ஒரு வேளைச் சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 810 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பாஹிம் ஹாஜி வெள்ளிக்கிழமை தொழுகைக்காரர்’ என்று இனங் கண்டு விட்டால், அவர் வேறு நாட்களில் தொழாதவர் என்று பொருளல்ல.

இராப்பகலாக ஒரே பிஸ்னஸ், பிஸ்னஸ் என்று ஓயாமல் உழைப்பில் திளைக்கும் போது மட்டும் சில நாட்கள் தொழுகைகள் தவறிப்போகும்.

ஓடி ஓடி உழைக்க வேண்டும் என்ற உந்துதல் ஊன், உறக்கம்…. உறைவிடம் என்று எல்லாவற்றையும் மழுங்கடிக்கச் செய்துவிடும்.

அப்படி ஓர் அசுர உழைப்பு

அது அவருடைய அலாதியான தேடல் முயற்சி. முடிகிற காலத்தில் உழைத்துவிட்டால், முடியாத காலகட்டத்தில் காலுக்கு மேல் கால்போட்டு ஓய்வெடுத்து அனுபவிக்கலாம் என்பது அவரது அசைக்க முடியாத குறிக்கோள், விடாப்பிடிவாதமும் அதுவே தான்.

இந்த வருடம் நோன்புப் பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன.

குடும்பத்தில் மனைவி மக்கள் தூர இடங்களில் உள்ள நெருங்கிய உறவுகளைச் சந்தித்து சலாம் கொடுத்து ‘முசா பாச் செய்யச் சென்றிருக்கிறார்கள்.

பாஹிம் ஹாஜியின் முழு அனுமதியுடன்தான். ‘இன்க்ஷால்லாஹ்…. இன்றக்கி நாளக்கி வரக்கூடும். வரட்டுமே இப்ப இங்கே என்ன தலைபோற வேலை கிடக்கு…..’

எத்தனை நாள் போனாலும் பாஹிம் ஹாஜி எதிர்க்கப் போவதில்லை. வருடத்திற்கு ஒருமுறை அவர் அவர்களுக்கு வழங்கியிருக்கும் சுதந்திரம். தன்னால் அவர்களை விரும்பிய இடங்களுக்கு அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்க முடியாதுதானே!

அவர்களும் புத்தாடை அணிந்து சுற்றித் திரியும் போது தென்றல் காற்று அவர்களது மேனியையும் தழுவிச் செல்ல அது ஒரு அரிய வாய்ப்புத்தானே! பாவப்பட்ட ஜென்மங்கள்! ஒரே வீட்டில் அடைபட்டுக் கிடப்பதில் என்ன சுகம் கண்டுவிட்டார்கள், வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டுவதைத் தவிர.

நோன்பு காலங்களில் அவர்களுக்கு விதம் விதமான ஒஜீபனம் வெளியில் அமைந்திருக்கும் போது, அவர்கள் அவசரப்பட்டுத் திரும்ப வேண்டுமா?

இன்று பாஹிம் ஹாஜி வெள்ளிக்கிழமை ஜூம்மா’ தொழுகைக்குப் பின் வீட்டில் வேலைக்காரன் சமைத்து வைத்ததை சாப்பிட்டுவிட்டு, வெளியூருக்கு வெளியேறியவர்தான். சும்மாவா….? இலாபம் மட்டும் கிட்டத்தட்ட கைக்கு மேலே ஐம்பதாயிரம் தேறுமாம்… விட்டுவிடுவாரா?

பாஹிம் ஹாஜி அன்று இரவு வீட்டுக்குத் திரும்பும் போது இரவு பத்து மணி பிந்திவிட்டிருந்தது.

கடுமையான பசியுடன் வந்ததும் வராததுமாக…

“…அப்துல் சலாம் டெலிபோன் கோல் ஏதும் வந்திச்சா…?”

வீட்டில் சொந்தக்காரர்கள் இல்லாதபோது வீட்டில் காவல் காப்பதிலிருந்து சமையல் தொடக்கம் சகல வேலைகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக பிரகாசிக்கும் அப்துல் சலாமிடம் வினவினார். வீட்டில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வந்ததும்….. அப்துல் சலாமுக்கு வேலை பாஹிம் ஹாஜியின் கடையில்தான். அதுவரைக்கும் அவர் சுதந்திரப் பறவை.

“கோல் ஏதும் வரல்ல ஹாஜி…”

“சரி…சரி….”

ஹாஜி குளியலறைக்குப் போய் முகம் கைகால்கள் அலம்பிவிட்டு, உடை மாற்றிக் கொண்டு வந்து முன் அறையின் சோபாவில் அமர்ந்து டி.வி.யை முடுக்கி விட்டார்.

“சலாம்…”

அவன் வந்து நின்றான்.

“சாப்பிட என்னப்பா இருக்கு…பசியாய் கிடக்கு”

அப்துல் சலாம் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவர் ஊகித்துக் கொண்டுவிட்டார்.

“சமைத்து வை…. சாப்பாட்டுக்கு வந்து விடுவேன்” என்று ஒரு டெலிபோன் கோல்கூட கொடுக்க மறந்துவிட்டுப் போய்….. இப்ப இப்படித் திடீரென்று வந்து சாப்பாடு போடு என்றால் அவனால் என்ன செய்ய முடியும்? சமைப்பதற்கு நேரமெடுக்கும். அதுவும் போக சமையல் பொருட்கள் சிலவும் தட்டுப்பாடு.

“…ஓட்டலுக்குப் போய் மீன் சாப்பாட்டுப் பார்சல் எடுத்துவிட்டு வருவியா…?”

‘பத்து மணி பிந்திருச்சி… சாப்பாட்டுக் கடைகள் எல்லாம் மூடி வெறிச் சோடிக் கிடக்கும். அது ஹாஜிக்கு விளங்காது. இருந்தாலும் சொல்கிறார்….’ என்பதற்காக ‘சரி பார்த்துட்டு வருவமே…’ என்று பழைய ‘றலி’ சைக்கிளை வேகமாக உழக்கினான். என்ன இருந்தாலும் ‘றலிறலிதான்’.

பதினைந்து நிமிடங்கள் கரைந்துவிட்டன. அலைந்ததுதான் கண்ட பலன். மீண்டும் திரும்பினான்.

“ஹாஜி…கடைகள் எல்லாத்தையும் நேரத்தோட மூடிவிட்டாங்க. பெருநாள் சீசன், எல்லாரும் ஊர்களுக்குப் போய்ட்டாங்க…சமையலுக்கு ஆட்கள் இல்லை.”

“அப்படியா…நீ…. என்ன சாப்பிட்டே..?”

“நா…நேரத்தோட வீட்ல சாப்பிட்டு வந்திட்டன்”

‘ஜூம்மாவுக்குப் பின் வெளியேறிய ஹாஜி, வீட்ல மனைவி மக்கள் இல்லை என்று தெரிந்தும் முன்னேற்பாடு எதுவும் செய்யாம ரொம்ப சுணங்கி வந்து பழக்க தோசத்தால்….. ‘சாப்பாடு தேடுவது அவருக்கு ஒரு புதிய அனுபவம்…. பட்டுத்தான் பாடம் படிக்கணும்…

“சலாம்!…ஸ்ரோங்கா டீ ஒன்னு போடு…பிரிஜ்ல பிஸ்கற்பக்கற் கிடக்கும்…எடுத்துட்டு வா…”

“ஹாஜி…தேங்கா…மாவு எல்லாம் இருக்கு ஒரு பத்து நிமிஷத்திலரொட்டி ஒண்டு சுட்டு…”

“அதெல்லாம் தேவ இல்ல…..”

சலாம்…. தயங்கித் தயங்கி….. ஒருகணம் யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்ன சலாம்?”

“ஹாஜி…நீங்க விரும்பினா…எங்கட வீட்டில…இண்டக்கி…உறவினர்களுக்கு சாப்பாடு. விஷேசம்…ஓடிப்போய் ஒரு பார்சல் கொண்டு வரட்டா…நீங்க எப்பவும் இரவுக்கு சோறு சாப்பிட்டுத்தானே பழக்கம்…அதுதான் கேட்டேன்.”

பாஹிம் ஹாஜிக்கு அது விருப்பக் குறைவு என்பதை அவரது மௌனம் அவனுக்கு உணர்த்தியது.

“வீட்டாள்களுக்குக் கரைச்சல் குடுக்க வாணாம்…?”

சலாம் பாஹிம் ஹாஜியின் உள்மனதைப் புரிந்து கொண்டான்.

சலாம் மிகுந்த கரிசனையுடன் நடுஅறைக்குப் போய்க்கொண்டிருந்தவன், பட்டென்று அவனுக்கு ஒரு யோசனை….

ஹாஜி ஏசினாலும் பரவாயில்ல…! என்று அவன் திரும்பி வேகமாக வந்தான்.

“என்ன சலாம் …..?”

“நா ஒரே ஒரு ஓட்டல மறந்துட்டன் ஹாஜி…பிளொஸ் ஓட்டல். ஒரு டெலிபோன் போட்டுப் பார்க்கட்டா? இருந்தா ஒரு பத்து நிமிஷத்தில் போய் வந்திடுவன். சாப்பாடு திறம். நா அங்கே சாப்பிட்டும் இருக்கிறன்”

என்ன இருந்தாலும் சாப்பிட்டாத்தான் திருப்தி. தூக்கமும் வரும்.

“அப்பதே போன நீ…எடுத்துட்டு வந்திருக்கலாமே..! ஒனக்கும் மறதி கூட…சரி…சரிசுருக்காவா…” சலாமுக்கு மறதியும் இல்ல. பதட்டமும் இல்ல.

கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மீண்டும் சைக்கிளில் பறந்தான். சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த பாஹிம் ஹாஜிக்கு பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.

‘சே! யாரையும் குறை கூறி என்ன பிரயோசனம்’

‘சலாமுக்கு கோல் பண்ணியிருந்தால் சுவையாக சமைத்து வைத்திருப்பான். சா…இப்பவும் என்ன பணத்தை வீசினால் சாப்பாடு மேசைக்கு வந்துவிடும். ஆனால் கொஞ்சம் லேட். அதனால் என்ன…?’

பசித்தும் அந்தத் திமிர் மனோபாவம் அவரை விட்டு விட்டு மாறவில்லை.

வெளியூருக்குப் போயிருக்காவிட்டால் அந்தப் பெரிய லாபம்….. யாரு தரப் போறது.

‘பிஸ்னஸ் பேச்சுவார்த்தை’ முடிந்ததும் மாலை நான்கு மணிக்கு ஒரு பட்டீசும் டீயும் சாப்பிட்டதுதான். ஆறு மணித்தியாலமா…சாப்பாடு தண்ணி ஒன்னுமில்ல…

ஹாஜி யோசனையில் ஆழ்ந்திருந்தபோது….

“ஹாஜிசாப்பாடு கிடைச்சிருக்கு…” என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டே வந்த போது, பாஹிம் ஹாஜியின் முகம் மலர்ந்தது. “பாத்தியா சலாம் என்றால் சலாம் தான்”

அவன் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்து மேசையில் பரத்தினான்.

நெய்ச் சோற்றைத் தனியாகவும், கறிகளை வெவ்வேறாக பாத்திரங் களிலும் பரத்தினான். இறைச்சிச் சமையல், இறைச்சிப் பொரியல், கிழங்கு கத்தரிக்காய் பொரித்து சமைத்து…. சின்னவெங்காயம் அச்சாறு, வட்டிலப்பம் தனிக் கோப்பையில்…இப்படியாக பாஹிம் ஹாஜிக்கு பெருநாள் சாப்பாடு சுப்பர். வெள்ளிக்கிழமை ஸ்பெசல்.

“சலாம்…விலை எப்படி?”

மிகவும் திருப்தியாகச் சாப்பிட்டு…’அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்து “சலாம்…சாப்பாடு ஏவன் எதிர்பார்க்கவே இல்லை…” என்று பாராட்டினார்.

“சலாம்…சாப்பாட்டு காசை…மறந்துவிடாம செட்டில் பண்ணிவிடு…”

“சரி ஹாஜி அத நா பார்த்துக்கிறன்…!”

நேரம் போய்க் கொண்டிருந்தது. பாஹிம் ஹாஜிக்கு நித்திரை கண்களைச் சுழற்றியது.

“பாஹிம் ஹாஜி…நான் ஒன்று சொல்ல நினைக்கிறன்…பிழை யாயிருந்தா மன்னிக்கணும்…இல்லாட்டி விட்டுவிடுங்க…”

“என்ன?” என்ற தோரணையில் ஹாஜி புருவங்களை உயர்த்தி, காதுகளை கூர்மையாக்கிக் கொண்டார்.

“பணத்தை வீசினால் சோறு மேசைக்கு வந்துவிடும்…என்று நாங்க சொல்றம்…விவசாயிகளின் சார்பில் ஒரு புதுக் கவிஞன் என்ன சொன்னான் தெரியுமா…?

‘நாங்க சேற்றில் கால் வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கை வைக்க மாட்டீர்கள்’ என்று….அந்த ஞாயம் ஒரு பக்கம் கிடக்கட்டும். எரணம் ஒவ்வொருவருக்கும் அளந்திருக்கு…..ஹாஜி…. பரிவு’ இருந்தா அது கிடைச்சே ஆகும். பணம் கொடுத்தாலும் சரி, கொடுக்காட்டாலும் சரி. இப்ப பாத்தீங்கதானே….எங்கெல்லாமோ அலைந்ததுதான்…..உலகில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பவன் ‘அவன்தான்’ அவன் உங்களுக்கு ‘ரிஸ்க்’ எங்கே அளந்திருக்கிறான் எண்டு பாத்தீங்கதானே…!”

அதற்கு மேலும் ஒன்றும் குழப்பாமல் தன் அலுவல்களைக் கவனிக்கச் சலாம் அவ்விடத்திலிருந்து மறைந்தான்.

பாஹிம் ஹாஜி சிந்திக்கத் தொடங்கினார். சற்று முன் அவர் கண்களைச் சுழற்றி நித்திராதேவியும் அவரைக் குழப்பாமல் மறைந்து விட்டாள்.

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *