கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 2,268 
 
 

கதை நிகழும் ஆண்டு – 2013 ம் ஆண்டு

வெளியே மழை பொழிந்து கொண்டிருந்த சத்தம் கேட்டு , தேன்மொழி விழித்தெழுந்தாள். அட மணி எட்டாகி விட்டதே இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன். ஞாயிற்றுக் கிழமை தானே தூங்கட்டும் என்று அந்த விடுதியின் பொறுப்பாளர் விசாலாட்சி , மாடிக்கு வந்த போது இவளை எழுப்பாமல் போயிருப்பார். ரோஷ்ணி இருந்த வரை , அவள் ஆறு மணியிலிருந்து இவளை எழுப்பிக் கொண்டே இருப்பாள். ஞாயிற்றுக் கிழமை ஆனாலும் தூங்க விட மாட்டாள். ஞாயிற்றுக் கிழமை அவளுக்கு கொண்டாட்டம் தான். அவளை நச்சரித்து தயார் செய்து சுற்றித் திரிய அழைத்துச் சென்று விடுவாள். இன்று ஒரு நாளாவது விடுதியிலேயே இருக்கிறேன் என்று கெஞ்சினாலும் விட மாட்டாள். தினமும் தான் ஹாஸ்டலில் சாப்பிடுகிறோம் இன்று வெளியே சாப்பிடலாம் என்பாள். எங்கிருந்தோ வந்த சின்ன பொண்ணுடன் நாம் எப்படி ஒட்டிக் கொண்டோம் அவள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போகிறோம் என்று யாருடன் ஒட்டிப் பழகாத அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது .

இந்த மகளிர் விடுதியின் பொறுப்பாளர் விசாலாட்சி , தேன்மொழிக்கு தூரத்து சொந்தம். அதனால்தான் மூன்றாவது மாடியில் உள்ள , சகல வசதிகளையும் கொண்ட அறையை இவளுக்கு கொடுக்க முன் வந்தார். குளியலறை உள்ளிட்டவை அறைக்குள்ளேயே. இது போல் , மூன்றாவது மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. மற்றொரு அறையில் , மும்தாஜ் என்னும் பெண்மணி இருக்கிறார். மும்தாஜ் , விசாலாட்சியுடன் படித்தவர் என்பதால் அந்த அறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த து. தேன்மொழிக்கு முப்பது வயது . மும்தாஜ் மேடத்திற்கு நாற்பது வயது இருக்கலாம். அவருடைய கம்பீரத் தோற்றம் அவரது வயதைக் கூட்டிக் காண்பிக்கும். மும்தாஜ் , ஆங்கில நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவருக்கு வீடு செங்கல்பட்டில். பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல நேரமாகி விடும் நாட்களில் அவர் விடுதியில் தங்குவார். மும்தாஜும் தேன்மொழியும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். போகும் போதும் வரும் போதும் புன்னகைப் பரிமாற்றம் . அதோடு சரி. தன்னைப் போன்ற அக்கவுன்டன்ட்க்கு எல்லாம் இந்த கம்பீரத் தோற்றம் வராதா என்று தேன்மொழி நினைத்துக் கொள்வாள்.

தேன்மொழி , தனியாக இருப்பதையே விரும்பினாள். விடுதியில் உள்ள மற்ற பெண்களின் அறைகளுக்குச் சென்று அளவளாவது இல்லை. கீழே போய் சாப்பிட்டு வந்தால் , துணிமணிகளைத் துவைப்பாள். ரேடியோ கேட்பாள். டிவி பார்ப்பாள். விசாலாட்சியிடம் அறைக்குள் வேறு யாரையும் அனுப்பி விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். அடிக்கடி அப்படி சொல்லி வைத்தும் அவர் ரோஷ்ணியை அவளுடைய அறையில் தங்க வைத்து விட்டார்.

‘கீழே எல்லாம் ரூம் இல்லம்மா ஒரு ரூம்ல அஞ்சாறு பேர் இருக்காங்க . உனக்கு தொல்லை கொடுக்காம இருக்க சொல்லி இருக்கேன் ‘ என்றார் விசாலாட்சி .தேன்மொழியால் மறுக்க முடியவில்லை. அப்படித்தான் அவளுடைய அறைக்கு வந்தாள் ரோஷ்ணி . அவளுடைய மனதிற்குள்ளும் நுழைந்து விட்டாள். ரோஷ்ணி பற்றிய நினைவலைகளுடன் குளியலறையை நோக்கிச் சென்றாள் தேன்மொழி.

‘மேம் என் பேரு ரோஷ்ணி. ஒங்க பேரு …. ‘

‘என் பேரு தேன்மொழி. இங்க சென்னையில என்ன பண்ற ‘

‘இங்க தாம்பரம் எஸ்.ஆர் . எஞ்சினியரிங் காலேஜ்ல சேர்ந்திருக்கேன். லாஸ்ட் அவர்ல ஜாயின் பண்ணதால அங்க ஹாஸ்ட்டல்ல இடம் கிடைக்கல . நுங்கம்பாக்கம் வந்தப்ப இந்த வுமன்ஸ் ஹாஸ்ட்டல் பார்த்தேன் . வந்துட்டேன். ‘

‘எந்த ஊரு உனக்கு ‘

‘இம்பால் – மணிப்பூரோட கேப்பிட்டல் ‘

தேன்மொழி அவளுடைய தமிழை ரசித்தாள். சிரித்தாள்.

‘என்ன மேம் சிரிக்கிறீங்க ‘

‘இல்ல எங்க தமிழ் சினிமால தான் வெளிநாட்டுக் காரன் கூட தமிழ்ல பேசுவான். . கேட்டா தமிழ்நாட்ல இருந்தப்ப கத்துக்கிட்டேன்னு சொல்வான். அது மாதிரி நீ வெளுத்துக் கட்றியே எப்படி ? ‘

‘எங்க காலேஜ்ல மத்த ஸ்டேட் ஸ்டூடன்ட்ஸ்க்காக தமிழ் கம்யூனிகேஷன் கிளாஸ் எடுக்கிறாங்க . இளங்கோ ன்னு ஒரு சார் ஈசியா புரியும்படி டீச் பண்றாரு. பேச கத்துக்கிட்டேன். சீக்கிரமே எழுத படிக்க கத்துக்குவேன் ‘

‘ஒன்னோட தமிழ் ஆர்வத்துக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் . சென்னையில நாங்க பார்க்கிற நார்த் ஈஸ்ட் பொண்ணுங்க மாதிரி நீ இல்லையே உடம்பெல்லாம் மூடி ட்ரெஸ் போட்டிருக்க துப்பட்டாவும் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு ‘

‘இந்த ஹாஸ்ட்டலுக்காக , காலேஜ்க்காக இல்ல நான் எப்பவும் இப்படித்தான். ‘

‘நாங்க எல்லாம் அந்தப் பக்கம் போக முடியறது இல்ல . நீங்க எல்லாம் நாட்டோட இன்னொரு மூளைக்கு கிளம்பி வந்துடறீங்க . எத்தனை பேரு நீங்க … ‘

‘செவன் சிஸ்டர்ஸ் … ‘

‘ஒங்க அப்பா அம்மாவுக்கு ஏழு பேரா …’

‘அது இல்ல மேம் நீங்க நார்த் ஈஸ்ட் ன்னு பேசினீங்க இல்ல அதுக்கு சொல்ல வந்தேன். ஏழு ஸ்டேட்ஸ் அது என்ன வடகிழக்கு ஸ்டேட்ஸ் , செவன் சிஸ்டர்ஸ் ன்னு சொல்வாங்க. அசாம் , மேகாலாயா , திரிபுரா , அருணாசலப் பிரதேசம் , மிசோரம் , மணிப்பூர் , நாகாலாந்து … சுதந்திர நாடாகாணும் னு போராடற திபெத்தும் பக்கத்துல இருக்கு . மணிப்பூர்னா லேண்ட் ஆப் ஜுவல் ன்னு அர்த்தம் . ஒரு இங்கிலீஷ் மேன் , மணிப்பூரை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்துன்னு சொன்னாருன்னு படிச்சிருக்கேன். நம்ம நேருஜி , ஜுவல் ஆப் இந்தியான்னு சொன்னாரு… ‘

‘உன் பேமிலிய பத்தி கேட்டா நீ சுத்தி உள்ள ஸ்டேட்ஸ் பத்தி விரிவா சொல்லிட்டே ‘

‘சாரி மேம் எங்க அப்பா அம்மாவுக்கு நன் ஒரே பொண்ணு . அப்பா அங்க பிசினஸ் பண்றாரு . ஒங்களோட இருக்க அலோ பண்ணிங்க தாங்க்ஸ் . தேன்மொழின்னா என்ன அர்த்தம் மேம் … ‘

‘ஹனி மாதிரி பேசறவன்னு அர்த்தம் … ‘

‘அப்படியா … ஒங்கள இனிமே ஹனி மேம்னு கூப்பிடறேன். …. ‘

‘சரி’ புன்னகைத்தாள் தேன்மொழி .

‘என் பேரு மீனிங் … ‘

‘தெரியும் வெளிச்சம் , ஒளி … ‘

‘ப்பா .. நீங்க இந்தி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க .. எங்க அப்பாவுக்கு பிடிச்ச இந்தி வேர்ட் .. அதையே எனக்கு பேரா வைச்சாரு ‘

‘பேர் மாதிரி நீ பளிச்னு இருக்கே ‘

‘நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க ‘

‘ஒன் கலர் எனக்கு இருந்தா …. ‘

‘கலர்ல என்ன இருக்கு மேம் .. பிஹேவியர் கேரக்ட்டர் தானே முக்கியம் ‘

அன்றைக்குப் பேச ஆரம்பித்தவள் , பேசிக் கொண்டே இருந்தாள். தேன்மொழி பணிபுரியும் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கே அவளைத் தேடி வந்தாள் ஒரு நாள்.

‘மேம் .. அப்பாகிட்டேந்து பணம் வரலை .. நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா ? ‘

லிஃப்ட்டில் இறங்கி வந்து ஏடிஎம் க்கு வந்து அவளுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தாள். பெற்றோரிடமிருந்து பணம் வந்த தும் வாங்கிய தொகையைக் கொடுத்து விடுவாள். வெளியே சுற்றும் போதும் செலவாகும் பணத்தில் பாதி தொகையைக் கொடுத்து விடுவாள்.

இந்தக் காலத்து இளைஞர்களைப் போல் , இளம்பெண்களைப் போல் , சதா சர்வகாலமும் மொபைலில் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பவளாக ரோஷ்ணி இருக்கவில்லை. காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பாள். அவள் கல்லூரிப் பாடத்தைப் படிப்பதை தேன்மொழி பார்த்த து இல்லை. தேன்மொழி கேட்கத் தயாராக இருந்தால் போதும் . கொச்சைத் தமிழில் , ஆங்கிலத்தில் கதைகளை விவரித்துக் கொண்டே இருப்பாள். அலைஸ் இன் வொண்டர்லேண்ட் , ராபின் ஹூட் முதல் ஹாரி பாட்டர் வரை சலிப்பு இல்லாமல் சொல்லிக் கொண்டே இருப்பாள். தெரிந்த பெயர் , தெரியாத கதை என்பதால் , தேன்மொழியும் ஆர்வத்துடன் செவி மடுப்பாள்.

ரோஷ்ணி , ஆங்கில நாவல்களை வாசிக்காமல் , காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது தேன்மொழி க்கு ஆச்சரியமாக இருந்தது . புத்தம் புதிய காமிக்ஸ் பத்திரிகைகளை அவள் வாங்க மாட்டாள். பழைய புத்தக கடைகளிலிருந்து கட்டு கட்டாக வாங்கி வருவாள். சில கடைகளில் இவள் போய் நின்றதுமே அவர்கள் கொடுப்பதை தேன்மொழி பார்த்திருக்கிறாள்.

எந்த வகையிலும் அவள் தொல்லை கொடுக்காமல் இருந்தாள். இவள் டிவி பார்க்கும் போது அவள் புத்தகங்களில் ஐக்கியமாகி இருப்பாள். டிவியை நிறுத்தி விட்டால் பேச ஆரம்பிப்பாள். கதை சொல்வாள். கேள்வி கேட்பாள்.

‘மேம் நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல … ‘

‘டைம் வரங ரோஷ்ணி ‘

‘யாரையாவது லவ் பண்றீங்களா … ‘

‘ஒருத்தர செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன் .. ‘

‘அதுக்குதான் லவ் ன்னு பேரு … அவர் நேம் என்ன .. ஒங்க ஆபீசா … ‘

‘அவர் செல்போன் கம்பெனில மேனேஜர் .. திவாகர் ன்னு பேரு .. ‘

‘அது என்ன சொல்வாங்க .. வெட்டிங் பெல் .. கெட்டி மேளம் அடிக்க வேண்டியதுதானே ஏன் தள்ளிப் போடறீங்க ….’

‘அவரோட தங்கைக்கு சரியா அலயன்ஸ் அமையல அவங்களுக்கு வரன் கிடைச்சு … கல்யாணம் முடிஞ்சு அப்புறம் தான் எங்க கல்யாணம் … ‘

‘சேம் டைம்ல ரெண்டு மேரேஜ் வெச்சுக்கலாமே .. சார் நம்பர் கொடுங்க நான் பேசறேன் ஹனி சிஸ்டருக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றேன் … ‘

‘ எனக்கு ஒண்ணும் வயசாகல ஒன் வேலையைப் பாரு காமிக்ஸ் கதையை விட்டுட்டு என் கதையை கிளற வந்துட்டியா ‘

தேன்மொழி எழுந்து அவளை அடிக்க கையை ஓங்கியபோது அவற் ஓடினாள்.

‘எங்க ஓடற ரோஷ்ணி … ‘

‘ரேஷ்மா ரூமல செஸ் ப்ளே பண்ணிட்டு வர்றேன். உங்களுக்கு தான் செஸ் தெரியாதே …‘

‘ஹாஸ்ட்டல் எல்லார்கிட்டயும் இதை சொல்லிட்டு வா .. ‘

‘சரி சொல்லிடறேன்.. ‘

ஒரு நாள். அலுவலகம் செல்ல படிகளில் இறங்கிக் கொண்டிருந்த போது விசாலாட்சி எதிரே வந்தார்.

‘என்ன தேனு மணிப்பூர் பொண்ணு ஒன் கிட்ட ஒட்டிகிச்சு போலிருக்கு .. இப்ப புரியுதா .. கூட ஒரு ஆள் இருந்தா அது ஒரு தினுசு. எப்படி ஒத்துப் போச்சு ரெண்டு பேருக்கும் …. ‘

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு தாத்தா சொன்னதை நடைமுறைப்படுத்தினேன் அத்தை … ‘

‘சங்கப் புலவர் உனக்கு தாத்தாவா ? ‘

‘முன்னோர்கள் எல்லோரும் தாத்தா தானே வரேன் அத்தை ‘

விசாலாட்சி புன்னகை பூத்தார்.

மறுநாள்.தேன்மொழி சிற்றுண்டி உண்டு முடித்து மாற்று உடை அணிந்து அலுவலகம் செல்லத் தயாரான தருணத்தில் , ரோஷ்ணி , படுக்கையிலேயே இருப்பதைப் பார்த்தாள். ஆறு மணிக்கே எழுந்து ஒரு சுற்று சுற்றி வருவாள். ஏன் படுத்துக் கொண்டிருக்கிறாள்?

தேன்மொழி அவளைத் தொட்டு எழுப்பினாள்.

‘ஹனி அக்கா உடம்பு முடியல .. ‘

‘என்ன செய்யுது .. எழுந்து குளி சரியாயிடும் … காலேஜ்க்கு போகணும் இல்ல ‘

‘இல்ல பீரியட்ஸ்னால …..ப்ராப்ளம் … ‘

‘சரி வா டாக்டர் கிட்ட போகலாம். ‘

‘நீங்க ஆபீஸ் … ‘

‘நான் பர்மிஷன் போட்டுக்கறேன். நீ வேற நல்ல ட்ரெஸ் போட்டுகிட்டு வா … ‘

பர்மிஷனோடு முடியவில்லை. டாக்டரைப் பார்த்து பரிசோதித்து மீண்டும் விடுதிக்குத் திரும்புவதற்குள் அரை நாள் ஓடி விட்டது. அறையில் படுக்கையில் அமர்ந்தாள் ரோஷ்ணி . ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தாள் தேன்மொழி . குடித்து முடித்து மொபைல் பார்த்துக் கொண்டிருந்த ரோஷ்ணி ஈனஸ்வரத்தில் பேச ஆரம்பித்தாள் .

‘தாங்க்ஸ் அக்கா . ஒங்கள ட்ரபிள் செஞ்சுட்டேன். ஒரு கால் டாக்சி புக் பண்ண முடியுமா?‘

‘இப்ப எங்கே போக போற …. உடம்பு சரியானாட்டு காலேஜ்க்கு போகலாம். ‘

‘காலேஜ்க்கு இல்ல அக்கா … ஊருக்கு … ‘

‘எந்த ஊருக்கு … ஹெல்த் சரி இல்ல .. சும்மா இரு .. ‘

‘எங்க சொந்த ஊருக்கு … வடகிழக்கு ஆளுங்களுக்கு லைஃப் த்ரெட் இருக்கு கிளம்பணும்னு சொல்றாங்க .. ‘

‘இல்ல .. ரூமர்ஸ் நம்பாதே …

அவளுடைய மொபைல் ஒலித்த து . அவர்களுடைய மொழியில் சில நிமிடங்கள் பேசினாள்.

‘அக்கா … பேரன்ட்ஸ் பேசுது .. வந்துடுன்னு சொல்லுது … ‘

‘இரு .. உடம்பு கொஞ்சம் சரியாகட்டும் … ‘

‘இல்ல .. கோபிச்சுக்காதீங்க … அப்பா அம்மா வான்னு சொல்றாங்க கிளம்பறேன் … கோச்சுக்காதீங்க … ‘

‘சரி உன் இஷ்டம் அந்த மாத்திரை மருந்து எல்லாம் மறக்காம எடுத்து வெச்சுக்க . பேக் ரெடி பண்ணு . ஃபுட் இங்கேயே கொண்டு வரச் சொல்றேன். சாப்பிட்டு கிளம்பு நான் டாக்சி புக் பண்றேன் … ‘

‘மேம் … சாரி அக்கா .. ட்ரீட்மென்ட் எக்ஸ்பென்ஸ் .. ‘

‘வேண்டாம் வெச்சுக்க உனக்கு ட்ராவலுக்கு வேணும் இல்ல ‘

‘நீங்க வாங்கிக்கங்க … ‘ தேன்மொழியின் கைப்பையில் பணத்தைத் திணித்தாள் ரோஷ்ணி . நன்றியுடன் அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டாள்.

அன்றிரவு. இரவு எட்டு மணிக்கு படுக்கையில் விழுந்தாள் தேன்மொழி . அறைக் கதவைத் தாழிட வேண்டும் என்று எழுந்து நின்ற போது , அறை வாசலில் மும்தாஜ் நின்று கொண்டிருந்தார்.

‘வாங்க மேம் .. ‘

‘டயர்டா இருக்கீங்க போல டிஸ்டர்ப் பண்ணிட்டனா … லேப்டாப் ஒர்க் பண்ணல ஸ்மார்ட் போன் பசங்க எடுத்துகிட்டாங்க . ஒங்க லேப் ல ஒரு மெயில் செக் பண்ணிக்கட்டுமா … ‘

‘தாராளமா .. வாங்க உள்ளே … ‘

மும்தாஜ் நாற்காலியில் அமர்ந்தார். படுக்கையில் இருந்த லேப்டாப்பில் துழாவினார்.

‘என்ன ஆச்சு ஒங்க ரூம் மெட்க்கு … ‘

‘அவளுக்கு பெண்மை சார்ந்த நோய் … ‘

‘அழகா தமிழ்ல சொல்றீங்க .. ஒங்க கிட்டேந்து கத்துக்கணும் .. ‘

‘உடம்பு குணமாகட்டும் ஊருக்கு போகலாம்னா கேட்கல . வடகிழக்கு மாநில ஆளுங்களுக்கு ஆபத்துன்னு மூட்டை முடிச்சு கட்டிகிட்டு கிளம்பிப் போய்ட்டா . நான் சென்ட்ரல் வரை போய் வழி அனுப்பிட்டு வந்தேன்.. ‘

‘தேனு … அவங்களுக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல ன்னு நம்ம சிஎம் சொன்னாங்க. கர்நாடகாவுல அந்த சிஎம் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் போகாதீங்கன்னு கேட்டுகிட்டாரு . அந்த ஜனங்க கேட்கல .. இது அச்ச உணர்வு உண்டாக்கிறது .. எப்படி எங்கே ஆரிஜனேட் ஆச்சுன்னு தெரியல .. துரதிர்ஷ்டம் தான் … சரி இந்த மெயிலை பார்த்துடறேன் … ‘

‘பாருங்க மேம் ‘

சற்று நேரத்தில் அவர் கிளம்பிச் சென்றார். அவள் இரவு உணவு உண்ணாமலேயே உறங்கி விட்டாள்.


அதன் பிறகு , தேன்மொழி , ரோஷ்ணியை மறந்து போனாள். அவளைப் பற்றி நினைவு வந்து பேசலாம் என்று மூன்று நான்கு முறை முயன்ற போது அழைப்பு போகவில்லை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை . தேன்மொழி , குளித்து முடித்து , கீழே சென்று சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினாள். டிவி ரிமோட்டை கையில் எடுத்த போது அவளுடைய மொபைல் ஒலித்த து . திவாகரின் அழைப்பு .

‘சொல்லுங்க ‘

‘தங்கைக்கு நல்ல வரன் அமைஞ்சுடுச்சு . தை மாசம் கல்யாணம் முடிச்சிடலாம்னு இருக்கோம் … ‘

‘நல்ல வேளை … ‘

‘என்ன நல்ல வேளை .. ‘

‘இல்ல என்னை ஔவைப் பாட்டி ஆக்கிடுவீங்களோன்னு பார்த்தேன் .. ‘

‘உனக்கு கொழுப்பு கொஞ்ச நஞ்சமா … ‘

‘ஆமாம். நீங்க போடற உணவு சாப்பிடறேன் இல்ல அதான் … ‘

தேன்மொலி மேம் – அறை வாசலில் குரல் கேட்டது.

‘ரேஷ்மா வந்திருக்கா போனை வைங்க .. ‘

‘அந்த குஜராத் பொண்ணா அழகா இருப்பாளே அவளா .. ‘

‘அவ தான் அவளையே கட்டிக்கறீங்களா .. பேச்சைப் பாரு வைங்க .. ‘

துண்டித்தாள். வெளியே வந்தாள்.

‘என்ன ரேஷ்மா … ‘

‘மேம் ஒங்க பெட் , பெஸ்ட் பிரண்டு …. ‘

‘நிறுத்து என்ன அளக்கிற என்ன சொல்ற .. ‘

‘மேம் ரோஷ்ணி திரும்பி வந்திருச்சு ‘

ரேஷ்மாவின் பின்னால் இரண்டு கைகளிலும் மூட்டை முடிச்சுகளுடன் ரோஷ்ணி நின்று கொண்டிருந்தாள். பயண மூட்டைகளை கீழே போட்டு விட்டு தேன்மொழியைக் கட்டி அணைத்துக் கொண்டாள். ரேஷ்மா இந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்து போனாள். அந்த வழியாக தன்னுடைய அறைக்குச் சென்று கொண்டிருந்த மும்தாஜ் , இருவரையும் பார்த்து நெகிழ்ச்சிப் புன்னகை பூத்தார்.

Print Friendly, PDF & Email

1 thought on “வெளிச்சம்

  1. வெளிச்சம்…. அருமை…. மனித உணர்வுகளின் ஆதர்சன வெளிப்பாடு……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *