என்ன மனிதர்களோ!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 5,212 
 
 

எட்டு மணி செய்திக்கான நேரம் திரையில், ‘படபட’த்துக் கொண்டிருந்தது. சிப்ஸ் பொட்டலத்துடன், செய்தியை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து கேட்க தயாராக இருந்தான் ஆலோலசிங்கம். கரண்டியுடன், அடுக்களையில் இருந்து கோபமாய் வந்தாள் சிந்தாமணி.

“காலையில, அந்த செங்குரங்கு வனஜாவோட புருசன் கிட்ட பேசுனீங்களா?” கரண்டியை முகத்திற்கு நேராய் ஆட்டிக் கொண்டு கேட்டாள்.

“ஏன் சிந்தாமணி, அதுக்கென்ன இப்போ… ஒரே பிளாட்டுல இருக்கோம். பார்த்தா பேசித்தானே ஆகணும்.”

“ஆமாலு… வியாக்யானத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. இந்த கீழ் வீட்டு வனஜா, என்னை கருப்புன்னு ஜாடை பேசுறா… அவயென்ன குஷ்பூ கலரா… நான் போன வாரம் வாங்குன கருப்பு புடவைய பார்த்துட்டு, ‘அட்டை கரியான பொம்பளைங்க கூட, டார்க்கா உடுத்தறாங்க’ன்னு சொல்றா, அவளுக்கு இது தேவையா?”

“அவளுக்கு, இது தேவையோ இல்லையோ… எனக்கு பொம்பளைங்க விஷயம் தேவையில்ல. நீ போய் உப்புமாவை கிண்டு, என் வாயை கிண்டாதே,” என்று அவள் வாயை அடைத்தான் ஆலோலசிங்கம்.

மணி, 8:20 —

“சொல்ல மறந்துட்டேன், உங்கக்கா காலையில போன் செய்தாங்க… உங்க மொபைலுக்கு, ‘ட்ரை’ செய்தாங்களாம், லைன் கிடைக்கலயாம். வேறொண்ணுமில்ல… உங்கக்கா பொண்ணுக்கு வரன் அமையற மாதிரி இருக்காம். அதப்பத்தி, உங்ககிட்ட பேசணுமாம். உங்கம்மாவும், உங்கள பார்க்கணும்ன்னு சொல்றாங்களாம். எப்போ வர்றீங்கன்னு கேட்டாங்க. அவங்களுக்கென்ன உப்பா, உரப்பா… லேசா சொல்லிடுவாங்க. போய் வர இரண்டாயிரம் ரூபாயில்ல செலவு ஆகும். நாளைக்கு போன் செய்து, வரத் தோதுப்படாதுன்னு சொல்லிடுங்க.”

ஆணையிட்டாள்; யோசனையாய் அமர்ந்திருந்தான் ஆலோலசிங்கம்.

மணி, 8:40 —

வெளியில் யாரிடமோ, சத்தம் போட்டு விட்டு, உள்ளே வந்தாள் சிந்தாமணி.

“அந்த எதிர் பிளாட் கோமதியோட பீடை பிடிச்ச நாய், நம்ம வீட்டு காரிடரில வந்து, சூசூ போயிடுச்சு. அதை பார்த்துட்டு, நம்ம பப்லு, நாய் மேலே கல்லெடுத்து வீசிட்டான். அதுக்கு அந்த கோமதி, ‘பிலு பிலு’ன்னு சண்டைக்கு வந்துட்டா… விட்டேனா பார்; நானும், ஒரு வாங்கு வாங்கிட்டேன். இவ, ஒரு பீடை பிடிச்சவ… இவ வளர்க்கிறது, ஒரு தரித்திரம் பிடிச்ச நாய்.”

“சிந்தாமணி, எதுக்கு தெருவெல்லாம் சண்டை வளத்துகிட்டு திரியறே,” என்று எரிச்சலாய் கேட்டான் ஆலோலம்.

மணி, 9:00 —

“ஐயய்யோ… என்னங்க இது, தரையெல்லாம் ஆடறாப் போல இருக்கு… பரண்ல இருந்து சாமான்லாம் கீழ விழுதுங்க. ஐயோ தலை சுத்துது, பூமி அதிர்ச்சி வந்திடுச்சு போல, ஓடுங்க… ஓடுங்க.”
இரண்டு நிமிடத்தில், மொத்த பிளாட்டும் கிரவுண்டில் இருந்தது.

“வனஜா, கோமதி, சீதா, லலிதாக்கா எல்லாரும் வந்துட்டீங்களா… பகவானே… குஜராத் போல ஆயிடுமோ, அவ்வளவு தானா… இப்ப இருக்குற திருட்டு பயத்துல, ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு எடுக்கறாப்ல காசு, பணத்தை வைக்க முடியுதா… இப்பத்தானே புதுசா ப்ரிட்ஜ் வாங்கினேன். எல்லாம் மண்ணோட மண்ணா போகப் போறதா பகவானே… ராத்திரி, மாடில போய் எப்படி படுக்கறது… குலை நடுங்குதே,” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் சிந்தாமணி. பிளாட் பெண்களுடன், அவள் இத்தனை அன்யோன்யமாய் பேசி, ஆலோலம் பார்த்ததேயில்லை.

“புலம்பாதே சிந்தா… எல்லாருக்கும் ஆகிறது தான் நமக்கும்,” என்றாள் லலிதாக்கா.

“விவரங்கெட்டதனமா பேசாதீங்க, வலியப் போய் சாகவா சொல்றீங்க… சீதா வீட்டில் விரிசலே விழுந்திருக்காம், நான் வர மாட்டேன் மேல.”

மணி, 9:40 —

“என்னங்க… வனஜா, இன்னைக்கு ராத்திரி, அவங்க வீட்ல படுத்துக்க சொல்றாங்க. கீழ் வீடுன்னா, கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும். ஏதாவது, ஒண்ணுன்ணா சட்டுன்னு வெளியில ஓடிடலாம் இல்லயா?” பதவிசாய் வந்து கேட்டாள் சிந்தாமணி.

“சிந்தா, இதெல்லாம் சொல்லிட்டு வர்ற சேதியா… தானா வர்றது. நடக்கும்ன்னு விதியிருந்தா நடக்கும்.”

“ஆமா… நீரோ மன்னன் இவரு… ஊரே பத்தி எரியும்போது, பிடில் வாசிக்கிறாரு… சும்மா என் பின்னாடி வாங்க.”

குடும்பத்தோடு வனஜா வீட்டு ஹாலில், கொசுக்கடியில் படுத்துக் கிடந்தனர்.

“கேவலமா இருக்கு, பூகம்பம் வரும்ன்னு பயந்துட்டு, யார் வீட்டிலேயோ வந்து படுத்து இருக்கிறது. அத்தனை வெல்லக்கட்டியா உசிரு உனக்கு,” என்றான் ஆலோலசிங்கம்.

“ஆமாம், எனக்கு வெல்லக்கட்டி, உங்களுக்கு செங்கக்கட்டி. சரி, அதவிடுங்க… நாளைக்கு உங்கம்மாவுக்கு போன் செஞ்சு, அடுத்த வாரம் வர்றேன்னு சொல்லுங்க. உங்கக்கா பொண்ணு மீனா, என் கண்ணுக்குள்ளேயே இருக்கா… இந்த நிமிடம், அவுங்களை எல்லாம் எப்போ பார்ப்போம்ன்னு இருக்கு. பார்ப்போமோ… மாட்டோமோ? சொந்தங்களை எல்லாம் தள்ளிட்டு, இத்தனை தூரம் வந்தது, இப்படி அனாதையாய் செத்து மடியவா? எனக்கென்னவோ, கண்ண மூடினா பூமி ஆடுறாப்லேயே இருக்கு. ராத்திரி பூரா தூங்காமலேயே இருக்கப் போறேன்,” புலம்பிக் கொண்டே இருந்தாள்.

மணி, 10:30 —

“நம்ம கோமதி வீட்டு நாயி, பூகம்பம் வர்றதுக்கு, ஒரு மணி நேரத்துக்கு முன்னருந்தே, அலையா அலையுதாம், கத்துதாம்; இவ மடிய பிறாண்டுதாம். அதுங்களுக்கு, பூகம்பம் வர்றது முன்கூட்டியே தெரிஞ்சிடுமாம். அதை கூப்பிட்டு வாசல்ல படுக்க வைங்க. அது எதுனா சமிக்ஞை செஞ்சா ஓடிடலாம். பாவம், வாயில்லா ஜீவன்.”

“சிந்தா… நாமளே, ‘ஓசி’யில படுத்திருக்கோம். இங்க எதுக்கு கூட்டம் போடற… சரி, அந்த ப்ரட் எடுத்து, அதுக்கு போடு, பாவம்,” பரிவோடு சொன்னான் ஆலோலசிங்கம்.

அந்த இரவு முழுக்க போர்க்களமாகவே நகர்ந்தது சிந்தாமணிக்கு.

மறுநாள் காலை, பயத்தோடுதான் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினாள் சிந்தாமணி.

மணி, காலை, 8:10 —

“நியூஸ் கேட்டீங்களா… நம்ம தமிழகத்துக்கு பூகம்பம் வர, நூறு சதவீதம் வாய்ப்பில்லையாம். அப்படியே, வந்தாலும், நேத்து வந்தாப்போல சின்ன சின்ன அசைவாத்தான் இருக்குமாம், ஆண்டவன் காப்பாத்திட்டான்.”

தலை கால் புரியாமல் குதித்தாள். ஆலோலசிங்கத்திற்கு, அவளுடைய புலம்பலில் இருந்து தப்பித்தோம் என்று, நிம்மதி பிறந்தது.

மணி, 8:30 —

“டேய் பப்லு, நேத்து நைட் அந்த வனஜா வீட்ல படுத்திருந்தப்போ, என்னோட மோதிரத்த கழட்டி, டேபிள் மேல வச்சுருந்தத மறந்துட்டு வந்துட்டேன். ஓடிப்போய் எடுத்துட்டு வாடா… அவ லேசுபட்ட ஆள் இல்ல; கொஞ்சம் லேட்டான்னா, நான் பாக்கவே இல்லேனுடுவா,” மகனை விரட்டினாள்.

“சிந்தாமணி, நீ பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல. நைட் நீ பயந்ததும், அந்த வனஜா தன்னோட வீட்ல நம்மள அனுசரணையா படுக்க வச்சா, அந்த நன்றிய அதுக்குள்ள மறந்துட்டியா?” என்று, அறிவுரை சொன்ன கணவரை, அலட்சியமாய் பார்த்தாள்.

மணி, 8:50 —

“டேய் பப்லு, அந்த சனியனை தொறத்துடா… நேத்து ராத்திரி கொஞ்சம் ப்ரட் போட்ட தொல்லைக்கு, மறுபடி மறுபடி நம்ம வீட்டுக்கே வருது பாரு. அதோட இன்னோர் காலையும் ஒடிச்சுடு. மூணாவது மாடியில இருந்துட்டு, இவளெல்லாம் நாய் வளக்கலன்னு யாரு அழுதா.

சிந்தாமணி சத்தம், தெருக்கோடிக்கே கேட்கும் போலிருந்தது.

“நேத்து என்னவோ… அதை அப்படி புகழ்ந்த, அதுக்குள்ள வெறுப்பு வந்திடுச்சா.”

“ஆமா… நாயை குளிப்பாட்டி, நடுவீட்ல வச்சாலும், அது தெருக்கோடிக்கு தான் ஓடும். என்னை கேள்வி கேட்கறத விட்டுட்டு, ஆபீஸ் கிளம்பற ஜோலியை பாருங்க.”

அலுவலகத்திற்கு செல்லத் தயாரானான் ஆலோலசிங்கம்.

மணி, 9:10 —

“பாருங்க… நீங்க பாட்டுக்கு, உங்கம்மாவுக்கு போன் செஞ்சு, நாங்க வர்றோம், அப்படி இப்படின்னு, சொல்லிடாதீங்க. சொல்லிட்டா, எல்லாரும் புடுங்கி எடுப்பாங்க. அந்த மீனா சனியன், போன் மேலே போனா செஞ்சு உயிரை எடுக்கும். எல்லாம் மீனாவுக்கு கல்யாணம் நடக்கும்போது, பாக்கலாம்ன்னு சொல்லிடுங்க,” என்றாள்.

மனைவியின் விதவிதமான பேச்சுகளின் நிறமாற்றத்தை, பார்க்க, மண்டை காய்ந்து போனது ஆலோலத்திற்கு.

“ஆஹா… நரம்பில்லாத நாக்கும், நொடிப் பொழுதுல மறக்கும் புத்தியும் இருந்தாப் போதும், எப்படி வேணா வாழ்ந்துக்கலாம் இல்லயா சிந்தாமணி?”

நக்கலாய் கேட்ட கணவனை, எரிச்சலாய் பார்த்தாள்.

“நல்ல வேளை, ஆண்டவன் சாவுன்னு ஒண்ண வைக்காம விட்டிருந்தா, நீயெல்லாம் நித்தம் கோடி வண்ணம் காட்டுவே. இருபத்தி நாலு மணி நேரத்துல, நீ காட்டின நிறத்துலேயே, நான் கதி கலங்கி போயிட்டேன். என்ன மனிதர்களோ… என்ன உறவோ,” என்று, அலுத்துக் கொண்டு போனான் ஆலோலசிங்கம்.

– மார் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *