நிழல் பாவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 3,169 
 
 

அந்த ஒற்றை மாட்டு வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாக சில மனிதர்களையும், கட்டடங்களையும் கடந்து போனது. கவலையுடன் அமர்ந்திருக்கும் தன் கணவன் லட்சுமணராவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரத்னாபாய். வினாடிக்கு வினாடி பல அவதாரமெடுத்து ஜொலிக்கும், அழும், கர்ஜிக்கும், ஆனந்திக்கும், சவால்விடும், ஏமாற்றம் அந்த முகம் குராவிப்போய் வண்டியின் அசைவிற்கு தக்கபடி ஆடிக் கொண்டிருந்தது. பத்து இருபது வருடங்களுக்கு முன்னர் ரத்னாபாய் பல தடவை இதே ஊருக்கு தன் கணவருடன் வந்திருக்கிறாள்.

அப்போதெல்லாம் வண்டி ஊருக்குள் நுழைந்த உடனேயே ஊரே திரண்டு நின்று வரவேற்கும். ஊர் நாட்டாண்மையும், முக்கியஸ்தர்களும், வண்டியைச் சுற்றி நிற்க இளவட்டங்கள் ஒவ்வொரு பெட்டியாக போட்டி போட்டுக் கொண்டு இறக்கி வைப்பார்கள். அந்த பெட்டிகளுக்குள் லட்சுமணராவ் இந்த உலகத்தை அடக்கி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், ராவணன், மாரீசன், ஜடாயு, வாலி அப்புறம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், குந்தி, பாஞ்சாலி, துரியோதனன், கர்ணன், ஏகலைவன், கிருஷ்ணர், பீஷ்மர், துரோணாச் சாரியார், அரவான், அரக்கன், கீசகன், தாடகை, சூர்ப்பனகை அனைவரும் பெட்டிக்குள்தான் உறங்குகிறார்கள், நல்லதங்காளும், அவளுடைய பிள்ளைகளின் உயிர்குடித்த அந்தக் கிணறும் கூட பெட்டிக்குள் தான்.

வண்டி மேலக்களத்தில் வந்து நின்றது. சோகத்துடன் மெதுவாக இறங்கும் தன் கணவன் லட்சுமணராவை உற்றுப்பார்த்துக் கொண்டே வண்டிக்குள் தூங்கும் தன் மகன்களையும், மருமகளையும் தட்டி எழுப்பினாள் ரத்னாபாய். மாட்டைக் கொண்டுபோய் கட்டுவதற்காக இடம் தேடியலைந்த தன் மகன் கோபால்ராவை பார்த்துக் கொண்டே நின்றார் லட்சுமணராவ், வண்டியின் பக்கத்திற்கு யாருமே வராதது ரத்ணாபாய்க்கும் லட்சுமணராவுக்கும் வருத்தமளித்திருக்க வேண்டும், வண்டிக்குள்ளிருந்து இறங்கிய தன் மருமகளையும் மகள்களையும் கண்டவுடன் சில இளவட்டங்கள் நெருங்கி வந்து வேடிக்கை பார்த்தனர். கூடார வண்டியின் முதுகில் காளான்களைப் போல் தொங்கிக் கொண்டிருந்த நாலைந்து ஸ்பீக்கர் குழாய்களையும், இளம் பெண்களையும் மட்டுமே இளவட்டங்கள் உற்றப்பார்த்துக் கொண்டு நின்றனர்.

கூட்டத்தில் மெதுவாய் தலைகாட்டிய முத்துவீரன் தாத்தாவை அடையாளங்கண்டு கொண்டதில் லட்சுமணராவுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை. நடமாடும், பறக்கும், நீந்தும் அத்தனை ஜீவராசிகளையும் தன் கண்கள் வழியே கிரகித்து விரல் வழியே மலரச் செய்யும் சூட்சும கலை கற்ற கலைஞனல்லவா லட்சுமணராவ், அன்றாடம் தான் பார்க்கும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கவனித்து, சூர்ப்பனகைக்கு ஏற்ற நடையை உள் வாங்கிக் கொண்டு தன் விரலசைவில் சுழலும் நிழலுருவப் பாவைக்கு ஏற்றி திரையில் பரவசப்படுத்தும் நவீன கம்பன் லட்சுமணராவ், பீமன் நடையும், அர்ச்சுனனின் ஆர்ப்பரிப்பும், கிருஷ்ணனின் சாந்தமும், பாஞ்சாலியின் ஆவேசமும், கர்ணனின் கர்ஜனையும், குந்தியின் வருத்தம் கலந்த பதட்டமும் லட்சுமணராவின் விரல் வழியே திரையில் அசையும் ரசனை அற்புதத்திலும் அற்புதம்.

ஊரைச் சுற்றிலும் மலைமலையாய் நிற்கும் படப்புகளையும், மரத்தடியில் கழுத்து மணியோசை எழும்ப அசைபோட்டுக் கொண்டு நிற்கும் மாடுகளையும் காணவில்லை. முத்துவீரன் தாத்தா தொழுவத்தில் எருமைகளுக்காக வைத்திருந்த இரண்டு கட்டு நாற்றுக்கூளத்தை கொண்டு வந்து கொடுத்தார். கூடார வண்டிக்கு அடியிலேயும், மரநிழல்களிலும் ஜாமன்களை இறக்கி வைத்துவிட்டு, தன்னுடைய பேத்திற்காக தொட்டில் கட்டிக் கொண்டிருந்தாள் ரத்னாபாய். இன்னும் இரண்டு மூன்று சிறுசுகள் வண்டிப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தன.

கால மாற்றங்கள் பற்றியும், ஊர்களின் இன்றைய நிலவரம் பற்றியும், தங்களுடைய நிராதரவான நிலை பற்றியும் பேசிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தனர். முத்துவீரன் தாத்தாவும் லட்சுமணராவும், தன் மனசை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை சமயம் பார்த்து கேட்டார் தாத்தா.

“ராவ், இன்னிக்கி என்ன கத நடத்தப் போறீரு”

“கதையா? கதையெல்லாம் மலையேறி எத்தனையே வருஷமாச்சு”

“அப்புறம்…” ஆச்சரியமாய் கேட்டார்.

“ஆடலும், பாடலும்.” சிரித்துக் கொண்டே சொன்னார் ராவ்.

“அப்படின்னா”

“சினிமாப்பாட்ட பாடவிட்டு, அதுக்கேத்தமாதிரி ஆம்பளையும், பொம்பளையும் சேர்ந்து ஆடுறது.”

துண்டால் தன் முதுகில் அழுக்கு உருட்டிக் கொண்டிருந்த முத்துவீரன் தாத்தாவின் மேலெல்லாம் ஒரே நேரத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டியதைப்போல் சுரீரென்று தைத்தது ராவ் சொன்ன வார்த்தைகள். தாத்தா ராவ் முகத்தையே உற்றப் பார்த்தார். ஒரே நேரத்தில் போர் வீரனாக, மானம் காக்கப் போராடும் பெண்ணாக, வஞ்சிக்கப்பட்ட ஏகலைவனாக, தன் குருதி வடிய கவசக் குண்டலம் அறுக்கும் கர்ணனாக, போர் செய்ய உபதேசிக்கும் கிருஷ்ணராக, பறவையாக, குரங்காக, யானையாக, குதிரையாக, அரக்கனாக, ரதமாக, நளின நடைப்பெண்ணாக பல்லுருக் கொள்ளும் லட்சுமணராவின் வார்த்தைகளா இது? முத்துவீரன் தாத்தா ஆச்சரியமாய் பார்த்தபடி பெருமூச்சுவிட்டார்.

சில வருஷங்களுக்கு முன்னால் ரத்னாபாயும், லட்சுமணராவும் தெய்வங்களைப் போல் வலம்வந்த ஊர்களில் இன்று ஏறிட்டுக் கூட பார்க்காமல் எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.

இதே பாவைக்கூத்து வண்டி ஊருக்குள் நுழைகிறது. வண்டியைச் சுற்றிலும் ஊரே கூடி நிற்கிறது. முக்கியஸ்தர்களின் அறிமுகம். இரவு ஊர்க்கூட்டம் என்ன கதை படிக்க வைக்கலாம் என்ற விவாதம். வீட்டுக்கு இவ்வளவு வரிப்பணம் நிர்ணயம். கேலியோ கிண்டலோ செய்தால் தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம், எட்டு நாளோ பத்து நாளோ ராமாயணம் என்றால் ராமர் பட்டாபிஷேகம், மகாபாரதம் என்றால் வனவாசம் முடிய அன்று ஊரே திருவிழாக்கோலம். பக்கத்து ஊர்களிலிருந்து வந்து நிறைந்துகிடக்கும் வண்டிகள்.

ஊர்ப்பொதுவில் கொடுக்கும் வரிப்பணம் போக கோடி வேஷ்டி, சேலைகள், தானியங்கள், பயறுவகைகள், வத்தல், மல்லி என்று வண்டி நிறைந்துவிடும். பட்டாபிஷேகம் முடித்த மறுநாளே தன் விரலுக்குள் ஒளித்து கொண்டு வந்திருக்கும் மழையை பெய்ய வைப்பார் லட்சுமணராவ். பதினெட்டு நாள் குருசேக்ஷத்திரப் போரையே தன் விரலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் ராவால் காற்றையும், மேகத்தையும் ஒளித்து வைத்திருக்க முடியாதா? மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, சம்சாரிகள் சந்தோஷத்துடன் கும்பிட்டு வழியனுப்பி வைப்பார்கள்.

கடந்த காலத்தையெல்லாம் ஒன்று கூட்டி தன் நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு தொழுவத்தின் மூலையில் உட்கார்ந்து முகட்டு வளையையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் முத்துவீரன் தாத்தா. இந்த பாவைக் கூத்தைப் போல் எத்தனை கூத்துக்கள் வந்தன ஊர்தேடி. அவர்களெல்லாம் எங்கே எப்படி ஏன் தொலைந்து போனார்கள். சாமக்கோடாங்கி ராப்பிச்சை, பச்சை குத்துபவர்கள், காவடிப் பாட்டுக்காரர்கள், கிண்ணட்டிக்காரன், மரக்கால் ஆட்டம் மணியாட்டிக்காரன், பொழிப்பாட்டுக்காரன், அடக் கடவுளே இவர்களையெல்லாம் கால வெள்ளம் எங்கே கொண்டுபோய், எந்தக் கரையில் ஒதுக்கியது. எந்த நாகரீக சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டார்கள், கால இழுவைக்குள் மறைந்து தன் சுயமுகம் இழந்து உருத்தெரியாமல் மாறிப் போனார்களா என்ன?

முத்துவீரன் தாத்தா துள்ளும் இளவட்டமாய், பொழிகளம் சுற்றி வரும் இருபது மாடுகள். பொழிப்பாட்டுக்காரன் வந்து களத்தில் நிற்கிறான். முத்துவீரன் தாத்தாவின் அப்பா கும்பிட்டு வரவேற்கிறார். தன் இஷ்ட தெய்வங்களை வணங்கிப் பாடிவிட்டு மாடுகளைப் பற்றி பாடுகிறான் பொழிப்பாட்டுக்காரன். கூட்டம் திரண்டு கூடி நிற்கிறது. பிணையலடிக்கும் ஒவ்வொரு மாட்டையும் பற்றி அதன் நிறம் சுழி, கள்ளப்பாய்ச்சல், சண்டி, ரத்தக்கண், சுண்டுவாதம், மொட்டைவால், ஒட்டுவால், மூழி, போர், மயிலை, செவலை, கழிச்சான், கடகாபல் ஓட்டை, குறுங்கால், என்று பலவித மாடுகள் – அதன் குணங்கள் சரம்சரமாக ராகம் தாளம் தவறாமல் வந்து கொண்டேயிருக்கிறது. கடேசியில் பாட்டை நிறுத்தியவன் இருபது மாடுகளில் முதன் முதலில் பிணையல் கண்ணியில் பூட்டியமாடு இந்த மாடுதான் என்று அடையாளம் காட்ட கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தப்பாத குறி. மாடுகளின் கால்களுக்குள் என்ன மகசூல் பிணையாக மிதிபடுகிறதோ அதில் மூன்று தரம் தன் இருகைகளாலும் அள்ளிக் கொள்ளலாம் இதுதான் பாட்டுக்கான கூலி.

இதற்காகவே தைத்துக் கொண்டு வந்திருக்கும் அகன்ற நீண்ட சாக்குப்படுதாவை களத்தை ஒட்டி விரிக்கிறான். நீச்சலடிப்பவனைப் போல் பொழியின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு தன் நெஞ்சுக்கு முன்னால் தவசங்களை கூட்டி வைத்துக் கொண்டு மலையைத் தூக்கிக் கொண்டு பறந்து செல்லும் அனுமனைப் போல் பாடிக் கொண்டே, ஆயிரம் கண்கள் பார்த்திருக்க அப்படியே துள்ளிப் போய் அவன் விரித்த சாக்கில் உட்கார்கிறது தானியம். மூன்று தரம் அள்ளி அம்பாரமாய் மூட்டை கட்டியவுடன் அடுத்த களம் போகிறான். மேளக் களத்திலிருந்து மிதந்து வந்த சினிமா பாட்டின் ஒலி முத்துவீரன் தாத்தாவை இந்த உலகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. மெதுவாக நடந்த தெருவில் நின்று மேற்காமல் எட்டிப்பார்த்தார். நிறைய டியூப் லைட்டுகள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தன. மேடையைச் சுற்றிலும் ரொம்ப தூரத்திற்கு துணியால் கோட்டைச் சுவர் மாதிரி தடுப்பு எழுப்பியிருந்தார்கள். எட்டி நின்று பார்த்தாலும் உள்ளே பார்க்க முடியாதபடி உயரமாய் இருந்து தடுப்பு சினிமாப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இடையிடையே அறிவிப்பு செய்தான் கோபால்ராவ்.

“அன்பார்ந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், தனுஷ் ரசிகர்களே… உங்களின் ரசனைக்கேற்ற பழைய புதிய பாடல்களைக் கொண்டு உங்களை கிறங்க வைக்கும், அழகிகளின் ஆட்டம் காணத் தவறாதீர்கள். சரியாக எட்டு மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். முதல் வகுப்பு இருபது ரூபா, இரண்டாம் வகுப்பு 10 ரூபா, மூன்றாம் வகுப்பு ஐந்தே ரூபாதான். இடையழகி, தொடையழகி, இடுப்பழகி, சிரிப்பழகி, என்று அத்தனை அழகிகளும் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறார்கள், இளஞ்சிட்டுக்கள் இன்பமொட்டுக்கள், உங்களை மகிழ்விக்க இன்னும் சற்று நேரத்தில்…”

முத்துவீரன் தாத்தாவும் முண்டியடித்துக் கொண்டு செல்லும் கூட்டத்துடன் நின்றார். லட்சுமணராவும், ரத்னாபாயும் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

திரைக்குப்பின்னால் லட்சுமணராவ் பக்கத்தில் ரத்னாபாய். மலை போல் குவிந்து கிடக்கும் தோல் பாவைகள், கால்விரல்களிலும், கை விரல்களிலும் பல முனைகளிலிருந்தும் கயிறுகளால் இணைக்கப்பட்டிருக்கும் பாவைகள். கைகளைச் சுண்டி பாவைப் பொம்மைகளை திரையில் காட்டிக் கொண்டிருக்கும் போதே வசனம் பேசும் வாய். வாயசைவில் உதிர்த்து வரும் வசனத்திற்கேற்ப பாவைகளின் உறுப்புகளை சுண்டியிழுத்து அசையச் செய்யும் ஆடச் செய்யும் கால் விரல்களின் லாவகம், ஒரே நேரத்தல் உடலின் அனைத்து உறுப்புகளும் லயத் தவறாமல் இயங்கி கத்தி, கதறி, ஆடி, பாடி, பறந்து, மறைந்து, அந்த மாயஜால நிழலுருவப் பாவைகளின் குவியல்களின் தங்களை மறந்து ரசித்து கைதட்டி, ஆரவாரித்து, ஆர்ப்பரித்து.

குறிப்பிட்ட மணித்துளிக்குள் முடிக்க வேண்டிய இதய அறுவைசிகிச்கையில் அடுத்ததாக மருத்துவரின் கையில் என்ன ஆயுதம் இருக்க வேண்டுமா அதை யூகித்துணர்ந்து எடுத்துக் கொடுக்கும் நிபுணனைப் போல் ரத்னாபாய், கதையோட்டத்தின் அடுத்தவரிக்கு என்ன பாவை வேண்டுமோ தயாராக ராவின் கைகளில் திணிக்க வேண்டும். வினாடி பிசகினாலும் கதையோட்டம் மாறி, உருவங்கள் பொருந்தாது. கர்ணனுடன் போர் செய்ய அர்ச்சுனன் ஆய்த்தமானான் என்றவுடன், அர்ச்சுனனுக்குப் பதில் கிருஷ்னன் போய்விட்டால், யுத்தம் கிருஷ்ணனுக்கும் கர்ணனுக்கும் நடந்தேறி விடுகிற அபாயமுண்டு. லட்சுமணராவின் கண்கள் வழியே செல்லும் தேவலோக பாஷைகள்தான். ரத்னாபாயை கச்சிதமாக பாவைகளை எடுத்துக் கொடுக்க உதவுகின்றன போலும்.

கொச்சைத்தனமான இரட்டை அர்த்த காம ரசப் பாடல்களுக்கு கோபால்ராவும், அவனுடன் பிறந்த சகோதரிகளும் அரைகுறை ஆடைகளுடன் சேர்ந்து ஆடியதைப் பார்க்க சகிக்காதவராய் முத்துவீரன் தாத்தா வெளியே வந்தார். திரையுலக நிழலுருவப் பதுமைகளை தன் அந்தரங்க நாயகிகளாக வரித்துக் கொண்டு அமர்ந்திருக்க இளவட்டங்கள் உற்சாக மிகுதியால், ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் கைதட்டி, விசிலடித்து, ஆர்ப்பரித்ததோடு மேடையேறி அன்பளிப்பாக ரூபாய் நோட்டுக்களை பெண்களின் மேலெல்லாம் குத்தி நிரப்பினர். அன்னிய ஆடவரின் கை ஸ்பரிசம் பழகிப் போய்விட்டதோ என்னவோ, எந்த இடத்தில் தொட்டாலும் முகம் சுளிக்காமல் ரூபாய் நோட்டுக்கள் குத்துவதற்கு தங்கள் உடலைக் காட்டிக் கொண்டு சிரித்தபடியே நின்று போஸ் கொடுத்தனர் பெண்கள். ஒவ்வொரு பாடலுக்கும் ஆடி முடிந்ததும் வியர்வை வழிய ஓடிவரும் தன் மகள்களுக்கும், மருமகளுக்கும் ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள் ரத்னாபாய் திடீரென்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டான் கோபால்ராவ்.

“டான்ஸ் ஆடத்தெரிந்த இளவட்டங்கள் மேடைக்கு வரலாமென்றும், ஒரு பாடலுக்கு பெண்களுடன் சேர்ந்து ஆட இருபது ரூபாய் கட்டணமென்றும், அதே போல் நல்ல சேலைகள் இருந்தால் பெண்கள் கொடுத்து உதவும்படியும் காலையில் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் வேண்டுகோள் விட்டான்.” இளைஞர் பணம் கொடுத்து பெண்களுடன் ஆடுவதற்கு போட்டி போட்டனர். புதுப்புது டிசைனில் சேலைகள் குவிந்து விட்டன. தன் சேலையைக் கட்டிக் கொண்டு ஆடிய பெண்கள் தனக்குப்பிடித்தவன் தொட்டு ஆடியதைத் தானே ஆடியதாக ரசித்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள். ஆடத் தெரியாமல் ஆசையில் மட்டும் மேடையேறிய உள்ளூர் இளைஞர்களை, வலுக்கட்டாயமாக பெண்கள் இழுத்து இழுத்து அணைத்து நெருங்கி ஆடியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. தொழுவத்தில் வந்து படுத்த முத்துவீரன் தாத்தாவுக்கு உறக்கம் வரவில்லை. தொடர்ந்து கொச்சைத்தனமான பாடல்களும் கூச்சலும் கும்மாளமும், விசில் சத்தங்களும் மிதந்து வந்து அவரை அலைக்கழிக்க எப்போது ஆட்டம் முடிந்தது… எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கினார்.

காலையில் அவருக்கு லட்சுமணராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக வந்த கூடாரத்தை எட்டிப் பார்த்தார். வேஷம் கலைக்காத பவுடர் பூச்சுக்கள் அழியாத அரங்கோலத்துடன் பெண்கள் தாறுமாறாகப் படுத்துக்கிடந்தனர். வெளியே பந்தலுக்குள் சத்தங்கேட்கவே உற்றுப்பார்த்தார். லட்சுமணராவ் தன்னுடையப் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். முத்துவீரன் தாத்தா மறைந்து நின்று கவனமாய் கேட்டார்.

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தா, அந்த பாட்டி மரத்தடியில் உட்கார்ந்து வடை வித்துக்கிட்டிருந்தா, ஒரு காக்கா வேகமா வந்து பாட்டியோட வடைய தூக்கிட்டு பறந்து போயி மரத்து மேல உட்கார்ந்திருக்கிக்சி. பாட்டி கூப்பாடு போட்டு அழுதா. அப்போ அந்த வழியா ஒரு போலீஸ்காரர் வந்தாரு. பாட்டி அழுதுக்கிட்டே போயி போலீஸ்காரர் கிட்ட சொன்னா. போலீஸ்காரர் வேகமாயப் போயி மரத்தடியில் நின்று காக்காயப்பாத்து, “ஏய் காக்கா! ஒழுங்கா மரியாதையா பாட்டியோட வடையைக் குடுத்துரு. இல்ல ஒன்னய இந்த துப்பாக்கியால சுட்டுப் பொசுக்கிடுவேன்”னு சொன்னாரு அப்போ காக்கா சொல்லுச்சு, “ஒம்ம சோலியப் பாத்துட்டு பேசாம போரும், இது எனக்கும் பாட்டிக்கும் உள்ள விவகாரம்” அப்படின்னு சொல்லிட்டு வடையத் திங்கப் பார்த்துச்சு. ஒடனே போலீஸ்காரருக்கு கோபம் வந்து “ஒழுங்கா குடுக்கப் போறயா இல்ல சுடவா?”னு கேட்கவும், காக்கா சொல்லிச்சு, “நம்ம ரெண்டு பேரும் ஆளுக்குப் பாதியா பங்கு வச்சிக்கிருவம்” அப்படின்னு சொல்லி பாதி வடைய பிச்சு கீழ போட்டுருச்சு. ஒடனே போலீஸ்காரர் துப்பாக்கிய கீழவச்சுட்டு குனிஞ்சு வடைய எடுக்கப் போனாரு. அப்ப காக்கா விருட்னு பறந்துவந்து துப்பாக்கிய தூக்கிட்டுப் போயி உச்சி மரத்துல உக்கார்ந்துக்கிருச்சு. ஒடனே போலீஸ்காரர் “காக்கா…. காக்கா நாளைக்கு ஒனக்கு அஞ்சு வட வாங்கித் தாரன், என்னோட துப்பாக்கிய குடுத்திரு காக்கா”ன்னு கெஞ்சினாரு. காக்கா சொல்லிச்சு “நீ என்ன பெரிய அரிச்சந்திரனா ஒன்னய நம்பமாட்டேன்போ”னு சொல்லிருச்சு. “சத்தியமா என்னய நம்பு காக்கா”ன்னு போலீஸ் சொன்னாரு. “சத்தியத்த நாம் நம்பவே மாட்டேன். அதெல்லாம் அந்தக் காலம் ஒன்னோட துப்பாக்கி வேணும்னா; அஞ்சு வடைய ஒடனே இப்பவே வாங்கிட்டு வா. இல்லனா நடையக்கட்டு, டயத்த வேஸ்ட் பண்ணாத எனக்கு நெறய்ய வேல இருக்கு எடத்த காலி பண்ணு” அப்பிடினு சொல்லிட்டு அடுத்த மரத்துல போயி ஜம்னு உக்கார்ந்துக்கிருச்சு.

முத்துவீரன் தாத்தா லட்சுமணராவையே பார்த்துக் கொண்டு நின்றார். மரத்தடியில் வடை விற்கும் பாட்டியாக பாஞ்சாலியை உட்கார வைத்திருந்தார். கீசகனைக் கொல்வதற்காக பீமன் பிடுங்கிய மரமே இப்போது வடைவிற்கும் பாஞ்சாலிக்கு நிழல் தந்து கொண்டிருந்தது. வடையைத் திருடிக் கொண்டு ஓடிய காக்கையாக மரக்கொப்பில் ஜடாயு உட்கார்ந்திருந்தது. துப்பாக்கியைப் பறி கொடுத்த போலீஸ்காரனாக கிருஷ்ண பரமாத்மா வடைகள் அடுக்கிய கூடையாக ஜடாயுவின் வெட்டுப்பட்டு வீழ்ந்த ஒற்றை இறக்கை.

ஒரு துயரப் பெருமூச்சுடன் முத்துவீரன் தாத்தா லட்சுமணராவைப் பார்க்கமலேயே திரும்பி நடந்தார். தூரத்தில் சீதையைத் தூக்கிச் சென்ற ராவணனின் தேரும், மாய மானும் தரையில் கிடந்தன. மூலைக் கொன்றாய் சிதறிக்கிடக்கும் தோல் பாவைகள் உபயோகமற்று விளையாட்டுப் பொருட்களாக சிதறிக் கிடந்த பாவை ஒன்று அவர்காலில் இடற குனிந்து எடுத்தார். முள் படுக்கையில் பீஷ்மர். திடுக்கிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கிய முத்துவீரன் தாத்தாவின் விரல்களில் முள்குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தாத்தா லட்சுமணராவின் விரல்களை நினைத்தபடியே மெதுவாக நடந்தார். அவருக்கு பாஞ்சாலி கதறுவது போலவும், ராவணனின் தேருக்குள்ளிருந்து சீதை கத்துவது போலவும், கட்டைவிரல் இழந்த ஏகலைவன் கதறியழுவது போலவும் பல சத்தங்கள் கேட்டன.

நேற்று இரவு கட்டி ஆடுவதற்காக இரவல் கொடுத்த தங்கள் சேலைகளை குமரிப் பெண்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். முகர்ந்து கொண்டும், மார்போடு அனைத்துக் கொண்டும்.

நன்றி: தீராநதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *