ஏழாவது அறிவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 2,271 
 
 

மனித வாழ்வில் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் நடைமுறைத்தவறுகளைத்திருத்தி வாழ்வது ஆறாவது அறிவு.

‘எலி, பாம்பு, எறும்பு, காகம், பருந்து, கோழி, ஆமை, மீன் போன்ற பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவன போன்ற ஜீவராசிகள் கூட தங்களுக்கு இருக்கும் ஓரறிவை பயன்படுத்தி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற போது, மனிதர்களாகிய நாம் மட்டும் நமக்குக்கிடைத்த ஆறறிவைப்பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?’ என்று யோசித்தான் பரமன்.

பரமனுக்கு ஏழாவது அறிவு கூட இருப்பதாக உணர்ந்தான். ஒருவரைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது ‘இவர் விரைவில் இறக்க நேரிடும்’ என்று மூளையை அழுத்தி சொல்லும். அடக்கிக்கொள்வான். இன்று அவனையறியாமல் ஒருவரைப்பார்த்து ‘இறந்து விடுவார்’ எனக்கூறிவிட்டான்.

சம்பந்தப்பட்டவர் சிரித்து “அடப்போப்பா நீ வேற… ஐம்பது வயசாச்சு. கடந்த பத்து வருசத்துல பத்து முறை முயற்ச்சி பண்ணிட்டேன். உசுரு போகலை. போனா சந்தோசம்” என்றார். ஆனால் உடனிருந்த அவரது மகன் கோபத்தில் பரமனை ஓங்கி அடித்து விட்டான். நூறு பேர் இருந்த இடத்தில் பரமனுக்கு அவமானமாகிவிட்டது.

அடிவாங்கிய அவமானத்தில் வெகுளியாக ஓடிச்சென்று வீட்டில் முடங்கியவன் மூன்று நாட்கள் வெளியே வரவில்லை. நான்காவது நாள் மொட்டைத்தலையுடன் தன் வயதொத்த இளைஞன் கதவைத்தட்ட, ஜன்னல் வழியாக உற்றுப்பார்த்தவன், மிரட்சியுடன் கதவைத்திறந்தான். 

‘வந்தவன் ஏற்கனவே தன்னை அடித்தவன். இப்போது எதற்கு வந்திருக்கிறான்…?’ என வெளியே செல்லத்தயங்கியவன், வந்தவன் கைகளில் ஆயுதம் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டு வெளியில் சென்றான்

வந்தவன் “அண்ணா, என்னை மன்னிச்சிடுங்க..” எனக்கூறி “ஓ…” என அழுதவன், பரமனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

அவனை கீழே குனிந்து எழ வைத்த பரமன் “என்ன…?” என வினவினான்.

“அன்னைக்கு நீங்க சொன்ன ராத்திரி படுத்த அப்பா காலைல உசுரில்லாத ஒடம்பாக்கிடந்தார். அவர் செத்துப்போவார்னு எப்படி உங்களுக்கு முன் கூட்டியே தெரிந்தது?” என்று கேட்டான்.

“அறிமுகமான தெரிந்த மனிதர்களுக்கு நடக்கும் நிகழ்வுகள், புயல், பூகம்பம், சுனாமி போன்ற இயற்க்கைச்சீற்றங்களும் என் மனக்கண் முன் அவ்வப்போது வந்து போகிறது” என்றான் பரமன்.

வந்த இளைஞன் சிறிது யோசித்து விட்டு “உங்களுக்குத்தோன்றுவது ஏழாவது அறிவு. அது நம்ம ஊரோட புதைஞ்சி போயிடக்கூடாது. உலகத்துக்கு பயன் படனம்” என்றவன் இச்செய்தியை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தான்.

பகிர்ந்த ஒரு மணி நேரத்தில் மீடியாக்கள் பரமன் வீட்டின் முன் குவிந்தனர். அன்று நடக்கப்போகும் இயற்கைச்சீற்றம் பற்றி பரமன் சொன்ன ஒரு செய்தி பதற்றம் தந்தாலும், பக்குவமாக காய் நகர்த்தி பரமன் சொன்னதாக சொன்னால் யாரும் நம்ப மறுப்பர் என்பதால் வானிலை மையம் சொன்னதாக தகவல் வெளியிட்டு, இரண்டு நாட்களில் பலத்த காற்று, மழை என தண்ணீரால் பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன.

மக்கள் உயிர்ச்சேதமின்றி வெளியேற்றப்பட்டு நிம்மதி பெற்றனர். 

தனி மனிதர் கூறுவதை ‘கட்டுக்கதை’ என அறிவுலகம் கூறி ஏற்க மறுத்த நிலையை மாற்றி, ‘பரமன் செய்திகள்’ என வானிலை மையம் செய்திகளை அறிவிக்க ஆரம்பித்தது. அவருக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்து கொடுத்தது. தொடர்ந்து பரமன் சொன்னது நடந்ததால் மக்களும் அவரை கடவுளின் அவதாரம் என பேச ஆரம்பித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *