விழியின் ஓசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 856 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அது அரண்மனைதானென்று தீர்மானத்துக்கு வருமுன்னே ஆச்சரியப்பட்ட அவளுக்கு அசதி தந்தது. பேரிளம் வாழைத்தண்டுகள் போல் தூண்கள் அணிவகுத்து நின்றன. திசையெங்கும் இறங்குவதற்கும் ஏறுவதற்குமாக ஏராளமான படிகள். முழுவதும் பளிங்குக் கற்களினாலான கட்டிடம் மேற்கூரை யில்லாமல் அதிசயம் போலிருந்தது. மேகமற்றுத் தெளிந்த வானத்தில் முழுநிலவு அதை ஒட்டியிருந்த ஒற்றை வெள்ளி மினுமினுத்து ஒவ்வொரு நிறமாக உருமாற்றிக் கொண்டிருந்தது.

சிறார்களெல்லாம் படிகளில் ஏறுவதும் இறங்குவதுமாகக் கும்மாளியிட்டுத் திரிந்தனர். கூட்டங் கூட்டமாக வரும் குமருகள் மெல்லிய சிரிப்பினைச் சந்தம்போல் ஒலித்துச் சிந்தியவாறு இங்கும் அங்குமாகப் பறந்தனர். ஒருத்தி மோதியதில் ஒரு தூண் ஆடிற்று. ஆடிய தூணின் தலையிலிருந்து சிப்பிகள் விழுந்து சிதறியதில் முத்துக்களின் வண்ணமயம். அரண்மனையின் நிறமும் அவ்வப்போது மாறியது. குழாம்குழாமாக நண்பர்களும், ஜோடி ஜோடியாய்த் தம்பதிகளும் மகிழ்வினைப் பகிர்ந்தபடிப் போய்க் கொண்டிருந்தனர்.

அங்கே வந்து நிற்பதின் மூலத்தை அறியாதவாறு பிரமித்துப் போய் நின்றாள்.

புறாக்களும் மயில்களும் வந்து போயின. பேச்சை மறந்த கிளிகளும் கூவாக் குயில்களும் கூடி நின்றன. கிளி பேசினாலும் பேசாவிட்டாலும் அழகுதான். குயில் கூவினால்தான் அழகு என்றாள் ஒருத்தி. ஓரங்களில் நின்ற குறுஞ்செடிகளில் பெரும் பூக்களின் மொட்டவிழ்ந்து தேன்சிட்டுகள் சீறிப்போயின. மருதாணிப் பூவும், மருக்கொழுந்தும் மஞ்சத்து உறவில் முதிர்ந்தது போலான மென்கந்தம். இதமாய் வருடிற்று. உடுத்திய உடை கொஞ்சமும் குறையாது ஆண்களும் பெண்களும் குளித்து விட்டுப் படியிறங்குவதைக் கண்டாள்.

படியிறங்குகிறார்களே, அரண்மனை இருப்பது அதலபாதாளத்திலா? அந்தரத்திலா? நீராடியது அருவியிலா, ஆற்றங்கரையிலா?

ஒருத்தியை நிறுத்தி,

இங்கே என்ன நடக்கப் போகிறதென்று கேட்டாள். மருதாணிக் கைகளால் முகத்தை மூடிய அவளோ நாணம் நெற்றியில் மின்னலிட இளவரசரின் வருகையை உறுதி செய்துவிட்டு, ஒருவிதத் துள்ளலில் ஓடிப் போனாள். அவளின் வெட்கம் சுயம்வரம் சொல்லியது. எங்கே இளவரசருக்கு தன்னைப் பிடித்துவிடுமோ என்கின்ற கிலி பற்றிற்று அவளுக்கு. பெரும்பாக்கியத்தை நிராகரிக்கலாமா? நிராகரிக்கணும். இளவரசியாவது பாக்கியமாவதெனில் இளவரசரின் அந்தப்புரவாசத்தைச் சகிப்பது எப்படிச் சாத்தியமாகும்? கூடாது. குளிக்கவோ சந்தனம் பூசிக் கொள்ளவோ இமைகளில் மை இருத்திக் கொள்ளவோ கூடாது.

எவளின் அழகிலாவது மயங்கட்டும்.

வலுவாய்ச் சந்தேகம் வார்த்தது. குளித்துவிட்டுப் போனதில் இளைஞர்களும் இருந்தார்களே! இங்கே சுயம்வரமும் பொதுமைதானா… ஒருபக்கம் பெண்களின் களிக்கூச்சலும். அலறிய சிரிப்புடன் அழுகைபோல் பரவசம். அங்கே எந்தவொரு ஆணையும் காணவில்லை. சிறுவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து பெருமடிப்பசுக்கள் போயின. பாலுக்குப் பஞ்சமில்லை என்றும், பால்ச்சோறு கிட்டும் என்றும் ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறிக்கொண்டு போனாள்.

குயிலிடம் பழகிய கிளிகள் கூவின பேசுவது வீண் என்று குயில்கள் பறந்தன. குதிப்பதில் குதூகலம் செப்பிய கன்றினைத் தேடிய பசுவின் பாசம் படிகளில் பாலாய் வழிந்தது. பெண்களைத் தொடர்ந்து ஆண்களும் அவர்களைத் தொடர்ந்து பெண்களும் – சிறுவர்களும் சிறுமிகளும் ஏறவும் இறங்கவுமாக இருந்த போதும் பால்வழியும் படிகள் வழுக்கவில்லை.

ஓடிவந்த ஒருத்தி

அவளிடம் கேட்டாள். நீயாரென்று? ஆமாம் நான் யாரென்று கேட்டவளிடமே திருப்பிக் கேட்டாள். வந்தவளோ பெருஞ்சிரிப்பாய்ச் சிரித்துவிட்டுப் பைத்தியம் என்றாள்.

பைத்தியம் யார்?

எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு பயந்தாள். சொம்பு நிறையக் கறந்த பால் நுரைத்துப் பொங்கிய படிக்கொண்டு வந்து நீட்டிய சிறுவனிடம் வாங்குவதற்குப் பயந்தாள். காய்ச்சவில்லை என்றாலும் பால் வெதுவெதுப்பாக இருக்கும் என்றவனிடம் வாங்குவதற்கு மறுத்தபோது – ஒரே மூச்சில் குடித்த சிறுவன் சொம்பை உருட்டிவிட்டு அலட்சியமாக நடந்து போனான். தனியே ஒரு கன்று துள்ளி வந்தது. அதன் நெற்றியில் முத்தி உனக்குப் பசிக்காதாவென்று கேட்டு வாஞ்சைப் படப்பாந்தம் வந்தது.

கன்று கட்டுக்குள் அடங்க வேண்டுமே, நடக்கிற காரியமா?

எதிரே வந்தவளை எங்கோ பார்த்தது போலிருக்க உற்றுக்

கவனித்தாள். ஏராளமான ஆபரணங்களணிந்து அழகோடு இருக்கும் அவள்? ஓ! அத்தை. அத்தையேதான். தந்தையின் சகோதரி. அவளை விளித்த வேளையிலேயே என் பிறப்பின் கொழுந்தேவெனக் கொஞ்சித் தழுவிக் கொண்டாள்.

“நீ அலிமா தானே?”

“ஆமாம்… மாமி!”

இளவரசரின் வருகை உண்மைதானாவென்று அத்தையிடம் அலிமா கேட்டாள். அப்படியெல்லாம் உறுதியாகச் சொல்லமுடியாதென்றாள் அத்தை. புதிய இடங்களைச் சுற்றிக் காட்ட வேண்டும். என்று ஆவலைச் சொன்ன அலிமா, ஆண்களும், பெண்களும் ஏன் கணவனும் மனைவியுங்கூட ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்த்திடாத நிலையில் போவது தனக்குள்ள பெரிய ஆச்சரியம் என்பதைச் சொன்னாள். எல்லோரும் மென்மையும் இனிமையும் கலந்த தன்மையில் உலவுவதையும் அதிர்ந்திடாத தொனியில் உரையாடுவதையும் சொன்னாள்.

எல்லாம் இறையச்சம் என்று சொன்ன அத்தையின் அசைவு அலிமாவின் தந்தையை நினைவுபடுத்தியது. மிகுந்த பிரயாசையுடன் கேட்டாள்.

“அத்தாவப் பாத்தியளா மாமி?”

“அண்ணன் வருவாஹ!”

“எப்படி இருக்காஹ?”

“ரொம்ப நல்லா!”

அலிமாவின் விழிகளில் ஆனந்தப் பெருக்கும். தந்தையைக் காணும் தவிப்பை வெளிப்படுத்தினாள். சூழல் பரபரப்பாயிற்று. தூண்களில் பூங்கொடிகளைப் படரவிட்டார்கள். கம்பள விரிப்பின் மீது மகரந்தம் தூவப்பட்டது.

கன்றுகளைப் போல் பசுக்கள் துள்ளின.

இளவரசரின் வருகை உறுதிப் படும் தருணத்தில் அலிமாவின் அருகில் நின்ற அத்தையைக் காணோம். ’மாமி மாமி… ’யென்று கூவியபடி ஓடிய போது இளவரசர் எதிர்பட்டார். வாளோ கேடயமோ வைரக் கிரீடமோ ஏதுமின்றி வந்தவரை இளவரசர் என்றனர் அனைவரின் மதிப்பிலும், மரியாதையிலும் அவருடைய தகுதி பெருகிக்கொண்டு போனது.

சிறார்களை மட்டுமே தொட்டுக் கொஞ்சிய இளவரசர் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அலிமாவின் பார்வையில் அழகாகத் தெரிந்தார். மதிப்பளித்த குமருகள் கூட அவரைத் தன்னைப்போல் பார்க்கவில்லையே என்று அலிமா வெட்கப்பட்டாள். இப்படியான நேரத்தில் அத்தையின் வருகையைச் சொன்ன அத்தையைத் தேடினாள். சந்தோஷம் திரண்டு பூப்பூவாய் உருக்கொண்டு வகைக்கொன்றாய் வாசம் வந்தது.

அத்தை ஏன் போக்குக் காட்ட வேண்டும்?

தூண்களில் படர்ந்திருந்த கொடிகளில் கொத்துக் கொத்தாய்த் தொங்கிய மலர்களை வருடிக் கொண்டேபோன இளவரசர் ஒருகணம் நின்று திரும்பியபோது அலிமாவைப் பார்த்துவிட்டார். இல்லை அலிமாதான் அவரை எதிர்கொண்டுவிட்டாள். அவளுள் நிச்சயிக்கப்பட்ட தருணமது. காலமாகி விடாத காலம். அபூர்வமென்று அவரின் புன்னகையே மொழிந்து விட்டது. தூண்கள் கண்ணாடி போலாகி, பார்வை ஒளிபோல் ஊடுருவி, நீரிரைத்து விட்ட நிலைக்குள்ளானாள்.

இன்னொருதரம் அருகில் போய்ப் பார்த்துவிட ஆர்வமும், அவசரமும் வர அச்சமும் வந்தது.

அப்படியே நின்றுவிட்ட அவளிடம் வந்த இளம்பெண் உன் அத்தை உன்னைப் படியேறி வரச் சொன்னார்களென்று கூறி இமைகள் படபடக்கத் தூணோரம் ஒதுங்கிக் கொண்டாள். இதென்ன கோலம், இளவரசர் எங்கே மாயமானார்? அலிமா அண்ணாந்தாள். வானவில்லின் பாதியை முகில் விழுங்கியிருந்தது.

அத்தை அழைப்பது போல் குரல் வர அலிமா படியேறினாள் . ஏழெட்டுப் படிகளுக்குள்ளாகவே மேலே வந்துவிட்டது அதிசயமானது. அங்கு அலிமா பார்த்ததோ பேரதிசயமானது. தந்தையைக் காட்டுவதாகச் சொன்ன அத்தையையும், தன்னைப் பார்த்துவிட்டு போன இளவரசரையும் பால் தந்து பருகச்சொன்ன சிறுவனையும் அந்தப் பிரமிப்பு அகற்றிவிட்டது. பூமியில் பாவியிருந்த பாதங்கள் கூச, ’ஓ! இதென்ன பெரும் பரப்பு? என்று சொல்லி நின்றாள் தானாகவே. பழக் குலையொன்றைக் கையிலேந்தியபடி அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற பெரியவர் சொன்னார்,

‘கடல்!’

’கடல்? அப்பொ நீரெல்லாம்

‘திட்டுத் திட்டாய் ஜொலிப்பது?’

‘நிலாத் துளிகள்!’

‘இங்குதான் விவசாயம்!’

‘ஓ! ஊற்று உப்பாயிருக்குமே?’

‘ஊற்றே இல்லை. அவ்வப்போது மழை பெய்யும்!’

‘ஓகோகோ..!’

அலிமாவிடம் ஒரு பழத்தைத் தந்து உண்ணச் சொன்ன பெரியவரைப் பார்த்து அவளின் தந்தையின் சாயலில் இருப்பதாகச் சொன்னாள் பார்ப்பவர்களை வயோதிகம் அப்படி எண்ண வைப்பது பெரும் பாக்கியம் என்றார் அவர். அவரின் கன்னக் குழிகளையும், ஆழவிழிகளையும் கூர்ந்து நோக்கிவிட்டு, ஒரு முறை ’அத்தா’என்று விளித்தாள். மட்டற்றுப் போன பெரியவருக்கு மகிழ்ச்சியும் பதற்றமளித்தது. கண்கள் கசிந்தன. மகளைத் தாயென்று கூறுவது தந்தைக்கு மகிழ்ச்சி தரும் என்றவர் மறுபடியும் பழத்தை உண்ணச் சொன்னார். தோலை உறிக்கும் போதே இளவரசரைப் பற்றி விசாரித்தாள். உடனே அந்நிகழ்வு குறித்த ஓரசைவும் பிசகாமல் ஒப்புவித்தாள்.

இளவரசர் இறையச்சம் உள்ளவரென்றும் அவளின் பார்வை அவரைப் பாதித்திருக்கக் கூடுமென்றும் பெரியவர் சொன்னார்.

அவரைப்பார்த்தது தவறா?

’பார்வையெல்லாம் தவறாவதில்லை!’என்று கூறியவாறு இன்னொரு பழத்தை நீட்டினார். அதை வாங்க மறுத்து சுவையானவற்றைத் திகட்டும் மட்டும் தின்று அதன் மதிப்பைக்

குறைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்னாள்.

‘நிச்சயமாக உன்மீது இளவரசருக்கு மதிப்பிருக்கும்!’

ஆவலாகக் கேட்டாள்,

‘காரணம்?’

‘நீயும் இறையச்சம் உள்ளவள்!’

அச்சொற்களை அவர் உச்சரித்தவிதம் வாழ்நிலை குறித்துப் பெருமிதம் தந்தது. பெரியவரிடத்தில் அவளுக்குத் தைரியம்

வந்தது. இளவரசரின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்வதில் தவறு இருக்குமா என்று கேட்டுவிட அதற்கு மறுத்துத் தலையசைத்த அவர், இப்படியான தயக்கம் மென்மையானது மட்டுமல்ல மேன்மையானதுங்கூட என்று கூறி, இளவரசரின் பெயரைச் சொன்னபோது, அலிமாவின் கைகள் பதற்றத்தில் கழுத்தைத் துழாவ கருகமணி நெருடிற்று.

அபூர்வமான கனவு. எப்போதோ இறந்து போன அத்தை வந்ததும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மறித்துவிட்ட தந்தையைக் காணாதது ஏமாற்றமாக இருந்த போதும் கணவனின் பெயரைக் கேட்டதும் பதறி விழித்துவிட்டாள். அவளின் சங்கடமெல்லாம் இளவரசருக்கு ஏன் அந்தப் பெயர் இருக்க வேண்டும் என்பது பற்றித்தான்!

அரையிருட்டில் உறைந்திருக்கும் அறை.

கருகமணி தந்தவன் குறட்டை ஒலியைத் துப்பியவாறு, ஒருக்களித்துக் கிடந்தான். எப்போது வந்து வீழ்ந்தானென்று அவளுக்குத் தெரியாது. காலணையும் தலையணையுமாகக் கர்ம சிரத்தைப் பட்டிருந்தான். பேசினால் எதிர்த்தா என்றும், பேசாதிருந்தால் திமிரா என்றும் கேட்பான். அலிமா அவன் முகத்தைக் காணவிடாது மூடிவிடுகின்ற இருட்டை நேசித்தாள். விடிவதைக் கூட வெளிச்சம் வருமே என்று வெறுத்துக் கனவின் ஒவ்வொரு பகுதியாக நினைவுபடுத்திப் புரண்டாள்.

வெளிச்சம் வேண்டாதது போல் விடிந்து விட்டது. வாசலில் பால்கார ஆமீனாவின் குரல் கேட்டது. கூவல் தன்மையில் ’எம்மா பாலோய்’என்றிருந்தது. தினமும் காலை மூன்று மணிக்கு எழுந்து முப்பது வீடுகளுக்குப் பாலூற்றும் பணியைச் செய்பவள் ஆமீனா. பூரித்த தனமாய் சொம்பில் பாலூற்றும் போதே புன்னகை காட்டியவளிடம் அலிமா கேட்டாள்,

“இறையச்சம்னா என்னா?”

கொஞ்ச நேரம் கூர்ந்து நோக்கிய ஆமீனா “இறையச்சம்னா ஒழுக்கம்தான்…!’’என்று அழுத்தமாகக் கூறினாள். பாலேய் என்பதைப் போல் இலகுவில்லாமல் கல்லின் முத்திரைபோல் கனப்பட்டிருந்தது. அலிமாவும் அதை ஆறேழு முறை சொல்லிக் கொண்டாள். ஆமீனாவின் விளக்கம் அவளுக்குப் பிடித்திருந்தது. பாலோடு போனவளுக்குச் சிரிப்பு வந்தது. கட்டிலில் கிடந்த கணவன் எப்போது எழுந்தானோ அவளையும் சிரிப்பையும் ஏளனம் செய்து பெண்ணுக்கு அழகில்லை என்று எத்தினான். அந்த அறிவுரையிலும் அலிமாவுக்குச் சிரிப்பு வந்தது. உள்ளே விரைந்து வந்து அவளை ஓங்கி அறைந்துவிட்டான். பால் சிதறி சொம்பு உருண்டு வட்டமடித்து எஞ்சிய பாலும் ஒழுகிற்று.

அந்த நேரத்தில் அவனைத் தேடி நான்கைந்து பேர் வர அவர்களிடம் நாணமும் வெட்கமுமாகக் குழைந்தான். அவர்களை அமரச் சொல்லி அதிராத தொனியில் பண்புமிகுந்த வார்த்தைகளைக் கூறி ஆவலாகப் பார்த்தான். சாயா குடிக்க வேண்டுமென்று நளினப்பட்டான். இருபாலருக்கும் இடையிலான தனிமையில் எழுந்து வந்து அலிமாவிடம் ’கோபமா’என்று கேட்டான்.

விழிகளிலேயே உமிழ்ந்தாள், ‘அசூசை’! என்று.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *