கண்ணைத் திறக்கணும் சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 386 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்த பிரச்சினையை இனி இப்படியே விடமுடியாது மச்சான். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்று சொல்வார்கள். நமக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கோவில் இருந்தும் அதை முறையாக நிர்வகிக்க தெரியாமல் பாழடிச்சுப்போட்டானுகள். குடியும், கோத்திரமும் என்றும் தேசத்துக் கோவில் என்றும் காரணம் காட்டி, மட்டக்களப்பு பிரதேசத்திலே அமைத்த முதலாவது திருப்படைக்கோவிலை ஆளாளுக்கு திண்டு கைகளுவிட்டானுகள். 

போதாக்குறைக்கு இன்று கோட்டுக்கும் இழுத்துவிட்டானுகள். இதையெல்லாம் ஊரில் இருந்த நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறீங்க இல்லையா மச்சான்” 

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எப்பொழுதும் ஊர்பற்றிய உணர்வோடும், தாய்மொழி பற்றிய தவிப்போடும் இருக்கும் தருண்குமார் இம்முறை ஊர் சென்றபோது கோவில் இருந்த நிலவரத்தைப் பார்த்ததும் ஊர்போடியாராகிய தன் மைத்துனர் பரமானந்தரிடம் சொல்லி ஆவேசப்பட்டான். 

“நாங்க என்ன மச்சான் செய்யமுடியும். இது தேசத்துக் கோவில் என்றபடியால் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தலைவர், செயலாளர், பொருளாளர், வண்ணக்கர், கோவில் ஊழியக்காரர் என்று இந்த கோவிலின் யாப்புப்படி மகாசபைக் கூட்டத்தில் தெரிவு செய்யிறாங்க. இப்ப என்னடா என்றால் தலைவர் தெரிவு சரியான குடியில் தெரிவு செய்யப்படலியாம் என்று பழைய தலைவர் கோட்டில வழக்கு போட்டு இருக்கார். இப்ப கோட் அனுமதி இல்லாம கோவிலில் ஒன்றும் செய்யமுடியாது. ஊரில் உள்ள நாங்களும் மனவேதனையில்தான் இருக்கிறோம். என்ன செய்ய” தன்னாலான விளக்கத்தைக் கொடுத்தார் -ஊர்ப் போடியார் பரமானந்தனார். 

“தேசத்துக்கோவிலாக இருந்துவிட்டுப்போகட்டும். எந்தக் குடியை சேர்ந்தவன் என்றாலும் பதவி வகிக்கட்டும். இந்த பெருமை வாய்ந்த கோவிலை, சரியான முறையில் நிர்வகிக்கவேணும் தங்கட சுயநலத்திற்காகவும், பதவியாசைக்காகவும் நமது ஊரில் இருக்கின்ற கோவிலை அயலூரில் இருக்கின்ற தலைவனோ, வண்ணக்கனோ ஆரெண்டாலும் சீரழிக்க முடியாது. கோவில் இருப்பது நமது ஊரில். இந்தக் கோவிலின் சிறப்பை கேள்விப்பட்டு வருகின்ற மற்ற மாகாணங்களை சேர்ந்த அடியார்கள் இந்தக் கோவில் இருக்கிற சீர்கேட்டை பார்த்து என்ன நினைப்பாங்க…. நம்ம ஊரைபற்றித்தானே குறை சொல்லுவாங்க. அயலூரில் இருக்கின்ற கோவில் தலைவனையா? அல்லது வண்ணக்கனையா? இது ஏன் புரியாம இருக்குறீங்க?” 

“புரியுது மச்சான் எங்களுக்கு எல்லாம் புரியுது.ஆனா..” 

“என்ன ஆனா” குரலை உயர்த்தினான் தருண் 

“இந்தக் கோவிலின் யாப்புகுடி, கோத்திரம் என்று இருக்குதல்ல.. அதை வச்சுக்கிட்டுதான் இவ்வளவு பிரச்சினையும் பண்ணுறானுக” 

“அவனுகள் என்ன பிரச்சினை பண்ணுறது? இந்த கோவில் இருக்கிற ஊர்க்காரரும், பக்கத்து ஊர்க்காரரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தால் அயலூரில் இருந்து ஆண்டுக்கு ஒருதடவை வந்துவிட்டு போகிற தலைவரும், மற்றவர்களும் ஆடிப்போயிடுவாங்க” என்று சொன்ன தருண்குமார் சற்று சிந்தித்த பின் சொன்னான். “இதற்கு ஒரு வழிதான் இருக்கு இனி அதைதான் செய்யவேணும்” என்று. 

தருண்குமாரின் சிந்தனையும், செயல்பாடும் எப்பொழுதும் ஒரு திட்டமிட்ட கட்டமைப்புக்குள் இருக்கும். அவன் சிந்தனையாளன் மட்டுமல்ல. இந்த ஊர் மண் தந்த ஒரு கலைஞன், எழுத்தாளன், பத்திரிகையாளன், ஒலிபரப்பாளன்,கவிஞன்,பாடலாசிரியன், இசையமைப்பாளன், பாடகன், நடிகன் என்று தன்னை பல்கலை பரிமாணங்களுக்குள்ளும் உட்படுத்தியவன். இன்று புலத்தில் அவன் வாழ்ந்தாலும் தன் கலை,கலாசார, விழுமியங்களுக்கு தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்துக் கொண்டு வாழ்பவன் தனது பிரதேசத்தில் இருக்கின்ற கோவில்களுக்கு தனித்தனியாக பக்திப் பாடல்களை தன் மைத்துனர் சகிதம் இயற்றி, இசையமைத்து, பாடி அவற்றை குறும் இசைத் தட்டுகளாக வெளியிட்டவன். இன்று பிரச்சினையில் இருக்கின்ற முருகன் கோவிலுக்கு பல இசைத்தட்டுகளை பாடி வெளியிட்டவன். இந்தக் கோவிலின் வரலாற்றை, முருகப் பெருமானின் புகழை, அருளை, அழகை எதிரேயிருக்கும் கடலை, சுற்று சூழலை, கோவிலின் மூர்த்தியை, தலத்தை, தீர்த்தத்தை தன் பாடல் வரிகளுக்குள் கொண்டுவந்தவன். இந்த கோவிலின் கீர்த்தியை பல நாடுகளிலும் தன் பாடல்கள் மூலம் எடுத்து சொன்னவன். 

ஊர்போடியார் பரமானந்தரின் உள்ளத்தில் தருண்குமார் பற்றிய பின்புல தெறிப்பு ஒருகணம் தெறித்து மறைந்தது. இவன் ஏதாவது கண்டிப்பாக செய்வான்.நாமும் அதற்கு பக்க பலமாக இருப்போம் என்று மனதுக்குள் நினைத்தப்படி நிமிர்ந்து அவனிடம் பேசினார். 

“சொல்லு மச்சான் இதற்கு என்ன செய்யலாம். ஏதாவது திட்டம் வச்சிருக்கிறியா” 

“கண்டிப்பா இருக்கு மச்சான். நம்மட கோவில் மேன்மையும், சிறப்பும் பெற்று விளங்க ஒரேயொருவழி கோவிலை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதுதான் சரியான வழியாக எனக்கு தோணுது. 

மாமாங்கேஸ்வரர் கோவிலைப் பாருங்க இன்று அதை அரசு பொறுப்பேற்று அந்தமாதிரி நடத்திக்கொண்டு வருகிறது.சிறப்பாக இயங்குகிறது. அதேபோல் நமது கோவிலையும் ஒப்படைத்துவிட்டால் அரசு அதை திறம்பட நிர்வகிக்கும். நமது ஊரில் வந்தான் வரத்தான் எல்லாம் கோலோச்சி இந்தக் கோவிலையும், இதன் வருமானங்களையும் கையாடி இருக்கிறான்கள். இத பலர் சொல்கிறார்கள். 

இந்த பாவ காரியத்துக்கு ஊரில் உள்ள ஒருசிலரும் உடந்தையாம். இதெல்லாம் உனக்கு தெரியாதா மச்சான் வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கோவிலுக்கு இன்றுவரை ஒரு இராஜகோபுரம் இல்லை. அதை கட்டிமுடிக்க பல வழிகள் இருந்தும் அதைக் கூட அந்த நிர்வாகம் செய்யல்ல. செய்யவும் மாட்டாது. இதற்கெல்லாம் ஒரே வழி கோவிலை அரசிடம் ஒப்படைப்பதுதான்.”பரமானந்தரின் முகத்தில் ஒருகணம் மகிழ்ச்சியின் சாயல் மின்னி மறைந்தது. அவர் கேட்டார்”அதற்கு வழி இருக்கா தருண். அப்படி செய்தா எவ்வளவு நல்லது. நமது கோவிலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்தக் குடிவழி தொல்லைகள் எல்லாம் முடிவுக்கு வரும் இல்லையா” “நிச்சயமாக இது பற்றி நமது நாடாளுமன்ற உறுப்பினருடன் பேசுவோம். அவர் மூலமாக கோவிலை அரசிடம் ஒப்படைப்பது பற்றியும், அதற்கான வழிவகைகளை செய்யுமாறும் கேட்போம். அவர் ஊர்ப் பிறந்தவர் என்றாலும் நியாய தர்மங்களின்படி நடப்பவர். 

இந்த பிரதேச கோவில்கள், தேவாலயங்கள் பலவற்றுக்கு பல உதவிகளை செய்தவர். அவர் கண்டிப்பாக நமது கோவில் பிரச்சினையைப்பற்றி ஆராய்வார். ஆவன செய்வார்.அதற்குமுன் ஊரில் உள்ள பலரிடம் இதுபற்றிப் பேசி முடிவெடுக்க வேணும்.” 

“அதை நான் செய்யிறன் நீ நாடாளுமன்ற உறுப்பினர் பேசி முடிவெடு மச்சான்” என்று சந்தோஷத்தில் குதூகலித்தார் போடியார். தருண்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் கவீஸ்வரனுடன் இந்த விவகாரம் பற்றிபேசியபோது, ‘இது கண்டிப்பாக செய்ய வேண்டிய காரியம்தான் ஆனால் அதற்குமுன் இந்தக் கோவிலின் யாப்பின்படி குடிவழிதான் காலம்காலமாக நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு முன்னுரிமை கொடுத்து நாம் வழக்கு தொடர்ந்து இருக்கும் முன்னாள் தலைவரிடம் சென்று பேசுவோம். வழக்கை வாபஸ் வாங்கி கோவிலை பழையபடி நிர்வகிக்க வழி விடுமாறு கேட்போம். அதற்கு அவர் இணங்காத பட்சத்தில் நீங்கள் சொல்வதுபோல் கோவிலை அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை நான் கண்டிப்பாக எடுப்பேன்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். 

போடியாரின் ஏற்பாட்டில் கோவில் மேம்பாட்டுக்கு துணை நிற்கும் சிலருடனும், ஆலயத்தின் செயலாளர், முன்னாள் வண்ணக்கர் ஆகியோருடன் கவீஸ்வரன் வீட்டுக்கு சென்றான் தருண்.அங்கிருந்து வாகனங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சகிதம் முப்பது மைல்கள் பிரயாணம் செய்து வழக்கு நடத்தும் முன்னாள் தலைவர் சாந்தன் வீட்டுக்கு எல்லோரும் சென்றார்கள். 

பேச்சுவார்த்தை தொடங்கியது. பலருக்கு சாந்தனை தெரிந்திருந்தது. தருணுக்கு தெரியாது. பல கோரிக்கைகளை வைத்தபின், சாந்தன் பேசினார். 

“இது எங்கள் உரிமை பிரச்சினை. கோவில் யாப்பின்படி எங்கள் குடி சார்ந்தவர்தான் அந்தக் கோவிலுக்கு தலைவராக வரவேண்டும். நான் தலைவராக இருந்த காலத்தில் கோவிலில் பல தில்லுமுல்லுகள், களவுகள், கையாடல்கள் எல்லாம் நடந்தன. இதை நான் தட்டிக் கேட்டபொழுது சம்பந்தப்பட்டவர்கள் என்னை அவமதித்தார்கள். மகாசபைக் கூட்டத்தில் என்னை நீக்கிவிட்டு தங்களுக்கு சார்பான ஒருவரை தலைவராக நியமித்தார்கள். அவர் எங்கள் குடி சார்ந்தவர் அல்ல. 

அது எங்கள் குடிக்காரருக்கு அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் தந்தது. எங்கள் உரிமையை நாங்கள் விட்டுகொடுக்க முடியாது, அதனால்தான் நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். கோவிலில் பல களவுகள் நடந்தமைக்கு நீங்கள் கூட்டி வந்திருக்கின்ற இந்த பழைய வண்ணக்கரும் சாட்சி. அவருக்கு தெரியாமல் அன்று ஒன்றும் நடக்கவில்லை” என்று அடித்து சொன்னார் சாந்தன். 

“சரி மிஸ்டர் சாந்தன், உங்கள் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது. உங்கள் உரிமை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதுதான். அதற்காக கோட்டில் வழக்குப் பேசி, தீர்ப்பு வருவதென்பது இப்போதைக்கு முடியாத காரியம். சிவில் வழக்குகள் பல வருடங்களுக்கு இழுக்கும். ஆகவே நீங்கள் உங்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு, உங்கள் மகாசபையை கூட்டி உங்கள்குடி பிறந்தோரை தலைவராக நியமித்து கோவில் திருப்பணியை தொடர்ந்து செய்ய வழி கொடுங்கள். அந்தக் கோவில் இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது என்று அறிகிறோம். உங்களுக்கு பக்க பலமாக நான் இருக்கிறேன். உங்கள் குடியை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமிப்பதற்கு நான் பொறுப்பாக இருக்கிறேன் மிஸ்டர் சாந்தன். இவ்வளவு தூரம் நாங்க இறங்கி வந்து பேசுவது அந்த கோவிலின் யாப்பை மதிச்சுத்தான் புரிஞ்சு கொள்ளுங்கோ.. 

நீங்க எங்க கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் ஊர்க்காரர் ஒப்புத லுடன் கோவிலை நான் அரசாங்கத்திடம் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். அது செய்வது எனக்கு பெரிய விஷயமில்லை. இனி உங்கள் முடிவை பொறுத்தது.” என்று தெளிவாகவும், சற்றுகாட்டமாகவும் பேசிமுடித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கவீஸ்வரன் 

மற்றவர்களும், தங்கள் பங்கிற்கு அந்த முன்னாள் தலைவரிடம் பேசினார்கள். ‘கோவில் யாப்பு, தேசத்துக்கோவில் என்ற பெருமை இதெல்லாம் கருத்தில் கொண்டுதான் இவ்வளவுதூரம் இறங்கி வந்திருக்கிறோம். ஆகவே உங்கள் வழக்கை மீளப் பெற்றுக்கொண்டு கோவிலை மேம்படுத்த வழிவிடுங்கள்’ என்ற கருத்தை சொன்னார்கள். 

சாந்தன் மற்றும் அவர் வீட்டில் உள்ளவர்களும் சற்றும் சிந்தித்தார்கள். 

தருண்குமாரின் ஆதங்கம், அவன் கூட்டிச் சென்ற ஏனையோரின் நியாயமான கருத்துகள், நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தரவாதம் எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு தங்களுக்கு ஒரு தவணை கேட்டுக்கொண்டார் சாந்தன். தங்கள் குடி மக்களிடமும், தங்கள் குடுப்ப உறுப்பினர்களிடமும் பேசி ஒரு முடிவு எடுப்பதாகவும் அவர் சொன்னார். 

“கூடிய விரைவில் உங்கள் பதில் எங்களுக்கு வேண்டும். அல்லது கோவிலையும் அதன் நிர்வாகத்தையும் அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் நான் இறங்க நேரிடும். கோவில் அமைந் திருக்கும் ஊரவரின் ஒப்புதல் இதற்கு பெற்றுக்கொள்ளப்படும்” என்று பேசிமுடித்தார் நாடாளுமன்ற உறுப்பினர். 

தருண்குமார் உட்பட மற்றவர்களும் புறப்படும்போது ஒரு நல்ல பதிலை அந்த முன்னாள் தலைவரிடம் இருந்து எதிர்பார்ப்பதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். கோவில் குடி கோத்திரங்கள் பிடிக்குள் சிக்கி சீரழியுமா? அல்லது அரசின் அரவணைப்பில் மேன்மைபெறுமா? என்று அந்தக் கோவிலில் குடியிருக்கும் முருகப்பெருமானுக்குதான் தெரியும். அந்த சாமி கண்ணை திறந்தால் அவருக்கும் நல்லது. அந்தக் கோவிலுக்கும் நல்லது.. கண்ணைத் திறக்குமா சாமி?

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *