கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 2,798 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணித்தியாலக் கணக்காக “பிரிட்டிஷாரின் கீழ் இலங்கை” என்ற சரித்திர நூலில் மூழ்கிக் கிடந்த வேத நாயகம் தலையை நிமிர்த்திச் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது. நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இங்கே இருந்திருக் கிறேன் என்று எண்ணிக் கொண்ட ஆசிரியர் மெதுவாக எழுந்து ஓசை படாமல் அந்த வாசிக சாலையை விட்டு வெளியேறினார்.

இப்போதெல்லாம் அந்த வாசிகசாலை ஒன்றுதான் அவருக்குப் புகலிடமாக இருக்கின்றது. வீட்டை இழந்து, தான் தேனீயைப் போல ஒவ்வொன்றாகச் சேர்த்த தன் புத்தகங்களை இழந்து, இந்த உலகிற்குத் தான் விட்டுச் செல்லும் ஒரே சொத்தென எண்ணிக் கொண்டு எழுதிக குவித்த தன் எழுத்துக்களை இழந்து, அனாதையாய் “பட்டினப் பிரவேசம்” செய்த அவருக்கு இந்த வாசிக சாலை ஒரு சரணாலயம். அந்த வாசிகசாலையின் நூல் களுக்குள் மூழ்கிக் கிடப்பது ஒரு ஆத்ம திருப்தி.

அலுத்துக் கொண்டு அக்கட்டிடத்தைவிட்டு வெளி யேறியவரின் முகத்தில் கடற் காற்றுப் பட்டபோது சற்றுத் தெம்பாயிருந்தது. வாசிகசாலை முன்றலிலுள்ள பூந்தோட்டத்தைக் கடந்து தெருவை நெருங்கியபோது பென்னம் பெரிய வாகனம் ஒன்று கோட்டைப் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தது. அவ்வாகனம் தன்னைக் கடந்து செல்லும் வரை, சற்றுத் தரித்து நின்ற பின்னர் வீதியைக் கடந்து புற் தரையில் இறங்கி கடற்கரையை நோக்கி நடந்தார். புற் தரையைக் கடந்து கடலரிப்பைத் தடுத்து நிறுத்தக் கட்டிய “சீனப் யெருஞ் சுவரை’யும் தாண்டியவர். வெண் மணலிற் கால்களை நீட்டி உட் கார்ந்து, இரு கைகளையும் பின்னால் ஊன்றிக் கொண்டு சாய்ந்தார்.

அவர் கண்ணெதிரே கண் வைத்த தொலைவுக்குக் கருநீலக் கடல் பரந்து கிடந்தது. செத்துச் செத்து வீசும் வாடைக் காற்றில் மெதுவாகச் சயனிக்கும் அக்கடற்பரப் பில் மேற்கு வானச் சரிவில் தோன்றிய செம்மஞ்சள் பிரதி பலித்துத் தக தகத்தது. அவர் இருந்த இடத்துக்துக் கிழக் காக இராசாமலை வரை வளைந்து கிடந்த குடாவின் வெண் மணற் பரப்பிற் திருகோணமலை நகரம் முழுமை யுமே திரண்டு வந்துவிட்டதோ என்றெண்ணும் படியாகச் சனத்திரள். சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், குமரிகள், பெரியவர்கள்

கடற் காற்றை ரசித்துச் சுகங்காணும் மனிதப் பிறவிகள்!

“சும்மா கிடக்கின்ற திறம் பெற்றிராத” ஆசிரியரின் மனது, எதிரே வாடைக்காற்றிற் சலனமடையும் கடலைப் போலச் சலனமடையத் தொடங்கிற்று.

“நாட்டின் பல்வேறு இடங்களில், வடக்கிலும், கிழக் கிலும், தெற்கிலும் எத்தனையோ இடங்களிற் கொலை, மரணம், குழப்பம் என்ற செய்திகளை வானொலி இன்று கூடச் சொன்னது. பத்திரிகைகளிலும் அதே செய்திகள். ஆனால் இங்கே இந்தக் திருகோணமலைப் பட்டினத்தில் மட்டும் அமைதி!

கடற் காற்றை ரசிக்க வரும் மக்கள் கூட்டம்!

வேதநாயகம் ஆசிரியர் கண்களில், டொக்யாட் வீதிக்கு அப்பால் சமூக சேவை நிலையம் என்ற பேரைத் தரித்துக கொண்டு நிமிர்ந்து நிற்கும் மாடிக் கட்டிடம் தென்படுகின்றது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கட்டிடம் இருக்கவில்லை. மாறாக மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டிலே பிரம்மச்சாரிகளான ஆசிரியர்களோடு தானும்…

மத்தியான வெய்யில் மனிதரை வறுத்துக்கொட்டி, மாலை இறுக்கம் புழுங்கிக் கொண்டிருக்கும் பங்குனி, சித்திரை மாதங்களில் இரவுகளில் இந்தக் கடற்கரை மண லிலேதான் அவரும் அவர் நண்பர்களும் பள்ளி கொண்டு விடிகாலைப் பனிக் குளுமை உடலைத் தீண்டுகையிற் தான் மீண்டும் அறைக்குச் செல்வார்கள். ஆனால் இன்றைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஏழு மணிக்கு முன்னரே, (தற்போது றம்ஸான் நோன்புக்காகத் தளர்த் தப்பட்டதால்) ஒன்பது மணிக்கு முன்னரே சென்றுவிட வேண்டும். இந்த நிலையை, அமைதி, பூரண அமைதி என்று சொல்லிவிட முடியுமா?

ஆனாலும் இந்தப் பட்டினத்திலே பயமின்றிக் கடற்கரையில் கூடும் அளவுக்காவது அமைதி நிலவுகிறதே!

மணியை ஆட்டிக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்காரன் இந்த மனிதரிடம் செல்லாக்காசு கூட இருக்காது என்று எண்ணினானோ என்னவோ, அலட்சியமாக அவரைக் கடந்து சென்றான். இன்று அமைதியாக இருக்கும் இந்த நகரம் என்றும் அமைதியாகவா இருந்தது? என்று எண்ணினார் ஆசிரியர்!

மாணவனாக இருந்த காலம். இந்தக் கடற்கரையிலி ருந்து படுவான்கரைப் பக்கம் நோக்கினால் சின்னக் கடைச் சந்தி வரை வெறிச்சென்று நீண்டு கிடந்த முற்ற வெளி. நகரசபைக் கட்டிடமோ, மெக்கெய்ஸர் விளை யாட்டுத் திடலோ தோன்றவில்லை. ஒரே பொட்டல் வெளி!

அந்தப் பொட்டல் வெளியில் எங்கெங்கோ இருந்தெல் லாம் படை வீரர்கள் வந்து குழுமினர். ஆங்கிலேயர், அமெரிக்கர், ஆபிரிக்கர், அவுஸ்திரேலியர், இந்தியர், கனடியர்…

இரண்டாவது உலக மகா யுத்தம்!

சிங்கப்பூர், யப்பானியரிடம் வீழ்ச்சியடைந்து விட் டது. யப்பானியர்கள் கிழக்கின் உதயம் என்று அர்த்தப்படும் ‘ஷோனான்” என்று அந்நகரத்திற்குப் போரிட்டு ஆசியா முழுவதையுமே தம் அடிப்படுத்த அடிப்படுத்த எண்ணிக் கொண்டிருந்த காலம்…

திருகோணமலைக்குச் சர்வதேச முககியத்துவம் வந்து விட்டது; நேச தேசப் படைகள் எல்லாமே இங்கு குழுமிக் கொண்டன. ஆகாய விமானங்கள் உறுமின. “ஹொவிட் ஸர்” பீரங்கிகள் முழங்கின. போர்க் கப்பல்கள் துறை முகத்தை நிறைத்தன. தெருவெல்லாம் படை வீரர்கள்! அவர்களது வாகனங்கள்!

ஆனாலும் அவைகள் பொது மக்களுக்கு மரணபயத்தைக் கொடுக்கவில்லை!

ஆனால் அந்த நாள் அவருக்குச் சற்று நடுக்கத்தைக் கொடுத்தபடியே ஞாபகத்திற்கு வந்தது. அன்றும் இதே போல் ஏப்ரல் மாதம். ஆனால் ஒன்பதாம் நாள். 42ஆம் ஆண்டு.

அன்று அதிகாலை மூன்று மணிக்கே அபாயச் சங்கு ஊளையிட்டது. யமனைக் கண்டு நாய்கள் ஊளையிடும் எனச் சொல்வார்களே, அதே மாதிரி நாய் ஊளைதான் பயங்சுரமான ஊளைச் சப்தம்!

ஆனால் ஏதோ ஒத்திகை வழமைபோல நடக்கிறது என்றுதான் மக்கள் எண்ணிக் கொண்டார்கள். ஆகவே வெள்ளுடை அணிந்த ஏ.ஆர். பிக்காரர்கள் சொன்னதை மக்கள் சட்டை செய்யவில்லை. ஆனால் சில நிமிட நேரங் களில் அபாயம் நீங்கி விட்டதை அறிவிப்பதற்கான சங்கு ஒரே சீராய் நீளமாக ஒலித்தது.

மக்கள் மீண்டும் தம் கடமைகளில் ஈடுபட்டார்கள்.

ஆனால் அபாயச் சங்கு மீண்டும் ஏழு மணியளவில் ஊளையிட்டது! ஆமாம். இரண்டாவது உலக மகா யுத்தம் இலங்கையின் தலைவாசலுக்கே வந்து விட்டது. யப்பானிய விமானங்கள் இராணுவ இலக்குகளை எதிர் பார்த்துக் குண்டுகளை வீசின. தரையிலிருந்த பீரங்கி களும் கப்பலிலிருந்த பீரங்கிகளும் அவைகளைக் குறிபார்த்துச் சுட்டன. போர் விமானங்கள் அவைகளைத் துரத்தின.

பெரிய மாதா கோயிலின் முற்றத்தில் அமைந்திருந்த பதுங்கு குழியில் வாயிற் கம்பைக் கடித்துக் கொண்டிருந்த அவருக்குக் கர்ண கடூரமான முழக்கங்கள் தான் கேட்டன. சங்கு மீண்டும் நீளமாய், ஒரே சீராய் ஒலித்து, அபாயம் நீங்கிவிட்டதென அறிவித்த பின்னர், பதுங்கு குழியிலி ருந்து வெளியே வந்து பார்த்தால் துறைமுகத்தில் நின்ற பல கப்பல்கள் எரிந்து கொண்டிருந்தன. சீனன்வாடி எண் ணெய்க் குதங்கள் தீயை உமிழ்ந்து கொண்டிருந்தன. டொக்யாட்டிலிருந்த கட்டிடங்கள் பல புகைந்து கொண்டிருந்தன!

நகரில் ஒரே பரபரப்பு! அல்லோல கல்லோலம்! ஊர் முழுதும் வலசை வாங்கி எங்கே போகிறோம் என்ற இலக்கின்றி எங்கேயோ போய்க் கொண்டிருந்தது.

புதுமைப் பித்தனின் “பரபரப்பு’ என்ற கதையில் வரும் வரிகளை ஆசிரியர் நினைத்துக் கொண்டார்.

(மதராஸ்) சனங்கள் பார்த்தசாரதியை நம்பினார் கள். பக்கத்து வட்டாரக் கடவுளர்களை நம்பினார்கள். இறுதியிற் தங்கள் கால்களையே நம்பத் தொடங்கி விட்டார்கள்!

ஆமாம். எந்த வாகனத்தையுமே எதிர்பாராமல் மக்கள் கால் நடையாகவே நடந்து செல்லத் தொடங்கி னார்கள். சீனன்வாடி எண்ணெய்க் குதங்கள் குண்டுத் தாக்குதலால் எரிமலையாகித் தீக் கங்குகளைக் கக்கிக் கொண்டிருக்கையில் தானும் கண்டி வீதி மார்க்கமாகத் தம்பலகாமம் போய், அங்கிருந்து ஊருக்கு மீண்டதை எண்ணிக் கொண்டார்,

ஆயினும் ஒரு சில மாதங்களில் வலசை வாங்கிச் சென்ற எல்லாருமே மீண்டும் திருகோணமலைக்கு வந்து விட்டார்கள். இந்தச் சர்வதேச நகரத்தின் யுத்த காலச் செல்வச் செழிப்பு ஓடிச் சென்ற மக்களைக் கொக்கி
போட்டிழுத்தது! படை வீரர்களின் “கன்ரீனில்” ஐம்பது சதம் கொடுத்து பாதிச் செங்கல் அளவினதான “சொக் கிளேற்” வாங்கித்தின்ற போதிருந்த சுவையை ஆசிரியர் அனுபவித்தார்.

“கடலை கச்சாங்கொட்டை”

நடை வியாபாரி சப்தமிட்டபடி அவரைக் கடந்து சென்றான்.

தேச நாடுகள் யுத்தத்தில் வெற்றி பெற்றன. நாடும் சுதந்திரம் பெற்றது. சோல்பரி அரசியற் திட்டத்தை ஆத ரித்த பாரம்பரிய தலைவர்களை அரசியலிலிருந்து விரட்டி யடித்த “தமிழுணர்வு” திருகோணமலையிலும் வெற்றி யீட்டியது.

அந்த உணர்வு, தொடர்ந்து இன்னும் இரண்டு பாராளுமன்ற வெற்றிகளைக் கண்ட பின்னர், தனிச் சிங் கள மசோதா!

அந்தச் சட்டத்தின் பின்னர் இன்று அமைதியாகக் காணப்படும் இந்நகரம் ஒரே போர்க்களந்தான். நாடு பெற்ற சுதந்திரத்தில் எமக்குப் பங்கில்லை என்ற எண்ணம் மனதை வேதனை செய்ய, ஒவ்வொரு சுதந்திர ஞாபகார்த்த தினமும் இந்நகரம் ஒரு குருஷேத்திரம்!

சிங்கக் கொடி!

கறுப்புக் கொடி!

அவர்கள் அதைக் கட்ட, இவர்கள் இதைக் கட்ட, இருவரும் ஒவ்வொருவரது கொடியை அறுக்க… குருஷேத்திரந்தான்!

ஆமாம், நாடளாவிய இனக் கலவரம் ஐம்பத்தெட்டாம் ஆண்டில் நடைபெற முன்னரேயே திருகோணமலை போர்க்களமாகிவிட்டது!

அடிக்கடி குண்டுச் சப்தம் கேட்கும். தொடர்ந்து துப் பாக்கி வேட்டுச் சப்தம் காதில் விழும். தனது ஆசிரியர் விடுதியிலிருந்து பார்த்தால் காளிகோவிற் தீர்த்தக் கடற் கரை தொடக்கம் திருக்கடலூர் வரையுள்ள கடற்கரையில், கொழுந்துவிட்டு எரியும். ‘வீரகாவியம்’ படைத்து விட்டதாக அரசியல்வாதிகளின் கெக்கலிக்குப் பின்னால், வலைகளையும் தங்கள் வள்ளங்களையும் தீக்குத் தீனியாக்கி விட்ட கடல் மறவர்களின் சோகக் கதைகள்…

வேதநாயகம் ஆசிரியரின் கண்கள் பனித்தன. சிறுவர் கள் சிலர் மணலிற் குதித்து ஓடுகையில் தெறித்த மணற் குறுணிகன் அவர் கண்ணிற் பட்டதாலா? அல்லது அந்தக் கடல் மறவரின் சோகக் கதைகளாலா! துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்ட ஆசிரியர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

தமிழினம் தன் பழம்பதியிலே போர்ப் பிரகடனஞ் செய்த அந்த நாள் அவருக்கு நினைவுக்கு வந்தது!

எம் உரிமைகளை வென்றே தீருவோம் என்ற வைராக்கியத்தோடு தெற்கே திருக்கோயிலிலிருந்தும் வடக்கே பருத்தித் துறையிலிருந்தும், மேற்கே மன்னாரிலிருந்தும் தமிழ்க் குலம் முதுழுமே

“திருமலைக்குச் செல்லுவோம்
சிறுமை யடிமை வெல்லுவோம்”

என்ற இளமுருகனாரின் பாடலைப் பாடிக்கொண்டே பாத யாத்திரையாக வந்து திருகோணமலையில் குழுமியது. தம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த காளி மாதாவின் முன்னால் “உரிமைகள் ஓராண்டுக்குள் வழங்கப்படாவிட்டாற் போராட்டம்” என்று முழங்கியது. அம் முழக்கத்தைப் “பெரிய நாயகி”யும் மௌனித்து ஆமோதித்தாள்!

அம்முழக்கம் கேட்டு முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன. அன்று தொடக்கம் இந்நகரம் போர்க்களந் தான். கடந்த சில மாதங்களாகத்தான் அமைதியாக இருக் கிறது.

இந்த அமைகிதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் ஊரான மூதூரிலும் இருந்தது. எல்லாத் தரப்பினராலும் தாக்கப்பட்ட திருகோணமலை மக்கள் மூதூர் மார்க்கமாகத்தான் மட்டக்களப்பிற்கு தப்பியோடினார் கள். அந்த அளவுக்கு மூதூர் அமைதியாகத்தான் இருந்தது; ஐம்பத்தெட்டாம் ஆண்டைத் தொடர்ந்து இந்நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் ஏற்பட்ட எந்தக் கலவரமும் மூதூரின் அமைதியைக் குலைக்கவில்லை.

அடிக்கடி தான் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் வார்த் தைகள் ஆசிரியர் மனதில் ரீங்கரித்தன.

என் அறுபதாண்டு கால வாழ்வில் என்னூர் மக்கள், அவர் தமிழரோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் கொலைக் குற்றத்திற் சிக்குண்டு சுப்ரீம் கோட்டுக்குப் போனதையே நான் காணவுமில்லை; கேட்கவுமில்லை.

சற்றுச் சுதாரித்துக் கொண்டபோது அவர் மனம் ‘பொறுத்தருளுங் கர்த்தாவே உமது சனத்தின் பாவங் களைப் பொறுத்தருளும்” என்று மௌனமாகப் பிரார்த் தித்துக் கொண்டது.

வானம் நன்றாக இருண்டு கொண்டது. மேற்கு வானச் சரிவில் இளம்பிறைத்துண்டு கருமேகங்களிடையே தாங்கிக் கொண்டு தன் ஊமை ஒளியைப் பாய்ச்சி இரு ளைக் கடிய முயற்சித்துக் கொண்டிருந்தது. தெருவிளக்கு கள் ஏற்றப்பட்டுக் கண் சிமிட்டின. பெரிய மாதா கோவி லிலிருந்து திருந்தாதி மணி ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து ஒலி பெருக்கியிற் திரிகாலச் செபம் ஒலித்தது.

”பரலோகத்திற்கு இராக்கினியே மனங்களிகூடும்”

“அல்லே லூயா”

அந்த மணி ஓசை மீண்டும் அவரைத்தான் பிறந்த மூதூருக்கே அழைத்துச் சென்றது.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னே, கொங் கணப் பிராமணரான யோசப் வாஸ் அடிகளார் தம் ஊருக்கு விஜயம் செய்தபோதும், ஏன் அதற்கு முன்னரும் கூட அந்தோனியார் கோயில் மணி அடித்து, அதன் சநாதம் ஊரை நிறைத்திருக்கும். ஆனால் காலங் கால மாகக் கேட்ட அந்த மணிஓசை இப்போது கேட்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னே அந்த மணி விரிசல் கண்டு உடைந்து விட்டது.

அதனை ஒரு துர்ச் சகுனம் என்றே ஊரவர்கள் கருதி னார்கள். அந்த மணியோசை நின்றுபோன பின்னர்தான் ஊரில் அத்தனை அனர்த்தமும், அந்த மணி ஓசை கேட்கும் சுற்று வட்டாரத்தில் அதற்கு முன்னர் எந்த அசம்பாவித முமே நடக்கவில்லை.

ஆனால் அயற் கிராமங்களிலே கடந்த மூன்று ஆண்டு களாக ஒரே அமர்க்களம். தமிழ்க் கிராமங்கள் ஒவ்வொன் றாக அழிந்தபோது, தென் பகுதிக் கிராமங்களிலிருந்த மக்கள் மட்டக்களப்பை நோக்கிக் குடிபெயர்ந்தார்கள். பெரும்பான்மையினரான மக்கள் மூதாரை நோக்கித்தான் ஓடி வந்தார்கள்.

மூதூரிலும் தோப்பூரிலும் இருந்த முஸ்லிம் மக்கள் அகதிகளாக ஓடிவந்த தமிழ்ச் சகோதரர்களை அன்போடு தான் வரவேற்றார்கள்!

தான் அகதியாகத் திருகோணமலைக்கு வந்த நினைவு ஆசிரியர் மனதில் இடை வெட்டிற்று.

உபகாரச் சம்பளத்தை மட்டும் நம்பி திருகோண மலைக்கு வந்தபோது, குடியிருக்க ஒரு குச்சிலைக் கண்டு பிடிப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. ஐயாயிரம், பத்தாயிரம் என்று முற்பணம் கேட்டார்கள்.

அத்தகைய முஸ்லிம் மக்களை எதிரிகளாக்கிக் கொண்டது யார்?

ஆசிரியரின் மனது மீண்டும் அரசியலுக்குத் தாவியது. கடற்கரையில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்ச மாக வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. வானம் இருண்டு மழை வரும்போல இருந்தது.

ஆமாம். அசாதாரணமான விஷயங்கள் தான் நடை பெறுகின்றன. இந்த வருடம் சித்திரை மாதம் மார்கழி மாசம்போல இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் மழை. இன்றும் மழை வரலாம்.

ஆசிரியர் எழுந்து நடக்கின்றார்.

எதிரே வந்தவர் கேட்கிறார்.

“மாஸ்ரர் சுகமா?”

நிமிர்ந்து பார்க்கிறார்.

முஸ்தபா மாஸ்ரர்!

இருவர் கண்களும் சந்திக்கின்றன! இருவருக்கும் அழ வேண்டும் போலிருக்கின்றது. சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருவரும் ஆளை ஆள் கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இருவர் கண்களும் பனிக்கின்றன. ஆறு மாதங்களின் பின்னால் ஏற்பட்ட சந்திப்பு!

“எங்கே மாஸ்ரர் இந்தப் பக்கம்?”

”பாங்கிற்குச் சம்பளம் மாற்றவென்று வந்தனான்?”

“இப்போது எங்கே…?”

“கிண்ணியாவில் தான்.”

“ஊருக்குப் போகவில்லையா?’

“நீங்கள் போகவில்லையா?”

“போகத்தான் வேண்டும். எத்தனை நாட்கள்தான் இங்கேயிருப்பது”

“நானும் போகத்தான் விரும்புகிறேன்! ஆனால் தமிழ் மக்கள் எல்லாரும் அகதி முகாமை விட்டு வீடுகளுக் குச் சென்றால் நாங்களும் எல்லாரும் போகலாம் என்றிருக்கிறோம். எத்தனை நாளுக்குத்தான் நாங்களும் அல்லாடிக் கொண்டு திரிவது, அது சரி, உங்கள் வீடு”

“வீடு இருந்த இடம் இருக்கிறது! நிலத்தையும் நீரையும் கொண்டுபோக முடியாதல்லவா?’

“ஆமாம் மாஸ்ரர். அந்த மண் இருக்கும்வரை நமக்குள் பாசமும் நிலைக்கும். மாதம் முடிந்து பாட சாலை தொடங்கும்போது மூதூருக்குப் போகத்தான் நாங்கள் பலபேர் தீர்மானித்திருக்கிறோம்”

”அப்படியா? எனக்கும் அலுத்து விட்டது.நானும் எவ்வளவு விரைவில் போக முடியுமோ அத்தனை விரை வாக ஊருக்குப் போகத்தான் விரும்புகிறேன்.”

இருவர் கருத்தையும் ஆமோதிப்பதுபோல பெரிய கடைப் பள்ளி வாசலிலிருந்து தொழுகைக்கான அழைப்பொலி கேட்கின்றது.

– வீரகேசரி 1988

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *