சுற்றி வளைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 1,500 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஏரியாவே பதற்றமாகி விட்டது… தலை துண்டிக்கப்பட்ட கொண்டைச் சேவலொன்று சிறகுகளை நிலத்திலடித்துக் கொண்டிருந்த காட்சிப்படிமம் காற்றின் திரைகளில் விரிந்தது. சூரிய வெளிச்சத்தின் பகற்பொழுது படபடப்பாக இருந்தது முக்கால் வாசி இதயத்துடன். 

கலவரச்சூழலின் இயல்பற்ற தொனி கறுத்துப் போக ஆரம்பித்த அந்தப் பகற் பொழுது ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டின் ஆகஸ்டு மாத கால ஏதோ ஒரு திகதிக்குச் சொந்தமானது. இரவின் நிலவழகை அசந்தர்ப்பமாகத் தொலைத்திருந்த நிலாவெளிக் கிராமம். அழகான பெயர். உச்சரிக்கும்போதே கவிதைப்பிரவாகம் மனசுக்குள் பீய்ச்சியடிக்கும். ஆனால் சுற்றியிருப்பது அச்சுறுத்திக் கொண்டும் விஷம் தடாவப்பட்ட சூழல் அந்த அழகை ரசிக்க விடவில்லை. 

எத்தனை வருஷமாச்சு நிலாவெளி எனும் இந்த ஊரில் நிலவை ரசித்து… நிலவை சுகித்து… நிலவை மோகித்து. இன்னமும் நிலவிருக்கா…. எவ்வளவு காலமாச்சு இரவின் வானத்தை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்து. மாலை ஆறு மணியோடு தானாக சாத்திக் கொள்ளும் கதவு களுக்குரிய வீடுகளில் கைதிகளாகிக்கிடக்கும் வரலாறு ரொம்ப நீண்டது. அதன் இரு கரை களிலும் இரத்தக் கறை படிந்து போய் இப்போது பாசி வாசம் அடிக்கின்றது. 

தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் தலைப்பில் எந்தத் தமிழ் இளைஞரைக் கண்டா லும் சந்தேகங்கொண்டு எக்ஸ்ரே எடுக்கின்ற பொழுதுகளின் பின்னணியில் ரவுன்டப்புகளின் பெயரால் பீதியுற்றுக் கிடந்தது நிலாவெளி. நிலவொளி சிதைந்து வாழ்க்கையின் அரைகுறை சுவாசத்திற்கு விழி பிதுங்கிக் கிடந்த நிலாவெளி யில் இரத்தப் பிசுபிசுகளின் விடியல்கள்… முடிவேயற்ற தேடுதல்கள். எதையோ தேடி எதையோ அல்லது எவனையோ பலாத்காரமாக இழுத்துச் செல்லும் தேடுதல் வேட்டைகள். 

ரவுன்ட்அப் என்பது தமிழ் அளவுக்கு ரொம்பவும் பரிச்சயப்பட்டு அதற்கான தமிழர்த்தம் தெரியாமல் அல்லது தெரிய முயற்சிக்காமல் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கை, ஆட்பிடித்தல் என்பன போன்ற ஒத்த கருத்துச் சொற்களோடு எல்லா நாட்களும் உறைந்து போய்க் கிடந்த இளைஞர்களில் தர்மாவும் ஒருவன். 

கொட்டியாரப் பேனாக்காரன் வ.அ. இராசரத்தினத்தின் ஒரு வெண்மணற்கிராமம் நாவலில் பளபளத்துக்கிடக்கின்ற ஆலங்கேணி போலவே இதுவும் அழகான வெண்மணற் கிராமம். இப்போதெல்லாம் சிவந்து போய்க்கிடக்கின்றது. பல நேரங்களில் முகம் கருத்துப் போய்க்கிடந்தது. அந்தக் கிராமத்தின் பெரும்பாலான இளைஞர்கள் நாட்டின் பல் – வேறு திசைகளுக்கும் சிதறினார்கள். பயத்தின் காரணமாக எஞ்சிய இளைஞர்கள் அநேகமாக வீடுகளுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்தார்கள். 

எப்போது ஆர்மிக்காரனின் ரவுன்டப் நடக்கும் என்று எதிர்வு கூற முடியாது. ஆனாலும் இரண்டு கிழமை அல்லது சிலவேளை ஒரு கிழமைக்குள் ஆகக் குறைந்தது ஒரு ரவுன்டப் என்பது அந்தக் கிராம மக்களுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போய்விட்டது. அது எழுதப்படாத விதி. ரவுன்டப் என்றால் பீதி மயம்தான். பீதி மயப்படுத்தப்பட்ட அந்தக் கணங்களில் பெற்ற வயிற்றுக்குள்ளே பெற்றோல் வாசம். திடுதிடுவென அச்சம். ராசா எங்காவது போயிடு.. இங்க இருக்காதே. நீ என்ட கண் முன்னாலே நடமாடாட்டியும் பரவால்ல. எங்காவது ஒரு எடத்துல நீ உசிரோட இருந்தா அதுவே போதும். இந்த எடத்த வுட்டுட்டு போ மோனே…. எனக் கதறு கின்ற தாய்மார்களின் கண்ணீரில் பல இளைஞர்கள் அந்தக் கிராமத்திலிருந்து காணாமல் போய் விட்டார்கள். 

கொடுமை. 

ரவுன்டப்பின்போது எப்படியும் புலிச் சந்தேகத்தில் ஆகக்குறைந்தது பத்து பதினைந்து பேராவது பிடிக்கப்பட்டு விசாரணைக்கென்று ஆர்மி யால் கொண்டு செல்லப்படுவார்கள். அப்படிக் கொண்டு செல்லப்படுபவர்களில் அன்றையதினமே பலர் விடுவிக்கப்படுவார்கள். சிலர் பூசாவுக்கும், மெகஸின் சிறைச்சாலைக்கும் மேலதிக விசாரணைக் காகவென்று கொண்டு செல்லப்பட்ட கதைகள் ஏராளம். 

பலத்த சந்தேகம் பழுத்துவிட்டது. பலர் இன்னும் பூஸாவிலும் மெகஸின் சிறைச்சாலைகளிலும் இருக்கின்றார்களா? ஆர்மியால் பிடிக்கப்பட்டு பூஸாவுக்கும் மெகஸினுக்கும் கொண்டு செல்லப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் போடப்பட்டு விசாரணை 

தடுப்புக்காவலில் 
விசாரணை 
தடுப்புக் காவலில் 
விசாரணை 
தடுப்புக் காவலில்,
விசாரணை 

இப்படி ரவுன்டப்பின் விழிகள் அரண்டு உசிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த நிலாவெளிக் கிராமத்தின் இன்னுமோர் பதற்றப்பொழுதில் சூரியனின் கண்களிலிருந்து சிவப்பு நிறத்தில் கண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கின்ற பச்சை மிளகாய் காரம். 

“டேய் ஆர்மிக்காரங்க வந்துட்டாங்க…”

“ஆர்மியா…” 

“ரவுன்டப் டோய்…. ஓடுங்கடா…”

“ரவுன்டப்பா..” 

பதற்றம் பெரு நெருப்பினை பற்றிக் 

கொண்டது. அச்சத்தத்தின் உச்சஸ்தாயி சப்தத்தில் மயான அமைதி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. 

திடீர் சுற்றிவளைப்பு 

ஆர்மிக்காரர்களின் கையில் சில இளைஞர்கள் அகப்பட்டார்கள். குதிரை வேக இதயத் துடிப்போடு மாரிக்கால மேகங்களை அவசரமாக முகம் பூராவும் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அகப்படாதவர்கள் கண்ணுக்குப்பட்ட இடங்களுக்குள் பருந்துக்குப் பயந்த கோழிக்குஞ்சுகளாய்… அவர்களது சிறகுகள் மைனஸ் டிகிரிகளில் நீரில் புதைந்து போய்க் கிடந்தன. 

தர்மா… அகப்படாதவன். 

“டேய் தர்மா வீட்ல இருக்காதடா.. போடா எங்காவது போய் ஒளிஞ்சு கொள்டா.. போடா மோனே… ஆர்மிக்காரன் வீடு வீடா எறங்கி சோதன பண்ணுறான். சுருக்கா போடா…” 

புத்திரனை பொத்திப் பாதுகாக்கும் பெத்தவனின் நடுக்கம் உதடுகள் வயர் இணைப்பில்லா தந்திகளை அடித்துக்கொண்டு, 

அப்பா அழுதார் 

அம்மாவின் கதறல் 

“போடா மோனே…” 

வீட்டுக்குள்ளிருந்த தர்மா மெல்ல, ஆனால் அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறினான். 

கண்ணுக்குப் புலப்படும் தூரத்தில் இரும்பின் உபயத்தி லான ஆட் தின்னும் ஆயுதங்களோடு ஆங்காங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பக்கத்தில் … அது ராஜூ… சிவா… யோகநாதன்..மோஸஸ்… அங்கால வேலாயுதம். 

அது மாணிக்கத்தாரின்ட மகன் வினோத்… அவனுக்கு பன்னிரெண்டு வயதுதானே இருக்கும். ஐடென்டி கார்டு கூட கிடையாதே… ஏழாம் ஆண்டோ எட்டாம் ஆண்டோ படிக்குற பையனப் போய்… இவனுமா… கடவுளே… தர்மாவைப் பொறுத்தவரை இன்றோடு இது எத்தனையாவது ரவுன்டப்… அவன் எண்ணிக் கணக்கு வைத்திருக்கவில்லை. ரவுன்டப்பும் சூரிய உதயம்… சூரிய அஸ்தமனம் மாதிரி… நித்திய மாகிவிட்டது. மாட்டாத வரை வாழ்க்கை… மாட்டிக்கொண்டால் சங்குதான். 

ஒவ்வொரு ரவுன்டப்பின் போதும் கிடைத்த இடங்களில் உசிரைக்கையால் பிடித்துக்கொண்டு பதுங்கிக் கிடப்பதும் ஒதுங்கிக் கிடப்பதும்… ஒளிந்து கொண்டிருப்பதும் என வாழ்வதே பெரும் சுமையாகிப் போன சூழலில். எலிப்பாசனம் வைக்கப்பட்டு கிலி கொள்ளச் செய்யும் பொழுதுகளில் முதுகுத்தண்டு சில்லிடுகின்றது. 

அஞ்சாறு மாசத்துக்கு முந்தி நடந்த ரவுன்டப் ஒன்றில் தர்மா ஆர்மியால் பிடிக்கப்பட்டு மிகக் கடுமை யாக விசாரிக்கப்பட்டான். தெய்வாதீனமாக அன்று தப்பிவிட்டான். ஆனால் மிகக்கடுமையாக எச்சரித்து விட்டுத்தான் (இன்னும் அவர்களுக்கு அவன் மீதான சந்தேகம் தீரவில்லை) திடீர்திடீரென்று நடக்கின்ற இந்த மாதிரி ரவுன்டப்புகளில் மாட்டிக் கொள்வதில் படு மெத்த உத்தமம். 

கடந்த மாதம் இடம்பெற்ற ரவுன்டப்பில் இராணுவத்தால் கைது பண்ணப்பட்ட வாசுவும் மித்ரா வும் இப்போது எங்கிருக்கின்றார்கள் என்று இதுவரை எவருக்கும் தெரியாது. விசாணைக்கென்று தான் அழைத்துப் போனார்கள். இரண்டு பேரின் பெற்றோரும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என அலைந்து கொண்டிருக்கின்றார்கள். 

அதோ ராணுவ வீரர்கள் தெரிகின்றார்கள். 

இனி இந்த தேடுதல் வேட்டையும் விசாரணை முஸ்தீபு களும் எவ்வளவு நேரத்துக்கு தொடரும் என எதிர்வு கூற முடியாது… திக்திக்கென்ற இதயத்தின் துடிப் பொலியுடன் மெல்ல மெல்ல வீட்டிலிருந்து வெளி யாகி வளவுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டான். 

சற்றுத் தொலைவில் .. கூப்பிடும் தூரத்தில் கடற்கரையை அண்டின பிரதேசங்களில் சின்னச் சின்னக் பற்றைக் காடுகள். அந்திவரை அதற்குள் ஒளிந்திருக்க வேண்டும். வாழ்வதற்காக செத்து மடியும் தருணங்கள்… மெல்ல அந்தக் காட்டை நோக்கி நகர்ந்து சென்றான்.

ஒரு மூன்று நிமிஷம் போயிருக்கும்.

“அடோ நவத்தன்ன…” என்றதிர்ந்து காற்றின் எல்லாத் திசையிலும் சிதறுப்பட்டுப்போன வார்த்தைகளுக்கு உரித்துக்காரன் யார் என்ற கேள்வி யோடு … உசிரு அறுத்த கோழியாகி… கசாப்புக்கடை யில் வெட்டப்பட்ட ஆடாகி… தர்மா திரும்பிப் பார்த்தான். சிங்கள வார்த்தைகளின் சொந்தக்காரன் அந்த இராணுவச் சிப்பாய்… கையில் துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தான். 

தான் காடு நோக்கிச் செல்லுவதனை அந்த இராணுவச் சிப்பாய் எப்படியோ கண்டுவிட்டான். கறுப்பு மசியால் எழுதப்பட்ட தலைவிதியின் உச்சி மண்டையில் சிவப்பு விளக்கு அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அவனது துரதிஷ்டம் தவிர வேறென்ன… தான் நின்று விட்டால் எப்படியும் அவன் தன்னைப் பிடித்துக்கொண்டு போய் விசாரணை செய்து எங்கே போனாய்.. ஏன் போனாய் ஆயிரம் கேள்விகளும் அவ்வப்போது விழும் அடிகளாலும். சித்திரவதை செய்து… அப்புறம் நீ கொட்டியாதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் தன் வாழ்வு இந்த அத்தியாயத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்பது தர்மாவுக்குத தெரியும். 

புத்தியை விட உணர்ச்சிகளின் பெருக்கம் ப்போது வேலை பண்ண ஆரம்பித்ததில்… மனசு ஓடுஓடு… நிற்காதே நின்றால் ஆபத்து போ போயிடு என கட்டளையினை பிறப்பித்துக் கொண்டிருந்தது. 

அவனை அதட்டிய இராணுவச் சிப்பாயின் கண்கள் நிறைய சந்தேகம்… முகத்தில் இறுக்கம்.. ஒரு வகையான வெறிகலந்த பார்வை… கையில் தயார் நிலையில் இந்தா வெடிக்கப் போகின்றேன் என்று துப்பாக்கி. நல்லா மாட்டிக் கிட்டுட்டோம். 

நிலமை சரி யில்லை. 

தர்மா எதையும் யோசிக்காமல் ஓட ஆரம்பித்தான்… பின்னால் தபதபவென்று பூட்சுகளின் சப்தம்…. 

மிகத் தெளிவாக காதுகளினுள்ளே விழுந்து விழுந்து நரம்புகளை துவம்சம் செய்தது. அவன் துரத்துகின்றான்.. அவனது பூட்சுகளின் சப்தம் தெளி வாகக் கேட்கிறதென்றால் தனக்கு மிக நெருக்க மாக அவன் வந்துகொண்டிருக்கின்றானென்று அர்த்தம். 

“அடோ நில்லு… நவத்தன்ன… துவன்ன எபா” எனும் வாசகங்கள் மீண்டும் காற்றில் சிதறின… 4 காதுகளுக்குள் பற்றிக்கொண்ட நெருப்பு மண்டைக்குள் மங்கள விளக்கேற்றி வைத்தது. வாழ்வின் இறுதித் தருணங்கள். இன்றோடு நிலாவெளி மண்ணில் எனது மரணம் நிகழப்போகிறது… குண்டடிபட்ட எனது உடலத்தில் எதிரியின் பெயர் பச்சை குத்தப்படப் போகின்றது. 

தான் சாகப் போகின்றேன் என்று இறுதியாகத் தெரிய வருகின்றபோது எப்படியேனும் எஞ்சிய உசிரைக் காக்க வேண்டும் எனும் வெறி வழமைக்கு மாறான வேகத்தை கொடுத்துவிடுகின்றது. அந்த தியரி தான் இப்போது தர்மாவுக்கும்… தர்மாவின் கால்களில் சக்கரங்கள் கட்டப்பட்டன. முன்னிலும் பார்க்க இப்போது மிக வேகமாக ஓடினான். எப்படியாவது இந்த இராணுவச் சிப்பாயிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய அவனது குறி. 

எல்லா வழிகளும் அடைபட்டாயிற்று. அந்த இராணுவ வீரன் தர்மாவை துரத்திக் கொண்டிருந்ததில் அவனும் முன்னிலும் பார்க்க இப்போது வேகமாக ஓடுகின்றான் என்பது புரிந்து போயிற்று. ஆதலால் இன்னும் வேகமாக ஓடுவதனைத் தவிர வேறு வழி யில்லை. இவனிடம் பிடிபட்டால் அவ்வளவுதான்.. இப்போது இவனுக்கு சந்தேகம் வலுத்திருக்கும். நிச்சயம்தான் அது இவன் சொல்வது மாதிரி இப்போது இந்த இடத்தில் நான் நின்றுவிட்டால் நிச்சயமாக என்னை அவன் விடப்போவதில்லை. மாற்றமாக பிடித்துப் போய் இராணுவ முகாமுக்கு கொண்டு போய் விசாரணை எனும் பேரில் சந்தேக நபராக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்படுவேனோ இல்லை காணாமல் போவேனோ… ரொம்ப பெரிய பயங்கரம்.. அதைவிட உத்தமம் முடியுமட்டும் ஓடுவோம்… ஓட ஆரம்பித்தாயிற்று… இனி நிற்க முடியாது… நின்றால் என் நிலைமை முடிந்துவிடும். வாழ்வு அல்லது மரணம்.. தெனம் தெனம் செத்துப் பிழைப்பதனை விட… விட… ம்ஹூம்… வாழும் ஆசைதான் அவரது ஓட்டத்தில் வேகத்தை கலந்திருந்தது. 

சுற்றிவரக்காடுகள்… மனித அரவ மற்றிருந்தது அந்த இடம்… அந்த இராணுவ சிப்பாய் இன்னும் தர்மாவைத் துரத்திக் கொண்டிருந்தான்.. இருவருக்கிடையில் சுமார் இடைவெளி சில நேரம் அந்த ஆர்மிக்காரன் பிடித்துவிடக் கூடிய வாய்ப்பு நிறையவே இருந்தது. 

ஆதலால், தர்மா ஓடுவதில் இன்னும் தீவிரம் காட்டினான். 

“யகோ.. நவத்தபங்…. துவன்ன எபா… துவன்ன் எபா… நெத்தங் வெடி தியனவா… நவத்தன்ன… துவன்ன எபா…” அவனது குரல் காதுக்கு மிக நெருக்கமாக கேட்டது எனில்… அதெல்லாம் யோசிக்க நேரமில்லை. 

அந்தக்குரலில் இருந்த முரட்டுத்தனமும் ஆக்ரோஷமும் திகில் செய்து தர்மாவை கொஞ்சம் கொஞ்சம் தின்று கொண்டிருந்தது. திகிலை அழைத்துக்கொண்டு திசை தெரியாது ஓடிக் கொண்டிருந்தவன் திடீர் என்று நின்று திரும்பிப் பார்த்தான். 

“படீர்”. 

இராணுவச் சிப்பாயின் துப்பாக்கி வெடித்து அதிலிருந்து புகை கிளம்பியது.. அவனது துப்பாக்கி யிலிருந்து புறப்பட்ட புல்லட் விட்ட வேகத்தில் மைக்ரோ நொடிகளில் தர்மாவை தொட்டணைத்த போது குபுக்கென உடனடி ரத்தம்… குண்டடிபட்டுத் திரும்பிய தர்மா அப்படியே சரிந்து பலவீனமாகி கீழே விழுந்தான்… அந்த ராணுவச் சிப்பாய் அவனை மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தான். 

இனி அவ்வளவுதானா… நான் செத்துக் கொண்டிருக்கிறேனா… குண்டு எங்கே பட்டது… உடல் முழுக்க குருதியாபிஷேகம்… ஆ…..ஆ…. ஆ…. வலித்த இடம் வலது கை… வலது முழங்கைக்கு மேல் குண்டடிப்பட்டிருந்தது… மரணவலி… என்ட 

கடவுளே…. என்னைக்காப்பாத்து… என்ட கடவுளே… 

சுய நினைவிலேதான் இருந்தான் தர்மா. அந்த இராணுவச் சிப்பாய் இப்போது அவனது பக்கத்தில் கோப விழிகளோடு நின்று கொண்டிருந்தான். 

குருதி தன் பாட்டுக்கு கொப்பளிக்க ஆரம்பித்து ஹீமோகுளோபின் தேடி ஏமாந்து போயிருந்தது. “ஏய்… ஏன் ஓடுன… எத்தன தரம் சொன்னேன் ஓடாதே என்று… கேக்காம ஓடுன…” 

“ஆ…ஆ….ஆ,,.ஆஆஆஆஆஆ…. 

“ஒம் பேரென்ன” காயத்தில் வலியின் கலை.

“தர்மா…. ஆ…. ஆ….. ஆ…. ‘ 

“ஏன் என்னைக் கண்டு ஓடுன…அப்டின்னா நீ புலியா” 

“……”

“ஒன்ட ஐடின்கார்ட எடு…..” அதட்டினான் அந்த இராணுவச்சிப்பாய். 

தன் ஷேர்ட் பொக்கெட்டுக்குள் வைத்திருந்த தனது அலுவலக ஐடென்டிகார்டினை எடுத்து நீட்டினான் தர்மா…. காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் மெல்ல மெல்லப் பெருகிக் கொண்டிருந்தது.

“நீ… நீ… கோர்ட்ல வேல செய்யுறியா… நான் எவ்வளவோ சொன்னேன் ஓடாதேன்னு…” 

“ஓடாம நின்னு ஒன்ட கோர்ட் ஐடென்டி கார்ட நீ காட்டியிருந்தா ஒன்ன விட்டிருப்பேன்… அநியாயமா என்ன சுட வெச்சிட்டியே…. ச்சே… இந்தா எழும்பு…” என்று சொன்ன அந்த இராணுவச் சிப்பாயின் முகத்தில் அடையாளம் தெரியாத துயரம் படர்ந்திருந்தது. இப்போது ஏலவே அதிக இரத்தப் போக்கு காரணமாக மயங்கிக் கிடந்த தர்மாவை தூக்கி தன்னில் சாய்த்துக்கொண்டு மெல்ல நடந்தான் இராணுவச் சிப்பாய். 

– ஜீவநதி 91 சித்திரை 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *