன்?” என்று கூறியவன், “எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது” என்றான். 

“என்ன சந்தேகம்? எதுவாயிருந்தாலும் தைரியமாகக் கேள்” என்றார் அந்த மனிதர். 

“தாங்கள் யார்? முன்பின் தெரியாத என்னை எப்படி வேலைக்கு அமர்த்திக்கொள்ள முயன்றீர்கள்?” என்று வினவினான் குமாரன். 

இதைக் கேட்ட அந்தப் பெரிய மனிதன் புன்முறுவல் கொண்டார். “வீரனே! இந்தக் காஞ்சி மாநகரின் பெரிய தனக்காரர் நான். இந்த மாநகரின் சமூகப் பூசல்களைத் தீர்க்கும் அதிகாரம் பெற்றவன். என் பெயர் நிருபவர்மர்” என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்தப் பெரிய மனிதர், “சற்று முன்பு நீ மறவர்களை அநாயசமாகச் சமாளித்ததைப் பார்த்தேன். மாடுகளை வளைத்துப் பழையபடி கட்டுக்குள் கொண்டு வந்ததையும் பார்த்தேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உன்னைப் பார்த்ததும், உன் செயலைக் கண்டதும் காஞ்சிக்கு உன் பணி தேவை என்று தீர்மானித்தேன். அதனால் உன்னை அமர்த்திக் கொள்ள முடிவு செய்தேன். தவிர எந்த மனிதனையும் பார்த்த மாத்திரத்தில் என்னால் எடைபோடமுடியும்” என்று கூறினார். 

பப்பகுமாரன் சிறிது சிந்தனையில் இறங்கினான். ‘நிருபவர்மர்! எங்கோ கேட்ட பெயராகத் தெரிகிறது’ என்று உள்ளூர சொல்லிக் கொண்டகுமாரன், “நிருபவர்மர் என்று பெயர் இருப்பதால் தாங்கள் பல்லவ ராஜ குலமாக இருக்கவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசினான். 

“ஆம் வீரனே! நான் பல்லவர் குலந்தான். ஆனால் ஏதோ தூரத்து உறவு. அதை உறவு கொண்டாடுவதில் பயன் ஏதுமில்லை. பல்லவன் என்று சொன்னதும் ஓடும் எதிரிகள் யாரும் இந்தப் பகுதியில் கிடையாது” என்ற பெரிய தனக்காரர், “உன் பெயரென்ன?” என்று விசாரித்தார். 

“குமாரன்” என்றான் பப்பகுமாரன். 

“வெறும் குமாரனா?” என்று கேட்டார் நிருபவர்மர். 

“ஆம்.” 

“எப்படியிருந்தாலென்ன? நீ வீரன். காஞ்சிக்கு உதவ முடியும். இன்றே நீ வேலையை ஒப்புக்கொள்ளலாம். நான் ஒரு ஓலை கொடுக்கிறேன். காஞ்சி அரண்மனையில் அதைக் கொண்டுபோய்க் கொடு. உன்னைக் காவற்படையில் சேர்த்துக் கொள்வார்கள்.” 

இதைக் கேட்டதும் குமாரன் மீண்டும் சிந்தனையில் இறங்கினான். ”நிருபவர்மரே! முதலில் இங்கு, வேலை கொடுப்பதாகச் சொன்னீர்கள். இப்பொழுது அரசாங்க வேலைக்கு ஓலை கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமில்லையா?” என்று கேட்டான் சிறிது சிந்தனைக்குப் பிறகு. 

“இரண்டு வேலைகளுக்கும் வித்தியாசமில்லை. ஆனால் அந்த வேலையில் உனக்கு உதவி இருக்கும். சில வீரர்களுக்குத் தலைவனாயிருக்கலாம்” என்று வேலை வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டினார். 

குமாரன் பதில் தயக்கமின்றி வந்தது. “எனக்கு எந்த உதவியும் தேவையில்லை” என்றான் அவன். “தவிர அரசாங்க வேலைக்கும் எனக்கும் வெகு தூரம்!” என்றும் கூறினான். 

“வாலிபனே! உன் வயது உன்னை இப்படிப் பேசச் செய்கிறது. தனி வீரனாக இந்தக் காஞ்சியில் யாரும் இப்பொழுது இயங்க முடியாது. இங்கு சட்ட திட்டங்கள் எதுவும் கிடையாது. இந்த ஊரில் தடியெடுத்தவன் தண்டல்காரன். இங்குள்ள அரசின் உதவி உனக்குப் பயனளிக்கும். தனிப்பட இயங்கினால் நீ இரண்டுநாள் கூடப் பிழைத்திருக்க முடியாது” என்ற நிருபவர்மர் காஞ்சியின் நிலையைத் தெளிவாக எடுத்து விவரிக்க முற்பட்டார். 

“இப்பொழுது காஞ்சியின் உண்மையான மன்னர், பப்பதேவர். அவர் பல்லவபுரியில் (பல்லாரியில்) இருக்கிறார். அங்கிருந்து இந்தப் பகுதியை, காஞ்சி மண்டலத்தை ஆள அவரால் முடியவில்லை. இங்குள்ள அவர் படைத்தலைவன் அடிக்கும் கொள்ளையை யாரும் தடுக்க முடியவில்லை. மறவர்கள் புறப் பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் பசுக்களைத் திருடி வருகிறார்கள். அவர்களைத் தடுக்கவில்லை அந்தப் படைத் தலைவன். அவர்கள் திருட்டில் தானும் ஒரு பகுதியைப் பெறுகிறான்’ என்று சொன்ன நிருபவர்மர். சிறிது நிதானித்துவிட்டு, “இவர்கள் யாரிடமிருந்து பசுக்களைத் திருடுகிறார்களோ அவர்களும் கள்வர்கள். ஆனால் பெரும் கூட்டாமாகக் கிட்டத்தட்ட ஒரு சேனையைப் போல்செயல் படுகிறார்கள். அந்தக் கூட்டத்தார் அடிக்கடி காஞ்சியைத் தாக்குகிறார்கள் அவர்கள் எப்பொழுது வருகிறார்கள், எப்பொழுது போகிறார்கள், எந்த எல்லையைத் தாக்குகிறார்கள் என்பதும்; புலப்படவில்லை. அதனால் காஞ்சியில் அமைதி கிடையாது. சதா பயத்தில் வாழ்கிறது இந்த மாநகர்” என்றும் விளக்கினார். 

குமாரன் முகத்தில் லேசாகச் சினம் துளிர்த்தது. ‘காஞ்சியின் காவலனே கொள்ளையில் ஈடுபட்டால் வேலியே பயிரை மேய்வது போலல்லவா இருக்கும்?” என்று வினவினான் சினத்துடனேயே. 

“பப்ப தேவர் இங்கு போட்டது வேலி அல்ல. திருடனைக் காவலனாக அனுப்பியிருக்கிறார்” என்றார் நிருபவர்மர். 

“காஞ்சிக் காவலனை எங்கு பார்க்கலாம்?” என்று குமாரன் கேட்டான். 

“காஞ்சியின் அரண்மனையில் அல்லது இந்த நகரின் தென்கோடியிலிருக்கும் மதுமண்டபத்தில்” என்றார் நிருபவர்மர். 

“மது மண்டபம் என்றால் கள்ளுக் கடையைச் சொல்கிறீர்களா?” -குமாரன் வினாவில் வியப்பு இருந்தது. 

“கள் அங்கு விற்கப்பட்டாலும் அது பழைய காலத்து மண்டபம். அங்கு கொண்டு வரும் பசுக்களையும் உழவு மாடுகளையும் பெருமளவில் வளைத்திருக்கிறார்கள். பார்க்க மிக ரம்மிய மாயிருக்கும். அந்த இடத்துக்கு ஒவ்வொரு காலையிலும் காஞ்சிக் காவலன் வருகிறான், கொள்ளையில் பங்கு கொள்ள. மதுமண்டபம் மிகப் பெரியது. அழகானது. அதன் சொந்தக்காரர்கள் மறவர்கள். யாரும் அங்கு தலை நீட்டி விசாரணை செய்து மீள முடியாது. இதுவரையிலும் அந்தக் கொள்ளையை விசாரிக்க முயன்ற பெரிய வீரர்கள் மூவர், வெட்டி மயானத்தில் போடப்பட்டார்கள். அவர்கள் சடலங்கள் கழுகுக்கு இரையாயின” என்று நடந்ததை விளக்கினார். 

அப்பொழுது குமாரனுக்கு ஒரு சந்தேகம் வரவே, “காஞ்சியின் தலைவன் உங்களை மட்டும் எப்படி இவ்வளவு சொத்தை வைத்துக் கொண்டு வாழவிடுகிறான்?” என்று வினவினான். 

“நான் பல்லவ மன்னனுக்கு உறவு என்பது ஒரு காரணம். என்னிடம் விற்கப்படும் திருட்டு மாடுகளுக்கு நான் உடனடியாகப் பணம் கொடுத்துவிடுவது இரண்டாவது காரணம். என்னிடமும் திறமையான வாள்வீரர்கள் இருக்கின்றார்கள் என்பது மூன்றாவது காரணம். நான் இந்தக் காஞ்சி மண்டலத்தன் நீதிபதியாக, அவர்கள் சொல்கிறபடி நீதி வழங்குவது முக்கியமான நான்காவது காரணம்” என்று விளக்கிய நிருபவர்மர், “எனது நீதி நிர்வாகம் முடிவுகள் மன்னருக்கு அடிக்கடி அனுப்பப்படுவதால் மன்னர் இங்கு தலையிடாதிருக்கிறார். பப்பதேவர் நீதி நிர்வாகத்தில் மிகவும் அக்கறையுள்ளவர். இங்கு நடக்கும் விஷயம் ஏதாவது அவர் காதுக்கு எட்டினால் அங்கிருந்து படைவரும் என்ற அச்சம் இங்குள்ள தலைவனுக்கு இருக்கிறது. ஆகவே, எல்லாம் நீதிப்படி நடப்பதாகக் காட்ட எனது தீர்ப்புகள் பல்லவபுரிக்கு எழுதி அனுப்பப் படுகின்றன” என்று நிலைமையை மிகவும் தெளிவுபடுத்தினார் நிருபவர்மர். அத்துடன் சொன்னார், “உனக்கு அரசாங்க வேலை வேண்டாமென்றால் எனது வீரர்களுக்குத் தலைவனாயிரு. இங்கு பெரும்படை ஏது மில்லை” என்று. 

பப்பகுமாரன் முறுவல் கொண்டான்: “நிருபவர்மரே என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் ஒருவனே ஒரு படைக்குச் சமானம். இன்று முதல் உங்கள் பண்ணையைக் காக்கும் பொறுப்பு என்னுடையது. எதற்கும் ஊரைச் சுற்றிப் பார்த்து வருகிறேன்” என்று கூறினான். 

“எங்கு போனாலும் மது மண்டபத்துக்குப் போகாதே” என்று எச்சரித்தார், நிருபவர்மர். 

ஆனால் நிருபவர்மர் பேச்சை குமாரன் கேட்கவில்லை. காஞ்சியைச் சுற்றிப் பார்க்கப் புரவியில் கிளம்பியவன் அதன் தேரோடும் வீதிகளையும், கடைவீதியையும், பொற்கொல்லர் வீதியையும் பார்த்தான். கடைசியாக ராஜவீதியில் புகுந்து அரண்மனையைப் பார்த்தான். அன்று மாலை நிருபவர்மர் எச்சரிக்கையைப் புறக்கணித்து மண்டபத்துக்கும் சென்றான். மதுமண்டபம் அரண்மனையை விடப் பெரிதாகக் காட்சியளித்தது. ஆங்காங்கு பசுக் கூட்டங்கள் திரிந்து கொண்டிருந்தன. கள்ளைக் குடித்த மறவர்கள் பெரிதாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். 

அப்பொழுது விளக்கு வைக்கும் நேரம். ஆங்காங்கு விளக்குகள் ஏற்றப்பட்டதால் குடிகாரரும் பசுக்களுமாகச் சேர்ந்து விசித்திரமான சூழ்நிலையை சிருஷ்டித்திருந்தது மாலைநேரம். அந்த சமயத்தில் பெரிதாக மண்டபத்துள் யாரோ அலறும் ஒலி கேட்டது. அடுத்த இரண்டு நிமிடங்களில் ஒரு பெண் தலைவிரிகோலமாக வெளியே ஓடி வந்தாள். விரைந்து வந்து அவள் தலைமயிரைப் பிடித்து இழுத்தான் ஒரு வீரன். அப்படி இழுத்து அவன் அவளைத் திருப்பிய போது மதுமண்டபத்தின் வாயில் விளக்கொளி அவள் முகத்தில் விழவே பேரதிர்ச்சியடைந்தான் குமாரன். அவள் தாமரைச்செல்வி. அவள் சேலை பல இடங்களில் கிழிக்கப்பட்டிருந்தது. முகத்தில் நகக்கீறல் ஒன்றும் தெரிந்தது.

– தொடரும்…

– பல்லவ பீடம், பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *