சாவித்ரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 1,636 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் எழுந்து அவசர அவசரமாகக் குளித்துவிட்டு, அலுவலகம் செல்லத் தயாராய் வெளியே வந்த சாவித்திரிக்கு அந்தக் காட்சி கண்ணில் பட்டது. அவளுடைய மாமியார் குளித்துவிட்டு பட்டுப் புடவை சரசரக்க காமாட்சி அம்மன் திரு உருவப் படத்தின் முன்பாக செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீ காமாட்சி அன்னைக்குச் சமர்ப்பித்து காரடையும் கட்டியாக வெண்ணெயையும் வைத்து வெற்றிலை, பாக்கு மஞ்சள், வாழைப்பழம் எல்லாம் தட்டில் வைத்து அதன் முன்னே உட்கார்ந்து பூஜை செய்து முடித்துவிட்டு உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும் என்று மனமார வேண்டிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்து, கணவரையும் நிற்கவைத்து அவருக்கும் ஒரு நமஸ்காரம் செய்தாள். அவரும் மகிழ்ச்சியுடன் தீர்க்காயுஷ்மான் பவ தீர்க்க சுமங்கலி பவ என்று வாழ்த்தினார். 

ஒரு புன்னகையுடன் ‘அம்மா எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்’ என்றபடி கைப்பையை எடுத்துக்கொண்டு சாவித்திரி கிளம்பினாள். ‘இந்தாம்மா இந்த வெத்தலை பாக்கு எடுத்துக்கோ’ என்று நீட்டிவிட்டு, ‘ஏம்மா ஏதோ முக்கியமான புராஜக்ட்! அதுக்கு முக்கியமா ஏதோ ஒண்ணு எடுத்துக்கணும்னு சொன்னியே, அதை எடுத்துண்டியா?’ என்றாள் மாமியார். ‘நல்லவேளைம்மா ஞாபகப்படுத்தினீங்க’ என்றபடி உள்ளே சென்று அந்த முக்கியமான கோப்பை எடுத்து பையில் வைத்தபடி, ‘சரிம்மா நான் வரேன்’ என்று சாவித்திரி கிளம்பினாள்.

மதியம் உணவு இடைவேளை வரை மூச்சுவிடக்கூட நேரமில்லை. உணவு முடித்து மீண்டும் மீட்டிங் போயாகணும். அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்கி விட்டு கான்பரன்ஸ் ஹாலுக்குச் சாவித்திரி ஓடினாள்.

இன்று ஒரு புதுத் திட்டம் தொடங்கும் நாள் வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர் மீண்டும் டெமோ தொடங்கியது மிகச் சாமர்த்தியமான முறையில் தன்னுடைய விவரிப்பை முடுக்கினாள் சாவித்திரி வந்திருந்த வெளிநாட்டினர் அவளுடைய ஆங்கிலப் புலமையையும் கணிணித் திறமைகளையும் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தனர். 

முக்கியமாக அவளுடைய திறமையினால் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அன்றே நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. அத்தனையும் கோடிக்கணக்கான ரூபாய்கள் லாபம் தரக் கூடியவை. வந்திருந்த அத்தனை பேரும் மகிழ்ச்சியாகக் கிளம்பினர்.

‘அப்பாடா’ என்று சற்றே ஓய்வாக உட்கார்ந்தாள். தொலைபேசி அழைத்தது முதலாளி தர்மராஜ் அழைக்கிறார்.

‘இதோ வந்துட்டேன் சார்’ என்றபடி அவருடைய அறைக்குச் சாவித்திரி சென்றாள். 

‘உக்காருங்க சாவித்திரி மேடம். உங்களை எப்படிப் பாராட்றதுன்னே தெரியலை. உண்மையில் சொல்லப் போனா இன்னிக்கு உங்க பேச்சு மிகவும் அற்புதம். இந்த புராஜக்ட் உங்க உழைப்பாலே உருவானது. நான் நிச்சயமா நம்பிக்கையே இல்லாமதான் இருந்தேன் இந்த புராஜக்ட் மட்டும் வெற்றி அடையலேன்னா இந்த நிர்வாகத்தையே இழுத்து மூடிடலாம்னுதான் இருந்தேன் சத்தியவான் உயிரை மீட்ட சாவித்திரி போல போராடி இந்த நிர்வாகத்துக்கு மறுவாழ்வு குடுத்திருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்றதுன்னே தெரியலை ஆமாம் சாவித்திரிமேடம் நீங்க மரணப் படுக்கையில் இருந்த இந்த நிர்வாகத்துக்கு உங்க திறமையாலே மறுபடியும் உயிர் குடுத்திருக்கீங்க. நான் உங்களுக்கு ஏதாவது குடுக்கணும் என்ன வேணும்னாலும் கேளுங்க’ என்றார் நிர்வாகி தர்மராஜ். 

‘இது என்னோட கடமை சார்! உங்க பாராட்டுக்கு நன்றி’ என்று புன்னகைத்த சாவித்ரி அந்தப் புன்னகை மாறாமலே ‘சார்! எங்களுக்கு விடுதலை வேணும், இந்தக் கட்டுப்பாட்டிலேருந்து எங்களுகெல்லாம் விடுதலை வேணும். இந்த புராஜக்ட் வெற்றிக்காகத்தான் காத்திருந்தோம். பணம் இல்லாமே நாங்க கொஞ்சம் கஷ்டப்படுவோம் இல்லேங்கலை ஆனா, வேற நிர்வாகத்திலே வேலை கிடைக்கும்னு நம்பிக்கையோட எங்க மனசை மாத்திக்கிட்டு ஒரு முடிவெடுத்திருக்கோம். இன்னிக்கு நாங்க பெண்கள் பத்து பேரும் ராஜினாமா செய்யப் போறோம் வேற வழியில்லே என்றாள் சாவித்திரி.ஆனா ஒரு விஷயம் சொல்றேன் இங்கே திருமணமாகாத பெண்கள்னு நினைச்சிக்கிட்டு நீங்க வேலைக்கு வெச்சிருக்கிங்களே நான் உட்பட அத்தனை பேரும் திருமணமானவங்க என்றாள். 

அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்த நிர்வாகி தர்மராஜ் எழுந்தார். ‘மேடம் நீங்க யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் இனிமே இந்த நிர்வாகத்திலே திறமையானவர்கள் திருமணமாகி இருந்தாலும் வேலை உண்டு. அப்பிடீன்னு நான் விதிமுறைகளில் திருத்தம் செய்யறேன் நீங்கள்லாம் இல்லாமே புராஜக்ட் நின்னு போயிடுமேங்கிற பயத்திலே சொல்லலை என்னோட தவறுக்குப் பிராயச்சித்தமா நம்ம அலுவலகத்திலே வேலை செய்யற எல்லாப் பெண்களுக்கும் பிரசவ காலத்து மொத்தச் செலவையும் மூன்று மாதச் சம்பளத்துடன் கூடிய விடுப்பையும் இந்த நிர்வாகம் அனுமதிக்கும்’ என்றார். ‘சார் உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியலே இனிமேயும் நாங்க எல்லாரும் உண்மையா இந்த நிர்வாகத்தோட முன்னேற்றத்துக்காக உழைப்போம்’ என்றாள் கைகூப்பியபடி சாவித்ரி.

– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *